காற்று இறைவனின் சான்றே! – JUL 2015
எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்
காற்று இறைவனின் சான்று என்பதையும், காற்றின் முக்கியத் துவத்தைப் பற்றியும் கடந்த இதழில்
கண்டோம்.
காற்றின் அற்புதங்கள், அதன் செயல்பாடுகள் பற்றி மார்க்கம் கூறும் செய்திகளை இனி
காண்போம்.
காற்றின் மூலம் அழிவு
நமக்கு வாழ்வைக் கொடுத் திருக்கும் ஏக இறைவனின்
மகத்துவத்தையும் மாண்பையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவன் அளிக்கும் அருளை
எதிர்பார்த்தவர் களாக, அழிவை அஞ்சியவர்களாக வாழ வேண்டும்.
அசத்தியத்திலே ஆணவத்தோடு இருப்பவர்களுக்கு, அழிச்சாட்டியம் செய்பவர்களுக்கு அவன் நாடினால் எந்த விதத்திலும் தண்டனை
வழங்குவான் என்பதை மறந்துவிடக் கூடாது.
நமக்கு முன்னால் வாழ்ந்த ஆது எனும் சமுதாய
மக்கள் மிகவும் வலிமை வாய்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு ஹூத் நபியை
அல்லாஹ் அனுப்பினான். ஆனால் அந்த மக்களோ சத்தியத்தை ஏற்க மறுத்தார்கள்; பெருமையடித் தார்கள். காற்றை அனுப்பி அவர்களை அல்லாஹ் அழித்தான்.
இந்தக் கடந்த கால வரலாறு குர்ஆனில் இடம் பெற்றுள்ளது.
அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக்
கூடாது; மகத்தான நாளின் வேதனையை உங்கள் விஷயத்தில்
நான் அஞ்சுகிறேன் என்று ஆது சமுதாயத்திற்கு அவர்களின் சகோதரர் மணற்குன்றுகளில்
நின்று எச்சரித்ததை நினைவூட்டுவீராக! எச்சரிப்போர் அவருக்கு முன்பும் பின்பும்
சென்றுள்ளனர். எங்கள் கடவுள்களை விட்டும் எங்களைத் திருப்புவதற்காக நீர் எங்களிடம்
வந்துள்ளீரா? நீர் உண்மையாளராக இருந்தால் நீர் எங்களுக்கு
எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வருவீராக! என்று கேட்டனர். (இது பற்றிய) ஞானம்
அல்லாஹ்விடமே உள்ளது. நான் எதைக் கொடுத்து அனுப்பப்பட்டுள்ளேனோ அதை உங்களுக்கு
எடுத்துச் சொல்கிறேன். எனினும் அறியாத கூட்டமாகவே உங்களை நான் கருதுகிறேன் என்று
அவர் கூறினார். தமது பள்ளத் தாக்குகளை நோக்கி வரும் மேகமாகவே அதை அவர்கள்
கருதினார்கள். இது நமக்கு மழை பொழியும் மேகமே எனவும் கூறினர். இல்லை! இது எதற்கு
அவசரப் பட்டீர்களோ அதுவே. துன்புறுத்தும் வேதனை நிரம்பிய காற்றாகும் (என்று
கூறப்பட்டது.) தனது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு பொருளையும் அது அழித்தது.
அவர்களின் குடியிருப்புகளைத் தவிர (வேறு எதுவும்) காணப்படாத நிலையைக் காலையில்
அடைந்தனர். குற்றம் செய்யும் கூட்டத்தை இவ்வாறே தண்டிப்போம்.
(திருக்குர் ஆன் 46:21-25)
ஆது சமுதாயம் பூமியில் நியாயமின்றி ஆணவம்
கொண்ட னர். எங்களை விட வலிமை மிக்கவர் யார்? எனக் கேட்டனர். அவர்களைப் படைத்த அல்லாஹ் அவர்களை விட
வலிமையானவன் என்பதை அவர் காணவில்லையா? அவர்கள் நமது சான்றுகளை மறுப்போராக இருந்தனர். எனவே இவ்வுலக
வாழ்க்கையிலேயே இழிந்த வேதனையை அவர்களுக்குச் சுவைக்கச் செய்வதற்காக கெட்ட
நாட்களில் அவர்கள் மீது கடும் புயல் காற்றை அனுப்பினோம். மறுமையின் வேதனை (இதை
விட) மிகவும் இழிவு படுத்தக் கூடியது. அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.
(திருக்குர்ஆன் 41:15,16)
ஆது சமுதாயத்திடமும் (படிப்பினை) உள்ளது.
அவர்கள் மீது மலட்டுக் காற்றை அனுப்பினோம். அது எப்பொருளில் பட்டாலும் அதை மக்கிப்
போனதைப் போன்று ஆக்காமல் இருந்ததில்லை.
(திருக்குர்ஆன் 51:41,42)
காற்றின் மூலம் உதவி
அல்லாஹ்வை முழுமையாக ஏற்றுக் கொண்டு அவன்
சொன்னபடி வாழும் அடியார்களுக்கு அறியாப் புறத்தில் இருந்தும் அவன் அருள் புரிவான்.
நன்மைகளை அள்ளிக் கொடுப்பான். ஏதேனும் துன்பங்களின் போது எதிர்பார்க்காத
விதத்திலும் காப்பாற்றுவான்.
இன்னும் தெளிவாகச் சொல்வ தென்றால், கண்ணுக்குத் தெரியாத காற்றின் மூலம்கூட உதவி செய்வான்.
இதற்கு ஆதாரமாக நபிகளார் காலத்தில் நடந்த சம்பவங்கள் இருக்கிகின்றன.
இஸ்லாத்தை வேரோடு ஒழிக்க வேண்டும்; முஸ்லிம்களை மொத்தமாக அழிக்க வேண்டும் என்பதற்காக இணை
வைப்பவர்கள், காஃபிர்கள் என்று அனைவரும் ஒன்று திரண்டு போர்
செய்ய வந்தார்கள். அவர்களின் தாக்குதலை முறியடிப் பதற்குக் கடந்து வர இயலாத
அளவிற்கு முஸ்லிம்களால் பெரும் அகழ் தோண்டப்பட்டது.
அந்த அகழ்ப் போரின் போது எதிரிகளை சீர்குலைக்க, திணறடிக்க அவர்களுக்கு எதிராக அல்லாஹ் கடும் காற்றை
அனுப்பினான். அதன் மூலம் முஃமின்களுக்கு மிகப்பெரும் வெற்றி கிடைத்தது.
நம்பிக்கை கொண்டோரே! உங்களிடம் கூட்டுப்
படையினர் வந்த போது அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடையை எண்ணிப் பாருங்கள்!
அவர்களுக்கு எதிராகக் காற்றையும், நீங்கள்
காணாத படையினரையும் அனுப்பினோம். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவனாக
இருக்கிறான். அவர்கள் உங்கள் மேற்புறத்திலிருந்தும், உங்கள் கீழ்ப்புறத்திலிருந்தும் வந்த போது, பார்வைகள் நிலை குத்தி, இதயங்கள் தொண்டைக் குழிகளை அடைத்து, அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் பலவிதமான எண்ணங்களைக் கொண்ட போது, அங்கு தான் நம்பிக்கை கொண்டோர் சோதிக்கப் பட்டனர். அவர்கள்
கடுமையாக ஆட்டுவிக்கப்பட்டார்கள்.
(திருக்குர்ஆன் 33:9-11)
(அகழ்ப் போரின் போது) நான் (ஸபா எனும்) கீழைக்
காற்றின் வாயிலாக வெற்றி அளிக்கப் பட்டுள்ளேன்; ஆது சமுகத்தார் (தபூர் எனும்) மேலைக் காற்றினால்
அழிக்கப்பட்டனர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புஹாரி 1035, 3343
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தை
முடித்து விட்டு வந்து கொண்டிருந்தார்கள். மதீனாவுக்கு அருகில் அவர்கள் வந்தபோது, கடுமையான (சூறாவளிக்) காற்று வீசியது. அது பயணிகளை
மண்ணுக்குள் புதைத்துவிடப் பார்த்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இந்தக் காற்று ஒரு நயவஞ்சகனைக் கொல்வதற்காக
அனுப்பப்பட்டுள்ளது என்று கூறி னார்கள். மதீனாவுக்குள் வந்த போது, நயவஞ்சகர்களின் பெருந்தலைவன் ஒருவன் இறந்துவிட்டிருந்தான்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (5367)
காற்றின் மூலம் எச்சரிக்கை
காற்றின் வேகத்தைப் பொறுத்து தென்றல், புயல் என்றெல்லாம் பெயரிட்டு அழைக்கிறோம். காற்றின் வேகத்தை
அளக்க, திசையைக் கண்டறிய என்று அது தொடர்பாக
ஆராய்வதற்குப் பல கருவிகளைக் கண்டுபிடித்துள்ளார்கள். இதற்குக் காரணம் என்ன? காற்று என்பது சாதாரணமானது அல்ல. அதன் மூலமும் அபாயகரமான
அதிபயங்கர மான விளைவுகளும்கூட ஏற்படும்.
ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும் என்று
பழமொழி சொல்வார்கள். சில நேரங்களில் வீசும் காற்று மிகவும் வேகமானதாக இருக்கும்.
சுழன்று சுழன்று வீசுவது, மண்ணை, மணலை வாரி வீசுவது, மழையோடு சேர்ந்து தாக்குவது என்று பல வகையில்
இருக்கும்.
இதனால் வீடுகள் இடிந்து விழும்; மின்கம்பங்கள் கோபுரங்கள் சாய்ந்து சரிந்துவிடும்; வாகனங்கள் தூக்கி எறியப்படும்; மனிதர்கள் சிக்கிப் பலியாவார்கள். இவ்வாறு, மோசமான பாதிப்புகள் கொடூரமான சம்பவங்கள் சூறாவளியால்
நிகழ்வதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.
இதுபோன்ற இன்னல்களில் சிக்கிக் கொள்ளக் கூடாது
என்ற பயம் அனைவருக்கும் இருக்கும். இருந்தால் மட்டும் போதாது, ஏக இறைவனுக்கு மாறு செய்யாதவர்களாக நாம் இருக்க வேண்டும்.
அவனை நினைத்து துதித்து பெருமைப் படுத்துபவர்களாகத் திகழ வேண்டும். இந்த
எச்சரிக்கை கலந்த அறிவுரையை பின்வரும் வசனங்கள் மூலம் பெற்றுக் கொள்ள முடிகிறது.
கடலிலும், தரையிலும் அவனே உங்களைப் பயணம் செய்ய வைக்கிறான். நீங்கள்
கப்பலில் இருக்கின்றீர்கள். நல்ல காற்று அவர்களை வழி நடத்துகிறது. அவர்கள்
மகிழ்ச்சியடையும் போது புயல் காற்று அவர்களிடம் வருகிறது. ஒவ்வொரு
இடத்திலிருந்தும் அவர்களிடம் அலையும் வருகிறது. தாம் சுற்றி வளைக்கப்பட்டு
விட்டதாக அவர்கள் முடிவு செய்கின்றனர். வழிபாட்டை உளத் தூய்மையுடன் அவனுக்கே
உரித்தாக்கி இதிலிருந்து எங்களை நீ காப்பாற்றினால் நன்றியுள்ளோராக ஆவோம் என்று
அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றனர். அவர்களை அவன் காப்பாற்றும் போது, நியாயமின்றி பூமியில் அட்டூழியம் செய்கின்றனர்.
(திருக்குர்ஆன் 10:22,
23)
பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம்
ஒருவருக்கு இருக்கிறது; அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகளும் ஓடுகின்றன; அதில் அனைத்துக் கனிகளும் அவருக்கு உள்ளன; அவருக்குப் பலவீனமான சந்ததிகள் உள்ள நிலையில் அவருக்கு
முதுமையும் ஏற்பட்டு விடுகிறது; அப்போது
நெருப்புடன் கூடிய புயல் காற்று வீசி அ(த்தோட்டத்)தை எரித்து விடுகிறது. இந்த
நிலையை உங்களில் எவரேனும் விரும்புவாரா? நீங்கள் சிந்திப்பதற்காக இவ்வாறே அல்லாஹ் சான்றுகளைத்
தெளிவுபடுத்துகிறான்.
(திருக்குர் ஆன் 2:266)
கடலில் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால்
அவனைத் தவிர யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் மறைந்து விடுகின்றனர். அவன் உங்களைக்
காப்பாற்றிக் கரை சேர்த்தவுடன் புறக்கணிக்கிறீர்கள்! மனிதன் நன்றி கெட்டவனாகவே
இருக்கிறான். நிலப்பரப்பின் ஒரு பகுதியில் அவன் உங்களை விழுங்கச் செய்வது பற்றியோ, உங்கள் மீது கல் மழை பொழிவதைப் பற்றியோ அச்சமற்று
இருக்கிறீர்களா? பின்னர் உங்களுக்கு எந்தப் பொறுப் பாளரையும்
காண மாட்டீர்கள். அல்லது மீண்டும் ஒரு தடவை அதில் (கடலில்) உங்களை அனுப்பும் போது, உங்களுக்கு எதிராகப் புயல் காற்றை அனுப்பி நீங்கள் (அவனை)
மறுத்ததால் உங்களை மூழ்கடிக்க மாட்டான் என்று அச்சமற்று இருக்கிறீர்களா? பின்னர் நமக்கு எதிராக உங்களுக்கு அதில் உதவுபவரை காண
மாட்டீர்கள்.
(திருக்குர் ஆன் 17:67-69)
EGATHUVAM JUL 2015