Mar 1, 2017

27. குடும்பவியல் - பெண்கள் வேலைக்குச் செல்வதால் ஏற்படும் அவலங்கள்

குடும்பவியல் தொடர்: 27
பெண்கள் வேலைக்குச் செல்வதால் ஏற்படும் அவலங்கள்
உரை: பி. ஜைனுல் ஆபிதீன்
எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.
பெண்கள் வேலைக்குச் செல்வதால் ஏற்படும் அவலங்களைப் பார்த்து வருகிறோம்.
வேலைக்குச் செல்லும் பெண்கள், குழந்தைகளுக்குப் பாலூட்டுதல், அவர்களை அரவணைத்தல் போன்ற கடமைகளைச் சரிவர நிறைவேற்றாமல் இருப்பதால் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் அந்தப் பெண்களுக்கும் ஏற்படும் கேடுகளைக் கண்டோம்.
இவைகளெல்லாம் குழந்தையாக இருக்கும்போது ஏற்படும் பாதிப்பு களாகும். குழந்தைப் பருவத்தைத் தாண்டி கொஞ்சம் வளர்ந்துவிட்டால், குழந்தைகள் சின்னச் சின்ன சேட்டைகள் செய்யும். பக்கத்து வீட்டில் நண்பர்கள் பழக்கம் கிடைக்கும். நண்பர்கள் கெட்டப் பழக்க வழக்கங்களை ஊட்டுவதற்கு அதிகமான வாய்ப்புக்கள் இருக்கும். பீடி சிகரெட் குடிக்கிற பழக்கம் உருவாகும். இப்படி எத்தனையோ கெட்ட பண்புகளைப் பிள்ளைகள் கற்றுக் கொள்வதற்கு வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.
இந்நிலையில் ஒரு தாய் அந்தப் பிள்ளையுடன் இருந்து அவனைக் கவனித்து, அவனுக்கு நல்லது கெட்டதுகளை எடுத்துச் சொல்லி சரியாக வழி நடத்த வேண்டும். குழந்தைகளைப் பொறுத்த வரை பல நேரங்களில் ஒளிந்து இருந்து கள்ளத் தனங்களைக் கற்றுக் கொள்ளும். வேலைக்குப் போகிற தாயினால் இவற்றையெல்லாம் பார்க்க முடியாது. எப்படி வளர்கிறான் என்பதே தெரியாது.
எனவே குழந்தைகள் நல்ல முறையில் வளர்வதற்கும் பெண்கள் வேலைக்குச் செல்வது தடையாக இருக்கிறது. இப்படி பொருளா தாரத்தைப் பெண்கள் தேடுவது குடும்ப அமைப்பையும், சமூகத்தையும் நாசமாக்கிவிடுகிறது என்பதையும் நடைமுறையில் கண்கூடாகப் பார்க்கிறோம்.
சந்தேகப்படும் கணவன்
வேலைக்குப் போகும் பெண்கள் தான் தனக்கு மனைவியாக வரவேண்டும் என்று ஆரம்பத்தில் ஆண்கள் ஆசைப்படுவார்கள். இவர்கள் நினைப்பதைப் போன்று அவளும் வேலைக்குச் சென்று விடுகிறாள். ஆணோ பெண்ணோ வீட்டுக்குள் இருந்தால் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்வார்கள். ஆனால் வேலைக்குப் போனால் ஆணோ பெண்ணோ, நல்ல வகையான ஆடைகளையும் அணிகலன்களையும் அணிந்து கொண்டுதான் செல்வார்கள். யாரும் வீட்டுக்குள் உடுத்தியிருந்த ஆடைகளுடனேயே வெளியிலும் வரமாட்டார்கள். ஆண்களை விட பெண்கள் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வார்கள்.
இப்படி நல்ல ஆடைகளை அணிந்து, மேக்அப் செய்து கொண்டு பெண் வெளியில் சென்றால்,  அதனால் கணவனுக்குத் தேவையற்ற குழப்பங்கள் மனதில் ஏற்படும். இவள் இப்படி ஜோடிப்பதற்குக் காரணம் என்ன? என்று சலனத்துடன் நடப்பான்.
இவன்தான் வேலைக்குப் போகிற பெண் வேண்டும் என்று தேர்வு செய்தான். பிறகு இவனே சந்தேகம் கொள்வான். இதுவும் நடைமுறையில் எத்தனை பேருக்கு நடந்திருக்கிறது. மனைவியை வேலைக்கு அனுப்பி விட்டு, இப்படி போகிறாளே என்று இவனது மனதில் லேசான சந்தேகம் வரும். பல பேருடன் தனியாக இருக்க வேண்டிய நிலையெல்லாம் ஏற்படுமே? வேலைக்குத்தான் போகிறாளா? வேறு எங்கும் போகிறாளா? இவையெல்லாம் மனதில் தோன்றும்.
நமது நாட்டில் பெங்களுருவில் வேலைக்குச் செல்லும் 750 பெண்களிடம் இதுபற்றி ஓர் ஆய்வு நடத்தினார்கள். நீங்கள் வேலைக்குச் செல்வதினால் உங்களது குடும்பங் களில் நடக்கும் பிரச்சனைகளைச் சொல்லுங்கள் என்று கேட்கும் போது, ஏன் தான் வேலைக்குச் சென்றோம் என்பது போன்றுதான் உள்ளது.
வேலைக்குப் போகாமலேயே குடும்பப் பெண்களாக நாங்கள் இருப்பதே எங்களுக்கு சிறந்ததாகத் தெரிகிறது என்றனர். இதில் 80 சதம் பெண்கள், எங்களது கணவர்களாலும்,  கணவரது குடும்பத்தினராலும் நாங்கள் கடும் சந்தேகத்திற்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறோம் என்றனர்.
அதாவது, 100 பெண்களில் 80 பெண்கள் கணவன்மார்களால் சந்தேகிக்கப்படுகிறார்கள். 20 பெண்கள் தான் கணவரால் சந்தேகத்திற்கு உள்ளாக்கப்படாமல் இருக்கிறார்கள். பாதிக்குப் பாதி இருந்தால் கூட அது ஒரு கணக்கில் வரும். 100ல் 80 பெண்களுக்கு இப்படியொரு இழிநிலை என்றால் இதைத் தவிர்க்கத்தான் வேண்டும்.
ஓரிரு சதம் என்றால் ஆண்கள் மீது குற்றம் சுமத்துவதில் நியாயம் இருக்கிறது. 80 சதவிகிதம் பேர் சந்தேகம் கொள்கிறார்கள் எனில், பொருளாதாரம் தேடி பெண்கள் வேலைக்குச் செல்வது பெண்களின் இயல்பு வாழ்க்கைக்கு எதிரான செயல் தான் என்பதைப் புரிய வேண்டும்.
வருமானத்திற்காகப் பெண்களை வேலைக்கு அனுப்பினாலும் மனைவி மீது பலவிதமான சந்தேகங்களுடன் தான் வாழ்கிறான். யதார்த்தமாக ஒரு நாள் பஸ் வருவதற்குத் தாமதமாகி விடுவதற்கு வாய்ப்புண்டு, புகைவண்டி குறித்த நேரத்தில் வராமல் போகலாம், வருகிற வழியில் மக்கள் ஆர்ப்பாட்டம் போராட்டம் என்று முற்றுகையிடலாம், டிராபிக் பிரச்சனைகள் வரலாம்; இப்படியெல்லாம் நடந்து தாமதமாக வருகிற போது சந்தேகத்துடன் கேள்வி கேட்டு துளைத்துவிடுவார்கள். அலுவலகத்தில் கேட்டதற்கு 6 மணிக்கெல்லாம் கிளம்பி விட்டதாகச் சொன்னார்கள். ஆனால் நீயோ 2 மணி நேரம் தாமதமாக வந்திருக்கிறாய். தாமதத்திற்கு என்ன காரணம்? எங்கே சென்று சுற்றிவிட்டு வந்துள்ளாய்? இப்படிப் பலவிதமான சந்தேகங்கள் அவனுக்கு ஏற்படுவது இயல்புதான்.
அப்படியெனில் மனைவி சம்பாதிக்கின்ற இந்த அற்பமான காசுக்காக ஏன் மனச்சங்கடத்துடன் வாழ வேண்டும்? நல்ல மனைவியைக் கூட வீண் சந்தேகப்பட்டு குடும்ப சச்சரவுகளை உண்டாக்க வேண்டுமா? இவ்வளவு நடந்தால் கணவன் மனைவி சந்தோஷமாக வாழ முடியுமா? திருமண வாழ்க்கை என்பதே ஆணும் பெண்ணும் சந்தோஷமாக வாழத்தானே! அதற்கே வேட்டு வைக்கிற இந்த வருமானம் தேவையா? என்று வேலைக்குச் செல்லும் பெண்கள் சிந்திக்க வேண்டும்.
இப்படியெல்லாம் தேவையற்ற வீண் சச்சரவுகளும் சந்தேகங்களும் வரக் காரணம், குடும்ப அமைப்பின் அர்த்தம் என்னவென்று புரிந்து கொள்ளாமல் இருப்பதினால்தான். எனவே ஆண்கள் தான் பொருளாதாரம் அனைத்திற்கும் பொறுப்பாளி, பெண்களுக்கு இதில் துளியளவுக்குக் கூடப் பொறுப்பில்லை என்ற குடும்ப அமைப்பு விதியை நோக்கி வருவது மட்டும் தான் இதற்கான தீர்வாக இருக்க முடியும்.
அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் தங்களது பெண்பிள்ளைகளை, மனைவிமார்களை வேலைக்கு அனுப்புவதை அறவே தவிர்த்துக் கொள்ள வேண்டும். கணவனுக்குச் சம்பாதிக்க முடியாத அளவுக்கு நோய் நொடியில் மாட்டிக் கொண்டால், தந்தைமார்களுக்கு வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிட்டால், கணவன் இறந்து விட்டு சொத்து சுகங்கள் எதுவும் இல்லையெனில் விதிவிலக்காக நிர்பந்தத்தின் அடிப்படையில் ஒரு சிலர் வேலைக்குச் செல்வதைக் குறைகூற முடியாது. கணவனும், ஆண் மக்களும் நன்றாக உழைக்கிற போது, குடும்பத்தின் பொருளாதாரச் சுமைகளை சுமப்பதற்கு ஆண்கள் பொறுப்பாளியாக இருக்கிற போது, பெண்கள் அவர்களது வருமானத்திற்கேற்ப வாழ்க்கையை நடத்துவதற்கு பழகிக் கொள்ள வேண்டும்.
கணவனால் இரண்டாயிரம் ரூபாய் தான் சம்பாதிக்க முடியும் என்றால், அதற்குள் எப்படி குடும்பத்தை வழிநடத்த முடியுமோ அப்படி நடத்த வேண்டும்; 5 ஆயிரம் என்றால் அதற்குத் தகுந்தமாதிரி நடத்த வேண்டும். 10 ஆயிரம் கிடைக்கிறது என்பதால் மனைவியை வேலைக்கு அனுப்ப வேண்டுமா?
செத்துப் போய்விடுவார் என்ற நிலையில் கணவன் இருந்தால் மனைவியை வேலைக்கு அனுப்பு வதில் எந்தக் குற்றமும் சுமத்த முடியாது. எனவே, இருப்பதைக் கொண்டு வாழ வேண்டும் என்பதுதான் இஸ்லாம் கூறும் குடும்பவியல் அம்சமாகும்.
பாலியல் தொந்தரவுகள்
பெண்கள் வேலைக்குச் செல்வதால் தங்களது கணவன்மார்களாலும், கணவனது குடும்பத்தினராலும் சந்தேகத்துடன் பார்க்க வேண்டிய சூழலுக்குப் பெண்கள் தள்ளப் படுகிறார்கள் என்பதோடு இதன் விளைவு நிற்கவில்லை.
அலுவலகத்தில் ஆண்களுடன் சேர்ந்து பெண்கள் வேலை பார்க்க வேண்டிய சூழலும் ஏற்படுகிறது. அங்கு வேலை பார்க்கிற சக ஊழியர்களில் ஆண்களின் வக்கிரத்திற்குப் பெண்கள் ஆளாக்கப் படுகின்றனர்.
வேலைக்குச் செல்கிற பெண்கள் நல்ல ஆடை அணிந்து முகப் பூச்சுக்களையெல்லாம் பூசிக் கொண்டுதான் வருவார்கள். இதைப் பார்க்கிற ஆண் ஊழியர்கள் அந்தப் பெண்களிடம் தனது சல்லாபத்தைக் காட்டுவதற்காக, இரட்டை அர்த்தத்தில் பேசுவார்கள்; பொருளை வாங்கும் போது அந்தப் பெண்களின் கையை உரசித் தொடுவதைப் போன்று வாங்குவார்கள்; தேவையற்ற தொந்தரவுகள் கொடுப்பார்கள். இதை நாமாக ஊகித்துச் சொல்லவில்லை. மேலே நாம் எடுத்துக் காட்டிய ஆய்வில் இதையும் சேர்த்துத்தான் அந்தப் பெண்கள் கூறினார்கள். சக ஊழியர்களில் 90 சதம் பேர்களால் நாங்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறோம் என்று அந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
பெண்கள்தானே என்று நினைத்துக் கொண்டு பெரும்பாலான ஆண்கள், தவறான சீண்டுதலுக்கு அங்குள்ள பெண்களை ஆளாக்குவார்கள். அவளும் வேலைக்காக இவற்றை யெல்லாம் விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போகிறாள். இதுவே மேல்மட்ட அதிகாரியாக இருந்தால், கையைப் பிடித்து இழுப்பதையும் சரச விளையாட்டுக்களை வக்கிரமாகச் செய்வதையும் அதையும் தாங்கிக் கொள்கின்ற அளவுக்குப் பெண்கள் இறங்கிச் செல்வதையும் பார்க்கிறோம்.
இதுவெல்லாம் பெரிதாகத் தெரிந்திருந்தால் வேலைக்குப் போய் இருக்கவே மாட்டார்கள். வேலையின் மூலம் சம்பாதிப்பதுதான் பெரிது என்றும் அதுதான் முதல் கடமை என்றும் குடும்ப அமைப்பு, குடும்ப சந்தோஷம் இரண்டாம் பட்சமாகத் தெரிவதால் மேலதிகாரிகளின் சீண்டல்  எல்லாம் இவர்களுக்குப் பெரிதாகத் தெரிவதில்லை.
ஆரம்பத்தில் வெறுப்பு இருந்தாலும் அனுசரிக்க வேண்டும், இல்லை என்றால் வேலை போய் விடும் என்ற மனநிலை காரணமாக, முதலில் விட்டுக் கொடுப்பது, அடுத்தடுத்து பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பதைப் போன்று எல்லாம் சர்வ சாதாரணமாகிவிடும். மொத்தத்தில் எல்லாம் போய்விடும். இப்படி, வேலை பார்க்கும் இடங்களில் சக ஊழியர்களாலும் மேலுள்ள அதிகாரிகளாலும் முதலாளிகளாலும் பல்வேறு பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர் இந்தப் பெண்கள்.
இதுபோன்ற நிகழ்வுகள் நமது சென்னையிலேயே நடந்தேறியுள்ளது. வேலைக்குச் செல்லும் பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சென்னை மாநகரக் கமிஷனரால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், அனைத்து பெண்களும் சொன்ன ஒரேமாதிரியான குற்றச்சாட்டு, வேலைக்குப் போகும் போது பஸ்ஸில், ஆட்டோவில், தெருவில் நடக்கும் போதும், எங்களை வேண்டுமென்றே இடித்துவிட்டுப் போகிறார்கள். இந்த இடிமன்னர்களின் தொந்தரவு தாங்க முடியவில்லை என்பதுதான். இதையாவது மக்கள் தொகை நெருக்கத்தினால் ஒன்றும் செய்ய முடியாது என்று சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் நாங்கள் வேலை செய்யும் இடங்களில் எங்களது சக ஆண் ஊழியர்களாலும், ஆண் முதலாளிகளாலும் பல்வேறு பாலியல் தொல்லைகளுக்கு தொடர்ச்சியாக ஆளாக்கப்படுகிறோம், அதற்கு விதிமுறைகளையும் நெறிகளையும் ஏற்படுத்தித் தாருங்கள் என்றும் புகார் கொடுத்தனர்.
இவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு பெண்களாகிய நாங்கள் குடும்பப் பொருளாதாரத்திற்காக வேலைக்குச் செல்வதால், எங்களது கணவன்மார்களாலும் எங்களது கணவனது குடும்பத்தினர்களாலும் அதிகமான கொடுமைகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எங்களை குத்திக்காட்டி பேசி இழிவாகப் பார்க்கப்படுகிறோம்; மனதால் காயப்படுத்தப்படுகிறோம் என்று சென்னை கமிஷனரிடம் பெண்கள் தங்களது கருத்துக்களையும் மனக்குமுறல்களையும் புகார்களையும் தெரிவித்திருந்ததை சில ஆண்டு களுக்கு முன்னால் தினத்தந்தி நாளிதழ் ஒரு முழுப் பக்கத்திற்கு செய்தியாக வெளியிட்டிருந்தது.
இவ்வளவு பிரச்சனைகளும் வருவதற்குக் காரணம், குடும்ப அமைப்பைச் சரியாகப் புரியாமல் பெண்கள் வேலைக்குச் செல்வது தான். பணத்திற்காக இத்தனை அநியாயங்களும் நடக்க ஒரு பெண் அனுமதிப்பது மிகவும் தவறான செயல்.
பெண்கள் வேலைக்குச் செல்வதால் ஏற்படும் பாதிப்புகளில் இது ஒரு வகை. இன்னும் ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவற்றை வரும் இதழ்களில் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.

EGATHUVAM OCT 2015