Mar 2, 2017

31. இணை கற்பித்தல் - அனைவருக்கும் நிகழும் அற்புதங்கள்

31.   இணை கற்பித்தல்  - அனைவருக்கும் நிகழும் அற்புதங்கள்

உலகத்தில் உள்ள அத்தனை பெண்களையும் விடச் சிறந்தவர்களான, எல்லா முஃமீனான ஆண்களுக்கும், பெண்களுக்கும் முன் மாதிரியாகச் சொல்லப்பட்ட மர்யம் (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
"மர்யமே! அல்லாஹ் உம்மைத் தேர்வு செய்து தூய்மையாக்கி அகிலத்துப் பெண்களை விட உம்மைச் சிறப்பித்தான்'' என்று வானவர்கள் கூறியதை நினை வூட்டுவீராக! "மர்யமே! உமது இறைவனுக்குப் பணிவாயாக! ஸஜ்தாச் செய்வாயாக! ருகூவு செய்வோருடன் ருகூவு செய்வாயாக!'' (என்றும் வானவர்கள் கூறினர்.).
(அல்குர்ஆன் 3.42,43)
இம்ரானின் மகள் மர்யமையும் (இறைவன் முன்னுதாரணமாகக் கூறுகிறான்) அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார். அவரிடம் நமது உயிரை ஊதினோம். அவர் தமது இறைவனின் வார்த்தைகளையும், அவனது வேதங்களையும் உண்மைப் படுத்தினார். அவர் கட்டுப்பட்டு நடப்பவராகவும் இருந்தார்.
(அல்குர்ஆன் 66.12)
இத்தகைய சிறப்பைப் பெற்ற மர்யம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் சில அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியதாகப் பின்வரும் வசனங்களில் குறிப்பிடுகின்றான்.
அவரை, (அக்குழந்தையை) அவரது இறைவன் அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். அவரை அழகிய முறையில் வளர்த்தான். அவருக்கு ஸக்கரிய் யாவைப் பொறுப்பாளியாக்கினான்.
அவரது அறைக்கு ஸக்கரிய்யா சென்ற போதெல்லாம் அவரிடம் உணவைக் கண்டு, "மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?'' என்று கேட்டார்.
"இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது. அல்லாஹ், தான் நாடுவோருக்குக் கணக்கின்றி வழங்குகிறான்'' என்று (மர்யம்) கூறினார்.
(அல்குர்ஆன் 3.37)
இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! தமது குடும்பத் தினரை விட்டு கிழக்குத் திசையில் உள்ள இடத்தில் அவர் தனித்திருந்தார்.  அவர்களை விட்டும் ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அவரிடம் நமது ரூஹை அனுப்பினோம். அவர் முழுமையான மனிதராக அவருக்குத் தோற்றமளித் தார். "நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று (மர்யம்) கூறி னார்.  "நான், உமக்குப் பரிசுத்தமான புதல்வனை அன்பளிப்புத் தருவதற் காக (வந்த) உமது இறைவனின் தூதன்'' என்று அவர் கூறினார்.
"எந்த ஆணும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை கெட்டவளாக இல்லாமலும் இருக்க எனக்கு எப்படிப் புதல்வன் உருவாக முடியும்?'' என்று (மர்யம்) கேட்டார்.  "அப்படித் தான்'' என்று (இறைவன்) கூறினான். "இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்குச் சான்றாகவும்,  நம் அருளாகவும் ஆக்குவோம். இது நிறைவேற்றப்பட வேண்டிய கட்டளை' எனவும் உமது இறைவன் கூறினான்'' (என்று ஜிப்ரீல் கூறினார்.) பின்னர் கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார்.  பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. "நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந் திருக்கக் கூடாதா?'' என்று அவர் கூறினார்.
"கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்'' என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.  "பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும்'' (என்றார்) நீர், உண்டு பருகி மன நிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் "நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்'' என்று கூறுவாயாக!  (பிள்ளையைப் பெற்று) அப்பிள்ளையைத் தமது சமுதாயத் திடம் கொண்டு வந்தார். "மர்யமே! பயங்கரமான காரியத்தைச் செய்து விட்டாயே?'' என்று அவர்கள் கேட்டனர்.
"ஹாரூனின் சகோதரியே! உனது தந்தை கெட்டவராக இருந்ததில்லை. உனது தாயும் நடத்தை கெட்டவராக இருந்த தில்லை'' (என்றனர்) அவர் குழந்தையைச் சுட்டிக் காட்டினார்! "தொட்டிலில் உள்ள குழந்தையிடம் எவ்வாறு பேசுவோம்?'' என்று அவர்கள் கேட்டார்கள்.
உடனே அவர் (அக்குழந்தை), "நான் அல்லாஹ்வின் அடியான். எனக்கு அவன் வேதத்தை அளித்தான். என்னை நபியாக ஆக்கினான். நான் எங்கே இருந்த போதும் பாக்கியம் பொருந்திய வனாகவும் ஆக்கினான். நான் உயிருடன் இருந்து, என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும், இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான். என்னை துர் பாக்கியசாலியாகவும், அடக்குமுறை செய்பவனாகவும் அவன் ஆக்கவில்லை.  நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும், நான் உயிருடன் எழுப்பப்படும் நாளிலும் என் மீது ஸலாம் இருக்கிறது'' (என்றார்) இவரே மர்யமின் மகன் ஈஸா. அவர்கள் சந்தேகம் கொண்டிருந்த உண்மைச் செய்தி இதுவே.         
அல்குர்ஆன் 19:16-34
இது மர்யம் (அலை) அவர்கள் விஷயத்தில் இறைவன் நிகழ்த்திக் காட்டிய அற்புதங்களாகும்.
அதே போன்று குகைவாசிகளின் வரலாற்றைப் பற்றியும் இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
முந்தைய சமுதாயத்தில் ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட சில பேர் இருந்தார்கள். அவர்கள் இந்த மார்க்கத்தை ஏற்றுக் கொண்டதால்  சொல்லெணாத் துயரத்தை - துன்பத்தை அடைந்தார்கள்.
இனிமேல் ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டு இந்த ஊரில் வாழ முடியாது. நமக்குக் கொள்கை தான் முக்கியம் என்பதை அறிந்து அந்த ஊரை விட்டு வெளியேறுகின்றார்கள். அந்த ஊரை விட்டு சிறிது தூரம் நடந்து சென்ற பிறகு ஒரு குகையில் அவர்கள் தஞ்சம் அடைகின்றார்கள். ஆனால், அந்தக் குகையில் அவர்களுக்கே தெரியாமல் பல அற்புதங்கள் அங்கே நிகழ்கின்றது.
குகைவாசிகள் குறித்தும், அவர்களுக்கு நிகழ்ந்த அற்புதங்கள் குறித்தும் திருக்குர்ஆன் கூறும் வரலாற்றை முதலில் பார்ப்போம்.
"அந்தக் குகை மற்றும் அந்த ஏட்டுக்குரியோர் நமது சான்றுகளில் ஆச்சரியமானோர்'' என்று நீர் நினைக்கிறீரா? சில இளைஞர்கள் குகையில் ஒதுங்கிய போது "எங்கள் இறைவா! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச் சீராக்குவாயாக!'' என்றனர். எனவே அக்குகையில் பல வருடங்கள் அவர்களை உறங்கச் செய்தோம். அவர்கள் தங்கிய காலத்தை இரு சாராரில் நன்கறிந்தவர் யார் என்பதை அறிவிப்பதற்காகப் பின்னர் அவர்களை எழுப்பினோம்.  அவர்களது உண்மை வரலாறை நாம் உமக்குக் கூறுகிறோம். அவர்கள் இளைஞர்கள். அவர்கள் தமது இறைவனை நம்பினார்கள். அவர்களுக்கு நேர் வழியை அதிகமாக்கினோம்.
அவர்கள் எழுந்து "நமது இறைவன் வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாவான். அவனன்றி வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டோம். (அவ்வாறு செய்தால்) வரம்பு மீறிய வார்த்தையைக் கூறியவர்களாவோம்'' என்று அவர்கள் கூறிய போது அவர்களது உள்ளங்களை உறுதிப்படுத்தினோம்.
இதோ எங்கள் சமுதாயத்தினர் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங் களை ஏற்படுத்திக் கொண்டனர். அவற்றைப் பற்றி அவர்கள் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டாமா? அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட மிகப் பெரும் அநீதி இழைத்தவன் யார்? அவர்களையும், அல்லாஹ்வை யன்றி அவர்கள் வணங்குபவற் றையும் விட்டு விலகி அந்தக் குகையில் ஒதுங்குங்கள்! உங்கள் இறைவன் தனது அருளை உங்களுக்குத் தாராளமாக அளிப்பான். உங்கள் பணியை எளிதாக்குவான் (எனவும் கூறினர்).  சூரியன் உதிக்கும் போது அது அவர்களின் குகையை விட்டும் வலப்புறமாகச் சாய்வதையும், அது மறையும் போது இடப் புறமாக அவர்களைக் கடப்பதையும் காண்பீர்! அவர்கள் அதில் உள்ள விசாலமான பகுதியில் உள்ளனர். இது அல்லாஹ்வின் சான்றுகளில் ஒன்று. அல்லாஹ் யாருக்கு நேர் வழி காட்டினானோ அவர் நேர் வழி பெற்றவர். அவன் யாரை வழி கேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு நேர் வழி காட்டும் பொறுப்பாளரைக் காண மாட்டீர்.
அவர்கள் விழித்துக் கொண்டிருப் பதாக நீர் நினைப்பீர்! (ஆனால்) அவர்கள் உறங்கிக் கொண்டுள்ளனர். அவர்களை வலப்புறமும் இடப் புறமுமாகப் புரட்டுகிறோம். அவர்களின் நாய் தனது முன் கால்களை விரித்து வாசலில் உள்ளது. அவர்களை நீர் எட்டிப் பார்த்திருந்தால் அவர்களை விட்டு வெருண்டு ஓடியிருப்பீர்! அவர்களால் அதிகம் அச்சமடைந்திருப்பீர்!  அவர்கள் தங்களிடையே விசாரித்துக் கொள்வதற்காக இவ்வாறு அவர்களை உயிர்ப்பித்தோம். "எவ்வளவு (நேரம்) தங்கியிருப்பீர்கள்?'' என்று அவர் களில் ஒருவர் கேட்டார். "ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறு பகுதி தங்கினோம்'' என்றனர். "நீங்கள் தங்கியதை உங்கள் இறைவன் நன்கு அறிந்தவன். உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் நகரத்துக்கு அனுப்புங்கள்! தூய்மையான உணவு வைத்திருப்பவர் யார் என்பதைக் கவனித்து அதிலிருந்து அவர் உணவை உங்களுக்காக வாங்கி வரட்டும். அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்! உங்களைப் பற்றி அவர் யாருக்கும் சொல்ல வேண்டாம்'' என்றும் கூறினர்.
அவர்கள் உங்களைக் கண்டு கொண்டால் உங்களைக் கல்லால் எறிந்து கொல்வார்கள்! அல்லது அவர்களின் மார்க்கத்தில் உங்களை மீண்டும் சேர்த்து விடுவார்கள். அப்போது ஒருக்காலும் வெற்றி பெற மாட்டீர்கள்! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்பதையும், யுக முடிவு நேரம் சந்தேகம் இல்லாதது என்பதையும் அறிந்து கொள்வதற்காக (குகை வாசிகளைப் பற்றி) அவர்களுக்கு இவ்வாறே வெளிப்படுத்தினோம். அப்போது அவர்கள் தமக்கிடையே முரண்பட்டனர். "அவர்கள் மீது ஒரு கட்டடத்தை எழுப்புங்கள்! அவர்களைப் பற்றி அவர்களது இறைவனே அறிவான்'' என்றனர். தமது காரியத்தில் யாருடைய கை ஓங்கியதோ அவர்கள் "இவர்கள் மீது ஒரு வழிபாட்டுத் தலத்தை ஏற்படுத்துவோம்'' என்றனர்.
"(அவர்கள்) மூவர்; நான்காவது அவர்களின் நாய்'' என்று (சிலர்) கூறுகின்றனர். "ஐவர்; ஆறாவது அவர்களின் நாய்'' என்று மறைவானதைப் பற்றி யூகத்தின் அடிப்படையில் (வேறு சிலர்) கூறுகின்றனர். "எழுவர்; எட்டாவது அவர்களின் நாய்'' என்று (மற்றும் சிலர்) கூறுகின்றனர். "அவர்களின் எண்ணிக்கையைப் பற்றி என் இறைவனே நன்கு அறிந்தவன். சிலரைத் தவிர அவர்களை யாரும் அறிய மாட்டார்கள்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவர்கள் குறித்து தெரிந்ததைத் தவிர (வேறு எதிலும்) தர்க்கம் செய்யாதீர். அவர்களைக் குறித்து இவர்களில் ஒருவரிடமும் விளக்கம் கேட்காதீர்!
அல்லாஹ் நாடினால் (என்பதைச் சேர்த்தே) தவிர, நாளை நான் இதைச் செய்பவன் என்று எதைப் பற்றியும் கூறாதீர்! நீர் மறந்து விடும் போது உமது இறைவனை நினைப்பீராக! "எனது இறைவன் இதை விட சமீபத்தில் வழி காட்டி விடக் கூடும்'' என்று கூறுவீராக!
அவர்கள் தமது குகையில் முன்னூறு ஆண்டுகள் தங்கினார்கள் (என்றும்) ஒன்பது ஆண்டுகளை அதிகமாக்கிக் கொண்டனர் (என்றும் கூறுகின்றனர்.) "அவர்கள் தங்கிய (காலத்)தைப் பற்றி அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். வானங்கள் மற்றும் பூமியில் மறைவானது அவனுக்கே உரியது. அவன் நன்றாகப் பார்ப்பவன்! நன்றாகக் கேட்பவன். அவனன்றி அவர் களுக்கு எந்தப் பொறுப்பாளரும் இல்லை. அவன் தனது அதிகாரத்தில் யாரையும் கூட்டாக்கிக் கொள்ள மாட்டான்'' என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 18:9-26
இதுவே குகைவாசிகள் பற்றித் திருக்குர்ஆன் கூறும் வரலாறாகும். இதனுடைய விளக்கத்தை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்.
 EGATHUVAM JUL 2016