Mar 21, 2017

தப்லீக் ஜமா அத்தை விட்டு தவ்பா செய்த தஃலீம் புத்தக வெளியீட்டாளர் – 3

தப்லீக் ஜமா அத்தை விட்டு தவ்பா செய்த தஃலீம் புத்தக வெளியீட்டாளர் – 3

தஃலீம் தொகுப்பு வெளியீட்டாளர் முஹம்மது அனஸ் அவர்களின் பேட்டி தொடர்ச்சி..

பேட்டியாளர் : இன்னும் இந்தப் புத்தகத்தை அச்சடித்து விநியோகித்து, விற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு இறுதியாக நீங்கள் என்ன அறிவுரை வழங்க விரும்புகின்றீர்கள்?

முஹம்மது அனஸ் : கொள்கையைப் பாழாக்கும் இத்ததைகய புத்தகங்களை விற்று பரப்புவதன் மூலம் கிடைக்கும் வருவாய் ஹலாலான ஒன்றல்ல! ஆதாரப்பூர்வமான புத்தகங்கள் நிறைய இருக்கும் போது, புறா சரித்திரங்கள், பச்சைக்கிளி சரித்திரங்களைக் கொண்ட புத்தகங்களை ஏன் விற்க வேண்டும்? (சூஃபிகள் சொன்ன பொய்யான கதைப் புத்தகங்களைக் குறிப்பிடுகின்றார்) இதுபோன்ற புத்தகங்களை விற்பதை விட்டு விட்டு ஆதாரப்பூர்வமான நூல்கள் விற்கப்பட வேண்டும்.

பேட்டியாளர் : உங்கள் இரு சகோதரர்கள் இந்த நபிவழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கின்றனரா?

முஹம்மது அனஸ் : ஆம்! நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் என்னுடைய இளைய சகோதரர் சி.டி.க்களைக் கேட்டு விட்டு தொழுகையில் தக்பீரின் போது இரு கைகளையும் உயர்த்துகின்றார். "தொழுகையில் கைகளை உயர்த்துவது உண்மை என்றிருக்கும் போது நாம் ஏன் அதைப் பின்பற்றுவதற்குப் பயப்பட வேண்டும்? இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நிரூபிக்கப் பட்ட செயலும் நபிவழியும் அல்லவா? அதை நபி (ஸல்) அவர்கள் மரணமாகும் வரை கடைப்பிடித்திருக்கின்றார்கள் அல்லவா? எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த சத்திய நெறியில் இருந்த காரணத்தால் நான் தொழுகையில் கையை உயர்த்த ஆரம்பித்து விட்டேன்'' என்று என்னிடம் என் சகோதரர் கூறினார்.

பேட்டியாளர் : சத்தியத்தைத் தேடும் பணியில் தப்லீக் ஜமாஅத்தினரையும் அரவணைத்துக் கொள்வதற்காக அவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

முஹம்மது அனஸ் : குர்ஆன் ஹதீஸ் போதனையைத் தேடுவதும், தங்கள் செயல்கள் குர்ஆன் ஹதீசுக்கு இசைவாக உள்ளனவா? என்று சிந்தித்துப் பார்ப்பதும் ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும். இது தான் எல்லோருக்கும் தெரிவிக்கும் பொதுவான செய்தியாகும்.

பேட்டியாளர் : அஷ்ரப் அலீ தானவியின் "அஃமாலே குர்ஆன்' போன்ற நூல்களைத் திரட்டி பரப்புகின்ற தேவ்பந்தி ஆலிம்களுக்கு எதையேனும் கூற விரும்புகின்றீர்களா?
முஹம்மது அனஸ் : ஆம்! மவ்லானா அஷ்ரப் அலீ தானவீ அவர்கள் அஃமாலே குர்ஆனின் ஆசிரியர் ஆவார். எனினும் யாரோ எழுதிய நூலை அஷ்ரப் அலீ தானவீ எழுதியதாக, பின்னால் சொல்லப் படுகின்றதா? அல்லது உண்மையில் அஷ்ரப் அலீ தானவீ அவர்களே இதை எழுதினார்களா? என்று உறுதியாகத் தெரியவில்லை. அல்லாஹ்வே உண்மையை அறிவான். ஆனால் நான் அந்த நூலில் கண்ட கருத்துக்கள் குர்ஆன் ஹதீசுக்கு நேர் முரணானவையாகும். அதனால் அவற்றை விற்பதை நிறுத்தி விட்டேன்.

பேட்டியாளர் : உறுதியாக முன்னால் இது யாரோ ஒருவரால் எழுதப்பட்டு பிந்திய காலத்தில் இது அஷ்ரப் அலீ தானவீயால் எழுதப்பட்டது என்று சொல்ல முடியாது. அப்படி அஷ்ரப் அலீ தானவீ அவர்கள் எழுதாததை அவர்கள் எழுதினார்கள் என்று தப்பாக சொல்லப்பட்டிருக்குமானால் அப்போதே தேவ்பந்தி உலமாக்கள் மறுத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அஷ்ரப் அலீ தானவீ தான் என்று வக்காலத்து வாங்கிக் கொண்டல்லவா வருகின்றார்கள்? எனவே இது நிச்சயமாக அஷ்ரப் அலீ தானவீ எழுதியது தான் என்பது ஊர்ஜிதமாகின்றது.

முஹம்மது அனஸ் : ஜக்கரியா மவ்லானா எழுதிய "ஹிகாயத் அவ்லியா' (வலிமார்கள் வரலாறு) என்ற நூலை நான் படித்த போது பெரிய அதிர்ச்சிக்குள்ளானேன். (பல்வேறு கப்ஸாக்களை உள்ளடக்கிய) இந்நூலுக்கு அஃபாஹே ஸலாஸா என்ற பெயர் வேறு உள்ளது. மொத்தத்தில் 60-70 வகையான புத்தகங்களை அச்சடித்து விற்பனை செய்வதை நிறுத்தி விட்டேன்

பேட்டியாளர் : ஜக்கரியா மவ்லானா எழுதிய ஜிஷ்தியா தரீக்கா வரலாற்றை படித்திருக்கின்றீர்களா?

முஹம்மது அனஸ் : நான் அந்த புத்தகத்திற்காக வந்த ஆர்டர்களையும் நிறுத்தி விட்டேன். அல்லாமல் இதுபோன்ற புத்தகங்களில் வரும் தவறான கருத்துக்களைத் தெளிவு படுத்துகின்ற (விமர்சன) நூல் ஒன்றையும் தயாரித்துக் கொண்டிருக்கின்றேன். எனக்கு யாரேனும் இம்மாதிரியான குறிப்புகளைத் தெரிவித்தால் நான் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து தவறாக இருந்தால் அதை நீக்கி விடுவேன்.

பேட்டியாளர் : இந்தப் புத்தகங்களின் ஆசிரியர்கள் தேவ்பந்தி உலமாக்கள் மற்றும் பரேலவிகள் ஆவர். அவர்களது கண்மூடித்தனமான பின்பற்றுதல் அவர்களை குர்ஆன் ஹதீஸ் பக்கம் திரும்புவதை விட்டும் தடுக்கின்றது. ஏன்? அவர்கள் சத்தியத்தைத் தெரிந்த பின்னரும் அதை மக்களிடம் எடுத்துரைக்க மறுக்கின்றார்கள். இவர்களுக்கு உங்களது அறிவுரை என்ன?

முஹம்மது அனஸ் : மார்க்கம் நமக்கு நபித்தோழர்கள் மூலம் வந்தது. யாரேனும் அவர்களது வாழ்க்கை வரலாறு நூல்களைத் தேடினால் அவை அவருக்குக் கிடைக்காது. ஆனால் நூறு வருடங்களுக்கு முன்னால் மரணித்த பீர்மார்களின் வாழ்க்கை வரலாறுகளை அவர்களின் முரீதுகள் எழுதித் தள்ளுகின்றனர். இன்றளவும் நாம் சஹாபாக்களைப் பற்றி நாம் தெரிந்திருக்கவில்லை.

(இதை அனஸ் அவர்கள் இங்கு குறிப்பிடக் காரணம், அஷ்ரப் அலீ தானவீக்குரிய வரலாறு நூல்கள் அதிகம் உள்ளன. அவை பத்து பாகங்களாக வெளிவந்துள்ளன.)

பேட்டியாளர் : ஒரு பெரிய நூல் வெளியீட்டாளர் என்ற அடிப்படையில் சத்தியத்தைத் தேடுபவர்களுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன?

முஹம்மது அனஸ் : உங்கள் செயல்பாடுகளை ஆய்வு செய்யுங்கள். அவை குர்ஆன் ஹதீசுக்கு ஒத்து இருக்கின்றனவா? என்று பாருங்கள். தன்னிடத்தில் மக்கள் சொல்வதையெல்லாம் ஒருவர் பின்பற்றக் கூடாது. இது தான் முதன் முதலில் விடுக்கும் செய்தியாகும். இன்று நிறைய புத்தகங்கள் கிடைக்கின்றன. ஆனால் அவை ஆதாரங்களைக் குறிப்பிடுவது கிடையாது. எனவே ஒருவர் ஆய்வு செய்ய வேண்டும். தனது செயல்கள் சரியா? தவறா? என்று (குர்ஆன் ஹதீஸ் மூலம்) உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.

(பேட்டி இத்துடன் நிறைவடைகின்றது)


EGATHUVAM AUG 2003