Mar 2, 2017

வஹீ மட்டுமே வழிபாடு! வஹீ அல்லாதது வழிகேடு!

வஹீ மட்டுமே வழிபாடு! வஹீ அல்லாதது வழிகேடு!

ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் இந்தப் பூமிக்கு அனுப்பியதும் அவர்களுடன் மொத்த மனித சமுதாயமும் சேர்ந்தே பூமியில் இறங்கியது. அப்போது அவர்களுக்கு அருளிய கட்டளை இதோ:
"இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்போது எனது நேர்வழியைப் பின்பற்று வோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்'' என்று கூறினோம்.
அல்குர்ஆன் 2:38
இதை அல்லாஹ் இன்னும் தெளிவுபடுத்தும் விதமாகப் பின்வரும் வசனத்தில் தெரிவிக்கின்றான்.
ஆதமுடைய மக்களே! எனது வசனங்களை உங்களுக்குக் கூறும் தூதர்கள் உங்களிலிருந்து உங்களிடம் வரும்போது (என்னை) அஞ்சி, திருந்திக் கொள்வோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
அல்குர்ஆன் 7:35
இந்த வசனங்கள் நமக்கு இடுகின்ற கட்டளை, என்னுடைய வஹீச் செய்தியை மட்டும் பின்பற்ற வேண்டும் என்பது தான்.
அந்த வஹீச் செய்தி அல்லாஹ்வின் வேதத்தின் வழி யாகவும், தூதர்கள் வழியாகவும் வரும் என்பதை இந்த வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.
இந்த உலகத்தில் மனித சமுதாயம் பின்பற்ற வேண்டியது இவ்விரு விதமான வஹீயை மட்டும் தான். இது தான் இறைவனுக்குச் செய்கின்ற வழிபாடாகும். இவை அல்லாதது வழிகேடாகும். அது நரகத்தில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும். இதற்குத் திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் ஏராளமான சான்றுகள் உள்ளன.
ஒரு மனிதர் இறந்து அவர் கப்ரில் வைக்கப்படும் போது, "உங்களிடம் தூதராக அனுப்பப்பட்ட இந்த மனிதர் யார்?' என்ற ஒரு கேள்வியும் கேட்கப்படும். அப்போது அவர், "அல்லாஹ்வின் வேதத்தைப் படித்து அவரை நம்பி உண்மைப் படுத்தினேன்' என்று பதில் கூறுவார். (ஹதீஸ் சுருக்கம்)
அறிவிப்பவர்: பர்ராஃ பின் ஆஸிப் (ரலி)
நூல்: அபூதாவூத் 4127, முஸ்னத் அஹ்மத் 17803
இன்ன இமாம், இன்ன பெரியார் எனக்குக் கற்றுத் தந்தார் என்று இந்த நல்லடியார் கப்ரில் பதில் கூறவில்லை. அல்லாஹ்வின் வேதத்தைப் படித்துத் தெரிந்து கொண்டேன் என்று தான் கூறுகின்றார். ஆக, ஒரு மனிதர் இறந்து கப்ரில் வைக்கப்பட்டதும் அவருக்குக் கை கொடுப்பது குர்ஆன் எனும் இறைச்செய்தி தான் என்பதை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
இத்துடன் மட்டும் குர்ஆன் நிற்கவில்லை. நரகம் வரை அதன் பயணம் தொடர்கின்றது.
இறை வசனங்களை ஏற்க மறுத்த மனிதன், நாளை மஹ்ஷர் மைதானத்தில் வந்து நிற்கும் போது புலம்பும் புலம்பலை அல்லாஹ் எடுத்துக் கூறுகிறான்.
நீங்கள் அறியாத நிலையில் திடீரென்று உங்களிடம் வேதனை வருவதற்கு முன்னரும், "அல்லாஹ் வின் கடமையில் நான் குறை வைத்ததற்காக எனக்குக் கேடு தான்; நான் கேலி செய்தவனாகி விட்டேனே'' என்று எவரும் கூறுவதற்கு முன்னரும், "அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்டியிருந்தால் (அவனை) அஞ்சுவோரில் ஆகியிருப்பேனே'' என்று கூறுவ தற்கு முன்னரும், வேதனையைக் காணும் நேரத்தில் "திரும்புதல் எனக்கு இருந்தால் நல்லோரில் ஆகியிருப்பேனே'' என்று கூறுவதற்கு முன்னரும் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்ட அழகானதைப் பின்பற்றுங்கள்!
அல்குர்ஆன் 39:55-57
நாளை மறுமையில் வந்து நின்று இதுபோன்று மனிதன் புலம்பக்கூடாது என்பதால் இறைவன் முற்கூட்டியே எச்சரிக்கை செய்கின்றான். அத்துடன், என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன என்றும் குறிப்பிடுகின்றான். அல்லாஹ்வின் வசனங்களைத் தான் இது குறிக்குமே தவிர வேறு எந்தப் பெரியாரின், இமாம்களின் வார்த்தைகளையும் குறிக்காது.
அடுத்து, மக்கள் நரகத்திற்கு இழுத்து வரப்படும்போது நரகத்தின் காவலர்கள் அவர்களை நோக்கிக் கேட்கும் கேள்வி இதோ:
(ஏகஇறைவனை) மறுத்தோர் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு ஓட்டிச் செல்லப்படுவார்கள். அவர்கள் அங்கே வந்ததும் அதன் வாசல்கள் திறக்கப்படும். "உங்கள் இறைவனின் வசனங்களை உங்களுக்குக் கூறும் தூதர்கள் உங்களிலிருந்தே உங்களுக்கு வரவில்லையா? இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டியது வரும் என்பதை உங்களுக்கு அவர்கள் எச்சரிக்க வில்லையா?'' என்று அதன் காவலர்கள் கேட்பார்கள். அதற்கு அவர்கள் 'ஆம்' என்பார்கள். எனினும் (ஏகஇறைவனை) மறுப்போருக்கு வேதனை என்ற கட்டளை உறுதியாகி விட்டது.
அல்குர்ஆன் 39:71
நரகத்தை நோக்கி மக்கள் வீசி எறியப்படும் போதும் அவர்களிடம் மலக்குகள் கேட்கின்ற கேள்வி, உங்களிடம் தூதர் வரவில்லையா? என்பது தான்.
கோபத்தால் அது வெடித்திட முற்படும். ஒவ்வொரு கூட்டத்தினரும் அதில் போடப்படும் போதெல்லாம் "எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?'' என்று அதன் காவ லர்கள் அவர்களைக் கேட்பார்கள்.
அதற்கவர்கள் "ஆம்! எச்சரிப்பவர் எங்களிடம் வந்தார். ஆயினும் பொய் யெனக் கருதினோம். அல்லாஹ் எந்த ஒன்றையும் அருளியதில்லை. நீங்கள் பெரிய வழிகேட்டிலேயே இருக் கிறீர்கள் என்று கூறினோம்'' எனக் கூறுவார்கள்.
நாங்கள் செவிமடுத்திருந்தாலோ, விளங்கியிருந்தாலோ நரகவாசிகளில் ஆகியிருக்க மாட்டோம் எனவும் கூறுவார்கள்.
அல்குர்ஆன் 67:8-10
குற்றவாளிகள் நரகத்தில் நுழையும் போது, தங்களுக்கு அளிக்கப்படும் தண்டனை நியாயமானது தான் என்று உணர்த்துகின்ற, உரைக்கின்ற வகையில் இந்தக் கேள்விகளை மலக்குகள் அவர்களிடம் தொடுக்கின்றனர்.
இமாமின் எச்சரிக்கை வந்ததா? இந்தத் தலைவரின் அறிவுரை வந்ததா? அந்தப் பெரியாரின் போதனை வந்ததா? என்று மலக்குகள் கேட்கவில்லை. அல்லாஹ்வின் வசனங்கள் வந்தனவா? அவனுடைய வசனங்களை தூதர்கள் கொண்டு வரவில்லையா? என்று தான் மலக்குகள் கேட்கிறார்கள்.
இவை அனைத்தும் உணர்த்தும் விஷயங்கள் ஒன்றே ஒன்று தான். நாளை மறுமையில் ஆதாரமாக வந்து நிற்கப்போவது அல்லாஹ்வின் வேதமான வஹீ தான்.
கப்ர், மஹ்ஷர், நரக வாசல் என பல்வேறு பகுதிகளில் மலக்குகள் கேட்ட கேள்வியையும் அதற்கு மக்கள் அளித்த பதில்களையும் பார்த்தோம்.
நரகத்தில் அவர்கள் வேதனையில் உழன்று கொண்டிருக்கும் போது அவர்களின் புலம்பல்களைக் கொஞ்சம் காதில் கேட்போம்.
நரகத்தில் அவர்கள் தர்க்கம் செய்து கொள்ளும்போது "உங்களைத் தானே நாங்கள் பின்பற்றிக் கொண்டிருந்தோம். எனவே நரகத்திலிருந்து சிறிதளவை எங்களை விட்டும் தடுப்பவர்களாக இருக்கிறீர்களா?'' என்று பலவீனர்கள் பெருமையடித்தோரை நோக்கிக் கேட்பார்கள். "நாம் அனைவருமே இதில் தானே இருக்கிறோம். அல்லாஹ் அடியார்களிடையே தீர்ப்பு அளித்து விட்டானே'' என்று பெருமையடித்தோர் கூறுவார்கள்.
அல்குர்ஆன் 40:47, 48
தங்களுக்குள் புலம்பிக் கொண்டி ருக்கும் அவர்கள் மலக்குகளிடம் வேதனையைக் குறைக்கும்படி கெஞ்சுகின்றனர்.
"உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! இவ் வேதனையை ஒரே ஒரு நாள் அவன் இலேசாக்குவான்'' என்று நரகத்தில் கிடப்போர் நரகத்தின் காவலர்களிடம் கூறுவார்கள்.
"உங்களிடம் உங்கள் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வரவில்லையா?'' என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு இவர்கள் ''ஆம்'' என்று கூறுவார்கள். அப்படி யானால் நீங்களே பிரார்த்தியுங்கள்! என்று (நரகின் காவலர்கள்) கூறுவார்கள். (ஏகஇறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே முடியும்.
அல்குர்ஆன் 40:49, 50
இங்கும் உங்களிடம் நபித் தோழர்கள், இமாம்கள், பெரியார்களின் விளக்கங்கள் வரவில்லையா? என்று கேட்கவில்லை. உங்களிடம் உங்கள் தூதர்கள் தெளிவான சான்றைக் கொண்டு வரவில்லையா? என்று தான் மலக்குகள் கேட்கிறார்கள்.
அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் "நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப் பட்டிருக்கக் கூடாதா?'' எனக் கூறுவார்கள்.
"எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார் களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர்'' எனவும் கூறுவார்கள். "எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப் பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!'' (எனவும் கூறுவார்கள்.)
அல்குர்ஆன் 33:66-68
இந்த வசனங்களில் நரக   வாசிகள் தெளிவாகவே போட்டு உடைக்கின்றார்கள்.
இவை அனைத்தும் உணர்த்து கின்ற உண்மை, நாளை நம்மை நரகிலிருந்து காப்பது அல்லாஹ்வின் வேதம் என்ற வஹீ தான். அவனது தூதருக்கு அளித்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எனும் வஹீ தான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாüல் இறைநம்பிக்கை யாளர்கள் ஒன்று கூடி, "(நமக்கு ஏற்பட்டுள்ள துன்பங்கüலிருந்து நம்மைக் காக்கும்படி யார் மூலமாவது) நம் இறைவனிடம் நாம் மன்றாடினால் (எவ்வளவு நன்றாயிருக்கும்!)'' என்று (தங்கüடையே) பேசிக் கொள்வார்கள்.....
....(பல நபிமார்களிடம் சென்று விட்டுப் பின்னர்) அவர்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், "என்னுடைய இறைவனிடத்தில் அனுமதி கேட்பதற்காகச் செல்வேன். அப்போது (எனக்கு) அனுமதி வழங்கப்படும். என் இறைவனை நான் காணும்போது சஜ்தாவில் விழுவேன். தான் விரும்பியவரையில் (அப்படியே) என்னை அவன் விட்டு விடுவான். பிறகு, (இறைவனின் தரப்பிலிருந்து) "உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்; உங்க ளுக்குத் தரப்படும். சொல்லுங்கள்; செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்'' என்று சொல்லப்படும்.
அப்போது நான் எனது தலையை உயர்த்தி, இறைவன் எனக்குக் கற்றுத் தரும் புகழ் மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு அவர்களை நான் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன்.
பிறகு மீண்டும் நான் இறைவனிடம் செல்வேன். என் இறைவனைக் காணும்போது நான் முன்பு போலவே செய்வேன். பிறகு நான் பரிந்துரைப்பேன். அப்போதும் இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு, நான் அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன்.
பிறகு மூன்றாம் முறையாக (இறைவனிடம்) நான் செல்வேன். பிறகு நான்காம் முறையும் செல்வேன். (இறுதியாக) நான், "குர்ஆன் தடுத்துவிட்ட, நிரந்தர நரகம் கட்டாயமாகிவிட்டவர்(களான இறை மறுப்பாளர்கள், நயவஞ்சகர்)களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் மிஞ்சவில்லை'' என்று சொல்வேன்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
புகாரி 4476, 656, 7410, முஸ்லிம் 284
இந்த ஹதீஸ் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரையை விவரிக்கின்றது. குர்ஆன் தடை விதித்தவர்களைத் தவிர ஏனையவர்கள் நரகத்திலிருந்து காக்கப்படுகின்றனர்.
மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் தரக்கூடிய பாடமும் படிப்பினையும் என்ன?
நாளை நடுநாயகமாக, நடுவராக வந்து நிற்கப் போவதும் காக்கப் போவதும் குர்ஆன் என்ற வஹீ தான். அதற்கு விளக்கமாக அமைந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எனும் வஹீ தான்.
புறக்கணித்தவர்களை நரகத்தில் கொண்டு போய் கவிழ்க்கப் போவதும் இந்தக் குர்ஆன், ஹதீஸ் எனும் வஹீ தான்.
இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ தான். வஹீ என்பது இஸ்லாத்தின் உயிர்மூச்சும் அதன் பேச்சுமாகும். அதைத் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனது கொள்கையாகக் கொண்டிருக்கின்றது.
குர்ஆன் எனும் வஹீ இறங்கிய இம்மாதத்தில் மிகவும் பொருத்த மாகவே, "இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே!'' என்ற தலைப்பில் ஸஹர் நேரத்தில் உலகெங்கும் உள்ள மக்களை இந்தக் கொள்கையின்பால் அழைத்துக் கொண்டிருக்கின்றது.
நரகத்தை விட்டும் நம்மைக் காக்கின்ற இத்தூய கொள்கையின்பால் மக்களே வாரீர்! வாரீர்! என்று இம்மாதத்தில் ஏகத்துவமும் தன் பங்குக்கு அழைப்பு விடுக்கின்றது.

EGATHUVAM JUL 2016