Mar 1, 2017

மதுவிலக்கின் முன்மாதிரி மக்கா!

மதுவிலக்கின் முன்மாதிரி மக்கா!
எம். ஷம்சுல்லுஹா
அகிலத்தின் நேர்வழிக்குரிய தாகவும், பாக்கியம் பொருந்திய தாகவும் மனிதர்களுக்காக அமைக்கப் பட்ட முதல் ஆலயம் பக்கா (எனும் மக்கா) வில் உள்ளதாகும்.
(அல்குர்ஆன் 3:96)
இது அல்குர்ஆன் கூறுகின்ற ஓர் அற்புத வசனமாகும். இந்த வசனத்தில் புனிதமிகு கஅபாவை அகிலத்தின் நேர்வழி என்று அழைக்கின்றான்.
உலகத்தில் வாழ்கின்ற கருப்பர், வெள்ளையர் என்ற பல நிறத்தவர் களையும், ஆங்கிலேயர் - அரேபியர் என பல்வேறு மொழியினரையும், ஐரோப்பியர், ஆப்பிரிக்கர் என பல்வேறு நாட்டவர்களையும் ஒரே இடத்தில் அதாவது மக்காவில் ஒன்று கூடச் செய்து தீண்டாமையை ஒழித்துக் கட்டுவதற்காக அல்லாஹ் நடத்துகின்ற அகில உலக மாநாடு தான் ஹஜ் ஆகும்.
இந்த வகையில் தீண்டாமை ஒழிப்புக்கு ஒரு தூய முன்மாதிரியாக மக்கா நகரம் அமைந்திருக்கின்றது. தீண்டாமைக்கு மட்டுமல்ல! உலகம் இன்று திண்டாடி, திக்கு முக்காடிக் கொண்டிருக்கின்ற மதுவிலக்கிற்கும் ஒரு மாதிரி நகரமாக மக்கா நகரம் திகழ்கின்றது. அதாவது மக்காவை உள்ளடக்கியிருக்கின்ற இஸ்லாமிய நாடான சவூதி அரபியா திகழ்கின்றது.
இதை நாம் சொல்லவில்லை! ஆகஸ்ட் 7, 2015 அன்று வெளியான தி இந்து தமிழ் நாளிதழ் தெரிவிக்கின்ற கருத்தாகும்.
உலகெங்கும் மதுவிலக்கு பெரும் பாலும் தோல்வி அனுபவங்களையே தந்திருக்கிறது. அன்றைய ரஷ்யா 1914-ல் மதுவிலக்கை அமல்படுத்தியது. 1915-ல் ஐஸ்லாந்து, 1916-ல் நார்வே, 1919-ல் பின்லாந்து, 1920-ல் அமெரிக்கா என வரிசையாக மதுவிலக்கை அமல்படுத்தின.
ஆனால், அரபு நாடுகள் நீங்கலாக எங்கும் மதுவை நீண்ட காலத்திற்கு முடக்கிவைக்க முடியவில்லை. ஒரே காரணம் மது வியாபாரத்தில் புரளும் பணம்; அது பின் நின்று இயக்கும் அரசியல்.
அதேசமயம், மதுவிலக்கு அமலிலிருந்த ஆண்டுகளில் இங்கு எல்லாம் மக்களின் சுகாதாரத்திலும் பொருளாதாரத்திலும் வாழ்விலும் ஏற்பட்ட மாற்றங்கள் அபாரமானவை.
இவ்வாறு "மதுவும் மக்களரசியலும்'' என்ற தலைப்பில் இதை இந்து நாளிதழ் கட்டுரையாளர் சமஸ் குறிப்பிடுகின்றார்.
மதுவிலக்கு தோற்றமும் மறைவும்
டால்மியாபுரத்தை கள்ளக்குடி என்று மாற்றியதைப் புகழ்ந்து, "கள்ளக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே' என்று சாரண பாஸ்கரன் எழுதிய பாடலை நாகூர் ஹனிபா பாடினார். இப்படிப் பாடியதற்குப் பதிலாக, "கள்ளுக்கடை கொண்ட கருணாநிதி வாழ்கவே' என்று பாடியிருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும்.
அந்த அளவுக்கு, மண் வாசனையை மட்டுமே அறிந்த மக்களிடம் மது வாசனையை அறிமும் செய்தவர் கருணாநிதி! இதற்கு அவர் கூறிய காரணமே வருவாய் தான்.
1949ல் ஒட்டுமொத்த சென்னை மாகாணத்திற்கும் முழுவதுமாக மதுவிலக்கு அமல் செய்யப்பட்டது. அந்த மதுவிலக்கை ரத்து செய்து மதுக்கடைகளை 1971ல் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி திறந்து வைத்தார்.
இதற்குப் பின்னால் 1974ல் மதுக்கடைகளை மூடினாலும், மதுவால் அடிமையான மக்களின் வாய்களை மூட முடியவில்லை.
அப்போது திமுகவிலிருந்து நீக்கப் பட்ட எம்.ஜி.ஆர்., தான் ஆரம்பித்த அதிமுகவை நிலைநிறுத்துவதற்காக மதுவிலக்கை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தினார். அதில் அவர் வெற்றியும் கண்டார். அதிமுகவும் 1977ல் ஆட்சிக்கு வந்தது. தாயின் மீது ஆணை, தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுவேன் என்று தாய்மார்களிடம் சத்தியம் செய்து ஆட்சிக்கு வந்த சத்தியாவின் மகன் எம்.ஜி.ஆர். தனது சத்தியத்தைச் சரியாக மறந்து விட்டு 1981ல் மீண்டும் மதுக்கடைகளைத் திறந்தார்.
இந்த ஆட்சியாளர்கள் மாறி, மாறி மதுக்கடைகளைத் திறப்பதற்கு, கள்ளச்சாராயம், விஷச் சாராய சாவுகள், காவல்துறையில் குவிகின்ற புகார்கள், காவல்துறையிலும் நிர்வாகத் துறையிலும் தலைவிரித்தாடுகின்ற லஞ்ச லாவண்யங்கள், நீதித்துறையில் குவிந்த வழக்குகள் ஆகியவை காரணமாகக் கூறப்பட்டாலும் இவை எல்லாவற்றிற்கும் மேலாக வருவாய் தான் முதல் மூலக் காரணமாக அமைந்திருந்தது.
இன்று தமிழகத்தின் ஒட்டுமொத்த வருவாய் ஒரு லட்சத்து ஐந்து கோடி. இதில் 36,000 கோடி மதுவிலிருந்து கிடைக்கின்றது. அதனால் தமிழக அரசு மதுவிலக்கைக் கொண்டு வருவது பற்றிக் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை.
மார்த்தாண்டம் உண்ணாமலைக் கடையில் சசிபெருமாள் மதுவை எதிர்த்துப் போராடுகின்றார். அந்தப் போராட்டம் மரணத்தில் போய் முடிகின்றது. தமிழகமெங்கும் அவரது மரணம் எதிரொலித்தது. இதன் விளைவாக சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜெயலலிதா மதுவிலக்கை அறிவிப்பார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த ஓர் அறிவிப்பையும் செய்யாததால் மக்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றத் திலேயே முடிந்தது.
மதுவினால் எத்தனை பேர் மரணித்தாலும் முதல்வர் ஜெயலலிதா தனது மவுனத்தை ஒருபோதும் கலைக்கப் போவதில்லை. மது விலக்கை அமல்படுத்தப் போவ தில்லை. காரணம், அந்த அளவுக்கு சாராய ஆதாயம் சாம்ராஜ்யத்திற்குத் தேவைப்படுகின்றது.
பாமகவின் மதுவில்லாத மாநிலம்?
ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ், அவரது மகன் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ஆகியோர், ஒரு சொட்டு மதுவில்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றப் போகிறோம் என்று முதலமைச்சர் நாற்காலியைக் குறிவைத்துப் பிரச்சாரம் ùச்யது வருகின்றனர். டெல்லியின் கேஜ்ரிவால் பாணியில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று கணக்குப் போட்டு இவர்கள் காய்களை நகர்த்தி வருகின்றார்கள்.
தாயின் மீது ஆணை என்று சொல்லி ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆரே தலை கீழாகப் புரண்டு விட்ட வரலாற்றைப் பார்த்தோம். அதனால் இவர்களின் வார்த்தைகளை மக்கள் நம்பத் தயாரில்லை. வன்னிய சாதியை மையமாகக் கொண்டு கட்சி நடத்தும் இவர்கள், தங்கள் கட்சியினர் யாரும் மது அருந்துவதில்லை என்ற உத்தரவாதத்தை அளிப்பார்களா?
அத்துடன் இந்தூரில் முறைகேடாக மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கிய ஊழல் குற்றச்சாட்டில் அன்புமணி ராமதாஸ் மாட்டிக் கொண்டு சி.பி.ஐ. அவரை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கின்றது. அதனால் ஒரு சொட்டு மதுவில்லாத, ஒரு துட்டு ஊழலில்லாத மாநிலம் என்ற இவர்களது முழக்கம் வெற்றுக் கோஷம் தான் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
ராமதாசும் அன்புமணியும் மதுவிலக்கு, மதுவிலக்கு என்று கூறி ஒரு பலூனை ஊதிப் பெரிதாக்கி வைத்திருந்தனர். சசி பெருமாள் மரணத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் மக்களின் மனநிலையைப் பார்த்த திமுக தலைவர் கருணாநிதி, "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம்' என்று சொல்லி பாட்டாளி மக்கள் கட்சியின் பலூனை வெடிக்க வைத்துவிட்டார். அதனால் அவர்களுடைய மதுவிலக்கு ஆயுதம் சுக்குநூறாக உடைந்து நொறுங்கி விட்டது.
திமுகவின் வாக்குறுதி
மக்களின் போக்கையும் அவர்களின் தேர்தல் வாக்கையும் கவனத்தில் கொண்டு கருணாநிதி தன் பங்கிற்கு, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கைக் கொண்டு வருவோம் என்று வாக்குறுதி அளித்தார். அவ்வளவு தான். திமுகவில் யார்? யார்? எத்தனை மது ஆலைகளை நடத்துகின்றனர் என்று பாமக மட்டுமல்லாது பாமர மக்களும் பட்டியலிட்டனர். ஐந்து மது ஆலைகளை திமுகவினர் நடத்துகின்றனர். ஆளும் அதிமுக வினர் மூன்று மது ஆலைகளை நடத்துகின்றனர் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
அடுத்த ஆட்சி வந்து மதுவிலக்கு அமலாவதற்கு இன்னும் பத்து மாதங்கள் உள்ளன. அதற்குள்ளாக திமுகவினர் நடத்தும் மது ஆலைகளில் தயாரிக்கப்படும் மதுவைக் குடித்து விட்டு 10 ஆயிரம் பேர் இறப்பார்கள் என்பதால் மது ஆலைகளை மூடுங்கள் என்று மு.க. ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியதாகவும் அவர் பதிலளிக்கவில்லை என்றும் அன்புமணி ராமதாஸ் குறிப்பிடுகின்றார்.
திமுக தலைவர் தான் 1971ல் ஏற்கனவே மதுவிலக்கை ரத்துச் செய்தவர்.
1971, ஜூலை 20 அன்று ஒரு மழைக் காலத்தில் சுதந்திரா கட்சித் தலைவர் ராஜாஜி அவர்கள் குடை பிடித்துக் கொண்டு கருணாநிதியை அவரது வீட்டில் சந்தித்து, "மது விலக்கை ரத்துச் செய்ய வேண்டாம்' என்று கேட்டுக் கொண்டார். இருபது நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது ராஜாஜி வைத்த கோரிக்கையை கருணாநிதி காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. இறுதியாக மதுவிலக்கை ரத்துச் செய்து, அதுவே தமிழகத்தில் இன்று வரை மது ஆறாக ஓடுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. இப்படிப் பட்ட கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல் செய்வேன் என்கிறார். இவரது வாக்குறுதியை நம்பி மக்கள் வாக்களிப்பார்களா என்பது கேள்விக்குறி தான்.
மதுவிலக்கைப் பற்றிப் பேசுகின்ற அனைத்து அரசியல்வாதிகளுக்கும் அதைப்பற்றிப் பேசுவதற்கு அருகதையே இல்லை என்பதை தமிழக மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கின்றார்கள். மது ஆலைகளை திமுக, அதிமுக கட்சியினரே நடத்தி வருவதால் அவர்கள் அதைப்பற்றிப் பேசும் தகுதியை இழந்து விடுகின்றனர். மதுவிலக்கைப் பற்றி வாய்கிழியப் பேசுகின்ற வைகோ அன்று திமுகவில் இருக்கும் போது வாய் பொத்தி இருந்தவர்.
விஜயகாந்த் பற்றிச் சொல்லவே தேவையில்லை. மதுவிலக்கை அவர் பேசும் போதே மது அருந்தி விட்டு, போதையில் தான் பேசுகின்றார். பா.ம.க.வுக்கும் இதைப் பற்றிப் பேசத் தகுதியில்லை. காரணம், தமிழகம் மதுவில் தள்ளாடக் காரணமாக இருக்கும் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் மாறி மாறி கூட்டணி வைத்த கட்சி தான் பா.ம.க.
மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று கூறுகின்றீர்கள்; ஆனால் நீங்களே மதுபான ஆலைகளை நடத்துகிறீர்களே! என்று மு.க. ஸ்டாலினிடம் பத்திரிகையாளர்கள் கேட்கும் போது, அதற்குப் பதில் சொல்ல முடியாமல், ஆட்சிக்கு வந்ததும் ஆலைகளை மூடி விடுவோம் என்று மழுப்புகின்றார்.
மதுவினால் மக்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள் என்று முழங்கும் வைகோவிடம், "உங்கள் மகன் சிகரெட் கம்பெனி ஏஜெண்டாக இருக்கின்றாரே! புகை பிடிப்பது மக்களின் உடல் நலத்தைப் பாதிக்காதா?' என்று கேட்கும் போது, "அது போதைப் பொருள் அல்ல! அரசு தடை செய்தால் என் மகன் சிகரெட் வியாபாரத்தை விட்டு விடுவான்' என்று கூறுகின்றார்.
ஆக, மக்கள் நலனில் இவர்களுக்கு அக்கறையில்லை. மக்கள் நலம் பாதிக்கக் கூடாது என்று இவர்கள் விரும்புவார்களானால் அரசு தடை செய்யும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்?
இதற்கும் இஸ்லாம் ஓர் அழகிய வழிமுறையைக் கற்றுத் தருகின்றது.
"எதை விட்டும் நான் உங்களைத் தடுக்கிறேனோ அதைச் செய்து உங்களிடம் மாற்றமாக நடக்க நான் விரும்பவில்லை'' (என்று ஷுஐப் நபி கூறினார்)
அல்குர்ஆன் 11:88
தமிழகத்தைப் பொறுத்த வரை மதுவிலக்கு அறிமுகம், அமல் என்பதெல்லாம் பசப்பு வார்த்தை தான். இவர்கள் மதுவிலக்கை அமல் செய்ய வேண்டுமானால் இவர்களுக்கு முன்னால் உள்ள ஒரே வழி இஸ்லாமிய வழி தான். இஸ்லாம் மதுவை மட்டுமல்ல! மதுவினால் வரும் வருவாயையும் சேர்த்தே தடை செய்கின்றது.
இஸ்லாம் விபச்சாரத்தைத் தடை செய்கின்றது. அத்துடன் அதனால் கிடைக்கும் வருவாயையும் தடை செய்கின்றது.
இஸ்லாம் வட்டியைத் தடை செய்கின்றது. அத்துடன் சேர்த்து அதன் வருவாயை, அதன் மூலம் கிடைக்கும் உணவைத் தடை செய்கின்றது.
இஸ்லாம் பன்றி இறைச்சியைத் தடை செய்கின்றது. அதன் வியாபாரத்தையும் தடை செய்து அதன் மூலம் வரும் வருவாயைத் தடை செய்கிறது.
இந்து நாளிதழின் கட்டுரையாளர் சமஸ் சொல்கின்ற அரபு நாடுகள், அதாவது முஸ்லிம் நாடுகளில் மது பகிரங்கமாகவும் ரகசியமாகவும் விற்பனை செய்வதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் மதுவை விற்பதாக அறிந்த உமர் (ரலி) அவர்கள், "அவரை அல்லாஹ் தனது கருணை யிலிருந்து அப்புறப்படுத்துவானாக (சபிப்பானாக)! யூதர்களுக்குக் கொழுப்பு ஹராமாக ஆக்கப்பட்ட போது, அதை உருக்கி அவர்கள் விற்றதால் அவர்களை அல்லாஹ் அழிப்பானாக என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை அவர் அறிய வில்லையா?'' எனக் கேட்டார்கள்.
நூல்: புகாரி 2223
மறுக்கப்படும் பிரார்த்தனை
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். "அவர் தலைவிரி கோலத்துடனும் புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற் கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி "என் இறைவா, என் இறைவா' என்று பிரார்த்திக்கிறார். ஆனால், அவர் உண்ணும் உணவு தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அருந்தும் பானம் தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அணியும் உடை தடை செய்யப் பட்டதாக இருக்கிறது; தடை செய்யப் பட்ட உணவையே அவர் உட் கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?'' என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 2236
குடியைத் தடுக்கும் இறைநம்பிக்கை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விபச்சாரி, விபச்சாரம் செய்யும் போது மூமினாக இருந்து கொண்டு விபச்சாரம் செய்வதில்லை. மேலும், ஒருவன் மது அருந்தும் போது மூமினாக இருந்து கொண்டு மது அருந்துவதில்லை. ஒருவன் திருடு கின்ற பொழுது மூமினாக இருந்து கொண்டு திருடுவதில்லை. ஒருவன் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க, கொள்ளையடிக்கும் போது   மூமினாக இருந்து கொண்டு கொள்ளையடிப்பதில்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நூல்: புகாரி 2475
மறுமை நம்பிக்கை
ஒவ்வொரு முஸ்லிமும் தான் இறந்த பிறகு இன்னோர் உலகம் உள்ளது; அதில் தன்னைப் படைத்த இறைவன் விசாரிப்பான். நன்மை செய்தால் சுவனத்தையும், தீயது செய்தால் நரகத்தையும் அளிப்பான் என்று நம்பியிருக்கின்றான். இந்தப் போதனையை திருக்குர்ஆன் ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் ஊட்டுகின்றது.
மக்காவை உள்ளடக்கிய இஸ்லாமிய நாடுகளில் இந்தத் திருக்குர்ஆன் சட்டமே ஆளுகின்றது. அதனால் மதுவிலக்கில் அந்நாடு மகத்தான வெற்றியைக் கண்டிருக் கின்றது. இந்தியாவில் மதுவிலக்கு வெல்ல வேண்டுமா? அது இஸ்லாமிய மார்க்கத்தை நோக்கிச் செல்ல வேண்டும். அப்போது தான் மதுவிலக்கில் இந்தியா மகத்தான வெற்றி காணும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

EGATHUVAM OCT 2015