Mar 2, 2017

6. ஹுஸைன் மவ்லிது ஓர் ஆய்வு - அனைத்தையும் தீர்க்கும் ஐந்து கடவுள்கள்

6. ஹுஸைன் மவ்லிது ஓர் ஆய்வு - அனைத்தையும் தீர்க்கும் ஐந்து கடவுள்கள்

எம். ஷம்சுல்லுஹா
புனித மிக்க ஐவர் மூலம் அனைத்து தீங்குகளையும், பழிவாங்கல் களையும் எங்களை விட்டும் நான் தடுத்துக் கொள்வேன்.
இந்தக் கவிதை வரிகளைப் படியுங்கள். மீண்டும் ஒரு தடவை படியுங்கள். இது உண்மையில் நாளை நரகில் நம்மைக் கரிக்கும் நெருப்புப் பொறிகள் என்று புரிந்து கொள்ளலாம்.
புனித மிக்க ஐவர் யார்? இதை இன்னொரு கவிதை வரிகள் உங்களுக்குத் தெளிவைத் தரும்.
எனக்கு ஐவர் இருக்கின்றனர். அவர்களை வைத்து தகர்த்தெறியும் எரி நெருப்பின் வெப்பத்தை விட்டும் என்னை நான் காத்துக் கொள்வேன். முஸ்தபா (முஹம்மத்-ஸல்), முர்தளா (அலீ), இவ்விருவரின் பிள்ளைகள் (ஹஸன், ஹுஸைன்), பாத்திமா ஆகியோர் தான் அந்த ஐவர்.
இந்த ஐந்து கடவுள் கொள்கையைத் தான் ஹுஸைன் மவ்லிது நிலைநாட்டுகின்றது. இதை ஏதோ ஒரு புறம்போக்குப் புலவன் புலம்பிய வார்த்தைகள் என்று புறந்தள்ளி விடமுடியாது. கண்டு கொள்ளத் தேவையில்லாத ஒரு கவிஞனின் அர்த்தமற்ற கவிதை வரிகள் என்று அலட்சியம் செய்ய முடியாது.
இந்த வரிகள் ஷியா விஷச் சிந்தனையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்ற ஷியாக்களின் வேத வரிகள். இவை தான் ஹுஸைன் மவ்லிது என்ற கிதாபில் இடம்பெற்றுள்ளன.
சுன்னத் வல்ஜமாஅத்தினர் ஷியாக்களின் வார்ப்புகள், அவர்களின் மறுபதிப்புகள் என்பதற்கு இவை யெல்லாம் அச்சடித்த சான்றுத் தடயங்கள்.
இந்த ஐவரையும் நாங்கள் எப்போது கடவுள் ஆக்கினோம்? என்று நாக்கூசாமல் இவர்கள் நம்மிடம் கேட்பார்கள். இந்த ஐவரையும் கடவுளாக ஆக்கியுள்ளார்கள் என்பதற்கு முஹர்ரம் மாதத்தில் இவர்கள் எடுக்கும் பஞ்சாவே ஆதாரமாகும்.
அவற்றை வரிசையாகப் பார்ப்போம்.
ஐவரைக் குறிக்கின்ற ஐந்து விரல் படங்கள்
பஞ்சா என்று சொல்லப்படும் ஐந்து விரல்கள் கொண்ட வெள்ளி கைச் சின்னம் மரத்தினால் செய்யப்பட்ட ஒரு சட்டத்தினுள் ஜரிகைத் தாளைப் பின்னணியாகக் கொண்டு குடி கொண்டிருக்கும். இதைச் சுற்றிலும் மல்லிகைப் பூக்கள் வளைத்து நிற்கும். இதுதான் பஞ்சா என்ற ஏவுகணையின் உடல் கட்டமைப்பாகும். அப்படியே இந்துக்கள் எடுக்கும் சப்பரத்திற்கு ஒப்பாக இந்தப் பஞ்சா அமைந்திருக்கும்.
தங்கத்தையொத்த ஜரிகைத் தாள் ஒட்டப்பட்ட பஞ்சாவின் சட்டத்தில் பொருத்தப்பட்டிருக்கும் மஞ்சள் நிற விளக்கு, அதில் மின்னும் கதிர்கள் பன்மடங்கு பரிமாணத்தில் பிரதிபலித்துக் கொண்டிருக்கும்.
அதன் நடுவில் நடுநாயகமாக ஐவிரல் அடங்கிய வெள்ளிக்கை விரல்கள் கொலு வீற்றிருக்கும். சந்தேகமில்லாமல் இந்த ஐந்து விரல்கள் யாரைக் குறிக்கின்றன?
பஞ்சா என்றால் ஐந்து என்று பொருள். ஐந்து ஆறுகள் ஓடுவதால் ஒரு மாநிலத்திற்கு பஞ்சாப் என்று பெயர். கிராமத்தில் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்கு அமைக்கப்படும் ஐந்து பேர் கொண்ட கமிட்டி பஞ்சாயத் என்று அழைக்கப்டுகின்றது.
அது போன்று தான் இந்த ஐந்து விரல்களும் சிம்பாலிக்காக முஹம்மத் (ஸல்), அலீ, பாத்திமா, ஹஸன், ஹுசைன் (ரலி) ஆகியோரைக் குறிக்கும். சுருக்கமாகச் சொல்லப் போனால் இந்த ஐந்து பேர்களும் கடவுளாக உருவகப்படுத்தப் பட்டுள்ளனர்.
அதனால் தான் ஹுஸைன் மவ்லிதின் இந்தக் கவிதையில், "எனக்கு ஐந்து பேர்கள் இருக்கிறார் கள், அவர்கள் என்னை நரகிலிருந்து காப்பார்கள். அவர்கள் தாம் முஸ்தபா, முர்தளா (அலீ), பாத்திமா, அவர்களின் பிள்ளைகள் ஹசன், ஹுசைன்'' என்று பாடியுள்ளான்.
கவிதை வடிவமும் கை வடிவமும்
"தப்பத் யதா மன் யுசவ்விர் யதா ஸுபைத்தில் முனவ்விர்'
"ஒளிவீசும் ஹுஸைனின் கைகளை வடிவமைத்தவரின் கைகள் நாசமாகட்டும்'' என்று அந்த ஹுஸைன் மவ்லிதில் இடம்பெற்றுள்ளது.
ஹுஸைனின் கைகளை வடி வமைத்தவரை ஹுஸைன் மவ்லிதே கண்டித்து விட்டதால் அந்த ஐவரையும் கடவுளாக்கியதில் ஹுஸைன் மவ்லிதுக்குப் பங்கில்லை என்று யாராவது முண்டாசு கட்டிக் கொண்டு முட்டுக் கொடுக்கலாம். ஆனால் அவ்வாறு முட்டுக் கொடுக்க முடியாது.
மக்களிடத்தில் ஹுஸைன் (ரலி) மீது ஒரு பிரம்மாண்டமான பிம்பத்தை இந்த மவ்லிது ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. இதர மவ்லிதுகளான சுப்ஹான மவ்லிது, ஷாகுல் ஹமீது மவ்லிதுகளின் கதாநாயகர்களைப் போல, ஹுஸைன் (ரலி)யை, "கைகொடுத்து காப்பாற்றும் ரட்சகர்' என்று அவருக்கு தெய்வத் தன்மையை இந்த ஹுஸைன் மவ்லிதே ஏற்றி விடுகின்றது.
இந்த மவ்லிதை இயற்றியதற்குக் காரணமே, இதன் ஆசிரியர் ஒரு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாராம். அதனைத் தொடர்ந்து இந்த இணைவைப்புக் கவிதைகள் மூலம் ஹுஸைனைப் புகழ்ந்த காரணத்தால் தான் அந்த நோயிலிருந்து நிவாரணம் அடைந்ததாக இதை எழுதிய ஆசான் தனது மவ்லிதின் ஏழாவது ஹிகாயத்தில் வாக்குமூலம் தருகின்றார்.
மவ்லிது ஆசான் கவிதை வடிவில் தனது கதாநாயகரைக் கடவுளாக வழிபடுகின்றார் என்றால் பஞ்சா ஆசான்கள் கைவடிவத்தில் தங்கள் கதாநாயகரான ஹுஸைனைக் கடவுளாக வழிபடுகின்றனர். இது தான் வித்தியாசம்.
அதனால் இந்தக் கை வழிபாட்டுக் கோலத்தை வெறும் வார்த்தை ஜாலத்தால் கண்டிப்பதும் கடிவதும் எல்லாம் வெறும் கண்துடைப்பாகுமே தவிர உண்மையான கண்டனமாகாது என்பதைத் தெளிவாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நாட்டத்தை நிறைவேற்றும் ஹுஸைன் (ரலி)
இந்த ஐவரும் கடவுளாக்கப் பட்டுள்ளனர் என்பதை வெறும் ஒப்புக்காகச் சொல்லவில்லை. உண்மை யாகவே சொல்கிறோம் என்பதற்கு அடுத்த எடுத்துக்காட்டு ஏழாம் நாள் பஞ்சாவாகும்.
தனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தால் முஹர்ரம் ஏழாம் நாளன்று பஞ்சாவின் குதிரையில் ஏற்றுவேன் என்று பெற்றோர்கள் நேர்ச்சை செய்வர். இதன்படி ஏழாம் நாளன்று நேர்ச்சை செய்யப்பட்ட பையனைக் குதிரையில் ஏற்றி பஞ்சா ஊர்வலத்தில் வலம் வரச் செய்வார்கள். ஒரு பச்சை முக்காடு போட்டு, குதிரையில் சுற்றி வருகின்ற இந்தப் பையன் அல்லாஹ் தந்த வரமல்ல! ஹுஸைன் தந்த வரம் என்று கருதி ஹுஸைனைக் கடவுளாக்கும் அநியாயமும் அக்கிரமும் இங்கு அரங்கேறுகின்றது.
ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் குழந்தை பாக்கியத்தைக் கொடுப்பது தன் கைவசமுள்ள தனி அதிகாரம் என்று குறிப்பிடுகின்றான்.
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண் (குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை) களை வழங்குகிறான்.
அல்லது ஆண்களையும், பெண் களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.
அல்குர்ஆன் 42:49, 50
அல்லாஹ்வுக்குரிய இந்த அதிகாரத்தை ஹுஸைனுக்குக் கொடுத்து அவரைக் கடவுளாக்கி விட்டனர் ஷியா போர்வையில் உள்ள சுன்னத் வல் ஜமாஅத்தினர்.
கொழுக்கட்டை முதல் கோழி வரை
ஹுஸைன் (ரலி) குழந்தை கொடுக்கும் கடவுளாக மட்டும் இவர்கள் சித்தரிக்கவில்லை. அவரை நேர்ச்சை நிறைவேற்றுகின்ற நிவாரண நாயகராகவும் சித்தரிக்கின்றார்கள்.
புரதச் சத்து குறைவாக இருந்தால் உடலில் உண்ணிகள் தோன்றி துருத்திக் கொண்டிருக்கும். இதற்கு வைத்தியம் எல்லாம் பார்க்கத் தேவையில்லை. இந்த உண்ணி போக வேண்டும் என்று நேர்ந்து கொண்டு, பஞ்சா அலுவலகத்தில் கொண்டு போய், உப்பையும் மிளகையும் படைத்து விட்டு வந்தால் போதும். மின்னிக் கொண்டிருக்கும் உடல் உண்ணிகள் பறந்து போய் விடும். அப்படி ஒரு நம்பிக்கை!
குழந்தைகள் வேண்டி கொழுக்கட்டை லிங்கம்
ஆண் குழந்தை வேண்டுமா? ஆணுறுப்பு வடிவத்தில் கொழுக் கட்டை செய்து பத்தாம் நாளன்று இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் மக்களிடம் விநியோகித் தால் போதும். ஆண் குழந்தை பிறந்து விடும். (பெண் குழந்தைகளை யாரும் வேண்டுவதில்லை.) யார் இந்த மாவு லிங்கத்தைப் பெறுகின்றாரோ அவர் பாக்கியம் பெற்றவராவார். இது தவிர ஹஸன், ஹுசைனின் வாள், வேல் போன்ற வடிவத்திலும் கொழுக் கட்டைகள் செய்து வீசப்படும்.
அது போல் முஹர்ரம் 10 நாட்களும் கணவன், மனைவி தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது என்று தடையையும் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். இந்தத் தடை இதற்கு மட்டுமல்ல! முக்கியமான மூன்று மவ்லிதுகளான சுப்ஹான மவ்லிது, முஹய்யித்தீன் மவ்லிது, ஷாகுல் ஹமீது மவ்லிது போன்ற மவ்லிதுகள் ஓதும் நாட்களிலும் இந்தத் தடை அமுலில் இருக்கும்.
இந்தத் தடைகளை மீறி யாரேனும் மீன் சாப்பிட்டு விட்டால் அல்லது தாம்பத்தியத்தில் ஈடுபட்டு விட்டால் அதற்குப் பரிகாரமாக பஞ்சா எடுக்கும் பக்கீர்களுக்கு ஆடு, கோழி போன்றவற்றைக் காணிக்கை செலுத்த வேண்டும்.
கணவனைத் தரும் கடவுள் ஹுஸைன்
இதில் வேடிக்கை என்ன வென்றால் இவர்கள் ஹுஸைனிடம் குழந்தை பாக்கியத்தை மட்டும் கேட்கவில்லை. கணவன் பாக்கியத்தை, மணாளன் என்ற பாக்கியத்தையும் சேர்த்தே கேட்பது தான்.
தனக்கு நல்ல கணவன் அமைந்தால் முஹர்ரம் பத்தாம் நாள் வந்து தீக்குளிப்பதாக பருவ வயதுப் பெண் நேர்ச்சை செய்வாள். நல்ல மாப்பிள்ளை வாய்த்த பின்னர் அந்தப் பெண்ணும், அவளது தாயாரும் பஞ்சாவுக்கு வந்து தங்களது தலைகளில் நெருப்பை அள்ளிக் கொட்டி நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள்.
கோயில் திருவிழாக்களில் தீமிதி நடப்பது போன்று தங்கள் பாவங்கள் தீர, நாட்டம் நிறைவேற தீமிதியும் நடத்துகின்றனர்.
பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்!
அல்குர்ஆன் 22:29
நேர்ச்சை என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்கின்ற ஒரு வணக்கமாகும். இதைத் தான் இந்த வசனம் தெளிவாகத் தெரிவிக்கின்றது.
அந்த வணக்கத்தை ஹுஸைன் (ரலி) அவர்களுக்குக் கொடுத்து அவரைக் கடவுளாக்கி விட்டனர். இதைத் தான் இந்தக் கவிஞன் ஹுஸைன் மவ்லிதில், "புனித மிக்க ஐவர் மூலம் அனைத்து தீங்கு களையும், பழிவாங்கல்களையும் எங்களை விட்டும் நான் தடுத்துக் கொள்வேன்'' என்று கூறுகின்றான்.
கடிவாளக் குதிரை கடவுளாகும் விந்தை
இதில் இன்னொரு வேடிக்கை, நேர்ச்சை செய்யப்பட்ட பையனைச் சுமந்து வரும் குதிரைக்கும் ஹுஸைன் (ரலி)யின் பொருட்டால் கடவுள் தன்மை கிடைத்து விடுகின்றது. அதனால் தான் மக்கள் இதன் குளம்புகளில் குடம் குடமாகக் குடிநீரைக் கொட்டுகின்றனர்.
இந்த வகையில் குதிரைக்கும் ஹுஸைனின் கடவுள் தன்மை கிடைத்து விட்டது. அதனால் கடிவாளக் குதிரை கடவுளான விந்தை என்று குறிப்பிடுவதைத் தவிர வேறு என்று என்ன கூற முடியும்?
நித்திய ஜீவன் ஹுஸைன்
மக்கள் தங்கள் நாட்டங்களையும், தேட்டங்களையும் ஹுஸைன் (ரலி) அவர்களிடம் கோருவதன் மூலம், அவர்கள் பெயரில் நேர்ச்சை செய்வதன் மூலம் அவரை ஒரு நித்திய ஜீவனாக ஆக்கிவிட்டனர். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். உண்மையில் இந்தத் தன்மையும் மாண்பும் எல்லாம் வல்ல ஏக இறைவனான அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரியதாகும்.
ஆனால் சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயர்தாங்கிகள் இந்தத் தன்மையும் மாண்பையும் ஹுஸைனுக்குத் தூக்கிக் கொடுத்து அவரைக் கடவுளாக்கி விட்டனர்.
அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!
அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? "உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!'' என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 7:194, 195
அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். "எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்" என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.
அல்குர்ஆன் 16:21
இந்த வசனத்தின் அடிப்படையில் ஹுஸைன் (ரலி) மரணித்து மண்ணோடு மண்ணாகிப் போய் விட்டார் என்பதை இவர்கள் வசமாக மறந்து விட்டனர்.
அல்லாஹ் விதித்த தடைகள்
முஹர்ரம் பத்து நாட்களிலும் மீன் சாப்பிடக் கூடாது. கணவன், மனைவி தாம்பத்தியத்தில் ஈடுபடக்கூடாது என்று அல்லாஹ் விதிக்காத தடைகளை இவர்களாக விதித்தும் ஹுஸைன் (ரலி)க்குப் புனிதம் ஏற்றி விடுகின்றனர்.
இவை அனைத்தும் தெளிவாக உணர்த்தும் உண்மைகள் என்ன வென்றால் இவர்கள் ஹுஸைனைக் கடவுளாக ஆக்கி விட்டார்கள் என்பது தான். இதைத் தான் இந்த ஹுஸைன் மவ்லிது ஆசிரியரும் குறிப்பிடுகின்றார்.
இந்த மவ்லிது ஆசிரியர், ஹுஸைன் (ரலி)யை அனைத்தையும் தீர்க்கின்ற ஆபத் பாந்தவானாகப் பார்க்கின்றார்.
அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன்.
அல்குர்ஆன் 6:17
அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 10:107
இந்த வசனங்களில் அல்லாஹ் கூறுவதை இவர்கள் கவனிக்கத் தவறிவிட்டார்கள்.
"அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்ற மாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன்'' என்றும் கூறுவீராக!
அல்குர்ஆன் 72:22
அல்லாஹ்வின் இந்த வசனத்தை யும் ஹுஸைன் மவ்லிதின் ஆசிரியர் மறந்து விட்டார். அதனால் தான் "ஐவர் மூலம் அனைத்து தீங்குகளை விட்டும் தடுத்துக் கொள்வேன்'' என்று துணிந்து கூறுகின்றார்.
பொதுவாக அல்லாஹ்வுக்கு இணைவைப்பவர்களுக்கு அறிவு வேலை செய்யாது. அதற்கு ஓர் எடுத்துக்காட்டாக இந்த மவ்லிது ஆசிரியரும் உள்ளார்.
ஹுஸைன் (ரலி) அவர்களுடன் சேர்ந்து 72 பேர்கள் கர்பலா களத்தில் கொல்லப்படுகிறார்கள். ஹுஸைன் (ரலி)யின் மகனான சின்ன அலீ என்று அழைக்கப்படும் ஜைனுல் ஆபிதீனைத் தவிர அத்தனை பேர்களும் கொல்லப்படுகின்றார்கள். இந்தச் சம்பவத்தில் ஹுஸைன் (ரலி) தன்னையும் காப்பாற்ற முடியவில்லை. தன்னுடன் உள்ள 72 பேரையும் காப்பாற்ற முடியவில்லை.
இது நமக்கு எதை உணர்த்துகின்றது? ஹுஸைன் (ரலி) அவர்களுக்கென்று எந்த ஒரு தனி சக்தியும் இல்லை. ரசூல் (ஸல்) அவர்களின் பேரர் என்பதற்காக வேண்டி அல்லாஹ்விடமிருந்து எந்தவொரு சலுகையும் இல்லை. அவனது விதிக்கு முன்னால் எல்லா அடியார்களும் சமம் தான் என்பதையே இது உணர்த்துகின்றது. அதிலும் குறிப்பாக அவர்கள் உயிருடன் இருக்கும் போதே இந்த நிலை என்றால் இப்போது இறந்த பிறகு அவர்களால் எதுவும் செய்ய முடியாது.  இதைத் திருக்குர்ஆன் தெளிவாகத் தெரிவிக்கின்றது.
எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணை கற்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள முடியாது.
அல்குர்ஆன் 7:191, 192
(எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானதே!
அல்குர்ஆன் 7:193
இந்த வசனம் நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் உண்மையைப் போட்டு உடைக்கின்றது. இந்த வசனங்கள் மீது இந்த மவ்லிது ஆசிரியருக்கு எள்ளளவேனும் நம்பிக்கை இருந்தால் ஐவர் மூலமாக அனைத்துத் தீங்கை விட்டும் காத்துக் கொள்வேன் என்று சொல்ல மாட்டார்.
குப்புற விழும் குருட்டுக் கூட்டம்
ஹுஸைன் மவ்லிதை எழுதிய இந்த அரைவேக்காடுக் கவிஞன் இறை மறுப்பில் விழுந்து விட்டான் என்றால் அதை ஆமோதித்து வழிமொழிந்து, வலிந்து வலிந்து ஓதுகின்ற இந்த ஆலிம் கூட்டத்தை என்னவென்று சொல்வது?
அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப் பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள்.
அல்குர்ஆன் 25:73
தனது வசனங்களில் கூட குருட்டுத்தனமாகவும் செவிட்டுத் தனமாகவும் விழக்கூடாது என்று என்று அல்லாஹ் கூறியிருக்கும் போது, இந்த ஆலிம் கூட்டம் இந்தக் குருட்டுக் கவிஞனின் குஃப்ரான, இணை வைப்பு வார்த்தைகளில் வீழ்ந்து விட்டது. ஒவ்வொரு வருடமும் முஹர்ரம் மாதத்தில் இந்த மவ்லிதை பக்திப் பரவசத்துடன் ஓதி மகிழ்கின்றது என்றால் இவ்களும் ஷியாக் கூட்டம் என்பதைத் தவிர்த்து வேறெதுவும் இருக்க முடியாது.
இவர்களும் இந்த ஐந்து பேரைக் கடவுளாக ஆக்கிக் கொண்டுள்ளார்கள் என்பதை இதன் மூலம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

EGATHUVAM AUG 2015