18. இணை கற்பித்தல் – உள்ளத்தை ஒருமுகப்படுத்தல்
உரை: பி. ஜைனுல் ஆபிதீன்
எழுத்தாக்கம்: ரூபான் எம். ஐ. எஸ். சி.
இறைவனுக்கு இணை கற்பிக்கும் செயல்களைச்
செய்வதற்கு எந்த ஒரு நியாயமும், முகாந்திரமும் இல்லை என்பதை நபிமார்களுடைய
வரலாறுகளை அடிப்படையாகக் கொண்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வரலாற்றை
அடிப்படையாக வைத்தும் பார்த்து வருகிறோம்.
இறைநேசர்களுக்கெல்லாம் பெரிய இறைநேசராகத்
திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல சந்தர்ப்பங்களில் தம்மை ஒரு மனிதராகவே
காட்டியிருக்கிறார்கள் என்ற தலைப்பில் பல சம்பவங்களையும் நாம் பார்த்தோம்.
அதன் தொடர்ச்சியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
தமது உள்ளத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருந்தார்களா? என்பதைப்
பார்ப்போம்.
மனைவிமார்களிடம் நேர்மையாக நடக்க வேண்டும்
என்று மார்க்கம் சொல்கிறது. எல்லாருக்கும் ஒரே மாதிரியாகச் செலவு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு மனைவியுடனும் தங்கக்கூடிய நாட்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.
எந்தவிதமான பாரபட்சமும் இருக்கக்கூடாது என்றெல்லாம் மார்க்கத்தில் நிபந்தனை
இருக்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒன்றுக்கு
மேற்பட்ட மனைவிமார்களுடன் வாழ்க்கை நடத்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
இந்த விதிமுறைகளையெல்லாம் பேணித்தான் நடந்தார்கள். ஆனாலும் தமது மனைவிமார்களிலேயே
ஆயிஷா (ரலி) அவர்கள் மீது மட்டும் அதிகமான பிரியம் வைத்திருந்தார்கள். கொடுக்கல், வாங்கல்
எல்லாம் சமமாக இருந்தாலும் மனதார அவர்கள் ஆயிஷாவை நேசித்தார்கள். கூடுதலான அன்பும்
அவர்கள் மீது இருந்தது. இது போன்ற ஒரு செயலை இறைவன் குற்றம் பிடிக்க மாட்டான்.
ஏனென்றால் உள்ளம் சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு இறைவன் குற்றம் பிடிக்க மாட்டான்.
உதாரணமாக, ஒருவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கின்றன
என்று வைத்துக் கொள்வோம். நம்மை அறியாமலேயே அந்த நான்கு குழந்தைகளில் ஒருவரை, மற்ற பிள்ளைகளை
விட அதிகமாக விரும்புவோம். ஒரு பிள்ளையைக் குறைவாக விரும்புவோம். நமக்கு அந்தக்
குழந்தையைப் பிடிக்காமல் போகலாம். இதற்குக் காரணமும் நம்மால் சொல்ல இயலாது. அதே
போன்று தகப்பனாருக்கு ஒரு பிள்ளையைப் பிடிக்கும். தாயாருக்கு ஒரு பிள்ளையைப்
பிடிக்கும். ஏன் தகப்பனாருக்குப் பிடித்த பிள்ளை தாயாருக்குப் பிடிக்கவில்லை என்று
சொல்ல முடியுமா? அல்லது தகப்பனாருக்குப் பிடிக்காத இந்த பிள்ளை தாயாருக்கு ஏன்
பிடித்திருக்கிறது என்று சொல்ல முடியுமா? முடியாது. மனதில் அன்பு ஏற்படுவதெல்லாம் நாம்
திட்டமிட்டு வருவது கிடையாது.
அதே போன்று ஒரு மாணவனைக் கல்லூரியில் கொண்டு
சேர்க்கிறோம். அங்கு எத்தனையோ மாணவர்கள் இருப்பார்கள். ஆனால் சக மாணவர்களில் ஒரு
குறிப்பிட்ட மாணவன் மீது மட்டும் பிரியம் வந்து அவனைத் தன்னுடைய நண்பனாக ஏற்றுக்
கொள்கிறான். இந்த இருவர் மட்டும் ஏன் நண்பர்களாக ஆனார்கள்? இதற்கான காரணம்
சொல்ல முடியாது. அவன் எல்லா மாணவர்களுடன் நண்பனாக ஆக வேண்டியது தானே என்று கேட்க
முடியாது. காரணம், இதை அவன் திட்டமிட்டு செய்வது கிடையாது.
திடீரென்று ஒருவர் மீது ஈர்ப்பு வந்து விடும். அவரை விரும்ப ஆரம்பித்து
விடுவார்கள்.
இதுபோன்ற விஷயங்களெல்லாம் நம்முடைய
கட்டுப்பாட்டில் இல்லை. நம்முடைய உடன் பிறந்த சகோதரர்கள் அனைவரிடமும் நாம் சமமாக
அன்பு செலுத்த முடியுமா என்றால் ஒருபோதும் முடியாது. மனிதனுக்கு அந்த ஆற்றலை
அல்லாஹ் கொடுக்கவில்லை. சரி. மற்ற மனிதர்களுக்குத் தான் அல்லாஹ் கொடுக்கவில்லை.
நபிகள் நாயகத்திற்காவது இந்த ஆற்றலை அல்லாஹ் கொடுத்தானா என்று பார்த்தால்
அவர்களுக்கும் கொடுக்கவில்லை.
நபிகள் நாயகத்திற்கே தம்முடைய இந்த நிலை
தெரிகின்றது. மனைவிமார்களிடம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் நீதமாக நடக்கின்றோம்.
ஆனால் ஒரு மனைவியிடம் மட்டும் நாம் அதிகமாக அன்பு செலுத்துகிறோம். இது பாரபட்சம்
தான். இந்த பாரபட்சத்திற்கு நாம் பொறுப்பாளியாக ஆகிவிடக் கூடாதே என்பதற்காக
அல்லாஹ்விடத்தில் துஆச் செய்கிறார்கள்.
"இறைவா!
என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள விஷயங்களில் நான் அனைத்திலும் சமமாக நடந்து
கொள்கிறேன். இறைவா! என் கைவசத்தில் இல்லாமல் உன் கைவசத்தில் இருக்குமே அந்தக்
காரியங்களுக்காக என்னைப் பிடித்து (தண்டித்து) விடாதே''
(நூல்: திர்மிதி 1059)
உள்ளங்களைக் கட்டுப்படுத்துகின்ற அதிகாரத்தை
அல்லாஹ் இறைத்தூதருக்கே வழங்கவில்லை. எவ்வாறு நம்முடைய உள்ளத்தை நம்மால்
கட்டுப்படுத்த முடியாதோ அதே போல் நபிகளாருக்கும் தமது உள்ளத்தைக் கட்டுப்படுத்த
முடியாது.
அதனால் நபிகள் நாயகம் சத்தியம் செய்யும் போது
கூட "யா முகல்லிபல் குலூப் - உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே'' என்று தான்
அதிகம் சத்தியம் செய்வார்கள். சில நேரங்களில், "என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது
சத்தியமாக'' என்று சத்தியம் செய்வார்கள். சில நேரங்களில் "அல்லாஹ்வின் மீது சத்தியமாக'' என்று வெறுமனே
சொல்வார்கள். ஆனால் அதிகமாக "உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே'' என்ற
வார்த்தையைத் தான் பயன்படுத்துவார்கள்.
இதிலிருந்து நமக்கு விளங்குவது என்ன?
உள்ளம் சார்ந்த விஷயங்களில் நாம் நீதமாக
நடக்காவிட்டால் சாதாரண மனிதன் என்ற அடிப்படையில் இதை எடுத்துக் கொள்ளலாம். ஆனால்
நபியவர்களுக்காவது அல்லாஹ் என்ன செய்திருக்க வேண்டும்? மற்றவர்களைப்
போன்று நீர் கிடையாது. உம்முடைய உள்ளத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை உமக்குத்
தந்துள்ளேன் என்று அல்லாஹ் கூறினானா? இல்லை.
நபி (ஸல்) அவர்களே தம்முடைய உள்ளத்தைத் தமது
கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியாது என்று சொல்லி இருக்கும் போது எப்படி
மகான்கள், ஷைகுமார்கள்
நம்முடைய உள்ளத்தைப் பக்குவப்படுத்துவார்கள்? நம்முடைய உள்ளத்தில் நுழைந்து காரியங்களை
எப்படிச் சரி செய்வார்கள்? நம்முடைய உள்ளத்தில் தவறான எண்ணங்கள்
வருவதிலிருந்தும் நம்மை எப்படிக் காப்பாற்றுவார்கள்?
இவ்வாறு சொல்லித் தானே இந்த முரீதுகள் தோன்றின? இந்த
முரீதுகளின் பரிணாமம் தான் தர்ஹாக்கள் உருவாகக் காரணமாக அமைந்தது. ஷைகுகள் இருக்கும்
போது முரீதை வைத்து வியாபாரம் செய்வார்கள். அவர்கள் இறந்த பிறகு அவர்களது சீடர்கள்
தர்ஹாக்களைக் கட்டி வைத்து விடுவார்கள். மக்களும் அங்கு செல்ல ஆரம்பித்து
விடுவார்கள். யாருக்கெல்லாம் தர்ஹாக்கள் கட்டி வைத்திருக்கிறார்களோ
அவர்களுக்கெல்லாம் முரீதுகள் வைத்திருப்பார்கள். முரீதுகள் என்றால் ஏஜென்டுகள்.
ஏஜென்டுகள் இல்லாதவர்களுக்குத் தர்ஹாக்கள் இருக்காது. தர்ஹாக்கள் கட்ட
மாட்டார்கள்.
நல்லடியார்களாக வாழ்பவர்கள் நம்முடைய
உள்ளத்தைப் பக்குவப்படுத்துபவர்கள் என்று நினைத்து அவர்களுக்குச் சீடர்களாக ஆகி, அவர்களுடைய
காலில் விழுந்து கும்பிடுகின்ற அளவுக்கு ஆகி, அவர்கள் இறந்த போன பிறகும் அவர்களுக்கு மரியாதை
செய்கிறோம். அவர்களுக்கு விழாக்கள் கொண்டாடுவதற்காகக் கட்டி வைத்தது தான் இந்த
தர்ஹாக்கள். மக்களும் அங்கு சென்று வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலான தர்ஹாக்கள் ஷைகுமார்களுக்கு
இருக்கக்கூடிய முரீதுகளால் கட்டப்பட்டது தான். அவை இந்த வழிபாட்டிற்குக் காரணமாக
இருக்கின்றது.
மேற்கண்ட பிரார்த்தனை, நபிகள் நாயகம்
அவர்கள் மனிதர் தான், இவ்வுலகில் சாதாரண மனிதராகத் தான்
வாழ்ந்தார்கள் என்பதை உணர்த்துகிறது. அதைச் சொல்வதற்குத் தான் அவர்கள் தூதராக
அனுப்பப்பட்டார்கள். இந்த துஆவை நமக்குத் தெரிகின்ற மாதிரி வெளிப்படையாக ஏன் செய்ய
வேண்டும் என்பதை நாம் விளங்க வேண்டாமா? இந்த மார்க்கம் அல்லாஹ்வுடையது. அவனுக்குத்
தான் எல்லா விதமான அதிகாரமும் இருக்கிறது. மலக்குமார்கள் மற்றும் இறைத்தூதர்கள்
உள்ளிட்ட மனிதர்கள் எவருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது என்பதை நாம் விளங்கிக்
கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனிதத் தன்மைக்கு
அப்பாற்பட்டவர்களாக ஒருபோதும், எந்த நேரத்திலும் இருந்ததில்லை என்பதற்கு
மேலும் ஒரு சான்றை இங்கு காணலாம்.
(ஒரு
தொழுகைக்காக) இகாமத் சொல்லப்பட்டு, தொழுகை அணிகள் சரி செய்யப்பட்டவுடன்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கüடம் புறப்பட்டு வந்தார்கள். தம் தொழும்
தளத்தில் அவர்கள் போய் நின்ற போது தாம் பெருந்துடக்குடன் இருப்பது அவர்களுக்கு
நினைவுக்கு வந்தது. உடனே எங்கüடம், "உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்'' என்று
கூறிவிட்டு (தமது வீட்டிற்குத்) திரும்பிச் சென்று குüத்தார்கள்.
பிறகு தலையி-ருந்து தண்ணீர் சொட்ட சொட்ட எங்கüடம் வந்தார்கள். தக்பீர் சொல்- தொழுகை
நடத்தினார்கள்; அவர்களுடன்
நாங்களும் தொழுதோம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-),
நூல்: புகாரி 275
தொழுகைக்காக
இகாமத் சொல்லப்பட்டது. மக்கள் தம் தொழுகை வரிசைகளை சீர் செய்தனர். அப்போது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுவிப்பதற்காக) முன்னே நின்றார்கள். அப்போது
அவர்கள் பெருந்துடக்குடனிருந்தார்கள். (நினைவில்லாமல் நின்று விட்டதால்)
"அப்படியே இருங்கள்!'' என்று (மக்கüடம்) கூறிவிட்டு (தம் இல்லத்திற்குத்)
திரும்பிச் சென்று நீராடினார்கள். பிறகு தம் தலையி-ருந்து நீர் சொட்டிக்
கொண்டிருக்க(த் திரும்பி) வந்து மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-),
நூல்: புகாரி 640
சாதாரண மனிதர்களாகிய நமக்கு மறதி வரலாம். ஆனால்
அவ்லியாக்களுக்கு மறதி வருமா? அவர்களுக்குத் தெரியாத விஷயம் இருக்குமா? என்றெல்லாம்
நினைத்து வைத்திருக்கிறோம். ஆனால் நபிகளாருக்கே தாம் குளிப்புக் கடமையாக
இருக்கிறோம் என்பதை மறந்து பள்ளிக்குத் தொழ வந்திருக்கிறார்கள் என்றால் அவர்களும்
நம்மைப் போன்ற மனிதர் தான் என்பதை இது உணர்த்தவில்லையா?
நபியவர்கள் எந்த நொடிப் பொழுதிலாவது தம்மை
மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்களாகக் காட்டியிருக்கிறார்களா? எனக்கு மறைவான
ஞானம் இருக்கிறது. நான் உள்ளங்களில் உள்ளதை அறிபவன். பிறருடைய உள்ளத்தில் ஏற்படும்
குழப்பத்தைச் சரி செய்பவன் என்று என்றைக்காவது சொல்லியிருக்கிறார்களா? அதற்கான ஒரு
ஆதாரத்தையாவது, சான்றையாவது யாராலும் காட்ட முடியுமா?
நபியவர்களுக்கு மறதி என்பதே கிடையாது என்று
இவர்கள் சொல்வதாக இருந்தால் "நீங்கள் குளிப்புக் கடமையானவர்களாக இருக்கும்
நிலையில் பள்ளிக்கு நெருங்காதீர்கள்'' (அல்குர்ஆன் 4:43) என்ற அல்லாஹ்வுடைய கட்டளையை நபியவர்கள்
மீறியதாக ஆகிவிடுமே! ஆக நபியவர்களைக் குற்றவாளியாக ஆக்க விரும்புகிறார்களா?
மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபட்டால் குளிக்க
வேண்டும் என்பது ஒரு முக்கியமான கடமை தானே! உடலுறவு கொண்ட பிறகு குளிப்பதைப்
பெரும்பாலும் யாரும் மறக்க மாட்டோம். நம்முடைய வாழ்க்கையில் மறதிக்குள்ளாகும் சில
விஷயங்கள் இருக்கும். ஆனால் கடமையான குளிப்பை யாரும் மறக்க மாட்டோம். பெரும்பாலும்
மனிதர்களுக்கு இதில் மறதி வராது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இதை
சரியாகச் செய்து விடுவார்கள். ஆனால் அந்த விஷயத்தில் அல்லாஹ் நபியவர்களுக்கு
மறதியை ஏற்படுத்தி, இவர் மனிதர் தான் என்பதைக் காட்டுகிறான்.
அந்தத் தொழுகையில் கலந்து கொண்ட அனைத்து மக்களுக்கும் இவர் மனிதர் தான்; இவருக்கும்
மறதி போன்ற பலவீனங்கள் உண்டு என்பதை மக்களுக்குப் புரிய வைக்கிறான்.
நபியவர்கள் ஒருநாள் லுஹர் அல்லது அஸர் தொழுகை நடத்திக்
கொண்டிருக்கும் போது பின்பற்றி தொழுது கொண்டிருந்த ஒருவர், ஸப்பிஹிஸ்ம
ரப்பிகல் அஃலா என்ற சூராவை சப்தம் போட்டு ஓத ஆரம்பித்து விடுகிறார். ஆரம்ப கால
கட்டத்தில் இஸ்லாத்தின் சட்டங்கள் தெரியாததால் அவ்வாறு ஓதி விட்டார். அந்தச்
சம்பவம் பின்வருமாறு:
(ஒரு முறை)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு "லுஹ்ர் தொழுகை' அல்லது "அஸ்ர் தொழுகை' தொழுவித்தார்கள். (தொழுது முடித்ததும்) அவர்கள், "சப்பிஹிஸ்ம
ரப்பிக்கல் அஃலா (மிக்க மேலான உம்முடைய இறைவனின் பெயரைத் துதிப்பீராக!) என்று
தொடங்கும் (குர்ஆனின் 87ஆவது) அத்தியாயத்தை எனக்குப் பின்னால் (நின்று)
ஓதியவர் யார்?'' என்று
கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் "நான்தான் (ஓதினேன்). நன்மையை நாடியே
அவ்வாறு செய்தேன்'' என்றார். (பிறகு மக்களிடம்) அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள், "உங்களில்
சிலர் (சப்தமாக) ஓதுவதன் மூலம் (என்னை ஓதவிடாமல்) என்னுடன் தகராறு செய்வதாக நான்
அறிந்தேன். (எனவே, உங்களில் எவரும் எனக்குப் பின்னால் நின்று
தொழும்போது சப்தமாக ஓத வேண்டாம்)'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி),
நூல்: முஸ்லிம் 664
மேலும் இச்சம்பவம் முஸ்லிமில் 665, 666 ஆகிய
எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதிலிருந்து நாம் என்ன விளங்குகிறோம்? மற்ற மனிதர்கள்
எவ்வாறு இடையூறு அளிக்கப்படுவார்களோ அதுபோன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
குழப்பம் அடையாமல் இருந்தார்களா? அவ்வாறு யார் குழப்பினாலும் கூச்சலிட்டாலும்
மனதை ஒருமுகப்படுத்தக்கூடிய ஆற்றலை அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்தானா? இல்லையே!
அவர்களும் தொழுகையில் குழப்பம் அடைந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் கவனம் திசை
திரும்பியிருக்கிறது. மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து
ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வந்த ஆரம்ப நேரத்தில் அங்குள்ள மக்கள் பேரிச்ச மரங்கள்
நிறைந்த தோட்டங்களை வைத்து விவசாயம் செய்து வந்தார்கள். இதுபற்றி நபியவர்கள் கூறிய கருத்து, அவர்கள் மனிதத்
தன்மைக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை உறுதிப்படுத்துகின்றது. அந்தச்
சம்பவத்தைப் பார்ப்போம்.
பேரீச்ச மரங்களின் உச்சியில் இருந்து
கொண்டிருந்த (மதீனாவாசிகள்) சிலரைக் கடந்து சென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களுடன் நானும் சென்றேன். அப்போது, "இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?'' என்று
கேட்டார்கள்.
அதற்கு மக்கள், "பெண் மரங்களுடன் ஆண் மரங்களை இணைத்து ஒட்டுச் சேர்க்கை
செய்து (பெண் மரங்களை) சூல் கொள்ளச் செய்கின்றனர்'' என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள், "இதனால் பயனேதும் ஏற்படும் என்று நான் கருதவில்லை'' என்று
சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு
கூறியதைப் பற்றி (மதீனா விவசாயிகளிடம்) தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள்
ஒட்டுச் சேர்க்கை செய்வதை விட்டுவிட்டனர். (அந்த ஆண்டில் அவர்களுக்கு மகசூல்
பாதிக்கப்பட்டது.)
இது
குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது, "அ(வ்வாறு
செய்வ)தனால் அவர்களுக்குப் பயன் ஏற்படுமானால் அவ்வாறு செய்துகொள்ளட்டும். நான்
எனது யூகத்தையே தெரிவித்தேன். யூகத்தை தெரிவித்ததை வைத்து என்மீது குற்றம்
சாட்டாதீர்கள். ஆயினும், நான் உங்களிடம் அல்லாஹ்வைப் பற்றி ஏதேனும்
சொன்னால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். ஏனெனில், நான் வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ்வைப்
பற்றி பொய்யுரைக்க மாட்டேன்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி),
நூல்: முஸ்லிம் 4711
மேலும் இச்சம்பவம் முஸ்லிமில் 4712, 4713 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அல்லாஹ் என்றால் யார்? அவனை எப்படி
வணங்க வேண்டும்? அவனை எப்படி ஏற்றுக் கொள்ள வேண்டும்? இறைவனை எப்படி நம்ப வேண்டும்? மறுமையை எப்படி
நம்ப வேண்டும்? ஹலால் எது? ஹராம் எது? என்பதை சொல்லித் தருவதற்குத் தான் இறைவன் என்னை அனுப்பியிருக்கிறான். அதில்
கூட்டல் குறைத்தல் இல்லாமல் நான் சொல்லி விடுவேன். அதை நீங்கள் மாற்றுக்
கருத்தில்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அதை நானாகச் சொல்வது கிடையாது.
வஹீயைத் தான் சொல்கிறேன்.
முஸ்லிமின் 4357வது ஹதீஸில், "நான் ஒரு மனிதன் தான். மார்க்க விஷயத்தில்
உங்களுக்குக் கட்டளையிட்டதை ஏற்றுக் கொண்டு செய்யுங்கள். சொந்த அபிப்பிராயமாக நான்
எதையாவது சொன்னால் அப்போது என்னை நீங்கள் மனிதனாகத் தான் பார்க்க வேண்டும்'' என்று நபி
(ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
நான் என்ன விவசாயத்தைப் படித்துவிட்டு வந்த ஆளா? அதைச் சொல்லித்
தருவதற்காகவா அல்லாஹ் என்னை அனுப்பினான்? அதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. உலக
விஷயத்தில் நான் அறியாத ஒன்றைச் சொல்லி விட்டால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளத்
தேவையில்லை. உலக விஷயத்தில் என்னை விட நீங்கள் தான் அறிவாளிகள் என்று கூறி, தாம் ஒரு
மனிதர் தான் என்பதை நிருபித்தார்கள்.
நீங்கள் சொல்வது எனக்குத் தவறாகத் தெரியும்.
நான் சொல்வது உங்களுக்குத் தவறாகத் தெரியும். இரண்டில் ஏதாவது ஒன்று தான் சரியாக
இருக்கும். அப்படி இருக்கும் போது, உங்களுக்குச் சரியாக இருப்பதைத் தான் நீங்கள்
ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நபியவர்கள் உறுதிப்படுத்துகின்றார்கள்.
ஆனால், நபியவர்களுக்குத் தெரியாதது எதுவுமே இல்லை
என்று கவிதையில் எழுதி வைத்து படித்துக் கொண்டிருக்கிறார்கள். லவ்ஹுல் மஹ்ஃபூலில்
உள்ள விஷயங்களெல்லாம் அவர்களுடைய ஞானத்தின் சிறு பகுதி. நபியவர்களுடைய ஞானம்
அவ்வளவு பெரியது என்று நபியவர்களை வரம்பு மீறிப் புகழ்கிறார்கள். இது தவறாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தச்
சந்தர்ப்பத்திலும் தம்மை ஒரு மனிதராகத் தான் மக்களிடம் அறிமுகப்படுத்தினார்கள்.
அந்தத் தன்மையில் தான் மக்களோடு மக்களாக வாழ்ந்து மரணித்தார்கள். மனிதத் தன்மைக்கு
அப்பாற்பட்டவர்களாக மக்களிடம் தம்மை அறிமுகப்படுத்தவில்லை. அவ்வாறு வாழவுமில்லை.
இன்னும் இது போன்ற ஏராளமான செய்திகள் நபியவர்களுடைய காலத்தில் நடந்திருக்கின்றன.
இன்ஷா அல்லாஹ் அவற்றை அடுத்த இதழில் காண்போம்.