இஸ்லாம் கூறும் பொருளியல் – 1
மவ்லவி பி.
ஜைனுல் ஆபிதீன் அவர்களால் ரமளான் மாதம் தொடர் உரையாக இஸ்லாம் கூறும் பொருளியல் என்ற தொடர் உரையாற்றப்பட்டு தொலைக்காட்சியில்
ஒளிபரப்பப்பட்டது. இது அனைத்து மக்களுக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும். நம்முடைய
அன்றாட வாழ்க்கையில் பொருளாதாரம் தொடர்பாகவும், வியாபார
முறைகள் தொடர்பாகவும் முஸ்லிம்களுக்குப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து
கொண்டேயிருக்கின்றன. மவ்லவி பி. ஜைனுல் ஆபீதீன் அவர்கள் ஆற்றிய உரையில் ஏராளமான
சந்தேகங்களுக்கு மார்க்க அடிப்படையில் தெளிவான விளக்கங்கள் நிறைந்து
காணப்படுகின்றன. எனவே இதனை எழுத்து வடிவில் கொண்டு வரவேண்டும் என கடையநல்லூர்
இஸ்லாமியக் கல்லூரி மாணவர்கள் ஆர்வம் கொண்டு இதனை அவர்களுடைய சக்திக்கு உட்பட்டு
மிகச் சிறப்பாகத் தொகுத்துள்ளார்கள். மாணவர்களின் இந்த எழுத்தாக்கத்தில் சில
தவறுகள் நேர்ந்திருக்கக்கூடும். மாணவர்களின் இந்த தொகுப்பை என்னால் இயன்ற
அளவிற்குப் பார்வையிட்டு சரி செய்திருக்கின்றேன்.
- கே.எம். அப்துந் நாஸிர் எம்.ஐ.எஸ்.ஸி.
பேராசிரியர், இஸ்லாமியக் கல்லூரி, கடையநல்லூர்
பொருளியல்
இந்தத்
தலைப்பைப் பார்த்தவுடன் இது வியாபாரிகளுக்குரியது, வணிகர்களுக்குரியது,பணக்காரர்களுக்குரியது
என்று யாரும் எண்ணிவிடக் கூடாது. இது ஏழைகள், கூலித் தொழிலாளிகள், ஆண்கள், பெண்கள் என
அனைவரும் பொருளாதார ரீதியாக என்ன முடிவெடுக்க வேண்டும் என்று விளக்குவது தான்
இந்தத் தலைப்பின் நோக்கம்.
உலகத்தில்
பொருளாதாரத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதலாவது, சிலர்
செல்வங்களைத் திரட்டுவதால், வசதி வாய்ப்புக்களைப் பெருக்கிக் கொள்வதால்
ஆன்மீக நிலையில் உயர்ந்த நிலையை அடைய முடியாதென்று நினைக்கின்றார்கள். இறைவனுடைய
திருப்தியையும் அன்பையும் பெற வேண்டுமென்றால் மறுமையில் மோட்சம் அடைய
வேண்டுமென்றால் உலகத்திலுள்ள வசதி வாய்ப்புக்களை விட்டுவிட்டு காடே! செடியே! என்று
செல்ல வேண்டும். அங்கு சென்று இலை தழைகளை சாப்பிட்டுக் கொண்டு இறைவனுக்காக வாழ
வேணடும் அதுதான் உயர்ந்த நிலையென்று நினைக்கக் கூடியவர்களும் பல்வேறு மதங்களில்
காணப்படுகின்றார்கள்.
காசு, பணங்களை
வைத்திருக்கக் கூடியவர்களும் கூட இந்தத் துறவிகளைப் பற்றி நாம் இவர்களுக்கு
அடுத்துத் தான்; அவர்கள் தான் எங்களை விட உயர்ந்தவர்கள்,மகான்கள், தியாகிகள் என்று நினைக்கின்றார்கள். எல்லா மதங்களிலும்
காசு, பணம்,சொத்து சுகங்களை விட்டு விலகினால் தான்
மறுமையில் வெற்றி பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது. முஸ்லிம்களில் மார்க்கத்தை
அறியாத சூஃபியாக்களும் காட்டுக்குச் சென்று தவம் இருப்பது நல்லது; ஊர்
உலகத்தை விட்டு ஒதுங்கியிருப்பது தான் சிறந்ததென்று நினைக்கின்றனர் இரண்டாவது
பிரிவினர், முழுக்க முழுக்க வாழ்வு என்பது
பொருளாதாரத்துக்காகத் தான் என நினைக்கின்றனர். மறுமை என்பது கிடையாது; நாம் இந்த
உலகத்தில் எவ்வளவு வாழ முடியுமோ அவ்வளவு வாழ வேண்டும்; எவ்வளவு
சேர்க்க முடியுமோ அவ்வளவு சேர்க்க வேண்டும் என்று அதற்கு ஒரு நெறிமுறை வைக்காமல்
பொருள் முதல் வாதம் என்ற அடிப்படையில் வாழ்கின்றனர். உலகமென்றால் பொருளாதாரம்
தான். காசு தான் எல்லாம். காசு தான் கடவுள். காசு இருந்தால் கடவுள் செய்ய வேண்டிய
வேலைகளையும் செய்ய முடியும் என்று நினைக்கக் கூடிய சிலரும் இருக்கின்றார்கள்.
காசு தான்
எல்லாம் என்று ஒரு கருத்தும், காசே கூடாதென்று மற்றுமொரு கருத்தும்
மக்களுக்கு மத்தியிலும், மதங்களுக்கு மத்தியிலும் காணப்படுகின்றது.
இஸ்லாம், காசு பணம்
அறவே கூடாது என்று சொல்கிறதா? அல்லது அதற்கு வரம்புகளை வைத்திருக்கின்றதா? அல்லது
அனைத்தையும் தர்மம் செய்ய வேண்டும் என்று சொல்கிறதா? அல்லது
பிச்சைக்காரனைப் போன்று இருக்கச் சொல்கிறதா?இறைவனுக்காகக் காட்டுக்குச் சென்று துறவு
மேற்கொள்ள வேண்டும் என்று சொல்கிறதா? என்று இஸ்லாத்தின் பொருளாதார நிலையைப்
பார்ப்போம்.
இஸ்லாம்
எந்தக் கொள்கையைச் சொன்னாலும் அதில் நடுநிலையைப் பேணுகின்றது. தவ்ஹீதை எடுத்துக்
கொண்டால் அதுவும் நடுநிலை தான். கடவுள் இல்லை என்று சொல்லாமலும், காண்பவை
எல்லாம் கடவுள் என்று சொல்லாமலும் இரண்டிற்கும் மத்தியில் கடவுள் ஒன்றே ஒன்று தான்
என்று இஸ்லாம் கூறுகிறது. எந்த சட்டத்தைச் எடுத்துக் கெண்டாலும் அதில் இஸ்லாம்
நடுநிலை பேணுவதைக் காண்கிறோம்.
குர்ஆன், ஹதீஸில்
பொருளாதாரம் இஸ்லாமிய மார்க்கத்தில் பொருளாதாரம் இல்லையென்றால் ஒருவன் முஸ்லிமாக
வாழ முடியாது என்று சொல்லக் கூடிய வகையில் எல்லாம் வணக்கங்களும் பொருளாதாரத்தைத்
தொடர்பு படுத்தியே அமைந்துள்ளன.
1. இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்று ஜகாத். இது
கடமையாக இருப்பதால் பொருளாதாரம் இருந்தால் தான் இந்தக் கடமையைச் செய்ய முடியும்.
அப்படியானால் பொருளாதாரம் கூடாதென்றால் இந்தக் கடமையைச் செய்ய முடியாது. ஆகவே
பொருளாதாரத்தை வைத்திருப்பது தவறு கிடையாது. காசு பணத்தைச் சம்பாதித்து அதில்
கொடுக்க வேண்டியதை, கொடுக்க வேண்டியவருக்குக் கொடு என்று கூறுவதால்
பொருளாதாரம் என்பது இஸ்லாத்தின் பிரிக்க முடியாத ஓர் அம்சமாக விளங்குகின்றது.
2. இஸ்லாத்தின் மற்றொரு கடமை ஹஜ். இந்தக் கடமையை
மக்கா மதீனாவிலுள்ளவர்கள் செய்வதாக இருந்தால் காசு பணம் தேவையில்லை. ஆனால் வெகு
தொலைவில் வசிக்கக் கூடிய நாம் அங்கு செல்வதற்கு வசதி வாய்ப்புக்கள் தேவை.
அந்த
ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை.
அல்குர்ஆன் 3:97
இந்த
வசனத்தில் நம்முடைய செலவுகள் போக, அதாவது உணவு, உடை, குடும்பச்
செலவு, குழந்தைகளுக்கான செலவு போக மீதமிருந்தால் ஹஜ்
செய்வது கடமையென்று அல்லாஹ் குறிப்பிடுவதிலிருந்து பொருளாதாரம் தேவையென்று
விளங்குகின்றது.
3. தான தர்மம் செய்வதை இஸ்லாம்
வலியுறுத்தியிருக்கின்றது. இதைச் செய்வதால் பல சிறப்புக்களை அடைய முடியும். மறுமை
வெற்றியைக் கூட அடைய முடியுமென்று குர்ஆன், ஹதீஸில் அதிகமான இடங்களில் கூறப்பட்டுள்ளது.
உதாரணமாக, திருக்குர்ஆன் 2:261 வசனத்தில், ஒன்றை
தர்மம் செய்தால் அதற்குப் பதிலாக 700 மடங்கு நன்மை கிடைக்கும் என்று அல்லாஹ்
கூறுகின்றான்.
தமது
செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு
கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான்
நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
அல்குர்ஆன் 2:261
ஒன்றுக்கு 700 நன்மைகளைப் பெற்றுக் கொள்ள நினைத்தால் தர்மம்
செய்ய வேண்டும். தர்மம் செய்ய பொருளாதாரத்தைத் திரட்ட வேண்டும். எனவே
பொருளாதாரத்தைத் தேடுவது வெறுக்கத்தக்கது கிடையாது என்பது விளங்குகின்றது.
அல்லாஹ்வின்
திருப்தியைப் பெறுவதற்காகவும், தமக்குள்ளே இருக்கும் உறுதியான
நம்பிக்கைக்காகவும் தமது செல்வங்களை (நல் வழியில்) செலவிடுவோரின் உதாரணம், உயரமான
இடத்தில் அமைந்த தோட்டம். பெருமழை விழுந்ததும் அத் தோட்டம் இருமடங்காக அதன் உணவுப்
பொருட்களை வழங்குகிறது. பெருமழை விழாவிட்டாலும் தூரல் (போதும்). நீங்கள்
செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.
அல்குர்ஆன் 2:265
ஒன்றுக்கு 700 மடங்கு நன்மை கிடைக்க வேண்டும் என்று நினைத்து
அந்த விதையைக் கடலிலோ, உப்பு மண்ணிலோ, வறண்டு போன
நிலத்திலோ போட்டால் அது முளைக்காது. அப்படியானால் விதைக்கின்ற நிலமும் நன்றாக
இருக்க வேண்டும். நல்ல காரியத்திற்குச் செலவு செய்தால், அது
மேட்டுப்பாங்கான இடங்களில் விதைக்கப்பட்ட பயிர் முளைப்பதைப் போன்று இருக்கும்.
அதாவது ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களில் எப்பொழுதும்
குளிர்ச்சியாகவும் பசுமையாகவும் இருப்பதால் அங்கு மழை பெய்ய வேண்டும் என்ற அவசியம்
கிடையாது. அங்கு மழை பெய்தால் இரட்டிப்பாக விளையும். மற்ற இடங்களில் பயிர்
முளைப்பதாக இருந்தால் மழை பெய்வது அவசியம். அதனால் தான் அல்லாஹ் நல்ல
விஷயத்திற்குச் செலவிடும் பொருளாதாரத்தை, மேட்டுப்பாங்கான இடத்தில் பயிரிடுவதற்கு
உதாரணம் காட்டுகிறான் நரகத்திலிருந்து தப்பிக்க தர்மம் செய்ய வேண்டும்
கொளுந்து விட்டு எரியும் நெருப்பை உங்களுக்கு
எச்சரிக்கிறேன். துர்பாக்கியசாலியைத் தவிர வேறு யாரும் அதில் கருக மாட்டார்கள்.
அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்தவன். இறையச்சமுடையவர் அதிலிருந்து
விலக்கப்படுவார். அவர் தனது செல்வத்தை வழங்கி தூய்மையடைந்தவர்.
அல்குர்ஆன் 92:14-18
தவறு
செய்தவன் நரகப் படுகுழியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்க்கு ஒரு கேடயமாக தர்மம்
அமைகின்றது என்பதை அல்லாஹ் கூறிக் காட்டுகின்றான். இதையே நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களும் உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள். அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அங்கு இருவர்
வந்தனர். அவர்களில் ஒருவர் தமது வறுமையைப் பற்றி முறையிட்டார். அதற்கு நபி (ஸல்)
அவர்கள், வழிப்பறி என்பது அரிதாக, வணிக
ஒட்டகங்கள் (மதீனாவிலிருந்து) மக்கா வரை காவலரின்றிச் செல்லும் போது மட்டுமே
நடக்கும். ஆனால் வறுமையோ (ஒரு காலத்தில் முற்றாக விலகும்). நிச்சயமாக உங்களில்
ஒருவர் தர்மத்தை எடுத்துக் கொண்டு அலைவார். அதை வாங்குவதற்கு எவனும் இருக்க
மாட்டான். அந்நிலை ஏற்படாத வரை மறுமை ஏற்படாது. பிறகு உங்களிலொருவர் அல்லாஹ்வின்
முன்னிலையில் நிற்பார். அவருக்கும் அல்லாஹ்வுக்குமிடையே திரையுமிருக்காது;மொழி பெயர்ப்பாளனும் இருக்க மாட்டான். அப்போது (அல்லாஹ்), நான்
உனக்குப் பொருளைத் தரவில்லையா? எனக் கேட்க அவர் ஆம் என்பார். பிறகு உன்னிடம் ஒரு தூதரை நான்
அனுப்பவில்லையா? எனக் கேட்டதும் அவர் ஆம் என்று கூறி விட்டுத் தமது வலப் பக்கம்
பார்ப்பார்; அங்கு நரகமே காட்சியளிக்கும். பின்னர் இடப்
பக்கத்திலும் பார்ப்பார்; அங்கும் நரகமே காட்சியளிக்கும். எனவே
பேரீச்சம்பழத்தின் ஒரு சிறிய துண்டை தர்மம் செய்தாவது அதுவும் கிடைக்கவில்லையெனில்
ஒரு நல்ல வார்த்தையின் மூலமாவது அந்த நரகத்திலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள் எனக் கூறினார்கள்.
நூல்: புகாரி 1413, 6563
ஒரு சிறு
பொருளையாவது தர்மம் செய்து நரகத்திலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று
கூறுவதிலிருந்து, பொருளாதாரத்தைத் தேடுவது அவசியம் என்றும்,அதை
திரட்டுவது வெறுக்கத்தக்கதல்ல என்றும் விளங்குகின்றது.
EGATHUVAM MAR 2010