Mar 20, 2017

தப்லீக் ஜமா அத்தை விட்டு தவ்பா செய்த தஃலீம் புத்தக வெளியீட்டாளர் – 2

தப்லீக் ஜமா அத்தை விட்டு தவ்பா செய்த தஃலீம் புத்தக வெளியீட்டாளர் – 2


தஃலீம் தொகுப்பு வெளியீட்டாளர் முஹம்மது அனஸ் அவர்களின் பேட்டி தொடர்ச்சி


பேட்டியாளர் : அஹ்லெ ஹதீசுக்கு வந்த பிறகு நீங்கள் ஏதேனும் சோதனைகளை எதிர்கொள்கின்றீர்களா?

முஹம்மது அனஸ் :
நாம் பல்வேறு சிந்தனைகளை உடைய மக்களுடன் வாழ்கின்றோம். இப்படிப்பட்ட சூழலில் நான் குர்ஆன் ஹதீசுக்கு ஒத்தமைந்த நூல்களை என் புத்தக நிலையத்தில் வைக்க ஆரம்பித்தேன். தங்கள் சிந்தனைக்கு மாற்றமான நூல்கள் என்றோ அல்லது ஸலஃபீ நூற்கள் என்றோ தெரிந்தால் போதும், மக்கள் அதைச் சீண்டுவது கிடையாது. அல்லாமா பின் பாஸ் மையம் என்று டெல்லியில் உள்ளது. அங்கிருந்து நான் நூல்களைத் தருவித்தேன். ஆனால் அவற்றை யாரும் வாங்குவது கிடையாது. காரணம், அந்நூல்களின் ஆசிரியர் லுக்மான் ஸலஃபீ என்பதால் தான். அது தான் நான் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் ஆகும்.

பேட்டியாளர் :
நீங்கள் மட்டும் தான் குர்ஆன் ஹதீஸ் படி நடக்க ஆரம்பித்துள்ளீர்களா? அல்லது உங்கள் குடும்பம் முழுவதுமா?

முஹம்மது அனஸ் :
அல்ஹம்துலில்லாஹ். எனது மனைவி, குழந்தைகள் அனைவரும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலேயே தொழுகின்றனர். நாங்கள் ஏற்கனவே கைலானி என்பவர் எழுதிய தொழுகை நூலைப் படித்து முடித்திருக்கின்றோம். இது போல் புத்தகங்களைப் படிப்பதற்காக அன்றாடம் கால் மணி நேர அமர்வை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

பேட்டியாளர் :
தங்களுடைய மகளார் (கணவர் வீட்டில்) பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருப்பதாக (மற்றொரு பேட்டியில்) தெரிவித்திருந்தீர்கள். உங்களுடைய மகளார் ஒவ்வொரு தக்பீரின் போதும் கைகளை உயர்த்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையா? அல்லது வேறு பிரச்சனையா?

முஹம்மது அனஸ் :
கைகளை உயர்த்துவதைத் தவிர்த்து வேறு என்ன விவகாரம் இருக்க முடியும்? விவகாரமே இது தான். தொழுகையில் இரு கைகளையும் உயர்த்துவது நபிவழி தான் என்பதற்கு ஆதாரங்களைக் காட்டியும் அவர்கள் ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை. கைகளை உயர்த்துவது தான் நபிவழி என்று மவ்லானா அப்துல் ஹை லக்னவி, இமாம் முஹம்மது ஆகியோர் தங்கள் நூல்களில் தெளிவாக நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர். அவற்றை நான் போட்டோ காப்பி எடுத்துக் கொடுத்திருக்கிறேன். ஆனால் அவர்கள் வீண் பிடிவாதத்திலிருந்து விலகுவதாக இல்லை.

பேட்டியாளர் :
ஷிர்க், பித்அத் போன்ற பாதைகளை விட்டு விட்டு வெளியே வந்து குர்ஆன் ஹதீஸ் என்ற நேரிய வழியைப் பின்பற்றும் உங்கள் மனநிலை எப்படி உள்ளது? நீங்கள் மன திருப்தியுடன் உள்ளீர்களா?

முஹம்மது அனஸ் :
நிச்சயமாக! நான் முழு திருப்தியுடன் உள்ளேன். எந்த அளவுக்கெனில், இப்போது நான் இறந்து விட்டால் கூட அல்லாஹ் தன் கருணையால் என்னை ஆரத் தழுவிக் கொள்வான் என்ற முழு நம்பிக்கையில் இருக்கின்றேன். குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவதற்காக எடுக்கும் எந்த ஒரு சிறு முயற்சியும் அல்லாஹ்வினால் ஒப்புக் கொள்ளப்படும் என்று நம்புகின்றேன். அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே! பளிச்சிடும் பளிங்குக் கண்ணாடி போன்ற தூய்மையான மன நிறைவை நான் பெற்றிருக்கின்றேன்.

பேட்டியாளர் :
உங்களுடைய வியாபாரமே புத்தகம் தான். உங்களது இந்த மாற்றம் உங்களது வியாபாரத் தொடர்புகளையும், வருமானத்தையும் பாதிக்கச் செய்திருக்கின்றதா?

முஹம்மது அனஸ் :
நிச்சயமாக! ஃபழாயிலே ஸதகாத் (தர்மங்களின் சிறப்புகள்), ஃபழாயிலே ஹஜ் (ஹஜ்ஜின் சிறப்புகள்) என்ற தலைப்பில் உள்ள நூல்களை நான் உருது, ஹிந்தி, ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய நான்கு மொழிகளிலும் அச்சிட்டு விற்பனை செய்தேன். இவை பெருமளவு விற்பனையாயின. உருதுப் பதிப்பு மட்டும் இரண்டு மாதங்களுக்குள் 5000பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. இப்போது இவற்றை அச்சிடாதது என்னைப் பெருமளவு பாதித்துள்ளது. எனினும் அல்லாஹ் என்னைக் காப்பானாக! நான் பட்டினி கிடக்கும் ஒரு கட்டம் வந்தாலும் சரி தான். அந்த நிலையை நான் மனப்பூர்வமாக ஒப்புக் கொள்வேன். காரணம் ஒவ்வொருவரும் கண் மூடிய பின் அல்லாஹ்விடம் கணக்கு கொடுத்தே ஆக வேண்டும்.

பேட்டியாளர் :
நீங்கள் இது வரை விற்றுக் கொண்டிருந்த அமல்களின் சிறப்புகள் என்ற இந்த நூல்கள் (தர்மத்தின் சிறப்புகள், ஹஜ்ஜின் சிறப்புகள் ஆகியவை இந்நூலின் பாகங்கள் தான்) பல ஷிர்க்கான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன என்பதைத் தாங்கள் தெரிந்திருப்பீர்கள்.

"ஒரு பெரியார் மறைவான ஞானத்தை அறிகின்றார்'', "(நபி - ஸல் அவர்கள் இறந்த பின்னர்) வானத்தி-ருந்து இறங்கினார்கள்'', "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கை கப்ரி-ருந்து வெளியே வந்தது'', "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொன்ன போது அவர்கள் கூறிய பதிலை நாங்கள் செவியுற்றோம்'' என்று தப்லீக் தலைவர்கள் கூறுகின்ற பிதற்றல்கள் இன்னும் இது போன்ற அப்பட்டமான ஷிர்க்கான கருத்துக்கள் இந்நூற்களில் பொதிந்து கிடக்கின்றன என்று தெரிந்த பிறகு இந்நூல்களைப் பல மொழிகளில் விற்கப் போகின்றீர்களா?

முஹம்மது அனஸ் :
விற்கப் போவதில்லை. இந்தப் புத்தகங்களை விற்பனை செய்ததையே பாவம் என்று நினைக்கின்றேன். அதனால் வேறெதையும் விற்றாலும் விற்பேனே தவிர இது போன்றவற்றை ஒரு போதும் விற்க மாட்டேன். இந்தப் புத்தகங்கள் அனைத்திற்கும் நானே ஏகபோக உரிமையாளராக இருந்திருந்தால் அன்றே நான் கட-ல் தூக்கி எறிந்திருப்பேன். ஆனால் அதே சமயம் மிக மிக அதிகமான வழிகேடான கருத்துக்களைக் கொண்டுள்ள ஃபழாயிலே அஃமா-ன் இரண்டாம் பாகமான ஃபழாயில் ஸதகா மற்றும் ஹஜ் என்ற நூல்களை நாங்கள் நிறுத்தி விட்டோம். ஃபழாயில் அஃமால் (முதல் பாகத்தையும்) இப்போது இன்ஷா அல்லாஹ் நிறுத்தி விடுவோம்.

பேட்டியாளர் :
எவ்வளவு காலமாக ஃபழாயில் அஃமாலை நீங்கள் அச்சிக் கொண்டிருக்கின்றீர்கள். இந்தப் பணியைத் துவக்கியது உங்கள் தந்தையார் தானே!

முஹம்மது அனஸ் :
என்னுடைய தந்தையார் தான் இதை ஆப்செட்டில் முதன் முதலில் அச்சிட்டார். (இவர்கள் 50 ஆண்டு காலமாக இவற்றை அச்சிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்) துவக்கத்தில் இவை ஹிக்காயத்-இ-ஸஹாபா, ஃபழாயில்-இ-நமாஸ் (தொழுகையின் சிறப்புகள்) என்று தனித்தனி நூல்களாக அச்சிடப்பட்டன. பின்னர் இவை அனைத்தும் ஒரே வால்யூமாக ஆக்கப்பட்டது. ஜக்கரியா மவ்லானாவின் "தப்லீக் - இ - நிஸாப்' என்று எனது தந்தையாரால் தான் இப்படி ஒரு பெயர் கொடுக்கப்பட்டது. ஜக்கரியா மவ்லானா அவர்கள் இப்படியொரு பெயரைக் கொடுக்கவில்லை. தப்லீக் - இ - நிஸாப் என்று இவ்வாறு பெயர் கொடுத்ததற்கு பரேலவிகளிடமிருந்து எதிர்ப்புகள் வந்ததும் இதற்கு அமல்களின் சிறப்புகள் என்று பெயரிடப்பட்டது.

வளரும் இன்ஷா அல்லாஹ்


EGATHUVAM JUL 2003