கூட்டு துஆ
எம்.ஐ. சுலைமான்
தன்னை விட சக்தி படைத்த ஒருவன் இருக்கின்றான்
என்பதை மனிதன் ஒப்புக் கொண்டுள்ளான் என்பதற்கு பிரார்த்தனை சிறந்த
எடுத்துக்காட்டு!
தான் பலவீனமானவன் என்பதையும், இறைவன்
சர்வ சக்தி படைத்தவன் என்பதையும் பிரார்த்தனையின் மூலம் மனிதன் ஒப்புக்
கொள்கின்றான். எனவே அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு திருக்குர்ஆனில் பல
இடங்களில் கூறப்பட்டுள்ளது. மேலும் நபி (ஸல்) அவர்களும் இதை வலியுறுத்தியுள்ளார்கள்.
"பிரார்த்தனை
தான் வணக்கமாகும். (ஏனெனில்) உங்கள் இறைவன் கூறுகின்றான்: என்னை அழையுங்கள்!
உங்களுக்குப் பதிலளிக்கின்றேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி),
நூற்கள் : அபூதாவூத் (1264), திர்மிதீ (2895, 3170, 3294), இப்னுமாஜா
(3818), அஹ்மத் (17629)
வணக்கமாகக் கருதப்படும் பிரார்த்தனையை எவ்வாறு
செய்ய வேண்டும் என்பதை திருமறைக் குர்ஆனும் நபிமொழிகளும் நமக்கு வழிகாட்டுகின்றன.
பிரார்த்தனை செய்பவரிடம் முக்கியமாக பின்வரும்
காரியங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று குர்ஆனும் நபிமொழிகளும் நமக்குக்
கட்டளையிடுகின்றன.
1. பணிவுடன்
கேட்க வேண்டும்; அதிகார தோரணையில் பிரார்த்தனை அமையக் கூடாது.
2. ஆசையோடு
கேட்க வேண்டும்.
3. தன்னைப்
படைத்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றோம் என்ற பயம் இருக்க வேண்டும்.
4. தன்
கோரிக்கையை அல்லாஹ் நிறைவேற்றி வைப்பான் என்ற மன உறுதி வர வேண்டும்.
5. பிரார்த்தனை
அடுத்தவர் கேட்கும் வண்ணம் இல்லாமல் மெதுவாக இருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட முக்கியமான இந்த ஐந்து
நிபந்தனைகளுக்குரிய ஆதாரங்கள்:
1 உங்கள்
இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு
மீறியோரை அவன் நேசிக்க மாட்டான்.
(அல்குர்ஆன் 7:55)
2 அச்சத்துடனும், நம்பிக்கையுடனும்
அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில்
உள்ளது.
(அல்குர்ஆன் 7:56)
3 அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும்
தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து
விலகும். நாம் வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவார்கள்.
(அல்குர்ஆன் 32:16)
4 அவர்
(ஜக்கரியா) தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார்.
(அல்குர்ஆன் 19:3)
5 "நீங்கள்
பிரார்த்தித்தால் (உங்கள்) கோரிக்கையை வலியுறுத்திக் கேளுங்கள். "அல்லாஹ்வே!
நீ நினைத்தால் எனக்கு வழங்கு' என்று சொல்ல வேண்டாம். (வலியுறுத்திக் கேட்பது
இறைவனை நிர்ப்பந்திப்பது ஆகாது.) ஏனெனில் அவனை நிர்ப்பந்திப்பவர் எவருமில்லை'' என்று நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல்கள் : புகாரி (6338), முஸ்லிம் (4837)
6 உங்களில்
எவரேனும் பிரார்த்தித்தால், "நீ நாடினால் என்னை மன்னிப்பாயாக!' என்று
கேட்க வேண்டாம். (உங்கள்) கோரிக்கையை வலியுறுத்திக் கேளுங்கள். மகத்துவம் மிக்கதைக்
கேளுங்கள். ஏனெனில் அல்லாஹ் வழங்கிய எந்த ஒன்றும் அவனுக்குப் பெரிதாகத்
தெரிவதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (4838)
7 நாங்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் (மேடான
பகுதியில்) ஏறும் போது, "லாயிலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன்
அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை' என்றும்
"அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன்' என்றும்
கூறி வந்தோம். (ஒரு கட்டத்தில்) எங்கள் குரல்கள் உயர்ந்து விட்டன. அப்போது நபி
(ஸல்) அவர்கள் "மக்களே! மெதுவாகக் கூறுங்கள்! ஏனெனில் நீங்கள் காது
கேட்காதவனையோ, அல்லது மறைந்திருப்பவனையோ அழைக்கவில்லை. அவன்
உங்களுடனே இருக்கின்றான். அவன் செவியேற்பவன்; அருகிலிருப்பவன்; அவனது
பெயர் நிறைவானது. அவனது மதிப்பு உயர்ந்தது'' என்று
கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி),
நூல்கள் : புகாரி (2992, 4205, 6384, 6409, 6610, 7386), முஸ்லிம் (4873, 4874)
முஸ்லிமின் (4874வது)
அறிவிப்பில் "லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்' என்று
அழைத்ததாக இடம் பெற்றுள்ளது.
மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனங்கள், நபிமொழிகளின்
மூலம் விளங்கப்படும் பிரார்த்தனை ஒழுங்குகளில் ஒன்றான "இரகசியமாகக் கேட்க
வேண்டும்' என்ற ஒழுங்கை பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள்
மீறுவதைப் பார்க்கின்றோம்.
ஐவேளைத் தெழுகைக்குப் பிறகு இமாம் மைக் வைத்து
சப்தமிட்டு துஆச் செய்வதையும், பின்னால் உள்ளவர்கள் (அதன் பொருள் கூட
விளங்காமல்) ஆமீன் என்று சப்தமிட்டுக் கூறுவதையும் பார்க்கிறோம்.
மேலும் மாநாடு, பொதுக்கூட்டங்கள்
முடிவிலும் ஒருவர் சப்தமிட்டு துஆ கேட்க மற்றவர்கள் சப்தமிட்டு ஆமீன் கூறுவதையும்
காண்கிறோம்.
இதைப் போன்று குர்ஆன் ஓதி முடிக்கும் போது, கத்தம்
ஃபாத்திஹாக்கள் என்ற பித்அத்தை நிறைவேற்றும் போது, வீடு குடி
புகும் போது, மவ்லிது ஓதும் போது, திருமணம்
நடக்கும் போது, மண்ணறையில் அடக்கம் செய்யும் போது இப்படிப் பல
இடங்களில் திருமறைக் குர்ஆனின் (7:55) வசனத்தை நேரடியாக மீறுவதைக் காண்கிறோம்.
பொதுவாக பிரார்த்தனையை இரகசியமாகக் கேட்க
வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். எந்த வகைப் பிரார்த்தனையாக
இருந்தாலும் இரகசியமாகவே கேட்க வேண்டும். இதற்கு மாற்றமாக சப்தமிட்டுக் கேட்க
வேண்டுமானால் அந்த வகைப் பிரார்த்தனைக்கு தெளிவான சான்று குர்ஆன், நபிமொழிகளில்
இருக்க வேண்டும்.
எதற்கு சப்தமிட்டுக் கேட்க அனுமதிக்கப்
படுகின்றதோ அந்தப் பிரார்த்தனையைத் தவிர வேறு எதற்கும் இதைச் சான்றாக எடுத்துக்
கொள்ளவும் கூடாது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குர்ஆனிலும், நபிமொழித்
தொகுப்புகளிலும் ஒருவர் துஆச் செய்ய மற்றவர் ஆமீன் கூற ஆதாரம் உள்ளது என்று சிலர்
கூறுகின்றார்கள். அவ்வாறு பொது மேடைகளிலும், துண்டுப்
பிரசுரங்களிலும் கூறியுள்ளனர். அவர்களின் கூற்றை இப்போது பார்ப்போம்.
ஆதாரம் எண்: 1
8 "எங்கள்
இறைவா! ஃபிர்அவ்னுக்கும், அவனது சபையோருக்கும் இவ்வுலக வாழ்க்கையில் அலங்காரத்தையும், செல்வங்களையும்
அளித்திருக்கிறாய்! எங்கள் இறைவா! உன் பாதையிலிருந்து அவர்களை வழி கெடுக்கவே (இது
பயன்படுகிறது). எங்கள் இறைவா! அவர்களின் செல்வங்களை அழித்து, அவர்களின்
உள்ளங்களையும் கடினமாக்குவாயாக! துன்புறுத்தும் வேதனையைக் காணாமல் அவர்கள் நம்பிக்கை
கொள்ள மாட்டார்கள்'' என்று மூஸா கூறினார்.
"உங்கள்
இருவரின் பிரார்த்தனை ஏற்கப்பட்டது. இருவரும் உறுதியாக நில்லுங்கள்! அறியாதோரின்
பாதையை இருவரும் பின்பற்றாதீர்கள்!'' என்று
(இறைவன்) கூறினான்.
(அல்குர்ஆன் 10:88,89)
10:88வது
வசனத்தில் மூஸா (அலை) அவர்கள் தான் பிரார்த்தனை செய்ததாக அல்லாஹ் கூறுகின்றான்.
ஆனால் அதற்கடுத்த வசனத்தில் "உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்கப்பட்டது'' என்று
அல்லாஹ் கூறுகின்றான்.
ஒருவர் துஆச் செய்ய, இருவரின்
பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டதாக எப்படிக் கூற முடியும்? மூஸா (அலை)
அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். ஹாரூன் (அலை) அவர்கள் "ஆமீன்' சொன்னார்கள்.
எனவே தான் அல்லாஹ் இருவரின் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வதாகக் கூறுகின்றான் என்று
கூறி பின்வரும் செய்தியை ஆதாரமாகக் குறிப்பிடுகின்றார்கள்.
9 நாங்கள்
நபி (ஸல்) அவர்களின் அவையில் இருந்த போது நபி (ஸல்) அவர்கள் "எனக்கு மூன்று
பாக்கியங்களை அல்லாஹ் வழங்கியுள்ளான்' என்று
கூறினார்கள். அவ்வவையில் இருந்த ஒருவர், அல்லாஹ்வின்
தூதரே! அந்தப் பாக்கியங்கள் என்ன? என்று வினவினார்.
1. ஸஃப்பில்
(வரிசையில்) நின்று தொழும் பாக்கியத்தை வழங்கியுள்ளான்.
2. ஸலாம்
சொல்லும் பாக்கியத்தை வழங்கியுள்ளான். இது சொர்க்கவாசிகளின் காணிக்கையாகும்.
3. ஆமீன்
சொல்லும் பாக்கியத்தை வழங்கியுள்ளான். எனக்கு முன்னர் அனுப்பப்பட்ட
இறைத்தூதர்களில் ஹாரூன் (அலை) அவர்களைத் தவிர வேறு எவருக்கும் வழங்கவில்லை. மூஸா
(அலை) துஆச் செய்தார்கள். ஹாரூன் (அலை) ஆமீன் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல் : இப்னு ஹுஸைமா (1586)
இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதல்ல! இச்செய்தியின்
இரண்டாவது அறிவிப்பாளரான ஸுரபி என்பவர் பலவீனமானவராவார். இவர் விஷயத்தில் ஆட்சேபணை
உள்ளது என்று இமாம் புகாரியும், இவர் அனஸ் (ரலி) மற்றும் இவரல்லாதவர்கள் வழியாக
பல மறுக்கப்பட வேண்டிய செய்திகளை அறிவித்துள்ளார் என்று இமாம் திர்மிதியும், இவரது
செய்தியின் மூலத்தில் சில மறுக்கப்பட வேண்டியவைகள் உள்ளன என்று இமாம் இப்னு
அதீயும், இவர் அனஸ் (ரலி) அவர்கள் வழியாக
அடிப்படையில்லாத செய்திகளை அறிவித்துள்ளார். இவர் ஆதாரத்திற்குரியவர் அல்ல! என்று
இமாம் இப்னு ஹிப்பானும், பலவீனமானவர் என்று உகைலீயும்
குறிப்பிட்டுள்ளனர். (தஹ்தீபுத் தஹ்தீப்)
இச்செய்தியைப் பதிவு செய்த இமாம் இப்னு ஹுஸைமா
அவர்கள் கூட, இச்செய்தி உறுதியானதாக இருந்தால் மூஸா (அலை)
துஆச் செய்யும் போது ஹாரூன் (அலை) தவிர, மற்ற
இறைத்தூதர்கள் எவருக்கும் வழங்காமல் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் ஆமீனை அல்லாஹ்
குறிப்பாக்கியுள்ளான் என்பது பற்றிய பாடம்
என்று கூறி இதில் குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது
என்பதை, இச்செய்தி உறுதியானதாக இருந்தால் என்ற
வாசகத்தின் மூலமாக சுட்டிக் காட்டியுள்ளார்கள். எனவே பலவீனமான இச்செய்தியை
வைத்துக் கொண்டு ஒரு கருத்தை நிலை நிறுத்த முடியாது.
ஹாரூன் (அலை), அவர்கள்
"ஆமீன்' கூறவில்லை என்றால், "உங்கள்
இருவரின் துஆவை ஏற்றுக் கொண்டேன்' என்று அல்லாஹ் கூறுவதன் பொருள் என்ன என்ற
கேள்வி நமக்கு எழலாம்.
பலரின் கருத்தை ஒருவரிடம் கூற வேண்டுமானால்
ஒருவர் மட்டும் அச்செய்தியைக் கூற மற்றவர் அங்கு இருந்தாலே அனைவரும் அக்கருத்தைக்
கூறியதாகத் தான் அதைக் கேட்பவர் எடுத்துக் கொள்வார்.
மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மக்கள் சார்பாக ஒரு
கோரிக்கை வைக்கச் செல்லும் போது, ஒரு பெரும் கூட்டமே அங்கு செல்லும். அப்போது
ஒருவர் மட்டுமே கோரிக்கையை எடுத்துச் சொல்வார். மற்றறவர்கள் அமைதியாக
இருப்பார்கள். அப்போது கோரிக்கை சொன்னவர் ஒருவராக இருந்தாலும் மற்றவர்களும் அங்கு
இருந்ததால் அனைவரும் அக்கோரிக்கையை வைத்ததாகத் தான் மாவட்ட ஆட்சித் தலைவர்
எடுத்துக் கொள்வார்.
இதைப் போன்றே மூஸா (அலை) அவர்களுடன் ஹாரூன்
(அலை) அவர்களும் ஃபிர்அவ்ன் மூலம் ஏற்படும் பிரச்சனைகளை உணர்ந்து அல்லாஹ்விடம்
முறையிட எண்ணுகின்றனர். ஹாரூன் (அலை) சார்பாக மூஸா (அலை) அவர்கள் துஆச்
செய்கின்றார்கள். எனவே தான் அல்லாஹ் உங்கள் இருவரின் துஆவை ஏற்றுக் கொண்டேன் என்று
கூறுகின்றான்.
இக்கருத்துக்குச் சான்றாக பின்வரும் வசனங்களும்
உள்ளன.
10 "அநீதி
இழைக்கும் கூட்டமான ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தவரிடம் செல்! அவர்கள் அஞ்ச வேண்டாமா?'' என்று உமது இறைவன் மூஸாவை அழைத்த போது
"என் இறைவா! அவர்கள் என்னைப் பொய்யரெனக் கருதுவார்கள் என நான் அஞ்சுகிறேன்'' என்று அவர்
கூறினார். "என் உள்ளம் நெருக்கடிக்கு உள்ளாகும். என் நாவும் எழாது. எனவே
ஹாரூனைத் தூதராக அனுப்புவாயாக! அவர்களிடம் என் மீது ஒரு (கொலைக்) குற்றச் சாட்டு
உள்ளது. எனவே அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள் என அஞ்சுகிறேன்'' (என்றும்
கூறினார்.)
"அவ்வாறில்லை!
நமது சான்றுகளுடன் இருவரும் செல்லுங்கள்! நாம் உங்களுடன் செவியுற்றுக்
கொண்டிருப்போம். ஃபிர்அவ்னிடம் சென்று "நாங்கள் அகிலத்தின் இறைவனுடைய
தூதர்களாவோம். எங்களுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பி விடு!' என்று
கூறுங்கள்!'' என்று (இறைவன்) கூறினான்.
(அல்குர்ஆன் 26:10-17)
இவ்வசனங்களில் "நாங்கள் அகிலத்தின்
இறைவனுடைய தூதர்களாவோம். எங்களுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பி விடு'' என்று
இருவரும் கூற வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான். ஆனால் ஃபிர்அவ்னிடத்தில்
இக்கோரிக்கையை வைத்துப் பேசியது மூஸா (அலை) அவர்கள் மட்டும் தான் என்று இன்னொரு
வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
11 "ஃபிர்அவ்னே!
நான் அகிலத்தாருடைய இறைவனின் தூதர். அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர
(வேறெதனையும்) கூறாதிருக்கக் கடமைப்பட்டவன். உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான
சான்றை உங்களிடம் கொண்டு வந்துள்ளேன். எனவே என்னுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பு!'' என்று மூஸா
கூறினார்.
(அல்குர்ஆன் 7:104, 105)
"நாங்கள்
அகிலத்தின் இறைவனுடைய தூதர்களாவோம், எங்களுடன்
இஸ்ராயீலின் மக்களை அனுப்பி விடு'' என்ற அல்லாஹ்வின் கட்டளையை ஹாரூன் (அலை)
அவர்கள் மீறினார்கள் என்றோ அல்லது மூஸா (அலை) அவர்கள் இக்கோரிக்கை வைத்த போது
ஹாரூன் (அலை) அவர்கள் ஆமீன் கூறினார்கள் என்றோ கூற முடியுமா? ஃபிர்அவ்னிடம்
இக்கோரிக்கையை வைக்க இருவரும் சென்றனர். மூஸா (அலை) அவர்கள் கோரிக்கை வைத்தார்கள்.
அப்போது ஹாரூன் (அலை) அவர்கள் அதை அங்கீகரிப்பது போல் அங்கு இருந்தார்கள். இது, ஹாரூன்
(அலை) அவர்களும் அக்கோரிக்கை வைத்ததைப் போன்று தான் என்பதை அறிவுடையோர் விளங்கிக்
கொள்வர்.
இதைப் போன்று தான் ஹாரூன் (அலை) அவர்கள்
சார்பாகவும் மூஸா (அலை) அவர்கள் துஆச் செய்கின்றார்கள். எனவே தான் அல்லாஹ் உங்கள்
இருவரின் துஆவை ஏற்றுக் கொண்டேன் என்று கூறுகின்றான்.
அடுத்து கூட்டு துஆவிற்கு அவர்கள் எடுத்து
வைக்கும் ஆதாரத்தையும் அதற்குரிய பதிலையும் அடுத்த இதழில் இன்ஷா அல்லாஹ்
பார்ப்போம்.
EGATHUVAM APR 2003