20. இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்
- ராபிளிய்யாவின் தகிய்யா கொள்கை
மூலம்:
முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி
தமிழில்: எம். ஷம்சுல்லுஹா
ராபிளிய்யாக்களின் மார்க்கம் "தகிய்யா' ஆகும். அதாவது தங்களுடைய கொள்கையின் பக்கம் மக்களை அழைக்கும் போது தங்களது
உண்மையான கொள்கையை மறைத்து விடுவார்கள். இவர்களது பிரச்சாரத்தை ஏற்று மக்கள் உள்ளே
நுழைந்ததும் அப்போது தங்களது உண்மையான கொள்கையை வெளியிடுவார்கள். இதற்குப் பெயர்
தான் தகிய்யா எனப்படுகின்றது.
இவ்வாறு பொய் சொல்லி பிரச்சாரம் செய்வதை
ராபிளிய்யாக்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இது நயவஞ்சகக் கொள்கையும்
நாசக் கொள்கையுமாகும்.
இந்த நயவஞ்சகக் கொள்கையைக் கொண்ட இவர்கள்
தங்களை முஃமின்கள், இறை நம்பிக்கையாளர் கள் என்று பிதற்றிக்
கொள்கிறார்கள். முந்திச் சென்ற நல்லோர்களை தடம் மாறியவர்கள் என்றும் நயவஞ்சகர்கள்
என்று இவர்கள் விமர்சிக்கிறார்கள்.
இவ்வாறு ஹாபிழ் தஹபீ அவர்கள் கூறுகின்றார்கள்.
திருடனைப் பிடிப்பதற்குத் துரத்தி வருபவர்களையே
திருடர்களாகச் சித்தரிக்கும் ஒரு திருடனின் கதையைப் போன்று இவர்களது கதை உள்ளது.
இதுதான் கேடுகெட்ட ராபிளிய்யாக் களின்
கொள்கையும் இலட்சணமும் ஆகும். நபி (ஸல்) அவர்கள் மீது ஹதீஸ்களை இட்டுக்கட்டுவதில்
இவர்கள் முதல் இடத்தில் இருக்கிறார்கள். இதற்கு அடுத்த இடத்தில் இருப்பவர்கள்
சூஃபிகள் ஆவர்.
சூஃபிகள்
இவர்கள் ராபிளிய்யாக்களின் மறு அவதாரமாகச்
செயல்பட்டனர். இஸ்லாத்திற்கு எதிரான சதித் திட்டத்திற்கு ஒரு முழுமையான
செயல்வடிவம் கொடுத்தவர்கள் இவர்கள் தான். பொய்யான, பலவீனமான ஹதீஸ்களை இட்டுக் கட்டுதல் என்பது இந்த சதித் திட்டத்தின் ஒரு
பகுதியாகும்.
இந்தச் சதிகாரர்கள் ஒரு படையாகவே கிளம்பி
பல்வேறு தலைப்புகளில், பல்வேறு பெயர்களில் நூல்களை இயற்றினர்.
கூத்துல் குலூப் - உள்ளங்களின் உணவு என்பது இந்த வகையில் உள்ள ஒரு நூலாகும். இதை
இயற்றியவன் மக்கீ பின் அபூதாலிப் என்பவன். அடர்த்தியான இந்த நூலில் பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைப் போட்டு நிரப்பியுள்ளான். இந்த
நூலை இஸ்லாமிய மற்றும் இஸ்லாம் அல்லாத நாடுகளுக்குப் பரவச் செய்தான்.
இந்த நூலைச் சுற்றி கற்பனை செய்ய முடியாத, வினோதமான வாதங்களை சூஃபிய்யாக்கள் அளந்தும் அடித்தும்
விட்டனர். தற்கால ஆசாமிகளும் இந்தச் சதி வலையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
வரிந்து கட்டிக் கொண்டு, வலிந்து வலிந்து இதைப் படிக்குமாறு மக்களுக்கு
அறிவுரை கூறினர்.
போலியாகவும், பொய்யாகவும் புனையப்பட்ட தங்களுடைய இந்தக் குப்பைகளின் ஒரு பகுதிக்கு நபிவழி
என்று பெயரிட்டு அதைப் படிக்கத் தூண்டினர்.
சாபத்திற்குரிய இந்த சதித் திட்டத்தைப் பற்றி
இன்ஷா அல்லாஹ் இந்நூலின் பிற்பகுதியில் விளக்கு வோம். இந்த விஷமக் கருத்தை வேதக்
கருத்தாகப் பரப்பிய நூல்கள் பல உள்ளன. அவற்றில் தலையாய பங்கு வகிப்பதும், முதல் இடத்தைப் பிடிப்பதும் இஹ்யா உலூமித்தீன் தான்.
இந்நூல் முதல் பக்கத்திலிருந்து இறுதிப் பக்கம்
வரை ஆயிரக் கணக்கான ஹதீஸ்களைக் கொண் டுள்ளது. இதில் இடம் பெற்றிருக்கும்
ஹதீஸ்களின் லட்சணங்களை அடையாளம் காட்டுவதற்காகவும், அம்பலப்படுத்துவதற்காகவும் இரண்டு நூல்களை ஹதீஸ் கலை திறனாய்வாளர் ஹாபிழ்
இராக்கி அவர்கள் இயற்றியுள்ளார்கள். அதில் ஒன்று பெரிய நூல், மற்றொன்று சிறிய நூலாகும்.
இஹ்யாவின் ஓரம் அல்லது அடிக்குறிப்பாக
இடம்பெற்றிருக்கும் அன்னாரின் ஆய்வுக் குறிப்பு, நடுத்தரமிக்க ஒரு விமர்சன வெளியீடாகும்.
நம்மைப் பொறுத்தவரை இஹ்யாவுக்கு இந்த ஆய்வு
வெளியீடு மட்டும் போதாது. அதில் இடம்பெற்றிருக்கும் ஹதீஸ்களை இடத்திற்குத்
தக்கவாறு, இன்னும் மேலதிகமான திறனாய்வு செய்வது
இன்றியமையாத ஒன்றாகும்.
இப்னு சுப்கீயின் மதிப்பீடு
இப்னு சுப்கீ என்பவர் கஸ்ஸாலியின் அதிதீவிர
ஆதரவாளர்; பக்தர். கஸ்ஸாலியின் மீது கொண்ட அளவு கடந்த
காதல் காரணமாக சுன்னத் வல் ஜமாஅத்தினரின் (நபிவழியில் நடக்கின்ற உண்மையான சுன்னத்
ஜமாஅத்தினர்) பகைமையைச் சம்பாதித்தவர் ஆவார்.
"இஹ்யாவின் ஹதீஸ்களை ஆய்வு
செய்த போது அவற்றில் பெரும்பாலானவற்றிற்கு அறவே அறிப்பாளர் தொடர் இல்லை. எந்த ஓர்
அடிப்படையும் இல்லை என்று தெரிந்து கொண்டேன்'' என தன்னுடைய தபகாத் என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.
இது அல்லாமல், அறிவிப்பாளர் தொடருடன் கூடிய இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள், பலவீனமான ஹதீஸ்கள் ஒரு பெரிய அளவில் கிடக்கின்றன என்றும்
அவர் குறிப்பிடுகின்றார்.
நூலாசிரியர் மக்ராவி குறிப்பிடுகின்றார்:
அல்லாஹ் எனக்கு வாழ்நாளை நீட்டிக் கொடுத்தால்
இஹ்யாவில் இடம்பெற்றிருக்கும் ஹதீஸ்களை அடையாளம் காட்டுவதற்காக ஒரு பெரிய
முழுமையான நூல் வெளியிடுவேன். அதில் இஹ்யாவில் பதிவான மவ்ளூஃ, லயீஃப், ஸஹீஹ், ஹஸன் போன்ற ஹதீஸ்களை விவரிப்பேன். அப்போது தான் சமுதாயம்
இஹ்யாவில் விபரீதத் திலிருந்து விழித்துக் கொள்ளும். எனினும், இப்போது எழுதியிருக்கும் இந்த நூலில் இஹ்யாவில் இடம்பெற்ற
பொய்யான, போலியான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் எடுத்துக்காட்டுகளை இங்கு கொண்டு
வந்திருக்கின்றேன்.
இவ்வாறு மக்ராவி கூறுகின்றார்.
இஹ்யாவில் இறக்குமதியான பொய்யான ஹதீஸ்கள், ராபிளிய் யாக்கள் மற்றும் சூஃபிய்யாக்கள் இஸ்லாத்திற்கு
எதிராகப் பின்னிய சதிவலையின் ஓர் அங்கம் என்பதை இங்கு நினைவுபடுத்திக் கொள்கிறோம்.
ஹாபிழ் தஹபி அவர்களின் ஸியரு அஃலாமின் நுபலா
என்ற நூலில் இடம்பெற்ற ஹதீஸ்களைத் தர ஆய்வு செய்து, அதில் அடிக்குறிப்பு எழுதிய திறனாய்வாளர் பேராசிரியர் ஷுஐப் அல் அர்னவூத்
அவர்கள் குறிப்பிடுவதாவது:
"சுப்கீ அவர்கள், இஹ்யாவின் ஹதீஸ்களை ஆய்வு செய்த போது பல ஹதீஸ்களுக்கு
அறிவிப்பாளர் தொடரே இல்லை என்று கண்டறிந்தார். அவர் கண்டறிந்த, தொடரே இல்லாத அந்த ஹதீஸ்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 943 ஆகும்.
ஹிஜ்ரி 806ல் மரணமடைந்த ஹாபிழ் அபுல் ஃபழ்லு அப்துர்ரஹீம் இராக்கி அவர்கள், "அல்முக்னீ அன் ஹம்லில் அஸ்ஃபார் ஃபில் அஸ்ஃபாரி ஃபீ தக்ரீஜி
மா ஃபில் இஹ்யாஇ மினல் அக்பார்'' - "இஹ்யாவில் இடம் பெற்றுள்ள ஹதீஸ்களுக்கு மூல நூல்களைத் தேடும் பயணத்தில் பல
நூல்களைப் புரட்டுவதைத் தவிர்க்கின்ற ஒரு தன்னிறைவு நூல்'' என்ற பெயரில் இஹ்யாவில் உள்ள அனைத்து ஹதீஸ்களையும் தனது
நூலில் பதிவு செய்து, அந்த ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ள மூல நூல்களையும்
குறிப்பிட்டுள்ளார். அந்த ஹதீஸ்களின் தரத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.
பலவீனமானது, இட்டுக்கட்டப்பட்டது, அடிப்படையே இல்லாதது என்றெல்லாம் அந்த ஹதீஸ்களை அடையாளமும்
காட்டியுள்ளார்.
எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், ஆசிரியர்கள், அறிவுரை கூறுவோர் அத்தனை பேரும் ஹாபிழ் இராக்கி அவர்களின் திறனாய்வுத்
தீர்ப்பைப் பார்க்காமல், படிக்காமல் இஹ்யாவின் ஹதீஸ்களை மேற்கோள்
காட்டவோ, ஆதாரமாகக் கொள்ளவோ வேண்டாம்''
இது தற்கால ஹதீஸ் கலை திறனாய்வாளர் ஷுஐப் அல்
அர்னவூத் அவர்கள் குறிப்பிடுகின்ற கருத்தாகும்.
ஒரு ஹதீஸின் தன்மை மற்றும் அதன் தரம் குறித்து
ஆய்வு செய்த, மக்களுக்கு நன்கு அறிமுகமான ஹதீஸ் கலை
அறிஞர்களின் தீர்ப்பைப் பார்க்காமல் அந்த ஹதீஸை ரசூல் (ஸல்) அவர்களுடன் இணைத்துக்
கூறக்கூடாது.
ஹதீஸ் கலை அறிஞரின் அத்தகைய தீர்ப்பைப்
பார்க்காமல், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
கூறினார்கள்' என்று ஒருவர் சொன்னால் அவர் திட்டமிட்டு
நபியவர்கள் மீது பொய் கூறிய பாவத்தைச் செய்தவராகின்றார்.
"என் மீது கூறும் பொய்
(உங்களில்) ஒருவர் மீது கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என் மீது வேண்டுமென்றே
பொய்யுரைக் கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்'
நூற்கள்: புகாரி 1291, முஸ்லிம் 5
இந்த ஹதீஸ் கூறும் எச்சரிக்கை வட்டத்திற்குள்
அவர் வந்து விடுகின்றார்.
இவ்வாறு பத்ருத்தீன் அல் ஹுஸைனி என்ற அறிஞர்
தெரிவிக்கின்றார்.
மவ்ளூவு அல்லாத இதர பலவீனமான ஹதீஸ்களை
அறிவிப்பது தொடர்பான முடிவு:
இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்ற தரத்தில்
இல்லாமல், அதே சமயம் பலவீனமாக அமைந்திருக்கும் ஹதீஸ்
அடிப்படையில் அமல் செய்யலாமா? என்றால் இது
தொடர்பாக அறிஞர் நாஸிருத்தீன் அல்பானி அவர்கள் தர்கீப் (ஆர்வமூட்டல்) தர்ஹீப்
(அச்சமூட்டல்) என்ற நூலில் ஓர் அருமையான முன்னுரையை எழுதியுள்ளார்கள்.
ஒரு பலவீனமான ஹதீஸின் நிலையைத் தெரிவித்து, அதைவிட்டும் மக்களை எச்சரிப்பதற்காகவே தவிர அதை
அறிவிக்கக்கூடாது என்ற நம்முடைய நிலைப்பாட்டிற்கு ஏற்ப அறிஞர் அல்பானி அவர்கள்
அந்த முன்னுரையில் அற்புதமாகக் குறிப்பிட்டுள்ளார்கள். அவற்றின் ஒரு பகுதியை நாம்
பார்க்கவிருக்கின்றோம்.
அல்பானியின் முன்னுரைக்குள் செல்வதற்கு முன்னர், பலவீனமான ஹதீஸைப் பற்றிய தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாட்டை
நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
"ஹலால், ஹராம், கொள்கை
சம்பந்தப்பட்ட விஷயங்களில் பலவீன மான ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்ளக்கூடாது. அமல்களைச்
செய்ய ஆர்வமூட்டும் வகையில் (தர்கீப்) அவற்றின் சிறப்புகளைக் கூறுவது, தீமைகளைத் தடுக்கும் விதத்தில் அதன் தண்டனைகளைக் கூறுவது
(தர்ஹீப்) தொடர்பாக வரும் பலவீனமான ஹதீஸ்களை அறிவிக் கலாம்'' என்ற கருத்தில் அறிஞர்களின் ஒரு சாரார் உள்ளனர். ஆனால்
தவ்ஹீது ஜமாஅத் அதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டில் உள்ளது.
"யார் என் மீது வேண்டுமென்றே
பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்'
என்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின்
எச்சரிக்கையைக் கவனத்தில் கொண்டு எந்தக் கட்டத்திலும் பலவீனமான ஹதீஸை அறவே
ஆதாரமாகக் கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டில் அன்றிலிருந்து இன்றுவரை உறுதியாக
உள்ளது.
ஹாபிழ் இப்னு ஹஜர் போன்று மாமேதைகள் கூட, வரலாறுகளில் நபி (ஸல்) அவர்கள் தொடர்பாக வருகின்ற செய்திகளை
ஏற்றுக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தைப்
பொறுத்தவரை வரலாறாக இருந்தாலும் அதில் நபி (ஸல்) அவர்கள் தொடர்பாக வருகின்ற
செய்திக்கு அறிவிப்பாளர் வரிசை இல்லை என்றால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது.
அறிவிப்பாளர் வரிசை இருந்தாலும் அதன் தரத்தை அலசிப் பார்க்காமல் அந்தச் செய்தியை
ஏற்பதில்லை.
ஹதீஸ்களில் கடுமையான பலவீனம், இலேசான பலவீனம் என்று பிரித்து, இலேசான பலவீனம் என்ற நிலையில் அமைந்த ஹதீஸ்களை அமல்களின்
சிறப்பு மற்றும் எச்சரிக்கை விஷயங்களில் ஆதாரமாகக் கொள்ளலாம் என்ற
நிலைப்பாட்டிலும் அறிஞர்களில் ஒரு சாரார் உள்ளனர். ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் இந்த
நிலைப்பாட்டிற்கும் எதிராக உள்ளது.
உமக்கு அறிவு இல்லாததை நீர் பின்பற்றாதீர்!
செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப் படுபவையாகும். (அல்குர்ஆன் 17:36)
இந்த வனத்தில் அல்லாஹ் குறிப்பிடுவது போன்று
சந்தேகத்தின் சாயல்படுகின்ற, படிகின்ற
எந்தச் செய்தியையும் கொள்கை, ஹராம் ஹலால்
போன்ற சட்ட விஷயங் களிலும், வணக்க வழிபாடுகள், சிறப்புகள், எச்சரிக்கைகள் போன்ற எந்தவொரு விஷயத்திற்கும் ஆதாரமாகக் கொள்வதில்லை. இதை
இங்கு குறிப்பிடுவதற்கான காரணம், இங்கு இடம்
பெறுகின்ற அறிஞர் அல்பானியின் முன்னுரையோ, அல்லது அவர்களது வேறு எந்த ஆக்கத்திலோ நம்முடைய நிலைப்பாட்டிற்கு மாற்றமான
கருத்து பதிவானால் அதை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கின்றது என்று யாரும் தவறாக எடுத்துக்
கொள்ளக்கூடாது என்பதற்காகவே இதை இங்கு குறிப்பிடுகின்றோம்.
பொதுவாக, பலவீனமான ஹதீஸை அறிவிப்பது, அதன்படி அமல்
செய்வது பற்றிய அறிஞர்களின் கருத்துக்கள், கண்ணோட்டங்கள் எப்படி உள்ளன என்பதை கொள்கைச் சகோதரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
என்பதற்காக இது தொடர்பான செய்திகள் இங்கு அளிக்கப்படுகின்றன என்ற விளக்கத் துடன், அறிஞர் அல்பானியின் முன்னுரையில் இடம்பெற்றுள்ள கருத்தைப்
பார்ப்போம்.
EGATHUVAM AUG 2015