Mar 8, 2017

17. இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும் – நபி மீது பொய்! நரகமே கூலி!

17. இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும் நபி மீது பொய்! நரகமே கூலி!

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி
தமிழில்: எம். ஷம்சுல்லுஹா
பலவீனமான ஹதீஸ்கள், நபி (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் இஹ்யாவில் ஏராளமாக இடம்பெற்றுள்ளன. நபி (ஸல்) அவர்கள் மீது வேண்டுமென்றே பொய் சொல்வதற்கு நரகமே கூலி என்பதை ஹதீஸ்களின் அடிப்படையில் கண்டோம்.
நபி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்வது இறை மறுப்பு என்றும், அதற்கு மரண தண்டனை கொடுத்தாலும் தவறில்லை என்றும் பல்வேறு அறிஞர்கள் கூறியுள்ளனர். அவற்றை இப்போது பார்ப்போம்.
நபி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்பவர் சதாவும் ஒரு ஹராமை, ஹலால் ஆக்கிக் கொண்டிருப்பார். அல்லது அதை ஹலாலாக்க மற்றவரைத் தூண்டிக் கொண்டிருப்பார். தடை செய்யப்பட்டவற்றை ஹலாலாக்குவது இறை மறுப்பாகும். அதற்குத் தூண்டி விடுவதும் இறை மறுப்பாகவே ஆகும். இப்படி ஓர் ஆய்வை மாலிக் மத்ஹபைச் சேர்ந்த நாஸிருத்தீன் பின் அல்முனீர் என்பார் தெரிவிக்கின்றார்.
ஹாபிழ் இமாம் சுயூத்தி அவர்கள், தஹ்தீருல் கவாஸ் மின் அஹாதீபில் குஸ்ஸாஸ் - கதையளப்பவர்களின் பொய்கள், கூட இருப்பவர்களுக்கு எச்சரிக்கை என்ற ஒரு நூலை இயற்றியுள்ளார்கள். அந்த நூலில் அவர் குறிப்பிடுவதாவது:
நபி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்பவர்கள் இறை மறுப்பாளர்கள் என்ற கருத்தைத் தான் அபூபக்ர் பின் இப்னுல் அரபியைப் போன்றே, ஹன்பலி மத்ஹபைச் சார்ந்த ஷைக் இப்னு அகீல் என்பாரும் கொண்டிருக்கின்றார் என்று சுயூத்தி தெரிவிக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்வது, ஹலாலை ஹராமாக்கும் செயலுக்கு ஒருவரைக் கொண்டு சென்று விடுகின்றது. இதனால் அறிஞர்களில் ஒரு சாரார், நபி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்வது இறை மறுப்பு என்ற கருத்திற்குச் சென்று விட்டனர்.
நூல்: மீஸானுல் இஃதிதால்
ஒரு ஹலாலை ஹராமாக்கும் விஷயத்தில் அல்லது ஒரு ஹராமை ஹலாலாக்கும் விஷயத்தில் அல்லாஹ்வின் மீதோ, அவனது தூதர் மீதோ திட்டமிட்டுப் பொய் சொல்வது தெளிவான இறை மறுப்பு என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை என்று ஹாபிழ் தஹபீ குறிப்பிடுகின்றார்கள்.
நூல்: அல்கஷ்புல் ஹஸீஸ்
நபி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று முன்னோர்களும், ஹதீஸ் கலை அறிஞர்களும் குறிப்பிட்டிருப்பது நம்முடைய கருத்திற்கு வலு சேர்க்கின்றது என்று ஹாபிழ் தஹபீ அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (மீஸானுல் இஃதிதால்)
 நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, தவறான செய்திகளை அறிவிக்கின்ற சுவைத் அல் அன்பாரியின் உயிரைப் பறிப்பது அனுமதிக்கத்தக்கது என்று யஹ்யா பின் மயீன் அவர்கள் மிகக் கடுமையாகக் குறிப்பிடுகின்றார்கள். (மீஸானுல் இஃதிதால்)
"தலையை மறைப்பது நபிமார்களின் பண்பாகும். நபி (ஸல்) அவர்கள் தலையை மறைப்பவர்களாக இருந்தார்கள் என்று அப்துல்லாஹ் - முஜாஹித் - அபூநஜீஹ் வழியாக முஅல்லா பின் ஹிலால் அறிவிக்கின்றார். இவரது தலையைத் துண்டிப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் மீது சொல்கின்ற இந்தப் பொய்யை விட வேறென்ன காரணம் வேண்டும்?'' என்று சுஃப்யான் பின் உயைனா குறிப்பிடுகின்றார். (நூல்: மீஸானுல் இஃதிதால்)
"தாவூத் பின் யஸீத் அல் அஸ்திய்யி, ஜாபிர் அல் ஜுஃபி ஆகிய பலவீனமான அறிவிப்பாளர்களை நோக்கி, உங்கள் இருவரையும் தண்டிப்பதற்குரிய வாய்ப்பு கிடைத்து, வெள்ளிக் கட்டியைத் தவிர வேறு எந்த ஆயுதமும் என் கைக்குக் கிடைக்காத பட்சத்தில் அதை உருக்கியாவது உங்கள் இருவருக்கும் விலங்கு மாட்டுவேன்'' என்று ஷஅபீ தெரிவித்தார்கள். (நூல்: தஹ்தீருல் அவாஸ்)
அபூஹிஷாம் ரிபாயீ என்பவர் வெறுக்கத்தக்க ஹதீஸை அறிவித்துக் கொண்டிருக்கும் போது அவரை நோக்கி, "இன்னொரு முறை இதுபோன்று ஹதீஸை அறிவித்தால் உன்னை நான் சிலுவையில் அறைந்துவிடுவேன்'' என்று இப்னு ஹுதைல் எச்சரிக்கை விடுத்தார்.
நபி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்பவருக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று அறிஞர்கள் யாரும் பகிரங்கமாக அறிவிக்கவில்லை. இருந்தாலும் நபியவர்கள் மீது பொய் சொல்வது இறை மறுப்பு என்ற அடிப்படையில் அமைவதை வைத்து, அறிஞர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள், எச்சரிக்கைகள் ஆகியவற்றைப் பார்க்கும் போது அவர்கள் இந்தப் பாவத்திற்கு மரண தண்டனை விதிப்பது சரி என்ற கருத்தில் இருந்ததையே இவை உணர்த்துகின்றன.
நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஒரு செய்தியைச் சொல்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பேணுதலைப் பற்றி இமாம் முஸ்லிம் அவர்கள் தமது ஸஹீஹ் முஸ்லிம் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டதை சுருக்கமாக இப்போது பார்ப்போம்.
நபி மொழிக்கு அவசியம்
நம்பத் தகுந்த வழி மட்டுமே!
ஆதாரப்பூர்வமான அறிவிப்புகள் எவை, பலவீனமான அறிவிப்புகள் எவை, நம்பத் தகுந்த அறிவிப்பாளர் யார், சந்தேகத்திற்குள்ளான அறிவிப்பாளர் யார் எனப் பகுத்தறியும் திறன் யாருக்கு இருக்கிறதோ அவர், தாம் அறிந்த தரமான மற்றும் நேர்மையான அறிவிப்பாளர் அறிவித்துள்ள ஹதீஸ்களை மட்டுமே அறிவிப்பது அவசியமாகும். சந்தேகத்திற்கு உள்ளானவர்கள், புதிய வழக்கங்களில் பிடிவாதமாக இருப்பவர்கள் ஆகியோரால் அறிவிக்கப்பெற்ற ஹதீஸ்களைத் தவிர்ப்பதும் அவசியமாகும்.
நாம் கூறிய இக்கருத்தே சரியானதாகும் என்பதற்குப் பின்வரும் இறைவசனங்கள் சான்றுகளாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். (49:6).
அல்லாஹ் கூறுகின்றான்:
உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்! இரு ஆண்கள் இல்லாவிட்டால் சாட்சிகள் என நீங்கள் திருப்தியடையும் ஓர் ஆணையும், இரண்டு பெண்களையும் (ஆக்கிக் கொள்ளுங்கள்!) (2:282).
உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். (65:2).
இவ்வசனங்களிலிருந்து தீயவனின் செய்தியும், நேர்மையில்லாதவனின் சாட்சியமும் ஏற்கத்தக்கவை அல்ல என்று தெரிகிறது.
தகவல் அறிவித்தல், சாட்சியம் அளித்தல் ஆகிய இவ்விரண்டின் பொருளும் சில கோணங்களில் வேறுபட்டிருந்தாலும் பெரும்பாலான விஷயங்களில் அவ்விரண்டும் ஒன்றுபட்டே இருக்கின்றன.
கல்வியாளர்களிடம் தீயவனின் சாட்சியம் ஏற்கப்படாததைப் போன்றே, தீயவனின் தகவலும் அவர்கள் அனைவராலும் நிராகரிப்பட்டுள்ளது. தீயவன் கூறும் செய்திக்கு இடமில்லை எனக் குர்ஆன் சுட்டிக் காட்டியிருப்பதைப் போன்றே, மறுக்கப்பட்ட அறிவிப்பாளரின் ஹதீஸிற்கும் இடமில்லை என நபிமொழி சுட்டிக் காட்டுகிறது.
இது குறித்து பிரபலமான நபிமொழி ஒன்று வந்துள்ளது.
பொய்ச் செய்தியை அறிவிப்பவர் ஒரு பொய்யர் தான்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை என்னைப் பற்றி யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்.
அறிவிப்பவர்கள்: முஃகீரா பின் ஷுஅபா (ரலி) சமுரா பின் ஜுன்தப் (ரலி).
நூல்: முஸ்லிம் 1
நபி மீது பொய் நரகமே தண்டணை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக)ப் பொய்யுரைக்காதீர்கள். ஏனெனில், என்னைக் குறித்து யார் பொய் கூறுகிறாரோ அவர் நரகம்தான் செல்வார்.
இந்த ஹதீஸை அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் தமது சொற்பொழிவில் அறிவித்தார்கள்.
நூல்: முஸ்லிம் 2
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அனஸ் (ரலி)யின் அதிக கவனம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக) யார் வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்'' என்று கூறியிருப்பதுதான் உங்களுக்கு நான் அதிக எண்ணிக்கையில் ஹதீஸ்களை அறிவிக்கவிடாமல் தடுக்கிறது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 3
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக) யார் வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 4
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூஃபா நகரின் ஆளுநராய் இருந்தபோது நான் (மஸ்ஜிது கூஃபா) பள்ளிவாசலுக்குச் சென்றேன். அப்போது முஃகீரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நீங்கள்) என்மீது கூறும் பொய் மற்றவர்மீது நீங்கள் கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என்மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்'' என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன்
அறிவிப்பவர்:  அலீ பின் ரபீஆ (ரஹ்)
நூல்: முஸ்லிம் 5
- மேற்கண்ட ஹதீஸ் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "(நீங்கள்) என்மீது கூறும் பொய் மற்றவர்மீது நீங்கள் கூறும் பொய்யைப் போன்றதன்று'' எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
கேள்விப்பட்டதையெல்லாம் அறிவிப்பது கூடாது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 6
ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.
அறிவிப்பவர்: உமர் பின் அல்கத்தாப் (ரலி)
நூல்: முஸ்லிம் 7
இதை அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அனஸ் (ரலி)யின் அறிவுரை
அப்துல்லாஹ் பின் வஹ்ப் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள், "தெரிந்துகொள்! கேள்விப்பட்டதையெல்லாம் அறிவிக்கும் ஒரு மனிதர் (பொய்யிலிருந்து) தப்பமாட்டார்; கேள்விப்பட்டதையெல்லாம் அறிவிக்கும் ஒருவர் ஒருபோதும் (வழிகாட்டும்) தலைவராக இருக்க மாட்டார்'' என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 8
புதுப் புது பொய்யர்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது சமுதாயத்தில் இறுதிக் காலத்தவரிடையே சிலர் தோன்றுவார்கள். நீங்களோ உங்கள் மூதாதையரோ கேள்விப்பட்டிராத (புதுப்புது) ஹதீஸ்களையெல்லாம் உங்களிடம் அவர்கள் சொல்வார்கள். ஆகவே, அவர்கள் குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 13
வரும் வழியை உரசி பார்த்தல்
முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நிச்சயமாக இந்த (நபிமொழி)க் கல்வியும் மார்க்கம்தான். எனவே, உங்களுடைய மார்க்க (ஞான)த்தை எவரிடமிருந்து பெறுகிறீர்களோ அவரை உற்றுக் கவனியுங்கள்.
அறிவிப்பவர்: ஹிஷாம் பின் ஹஸ்ஸான் (ரஹ்)
நூல்: முஸ்லிம் 24
செய்தியைக் காக்கும் சங்கிலித் தொடர்
அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அறிவிப்பாளர் தொடரும் மார்க்கத்தின் ஓர் அங்கமே. அறிவிப்பாளர் தொடர் (இஸ்னாத்) மட்டும் இருந்திருக்காவிட்டால் (மார்க்கத்தில்) நினைத்தவர்கள் நினைத்ததையெல்லாம் சொல்லியிருப்பார்கள்.
நூல்: முஸ்லிம் 30
அரிதாக இருப்பதில் தப்பில்லை! ஆதாரப்பூர்வமாக இருக்க வேண்டும்
நான் அபூமுஹம்மத் காசிம் பின் உபைதில்லாஹ் (ரஹ்) மற்றும் யஹ்யா பின் சயீத் (ரஹ்) ஆகியோர் அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது யஹ்யா (ரஹ்) அவர்கள் காசிம் (ரஹ்) அவர்களிடம், "அபூமுஹம்மதே! மார்க்க விவகாரத்தில் ஏதேனும் ஒன்றைப் பற்றி உங்களிடம் வினவப்பட்டு, அதற்குரிய விடையோ தீர்வோ உங்களிடம் இல்லாதிருப்பது உங்களைப் போன்றவர்களுக்குப் பெருங்குறையாயிற்றே!'' என்று கூறினார்கள். அதற்குக் காசிம் (ரஹ்) அவர்கள், "ஏன் அவ்வாறு கூறுகின்றீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு யஹ்யா (ரஹ்) அவர்கள், "நீங்கள் நேர்வழித் தலைவர்களான அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரின் வழித் தோன்றலாயிற்றே!'' என்று சொன்னார்கள். அதற்குக் காசிம் (ரஹ்) அவர்கள், "நான் (தக்க) அறிவின்றிப் பேசுவதோ, நம்பத் தகாதவர்களிடமிருந்து ஒன்றை அறிவிப்பதோ தான் அல்லாஹ்வைப் பற்றி அறிந்தவர்களிடம் இதைவிட மோசமானதாகும்'' என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) யஹ்யா (ரஹ்) அவர்கள் பதிலேதும் சொல்லாமல் அமைதியாகிவிட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஅக்கீல் யஹ்யா பின் அல்முத்தவக்கில் (ரஹ்)
நூல்: முஸ்லிம் 31

EGATHUVAM MAR 2015