Mar 2, 2017

அல்குர்ஆனை மறுக்கும் ஆலிம்கள் கூட்டம் - JUL 2015

அல்குர்ஆனை மறுக்கும் ஆலிம்கள் கூட்டம்
ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.
அருள்மிகு ரமலான் மாதம் இது! இந்த மாதம் முழுவதும் நோன்பு நோற்பதன் மூலம் மக்கள் குர்ஆனின் பக்கம் ஈர்க்கப்படுகின்றனர்.  இது உலகம் முழுவதும் இறைவன் செய்திருக்கின்ற சிறந்த ஏற்பாடாகும். இன்னும் சொல்லப்போனால் ஒரு மாத காலம் அல்லாஹ் நடத்துகின்ற அகில உலக திருக்குர்ஆன் மாநாடாகும்.
அப்படிப்பட்ட திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதத்தில் மார்க்கத்தின் காவலர்கள், மாநபியின் வாரிசுகள், அல்குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்கள் என்று பறை சாற்றுகின்ற, ஆலிம்கள் என்று மார்தட்டுகின்ற இந்த மவ்லானா மவ்லவிகள் குர்ஆனுக்கு நேர் முரணான பாதையில் பயணம் செய்கின்றார்கள்.  இதைப் படம் பிடித்துக் காட்டுவ தற்காக இந்த ஆக்கம் ஏகத்துவ இதழில் அளிக்கப்படுகின்றது.
இவர்கள் தங்களை தீனைக் காக்கின்ற தூண்களாக சித்தரிக் கின்றார்கள். அதோடு நின்றால் பரவாயில்லை. கடவுள் கொள்கை முதல் இஸ்லாத்தின் ஒவ்வொரு வணக்க வழிபாடு வரை உள்ள அனைத்து விஷயங்களிலும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நடக்கின்ற தவ்ஹீது ஜமாஅத்தினர் மீது  வழி கெட்டவர்கள் என்ற முத்திரையைக் குத்தி, சத்தியத்தின் பக்கம் மக்கள் வருவதைத் தடுக்கலாம் என்று கருதுகின்றனர்.
அதனால் இவர்கள் யார்? என்பதை அடையாளம் காட்டுவது காலத்தின் கட்டாயமாகின்றது. அதிலும் குறிப்பாக குர்ஆன் பெயரைச் சொல்லி ஏமாற்றும் இவர்களை அந்தக் குர்ஆன் இறங்கிய இம்மாதத்தில் அடையாளம் காட்டுவது பொருத்தமாக அமையும் என்ற அடிப்படையில் இக்கட்டுரையை இடம் பெறச் செய்கிறோம்.
மத்ஹபுவாதிகள் ஒரு புறம் நம்மை ஹதீஸ் மறுப்பாளர்கள் என்று பொய்யாக விமர்சித்துக் கொண்டே பகிரங்கமாக எண்ணற்ற ஹதீஸ்களை அவர்கள் மறுத்துக் கொண்டிருக் கிறார்கள். அவற்றை நமது முந்தைய இதழ்களில் தனிக்கட்டுரையாக விளக்கி உள்ளோம். அதுமட்டுமின்றி அவர்கள் திருமறைக் குர்ஆனின் பல்வேறு வசனங்களையும் மறுக்கிறார்கள்.
வணக்க வழிபாடு மற்றும் கொள்கை தொடர்பாகக் குர்ஆன் கூறும் கணக்கற்ற போதனைகளைத் தெரிந்து கொண்டே, அதற்கு மாற்றமாக நடப்பதன் மூலம் குர்ஆனிய வசனங்களை மறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் என்னென்ன இறை வசனங்களை மறுக்கின்றார்கள் என்ற விபரத்தை முழுமையாகக் காண்போம்.
உரத்த சப்தமின்றி திக்ர்
திக்ர் எனும் இறைவனை நினைவு கூர்வது, மிகச் சிறந்த வணக்கமாகும். அவ்வணக்கத்தை அதிகமாகச் செய்ய வேண்டும் என்று திருக்குர்ஆன் வலியுறுத்துவதுடன் அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும் கற்றுத்தருகிறது.
உரத்த சப்தமின்றி, மெதுவாக, இரகசியமாக,  பணிவுடன் இறைவனை திக்ர் செய்ய வேண்டும் என்பதே இறைவனை நினைவு கூரும் முறையாகும். இதைப் பின்வரும் வசனத்திலிருந்து அறியலாம்.
உமது இறைவனைக் காலை யிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்!
திருக்குர்ஆன் 7:205
இந்த இறை வசனத்தை மறுக்கும் வகையில் மத்ஹபுவாதிகள் திக்ர் (?) செய்கிறார்களா? இல்லையா?
ராத்திபு என்றும் ஹல்கா என்றும் பல பெயர்கள் இட்டுக் கொண்டு திக்ர் மஜ்லிஸ் நடத்துகின்றார்கள். அதில் இறைவன் கூறும் இந்த ஒழுங்கைப் பேணுவதில்லை. மைக் செட் போட்டு, கூட்டமாக சப்தமிட்டு கும்மாளமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பணிவுடன் திக்ர் செய்யுமாறு இறைவசனம் கூறியிருக்க, இவர்கள் ஆட்டம் பாட்டத்துடன் திக்ர் (?) செய்கிறார்கள்.
இவர்களது இந்தச் செயல் இறைவசனத்திற்கு எதிரானது என்பதை அறிந்து கொண்டும் தங்கள் முன்னோர்களைப் பின்பற்றும் விதமாகவும் மனோ இச்சையைப் பின்பற்றும் விதமாகவும் மேற்கண்ட இறை வசனத்தைப் பகிரங்கமாக மறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அல்லாஹ்வின் அழகான பெயர்கள்
அவ்வாறு திக்ர் செய்யும் போது இன்னுமொரு பாவத்தையும் செய்கிறார்கள்.
இறைவனைப் போற்றிப் புகழ்வதாக இருந்தால் அல்லாஹ் தன்னை எவ்வாறெல்லாம் புகழ்ந்துள் ளானோ, என்னென்ன பெயர்களைச் சூட்டியுள்ளானோ அவற்றைச் சொல்லி இறைவனின் புகழ்பாடலாம்.
இறைத்தூதர் கற்றுத்தந்த பிரகாரம் இறைவனது பெருமைகளை எடுத்துக் கூறி இறைவனைப் பெருமைப் படுத்தலாம். அதை விடுத்து இவர்கள் செய்யும் ஈனச் செயல் என்ன தெரியுமா?
இறைவனை திக்ர் செய்கிறோம் என்ற பெயரில் அல்லாஹ்வின் அழகான பெயர்களைச் சுருக்கி, திரித்துக் கொண்டு இறைவனின் கோபத்திற்கு ஆளாகிறார்கள்.
அல்லாஹூ என்பதை "ஹூஹூ' "ஹூஹூ' என்றும் "அஹ்' என்றும் இறைவனின் பெயரைச் சிதைத்துக் கூறுகிறார்கள். இதுமட்டுமின்றி ஹக் தூ ஹக் என்றும் இன்னும் பல்வேறு அர்த்தம் இல்லா புது வார்த்தைகளை இவர்களாக உருவாக்கி திக்ர் என்ற பெயரில் செய்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் இறையருள் நிறைந்த இந்த ரமலான் மாதத்திலும் கூட இறை சாபத்தைப் பெற்றுத்தரும் இக்காரியத்தில் ஈடுபடுகின்றனர்.
இவர்களது இந்தச் செயல் பின்வரும் வசனத்தை நேரடியாக மறுக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவர்கள் செய்து வந்ததற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். 
திருக்குர்ஆன் 7:180
அல்லாஹ்வின் அழகான பெயர்களை சுருக்கிக் கூறி இந்த வசனத்தை மறுப்பதோடு இறைவனின் கடும் தண்டனைக்கும் ஆளாகிறார்கள் என்பதையும் தெளிவாக அறியலாம்.
எக்ஸ்பிரஸ் கிராஅத்
திருக்குர்ஆன் அருளப்பட்ட, அல்லாஹ்வின் அருள் நிறைந்த ரமலான் மாதத்திலும் கூட இவர்களது குர்ஆன் வசனங்களை மறுக்கும் போக்கு மாறுவதில்லை. மாறாக தொடரவே செய்கிறது.
குர்ஆனைத் திருத்தமாக ஓதுவீராக!
திருக்குர்ஆன் 73:4
திருக்குர்ஆன் வசனங்களை நிறுத்தி, நிதானமாக, திருத்தமாக ஓத வேண்டும் என்று இவ்வசனத்தின் வாயிலாக அல்லாஹ் கட்டளை இடுகிறான்.
எல்லா நிலையிலும் குர்ஆன் என்பது திருத்தமாக ஓதப்பட வேண்டும். குறிப்பாக தொழுகையில் மிக அழகான முறையில் ஓதப்பட வேண்டும்.
ஆனால் இவர்கள் ரமலானில் இரவுத் தொழுகையின் போது குர்ஆன் வசனங்களை என்ன பாடு படுத்துகிறார்கள்?
ரமலான் மாத இரவுத் தொழுகை யின் போது முழுக்குர்ஆனையும் ஓதி முடிக்க  வேண்டும் என்று மார்க்கம் கூறாத சட்டத்தை இவர்களாக இயற்றிக் கொண்டு அதற்காக இவர்கள் செய்யும் காரியம் என்ன?
பிஸ்மில்லாஹிர் ,,,,,,, மாலிகி யவ்மி ,,,,,,,, வலழ் ழாள்ளீன்,,,,,
இவ்வாறு பாத்திஹா அத்தியா யத்தை ஓதும் போது மூன்றே மூன்று வார்த்தைகள் மட்டுமே மக்களுக்குப் புரியும். எவ்வளவு தான் கவனத்தைக் குவித்து கேட்டாலும் ஏனைய வார்த்தைகள் புரியாத வகையில் படுவேகமாகக் குர்ஆன் வசனங்களை ஓதுகிறார்கள்.
வேகம் என்றால் அப்படியொரு வேகம். ஒரு எழுத்துக்கூட தெளிவாக உச்சரிப்பதில்லை. 23 ரக்அத்களை 30 நிமிடத்தில் முடிக்கிறார்கள் என்றால் என்னவொரு வேகம் என்பதை கணித்துக் கொள்ளுங்கள்.
இதுதான் குர்ஆனைக் கண்ணியப் படுத்தும் செயலா?
குர்ஆனுக்கு போலியான மதிப்பளிப்பதில் இவர்களை விஞ்ச ஆளில்லை. குர்ஆனைத் தொட்டு முத்தமிடுவதென்ன? அதைத் தரையில் வைக்கக் கூடாது என்று கூறி உயரமான இடத்தில் வைப்பதென்ன?  கால் படக்கூடாது, கை படக்கூடாது என இவ்வாறெல்லாம் வெற்று மரியாதைகளுக்கு ஒன்றும் குறைச்சலில்லை.
ஆனால் உண்மையில் குர்ஆனை எவ்வாறு மதிக்க வேண்டுமோ அவ்வாறு மதிப்பதில்லை.
குர்ஆனை மதிப்பது என்பது அதை அல்லாஹ் சொன்ன விதத்தில் நிறுத்தி நிதானமாக ஒதுவதிலும் குர்ஆன் கூறும் போதனைகளின் படி நடந்து கொள்வதிலும் தான் இருக்கின்றது. அந்த வகையில் இவர்கள் குர்ஆனை அவமதிக்கவே செய்கிறார்கள். நிதானமாக ஓத வேண்டும் என்று கூறும் வசனங்களை மறுக்கவே செய்கிறார்கள்.
மஹர் எனும் மணக்கொடை
இஸ்லாம் கூறும் திருமணத்தின் முக்கியமான அம்சம் மஹர் வழங்குவதாகும்.
திருமணம் முடிக்கும் ஆண், தான் மணக்கவிருக்கும் பெண்ணுக்கு மஹராக ஒரு தொகையை வழங்குவதே திருமணத்தின் மிக முக்கியமான நிகழ்வாகும். ஆண்கள் தாங்கள் திருமணம் செய்யவிருக்கும் பெண்களுக்கு மஹர் வழங்குவதை திருக்குர்ஆன் கட்டாயம் என்கிறது.
பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!
திருக்குர்ஆன் 4:4
மஹர் வழங்குவதைப் பற்றி திருக்குர்ஆன் பல இடங்களில் பேசுகிறது.
எனது பெண்ணை உனக்குத் திருமணம் செய்து வைப்பதாக இருந்தால் எட்டு ஆண்டுகள் என்னிடத்தில் கூலி வேலை செய்ய வேண்டும் (அதுவே நீர் கொடுக்கும் மஹர்) என்பதாக ஒரு பெரியவர் நிபந்தனை விதிக்க அதை மூஸா நபியவர்கள் ஏற்றுக் கொண்டு திருமணம் செய்தார்கள். அந்தத் தவணையையும் நிறைவேற்றினார்கள் என்ற வரலாற்று நிகழ்வை திருக்குர்ஆன் கூறுகிறது.
"எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படை யில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மணமுடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச் சேர்ந்தது. நான் உமக்குச் சிரமம் தர விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர்'' என்று அவர் கூறினார்.
திருக்குர்ஆன் 28:27
இதிலிருந்து திருமணத்தையொட்டி பெண்ணிடம் நகையாக, தொகையாக வரதட்சணை பெறுவது இஸ்லாமியக் கலாச்சாரம் அல்ல. இயன்றதை பெண்ணுக்கு மஹராக வழங்கி திருமணம் முடிப்பதே இஸ்லாமியக் கலாச்சாரம் என்பதை அறியலாம்.
ஆதரவற்ற அனாதைப் பெண்களை மணம் முடிப்பதால் இருந்தால் கூட கட்டயமாக மஹர் தொகை வழங்கப்பட வேண்டும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
பெண்கள் பற்றி அவர்கள் (முஹம்மதே!) உம்மிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்கின்றனர். "அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறான்'' எனக் கூறுவீராக! அநாதைப் பெண்களுக்கு கடமை யாக்கப்பட்டதைக் கொடுக்காமல் அவர்களை மணந்து கொள்ள நீங்கள் விரும்பியது பற்றியும், பலவீன மானவர்களான சிறுவர்கள் பற்றியும், அனாதைகளை நீங்கள் நியாயமாக நிர்வகிக்க வேண்டும் என்பது பற்றியும் இவ்வேதத்தில் (ஏற்கனவே) உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிபவனாக இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:127
திருமணம் முடிப்பதாக இருந்தால் அவர்களுக்குரிய மஹர் தொகையை வழங்கி விட்டுத் திருமணம் செய்யுங்கள் என்று 5வது அத்தியாயம், வசனம் 5ல் சொல்லப்பட்டுள்ளது.
நபியே நீங்கள் யாருக்கு மஹர் கொடுத்தீர்களோ அந்தப் பெண்களை உங்களுக்கு நாம் திருமணம் முடிக்க அனுமதித்துள்ளோம் என்று 33வது அத்தியாயம் வசனம் 50ல் சொல்லப்பட்டுள்ளது.
இவ்வாறு மஹர் கொடுப்பதை வலியுறுத்தியும் மஹர் தொடர்பான இதர செய்திகளையும் தாங்கியதாக பல வசனங்கள் திருக்குர்ஆனில் உள்ளன.
அத்தகைய அத்தனை வசனங் களையும் மறுக்கும் வகையில் இந்த ஆலிம்கள் கூட்டம் செயல்படுகின்றது.
திருமணத்தின் போது ஆண், பெண்ணுக்கு மஹர் கொடுப்பதற்குப் பதிலாக பெண்ணிடமிருந்து வரதட்சணையாக நகை, தொகை பொருள்கள் என பலவற்றையும் கேட்டுப் பெறுகிறார்கள். குர்ஆன் வசனத்தை மறுக்கும் இச்செயலுக்கு ஆலிம்கள் துணை நிற்கிறார்கள். தலைமை தாங்குகிறார்கள்.
மஹர் கொடுப்பதை வலியுறுத்தி இறைமறை வசனங்கள் எவ்வளவோ இருப்பதை அறிந்தும் வரதட்சணை பெறுகிறார்கள்; அதை ஆதரிக்கிறார்கள்; அதற்காகப் பிரார்த்தனை (?) வேறு செய்கிறார்கள் எனில் இது குர்ஆன் வசனங்களை மறுக்கும் செயல் அல்லவா?
இந்த இலட்சணத்தில் மண மக்களுக்காக துஆ செய்யும் போது மட்டும் மூஸா (அலை) மற்றும் அவர்களது மனைவி வாழ்ந்ததைப் போன்று இவர்கள் வாழ வேண்டும் என்று துஆச் செய்வார்களாம்.
ஆனால் மூஸா (அலை) அவர்கள் தன்னிடம் எதுவும் இல்லாத போதும் எட்டு ஆண்டுகள் வேலை செய்வதை மஹராகக் கொடுத்தாரே அதைப் பின்பற்றும் வகையில் மஹர் வழங்க மாட்டார்களாம்?
இதிலிருந்து இவர்களுக்குக் குர்ஆனிய போதனைகள் ஒரு பொருட்டல்ல! மாறாக தங்கள் முன்னோர்கள் எத்தகைய பாதையை காட்டித் தந்தார்களோ அது குர்ஆனுக்கு முரணான பாதையாக, பயணமாக இருந்தாலும் அதைப் பின்பற்றுவது தான் இவர்களது குறிக்கோள் என்பதை அறியலாம்.
இரண்டு சாட்சிகள்
திருமணம் என்றதும் அது தொடர்பான பிற விஷயங்கள் நம் நினைவிற்கு வருகின்றது. ஆம் இவர்கள் ஏதோ மஹர் தொடர்புடைய வசனங்களை மட்டும் மறுக்கவில்லை. மாறாக திருமணம் தொடர்பில் இன்னும் பல குர்ஆன் வசனங்களை மறுக்கின்றார்கள்.
திருமணத்திற்கு மஹர் அவசியம் என்று திருக்குர்ஆன் கூறியதைப் போன்று திருமண ஒப்பந்தத்தை முறிப்பதாக இருந்தால் இரண்டு சாட்சிகள் அவசியம் என்றும் கூறுகிறது.
அவர்கள் தமக்குரிய தவணையை அடையும்போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் அவர்களைப் பிரிந்து விடுங்கள்! உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்காக சாட்சியத்தை நிலைநாட்டுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறே அறிவுரை கூறப்படுகிறது. அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான்.
திருக்குர்ஆன் 65:2
விவாகரத்திற்கு நேர்மையான இரண்டு சாட்சிகள் அவசியம் என்று இவ்வசனம் கூறுகிறது.
இன்றைக்கு இந்த வசனத்தை மறுக்கும் வகையில் ஆலிம்கள் கூட்டம் மார்க்கத் தீர்ப்பு அளிக்கின்றார்கள்.
கடிதம் மூலம் தலாக், தொலைபேசி மூலம் தலாக் என்று பல வகையான மார்க்கத்திற்கு எதிரான தலாக் முறைகளை பல ஆலிம்கள் சரிகாண்கிறார்கள்.
தலாக்கிற்கு இரண்டு சாட்சிகள் அவசியம் என்று இறைவசனம் சொல்லியிருக்க மேற்கண்ட முறையிலான தலாக்குகளில் அந்த இரண்டு சாட்சிகள் பேணப்பட்டதா?
சாட்சிகள் என்றால் யார்? கணவன், மனைவி  ஆகிய இருவருக்கு மிடையில் விவகாரத்து நடை பெறுவதை நேரடியாகக் கண்ணால் காண்பவரே சாட்சியாக இருக்க முடியும்.
கடிதத்திலோ, தொலைபேசியிலோ தலாக் கூறும் போது கணவன் மனைவியைக் கண்ணால் காண இயலுமா?  பிறகு எப்படி சாட்சிகள் என்று கூற முடியும்?
இதில் மற்றுமொரு வேதனை வெளிநாட்டில் இருந்து கொண்டு வீடியோ கால் மூலம் தலாக் சொல்கிறார்களாம். இதையும் இந்த ஆலிம்கள் கூட்டம் ஆம் சரிதான் தலாக் செல்லும் என்று தலையாட்டுகிறது.
வீடியோ கால் மூலம் தலாக் சொல்வதில் பல நடைமுறைச் சிக்கல் இருக்கிறது.
பின்னாளில் வீடியோவில் பேசியது நானில்லை என்று யாரும் மறுக்க இயலும்.
நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அதிலும் தில்லு முல்லுகளை செய்ய இயலும். அவ்வளவு ஏன்? மறைவில் இருந்து கொண்டு சிலர் மிரட்டி தலாக் விடுமாறு நிர்ப்பந்திக்க இயலும்? இதுவெல்லாம் வீடியோவில் தெரியுமா?
இப்படிப் பல குளறுபடிகள் இருப்பதாலும் திருமணத்திற்குப் பிறகுள்ள ஜீவனாம்சம் உள்ளிட்ட விவகாரங்களைப் பெற்றுத்தருவது போன்ற விஷயங்கள் அடங்கி யிருப்பதாலும் ஜமாஅத்தின் முன்னிலையிலே விவகாரத்து அளிக்கப்பட வேண்டும். அப்போது இரண்டு சாட்சிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இப்படி திருக்குர்ஆன் பெண்களின் வாழ்க்கைக்கு பாதுகாப் பளிக்கும் விவாகரத்து முறையைக் கற்பித்துத் தந்திருக்கும் நிலையில் இவ்வசனத்தை மறுக்கும் வகையில் ஆலிம்கள் கூட்டம் பல தவறான விவகாரத்துகளை சரிகாண்கிறது.
கடிதம், மொபைல், வீடியோ கால் ஆகியவகளின் மூலம் தலாக் சொல்வதும் அதை ஆதரிப்பதும் திருக்குர்ஆன் வசனத்தை மறுக்கும் செயலேயாகும் என்பதை அழுத்த மாகப் பதிவு செய்து கொள்கிறோம்.
ஜீவனாம்சம்
போலி மதகுருமார்களாலும் மத்ஹபினராலும் மறுக்கப்படும் மற்றுமொரு இறைவசனம் ஜீவனாம்சம் தொடர்புடைய வசனமாகும்.
விவாகரத்து செய்தவர்களால் விவகாரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு ஜீவனாம்சம் அளிக்கப்பட வேண்டும் என்று திருக்குர்ஆன் பல இடங்களில் வலியுறுத்துகிறது.
விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண்டும். (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை.
(திருக்குர்ஆன் 2:241)
உடலுறவு கொள்ளாத நிலையில் விவாகரத்து செய்தால் அப்பெண் களுக்கு இத்தா இல்லை என்றாலும் ஜீவனாம்சம் அளிக்கப்பட வேண்டும் என்று குர்ஆன் கூறுகிறது.
அவர்களைத் தீண்டாத நிலையிலோ, அவர்களுக்கென மஹர் தொகையை முடிவு செய்யாத நிலையிலோ விவாகரத்துச் செய்வது உங்களுக்குக் குற்றமில்லை. வசதி உள்ளவர் தமக்குத் தக்கவாறும், ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள்! இது நன்மை செய்வோர் மீது கடமை.
திருக்குர்ஆன் 2:236
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் நம்பிக்கை கொண்ட பெண்களை மணந்து அவர்களைத் தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்து விட்டால் உங்களுக்காக அவர்கள் அனுசரிக்கும் இத்தா ஏதுமில்லை. அவர்களுக்கு வாழ்க்கை வசதி அளியுங்கள். அழகிய முறையில் அவர்களை விட்டு விடுங்கள்!
திருக்குர்ஆன் 33:49
விவகாரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு வாழ்வாதார வசதியை அவரவர் சக்திக்கு ஏற்ப செய்து கொடுக்க வேண்டும் என்று மேற்கண்ட இறைவசனங்கள் எடுத்தியம்புகின்றன.
வாழ்வாதார வசதி என்றால் தற்போது நடைமுறையில் பெண் களுக்கு அநீதியிழைக்கும் வகையில் உள்ள மாதாந்திர ஜீவானம்சம் அன்று. அதை இஸ்லாம் வரவேற்கவில்லை. மாறாக விவகாரத்துச் செய்யும் போது அவளின் வாழ்க்கைக்கு உதவும் வகையில் யாரிடத்திலும் அவள் உதவியை எதிர்பார்க்காத வகையில் ஒரு பெரும் தொகையை ஜீவனாம்சமாக அளிக்க வேண்டும்.
இதைத் தான் திருமறைக்குர்ஆன்  அல்லாஹ்வை அஞ்சுவோர் மீது கடமை, நன்மை செய்வோர் மீது கடமை என்றெல்லாம் கூறி பல இடங்களில் வலியுறுத்துகின்றது.
திருக்குர்ஆன் கூறும் இச்சட்டத்தை காபிர்கள் மறுத்தால் அதுவேறு. திருக்குர்ஆனை இறைவேதமாக ஏற்றுக் கொண்டதாகச் சொல்லும் முஸ்லிம்கள் குறிப்பாக குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்கள், ஆலிம்கள் இதை மறுக்கலாமா?
ஆனால் ஆலிம்கள் தான் இதை மறுத்து, விவகாரத்து செய்யப் பட்டவளுக்கு ஜீவனாம்சம் எதுவும் வழங்கப்பட வேண்டியதில்லை என்று மனமுரண்டாக தத்துவம் பேசி குர்ஆன் வசனத்தை மறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு ஆண், பெண்ணை விவாகரத்துச் செய்வதால் அவள் பல இழப்புகளுக்கு ஆளாகிறாள். அவள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறாள். அதுவும் விவாகரத்து செய்யப்பட்டவளுக்கு எந்தப் பொறுப்பாளரும் இல்லை எனில் அவள் நிலை பரிதாபத்திற்குரியது. அதை ஓரளவு சரிகட்டும் விதமாக அல்லாஹ் இந்த ஜீவனாம்ச உரிமையை பெண்களுக்கு வழங்கி நியாயத்தை, நீதியை நிலை நாட்டியுள்ளான்.
இறைவனின் நீதியில் குறைகாணும் வகையில் ஜீவனாம்சம் எதுவும் வழங்கப்பட வேண்டியதில்லை என்று இந்த ஆலிம்கள் கூறுகிறார்கள் எனில் இவர்கள் உண்மையில் ஆலிம்கள் தானா?
இன்னும் சில ஆலிம்களோ இத்தா காலத்தில் சில உதவிகளைச் செய்வது பற்றியே இந்த வசனங்கள் பேசுகிறது என்று முரண் வாதம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இத்தா அனுசரிக்க தேவையில்லாத, உடலுறவு கொள்ளாத பெண்களுக்கும் வாழ்வாதார வசதி அளிக்கப்பட வேண்டும் என்று இறைவன் கூறியதை இவர்கள் மறந்து விட்டு இத்தகைய வாதத்தை வைக்கின்றார்கள்.
மேலும் அல்லாஹ் அழகிய முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண்டும் என்று சொன்னது ஒருத்தியைத் திருமணம் செய்து அவளை அனுபவித்து விட்டு வெறும் மூன்று மாதம் சிறு சிறு உதவிகளை செய்வது பற்றியா? இது தான் அழகிய முறையா?
குர்ஆன் பெண்களுக்கு வழங்கிய ஜீவனாம்ச உரிமையை இத்தகைய ஆலிம்களே நடைமுறையில் இல்லாமல் ஆக்கி விட்டார்கள். இதன் மூலம் ஜீவனாம்சம் குறித்த பல இறை வசனங்களை மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். தவ்ஹீத் ஜமாஅத் தான் இதற்காகக் குரல் கொடுப்பதுடன் நடைமுறைப்படுத்திக் கொண்டும் இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.
களாத் தொழுகை
களாத் தொழுகை உண்டு என்று கூறுவதன் மூலமும் குர்ஆன் வசனங்களை இந்த ஆலிம்கள் மறுக்கிறார்கள்.
ஏனெனில் தொழுகை என்பது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகும்.
நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.
திருக்குர்ஆன் 4:103
ஒவ்வொரு தொழுகைக்கும் ஆரம்ப நேரம், முடிவு  நேரம் என்று உண்டு. தொழுகைகளை அதற்குரிய நேரத்திற்குள்ளாக நிறைவேற்றிட வேண்டும்.
இதையே அல்லாஹ் நேரம் குறிக்கப்பட்ட கடமை என்று கூறி குறித்த நேரத்தில் குறித்த தொழுகை களை நிறைவேற்றுவதை முஸ்லிம்கள் மீது கடமையாக்கியுள்ளான்.
தூக்கம், மறதி, பயணம் போன்ற காரணங்களால் மட்டுமே தொழுகை களை அதன் நேரத்தை விட்டும் பிற்படுத்தித் தொழலாம். (புகாரி 597, முஸ்லிம் 1316)
இதல்லாமல் ஒரு தொழுகையை அதற்குரிய நேரத்தை விட்டும் பிற்படுத்தி  களாவாக தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.
ஆனால் இந்த ஆலிம்கள் களாத் தொழுகை உண்டு என்று மக்களை வழிகெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாகவே தொழுகைகளை அதற்குரிய நேரத்தை விட்டும் பிற்படுத்தித் தொழலாம் என்று குர்ஆனுக்கு எதிரான கருத்தை தெளிவாகக் கூறுகின்றனர். மக்களும் இவர்கள் சொல்வதை உண்மையென நம்பி பல தொழுகைகளை சாதாரணமாக களாவாகத் தொழுது கொண்டிருக்கின்றார்கள்.
உரிய காரணமின்றி தொழுகையை விட்டு விட்டால் அதற்குரிய பரிகாரமாக மன்னிப்புக் கேட்டு, திருந்துவதைத் தான் அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான். களாச் செய்வதை அல்லாஹ் குறிப்பிடவில்லை.
அவர்களுக்குப் பின்னர் வழித் தோன்றல்கள் வந்தனர். அவர்கள் தொழுகையைப் பாழாக்கினர். மனோ இச்சைகளைப் பின்பற்றினர். அவர்கள் நரகத்தைச் சந்திப்பார்கள். திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்கள் சொர்க் கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 19:59, 60
தொழுகையை பாழாக்கியவர்களைப் பற்றி இவ்வசனத்தில் பேசும் இறைவன், அவர்கள் திருந்தி பாவமன்னிப்புக் கேட்டு வாழ வேண்டும் என்கிறானே தவிர களாச் செய்ய வேண்டும் என்று கூறவில்லை. எனவே மார்க்கம் அனுமதித்த காரணங்கள் தவிர வேறு எதற்காகவும் தொழுகைகளை அதற்குரிய நேரத்தை விட்டும் பிற்படுத்தித் தொழலாகாது.
இந்தக் கருத்தைத் தரும் மேற்கண்ட வசனங்களை மறுத்து களாத் தொழுகை உண்டு என்று கூறி மக்களை வழிகெடுக்கும் போலி மதகுருமார்களை என்னவென்பது?
இதிலிருந்து இவர்கள் தெளிவாக குர்ஆனை மறுப்பவர்கள் என்பதை விளங்கலாம்.
முத்தலாக்
இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டுவிடலாம்.
திருக்குர்ஆன் 2:229
திரும்ப அழைத்துக் கொள்ளும் படியான விவாகரத்து செய்வதை பற்றி அல்லாஹ் கூறும் போது இரண்டு தடவைகளே என்கிறான். அப்படி யென்றால் இரண்டு நேரங்களில் சொல்லும் வகையிலான இரண்டு வாய்ப்புகள் என்று பொருள்.
இதன் மூலம் ஒரு நேரத்தில் ஒரு தலாக் தான் சொல்ல முடியும் என்ற கருத்தை இந்த இறைவசனம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
முதல் வாய்ப்பில் தலாக் சொல்லி குறிப்பிட்ட காலத்திற்குள் திரும்ப அழைக்க விரும்பினால் அழைத்துக் கொள்ளலாம்.
இரண்டாம் வாய்ப்பிலும் தலாக் சொல்லி விட்டால் இத்தா காலத்திற்குள் திரும்ப அழைத்துக் கொள்ளலாம். ஆனால் இறுதி வாய்ப்பான மூன்றாம் வாய்ப்பில் தலாக் சொல்லி விட்டால் திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமை கிடையாது.
மூன்றாம் தலாக்கைச் சொன்ன பிறகு திரும்ப இருவரும் இணைவதாக இருந்தால் அவள் இன்னொருவனைத் திருமணம் செய்து அவனுக்கு வழங்கப்பட்ட மூன்று வாய்ப்புகளையும் பயன்படுத்தி விவகாரத்து செய்தால் மட்டுமே சாத்தியமாகும்.
தலாக் தலாக் தலாக் என்று மூன்று முறை ஒரே நேரத்தில் சொல்லி விட்டால் அப்போதே மூன்று தலாக் நிகழ்ந்து விடும் என்று தவறான நம்பிக்கை உள்ளது. இந்நடைமுறை முழுக்க முழுக்க மேற்கண்ட குர்ஆன் வசனத்திற்கு எதிரானதாகும்.
"தலாக் என்பது இரண்டு தடவைகளே' என்று கூறுவதன் மூலம் ஒரு நேரத்தில் ஒரு தலாக் தான் சொல்ல இயலும் என்பதை அல்லாஹ் இவ்வசனத்தில் தெரிவித்து விட்டான். இவ்வசனத்தை மறுக்கும் வகையில் இவர்கள் முத்தலாக் சட்டத்தை அமல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பெண்களின் வாழ்க்கையைப் பாழாக்கி கொண்டிருக்கிறார்கள்.
குர்ஆனைக் கற்றறிந்த ஆலிம்கள் என்போரும் குர்ஆனுக்கு எதிரான முத்தலாக்கை ஆதரிக்கிறார்கள் எனும் போது இவர்கள் குர்ஆனைப் பின்பற்றுபவர்கள் அல்ல, தங்கள் மனோ இச்சையைப் பின்பற்றுபவர்கள் என்பது தெளிவு.
பள்ளியில் தொழத் தடை
மனோஇச்சை வாதிகள் மறுக்கும் மற்றுமொரு இறைவசனம் இதோ:
அல்லாஹ்வின் பள்ளிவாசல் களில் அவனது பெயர் கூறப் படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.
திருக்குர்ஆன் 2:114
எந்தக் காரணத்துக்காகவும், முஸ்லிம்களில் எவரையும் பள்ளி வாசலுக்கு வராதே என்று தடுப்பது கூடாது; அது மிகப்பெரும் பாவமாகும் என்று இவ்வசனம் தெரிவிக்கின்றது.
பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கு உரியன; அங்கே இன்ன ஆள் வரலாம், இன்ன ஆள் வரக்கூடாது என்று சட்டம் இயற்றும் அதிகாரம் எவருக்கும் கிடையாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்ப கால கட்டத்தில் கஅபாவில் தொழ அனுமதி மறுக்கப்பட்ட போது அல்லாஹ் கடும் கோபம் கொண்டு பின்வரும் வசனங்களை இறக்கி தனது கண்டங்களைப் பதிவு செய்கிறான்.
தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா? அவர் நேர்வழியில் இருப்பதையும், அல்லது இறையச்சத்தை ஏவுவதையும் அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா? அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? அவ்வாறில்லை! அவன் விலகா விட்டால் முன் நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்த, பொய் கூறிய முன் நெற்றி. அவன் தனது சபையோரை அழைக்கட்டும். நாம் நரகின் காவலர்களை அழைப்போம்.
திருக்குர்ஆன் 96:9-18
எனவே பள்ளிக்குள் தொழ வருபவர்களை, அல்லாஹ்வின் பெயரை நினைவு கூர வருபவர்களைத் தடுப்பது இறைவனின் கடும் கோபத்தைப் பெற்றுத் தரும் செயலாகும்.
ஆனால் இந்தப் போலி மதகுருமார்கள், ஆலிம்கள் கூட்டம் மக்கா இணை வைப்பாளர்கள் போன்று பள்ளியில் தொழ வருபவர்களைத் தடுக்கும் செயலில் ஈடுபடுகிறார்கள்.
தொப்பி போடாமல் தொழ அனுமதியில்லை
மத்ஹபைப் பின்பற்றாதவர்கள் தொழ அனுமதியில்லை
விரலை ஆட்டி தொழுபவர்களுக்கு இங்கே தொழ அனுமதியில்லை
இரண்டாம் ஜமாஅத் நடத்த அனுமதி இல்லை என்றெல்லாம் இன்றும் பல ஊர்களில் போர்டுகள் வைத்து, தொழுபவர்களைத் தடுக்கும் பாவ காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஓர் இறைமறுப்பாளர் தொழ பள்ளிக்குள் வருகிறான் எனில் அவனையே தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. அப்படியிருக்க நபிகள் நாயகத்தைப் பின்பற்றி முறையாகத் தொழுபவர்களுக்கு பள்ளியில் தொழ அனுமதியில்லை என்று இவர்கள் கூறுவார்களேயானால், தொழ வருபவர்களைத் தடுப்பார்களே யானால் குர்ஆனின் வசனங்களை மறுப்பதில் இவர்களை மிஞ்ச ஆளில்லை என்பதையும் இவர்கள் தான் கடைந்தெடுத்த குர்ஆன் மறுப்பாளர்கள் என்பதையும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
நபியை அழைத்தல்
மேலே நாம் பட்டியலிட்ட புனித இறை வசனங்களை மறுக்கும் குர்ஆன் மறுப்பாளர்கள் இன்னும் பல புனித குர்ஆன் வசனங்களைச் சகட்டு மேனிக்கு மறுக்கின்றார்கள். அதில் பின்வரும் வசனமும் அடங்கும்.
உங்களில் ஒருவர் மற்றவரை அழைப்பதைப் போல் இத்தூதரை அழைக்காதீர்கள்!
திருக்குர்ஆன் 24:63
மற்ற நபர்களை அழைப்பது போன்று அகிலத்தின் தூதராம் நபிகள் நாயகத்தை அழைக்கலாகாது என்று இவ்வசனம் தடை செய்கின்றது.
மத்ஹபுவாதிகள் என்ன செய்கிறார்கள்? இந்த வசனத்தை மறுத்து, அல்லாஹ் சொன்னால் நாங்கள் கட்டுப்பட வேண்டுமா? என்று அகம்பாவம் கொண்டவர்களைப் போன்று நபிகள் நாயகத்தை சாதாரணமாக மற்ற நபர்களை அழைப்பது போன்று அழைக்கிறார்கள்.
இந்தச் சட்டத்தைச் சொன்ன இறைவனின் ஆலயத்திலே அமர்ந்து கொண்டு, யா முஹம்மத் என்றும் இன்னும் பல வார்த்தைகளாலும் பிற நபர்களை அக்கம் பக்கத்தினரை அழைப்பது போன்று உயிரினும் மேலான நபிகள் நாயகத்தை அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு ஆலிம்கள் கூட்டமும் வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.
நபி நேசம் என்று வேஷமிடும் இந்த வேடதாரிகள் நபிகள் நாயகத்தைக் கண்ணியப்படுத்தும் விதமாய் இறைவன் சொன்ன சட்டத்தைப் பின்பற்ற வேண்டுமா? இல்லையா?
மவ்லித் என்ற பெயரில் தங்கள் முன்னோர்கள் செய்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நபிகள் நாயகத்தை மற்ற நபர்களைப் போன்று சாதாரணமாக யா முஹம்மத் என்று அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவும் தெளிவாகக் குர்ஆனை மறுக்கும் செயல் அன்றி வேறில்லை.
நபிகள் நாயகம் சூனியம் வைக்கப்பட்டவரா?
இதைவிட மேலாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை சூனியம் வைக்கப்பட்டவர் என்கிறார்கள். அதனால் ஒரு வித மனக்குழப்ப நிலைக்கு ஆளானார்கள் என்றும் பிதற்றுகிறார்கள்.
நபிகள் நாயகம் சூனியம் வைக்கப் பட்டார்கள் என்று யார் கூறுகிறாரோ உறுதியாக அவர் குர்ஆன் வசனத்தை மறுக்கவே செய்கிறார்கள்.
ஏனெனில் நபிகள் நாயகம் சூனியம் வைக்கப்பட்டார்கள் என்று கூறுவதை குர்ஆன் மறுக்கின்றது மட்டுமின்றி அவ்வாறு கூறுவோரை அநியாயக்காரர்கள் என்கிறது.
"சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகிறீர்கள்'' என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்றபோது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம்.
திருக்குர்ஆன் 17:47
எனவே நபிகள் நாயகம் சூனியம் வைக்கப்பட்டார்கள். அதனால் ஒருவித மனக்குழப்பத்திற்கு ஆளானார்கள் என்று கூறுவதன் மூலம் இந்த ஆலிம்கள் கூட்டம் மேற்கண்ட வசனத்தை மறுக்கின்றார்கள்.
இறந்தவர்களுக்கு யாசீன்
உயிருடன் உள்ளவர்களை எச்சரிக்கை செய்வதற்காக திருக் குர்ஆனை அருளியதாக இறைவன் கூறுகிறான்.
உயிருடன் உள்ளவரை எச்சரிப்ப தற்காகவும், (நம்மை) மறுப்போருக்கு எதிரான கட்டளை உறுதியாவதற் காகவும் (இதை அருளினோம்).
திருக்குர்ஆன் 36:70
ஆனால் இன்றைக்கு திருக் குர்ஆனை இறந்தவர்களுக்குரியதாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக எந்த அத்தியாயத்தில் "இந்தக் குர்ஆன் உயிருடன் உள்ளவரை எச்சரிப்பதற்காக அருளப்பட்டுள்ளது' என்று அல்லாஹ் கூறினானோ அந்த யாசீன் அத்தியாயத்தையே இறந்தவர்களுக் குரியதாக ஆக்கி அவர்கள் பெயரில் ஓதி ஈஸால் ஸவாப் செய்கிறார்கள். ஈஸால் ஸவாப் கூடுமா என்பதை விரிவாக அறிய ஆன்லைன் பிஜே இணைய தளத்தில் கீழ்க்கண்ட இணைப்பில் சென்று பார்க்கவும்.
இறந்தவர்களுக்குக் குர்ஆன் ஓதும் இந்தச் சடங்கிற்கு போலி மதகுருமார்கள், ஆலிம்கள் என்போரும் உடந்தையாக இருக்கிறார்கள். ஏன்? குர்ஆனுக்கு எதிரான இத்தகைய சடங்கை உருவாக்கி மக்களிடையே பரப்பியதும் இந்த ஆலிம்களே!
இப்படிக் குர்ஆனின் பல வசனங்களை மறுத்து அதற்கு எதிரான சட்டதிட்டங்களை, சடங்கு சம்பிரதாயங்களை மக்களிடையே தழைக்கச் செய்வதற்கு இந்த ஆலிம்கள் சத்தியத்தை மறைப்பதும் ஓர் அதி முக்கிய காரணமாகும்.
மார்க்கத்தை மறைக்கலாகாது
எனது வசனங்களை அற்ப விலைக்கு விற்காதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்!
திருக்குர்ஆன் 2:41
வேதத்தில் உள்ளதை உள்ளபடி மக்கள் மத்தியில் சொல்லாமல் உலக ஆதாயம் கருதி வேதத்தில் உள்ளதை மறைப்பது தான் இங்கே அற்ப விலைக்கு விற்றல் என்று கூறப்படுகிறது.
யூதர்கள் இந்த இழிசெயலைச் செய்தார்கள். இதைப் பின்வரும் வசனத்திலிருந்து அறியலாம்.
வேதம் கொடுக்கப்பட்டோரிடம் "அதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்; மறைக்கக் கூடாது'' என்று அல்லாஹ் உறுதிமொழி எடுத்த போது, அவர்கள் அதைத் தமது முதுகுகளுக்குப் பின் எறிந்தனர். அற்பமான விலைக்கு விற்றனர். (அதற்குப் பகரமாக) அவர்கள் விலைக்கு வாங்கியது மிகவும் கெட்டது.
திருக்குர்ஆன் 3:187
அற்ப உலக ஆதாயத்திற்காக வேதத்தில் உள்ளதை மறைப்பதும் வேதத்தின் படி தீர்ப்பளிக்காமலிருப் பதுமே வேதத்தை விற்பதாகும். வேதத்தை மறைக்க கூடாது, வேதத்தின் படியே தீர்ப்பளிக்க வேண்டும் என்று கூறும் மேற்கண்ட வசனங்கள் உள்பட பல வசனங்கள் இக்கருத்தைத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன. ஆனால் குர்ஆனை மனனமிட்டதாகக் கூறி, பகட்டு காட்டும் ஆலிம்கள் கூட்டம் எண்ணற்ற குர்ஆன் வசனங்களை மறைக்கின்றது; மறுக்கின்றது.
குர்ஆனுக்கு எதிரான பாதையில் தாங்கள் பயணிப்பது மட்டுமின்றி மக்களையும் அதன் வழியே அழைத்துச் செல்கிறார்கள். இவர்கள் சுன்னத் வல்ஜமாஅத்தினர் அல்லர். மாறாக குர்ஆன் மறுப்பாளர்கள் ஆவார்கள். இனி இப்பெயரைக் கொண்டு அழைக்கப்படவே இவர்கள் தகுதி படைத்தவர்கள்.
இப்படி எண்ணற்ற வசனங்களை மறுத்து அதற்கெதிரான செயல்களைப் புரியும் இந்தக் குர்ஆன் மறுப்பாளர்கள் நம்மை பார்த்து ஹதீஸ் மறுப்பாளர்கள் என்று கூக்குரலிடுவது வியப்பிலும் மேலான வியப்பாகும்.

EGATHUVAM JUL 2015