Mar 12, 2017

19. இணை கற்பித்தல் – மாநபியும் மனிதரே!

19.  இணை கற்பித்தல் மாநபியும் மனிதரே!
உரை: பி. ஜைனுல் ஆபிதீன்
எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களிடத்தில் பிரச்சாரம் செய்யும் போது, தம்மை ஒரு மனிதன் என்ற அடிப்படையில் தான் அறிமுகம் செய்தார்கள்.
நானும் உங்களைப் போன்று ஒரு மனிதன் தான். உங்களுக்கு என்ன ஆற்றல், சக்தி, வல்லமை இருக்கிறதோ அதே போன்று தான் எனக்கும் இருக்கிறது. உங்களுக்கு இருக்கின்ற தேவைகள் அனைத்தும் எனக்கும் இருக்கிறது. பசி, நோய், தூக்கம், போன்ற அனைத்து பலவீனங்களும் எனக்கும் உண்டு. உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் எனக்கு இறைச் செய்தி வருகின்றது; உங்களுக்கு அது இல்லை. இதைத் தவிர நான் மனிதன் என்பதில் மாற்றமில்லை என்று சொல்லியே பிரச்சாரம் செய்தார்கள். இதை நாம் தொடர்ச்சியாக பார்த்துப் வருகின்றோம்.
நான் உலகம் சார்ந்த விஷயங்களில் ஏதேனும் ஒரு கருத்தைச் சொன்னால் அதை நீங்கள் கேட்டுத் தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. உங்களுடைய சிந்தனைக்கு - அறிவுக்கு மாற்றமாக இருக்குமென்றால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் மார்க்கச் சட்டங்களில் ஏற்படும் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்குத் தான் இறைவன் என்னை அனுப்பியிருக்கிறான். உலக விஷயங்களைப் பற்றிய அறிவு என்னை விட உங்களுக்குத் தான் அதிகம் இருக்கிறது என்று அந்த மக்களிடத்தில் சொன்னதையும் கடந்த இதழில் கண்டோம்.
மொத்தத்தில் நபியவர்கள் நபித்துவம் பெறுவதற்கு முன்னால் வாழ்ந்த நாற்பது வருடங்களிலும் சரி! தன்னை நபியென்று மக்களிடத்தில் அறிமுகப்படுத்தியதிலிருந்து மரணிக்கும் வரையுள்ள 23 ஆண்டுகளிலும் சரி! இந்த 63 வருடங்களில் எந்த ஒரு நொடிப்பொழுதிலும் தன்னை மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவராக அறிமுகப்படுத்தியதேயில்லை. நான் அனைத்து ஆற்றலும் அறிவும் ஒருங்கே அமையப் பெற்றவன் என்றும் அறிமுகப்படுத்தியதில்லை. மனிதன் என்று தான் அறிமுகப்படுத்தினார்கள்.
இன்னும் சொல்லப்போனால், நபியவர்களுக்கு நம்மை விட அறிவு, சிந்தனை, ஞானம் அதிகம் தான் என்பதில் நமக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. அவர்கள் சுயமாகப் பேசுகின்ற பேச்சில் கூட அவ்வளவு தத்துவங்கள் அமைந்திருக்கும். ஆனால் அவர்களிடத்திலும் தவறுகள் ஏற்பட்டிருக்கிறதா? இல்லையா? அகிலங்களைப் படைத்த ஒரே இறைவனான அல்லாஹ்வுக்கு மட்டுமே தவறுகள், மறதிகள் ஏற்படாது.
ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்யக்கூடியவர்கள் தான். மனிதனாகப் பிறந்து விட்டாலே அவனிடத்தில் தவறுகள் வரும் என்று தான் நபியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அதில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். ஒருவனிடத்தில் தவறுகள் அதிகமாக இருக்கும். ஒருவனிடத்தில் குறைவாக இருக்கும். ஆனால் தவறுகள் வராமல் இருக்காது. அந்தப் பட்டியலில் நபியவர்களும் விதிவிலக்கல்ல. இதற்கு இன்னும் பல சம்பவங்களும் சான்றாக இருக்கின்றன.
நபி (ஸல்) அவர்கள் சப்தமிட்டு ஓதும் தொழுகையைத் தொழுது முடித்தார்கள். (முடித்ததும்) "சற்று முன் உங்களில் எவரேனும் என்னுடன் ஓதினீர்களா?'' என்று கேட்டார்கள். ஒரு மனிதர், "ஆம்! அல்லாஹ்வின் தூதரே!'' என்றார். "நீங்கள் (ஓதுவதால்) நான் ஓதுவதற்கு இடையூறாக உள்ளது என்று கூறிக் கொண்டிருக்கிறேன். (பிறகு ஏன் ஓதுகிறீர்கள்?)'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டது முதல் நபி (ஸல்) அவர்கள் சப்தமிட்டு ஓதும் தொழுகைகளில் மக்கள் ஓதுவதிலிருந்து விலகிக் கொண்டார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நூல்: திர்மிதி 287
இந்தச் சம்பவம் நமக்கு எதை நமக்கு உணர்த்துகின்றது என்றால் நபி (ஸல்) அவர்கள் மனிதத் தன்மையை விட்டும் அப்பாற்பட்டவர்களாகப் படைக்கப்படவில்லை. சர்வ அதிகாரங்களும் கொண்டவர்களாக - நினைத்ததையெல்லாம் செய்து காட்டக்கூடியவர்களாக, செய்து முடிப்பவர்களாகப் படைக்கப்படவில்லை. அவர்களே இப்படி என்றால் மற்ற மகான்களெல்லாம், அவ்லியாக்களெல்லாம் எப்படி இருப்பார்கள்? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அபூஹுரைரா (ர-) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எவரையும் அவரது நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது (மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொக்கம் புகமுடியும்)'' என்று கூறினார்கள்.
மக்கள், "தங்களையுமா அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "(ஆம்) என்னையும் தான். அல்லாஹ் (தனது) கருணையாலும் அருளாலும் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர'' என்று கூறிவிட்டு, "எனவே, நீங்கள் நேர்மையோடு (நடு நிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாக நடந்துகொள்ளுங்கள். உங்கüல் எவரும் மரணத்தை விரும்பிட வேண்டாம். ஒன்று அவர் நல்லவராக இருப்பார்; அவர் (உயிர் வாழ்வதன் மூலம்) நன்மையை அதிகமாக்கிக் கொள்ளலாம். அல்லது அவர் தீயவராக இருப்பார்; அவர் (உயிர் வாழ்வதால்) மனம் திருந்தக்கூடும்'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 5673
மேலும் இந்த ஹதீஸ் புகாரியில் 6463, 6467 ஆகிய ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்தக்கூடிய பாடம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட ஓர் இறைத் தூதர். அவர்கள் செய்த நன்மைகளுக்கு மறுமையில் மிகப்பெரிய அந்தஸ்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக அவர்களுக்கு முன்னால் எந்த நபிமார்களுக்கும் வழங்கப்படாத பல சிறப்புகளை நபிகளாருக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிறான். மற்ற மனிதர்களை விடப் பல நன்மையான காரியங்களை அதிகமாக ஆர்வத்துடன் தொடர்ச்சியாகச் செய்து வந்தவர்கள். தீமையான பேச்சுக்கள் மற்றும் தீய காரியங்கள், செயல்களை விட்டும் விலகி இருந்தவர்கள். அதுமட்டுமில்லாமல் மறுமையில் அவர்களுக்கென்று பல சிறப்புகளை அல்லாஹ் வழங்கவிருக்கிறான்.
இத்தகைய நன்மைகளையும், அதன் தரத்தையும் வைத்தே அவர்களுக்கு சொர்க்கம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் இத்தகைய சிறப்புகளையும் அந்தஸ்துகளையும் பெற்ற நபியவர்கள், அவர்கள் செய்த நன்மையின் மூலம் மட்டும் வைத்து சொர்க்கத்திற்குச் செல்ல முடியாது. அல்லாஹ்வின் கருணையால் மட்டுமே சொர்க்கம் செல்ல முடியுமென்றால் நாம் நம்முடைய நிலைமையை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நம்முடைய நிலைமை இப்படியிருக்க நம் கண் முன்னால், அடக்கம் செய்யப்பட்ட மகான்கள் அவ்லியாக்களையெல்லாம் சொர்க்கவாசிகள் என்று எவ்வாறு கூறமுடியும்? அவ்வாறு கூறுவதற்கு என்ன முகாந்திரம் இருக்கிறது? என்பதைச் சிந்திக்க வேண்டாமா? ஷெய்கிடம் பைஅத் எடுத்தால் போதும். நம்முடைய தவறுகளெல்லாம் மன்னிக்கப்பட்டுவிடும். நாம் சுவனம் சென்று விடுவோம் என்று எதை வைத்துச் சொல்கிறார்கள்?
ஆக, எந்த மனிதராக இருந்தாலும், இறைத்தூதராக இருந்தாலும். நாம் நினைக்கின்ற நல்லடியார்கள், மகான்கள், அவ்லியாக்கள் யாராக இருந்தாலும் தங்களுடைய நல்லறங்களை வைத்து சுவனம் செல்ல முடியாது. இறைவனின் அன்பும் அருளும் இருந்தால் மட்டுமே சுவனம் புக முடியும். அவ்வளவு ஏன்? சுவனத்தின் வாசலில் நிற்க வேண்டுமென்றால் கூட அதற்கும் இறைவனின் அருள் கிடைக்க வேண்டும். சுவனத்தின் வாடையை நுகர வேண்டுமென்றாலும் கூட அதற்கும் இறைவனின் அருள் வேண்டும்.
ஆனால் நம்முடைய முஸ்லிம் சமுதாயம் மகான்களைக் கண்ணியப்படுத்தும் விதமாக யாரோ எழுதி வைத்த கட்டுக் கதைகளையெல்லாம் நம்பி தங்களுடைய அறிவை அடக்கு வைக்கின்ற காட்சியைப் பார்க்கிறோம். மகான்களெல்லாம் அல்லாஹ்வுடன் இரண்டறக் கலந்து விடுவார்கள்; அவனுடன் ஒன்றி விடுவார்கள்; அவ்வாறு ஒன்றி விட்டால் அவர்களுக்கு வேதனை, வலி போன்ற எதுவுமே தெரியாது என்றெல்லாம் கூறுவதைப் பார்க்கலாம்.
ஒரு நாள் மகான் ஒருவர் நடந்து போய்க் கொண்டிருந்தாராம். அப்போது அவரது எதிரே வந்த ஒரு அழகான பெண்ணைக் கண்டதும் அவளைக் கட்டியணைத்தாராம். இதனைப் பார்த்த மக்கள், "என்ன இது? மகானே இப்படிப்பட்ட காரியத்தைச் செய்கிறாரே!'' என்று சொன்னார்கள்.
அவர் சிறிது தூரம் சென்ற பின் கொல்லர் பட்டறையில் துருத்தியில் இருந்த, கொழுந்து விட்டெரியக்கூடிய தீயை அள்ளி அணைத்து முத்தமிட்டாராம். பிறகு அந்த மக்களைப் பார்த்து, "பார்த்தீர்களா? எனக்கு தீயும் பெண்ணும் ஒன்று தான். இரண்டையும் நான் வித்தியாசமாகப் பார்க்கவில்லை. அந்த மாதிரி நாங்கள் மாறிவிட்டோம். நாங்கள் வேறு படைப்புகள்'' என்று கூறினாராம். இதைப் பார்த்து அந்த மக்கள் மகான்களுடைய மகிமையை, மதிப்பை, அந்தஸ்தைப் புரிந்து கொண்டார்களாம்.
இந்தக் கதை உண்மையா? இது குர்ஆன், ஹதீசுக்கு ஒத்து இருக்கிறதா? அல்லது இதில் ஏதேனும் லாஜிக் இருக்கிறதா? இந்த மாதிரி யாரும் யாருக்கு வேண்டுமானாலும் கதை எழுதலாம். நிஜத்தில் ஒரு மனிதன் நெருப்புக்கு முத்தம் கொடுக்க முடியுமா? ஓர் அந்நியப் பெண்ணைக் கட்டியணைத்தால் அவன் எப்படிப்பட்ட காமுகனாக இருப்பான்? ஆனால் இப்படியெல்லாம் சொல்லி மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள்.
ஆனால் நபிகளார், "நானும் உங்களைப் போன்ற மனிதன் தான். நானும் சில குறைகள் உடையவனாகத் தான் இருக்கிறேன். உங்களிடத்தில் தவறுகள் நிகழ்வதைப் போலவே என்னிடத்திலும் தவறுகள் நிகழும். என்னாலும் உள்ளத்தை ஒருமுகப்படுத்த முடியாது. இறைவனுடன் ஒன்றாகக் கலக்க முடியாது. நான் அல்லாஹ்வின் தூதர் தான்; நான் செய்வது அழைப்புப் பணி தான். ஆனால் இதற்குக் கூட எனக்கு சொர்க்கம் கிடைக்குமா என்று தெரியாது. இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே சுவனம் கிடைக்கும்' என்று சொன்னார்கள்.
ரபீஆ பின் கஅப் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தங்கியிருந்தேன். அவர்கள் (இரவுத் தொழுகைக்காக எழுந்தபோது) இயற்கைக்கடனை நிறைவேற்றி(ய பின் துப்புரவு செய்து) கொள்வதற்கும் அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்வதற்கும் தண்ணீர் கொண்டு சென்றேன். அப்போது அவர்கள் "என்னிடம் (ஏதேனும்) கோருவீராக!'' என்று என்னிடம் கூறினார்கள். உடனே நான், "சொர்க்கத்தில் நான் உங்களுடன் இருக்க வேண்டும் என்று கோருகிறேன்'' என்றேன். அதற்கு "வேறு ஏதேனும் (கோருவீராக!)'' என்றார்கள். நான் "(இல்லை) அதுதான்'' என்றேன். அதற்கு அவர்கள், "அப்படியானால் உமது கோரிக்கை நிறைவேற அதிகமாகச் சஜ்தா செய்து எனக்கு உதவுவீராக!'' என்று சொன்னார்கள்.
நூல்: முஸ்லிம் 842
இந்த ஹதீஸில் நாம் பெறக்கூடிய படிப்பினை என்ன? நபியவர்கள், ரபீஆவைப் பார்த்து, "உனக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் நீ கேள். அதை நான் நிறைவேற்றி வைக்கிறேன்' என்று தான் கேட்கிறார்கள். ஆனால் அவரோ, எனக்கு மறுமையில் சுவனத்தில் உங்களுடன் இருக்க வேண்டும் என்று கேட்கிறார்.
அதற்கு நபியவர்கள், "அதை என்னால் செய்ய முடியாது. நான் இறைவனின் தூதராக இருந்தாலும் மறுமையில் அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்குத் தான். எனக்கு மறுமையில் எந்த ஒரு அதிகாரமும் கிடையாது. நீ என்னுடன் இருக்க வேண்டுமானால் அதிகமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடு' என்றுதான் கூறுகிறார்களே தவிர, நான் மிகப்பெரிய அடியான்; நான் அல்லாஹ்வின் தூதர்; அதனால் மறுமையில் நீ என்னுடன் இருப்பதற்கு நான் உனக்கு அனுமதி தருகிறேன். அந்த அதிகாரம் எனக்கு இருக்கிறது. நான் அல்லாஹ்விடம். நீ என்னுடன் இருப்பதற்குப் பரிந்துரை செய்கிறேன் என்று சொன்னார்களா? இல்லையே! தம்மால் இதைச் செய்ய முடியாது என்று தான் கூறுகிறார்கள்.
ஆனால் அவ்லியாக்கள் பார்த்தாலே நம்மை சொர்க்கத்திற்குக் கொண்டு சேர்த்து விடுவார்கள் என்று  நாம்  நம்புகிறோம். அவர்களிடம் முரீது தீட்சை வாங்கினால் அல்லது அவர் ஒரு சீட்டை எழுதித் தந்தால் (அதற்கு சொர்க்கத்துச் சீட்டு என்று பெயராம்) நாம் மரணிக்கும் போது அந்தச் சீட்டையும் நம்முடன் சேர்த்தே அடக்கினால் முன்கர், நகீர் எனும் மலக்குமார்கள் நம்மிடம் வந்து அந்தச் சீட்டைப் பார்த்து விட்டு, "இவரை விட்டுவிடுங்கள். நோவினை செய்யாதீர்கள்' என்று சொல்வார்களாம். இப்படி கட்டுக் கதைகளைச் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். நாமும் அதைப் பற்றி கொஞ்சமும் சிந்திப்பதேயில்லை.
ஆக மொத்தத்தில் இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும் போது நபியவர்கள் எல்லா நிலையிலும் மனிதத்தன்மை உடையவர்களாக இருந்தார்களே தவிர மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கவில்லை என்பதை நாம் விளங்கிக் கொள்கிறோம்.
அடுத்ததாக, நபியவர்களாகட்டும், மற்ற எந்த நபிமார்களாகட்டும், அல்லது மகான்கள், அவ்லியாக்களாகட்டும். யாராக இருந்தாலும் அவர்கள் இறைவனுடைய பணிகளான, குழந்தை பாக்கியம் தருவது, உணவு வழங்குவது, நோயைத் தீர்ப்பது போன்ற வேலைகளைச் செய்வதற்கு அவர்களுக்கு சக்தியில்லை என்பதை நாம் விளங்கிக் கொண்டோம்.
அல்லாஹ் மனிதனுக்கென்று சில தகுதிகளை, அதிகாரத்தைக் கொடுத்திருக்கின்றான். ஆனால் மற்ற எல்லா மனிதர்களும் செய்வது போலவே அவர்களும் செய்வார்கள். நமக்குப் பொருளாதாரம் அதிகமாக இருந்தால் நாம் யாருக்கேனும் கொடுத்து அவனது கஷ்டத்தை போக்கலாம். இந்த சக்தியை அல்லாஹ் நமக்குத் தந்திருக்கிறான்.
அல்லாஹ் நமக்கு மருத்துவத்தைக் கற்றுத் தந்தால் நாம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாம். இந்த மாதிரியான சில அதிகாரத்தை நமக்கு இறைவன் தந்திருப்பதைப் போன்றே நபிமார்களுக்கும் வழங்கியிருக்கிறான். அவரவருக்கு அல்லாஹ் எதைக் கொடுத்தானோ அதைச் செய்வார். அவ்வளவு தானே தவிர, இறைவன் மட்டும் தான் செய்வான் என்ற காரியங்களில் எந்த அதிகாரமும் நபிமார்கள் உட்பட யாருக்கும் கொடுக்கப்படவேயில்லை. குழந்தையைக் கொடுத்தல் என்கிற அதிகாரத்தை அல்லாஹ் யாருக்காவது கொடுத்திருக்கிறானா என்றால் யாருக்கும் அந்த அதிகாரத்தைக் கொடுக்கவில்லை.
மருந்து, மாத்திரை, ஊசி, வேறு ஏதாவது ஒரு வகையான மருத்துவ முறை இல்லாமல் குணப்படுத்துகின்ற சக்தியை அல்லாஹ் யாருக்காவது கொடுத்திருக்கிறானா என்றால் அதுவும் இல்லை.
நோயைக் குணப்படுத்துகின்ற சக்தியை மனிதனுக்கு எப்படி கொடுத்திருக்கிறான்? ஒரு மாத்திரை மூலமாக, அல்லது ஒரு மூலிகை மூலமாக, அல்லது தைலம் மூலமாக, அக்குபஞ்சர் என்ற ஒரு ஊசி மூலமாக இப்படி ஏதாவது ஒரு முறையில் தான் நாம் ஒரு மனிதரைக் குணப்படுத்தும் ஆற்றலைத் தந்திருக்கிறானே தவிர எந்த ஒரு புறச்சாதனமும் இல்லாமல் கையைக் கட்டிக் கொண்டு, உனக்கு தலைவலி சரியாகிவிடும், வயிற்றுவலி சரியாகி விடும் என்று சொல்லி குணப்படுத்த முடியுமா? அதுபோன்ற அதிகாரத்தை யாருக்கேனும் தந்திருக்கானா? இல்லை.
இப்படி எந்த புறச்சாதனமும் இல்லாமல் இறைவன் மட்டும் தான் குணப்படுத்துவான். ஏதேனும் ஒரு சாதனத்தை, பொருளைப் பயன்படுத்தி குணப்படுத்தும் ஆற்றலைத் தான் மனிதனுக்குக் கொடுத்திருக்கிறானே தவிர இவற்றைப் பயன்படுத்தாமல் ஒரு நோயைக் குணமாக்குகின்ற சக்தியை நபிமார்கள், மகான்கள் உள்ளிட்ட யாருக்கும் கொடுக்கவில்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
வளரும் இன்ஷா அல்லாஹ்

EGATHUVAM FEB 2014