21. இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும் - பலவீனமான ஹதீஸைப் பின்பற்றுபவர்கள் முல்லாக்கள்
அல்ல! முட்டாள்கள்!
மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ
மக்ராவி
தமிழில்: எம். ஷம்சுல்லுஹா
பலவீனமான ஹதீஸ்களை அறிவிப்பது, அவற்றின்படி அமல் செய்வது தொடர்பாக அறிஞர் நாஸிருத்தீன்
அல்பானி, ஸஹீஹ் தர்கீப் வத்தர்ஹீப் என்ற நூலின்
முன்னுரையில் குறிப்பிட்ட கருத்துக்களைப் பற்றி மக்ராவி குறிப்பிட்ட விமர்சனத்தைக்
கடந்த இதழில் கண்டோம்.
ஸஹீஹ் தர்கீப் வத்தர்ஹீப் நூலின் முன்னுரையை
இங்கு வெளியிட விருந்த வேளையில், அல்ஜாமிவுஸ்
ஸகீர் என்ற நூலில் இடம்பெற்ற அல்பானி அவர்களின் முன்னுரை கிடைத்தது. அந்த முன்னுரை, ஸஹீஹ் தர்கீப் வத்தர்ஹீப் நூலின் முன்னுரையை விட எளிதில்
புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அதிகமான விளக்கங்கள் உள்ளன. எனவே அதையும் இணைத்துக்
கூறினால் வாசகர்களுக்குப் பயனுள்ளதாக அமையும் என்ற அடிப்படையில் அதையும் இங்கு
அளிக்கிறோம்.
இன்ன அமல் செய்தால் இவ்வளவு நன்மை என்று அமல்
களைச் சிறப்பித்துக் கூறுகின்ற ஹதீஸ்களின் அடிப்படையில் அமல்கள், வணக்கங்கள் செய்யலாம். ஆனால் இவ்வாறு அமல் செய்வது
வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டது. இவ்வாறு ஹதீஸ் கலை அறிஞர்கள்
தெரிவிப்பதாக ஜாமிவுஸ் ஸகீருக்கு, அல்ஃபத்ஹுல்
கபீர் என்ற பெயரில் இணைப்பு நூல் வெளியிட்ட அறிஞர் யூசுப் அன்னப்ஹானி
கூறியுள்ளார்.
அவருடைய இந்தக் கருத்துக்கு எதிராக நான் இரண்டு
விமர்சனங்களை அவர் முன்வைக்கிறேன்.
பலவீனமான ஹதீஸ்களை, அமல் களின் சிறப்புகளில் செயல்படுத்தலாம் என்று பொதுவாகச்
சொல்லும் போது, இதில் எவ்வித கருத்து வேறுபாடும் அறவே இல்லை
என்று பெரும் பான்மையான மக்கள் விளங்கிக் கொள்கின்றனர். ஆனால் உண்மை அவ்வாறில்லை.
ஹதீஸ் கலையில் விரிவாகக் கூறப்பட்டது போன்று இதில் மிகுந்த கருத்துவேறுபாடு
உள்ளது.
இதற்கு அஷ்ஷைகு ஜமாலுத்தீன் அல்காணம்
ரஹிமஹுல்லாஹ் அவர்களின் ஹதீஸ் சட்டங்கள் என்ற நூலை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
பலவீனமான ஹதீஸை அடிப் படையாகக் கொண்டு அமல் செய்யலாம்
என்ற கருத்தை, அனைவருக்கும் உரிய பொதுவான அனுமதியாக அறிஞர்கள்
எடுத்துக் கொள்ளவில்லை.
இமாம் இப்னு மயீன், இமாம் புகாரி, இமாம் முஸ்லிம், சட்ட அறிஞர் அபூபக்கர் இப்னு அரபி ஆகியோர்
இந்தக் கருத்தில் உடன்பாடு கொள்ளவில்லை என்று ஷைஹ் ஜமாலுத்தீன் அவர்கள் அந்நூலில்
குறிப்பிடுகின்றார்கள். இப்னு ஹஸ்மு அவர்களும் இதே கருத்தில் தான் உள்ளார்கள்.
"பொய்யர் அல்லது மெத்தனப்
போக்குள்ளவர் அல்லது யாரென்ற நிலை அறியப்படாத ஒருவர் ஓர் அறிவிப்பாளர் தொடரில்
இடம் பெறுகின்றார். இந்த அறிவிப்புத் தொடரை கிழக்கு நாட்டவர் அறிவிக்கின்றார்கள்; மேற்கு நாட்டவர் அறிவிக்கின்றார்கள்; இந்தத் தொடரை ஒரு கூட்டம் மற்றொரு கூட்டத்திடமிருந்து
அறிவிக்கின்றது; ஒரு நம்பகமானவர் மற்றொரு நம்பகமானவரிடமிருந்து
அறிவிக்கின்றார். இப்படியே நபி (ஸல்) அவர்கள் வரை அந்தத் தொடர் செல்கின்றது.
எனவே அப்படிப்பட்ட தொடரைக் கொண்டு அமைந்த ஹதீஸை
ஏற்றுக் கொள்ளலாம் என்று சில முஸ்லிம்கள் கூறுகின்றனர். ஆனால் அந்த ஹதீஸை
அறிவிப்பது நமக்கு ஆகுமானது (ஹலால்) அல்ல. அதை நம்புவதும் அதைக் கொண்டு
செயல்படுவதும் கூடாது என்று தனது அல்மிலல் வன்னிஹல் என்ற தமது நூலில் இப்னு ஹஸ்மு
தெரிவிப்பதாக அறிஞர் ஜலாலுத்தீன் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள்.
(ஜாமிவுஸ்ஸகீர் முன்னுரை)
முஸ்லிம் இமாம் கூறும் முட்டாள்கள்
அபுல்ஹுசைன் முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் ஆகிய
நான் கூறுகிறேன்:
சந்தேகத்திற்குரிய அறிவிப் பாளர்கள் குறித்தும், அவர்களுடைய குறைகள் குறித்தும் (நபிமொழி) அறிஞர்கள்
குறிப்பிட்டுள்ள இதைப் போன்ற தகவல்கள் ஏராளம் உள்ளன. அவற்றையெல்லாம் முழுமையாகக்
குறிப்பிட இந்த ஏடு போதாது. நாம் இதுவரை எடுத்துரைத்த தகவல்கள் இந்த விஷயத்தில்
நபிமொழி அறிஞர்களின் கோட்பாடு என்ன என்பதை அறிந்துகொள்ள விரும்பு வோருக்குப்
போதுமானவை ஆகும்.
நபிமொழி அறிவிப்பாளர்களிடம் காணப்பட்ட குறைகளை
எடுத் துரைப்பதையும், தங்களிடம் வினவப்பட்டபோது அவற்றைத் தெளிவாகக்
கூறுவதையும் நபிமொழி அறிஞர்கள் கட்டாயமாக்கிக் கொண்டதற்குக் காரணமே, அ(வற்றை மறைப்ப)தில் உள்ள மாபெரும் கேடுதான். ஆம்!
மார்க்கச் செய்தி என்பதே அனுமதிக்கப்பட்டது (ஹலால்), தடை செய்யப்பட்டது (ஹராம்), செய்யத்
தூண்டுவது (அம்ர்), தடுப்பது (நஹ்யு), ஆவலூட்டுவது (தர்ஃகீப்), எச்சரிப்பது (தர்ஹீப்) ஆகியவற்றில் ஒன்றாகத் தான் இருக்கும்.
இந்நிலையில் மார்க்கச் செய்தி களை அறிவிப்பவர்
உண்மைக்கும் நம்பகத் தன்மைக்கும் எடுத்துக் காட்டாக இல்லாமலிருந்தால் நிலைமை
என்னவாகும்? அவரைப் பற்றித் தெரிந்த ஒருவர் அவரிடமிருந்து
மார்க்கச் செய்திகளை அறிவிக்கப் போய், அவரிடமுள்ள குறைகளை விவரம் தெரியாத மக்களிடம் மறைத்தால், அது பாவம் மட்டுமல்ல; முஸ்லிம் பொதுமக்களுக்குச் செய்யும் துரோகமும் ஆகும்.
ஏனெனில், அச்செய்திகள் அனைத்துமோ பெரும்பாலானவையோ அடிப்படையற்ற பொய்யான தகவல்களாக
இருக்க, அவற்றைக் கேட்கும் சிலர் அப்படியே அவற்றைச்
செயல் படுத்திவிடலாம்; அல்லது சிலவற்றையாவது செயல்படுத்தி விடலாம்.
அதே நேரத்தில், நம்பத் தகுந்த, திருப்தி தருகின்ற அறிவிப்பாளர்கள் வாயிலாகக் கிடைத்துள்ள சரியான தகவல்கள்
ஏராளம் உள்ளன. அப்படியிருக்க, நம்பத் தகாத, திருப்தி கொள்ள முடியாத அறிவிப்பாளர்களின் செய்திகளுக்கு
என்ன அவசியம் நேர்ந்தது?
பலவீனமான ஹதீஸ்களையும் அடையாளம் தெரியாத
அறிவிப்பாளர் தொடர்களையும் தெரிந்துகொண்டே அறிவிப்பதில் சிலர் முனைப்புக்
காட்டுகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் பொதுமக்களிடம் தங்களை அதிக
அறிவுபடைத்தவர்கள் என்று காட்டிக்கொள்ள வேண்டுமென விரும்புகிறார்கள் என்றே
கருதுகிறேன். இன்னார் எத்துணை எத்துணை ஹதீஸ்களை அறிந்துள்ளார்; ஏராள மான ஹதீஸ்களைத் திரட்டியுள்ளார் என்று (சிலாகித்துக்)
கூறப்பட வேண்டும் என்பதே அவர்களின் இந்த அறிவிப்புகளுக்குக் காரணம்.
(ஹதீஸ் எனும்) கல்வித் துறையில் இந்தப் பாதையைத்
தேர்ந்தெடுத்துக் கொண்ட எவருக்கும் விமோசனமே கிடையாது. இவர்களை "அறிஞர்கள்' என்று குறிப்பிடுவதைவிட "முட்டாள்கள்' என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும்.
(தர்கீப் வத்தர்ஹீப் முன்னுரை)
"ஆர்வமூட்டுகின்ற மற்றும்
அச்சமூட்டுகின்ற ஹதீஸ்களை மார்க்கச் சட்டங்களைச் சொல்பவரிடமிருந்தே தவிர
மற்றவர்களிடமிருந்து அறிவிக் காதீர்கள்'' என்ற கருத்தைத் தான் முஸ்லிம் ஹதீஸ்
நூலில் இடம்பெற்ற இமாம் முஸ்லிம் அவர்களின் முன்னுரை தெரிவிக்கின்றது என்று ஹாபிழ்
இப்னு ரஜப் அவர்கள் திர்மிதியின் விரிவுரையில் குறிப்பிடுகின்றார்கள்.
அதனால் தான் அமல்களின் சிறப்புகளிலும், விரும்பத்தக்கவை என்று வரக்கூடிய அமல்களிலும் பலவீனமான
ஹதீஸை அடிப் படையாக வைத்து எந்தவொரு அமலையும் செய்யக்கூடாது என்ற நிலைப்பாட்டை
நோக்கி நான் (அல்பானி) மக்களை அழைக்கிறேன். இந்த நிலைப்பாட்டையே மார்க்கமாகக்
கடைப்பிடிக்கும்படி அவர்களிடம் நான் வேண்டுகிறேன்.
இதற்கு அடிப்படைக் காரணம், பலவீனமான ஹதீஸ் என்பது யூகம் மற்றும்
சந்தேகத்திற்குரியதாகவே இருக்கின்றது. உண்மை இவ்வாறிருக்கையில் யூகத்தை
அடிப்படையாகக் கொண்டு எப்படி அமல் செய்ய முடியும்?
அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.
அவர்களுக்கு இது பற்றி எந்த அறிவும் இல்லை.
ஊகத்தைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் பின்பற்றுவதில்லை. ஊகம் உண்மைக்கு எதிராக
ஒரு பயனும் தராது.
அல்குர்ஆன் 53:28
அவை வெறும் பெயர்கள் தவிர வேறு இல்லை.
நீங்களும், உங்கள் மூதாதையருமே அந்தப் பெயரைச்
சூட்டினீர்கள். இது பற்றி அல்லாஹ் எந்த சான்றையும் அருளவில்லை. ஊகத்தையும், மனோ இச்சைகளையும் தவிர வேறு எதையும் அவர்கள்
பின்பற்றவில்லை. அவர்களுக்கு அவர்களின் இறைவனிடமிருந்து நேர்வழி வந்து விட்டது.
அல்குர்ஆன் 53:23
யூகத்தின் அடிப்படையில் செயல்படுவதை இறைவன் பல
வசனங்களில் கண்டிக்கிறான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இதையே
கூறுகின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பிறர் மீது) கெட்ட எண்ணம் கொள்வது குறித்து
உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், கெட்ட எண்ணம்தான் பேச்சுக்கüலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்ற வர்கüன் குற்றங்குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக்
கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக் கொள்ளாதீர்கள். (அல்லாஹ்வின் அடியார்களே!)
சகோதரர்களாய் இருங்கள்.
நூற்கள்: புகாரி 5144, முஸ்லிம் 4646
பொதுவாக, பலவீனமான ஹதீஸை அறிவிக்கக் கூடாது என்ற என்னுடைய நிலைப்பாட்டிற்கு மாற்ற மான
கொள்கை கொண்டவர்களிடம் இதற்குக் குர்ஆன் ஹதீஸிலிருந்து எந்த ஆதாரமும் இல்லை.
இதற்குப் பதிலளிக்க வந்த பிந்தைய கால
அறிஞர்களாலும் எந்த ஆதாரத்தையும் அளிக்க முடிய வில்லை. அவர்கள் அளித்த ஒரு சில
ஆதாரங்களில் முரண்பாடுகள் உள்ளன. இதற்குக் கீழ்க்கண்ட இரண்டு செய்திகளை உதாரணமாகக்
கூறலாம்.
விரும்பத்தக்க அமல்களை பலவீன மான ஹதீஸ்களின்
அடிப்படையில் செய்யலாம். இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் மூலம் செய்யக்கூடாது என்று இப்னு
ஹம்மாம் கூறுகின்றார்.
(தொழுகை, நோன்பு போன்ற) ஐந்து கடமைகளின் சட்டங்களை பலவீனமான ஹதீஸ்கள் மூலம் எடுக்க
முடியாது என்று அறிஞர்கள் ஏகோபித்த முடிவில் உள்ளனர். விரும்பத்தக்க அமல்களும்
இந்த வகையைச் சார்ந்தது தான் என்று ஜலாலுத்தீன் அத்தவானி கூறுகின்றார்.
இந்த இரு செய்திகள் இவர்களின்
முரண்பாட்டுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அதே சமயம் இந்த எடுத்துக்காட்டில் நாம் கண்ட
அறிஞர்களின் ஏகோபித்த முடிவு நேர்மையான கருத்தாகும். இதற்குக் காரணம், பலவீனமான ஹதீஸிலிருந்து பெறப்படுகின்ற யூகத்தின் அடிப்
படையில் செயல்படக்கூடாது என்று முன்னர் நாம் கண்ட நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை
தான்.
வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் என்ற நூலில்
இடம்பெறுகின்ற, ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்களின்
கருத்து இதைத் தான் வலியுறுத்துகின்றது. அதை இப்போது பார்ப்போம்.
ஸஹீஹ் மற்றும் ஹஸன் அல்லாத பலவீனமான ஹதீஸ்களை
மார்க்கத்தில் ஆதாரமாகக் கொள்வது கூடாது. எனினும் ஒரு ஹதீஸ் பொய்யான ஹதீஸ் என்று
அறியப்படவில்லை. அதே சமயம் அந்த ஹதீஸ் உறுதியான ஹதீஸ் என்றும் அறியப்படவில்லை.
இத்தகைய ஹதீஸை அறிவிப்பது கூடும் என்று இமாம் அஹ்மத் பின் ஹன்பல் மற்றும் ஏனைய
அறிஞர்கள் கூறுகின்றனர்.
இதற்குக் காரணம், மார்க்க ஆதார அடிப்படையில் ஓர் அமல் அமைந்து, இதன் சிறப்பு குறித்து, பொய் என்று சொல்ல முடியாத ஒரு ஹதீஸ்
அறிவிக்கப்பட்டால் அதற்குக் கூலி கிடைக்கலாம் என்பது தான். (இப்னு தைமிய்யா
அவர்களின் இந்த நிலைப் பாட்டில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உடன் பாடில்லை) பலவீனமான
ஹதீஸ் அடிப்படையில் செய்யப்படும் ஒரு அமலை கடமை என்றோ, விரும்பத்தக்கது என்றோ எந்தவொரு அறிஞரும் கூறவில்லை.
அப்படியொரு கருத்தை யாராவது சொன்னால் அவர் இது
தொடர்பான அறிஞர்களின் ஏகோபித்தக் கருத்துக்கு மாற்றமாக நடந்தவர் ஆவார்.
அஹ்மத் பின் ஹன்பல் மற்றும் அவரைப் போன்ற
அறிஞர்கள் மார்க்கத்தில் இதுபோன்ற ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டதில்லை. பலவீனமான ஹதீஸை
அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் மார்க்க விஷயங்களுக்கு ஆதாரமாகக் கொண்டார் என்று
யாராவது சொன்னால் அது சரியான கருத்தல்ல. அவர் தவறான கருத்தைக் கூறியவராவார்.
இவ்வாறு இப்னு தைமிய்யா அவர்கள்
குறிப்பிடுகின்றார்கள்.
இதுதொடர்பாக அறிஞர் அஹ்மத் ஷாகிர் என்பார், அல்ஃபாயிலுல் ஹஸீஸ் என்ற நூலில் கூறுவதாவது:
ஹலால், ஹராம் தொடர்பாக நாம் அறிவிக்கும் போது அந்த ஹதீஸின் தரம் குறித்து நாம் கடுமை
காட்டுவோம். சிறப்புகள் போன்ற வற்றைக் குறித்து அறிவிக்கும் போது ஹதீஸின் தரம்
குறித்து நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோம் என்று அஹ்மத் பின் ஹன்பல், அப்துர்ரஹ்மான் பின் மஹ்தி, அப்துல்லாஹ் பின் அல்முபாரக் ஆகியோர் கூறியுள்ளார்கள்.
இதனால் அவர்கள் பலவீனமான ஹதீஸ்களை ஆதாரமாகக்
கொள்ள லாம் என்று கூறுவதாக இதை நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது.
மாறாக, சில ஹதீஸ்கள் ஸஹீஹ் என்ற தரத்தை விடக் குறைந்து ஹஸன் என்ற தரத்தில்
அமைந்திருக்கும். அப்படி ஹஸன் என்ற தரத்தில் அமைந்த அத்தகைய ஹதீஸ்களைக்
கண்டுகொள்ளாமல் விட்டு விடுவோம் என்று அவர்கள் கூறியிருப்பதாகவே நான் கருதுகிறேன்.
ஆரம்ப கால கட்டத்தில் ஒரு ஹதீஸை ஸஹீஹ்
(சரியானது) அல்லது லயீஃப் (பலவீனமானது) என்று தான் தரம் பிரித்தனர். ஹதீஸ் கலை
உருவான பின்னர் தான், ஸஹீஹான ஹதீஸை விடக் கொஞ்சம் தரத்தில் குறைந்ததை
ஹஸன் என்று தரம் பிரிக்கும் வழக்கம் உருவானது. இதுதான் அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள்
இவ்வாறு கூறியதற்கு அடிப்படைக் காரணமாகும் என்று நான் நினைக்கிறேன். அல்லாஹ் மிக
அறிந்தவன்.
இவ்வாறு அறிஞர் அஹ்மத் ஷாகிர் அவர்கள்
கூறுகின்றார்கள்.
"ஹலால், ஹராம் தொடர்பாக அறிவிக்கும் போது அந்த ஹதீஸின் தரம்
குறித்து நாம் கடுமை காட்டுவோம். சிறப்புகள் குறித்து அறிவிக்கும் போது ஹதீஸின்
தரம் குறித்து நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோம்' என்று கூறிய அஹ்மத் பின் ஹன்பல், அப்துர் ரஹ்மான் பின் மஹ்தி, அப்துல்லாஹ்
பின் அல்முபாரக் போன்ற அறிஞர்களுக்கு நான் ஒரு விளக் கத்தைக் கொடுக்க
நினைக்கின்றேன்.
கண்டு கொள்ளாமல் விடுவது என்றால் அதன் பொருள், அந்த ஹதீஸ்களின் பலவீனத்தை அவர்கள் சொல்லாமல்
விட்டுவிடுவதாகும். அதே சமயம் அந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடரை விட்டுவிட
மாட்டார்கள். அந்த அறிவிப்பாளர்கள் தொடர் மூலம் அதில் இடம்பெறும் பலவீனமான
அறிவிப்பாளர்களை அடையாளம் கண்டு, அந்த ஹதீஸ்
பலவீனமானது என்ற முடிவுக்கு ஒருவர் வந்து விடலாம்.
ஆனால் அறிவிப்பாளர்கள் தொடரைக் குறிப்பிடாமல்
விட்டு விட்டார்கள் என்றால் அவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ள வேண்டும். கடந்த
காலத்தில் ஹதீஸ் கலையில் ஈடுபட்ட மார்க்க அறிஞர்கள், அறிவிப்பாளர் தொடருடன் தான் ஹதீஸ்களைப் பதிவு செய்தார்கள். இதுதான் ஹதீஸ்
துறையைப் பாதுகாத்து வருகின்றது.
இந்த அடிப்படையில் இதைப் புரிந்து கொண்டால்
மேற்கண்ட அறிஞர்கள் பலவீனமான ஹதீஸ் களைக் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள் என்ற தவறான
கண்ணோட்டம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
நமது விமர்சனம்
தமிழக ஆலிம்கள் மூச்சுக்கு முன்னூறு தடவை இமாம்
புகாரி, இமாம் முஸ்லிம் என்று குறிப்பிடுவார்கள்.
அவர்களது நூற்களைப் பற்றிக் குறிப்பிடும் போது புகாரி ஷரீப், முஸ்லிம் ஷரீப் என்று போற்றிப் புகழ்ந்து கூறுகின்றனர்.
ஆனால் நடைமுறையில் இந்த இமாம்களுக்கு மாற்றமாக நடக்கின்றனர். பலவீனமான ஹதீஸ் பற்றி
புகாரி இமாமின் பார்வையை விளக்கவோ, விவரிக்கவோ தேவையில்லை. அதுபோல் தான் இமாம் முஸ்லிம் அவர்களின் பார்வையும்!
"பலவீனமான ஹதீஸ்களின்
பாதையைத் தேர்வு செய்து, அந்தப் பாதையில் தானும் சென்று, ஒரு சமுதாயத்தையும் வழிகேட்டின்பால் தாரை வார்க்கின்ற இந்த
முல்லாக்கள் ஆலிம்கள் அல்ல, அறிவிலிகள்! முதிர்ந்த சிந்தனையுடையவர்கள் அல்ல, முட்டாள்கள்'' என்று இமாம் முஸ்லிம் அவர்கள் தமது நூலான முஸ்லிமின் முன்னுரையில் கடுமையாகச்
சாடுகின்றார்கள்.
இமாம் முஸ்லிம் போன்றோர் கூறிய ஹதீஸ் துறை
இலக்கணத்தின் அடிப்படையில் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கின்ற தவ்ஹீத் ஜமாஅத்தை
இந்த முல்லாக்கள் பழிப்பது தான் இதில் வேடிக்கை.
உண்மையில் இவர்கள் தான் பழிப்பதற்கும்
பரிகாரத்திற்கும் உரியவர்கள். இதை மக்கள் நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
நாம் இங்கு கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம், இவர்கள் மூச்சுக்கு முன்னூறு தரம் இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் என்றெல்லாம் சொல்வது கள்ள வேடம், கபட நாடகம் ஆகும்.
EGATHUVAM SEP 2015