Mar 6, 2017

ஷியாக்கள் ஓர் ஆய்வு தொடர் 12 - ஜிப்ரயீலை மட்டம் தட்டும் ஷியாக்கள்

ஷியாக்கள் ஓர் ஆய்வு தொடர் 12 - ஜிப்ரயீலை மட்டம் தட்டும் ஷியாக்கள்
அபூஉஸாமா

ஓங்கிய வாள்! தாங்கிய ஜிப்ரீல்!

கைபர் போரின் போது அலீ (ரலி) அவர்கள் கண் வலியினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.
அலீ (ரலி) அவர்கள் கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டிருந்தார்கள். அவர்களுக்குக் கண் வலி ஏற்பட்டிருந்தது. நான் அல்லாஹ்வின் தூதருடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டேனேஎன்று (வருத்தத்துடன்) கூறினார்கள். எந்த நான் காலை வேளையில் கைபரை நபி (ஸல்) அவர்கள் வெற்றி கொண்டார்களோ அந்த நான் மாலை நேரம் வந்த போது,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கின்ற ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப் போகிறேன் என்றோ,அத்தகைய ஒரு மனிதர் இந்தக் கொடியைப் பிடித்திருப்பார் என்றோ அல்லது,அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கின்ற ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப் போகிறேன் என்றோ சொல்லி விட்டு, அவருக்கு அல்லாஹ் வெற்றியளிப்பான் என்று கூறினார்கள். நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் அலீ (ரலி) அவர்கள் வந்து எங்களுடன் இருக்கக் கண்டோம். உடனே மக்கள், இதோ, அலீ அவர்கள்! என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்கடம் கொடியைக் கொடுக்க, அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியத்தான். 

அறிவிப்பவர்: சலமாபின் அக்வஃ (ரலி), நூல்: புகாரி 2975

அப்போரில் அலீ (ரலி) அவர்கள் யூதர்களின் மன்னன் மர்ஹப் என்பவனைக் கொலை செய்து வீழ்த்தி விடுகிறார்கள்.

(முஸ்லிம் 3696)

இது தான் கைபர் போரில் நடந்த உண்மை நிகழ்வு! ஆனால் இந்த நிகழ்வுக்கு ஷியாக்கள் எப்படி தெய்வீகச் சாயம் பூசுகின்றார்கள் என்று பாருங்கள்!

கைபர் போர் அலீ (ரலி) கையினால் வெற்றி கண்டது. அப்போரில் அவர் யூதர்களின் மன்னன் மர்ஹபைக் கொன்றதும் நபி (ஸல்) அவர்களிடம் நற்செய்தி கூற ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வந்தார்கள். அவர்களிடம் நற்செய்தி தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் வினவிய போது ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அளித்த பதில் இதோ:

அல்லாஹ்வின் தூதரே! மர்ஹபாவைக் கொல்வதற்கு அலீ (ரலி) வாளை உயர்த்திய மாத்திரத்திலேயே அலீயின் கையை அந்தரத்தில் பிடித்து வைக்கும்படி இஸ்ராபீல்,மீகாயீல் ஆகிய இரு மலக்குகளுக்கு அல்லாஹ் உத்தரவிட்டு விட்டான். ஏனெனில் அவர் தனது முழு சக்தியையும் பயன்படுத்தி வாளை வீசினால் பூமியின் அடுக்குகளுக்குள் பாய்ந்து பூமி தலைகீழாகப் புரண்டு விடும். அதனால் தான் அவ்விரு மலக்குகளுக்கும் இப்படி உத்தரவிட்டு விட்டான்.

அத்துடன், ஜிப்ரயீலே! பூமியின் அதள பாதாளத்திற்கு விரைக! வாளின் வீச்சு பூமியின் பாதாளத்தில் பாய்ந்து விடாமல் தடுத்து நிறுத்துக! என்று அல்லாஹ் எனக்கும் ஓர் உத்தரவு போட்டான். உடனே நான் வந்து அலீயின் வாளைத் தடுத்து நிறுத்திப் பிடித்துக் கொண்டிருந்தேன்.

நான் ஏற்கனவே இதற்கு முன்பு லூத் நபியின் சமுதாயம் வாழ்ந்த மதாயின் நகரங்களை என் இறக்கைகளில் ஒன்றால் தூக்கி வைத்திருந்தேன். அவை ஏழு நகரங்கள். அந்நகரங்களில் உள்ள கோட்டைகளின் அடித்தளங்கள் ஏழாவது பூமி வரை பிடிமானம் கொண்டிருந்தன. அவற்றை ஸஹர் நேரம் வரை தாங்கிப் பிடித்திருந்தேன். அல்லாஹ் உத்தரவிட்டதும் அந்நகரங்களை தலைகீழாகப் புரட்டினேன். ஆனால் அவை எனக்கு அறவே பாரமாகத் தெரியவே இல்லை. அலீயின் வாளோ எனக்கு மிகவும் பாரமாக இருந்தது.

இது தான் நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரயீல் தெரிவித்த விளக்கத்தின் சாராம்சமாகும்.
இவ்வாறு புர்ஸீ அறிவிப்பதாக ஜஸாயிதி கூறுகின்றார்.
நூல்: அல் அன்வாருன் நுஃமானியா

ஸஃபிய்யா (ரலி) அவர்களின் முகத்தில் காயத் தழும்பு இருந்தது. (ஸஃபிய்யா அவர்களை இந்தப் போருக்குப் பின்னர் தான் நபியவர்கள் திருமணம் முடித்தார்கள்) அதை நபி (ஸல்) அவர்கள் விசாரித்த போது ஸஃபிய்யா (ரலி) தெரிவித்ததாவது:

கைபர் கோட்டையை அலீ கைப்பற்ற வந்த போது அது அவருக்கு மிகச் சிரமமானது. அதனால் அவர் கோட்டையை ஓர் உலுக்கு உலுக்கினார். கோட்டை மேல் இருந்தவர்கள் அனைவரும் கீழே விழுந்து விட்டனர். கட்டில் மீது அமர்ந்திருந்த நான் அவர்கள் மீது விழுந்தேன். அப்போது கட்டில் என் மீது விழுந்து இந்தக் காயம் ஏற்பட்டு விட்டது.

இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அளித்த பதில்:
ஸஃபிய்யாவே! அலீ கோபப்பட்டு கோட்டையை உலுக்கியதும், அலீயின் கோபத்தைக் கண்டு அல்லாஹ்வும் கோபப்பட்டு வானங்களை ஓர் உலுக்கு உலுக்கினான். வானங்கள் அனைத்தும் குலுங்கின. மலக்குகள் பயந்து முகங்குப்புற விழுந்து விட்டனர்.

அலீயின் தெய்வீகத் துணிச்சலுக்கு இந்தச் சம்பவம் போதுமானது.

இரவு நேரத்தில் கைபர் கோட்டையின் கதவை அடைப்பதற்கு மட்டும் நாற்பது பேர் தேவைப்பட்டனர். அலீ கோட்டைக்குள் நுழைந்த போது அதிகத் தாக்குதல் காரணமாக கேடயம் அவரது கையிலிருந்து பறந்து விட்டது. உடனே கோட்டையின் கதவை அவர் கழற்றி விட்டார். அது அவருடைய கையில் கேடயமாகத் திகழ்ந்தது. கடைசியில் அல்லாஹ் கைபர் கோட்டையை அலீ வெற்றி கொள்ளச் செய்தான்.
நூல்: அல் அன்வாருன் நுஃமானியா

புர்ஸீ என்ற இந்தப் புறம்போக்கு, ஜிப்ரயீல் மீகாயீலை எப்படி மட்டம் தட்டி, அலீயை உயர்த்துகின்றார் என்று பாருங்கள்.

(அவர்) வலிமை மிக்கவர்; அர்ஷுக்கு உரியவனிடத்தில் தகுதிபெற்றவர்.
அல்குர்ஆன் 81:20

ஜிப்ரயீலின் வலிமையை அல்லாஹ் சிலாகித்து, சிறப்பித்துச் சொல்கிறான். இந்த ஷியா ஷைத்தான்கள் ஜிப்ரயீலை விட அலீ வலிமையானவர் என்று குறிப்பிடுகின்றனர்.

ஒரு வாள் என்பது இரண்டு அல்லது மூன்று அடி நீளமிருக்கும். இந்த வாள் பூமியில் புகுந்து அதள பாதாளத்தைப் புரட்டி விடுமாம். புரூஸி சொல்கின்ற இந்தப் போலிக் கதையில் புராணங்கள் தோற்று விடும்.

இந்த மூன்றடி வாள் ஜிப்ரயீலின் இறக்கையில் பாரமாக இருக்கின்றது.

வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (அவன்) வானவர்களை இரண்டிரண்டு, மும்மூன்று நான்கு நான்கு சிறகுகளைக் கொண்ட தூதர்களாக அனுப்புவான். அவன் நாடியதைப் படைப்பில் அதிகமாக்குவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.
அல்குர்ஆன் 35:1

மலக்குகளின் இறக்கைகளைப் பற்றி அல்லாஹ் பெருமையாகச் சொல்கின்றான் என்றால் அந்த இறக்கைகளுக்கு ஒரு பிரம்மாண்டம் இருப்பதால் தான்.

இதை நாம் புகாரியில் இடம் பெற்றுள்ள ஹதீஸிலும் பார்க்கலாம்.

நான் ஆயிஷா (ரலி) அவர்கடம், அப்படி (நபியவர்கள் அல்லாஹ்வைப் பார்க்கவில்லை) என்றால், பிறகு அவர் (நம் தூதரின் பக்கம்) நெருங்கி, அருகே வந்தார். அந்நெருக்கத்தின் அளவு (வளைந்த) வில்லின் இரு முனைகளைப் போல் அல்லது அதை விடச் சமீபமாக இருந்தது என்னும் (53:8,9) இறை வசனம் எங்கே? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அது (குர்ஆனில் அவர் நெருங்கி அருகே வந்தார்என்பதில் அவர் என்பது) ஜிப்ரீல் (அலை) அவர்களைக் குறிக்கின்றது. ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்கடம் ஒரு மனிதரின் உருவில் வருவார்கள். இந்த முறை அவர்கள் வந்தது அவர்களுடைய உண்மையான உருவம் எதுவோ அந்த உருவத்திலாகும். அதனால் தான் அவர் அடிவானத்தையே அடைத்துக் கொண்டார்என்று பதிலத்தார்கள்.

அறிவிப்பவர்: மஸ்ரூக், நூல்: புகாரி 3235

அடிவானத்தை அடைத்து நிற்கின்ற, அகன்ற, அற்புத இறக்கைகளுக்கு அலீயின் வாள் கனக்கிறதாம். ஜிப்ரயீலுக்கு அது வலிக்கிறதாம். பொய்யன் புரூஸி எப்படிக் காதில் பூச்சுற்றுகின்றார் என்று பாருங்கள்.

மனிதனால் ஒரு பேரீச்ச மரத்தைக் கூட தன்னந்தனியாகக் கழற்ற முடியாது. இது தான் உண்மை! யதார்த்தம்! ஆனால் இந்த ஷியாக்களோ, கோட்டையையே அலீ உலுக்கினாராம். அதனால் கோட்டை குலுங்கியதாம். இதனைத் தொடர்ந்து அல்லாஹ்வும் வானத்தை உலுக்கினானாம். எப்படி நா கூசாமல் புளுகித் தள்ளுகிறார்கள் என்று பாருங்கள்.

இவ்விரு பொய் சம்பவங்களின் மூலம் புருஸீ நிலை நிறுத்த முயல்வது, அலீ (ரலி) அவர்களுக்கு தெய்வத் தன்மை, தெய்வீக சக்தி இருக்கின்றது என்பதைத் தான்.

இந்து மதப் புராணங்களில் வரும் தெய்வீகக் கோட்பாட்டை, மனிதனைக் கடவுளாக்கும் கோட்பாட்டை அலீயின் மீது திணித்து அவரைக் கடவுளாக்குகின்றனர்.

இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?
(அல்குர்ஆன் 9:30)

வளரும் இன்ஷா அல்லாஹ்


EGATHUVAM APR 2009