ஏகத்துவம் தொடர் - 3
அபூராஜியா
அகில
உலகத்துக்கும் ஓர் இறைவன் இருக்கின்றான். அவன் ஒரே ஒருவன் தான் என்பது இஸ்லாமிய
மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கை! இந்த ஓரிறைக் கொள்கையை நாம் சொல்லும் போது சிலர், கடவுள்
என்று ஒருவன் இல்லை, கடவுள்
இருக்கின்றான் என்பதைப் பகுத்தறிவு உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்று
வாதிடுவதை நாம் பார்க்கிறோம்.
கடவுள்
இல்லை என்ற இந்தத் தத்துவத்திற்குப் பெயர் நாத்திகம்! பகுத்தறிவுவாதிகள் என்று
தங்களைக் கூறிக் கொள்ளும் இவர்கள், கடவுள்
இல்லை என்று நிரூபிக்க சில சான்றுகளை முன் வைக்கின்றார்கள். அந்தச் சான்றுகள் என்ன
என்பதையும் அவற்றுக்கான பதில்களையும் இப்போது பார்ப்போம்.
கடவுளைக் கண்டவருண்டா?
கடவுள்
இல்லை என்று வாதிடுவதற்கு நாத்திகவாதிகள் எடுத்து வைக்கும் முதல் ஆதாரம், கடவுளை
யாரும் பார்த்ததில்லை என்பது தான். இந்த உலகத்தில் கடவுளை யாரேனும் பார்த்ததுண்டா? யாருமே
பார்க்காத ஒருவனை எப்படி கடவுள் என்று ஏற்றுக் கொள்ள முடியும்? இது
பகுத்தறிவுக்கு முரணானது என்று வாதிடுகின்றார்கள். இதைக் கேட்டவுடன் இது
அறிவுப்பூர்வான கேள்வி என்று சிலர் நினைத்துக் கொள்கின்றார்கள். ஆனால் ஆழமாகச்
சிந்தித்துப் பார்த்தால் உண்மையில் இப்படிக் கேட்பதே பகுத்தறிவுக்கு முரணானதாகும்.
ஒரு
விஷயத்தைப் பார்த்த பிறகு தான் அதை நம்புவேன் என்று கூறுவதைப் பகுத்தறிவு என்று
ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் பார்வை என்பது மனிதனுக்கு மட்டுமே சொந்தமான ஒரு
தனித்தன்மை கிடையாது. ஆடு, மாடு போன்ற
கால்நடைகள், பறவைகள்
உள்ளிட்ட அனைத்து பிராணிகளுக்கும் பார்வைத் திறன் உள்ளது. அவை அனைத்தும்
பார்த்துத் தான் ஒரு விஷயம் உண்மை என்று தீர்மானிக்கின்றன.
உதாரணமாக
ஓர் ஆட்டை நோக்கி மனிதன் கல்லெறிகின்றான் என்றால் அதைப் பார்த்து அந்த ஆடு ஓடுகின்றது.
தன்னுடைய எஜமான் யார்? தனது எதிரி
யார்? என்பதை ஆடு, மாடுகள்
பார்த்துத் தான் நம்புகின்றன. எனவே பார்த்த பிறகு ஒரு விஷயத்தை நம்புவது தான்
பகுத்தறிவு என்றால் ஆடு, மாடுகளுக்குக்
கூட பகுத்தறிவு உள்ளது என்றாகி விடும். எனவே பகுத்தறிவு என்றால் என்ன என்று முதலில்
விளங்கிக் கொள்ள வேண்டும்.
இறைவன்
மனிதனுக்கு ஆறு அறிவுகளை வழங்கியுள்ளான். அதாவது ஒரு விஷயத்தை நாம் நம்புவதற்கு, அதன்
தன்மையை அறிந்து கொள்வதற்கு ஆறு வகையான வழிமுறைகளை அல்லாஹ் வழங்கியுள்ளான்.
1. சுவை, 2. பார்வை, 3. கேட்டல், 4. உணர்ச்சி, 5. நுகர்தல். 6. சிந்தித்து
அறிதல் ஆகியவை ஆறு அறிவுகள் எனப்படும்.
இதில்
முதல் ஐந்து அறிவுகள் மனிதனுக்கு மட்டும் சொந்தமானவை அல்ல! விலங்கினங்கள், பறவையினங்கள்
போன்ற உயிர்களுக்கும் இந்த ஐந்து அறிவுகள் வழங்கப் பட்டுள்ளன. மற்ற
உயிரினங்களுக்கு வழங்கப் படாத ஆறாவது அறிவைத் தான் பகுத்தறிவு என்கிறோம்.
பகுத்தறிவு என்பது மனிதனுக்கு மட்டுமே சொந்தமான அம்சம். இந்தப் பகுத்தறிவு என்றால்
என்ன என்று விளங்குவதற்கு ஏனைய அறிவுகளைப் பற்றிய சிறிய விளக்கத்தை இங்கு
குறிப்பிடுவது அவசியம்.
பகுத்து அறிதல்
மனிதன்
கண்ணால் பார்த்து சில விஷயங்களைத் தீர்மானிக்கின்றான். அது அவனது பார்வைப்
புலனாகும். ஆனால் இந்த பார்வைப் புலன் மட்டுமே உலகிலுள்ள எல்லா விஷயங்களையும்
அறிந்து கொள்வதற்குப் பயன்பட்டு விடாது. சுவையை அறிந்து கொள்வதற்கு நாக்கு
பயன்படுகின்றது. இனிப்பு என்ற சுவையை யாரும் கண்ணால் பார்த்தது கிடையாது. காதால்
கேட்டது கிடையாது. ஒரு பொருளைத் தொட்டுப் பார்த்து, இது
இனிப்பு அல்லது கசப்பு என்று கூற முடியாது. ஆனால் அப்பொருளை நாக்கில் வைத்தால் அது
என்ன சுவை என்று தெரிகின்றது. நாக்கு சொல்லக் கூடிய தீர்ப்பை நாம் ஏற்றுக்
கொள்கிறோம். இனிப்பு என்ற சுவையைக் கண்ணால் பார்த்தால் தான் நான் நம்புவேன் என்று
யாரும் வாதிட மாட்டார்கள்.
ஓசையை
எடுத்துக் கொள்வோம். ஒரு டேப் ரிக்கார்டரிலிருந்து வெளிவரும் சத்தத்தை, பார்த்து
முடிவெடுக்க முடியாது. காதால் கேட்டுத் தான் இதில் சத்தம் அதிகமாக உள்ளது அல்லது
குறைவாக உள்ளது என்பதைத் தீர்மானிக்க முடியும். இவ்வாறே ஒருவர் தமிழ் பேசுகின்றாரா
அல்லது ஆங்கிலம் பேசுகின்றாரா என்பதைக் கண்ணால் பார்த்து விளங்கிக் கொள்ள
முடியாது. காது சொல்கின்ற முடிவை ஏற்றுக் கொண்டு ஒரு மனிதர் இதைப் பேசுகின்றார்
என்று தீர்மானிக்கின்றோம்.
அது போல்
ஒருவர் நறுமணம் பூசிக் கொண்டு வருகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அதை அறிந்து
கொள்வதற்குக் கண், காது, நாக்கு
என்று எதுவும் அவசியமில்லை. மூக்கினால் முகர்ந்து பார்த்து நறுமணமா அல்லது
துர்நாற்றமா என்பதை முடிவு செய்து விடலாம். கண் தெரியாத ஒரு மனிதரிடம் போய்
கேட்டால் கூட இது நறுமணம் அல்லது நாற்றம் என்று கூறி விடுவார்.
அடுத்ததாக, நமது
உடலின் முதுகுப் பகுதியில் தேள் அல்லது வேறு ஏதேனும் ஒன்று செல்கின்றது என்றால்
அதை அறிந்து கொள்வதற்குக் கண், காது, மூக்கு, நாக்கு
எதுவும் தேவை இல்லை. தூக்கத்தில் கூட ஏதேனும் உடலில் ஊர்ந்து சென்றால் அதை நம்மை
அறியாமலேயே தட்டி விடுவோம். உடலில் இரத்த ஓட்டம் உள்ள எல்லா இடங்களிலும் உணர்ச்சி
இருக்கின்றது. இந்த உணர்ச்சியின் மூலமாக இதை நம்மால் உணர முடிகின்றது.
எனவே
கண்ணால் பார்த்தால் தான் ஒன்றை ஒப்புக் கொள்வேன் என்று வாதிடுவது பகுத்தறிவுக்கு
எதிரானது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். சுவையையோ, ஒலியையோ
அல்லது வாடையையோ கண்ணால் பார்த்த பிறகு தான் நம்புவேன் என்று ஒருவர் கூறினால்
அவரைப் பகுத்தறிவுவாதி என்று யாரும் கூற மாட்டார்கள். பைத்தியக்காரர் என்று தான்
கூறுவார்கள்.
கண்ணால்
பார்த்த விஷயங்களே சில சமயங்களில் பொய்யாகிப் போய் விடுவதுண்டு! கண்ணால் காண்பதும்
பொய், காதால் கேட்பதும் பொய், தீர
விசாரிப்பதே மெய் என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இதைப் பல சமயங்களில் நாம் அனுபவப்
பூர்வமாக உணரலாம்.
இருட்டில்
ஒரு துணி பறந்து போவது கூட சில நேரத்தில் ஒரு மனிதன் போவது போல் நமது கண்ணுக்குத்
தெரியும். சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பது போல் வெயில் நேரங்களில் தெரியும்.
அருகில் சென்று பார்த்தால் எதுவும் இருக்காது. இதைக் கானல் நீர் என்பார்கள். இதை
இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம் கண்ணால் நேரடியாகப் பார்ப்பவை கூட சில சமயத்தில்
பகுத்தறிவுக்கு மாற்றமாக அமைந்துள்ளது.
நாக்கு, கண், காது, உடல், மூக்கு
போன்ற ஐம்புலன்களின் உதவியைக் கொண்டு சுவை, பார்வை, கேட்டல், உணர்ச்சி, நுகர்தல்
போன்ற ஐந்து அறிவைப் பெற்றுள்ளோம். இந்த ஐந்து அறிவுகளைப் பகுத்தறிவு என்று
கூறுவதில்லை. ஏனெனில் இவை அனைத்தும் ஆடு, மாடுகளுக்கும்
உள்ள அறிவுகள்.
மனிதனையும்
ஏனைய உயிரினங்களையும் வித்தியாசப் படுத்துகின்ற ஆறாவது அறிவு தான் பகுத்தறிவு! ஒரு
விஷயத்தை வைத்து சிந்தித்து மற்றொரு விஷயத்தைத் தீர்மானிப்பது தான் பகுத்தறிவு!
உதாரணமாக, நமது
பக்கத்து ஊரில் பெரிய தீ விபத்து ஏற்பட்டு விட்டது என்று வைத்துக் கொள்வோம்.
வானில் தெரியும் புகை மூட்டத்தை வைத்து, அந்தப்
புகை வரும் திசையை வைத்து இந்தப் பகுதியில் ஏதோ தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்பதை
நாம் விளங்கிக் கொள்கின்றோம். தீயைக் கண்ணால் பார்க்காமல் புகையை மட்டும் பார்த்து, அதை வைத்து
இந்த இடத்தில், இப்படி
நடந்திருக்கும் என்று அறிவைக் கொண்டு சிந்திப்பதற்குப் பெயர் தான் பகுத்தறிவு!
ஐந்து அறிவுகளின் மூலம் நாம் அறிவதை, சிந்தித்து
ஒரு விஷயத்தை முடிவு செய்வதைத் தான் பகுத்தறிவு என்கிறோம்.
கண்ணால்
பார்த்தால் தான் நம்புவேன் என்று கூறினால் மற்ற உயிரினங்களும் கூட அதைத் தான்
செய்கின்றன. எனவே இந்த ஐந்து புலன்களால் அறியப்படும் அறிவுகளை பகுத்தறிவு என்று
ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால் தான் பகுத்தறிவை மனிதன் குறிப்பிடும் போது ஆறாவது
அறிவு என்று கூறுகின்றான். பகுத்து அறிதல் என்பது தான் பகுத்தறிவு! ஒரு விஷயத்தை
அறிந்து கொள்வதற்காக பல விஷயங்களை ஆய்வு செய்து, அதில் எதை
ஏற்றுக் கொள்ள வேண்டும், எதை மறுக்க
வேண்டும் என்று பிரித்தறிவது தான் பகுத்தறிவாகும். இந்த அடிப்படையைப் புரிந்து
கொண்டு, இறைவன் இருக்கின்றானா? என்ற
நாத்திகர்களின் வாதத்துக்கு வருவோம்.
- வளரும்
இன்ஷா அல்லாஹ்
EGATHUVAM MAY 2003