24. குடும்பவியல் – எல்லை மீறாதீர்...
உரை: பி. ஜைனுல் ஆபிதீன்
எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா
எம்.ஐ.எஸ்.சி.
இஸ்லாம்
கூறும் குடும்பவியல் என்ற தலைப்பில் பெண்களின் பலவீனங்களையும், அவர்களின்
குணாதிசயங்களையும் அவர்களது இயற்கைத் தன்மைகளையும் ஆண்கள் புரிந்துகொண்டு, முடிந்தளவுக்கு
அவர்களை மன்னித்து அரவணைத்துச் செல்ல வேண்டும். ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் தங்களது மனைவிமார்களை அரவணைத்துச் சென்றுள்ளார்கள் என்பதைக் கடந்த இதழில்
பார்த்தோம்.
இப்படிப் பெண்களை ஆண்கள் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று
சொல்வதைப் பெண்களும் தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாது. நாம் வேண்டுமென்றே கணவன்மார்
களிடத்தில் வம்புச் சண்டை வளர்க்கலாம், இதற்கு
ஆயிஷா (ரலி) சம்பவத்தை ஆதாரமாகக் காட்டிக் கொள்ளலாம் என்று பெண்களில் சிலர்
தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது.
பெண்களுக்கு எப்படி இயற்கை யான குணம் இருக்கிறதோ அதுபோன்று
ஆண்களுக்கென்றே இயற்கையான குணங்களும் இருக்கின்றன. பெண்கள் இப்படிப் பேச
ஆரம்பித்தால் பின்னர் ஆண் ஏதாவது தவறைச் செய்துவிட்டு இது எனது இயற்கைக் குணம், நான்
எப்படி அதற்குப் பொறுப்பாவேன்? என்று
சொல்லிவிடுவான். எனவே இதனை மனதில் வைத்துத்தான் பெண்கள் ஆண்களிடம் நடந்து கொள்ள
வேண்டும்.
ஏனெனில் ஆண்களும் பலதரப் பட்ட நிலையில் இருப்பார்கள்.
அவர்களுக்கென தனியான குணாதிசயங்களுடன் தான் அல்லாஹ் அவர்களைப் படைத்திருக்கிறான்.
எனவே கடந்த இதழ்களில் பார்த்த விஷயங்கள் அனைத்தும் பெண்
களிடம் ஆண்கள் அரவணைத்துப் போகவேண்டும் என்பதற்கான ஆதாரமாக ஆண்கள் எடுத்துக் கொள்ள
வேண்டும். பெண்கள் இதுபோன்ற செய்திகளைப் பெரிது படுத்திக் கொள்ளத் தேவையில்லை.
பொறுமைக்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்த பெருமானாருக்கே ஒரு
கட்டத்தில் பெண்களிடத்தில் கோபம் வந்துவிடுகிறது. மனைவிமார்கள் செய்கிற சில
செயல்களை நபியவர்கள் பொறுத்துக் கொண்டாலும் அளவுக்கு மீறி அவர்கள் நடந்து கொள்ளும்
போது நபியவர்கள் கோபப்பட வேண்டியதாயிற்று.
நபியவர்கள் மனைவிமார்களை ஈலா என்ற சட்டத்தின் மூலம் ஒரு மாத
காலம் பிரிந்து வாழ்ந்தார்கள். இந்தளவுக்கு நபிகள் நாயகத்திற்கே கோபம்
வந்திருக்கின்றது எனும் போது, சாதாரண
கணவன்மார்களுக்கு கோபம் மிகக் கடுமையாகத் தான் வரும். எனவே இந்தப் பண்பு
ஆண்களிடத்தில் இருக்கும் என்பதையும் சேர்த்தே பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டு அணியாகச் செயல்பட்ட நபிகள் நாயகத்தின் மனைவிமார்கள்
ஒரே அணியில் ஒன்றுதிரண்டு வந்து, குடும்பச்
செலவுக்குக் கூடுதலாகப் பொருளாதாரம் தேவை என்ற கோரிக்கையை வைத்தார்கள்.
கோரிக்கையாக வைத்திருந்தால் கூட நபியவர்களுக்குக் கோபம் வந்திருக்காது. ஆனால்
அவர்களோ தந்துதான் ஆகவேண்டும் என்று நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துகிறார்கள்.
கணவரிடம் செலவுக்குப் பற்றாக் குறை எனில் கூடுதலாகக்
கேட்கலாம். கணவனிடத்தில் அதற்கான தகுதியிருந்தால் கேட்கலாம். அதாவது கணவனுக்கு
மாதச் சம்பளம் 5 ஆயிரம் எனில் 8 ஆயிரம்
ரூபாய்க்கு மனைவி பட்ஜெட் போட்டால் அந்தக் கணவனால் நிச்சயம் தரமுடியாது.
இப்படிப்பட்ட நிலையில் மனைவி கணவரிடம் கூட்டித் தா என்று கேட்கக் கூடாது. 5 ஆயிரம்
சம்பளத்தில் தாய் தந்தையருக்கும், மருத்துவச்
செலவுக்கும், சகோதர சகோதரி களுக்கும் கொடுப்பான். இன்னும் பல
விஷயங்களுக்கு அந்த ரூபாயைத் தான் பயன்படுத்திட வேண்டும். எனவே அனைத்துக் காசையும்
என்னிடத்திலேயே கொடுத்துவிடு என்றெல்லாம் மனைவிமார்கள் கணவனை வற்புறுத்தக் கூடாது.
கணவனின் வரவுக்குத் தகுந்த மாதிரி சரியாக நடந்து கொள்பவளே சிறந்த மனைவியாக
இருப்பாள்.
கணவரின் வருமானத்தை விட அதிகமான பொருளாதாரத்தை மனைவிமார்கள்
கேட்டால் நிச்சயம் அவர்களால் முடியாது.
எப்போது முடியாது என்று வருகிறதோ அதற்குத் தகுந்த மாதிரி
தனது முடிவை மனிதன் மாற்றிக் கொள்வான்.
நபிகளாரைச் சுற்றி அனைத்து மனைவிமார்களும் அமர்ந்திருக்க, வீடே
நிசப்தமாகக் காட்சியளிக்க அபூபக்கரும், உமரும்
நபிகளாரின் வீட்டுக்கு வந்துவிடுகிறார்கள். கோபத்தின் விளைவு நபிகளாரின் முகத்தில்
காட்டிக் கொண்டிருக்கிறது.
என்ன பிரச்சனை என்று தீர்க்கமாகத் தெரியாவிட்டாலும் உமரும்
அபூபக்கரும் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அந்த இக்கட்டான நிலையிலிருந்து
நபியவர்களை வேறு நிலைக்கு கொண்டு வருவதற்காக நபிக்கு சிரிப்புக் காட்டும் வகையில் உமர்
(ரலி) பேசுகிறார்கள்.
சூழ்நிலைக்குத் தகுந்தவாறு பேச்சை ஆரம்பிக்கிறார்கள் உமர்
(ரலி). "எனது மனைவி என்னிடம் செலவுக்கு அதிகமாகப் பணம் கேட்டால் கழுத்தை
நெறித்து விடுவேன்' என்கிறார். உமர் எதிர்பார்த்தபடியே ரசூலுல்லாஹ் அவர்களும்
சிரித்து விடுகிறார்கள். "உமரே! தாங்கள் சொல்வதுதான் தற்போது இங்கே நடந்து
கொண்டிருக்கிறது' என்றார்கள் நபியவர்கள். அப்போது தான் இறைவன் வசனத்தை
இறக்குகிறான்.
இவ்வுலக வாழ்வையும், இதன்
அலங்காரத்தையும் நீங்கள் விரும் பினால் வாருங்கள்! உங்களுக்கு வசதியளித்து அழகிய
முறையில் உங்களை விடுவித்து விடுகிறேன் என்று நபியே (முஹம்மதே!) உமது மனைவியரிடம்
கூறுவீராக! நீங்கள் அல்லாஹ்வையும், அவனது
தூதரையும், மறுமை வாழ்வையும் விரும்பினால் உங்களில் நன்மை செய்வோருக்கு
அல்லாஹ் மகத்தான கூலியைத் தயாரித்துள்ளான்.
அல்குர்ஆன் 33:28, 29
எல்லோரைப் போன்றும் சொகுசாக வாழ வேண்டும், எல்லோரைப்
போன்றும் நகை நட்டுக்கள், அணிகலன்கள் அணியவேண்டும் என்பது போன்று நினைப்பீர்களானால்
எல்லோரும் என்னிடமிருந்து அழகிய முறையில் விவாகரத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று
கூறுமாறு நபியவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.
அதிகமான நெருக்கடியை நபியவர்களது மனைவிமார்கள்
அவர்களுக்குக் கொடுத்துள்ளார்கள் என்பதை இதி-ருந்து நம்மால் விளங்கிக்
கொள்ளமுடிகிறது. எனவே மறுமை வேண்டும் என்றால் என்னுடன் இருங்கள். உலகம்தான் பெரிது
என்றால் அழகிய முறையில் கணக்கை முடித்துக் கொள்வோம் என்று நபியைச் சொல்லச்
சொல்கிறான் இறைவன். இது நபியின் தீர்ப்பல்ல. இறைவனின் தீர்ப்பு.
இப்படி இறைவன் சொன்னதும் அனைத்து மனைவிமார்களுக்கும்
ஒன்றும் பேசமுடியாமல் ஆகிவிட்டது. ஒரு கட்டத்தில் அபூபக்கர் (ரலி) அவர்கள் தமது
மகள் ஆயிஷாவின் கழுத்தை நெறித்துக் கொண்டு, கடுமையாக
ஆயிஷாவைத் திட்டுகிறார்கள். அதுபோன்றே உமர் (ரலி) அவர்களும் தமது மகள் ஹப்ஸாவின்
கழுத்தை நெறிக்க ஓடுகிறார்.
நபியவர்களின் வாழ்வில் இப்படி யொரு சம்பவமும் நடந்துள்ளது.
எனவே மனைவிமார்களுக்குச் சாதகமான ஹதீஸ்கள் நிறைய இருக்கிறது என்று நினைத்துக்
கொண்டு, கணவனை எடுத்தெறிந்து பேசலாம், அளவுக்கு
அதிகமாக நெருக்கடியை ஏற்படுத்தலாம், எதற்கெடுத்தாலும்
சண்டையிடலாம் என்று செயல்பட்டால் அப்போது நபியவர்கள் அளவுக்கு கோபப்படுகிற
ஆண்களும் நம்மில் இருக்கலாம். அபூபக்கர் அளவுக்கும், உமர் அளவுக்கும்
கோபப்படுகிற ஆண்களும் நம்மில் இருக்கலாம். இப்படி ஆண்கள் பலமாதிரி இருப்பார்கள்
என்பதையும் கவனித்துத் தான் செயல்பட வேண்டும்.
நாமும் அளவோடு தான் கணவனிடத்தில் நடந்து கொள்ள வேண்டும்
என்று முன்னால் கூறப்பட்ட செய்திகளின் நிலையை மனைவிமார்கள் புரிந்து கொள்ள
வேண்டும்.
எனவே பெண்களுக்கு இறைவன் செயல்திட்டங்களை வைத்து
படைத்திருப்பதைப் போன்று ஆண்களுக்கும் சில தனித்துவம் மிக்க செயல்திட்டங்களை
வைத்துத் தான் படைத்திருக்கிறான் என்பதைப் பெண்களும் புரிந்து கொண்டு செயல்பட
வேண்டும். ஆக குடும்ப வாழ்க்கை என்பது இருதரப்பு அனுசரணையில் தான் சுழலும்
என்பதைப் புரிய வேண்டும்.
கணவனுக்கு மார்க்கம் எல்லை வகுத்திருப்பதைப் போன்று
மனைவிமார்களுக்கும் இறைவன் எல்லையை வகுத்து வைத்துள்ளான் என்பதையும் சேர்த்து
விளங்குகிற தம்பதிகள்தான் சரியாக குடும்பத்தை இயக்கமுடியும் என்ப துதான் இஸ்லாமிய
குடும்பவியல்.
இன்னும் சொல்லப் போனால், மக்காவிலிருந்து
நபிகள் நாயகம் அவர்களும், ஸஹாபாக்களும் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வருகிறார்கள்.
மக்காவிலுள்ள குடும்ப அமைப்பிற்கும், மதீனாவிலுள்ள
குடும்ப அமைப் பிற்கும் நிறையவே வித்தியாசங்கள் இருந்தன. மக்காவிலுள்ள குடும்ப
அமைப்பில் பெண்களுக்கு பெரிய அளவுக்கு எந்த உரிமையும் கிடையாது. பெண்கள் என்றாலேயே
அடி உதைக்கு ஆளாக வேண்டியிருந்தது. மக்காவிலுள்ள ஆண்களின் நிலையும் அப்படித்தான்.
எதற்கெடுத்தாலும் அடிஉதை, வெட்டு குத்து என்றுதான் இருந்தார்கள். இதுதான்
மக்காவிலுள்ளவர்களின் தன்மை.
மதீனாவைப் பொறுத்த வரை, ராஜ்ஜியமே
பெண்கள் ராஜ்ஜியம்தான். மதிக்கிறோம் என்ற பெயரில் பெண்கள் சொல்வதை ஆண்கள் அப்படியே
கேட்பார்கள். ஆனால் இஸ்லாம் என்ற மார்க்கம் இரண்டுக்கும் நடுவில் அமைந்துள்ளது.
மக்காவாசிகள் போன்று எதற்கெடுத்தாலும் அடி, உதை, மிரட்டல்
என்பதும் தவறு. அதேபோன்று மனைவிமார்கள் என்ன சொன்னாலும் கேட்க வேண்டும் என்று
மதீனாவாசிகள் போனதும் தவறு.
மக்காவாசிகள் அறவே பெண் களின் உரிமையை பறித்தனர்.
மதீனாவாசிகள் பெண்கள் தான் ஆண்கள் போன்று ஆகிவிட்டிருந் தனர். இதைப் பின்வரும்
சம்பவத்தில் உமர் (ரலி) அவர்கள் கூறுவதிலிருந்து விளங்கிக்
கொள்ளலாம்.
நபியவர்கள் பெண்களை அடிக்காதீர்கள் என்று கட்டளை யிட்டிருந்தார்கள்.
இந்நிலையில், உமர் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் வந்து, பெண்கள்
கணவன்மார்களை எதிர்த்துப் பேசுகிறார்கள். எல்லா விஷயத்திலும் எல்லை மீறுகிறார்கள்
என்று முறையிட்டதும், நபியவர்கள் பெண்களை இலேசாக அடித்துக் கொள்வதற்கு அனுமதி
வழங்கினார்கள். (மனைவிமார்களை அடிப்பதற்கு அனுமதி வழங்கிய பிறகு) நபியவர்களின்
வீட்டிற்கு அதிகமான பெண்கள் வந்து, கணவன்மார்கள்
தங்களை அடிப் பதாகப் புகார் செய்தனர். உடனே நபியவர்கள், அதிமான
பெண்கள் தங்களது கணவன்மார்கள் அடிப் பதாகப் புகார் கூறினார்கள். எனவே உங்களில்
தனது மனைவியை அடிப்பவர் சிறந்தவரில்லை என்று சட்டம் சொன்னார்கள்.
(பார்க்க: அபூதாவூத் 1834, சுனனுத்
தாரமீ 2122)
வலிக்காத அளவுக்கு அடிப்பதற்கு அனுமதி வழங்கிய அடுத்தடுத்த
நாட்களிலேயே, கணவன்மார்கள் அடிக்கிறார்கள் என நபியவர்களிடம் அதிகமான
பெண்கள் புகார் அளித்தனர்.
அதன் பிறகு, நபியவர்கள்
ஆண்களைக் கண்டிக்கிறார்கள். உங்களில் சிறந்தவர் உங்களின் மனைவிமார்களிடத்தில்
சிறந்தவரே என்று கூறினார்கள்.
உங்களது குடும்பத்தினரில் (மனைவியிடத்தில்) சிறந்தவரே
உங்களில் சிறந்தவர், நான் எனது குடும்பத்தில் (மனைவியிடத்தில்) சிறந்தவன் என்று
நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: திர்மிதீ 3830
இந்த ஆதாரங்கள் எதைக் காட்டுகிறது எனில், உலகில்
ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு வகையில் இருப்பார்கள். பலதரப்பட்ட குணாதிசயங்கள்
உடையவர்களாக ஆண்களோ பெண்களோ இறை வனால் படைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
எனவே முள் மீது போடப்பட்ட சேலைத் துணியைப் போன்று குடும்ப
உறவுகளை, கணவன் மனைவி உறவுகளைப் பேணிக் கொள்ள வேண்டும்.
அதாவது முள் மேல் கிடக்கின்ற சேலைத்துணி கிழிந்துவிடாமல்
பக்குமாக எடுப்பதைப் போன்று பக்குமாக உறவை வைத்துக் கொள்ள வேண்டும். ஆண்கள்
பெண்களிடம் எல்லை தாண்டி நடந்து கொண்டால் குடும்ப உறவு முறிந்துவிடும் என்பதை
புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
அதேபோன்று நாம் கொடுக்கும் தொந்தரவுகளை ஓரளவுக்குத்தான்
ஆண்கள் சகித்துக் கொள்வார்கள், அளவுக்கு மீறி
தொந்தரவு கொடுப்பதை எந்த ஆண்களும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதையும்
சேர்த்தே பெண்களும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
ஆக கணவன், மனைவி என்ற
இரு தரப்பும் ஒருவரை ஒருவர் மன்னித்து, ஒருவர்
உணர்வை மற்றவர் புரிந்து குடும்ப வாழ்வை செம்மையாக்கிக் கொள்ள வேண்டும்.
EGATHUVAM JUL 2017