Mar 1, 2017

அண்ணலாரின் அச்சம் – OCT 2015

சென்ற இதழின் தொடர்ச்சி...

அண்ணலாரின் அச்சம் – OCT 2015

எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாழ்க்கையில் பல்வேறு காரியங்களைப் பற்றி அஞ்சி இருக்கிறார்கள். அவற்றைக் கடந்த இதழில் கண்டோம். அவற்றில் ஒன்று தான் உலக மோகத்தைப் பற்றிய அச்சமாகும்.
உலக மோகத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அச்சமூட்டி எச்சரிக்கை செய்துள்ளார்கள். அவற்றில் சிலவற்றைக் கடந்த இதழில் கண்டோம். அதுதொடர்பான மேலும் சில செய்திகளைப் பார்ப்போம்.
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் (தமது இல்லத்திலிருந்து) புறப்பட்டு வந்து, இறந்தவர்களுக்காக (ஜனாஸா  தொழுகை) தொழுவித்ததைப் போன்று உஹுதுப்போர் உயிர் தியாகிகளுக்காக (ஜனாஸா தொழுகை) தொழுவித்தார்கள். பிறகு சொற்பொழிவுமேடை (மிம்பர்)க்குத் திரும்பி வந்து, "(உங்களுக்கு முன்னேற்பாடுகளைச் செய்து வைப்பவனைப் போல்) நான் உங்களுக்கு முன்பே செல்கிறேன். நான் (அப்போது) உங்களுக்கு சாட்சியம் கூறுவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (கவ்ஸர் எனும்) எனது தடாகத்தைக் காண்கிறேன். மேலும், எனக்கு பூமியின் கருவூலங்களின் திறவு கோல்கள்' வழங்கப்பட்டுள்ளன. மேலும், அல்லாஹ்வின் மீதாணை யாக! என(து இறப்பு)க்குப் பின்னால் நீங்கள் இணைவைப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. எனினும் நீங்கள் உலகத்திற்காக ஒருவரோடொருவர் போட்டியிடுவீர்களோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல்: புகாரி (1344)
"பனூ ஆமிர் பின் லுஅய்'' குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் பத்ருப் போரில் கலந்து கொண்ட வருமான அம்ரு பின் அவ்ஃப் அல் அன்சாரீ (ரலி) அவர்கள் எனக்குக் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூ உபைதா பின் ஜர்ராஹ் (ரலி) அவர்களை பஹ்ரைனிலிருந்து ஜிஸ்யா வரியை வசூலித்துக் கொண்டு வரும்படி அனுப்பினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஜூஸி களான) பஹ்ரைன்வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களுக்கு அலா பின் ஹள்ரமீ (ரலி) அவர்களைத் தலைவராக ஆக்கியிருந்தார்கள். அபூ உபைதா (ரலி) அவர்கள் பஹ்ரைனிலிருந்து  நிதியுடன் வந்தார்கள். அபூ உபைதா (ரலி)  அவர்கள் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு அன்சாரிகள் நபி (ஸல்) அவர்களிடம் செல்ல, அது ஃபஜ்ருத் தொழுகையின் நேரமாக அமைந்து விட்டது.
நபி (ஸல்) அவர்கள் மக்களுடன் தொழுது முடித்துத் திரும்ப, அன்சாரிகள் நபியவர்களிடம் சைகையால் கேட்டார்கள். (ஆர்வத்துடனிருந்த) அவர்களைக் கண்டவுடன் நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்து விட்டு, "அபூ உபைதா ஏதோ கொண்டு வந்திருக்கிறார்' என்று நீங்கள் கேள்விப்பட்டிருக் கிறீர்கள் என நான் நினைக்கிறேன்'' என்று கூற, அன்சாரிகள், "ஆமாம், அல்லாஹ்வின் தூதரே!'' என்று பதிலளித்தார்கள். "ஆகவே, ஒரு மகிழ்ச்சியான செய்தி! உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்கு மென்று நம்புங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு  வறுமை  ஏற்பட்டு விடும் என்று நான் அஞ்ச வில்லை. ஆயினும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் அதிகமாகக் கொடுக்கப் பட்டதைப் போல் உங்களுக்கும் அதிகமாகக் கொடுக்கப்பட்டு, அவர்கள் அதற்காகப் போட்டி யிட்டதைப் போல் நீங்களும் போட்டி யிட, அவர்களை அது அழித்து விட்டதைப் போல் உங்களையும் அது  அழித்து விடுமோ என்று தான் நான் அஞ்சுகிறேன்'' என்று  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: மிஸ்வர் பின் மக்ரமா (ரலி)
நூல்: புகாரி (3158)
வழிகேட்டைப் பற்றிய அச்சம்
நாம் மட்டுமல்ல! நம்முடன் இருப்பவர்களும் ஈருலக வாழ்வில் வெற்றி பெற வேண்டும். அவர்களின் பட்டியலிலே நமது குடும்பத்தாரும் இருக்க வேண்டும். நாம் கொள்கைப் பிடிப்போடு சிறந்து விளங்குவதோடு அவர்களும் அவ்வாறிருக்க சீரிய முறையில் செயல்பட வேண்டும்.  மனைவியும் பிள்ளைகளும் நேர்வழியில் நிலைத்து இருக்க வேண்டும்; தடம் புரண்டு விடக் கூடாது என்ற அச்சம் கலந்த அக்கறை நமக்கு இருக்க வேண்டும். இந்த உணர்வானது தலைச் சிறந்த இஸ்லாமிய குடும்பம் தலைத்தோங்க துணை புரியும்.
ஒருவர் தன்னளவில் மட்டுமல்லாது பிறர் விஷயங்களிலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் போதிக்கும் மார்க்கமே இஸ்லாம். சுய வாழ்விலும் பொதுவாழ்விலும் நன்மையை ஏவி தீமையைத் தடுக்க வேண்டும்.
ஒருவர் சத்தியத்தைத் தழுவுவ தற்கும், அதிலே நிலைப்பதற்கும் தடையாக நாம் இருந்துவிடக் கூடாது. பாவம் செய்வதற்கும் தீங்கிழைப்ப தற்கும் கடுகளவும் ஒத்தழைப்பை கொடுத்து விடக் கூடாது. எதிலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இல்லாமல் இடமறிந்து செயல்பட வேண்டும்; பொருளறிந்துப் பேச வேண்டும்.  நமது சொற்கள், செயல் கள்  மூலம் எவரையும் வழிகேட்டில் தள்ளிவிடக் கூடாது. இந்த அச்சம் அழகிய அணுகுமுறைக்கு, பழக்கத்திற்கு அடித்தளமாக இருக்கும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் அமர்ந்திருந்த போது,  அவர்கள் மக்களில் ஒரு குழுவினருக்கு மட்டும் (தர்மப் பொருட்களை) கொடுத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு வேண்டிய ஒருவரை (அவருக்கு கொடுக்காமல்) விட்டுவிட்டார்கள். ஆகவே நான், "அல்லாஹ்வின் தூதரே! (அவரை ஏன் விட்டுவிட்டீர்கள்?) அவர் மீது உங்களுக்கு என்ன அதிருப்தி? அல்லாஹ்வின் மீதாணையாக! அவரை நான் நம்பிக்கையாளர் (முஃமின்) என்றே கருதுகின்றேன்'' என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரை முஸ்லிம் (இறைநெறியில் நடப்பவர்) என்று சொல்'' என்றார்கள். சிறிது நேரம் நான் அமைதியாக இருந்தேன். தொடர்ந்து நான் அவரைப் பற்றி அறிந்திருந்த விஷயங்கள் என்னையும் அறியாமல் (என் நாவில்) வந்தபோது முன்பு சொன்னதையே திரும்பவும் சொன்னேன். "அவர் மீது உங்களுக்கு என்ன அதிருப்தி? அல்லாஹ்வின் மீதாணையாக! நிச்சயமாக நான் அவரை ஒரு நம்பிக்கையாளர் (முஃமின்) என்றே கருதுகிறேன்'' என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவரை முஸ்லிம் என்று சொல்'' என்றார்கள். அவரைப் பற்றி நான் அறிந்திருந்த விஷயத்தை என்னையும் மீறி மீண்டும் மீண்டும் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பழைய பதிலையே கூறிவிட்டு, "சஅத்! (அன்பளிப்புகள் எதுவாகட்டும்) நான் ஒருவருக்குக் கொடுக்கிறேன்; ஆனால் நான் யாருக்குக் கொடுக்க வில்லையோ அவர் என் அன்புக்குப் பாத்திரமானவராய் இருக்கிறார். (அவருக்கு நான் கொடுக்காதிருந்தால் இல்லாமையால் அவர் குற்றங்கள் எதும் இழைத்து அதனால்) அவரை இறைவன் நரகில் முகம் குப்புறத் தள்ளிவிடுவானோ எனும் அச்சம் தான்'' என்றார்கள்.
அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ்
நூல்: புகாரி (27) (1478), முஸ்லிம் (236)
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிலருக்குக் கொடுத்துச் சிலருக்குக் கொடுக்காமல் விட்டு விட்டார்கள். அவர்கள் (அதைப் பொறுத்துக்  கொள்ள முடியாமல்) நபி (ஸல்) அவர்களைக் குறை சொல்வதைப் போன்ற சூழ்நிலை நிலவியது. ஆகவே, நபி (ஸல்) அவர்கள், "எவர், நம்பிக்கை பலவீனப்பட்டுப் போய்விடுவார் என்றும் பொறுமையிழந்து நிலை குலைந்து போய் விடுவார் என்றும் நான் அஞ்சுகின்றேனோ அவருக்குக் கொடுக்கின்றேன். இன்னும் சிலருக்கு, அவர்களுடைய உள்ளத்தில் அல்லாஹ் விதைத்துள்ள நன்மையை யும் தன்னிறைவான (போதுமென்ற) பண்பையும் நம்பிக் கொடுக்காமல் விட்டு விடுகிறேன். அத்தகைய (உயர் பண்புடைய)வர்களில் ஒருவர் தான் அம்ரு பின் தக்லிப் அவர்களும்'' என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (நன்மையும் போதுமென்ற குணமும் உடைய வர்களில் ஒருவனாகக் குறிப்பிட்டுப்) புகழ்ந்து பேசிய இந்தச் சொல்லுக்குப் பகரமாக (விலையுயர்ந்த செல்வமான) சிகப்பு ஒட்டகங்களை எனக்குத் தருவதாக இருந்தாலும் நான் அவற்றை விரும்ப மாட்டேன்.
அறிவிப்பவர்: அம்ரு பின் தக்லிப் (ரலி)
நூல்: புகாரி (3145)
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் பனுந் நஜ்ஜார் குலத்தாருக்குச் சொந்தமான தோட்டமொன்றில் தமது கோவேறுக் கழுதையின் மீதிருந் தார்கள். அப்போது அவர்களுடன் நாங்களும் இருந்தோம். அப்போது அவர்களது கோவேறுக் கழுதை அவர்களைத் தூக்கியெறியும் அளவுக்கு வெருண்டோடியது. அங்கு ஆறு அல்லது ஐந்து அல்லது நான்கு மண்ணறைகள் இருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள், "இந்த மண்ணறைகளில் அடக்கம் செய்யப்பட்டிருப் பவர்களைப் பற்றி யார் அறிவார்?'' என்று கேட்டார்கள். ஒரு மனிதர், "நான் (அறிவேன்)'' என்றார். நபி (ஸல்) அவர்கள், "இவர்கள் எப்போது இறந்தார்கள்?'' என்று கேட்டார்கள். அவர், "இணைவைப்பு (கோலோச்சி யிருந்த அறியாமை)க் காலத்தில் இறந்தனர்'' என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இந்தச் சமுதாயம் மண்ணறைகளில் சோதிக்கப்படுகின்றது. நீங்கள் (இறந்தவர்களைப்) புதைக்காமல் விட்டுவிடுவீர்கள் என்ற அச்சம் மட்டும் எனக்கில்லையாயின், நான் செவியுறும் மண்ணறையின் வேதனையை உங்களுக்கும் கேட்கச் செய்யும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தித்து இருப்பேன்'' என்று கூறினார்கள்.
பிறகு எங்களை நோக்கித் தமது முகத்தைத் திருப்பி, "நரக நெருப்பின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்'' என்றார்கள். மக்கள், "நரக நெருப்பின் வேதனை யிலிருந்து நாங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்'' என்று கூறினர். பிறகு "மண்ணறையின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்'' என்றார்கள். மக்கள், "மண்ணறையின் வேதனை யிலிருந்து நாங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்'' என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், "குழப்பங்களில் வெளிப்படை யானவை மறைமுகமானவை அனைத்திலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்'' என்று கூறினார்கள். மக்கள், "குழப்பங்களில் வெளிப்படையானவை மறைமுகமானவை அனைத்தி லிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்'' என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், "தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்'' என்றார்கள். மக்கள், "தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து நாங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்'' என்று கூறினர்.
அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)
நூல்: முஸ்லிம் (5502), (5503)
அழிவைப் பற்றிய அச்சம்
அல்லாஹ் அனைத்து ஆற்றலும் அதிகாரமும் கொண்டவன். அவன் நாடினால் எந்த நேரத்திலும் எதையும் செய்ய இயலும். நம்மை தண்டிப்பதற்கு அழிப்பதற்கு ஒரு நொடி போதும். இந்த அச்சம் இல்லாமல் இருப்பதாலேயே அநேக மக்கள் ஏக இறைவனை மறுப்பதிலும், அவனுக்கு மாறு செய்துவதிலும் மூழ்கிக் கிடக்கிறார்கள். வெள்ளம், புயல், நிலநடுக்கம் போன்ற பேரழிவுகள் மூலம் படுமோசமாக பாதிக்கப்பட்டாலும், பல்லாயிரம் பேர் பலியானாலும் பாவங்களை விட்டு மீளாமல் இருக்கிறார்கள். இவர்களுக்கு மாற்றமாக முஸ்லிம்கள் இருக்க வேண்டும். படைத்தவனுக்குப் பயந்து பணிந்து வாழ வேண்டும்.
(சூறாவளிக்) காற்று, மழை மேகம் ஆகியவை மிகுந்துள்ள நாட்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகத்தில் (ஒரு விதமான கலக்கம்) தென்படும்; முன்னும் பின்னும் நடப்பார்கள். (நிம்மதியற்று ஒருவிதத் தவிப்புடன் காணப் படுவார்கள்.) மழை பொழிந்து விட்டால் அந்த (தவிப்பு) நிலை அவர்களை விட்டு நீங்கி விடும்; மகிழ்ச்சி வந்துவிடும். நான் அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டதற்கு, "அது என் சமுதாயத்தார் மீது சாட்டப்பட்ட (இறைவனின்) வேதனையாக இருக்குமோ என்று நான் அஞ்சினேன்'' என்று விடையளித்தார்கள். அவர்கள் மழையைக் காணும்போது "(இது இறைவனின்) அருள்'' என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் (1639)
வாழ்க்கையில் எதைச் செய்தாலும், பார்த்தாலும் அவை ஒவ்வொன்றுக்கும் பயந்து நடுங்குவது அழகல்ல. அதேசமயம் அச்சம் என்பது அறியாமையும் அல்ல. அது மடமையும் அல்ல. அவசியமான நேரத்தில் அர்த்தமுள்ள வகையில் அச்சம் கொள்வதே விவேகம். ஏனெனில், அதன் வாயிலாகவும் அழகிய வாழ்வு அமையும்.
எனவே எந்தெந்த விஷயங்களில் பயந்து நடக்க வேண்டும் என்று நபிகளாரின் வாழ்க்கை மூலம் தெரிந்து கொண்டோம். அதன் அடிப்படையில் முறைப்படி வாழ்ந்து வெற்றி பெறுவோமாக! அதற்கு அல்லாஹ் அருள்புரிவானாக!

EGATHUVAM OCT 2015