உரை: பி. ஜைனுல் ஆபிதீன்
எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.
ஒரு
பிரயாணத்தில் ஆயிஷா நாயகியை அழைத்துக் கொண்டு நபியவர்கள் சென்ற போது, அவர்கள்
இரவலாக வாங்கி வந்த கழுத்துமாலை (நெக்லஸ்) தொலைந்துவிடுகிறது. மதிப்புமிக்க
மாலையாக இருந்ததால் அனைவரும் தேடவேண்டிய சூழல் ஏற்பட்டது. கடைசியில் தொழுகை நேரம்
கடந்துகொண்டே செல்கிறது. தண்ணீர் கிடைக்கவில்லை. இதன் காரணமாக தயம்மும் உடைய வசனம்
நபியவர்களுக்கு இறங்குகிறது.
(பார்க்க: புகாரி 334)
ஆயிஷா (ரலி) அவர்கள் செய்த இந்தச் செயலின்
காரணமாக அனைவருக்கும் கோபம் வந்து, அதை ஆயிஷாவின் தந்தை அபூபக்கரிடம் சென்று
முறையிடுகிறார்கள். அபூபக்கர் கோபப்பட்டு திட்டுவதற்காகவோ அடிப்பதற்காகவோ
ஆயிஷாவைத் தேடி வருகிறார்கள். அப்போது நபியவர்கள் ஆயிஷா (ரலி)யின் மடியில்
படுத்துறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அபூபக்கர் ஆயிஷாவை வந்து அடிக்கிறார்கள். வலி
தாங்கமுடியவில்லை. நபியவர்கள் தமது மடியில் தூங்கியதால் ஆயிஷா (ரலி) அசையாமல்
இருந்து கொண்டார்கள்.
இவ்வளவு பெரிய விவகாரங்கள் நடந்து, எல்லோரும்
கோபப்பட்டுக் கொண்டிருக்கும் போது, நபியவர்கள் தமது கோபத்தைக் காட்டாமல், அதைப் பெரிதாக
அலட்டிக் கொள்ளாமல், தேடிப் பார்க்கச் சொல்லிவிட்டு, தமது மனைவியின்
மடியில் படுத்துறங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதை ஒரு விவகாரமாக நபியவர்கள்
எடுத்துக் கொள்ளவே இல்லை.
பெண்கள் மட்டும்தான் தொலைப்பார்களா? பெண்கள்
மட்டும்தான் கைதவறிக் கீழே போடுவார்களா? ஆண்களுக்கும் அப்படி நடக்கத்தான் செய்யும்.
மனைவியின் கைதவறி ஒரு பொருள் உடைந்துவிட்டால், உடனே கணவன், உன் பெற்றோர் உன்னை வளர்த்த லட்சணம் இது தானா? என்றெல்லாம்
சண்டை போடுகிற கணவன்மார்களைப் பார்க்கிறோம்.
ஆண்கள் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
ஆண்களும் கைதவறி ஏதாவது பொருளை உடைக்கத்தான் செய்வார்கள். எதிர்பாராமல் என்றாவது ஒருசில நாட்களில்
எல்லோருக்கும் நடக்கத்தான் செய்யும்.
காணாமல் போனதால் மனைவிக்கு கவலை வந்துவிடக்
கூடாது; இதற்காக
அவர்களது மனம் புண்பட்டுவிடக் கூடாது என்கிற வகையில் நபியவர்கள் நடந்துகொண்ட விதம்
வியப்பாக இருக்கிறது.
இந்தச் செய்தி புகாரியில் 3672, 4608 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் நிறைய இடங்களில் இந்தச்
செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று நபியவர்களின் மனைவிமார்கள்
தங்களுக்குள்ளேயே இரண்டு பிரிவினராக இருந்துள்ளனர்.
ஆயிஷா, ஹப்ஸா, ஸஃபிய்யா, ஸவ்தா இவர்கள் நான்கு பேரும் ஒரு பிரிவாக
இருப்பார்கள். மற்ற மனைவிமார்கள் இன்னொரு பிரிவு. ஆயிஷா (ரலி) பிரிவினர் சேர்ந்து
கொண்டு மற்ற பிரிவினருக்கு எதிராகப் பேசுவது, சண்டை போட்டுக் கொள்வது என்று இரண்டு அணியாகச்
செயல்பட்டுள்ளனர்.
நபியவர்களுக்கு சில ஸஹாபாக்கள் உணவுப்
பொருட்களை அன்பளிப்பாகக் கொடுப்பது வழக்கமாகியிருந்தது. நபியவர்கள் ஆயிஷா (ரலி)
வீட்டில் இருக்கும் போதுதான் கொடுத்து விடுவார்கள். எல்லா நாட்களிலும் கொடுத்துவிட
மாட்டார்கள். கதீஜா (ரலி)க்குப் பின் மனைவிமார்களில் ஆயிஷா (ரலி)யிடம் மிகவும்
பிரியமாக இருப்பார்கள் என்பது தான் இதற்குரிய காரணமாகும். நபியவர்கள் ஆயிஷாவின்
மீது வைத்த அன்பை அறிந்து கொண்டுதான் சஹாபாக்கள் இப்படிச் செய்கிறார்கள்.
இப்படி சஹாபாக்கள் செய்துவந்த காரியம், மற்ற
மனைவிமார்களுக்கு ஒருவகையான வெறுப்பை ஊட்டியது. இதுவெல்லாம் நல்ல முறை கிடையாது, எனவே இதுபற்றி
நபியவர்களிடம் தெளிவாகக் கேட்டாக வேண்டும் என்று முடிவெடுத்து ஒவ்வொரு மனைவியாக
நபியவர்களிடம் வந்து இந்தப் பிரச்சனையைச் சொல்கிறார்கள்.
நாங்களும் உங்களுக்கு மனைவிமார்கள் தான். ஆயிஷா
வீட்டில் நீங்கள் தங்கும் போது மட்டும்தான் சஹாபாக்கள் தங்களுக்கு அன்பளிப்பை
வழங்குகிறார்கள். எங்களது வீட்டில் தங்குகிற போது அன்பளிப்பு எதுவும் வருவதில்லை.
ஆயிஷாவுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது ஏன்? அபூபக்கர்
மகளுக்காக அதிகம் நீதியை வளைக்கிறீர்களா? எங்களிடம் நீதியாக நீங்கள் நடக்கவில்லை என்றெல்லாம்
கடுமையான முறையில் மற்ற மனைவிமார்கள் சண்டை போடுமளவுக்குப் பேசிவிடுகிறார்கள்.
அப்போது நபியவர்கள் மௌனமாக இருக்கிறார்கள்.
அதன் பிறகு அந்தக் குறையை நபியவர்களின் மகள்
ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் சொல்லி நபியவர்களிடம் சொல்லச் சொல்கிறார்கள். அதை
ஃபாத்திமா (ரலி) நபியவர்களிடம் போய்ச் சொல்கிறார்கள். அப்போது நபியவர்கள்
அதெல்லாம் சரியாகத் தான் இருக்கிறது. இதை மாற்ற முடியாது என்று
சொல்லிவிடுகிறார்கள்.
அதன் பிறகு ஜைனப் (ரலி)யிடம் சொல்கிறார்கள்.
ஆயிஷாவுக்கு எதிரான பிரிவினருக்கு தலைவி ஜைனப் தான். இவர்கள் கொஞ்சம் உறுதியானவர்களாகவும்
இருந்தார்கள். ஜைனப் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் வந்து, கடுமையான
வார்த்தைகளைப் பயன்படுத்தி சண்டையிடுகிறார்கள். குற்றம் சுமத்துகிறார்கள். ஆயிஷா
நாயகியை இழுத்துப் பேசுகிறார்கள். என்னென்ன வார்த்தைகள் என்று ஹதீஸில் வரவில்லை.
ஜைனபுக்கு நாம் பதில் சொல்வதை விட, ஆயிஷா பதில் சொன்னால் நன்றாயிருக்குமே என
நபியவர்கள் நினைக்கிறார்கள்.
ஜைனப் அவர்கள் எல்லை மீறியதும் ஆயிஷா எழுந்து
ஜைனபின் வாயடைத்துப் போகும் வகையில் பதிலுரைக்கிறார்கள். என்ன பதில் என்பதும்
ஹதீஸில் வரவில்லை. அந்த உரையாடலை சஹாபாக்கள் தெரிவிக்கவில்லை.
பெண்கள் பேச்சு எப்படியிருக்கும் என
நமக்கெல்லாம் தெரிந்ததுதான். அதுபோன்று இருந்திருக்கும். கடைசியில் ஆயிஷா (ரலி)
அவர்களின் கை ஓங்கிவிடுகிறது. ஏனெனில் அவர்கள் நன்றாக தர்க்க ரீதியாகப்
பேசுவார்கள். ஆயிஷாவின் பேச்சுக்கு முன்னால் ஜைனபு (ரலி)யால் பதில் சொல்ல
முடியவில்லை.
ஜைனபின் ஒவ்வொரு கேள்விக்கும் நபியவர்கள்
சார்பாகவே ஆயிஷா அவர்கள் பதில் கொடுக்கிறார்கள். இப்படி நபியவர்களுக்கு
முன்னிலையில் இரண்டு மனைவிமார்கள் சண்டைபோட்டு, ஆயிஷா வெற்றி பெறுவதைப் பார்த்த நபியவர்கள், "அபூபக்கர்
மகள் உண்மையில் அபூபக்கர் மகள்தான்'' என்று உரைக்கிறார்கள்.
அதாவது ஆயிஷாவைப் பார்த்து, நீ அபூபக்கர்
மகள் என்பதைக் காட்டிவிட்டாய் என்று கூறுகிறார்கள். ஏனெனில் அபூபக்கர்
நபித்தோழர்களில் மிகவும் விபரமிக்க நபர். சின்ன சின்ன விசயங்களில்கூட மிகவும்
நுணுக்காமாக சிந்திப்பவர்கள்; செயலாற்றுபவர்கள். அதனால்தான் ஆயிஷாவைப்
பார்த்து, ஒவ்வொரு
விமர்சனத்துக்கும் மறுப்புக் கொடுத்து ஜைனபின் வாயைத் திறக்க முடியாமல்
ஆக்கிவிட்டாயே என்று சொல்கிறார்கள்.
இப்படி ஒரு நீண்ட சம்பவம் ஹதீஸ்களில்
பதிவாகியுள்ளது. இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், இப்படியெல்லாம்
நமது வீடுகளில் பெண்கள் நடந்து கொள்வதைப் போன்றுதான் நபியவர்களின் மனைவிமார்களும்
நடந்திருக்கிறார்கள். எனவே பெண்கள் பெண்களாகத்தான் இருந்தார்கள். உரிமை என்று
வருகிற போது விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இரண்டு மனைவிகள் இருந்தால் ஒரு மனைவி
இன்னொரு மனைவியின் விசயத்தில் உரிமை கோருதலும் சண்டையிடுதலும் பிரச்சனைகளும்
வரும். அம்மாவுக்குக் கொடுப்பதில், அண்ணன் தம்பிகளுக்கும் அக்கா தங்கைகளுக்கும்
கொடுக்கிற விசயத்திலெல்லாம் பிரச்சனைகள் வரும்.
தனது கணவன் அவனது அக்காவிற்குக் கொடுப்பதைத்
தடுப்பார்கள். பலரது மனைவிமார்கள். வெளிநாட்டிலிருந்து வரும் போது அக்காவைப்
பார்த்துவிட்டு வந்தால், அதோடு அவன் வாழ்க்கை தொலைந்தது. இப்படியெல்லாம்
பெண்கள் பார்க்கத்தான் செய்வார்கள்.
இதுபோன்று நமது குடும்பத்தில் மாமியார் மருமகள்
சண்டை போடும் போது நாம், ஆயிஷா நாயகி சண்டை போடவில்லையா? என்று நினைக்க
வேண்டும். நபியவர்களின் மனைவி ஜைனப் (ரலி) அவர்கள் சண்டை போடவில்லையா? என்று நினைத்து
ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியதுதான். பெண்கள் என்றாலே அப்படித்தான் இருப்பார்கள்.
அப்படி வரும் போது நபியவர்கள் சமாளித்ததைப் போன்று சமாளித்துக் கொள்ள வேண்டுமே
தவிர, அதற்காக
பெண்களை அடிமைப்படுத்திட இயலாது.
எனவே ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்வது என்பது
இப்படித்தான். கரடுமுரடாக நடந்து கொண்டு, பெண்களை வெறுத்துவிடாமல் இருக்க வேண்டும்.
மனைவியின் மீதோ தாயாரின் மீதோ கோபம் வருகிற போது, ஆயிஷா (ரலி)யையும் கப்ஸா (ரலி)யையும்
நினைத்தால் நமக்கு ஏற்பட்ட கோபம் தானாகவே மறைந்து விடும்.
அதேபோன்று ஆயிஷா (ரலி), நபியின்
மனைவிமார்களில் மற்றவர்களை விடவும் தான் சிறந்தவள் என்று நினைக்கிறார்கள். மேலும்
மற்ற மனைவிமார்களுடன் நபியவர்கள் இருப்பதை விரும்பாதவர்களாகவும் இருக்கிறார்கள்.
இதன் காரணத்தினால் ஒருநாள் நபியவர்களிடம் ஆயிஷா ரலியவர்கள், நபியவர்களே
சிந்திக்காத விசயத்தைக் கேட்கிறமாதிரி பொடிவைத்துப் பேசுகிறார்கள். உள் அர்த்தம்
வைத்துப் பேசுகிறார்கள்.
ஆயிஷா (ர-) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை)
நான் நபி (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் ஒரு பள்ளத்தாக்கில்
இறங்குகிறீர்கள். அதில் (கால்நடைகளினால்) உண்ணப்பட்டுப்போன ஒரு மரத்தையும் உண்ணப்
படாத ஒரு மரத்தையும் காண்கின்றீர்கள். இந்த இரண்டில் எந்த மரத்தில் தங்கள்
ஒட்டகத்தை மேயவிடுவீர்கள்? கூறுங்கள்!'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் "எதில்
ஏற்கெனவே மேயவிடப்படவில்லையோ அதில்தான் (நான் என் ஒட்டகத்தை மேய்ப்பேன்)'' என்று
பதிலளித்தார்கள்.
தம்மைத்
தவிர வேறு எந்த கன்னிப் பெண்ணையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மணக்கவில்லை
என்ற கருத்தில்தான் ஆயிஷா (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.
நூல்: புகாரி 5077
தொலை தூரப் பயணத்தில் ஒட்டகத்தில் செல்லும்
போது, மக்கள்
பயன்படுத்திய ஒன்றுமில்லாத பட்டுப்போன மரத்தில் ஒட்டகத்தை மேயவிடுவீர்களா? அல்லது நன்றாக
பசுமையாக இருக்கிற மரத்தில் ஒட்டகத்தை மேயவிடுவீர்களா? என்று
கேட்கிறார்கள். அதற்கு நபியவர்கள் யாராக இருந்தாலும் பசுமையான மரத்தில்தான்
மேயவிடுவார்கள் என்ற கருத்தைச் சொல்கிறார்கள்.
எதற்காக நபியவர்களிடம் இவ்வாறு கேட்டார்கள்
எனில், நபியவர்களது
மற்ற மனைவிமார்கள் இரண்டாம் தாரமாகவும் மூன்றாம் தாரமாகவும் வாழ்க்கை ஒப்பந்தத்தை
ஏற்படுத்தியவர்கள். ஆனால் ஆயிஷா (ரலி) கன்னிப் பெண்.
அப்படியெனில் தனக்குத்தான் மற்றவர்களை விடவும்
நபி (ஸல்) அவர்கள் முக்கியத்துவம் தரவேண்டும் என்பதற்காகத் தான் இப்படிக்
கேட்டார்கள்.
இப்படியெல்லாம் சொல்லும் போது கோபம் வரத்தான்
செய்ய வேண்டும். ஆனாலும் நபியவர்கள் கோபப்படாமல் இதுபோன்ற பிரச்சனைகளைச்
சமாளித்துத்தான் வாழ்ந்துள்ளார்கள்.
வளரும் இன்ஷா அல்லாஹ்
EGATHUVAM MAR 2015