32. இணை கற்பித்தல் - அனைவருக்கும் நிகழும் அற்புதங்கள்
உரை:
பி. ஜைனுல் ஆபிதீன்
எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.
சென்ற இதழில், குகைவாசிகளின் சம்பவம் பற்றிய திருக்குர்ஆன் வசனங்களைப் பார்த்தோம்.
அந்தக் குகைவாசிகள் குகையில் பல ஆண்டுகளாக
உறங்கியிருக் கிறார்கள். அதற்குப் பிறகு அல்லாஹ் அவர்களுக்கு உயிர் கொடுத்து எழுப்புகிறான்.
ஒரு மனிதன் சாகாமல் பல ஆண்டுகளாக உண்ணாமல், பருகாமல் உயிருடன் இருந்த நிலையில் தூங்கியிருப்பது ஒரு அற்புதமாகும்.
ஒரு மனிதன் எத்தனை மணி நேரம் தூங்கினாலும்
அவனுக்குப் பசி வந்து விட்டால் அவன் தூக்கத்திலிருந்து எழுந்து விடுவான். ஆனால்
இந்தக் குகைவாசிகள் பல ஆண்டுகளாக எதையும் சாப்பிடமால், குடிக்காமல் உயிருடன் இருந்த நிலையில்
தூங்கியிருக்கிறார்கள். அதிலும் எந்த மனிதனாவது ஒரு புறமாகவே சாய்ந்து பல நாட்கள்
படுத்துக் கிடந்தாலே உடல் வெப்பத்தினால் வெந்து போய் விடும். சில நோயாளிகளுக்குத்
தண்ணீர் படுக்கை (வாட்டர் பெட்) போட்டால் கூட அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
ஆனால் இவர்கள் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் படுத்துக் கிடக்கின்றார்கள். ஆனால் எந்த
விதமான விளைவுகளோ, பாதிப்புகளோ ஏற்படவில்லை. அல்லாஹ் தான் அவர்களை
இடது புறமாகவும் வலது புறமாகவும் புரட்டியதாகச் சொல்கின்றான். அதன் காரணத்தால், சூரியன் உதிக்கும் போதும் அவர்கள் மீது படவில்லை. சூரியன்
மறையும் போதும் அவர்கள் மீது படவில்லை.
அல்லாஹ் அவர்களைப் பல வருடங்களாகத் தூங்க
வைத்து, அவர்கள் அழைத்து வந்த ஒரு நாயைக் காவலுக்கு
வைத்து இந்த அற்புதங்களைச் செய்து காட்டியிருக்கிறான்.
அதற்குப் பிறகு அவர்கள் பல வருடங்கள் கழித்து
எழுந்திருக் கிறார்கள். அப்போது தான் அவர்களுக்குப் பசி ஏற்படுகின்றது. சாப்பிட
ஏதாவது வாங்கி வருவதற்காக காசு கொடுத்து சாப்பாடு வாங்க ஆள் அனுப்புகிறார்கள்.
ஆனால் அந்த ஊர் மக்கள் அந்தக் காசுகளை செல்லாது என்று சொல்லி அனுப்பி
விடுகிறார்கள்.
பிறகு அவர்கள் திரும்பி வந்து, நாம் எவ்வளவு நேரம் இங்கே உறங்கியிருப்போம்? நாம் ஒரு நாள் அல்லது அரைநாள் தூங்கியிருப்போம். அதற்குள்
உலகமே மாறிவிட்டது. நாம் சாப்பாடு வாங்குவதற்காகக் கொண்டு போன பணமும் செல்லாக்
காசாகி விட்டது என்று தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.
முன்னூறு வருடமாகத் தூங்கியவர் களுக்கு, தாங்கள் எத்தனை வருடம் தூங்கினோம் என்பது கூடத்
தெரியவில்லை. அவர்களிடத்தில் தான் அற்புதம் நடந்திருக்கிறது. ஆனால் அதைப் பற்றிய
அறிவு அவர்களிடத்தில் இல்லை. பணத்தைக் கொண்டு போய் சாமான்கள் வாங்குவதற்குக்
கடைக்கு செல்லும் போதுதான் அவர்களுக்கு விபரமே தெரிய வருகிறது.
இவ்வாறு நபிமார்கள் அல்லாத, நல்லடியார்களுக்கும் அற்புதங்கள் நிகழ்ந்திருக்கின்றது.
ஆனால் இது அவர்கள் மூலமாக நடந்த அற்புதமா என்றால் இல்லை. அவர்கள் அறியாமலேயே
அல்லாஹ் அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறான். நபிமார்களுக்கு எவ்வாறு அற்புதங்கள்
நிகழுமோ அந்த மாதிரி இவர்களுக்கு நிகழவில்லை. இவர்களாகவும் நிகழ்த்திக்
காட்டவுமில்லை. நபிமார்களுக்கு அல்லாஹ் அனுமதி கொடுத்து, "செய்' என்று
சொல்வான். அவர்கள் அல்லாஹ்வின் அனுமதி யுடன் அதைச் செய்து காட்டுவார்கள்.
அது போன்று, நபிமார்கள் அல்லாத மற்றவர்களுக்கும் அற்புதங்கள் நிகழும் என்பதற்குக்
கீழ்க்காணும் சம்பவத்தை நாம் உதாரணமாகக் கூறலாம்.
இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திடீர் என மழை பிடித்தது. எனவே, அம்மூவரும் மலைப் பகுதியில் அமைந்திருந்த குகை ஒன்றில்
தஞ்சம் புகுந்தனர். (எதிர்பாராத விதமாக) பெரும்பாறை ஒன்று மலையிலிருந்து உருண்டு
வந்து அந்தக் குகையின் வாயிலை மூடிக் கொண்டது. (இதனைக் கண்ட) அவர்கள் தமக்குள், 'நாம் (வேறெவரின் திருப்திக்காகவுமின்றி) அல்லாஹ்வுக்காக என்று
தூய்மை யான முறையில் செய்த நற்செயல் களை நினைத்துப் பார்த்து, அவற்றை (வசீலாவாக - துணைச் சாதனமாக)க் கொண்டு அல்லாஹ்விடம்
பிரார்த்திப் போம். அவன் இந்தப் பாறையை நம்மைவிட்டு அகற்றி விடக் கூடும்"
என்று பேசிக் கொண்டனர்.
அவர்களில் ஒருவர் இவ்விதம் இறைவனிடம் மன்றாடலானார்;
இறைவா! எனக்கு முதிர்ந்த வயதுடைய தாய்
தந்தையர் இருந்தனர். சிறு குழந்தைகளும் இருந்தனர். அவர்களைப் பராமரிப் பதற்காக
நான் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன். மாலையில் நான் திரும்பி வந்தபின் ஆட்டின்
பாலைக் கறந்து கொண்டுவந்து என் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கு முன்பாக என் தாய்
தந்தையர்க்கு அதைப் புகட்டுவேன். ஒரு நாள் நான் தாமதமாகத் திரும்பி வந்தேன். (நான்
வீட்டை அடைந்தபோது) நெடு நேரம் கழிந்து இரவாகி விட்டிருந்தது. (என் தாய் தந்தை)
இருவரும் உறங்கி விட்டிருக்கக் கண்டேன்.
வழக்கமாக நான் கறந்து வந்ததைப் போன்றே அன்றைக்கும்
(ஆட்டுப்) பாலைக் கறந்து எடுத்துக் கொண்டு வந்தேன். அவர்களை (தூக்கத்திலிருந்து)
எழுப்பிட மனமில்லாமல் அவர்களின் தலை மாட்டில் நின்று கொண்டேன். என் (தாய்
தந்தையர்க்கு முதலில் புகட்டாமல் என்) குழந்தைகளுக்கு முதலில் புகட்டிட எனக்கு
விருப்பமில்லை. என் குழந்தைகளோ (என்) காலுக்கு அடியில் பாலுக்காக அழுது
பரிதவித்துக் கொண்டிருந் தனர். இதே நிலையில் வைகறை நேரம் உதயமாகிவிட்டது.
நான் இச்செயலை உன் திருப்தியை நாடியே
செய்திருக் கிறேன் என்று நீ கருதினால் எங்களுக்கு இந்தப் பாறையை சற்றே நகர்த்திக்
கொடுப்பாயாக! அதன் வழியாக நாங்கள் வானத்தைப் பார்த்துக் கொள்வோம்.
அவ்வாறே அல்லாஹ் (அவர்களுக்கு) சிறிதளவு
நகர்த்தித் தந்தான். அதன் வழியாக அவர்கள் வானத்தைப் பார்த்தார்கள்.
மற்றொருவர் பின்வருமாறு மன்றாடிப்
பிரார்த்தனை புரிந்தார்:
இறைவா! எனக்கு என் தந்தையின் சகோதரருடைய மகள்
(ஒன்றுவிட்ட சகோதரி - முறைப் பெண்) ஒருத்தி இருந்தாள். ஆண்கள் பெண்களை எப்படி
ஆழமாக நேசிப்பார்களோ அப்படி நான் அவளை நேசித்தேன். நான் அவளிடம் என்னுடன் உடலுறவு
கொள்ள வருமாறு அழைத்தேன். நான் அவளுக்கு நூறு தீனார்கள் (பொற்காசுகள்) கொடுத்தாலே
தவிர என்னுடன் உறவு கொள்ள முடியாது என்று அவள் மறுத்தாள். நான் அ(ந்தப் பணத்)தை
மிகவும் சிரமப்பட்டுச் சேகரித்தேன். நான் (அந்தப் பணத்துடன் சென்று) அவளுடைய
இரண்டு கால்களுக் கும் இடையே அமர்ந்தபோது அவள், 'அல்லாஹ்வின் அடியானே! அல்லாஹ்வுக்கு அஞ்சு. முத்திரையை
(கற்பு உறுப்பை) அதற்குரிய (மண பந்த) உரிமையின்றி திறக்காதே" என்று கூறினாள்.
உடனே நான் (உடலுறவு கொள்ளாமல்) எழுந்து விட்டேன். (இறைவா! உன் அச்சத்தால் நான்
புரிந்த) இந்த நற்செயலை நான் உன் திருப்தியைப் பெற விரும்பியே செய்ததாக நீ
கருதினால் இந்தப் பாறையை எங்களைவிட்டு (இன்னும்) சற்று நீக்கி விடுவாயாக!
உடனே, பாறை இன்னும் சற்று விலகியது.
மூன்றாமவர் பின்வருமாறு மன்றாடிப்
பிரார்த்தனை புரிந்தார்:
இறைவா! நான் ஒரு ஃபரக் அளவு நெல்லைக் கூலியாக
நிர்ணயித்துக் கூலியாள் ஒருவரை வேலை செய்ய அழைத்துச் சென்றேன். அவர் தம் வேலை
முடிந்தவுடன், 'என்னுடைய உரிமையை
(கூலியைக்) கொடு" என்று கேட்டார். நான் (நிர்ணயம் செய்திருந்த) அவரின் கூலியை
அவர் முன் வைத்தேன். அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார்.
(அவர் சென்றபின்) அதை நான் தொடர்ந்து
நிலத்தில் விதைத்து விவசாயம் செய்து வந்தேன். எது வரை என்றால் அதன்
வருவாயிலிருந்து பல மாடுகளையும் இடையர்களையும் நான் சேகரித்து விட்டேன். சில
காலங்களுக்குப் பிறகு அந்த மனிதர் (கூலியாள்) என்னிடம் வந்து, "அல்லாஹ்வுக்கு அஞ்சு' என்று கூறினார். நான் அவரிடம், "அந்த மாடுகளிடமும் இடையர் களிடமும் சென்று அவற்றை
எடுத்துக்கொள்' என்றேன்.
அதற்கு அம்மனிதர், "அல்லாஹ் வுக்கு அஞ்சு! என்னைப் பரிகாசம் செய்யாதே' என்று கூறினார். நான், "உன்னை நான் பரிகாசம் செய்ய வில்லை. நீ இவற்றை எடுத்துக்
கொள்' என்று பதிலளித் தேன். அவர் அவற்றை எடுத்துச்
சென்றார். நான் இந்த நற்செயலை உன் திருப்தியைப் பெற விரும்பியே செய்திருந்ததாக நீ
கருதினால் மீதமுள்ள அடைப்பையும் நீக்குவாயாக!
(இந்தப் பிரார்த்தனையைச் செவியற்றவுடன்)
அல்லாஹ் (அப்பாறையை முழுவதுமாக அகற்றி) மீதியிருந்த அடைப்பையும் நீக்கிவிட்டான்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 2333
இந்தச் சம்பவம் மேலும் புகாரியில் 2063, 2111,
2165, 3206, 5517 ஆகிய இடங்களில் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன.
மேற்கண்ட சம்பவத்தில், அந்த மூன்று பேர் கேட்ட துஆவினால் பாறை அகன்ற அந்த அற்புதம் நிகழ்ந்ததாக நபிகளார் கூறுகிறார்கள். அந்த மூன்று பேரும்
சராசரி மனிதர்கள் தானே தவிர அதிகம் அதிகம் நன்மைகள் செய்து, நாள் முழுவதும் இறை வணக்கத்தில் ஊறித் திளைத்த, காசு பணத்தை தர்மமாக வாரி இறைத்த, தியாகம் செய்த பெரிய அவ்லியாக்களோ, மகான்களோ அல்லர். தங்களின் நல்லறங்களில் அல்லாஹ்வுக்காக மட்டும் செய்த ஒரு
நல்லறம் உண்டா என்று தேடிப் பார்க்கும் அளவுக்குக் குறைந்த நல்லறம் செய்தவர்கள்.
ஒரு நேரத்தில் அல்லாஹ்வை அஞ்சி, பயந்து ஒரு
நற்செயலைச் செய்திருக்கிறார்கள். அவ்வளவுதான்.
ஆக, அல்லாஹ் நாடினால் யாருக்கும் இவ்வுலகில் அற்புதங் களைச் செய்வான். அவன்
நல்லவனாக இருந்தாலும் சரி தீயவனாக இருந்தாலும் சரியே!
வளரும் இன்ஷா அல்லாஹ்
EGATHUVAM AUG 2015