Mar 1, 2017

அண்ணலாரின் அச்சம் – SEP 2015

அண்ணலாரின் அச்சம் – SEP 2015
எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்

மனித குலத்திற்கு மிகச்சிறந்த முன்மாதிரியாக இருப்பவர், முஹம்மது நபி (ஸல்) அவர்கள். அவர்களுடைய வாழ்க்கையிலே அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அறநெறிகளும், அறிவுரைகளும் நிறைந்து இருக் கின்றன. அண்ணலார் அவர்களுடைய சிந்தனைகள், செயல்பாடுகள் அனைத்திலும் அழகிய வழி காட்டுதல்கள் அமைந்துள்ளன. அந்த வகையில், ஒரு முக்கியமான போதனையை இங்கு தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாழ்க்கையிலே பல்வேறு காரியங்களைப் பற்றி அஞ்சி இருக்கிறார்கள். பல சமயங்களில் சமுதாயத்தின் நிலை குறித்தும் தமது அச்சத்தை, பயத்தை வெளிபடுத்தி இருக்கிறார்கள். நபிகளாருக்கு இருந்த அச்சம் நமக்கும் இருக்க வேண்டும். நாமும் அந்தக் காரியங்களை, பண்புகளை விட்டு விலகி வாழ வேண்டும். ஆனால், அதிகமான மக்கள் அவற்றை அறியாமல் இருக்கிறார்கள். அறிந்து கொண்டாலும், அவர்களிடம் இருக்கும் அச்ச உணர்வு அரிதாகவும் அர்த்தமற்றதாகவும் இருக்கிறது. ஆகவே, அது குறித்து சில செய்திகளை இப்போது பார்ப்போம்.
பொதுநலத்தைப் பற்றிய அச்சம்
வாழ்க்கையில் தவறான சிந்தனை களை விதிமுறையாக வகுத்துக் கொண்டு செயல்படும் மக்கள் இருக்கிறார்கள். எதற்காகவும் மற்றவர்களுக்காக என்னை மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை எனக்கு இல்லை என்று எப்போதும் சுயநலமாக நடக்கும் நபர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சர்வ சாதாரணமாக பொதுமக்களுக்குத் தொல்லை கொடுக்கிறார்கள்; இடையூறு விளைவிக்கிறார்கள்.
இத்தகைய நடவடிக்கை நம்பிக்கைக் கொண்டவர்களிடம் இருக்கவே கூடாது. நம்மைச் சுற்றியிருக்கும் மக்களுக்கு எவ் விதமான சிரமத்தையும் தரக்கூடாது. மார்க்க விஷயம், உலக விவகாரம் என்று எதிலும் எவருக்கும் மோசமான பாதிப்பை, நெருக்கடியை ஏற்படுத்தி விடக் கூடாது. இவ்வாறு, பொதுநலம் கலந்த அச்சம் நமக்கு இருக்க வேண்டும். இந்த அழகிய அறிவுரை மாமனிதர் நபிகளாருடைய வாழ்க்கையில் பரவிக் கிடக்கிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் (நாள்) இரவு இஷாத் தொழுகையைத் தாமதப்படுத் தினார்கள். (பள்ளியில் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த) மக்கள் உறங்குவதும் விழிப்பதும் மீண்டும் உறங்குவதும் விழிப்பதுமாக இருந்தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் எழுந்து "தொழுகைக்கு வாருங்கள்'' என்று   (நபிகளாரை) அழைத்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தலையிலிருந்து நீர் சொட்டத் தம் கையை தலையில் வைத்(து தமது தலையிலிருந்து தண்ணீரைத் துடைத்)தவர்களாக புறப்பட்டு வந்ததை இன்றும் நான் பார்ப்பது போன்றுள்ளது. அப்போது அவர்கள், "என் சமுதாயத்தாருக்கு சிரமம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் எனக்கு இல்லையாயின் அவர்களை இவ்வாறே (இந்த நேரத்திலேயே) தொழுமாறு  பணித்திருப்பேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புஹாரி (571) முஸ்லிம் (1121)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருநாள் நள்ளிரவில் (வீட்டிலிருந்து) புறப்பட்டுச் சென்று பள்ளியில் தொழுதார்கள். அப்போது சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழலாயினர். காலையில் மக்கள் இது பற்றிப் பேசலானார்கள். (மறு நாள்) முந்திய நாளைவிட அதிக மக்கள் திரண்டு நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதனர். (மூன்றாம் நாள்) காலையிலும் இது பற்றிப் பேசிக்கொண்டனர். அந்த மூன்றாம் நாள் இரவிலும் பள்ளிவாசலுக்கு வந்தவர்களின் கூட்டம் இன்னும் அதிகமானது. அன்றும் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தபோது அவர்களைப் பின்பற்றித் தொழுதனர். நான்காம் நாள் இரவு வந்தபோது மக்கள் அதிகரித்ததால் பள்ளி இடம் கொள்ளவில்லை.  (அன்று இரவு நபிகளார் அவர்கள் பள்ளிக்கு வரவில்லை) சுப்ஹுத் தொழு கைக்குத்தான் அவர்கள் வந்தார்கள். ஃபஜ்ர் தொழுகையை முடித்ததும் மக்களை முன்னோக்கி ஏகத்துவ உறுதிமொழி கூறியபின் "அம்மா பஅத்' (இறைவாழ்த்துக்குப் பின்...) எனக் கூறிவிட்டு, நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமல் இல்லை; எனினும் (இது) உங்கள் மீது கடமையாக்கப்பட்டு அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடுமோ என்று நான் அஞ்சினேன் (ஆகவே தான் நேற்றிரவு நான் இரவுத் தொழுகைக் காக பள்ளிக்கு வரவில்லை)'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புஹாரி (729), (924), (1124)
என் சமுதாயத்திற்கு அல்லது மக்களுக்கு   நான் சிரமத்தை ஏற்படுத்தி விடுவேனோ என்று (அச்சம்) இல்லையாயின் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்க வேண்டுமென நான் அவர்களுக்கு கட்டளை பிறப்பித்திருப்பேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புஹாரி (887)
என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்பட்டு விடும் என்னும் அச்சம் மட்டும் எனக்கில்லாவிட்டால் நான் எந்தச் சிறு படைக் குழுவிலிருந்தும் (அதில் கலந்து கொள்ளாமல்) பின்தங்கியிருக்க மாட்டேன். ஆயினும், என்னைச் சுமந்து செல்லும் வாகனமும் என்னிடம் இல்லை. என் தோழர்களை ஏற்றிச் செல்ல (போதிய) வாகன வசதியும் என்னிடம் இல்லை. ஆனால், அவர்கள் என்னுடன் (போருக்கு) வர முடியாமல் பின்தங்க வேண்டி யிருப்பது எனக்கு மனவேதனை அளிக்கின்றது. மேலும், நான் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு அதனால் கொல்லப்பட்டு, மீண்டும் உயிராக்கப்பட்டு மீண்டும் (இறை வழியில் போரிட்டுக்) கொல்லப்பட்டு, மீண்டும் உயிராக்கப்பட (இவ்வாறே மீண்டும் மீண்டும் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்ய) வேண்டும் என்று விரும்புகிறேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புஹாரி (36) (2972), முஸ்லிம் (3819)
இஸ்லாமிய மார்க்கத்தில் இருக்கும் சட்டங்கள் அனைத்தும் எளிமை யானவை. மக்களுக்கு அவர்களின் சக்திக்கு மீறி சிரமம் கொடுக்காதவை. இந்நிலையில், குர்ஆன் ஹதீஸை மட்டும் முழுமையாக ஏற்க மறுத்து அல்லது மறைத்து மக்களை வழிகெடுக்கும் மத்ஹபுவாதிகள் மேலிருக்கும் செய்திகளை சிறிதாவது சிந்திப்பார்களா? காரணம், இவர்கள் இதற்கு இந்த நன்மை, அதற்கு அந்தச் சிறப்பு என்றெல்லாம் பொய்யாகக் கதையளந்து பித்அத்கள் மூலம் மக்களுக்கு கஷ்டம் கொடுக்கிறார்கள்.
இதுபோன்று, அரசியலையும் ஜிஹாதையும் பற்றி மட்டும் கண்மூடித்தனமாக வாய்கிழியப் பேசும் போலிகள், மார்க்கத்திற்கு புறம்பாக தனிமனிதனை மட்டுமல்ல ஒட்டு மொத்த சமுதாயத்தையே மோசமான நிலைக்குத் தள்ளுகிறார்கள். இவர்கள் எல்லாம் கண்டிப்பாக நபிகளாரிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
அலட்சியத்தைப் பற்றிய அச்சம்
மறுமை வெற்றிக்காக வாழும் முஃமின்கள், மார்க்க கடமைகளை மிகவும் கவனத்தோடு கடைபிடிக்க வேண்டும். நன்மையான காரியங்களில் ஆர்வத்துடன் திகழ வேண்டும். சந்தர்ப்பம் வாய்க்கும் போது அதைத் தொலைத்துவிடாமல் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தொழுகை, நோன்பு, ஜகாத் என்று மார்க்கத்தில் இருக்கும் எந்தவொரு வணக்க வழிபாட்டிலும், நற்காரியத்திலும் பொடும்போக்குத் தன்மைக்கு இடம் தரக்கூடாது. கவனக் குறைவான தன்மைகளில் ஏமாந்து விடாமல் விழிப்போடு இருக்க வேண்டும். அலட்சியம் ஆபத்தானது என்ற அச்சம் நமக்கு இருக்கும் போது, அது எல்லாக் காலத்திலும் நன்மையின் பக்கம் விரைவதற்கும் குறைகளைச் சரிசெய்து கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.
"அல்லாஹ்வுக்கு எவரையும் இணையாக்காதவராக எவர் (மரணத் திற்குப் பிறகு) அல்லாஹ்வைச் சந்திக்கின்றாரோ, அவர் உறுதியாக சொர்க்கம் புகுவார்'' என முஆத் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு முஆத் (ரலி) அவர்கள் "இந்த நற்செய்தியை நான் மக்களுக்குச் சொல்லட்டுமா?'' என்று கேட்க, "(இல்லை) வேண்டாம். மக்கள் (இதை மட்டும் நம்பிக்கொண்டு நல்லறங்கள் புரியாமல்) அசட்டையாக இருந்து விடுவார்களோ என நான் அஞ்சுகிறேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புஹாரி (129)
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இரவில் (பயணம்) சென்று கொண்டிருந்தோம். அப்போது மக்களில் சிலர், "அல்லாஹ்வின் தூதரே! (பயணத்தை சற்று நிறுத்தி) எங்களை இளைப்பாறச் செய்ய லாமே!'' என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் (ஃபஜ்ர்) தொழாமல் உறங்கிவிடுவீர்களோ என நான் அஞ்சுகிறேன்'' என்றார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்கள், "உங்களை நான் விழித்தெழச் செய்கிறேன்'' என்று கூறினார்கள். எனவே அனைவரும் (பயனத்தை நிறுத்தி) படுத்துக்கொண்டனர். பிலால் (ரலி) அவர்கள் தமது முதுகைத் தமது வாகனத்தின் மீது சாய்த்துக் கொண்டிருந்தபோது தம்மையும் மீறி கண்ணயர்ந்து உறங்கிவிட்டார்கள். சூரிய வட்டத்தின் ஒரு பகுதி உதித்துவிட்ட நிலையில் நபி (ஸல்) அவர்கள் (முதன் முதலில்) உறக்கத்திலிருந்து விழித்தார்கள். உடனே, "பிலால்! நீங்கள் சொன்னது என்ன ஆயிற்று?'' என்று கேட்டார்கள். "இது போன்று உறக்கம்  எனக்கு எப்போதும் ஏற்பட்ட தில்லை'' என்று பிலால் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் தான் நாடும்போது உங்கள் உயிர்களை கைப்பற்றிக் கொள்கிறான்; தான் நாடும்போது உங்களிடம் திருப்பித் தருகின்றான்'' என்று கூறிவிட்டு, "பிலால்! எழுந்து, பாங்கு சொல்லி தொழுகைக்கு மக்களை அழைப்பீராக!'' என்று கூறினார்கள். பின்னர் அங்கசுத்தி (உளூ) செய்து, சூரியன் உயர்ந்து தெளிவாகத் தென்பட்டபோது (ஃபஜ்ர்) தொழு(கையை முன்னின்று நடத்)திடலானார்கள்.
அறிவிப்பவர்: அபூகத்தாதா (ரலி)
நூல்: புஹாரி (595)
நபி (ஸல்) அவர்கள் வேலைப் பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி ஆடை ஒன்றை அணிந்து கொண்டு தொழுதார்கள். (தொழுது கொண்டிருக்கும் போது) அதன் வேலைப்பாடுகளை  ஒரு முறை கூர்ந்து கவனித்தார்கள். தொழுது முடித்ததும், "எனது இந்த கறுப்புக் கம்பளி ஆடையை (இதை எனக்கு அன்பளித்த) அபூஜஹ்மிடம் கொடுத்து விட்டு, அபூஜஹ்மிடம் இருக்கும் (வேலைப்பாடுகளற்ற) "அன்பிஜான்' (நகர எளிய) ஆடையை என்னிடம் (வாங்கிக்) கொண்டு வாருங்கள். இந்த ஆடை சற்று முன்னர் எனது தொழுகையி லிருந்து என் கவனத்தை ஈர்த்து விட்டது'' என்று சொன்னார்கள். ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து வரும் மற்றோர் அறிவிப்பில், "நான் தொழுது கொண்டிருக்கும் போதே அதன் வேலைப்பாடுகளைக் கூர்ந்து கவனித்துக்கொண்டு  இருந்தேன். அது என்னைக்  குழப்பிவிடுமோ என நான் அஞ்சினேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புஹாரி (373)
பாவங்களைப் பற்றிய அச்சம்
மனித இனத்திற்குத் தீங்கு தரும் அனைத்தையும் இஸ்லாம் தடுத்துள்ளது. நம்மிடம் இருக்கக் கூடாத தவறுகள், பாவங்கள் தொடர்பாக திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் தெளிவாகச் சொல்லப்பட்டு உள்ளன. அவ்வாறான, அநீதியான, அநியாயமான செயல்களை விட்டும் நாம் அகன்று இருக்க வேண்டும். சிறிய பாவம் தானே செய்கிறோம் என்று எதிலும் அசட்டையாக இருந்துவிடக் கூடாது.
எந்தக் காலகட்டத்திலும் மார்க்கத்தின் அனுமதி இல்லாத பாதையில் நமது வாழ்க்கை பயணம் இருந்துவிடக் கூடாது. இந்த எச்சரிக்கைக் கலந்த பயம் என்றும் நம்மிடம் இருக்க வேண்டும். இந்த அச்சம் இல்லாதவர்கள் தர்ஹா, மவ்லூது, வட்டி, வரதட்சனை, மோசடி போன்ற தடுக்கப்பட்ட காரியங்களில் வீழ்ந்து விடுக்கிறார்கள். பாவங்களுக்கு பலியாகி விடுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் பாதையில் கிடந்த ஒரு பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள். "இது ஸதகா (தர்ம)ப் பொருளாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் இதை நான் தின்றிருப்பேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புஹாரி (2431)
நான் என் வீட்டாரிடம் திரும்பி விடுகின்றேன். என் படுக்கையின் மீது பேரீச்சம் பழம் விழுந்திருப்பதைப் பார்த்து அதைத் தின்பதற்காக எடுக்கின்றேன். அதற்குள் அது ஸதகாப் பொருளாக இருக்குமோ என்னும் அச்சம் எனக்கு ஏற்படுகின்றது; உடனே அதைப் போட்டு விடுகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புஹாரி (2432)
"நாங்கள் இந்த (வேட்டை) நாய்களின் மூலம் வேட்டையாடும் ஒரு சமுதாயத்தார் ஆவோம்'' என்று நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறி (அதன் சட்டம் என்னவென்று) வினவினேன். அதற்கு அவர்கள், "பயிற்சி அளிக்கப்பட்ட உங்கள் (வேட்டை) நாய்களை அல்லாஹ்வின் பெயர் சொல்லி (வேட்டையாட) நீங்கள் அனுப்பி யிருந்தால் உங்களுக்காக அவை கவ்விப் பிடித்து வைத்திருப்பவற்றை நீங்கள் உண்ணலாம்; அவை அதைக் கொன்றுவிட்டாலும் சரியே! நாய் தின்று விட்டதை மட்டும் உண்ணாதீர்கள்! ஏனென்றால், அது தனக்காக அதைப் பிடித்து வைத்திருக்குமோ என நான் அஞ்சுகிறேன். இவ்வாறே வேறு நாய்கள் அதனுடன் கலந்து விட்டிருந்தாலும் (அது வேட்டை யாடிக் கொண்டு வரும் பிராணியை) உண்ணாதீர்கள்!
அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி)
நூல்: புஹாரி (5483), முஸ்லிம் (3900)
"உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுவதெல்லாம் சிறிய இணை வைப்பைத் தான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அதற்கு நபித்தோழர்கள்) "சிறிய இணை வைப்பு என்றால் என்ன? அல்லாஹ் வின் தூதரே'' என்று கேட்டார்கள். "அது, (ஒரு நல்லறத்தைப் பிறருக்கு காட்ட வேண்டுமென) முகஸ் துதிக்குச் செய்வதாகும்'' என்று பதிலளித்தார்கள். மேலும், "மனிதர் களுக்கு கூலிகள் வழங்கப்படும் மறுமை நாளில் (முகஸ்திக்காக அமல் செய்த) நபர்களிடம், பூமியில் யாருக்கு காட்டுவதற்காக அமல் செய்தீர்களோ அவர்களிடம் சென்று, நீங்கள் கூலியை பெறுவீர்களா கவனியுங்கள் என அல்லாஹ் கூறுவான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: மஹ்மூத் பின் லபீத் (ரலி)
நூல்: அஹ்மத்  (22523)
குழப்பத்தைப் பற்றிய அச்சம்
நம்பிக்கையாளர்கள் அல்லாஹ் வையும் அவனது தூதரையும் மட்டும் பின்பற்றுவதில் உறுதியாக இருக்க வேண்டும். எந்தவொரு உலக விவகாரத்தையும் மார்க்கத்திற்கு உட்பட்ட வகையில் கையாள வேண்டும்.
சமுதாயத்தில் அனைவரும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள். மக்களுக்கு மத்தியில் பலவிதமான பிரச்சனைகள், நெருடல்கள் இருக்கவே செய்யும். இந்நிலையில் முற்போக்கு சிந்தனையோடும் சமூக அக்கறையோடும் நடந்து கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் நாசத்தை, சீர்கேட்டை ஏற்படுத்திவிடக் கூடாது.
குறிப்பாக, சிக்கல்களை முடிந்தளவு தீர்க்க வேண்டுமே தவிர, ஒருபோதும் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. தனிப்பட்ட வாழ்விலும் சமூக வாழ்விலும் எவ்வித சந்தேகத்தையும் குழப்பத்தையும் கிளறிவிடக் கூடாது என்ற சுதாரிப்பான பயம் இருக்க வேண்டும். நபிகளாரின் பின்வரும் உலகம் தொடர்பான நிகழ்வுகளில் நமக்குப் படிப்பினை இருக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் ரமளானில் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்கும்போது அவர் களைச் சந்திக்க நான் செல்வேன். சற்று நேரம் அவர்களுடன் பேசிவிட்டு எழுவேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னுடன் எழுந்து பள்ளியின் வாசல் வரை வருவார்கள். பள்ளியின் வாசலுக்கு அருகிலிருந்த உம்மு சலமாவின் வாசலை அடைந்தபோது அன்ஸாரிகளில் இருவர் நடந்து சென்றனர். நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் கூறினர். அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், "நில்லுங்கள்; இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த் ஹுயை ஆவார்'' எனக் கூறினார்கள். அவ்விருவரும் (ஆச்சரியத்துடன்) "சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்றனர். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியது அவ்விருவருக்கும் உறுத்தியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஊடுருவியிருக்கிறான்; உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தை அவன் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன்'' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்கள்: ஸஃபிய்யா (ரலி)
நூல்: புஹாரி (2035) (2038) (3101)
நான் நபி (ஸல்) அவர்களிடம் கஅபாவின் அருகிலுள்ள ஒரு (வளைந்த சிறு) சுவரைப் பற்றி, "இது கஅபாவில் சேர்ந்ததா?'' எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் "ஆம்!'' என்றார்கள். பிறகு நான் "எதற்காக அவர்கள் இதனை கஅபாவோடு இணைக்கவில்லை?'' எனக் கேட்டேன். அதற்கவர்கள் "உனது சமூகத்தாருக்குப் பொருளா தார நெருக்கடி ஏற்பட்டதால்தான்!'' என்று பதிலளித்தார்கள். நான் "கஅபாவின் வாசலை உயரத்தில் வைத்திருப்பதற்குக் காரணம் என்ன?'' எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், தங்களுக்கு வேண்டியவர் களை உள்ளே அனுமதிப்பதற்காகவும்  தங்களுக்கு வேண்டாதவர்களைத் தடுத்துவிடுவதற்காகவும்தான் உனது கூட்டத்தினர் அவ்வாறு செய்தார்கள். "உன் கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாக இருப்பதால், அவர்களின் உள்ளத்தில் வெறுப்பு தோன்றும் என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் நான் இச்சுவரை கஅபாவினுள் இணைத்து அதன் கதவைக் கீழிறக்கி பூமியோடு சேர்ந்தாற் போலாக்கியிருப்பேன்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புஹாரி 1584, 7243, முஸ்லிம் 2592
உலக மோகத்தைப் பற்றிய அச்சம்
உலகம் என்பது மறுமை வாழ்வுக்கான சோதனைக் களம். இதை நினைவில் கொண்டு மறுமை வெற்றியை நோக்கியே நமது பயணம் இருக்க வேண்டும். இம்மையின் தேவைகளுக்கான தேடலில் மொத்தமாக மூழ்கிவிடக் கூடாது; சொர்க்கத்தின் இலக்கை மறந்துவிடக் கூடாது.
பணம், பதவி போன்ற சுக போகங்களுக்குப் போட்டிப் போட்டு ஈமானை, இறையச்சத்தை இழந்துவிடக் கூடாது. இங்கு இன்பமாக இருப்பதற்காக மறுமையில் துன்பம் தரும் செயல்கள் பக்கம் போய்விடக் கூடாது; வரம்புகளை மீறிவிடக்கூடாது.
மக்களை உலக மோகம் வழிகெடுத்து விடும்; அவர்களை ஆடம்பர ஆசை அழித்துவிடும் என்பதால் அது குறித்து அல்லாஹ் வின் தூதர் அவர்கள் அதிகம் அஞ்சி இருக்கிறார்கள். அச்சமூட்டி எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். அப்போதவர்கள் "என் வாழ்விற்குப் பின், உங்களுக்கிடையே உலக வளங்களும் அதன் கவர்ச்சிப் பொருட்களும் தாராளமாகத் திறந்து விடப்படுவதைப் பற்றியே நான் அஞ்சுகிறேன்'' எனக் கூறினார்கள்.  ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் என்ற) நன்மை தீமையை உருவாக்குமா?'' எனக்கேட்டதும் நபி(ஸல்) அவர்கள் மௌனமாகி விட்டார்கள்.
உடனே அந்த நபரிடம், "என்ன ஆனது உமது நிலைமை? நீர் நபி (ஸல்) அவர்களிடம் பேசுகிறீர்; ஆனால் நபி (ஸல்) அவர்களோ உம்மிடம் பேசாமலிருக்கிறார்களே!'' எனக் கேட்கப்பட்டது. நாங்கள் நபி (ஸல்)  அவர்களுக்கு வஹீ அருளப் படுகிறது எனக் கருதினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் வியர்வையைத் துடைத்துவிட்டு, "கேள்வி கேட்டவர் எங்கே?'' என அவரைப் பாராட்டுவது போன்று கேட்டார்கள். பிறகு, "நன்மையானது தீமையை உருவாக்காதுதான்; நிச்சயமாக, நீர்நிலைகளின் கரைகளில் விளைகின்ற தாவரங்களில் சில, (தம் நச்சுத் தன்மையால் அவற்றை மேய்கின்ற) கால் நடைகளைக் கொன்று விடுகின்றன; அல்லது மரணத்தின் விளிம்புக்கே (அவற்றைக்) கொண்டு போகின்றன; -பசுமையான (நல்ல வகைத்) தாவரங்களைத் தின்பவற்றைத் தவிர! அவற்றைக் கால்நடைகள் வயிறு புடைக்கத் தின்று சூரிய ஒளியை முன்னோக்குகின்றன. மேலும் சாணம் போட்டு, சிறுநீர் கழித்து மீண்டும் மேய்கின்றன. (இது போலவே உலகிலுள்ள) இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எனவே ஒரு முஸ்லிம், தன் செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் வழிப்போக்கர் களுக்கும் கொடுத்துக் கொண்டி ருக்கும் வரை அது அவனுக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக் கொள்கின்றானோ - அவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்ற வனாவான். மேலும் மறுமை நாளில் அந்தச் செல்வம் அவனுக்கு எதிராக சாட்சியம் சொல்லும்'' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புஹாரி (1465) (2842)
உலக மோகத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்னும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அச்சமூட்டி எச்சரிக்கை செய்துள் ளார்கள். அவற்றை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம்.
 சென்ற இதழின் தொடர்ச்சி...

EGATHUVAM SEP 2015