அழைப்புப்
பணியே அழகிய பணி
எம்.எஸ்.ஜீனத் நிஸா, கடையநல்லூர்
நம் நாட்டில் பாமரர்களின் எண்ணிக்கை குறைந்து
கல்வியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது உலகக் கல்வியில் மட்டும் தானே
தவிர மார்க்க்க் கல்வியைப் பொறுத்த வரை அது ஆரம்பித்த இடத்திலேயே தான்
இருக்கின்றது. மார்க்க அறிவில்லாத பாமரர்களின் எண்ணிக்கை அதிகரித்து மார்க்கமறிந்த
அறிஞர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணுமளவிற்குக் குறைந்து கொண்டே வருகின்றது.
இதனை நபியவர்களும் மறுமையின் அடையாளம் என்று குறிப்பிடுகிறார்கள்.
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கல்வியை(த் தன்) அடியார்களிடமிருந்து
ஒரேடியாகப் பறித்து கைவசப்படுத்திக் கொள்ளமாட்டான். ஆயினும், அறிஞர்களைக்
கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக எந்த அறிஞரையும்
அல்லாஹ் விட்டுவைக்காத போதே மக்கள் அறிவீனர்களைத் (தம்) தலைவர்களாக்கிக்
கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட, அவர்கள்
எந்த அறிவுமில்லாமல் மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள். எனவே தாமும் வழி கெட்டுப்
போவார்கள்; பிறரையும்
வழி கொடுப்பார்கள்.
நூல்: புகாரி 100
இவ்வாறு ஒரு நிலை உருவாவதற்கு மனிதனின்
மார்க்கப் பற்றின்மையும் இவ்வுலகத்தின் மீது மனிதன் கொண்ட பேராசையும் தான்
காரணமாகும். மார்க்கக் கல்வி பயில்வதால் கிடைக்கும் நன்மைகளை விடவும் உலகக் கல்வி
பயில்வதால் கிடைக்கும் பலன்கள் இவ்வுலகிலே அதிகம். இதனால் மக்களிடம் மார்க்கக்
கல்வி மதிப்பிழந்துள்ளது.
பொருளாதார ரீதியாகவும் கௌரவ ரீதியாகவும் ஒரு
மனிதனுக்குப் பெருமளவில் உதவி செய்வது இவ்வுலகக் கல்வியே என்று எண்ணும் ஒருவன்
மார்க்கக் கல்வியைப் புறந்தள்ளி மறுமை வெற்றியை அலட்சியப்படுத்தி, இம்மையையும்
இவ்வுலகக் கல்வியையும் தேர்வுசெய்கின்றான். இன்னும் படிப்பறிவே இல்லாமல், பொறுப்பற்று
சுற்றித் திரியும் ஒருவனே மார்க்கக் கல்வி பயில வேண்டும் என்ற ஒரு வரையறையையும்
இந்த சமுதாயம் உருவாக்கியுள்ளது.
பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு மார்க்கக்
கல்வி அவசியமானது. அதுவே நிலையான வெற்றி என்பதைச் சிந்திக்க மறந்துவிட்டு உலகக்
கல்விக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மார்க்கக் கல்வி பயில்வதால் மனிதனின்
இறையச்சம் உயரவே செய்கின்றது என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அல்லாஹ்வின்
அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே.
அல்குர்ஆன் 35:28
இந்நிலை தொடர்ந்தால் முட்டாள்களிடம் தீர்ப்புக்
கேட்கும் நிலை உருவாகிவிடும். இதைத்தான் மேலே நாம் குறிப்பிட்ட ஹதீஸில் நபிகளார்
முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.
ஏகத்துவப் பிரச்சாரம் என்பது சிலருக்கு மட்டுமே
கடமை, நம் மீது
எந்தக் கடமையும் இல்லை என எண்ணி ஒவ்வொருவருமே அலட்சியப்படுத்தினோம் என்றால் எந்த
அறியாமைக் காலத்தில் இருந்து நாம் மீண்டு வந்துள்ளோமோ அதே அறியாமைக் காலத்திற்கே
மீண்டும் நாம் செல்லும் நிலை ஏற்படும். நாம் மார்க்கத்தை எடுத்துச் சொல்லி அதன்
மூலம் ஒருவர் நேர்வழி பெற்றால் அது நமக்குப் பன்மடங்கு நன்மைகளைப் பெற்றுத் தரும்.
‘‘அல்லாஹ்வின்
மீதாணையாக! உங்கள் மூலம் ஒரேயொருவருக்கு அல்லாஹ் நல்வழியளிப்பது, (அரிய
செல்வமான) சிவப்பு ஒட்டகங்கள் உமக்குக் கிடைப்பதைவிடச் சிறந்ததாகும்’’ என்று நபிகள் நாயகம் (ஸல்) சொன்னார்கள்.
அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ரலி)
நூல்: முஸ்லிம் 4780
வேண்டாம்
முகஸ்துதி
தன்னைச் சிறந்த பேச்சாளர் என்று பாராட்ட வேண்டும்
என்ற நோக்கம், அழைப்பாளர்களிடம் இருக்கக் கூடாத மோசமான பண்பாகும்.
இதன் தாக்கம் எந்தளவிற்கு இருக்கின்றது என்றால்
ஒரு இடத்தில் தனக்கு எந்த வரவேற்பும் கிடைக்கவில்லையென்றால் இனி அப்பகுதிகளில்
அவர்கள் பயான் பேசுவதை விரும்புவதில்லை. அதைத் தவிர்க்கவே பார்க்கின்றனர். அதே
சமயம் தனக்கு வரவேற்பு கிடைக்கின்ற பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதைப்
பார்க்கின்றோம். இந்நிலையை மார்க்கப் பிரச்சாரம் செய்வோர் கண்டிப்பாகத் தவிர்க்க
வேண்டும்.
மக்களிடம் ஆதாயத்தையோ, பாராட்டையோ
எதிர்பார்த்துச் செய்யாமல் இறைவனுக்காக, மறுமையில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதற்காக
மட்டுமே மார்க்கத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். இம்மையில் பாராட்டப்படுவதற்காகச்
செய்கின்ற செயல்கள் இம்மையோடு நின்றுவிடுகின்றன. மறுமையில் எவ்விதப் பயனையும் அவை
அளிப்பதில்லை. மாறாக நரகத்தையே பரிசாக வழங்குகின்றன.
அபூஹுரைரா (ரலி) கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு
கூறியதை நான் கேட்டுள்ளேன்.
மறுமை
நாளில் மக்களில் முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில், இறைவழியில்
உயிர்த் தியாகம் செய்தவரே ஆவார். அவர் இறைவனிடம் கொண்டுவரப்படும் போது, அவருக்குத்
தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர்
அறிந்துகொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?’’ என்று
இறைவன் கேட்பான். அவர், “(இறைவா!) உனக்காக நான் அறப்போரில் ஈடுபட்டு என்
உயிரையே தியாகம் செய்தேன்’’ என்று பதிலளிப்பார். இறைவன், “(இல்லை) நீ
பொய் சொல்கிறாய். (நீ எனக்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை.) மாறாக, ‘மாவீரன்’ என்று
(மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது.
(உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)’’ என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி
முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
பிறகு
கல்வியைத் தாமும் கற்று அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக்
கற்றுணர்ந்தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் (இறைவனிடம்) கொண்டுவரப்படுவார்.
அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர்
அறிந்து கொள்வார். பிறகு “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?’’ என்று
இறைவன் கேட்பான். அவர், “(இறைவா!) கல்வியை நானும் கற்று, பிறருக்கும்
அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்’’
என்று பதிலளிப்பார். அதற்கு இறைவன், “(இல்லை) நீ
பொய் சொல்கிறாய். (எனக்காக நீ கல்வியைக் கற்கவுமில்லை; கற்பிக்கவுமில்லை.)
‘அறிஞர்’ என்று
சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்;
‘குர்ஆன் அறிஞர்’ என
(மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது
(உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)’’ என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி
முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
பிறகு
இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த
பெரிய செல்வந்தர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான்
வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார்.
பிறகு, “அந்த
அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?’’ என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், “நீ
எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ, அந்த
வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச்
செலவிட்டேன்’’ என்று
பதிலளிப்பார். அதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய் ‘இவர் ஒரு
புரவலர்’ என
(மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு) செய்தாய். (உன் எண்ணப்படி)
அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது எண்ணம் நிறைவேறிவிட்டது)’’ என்று
கூறிவிடுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர்
நரகத்தில் எறியப்படுவார்.
நூல்: முஸ்லிம் 3865
பிறர் மெச்ச வேண்டும் என்பதற்காக மார்க்கப்
பிரச்சாரம் செய்தவருக்கு நன்மை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. நரகம் கூலியாகக்
கிடைக்கின்றது என்பதை உணர்ந்து இந்த விஷயத்தில் நாம் கவனமாகச் செயல்பட வேண்டும்.
மேலும் பயான் பேசி முடிந்ததற்குப் பிறகு சிலர்
நீங்கள் சிறப்பான முறையில் உரையாற்றியதாகக் கூறுவார்கள். அச்சமயத்தில்
அல்ஹம்துலில்லாஹ் என்று கூறி அந்தப் பெருமையை இறைவனுக்கு உரித்தாக்கி விட
வேண்டும். இதன் மூலம் நாம் பெருமை கொள்வதிலிருந்து தவிர்ந்திருக்கலாம்.
ஒவ்வொரு பேச்சாளரும் நாம் கற்றதன்
அடிப்படையிலும் பிறருக்கு எடுத்துரைத்ததன் அடிப்படையிலும் நமது வாழ்நாளில் செயல்
படுகிறோமா என்பதை ஒவ்வொரு நாளும் நாம் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
அவர்கள்
வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலோ
அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர
பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள்
நிலைத்திருக்க மாட்டார்கள்.
அல்குர்ஆன் 3:135
EGATHUVAM FEB 2017