Mar 9, 2017

38. இணை கற்பித்தல் – இறந்தவர்கள் செவியேற்பார்களா?

38.  இணை கற்பித்தல் இறந்தவர்கள் செவியேற்பார்களா?
உரை: பி. ஜைனுல் ஆபிதீன்
எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.
மரணித்தவர்கள் செவியேற்க மாட்டார்கள். அவர்களுக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது; அவர்கள் எதையும் அறிய மாட்டார்கள் என்பதை தெரிந்து வைத்திருக்கின்றோம்.
முஸ்லிம்களின் நம்பிக்கைப் பிரகாரம் ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை. இறைவனால் வானத்தின் பால் உயர்த்தப்பட்டார்கள் என்று அறிந்து வைத்திருக்கின்றோம். கடைசிக் காலத்தில் இந்தப் பூமிக்குத் திரும்பவும் வந்து சில காலம் வாழ்ந்து தான் மரணிப்பார்கள்.
அப்படிப்பட்ட, தற்போது வரை உயிரோடு இருக்கின்ற ஈஸா நபியவர்கள், தற்போது நாம் செய்யக்கூடியதை அறிகிறார் என்று சொல்ல முடியுமா? அதிலும் குறிப்பாக இறந்து போன, மண்ணறைக்குள் அடக்கம் செய்யப்பட்டவர்களை விட உயிரோடு இருக்கின்றவர்கள் நாம் செய்யக்கூடிய செயல்களை அறிவதற்குச் சாத்தியம் இருக்கிறது. மேலும் மண்ணறைக்குள் இருந்து உலகத்தைப் பார்ப்பதை விட வானத்தில் இருந்து பார்ப்பது தான் மிகவும் எளிதும் கூட. வானத்திலிருந்து நாம் அனைத்தையும் பார்த்து விடலாம்.
ஆனால் இறைவன் மறுமையில் நபி ஈஸா அவர்களை எழுப்பி விசாரிக்கும் போது கிறித்தவர்கள் தன்னை வணங்கியதைக் கூட அவர்களால் அறிய முடியவில்லை என்பதை திருக்குர்ஆனிலே நாம் பார்க்க முடிகிறது.
"மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்! என நீர் மக்களுக்குக் கூறினீரா?'' என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும்போது, "நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்'' என்று அவர் பதிலளிப் பார். "நீ எனக்குக் கட்டளையிட்ட படி எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும்போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன். அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' (எனவும் அவர் கூறுவார்.)
(அல்குர்ஆன் 5.116,117)
உயிரோடு இருக்கின்ற ஒரு நபியால் இந்த உலகத்தில் என்ன நடக்கின்றது என்பதை அறிய முடியாத போது, இறந்து மண்ணோடு மண்ணாகிப் போய் விட்ட அப்துல் காதிர் ஜீலானியால் அறிய முடியுமா? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
உயிரோடு இருக்கின்ற ஈஸா நபியால் இந்த உலகத்தில் உள்ளதை அறிய முடியவில்லை என்றால் வேறு யாரால் தான் அறிய முடியும். வேறு எந்த நபிமார்களாலும் அறிய முடியாது என்று நாம் சொல்லும் போது, நம்மில் சிலர், ஈஸா நபி அறியாத விஷயங்களைக் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவார்கள். அவர்களுக்கு அந்த ஆற்றல் இருக்கின்றது என்று சொல்வார்கள்.
ஆனால், கீழ்க்கண்ட செய்தியை நாம் படிக்கும் போது நபி (ஸல்) அவர்களும் இந்த உலகத்தில் என்ன நடந்தது என்பதை அறிய முடியாதவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம். உயிரோடு இருக்கும் போது வேண்டுமானால் அவர்கள் சிலவற்றை அறிந்திருக்கலாம். சிலவற்றை அல்லாஹ் அறிவித்துக் கொடுத்து தெரிந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் அவர்கள் மரணித்த பிறகு அவர்கள் அறிவார்கள் என்று சொல்வதற்கு வாய்ப்பில்லாத வகையில் பின்வரும் செய்தி அமைந்திருக்கின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் சிலர் கொண்டு வரப்பட்டு, இடப் பக்கத்(திலுள்ள நரகத்)திற்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான், "என் இறைவா! (இவர்கள்) என் தோழர்களில் சிலர்'' என்று சொல்வேன். அதற்கு "இவர் கள் உங்களு(டைய மரணத்து)க்குப் பின் என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக் குத் தெரியாது'' என்று கூறப்படும். அப்போது நான், நல்லடியார் (ஈசா நபி) சொன்னதைப் போன்று, "நான் அவர்களுடன் இருந்த வரையில் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்!'' என்று பதிலளிப்பேன். அதற்கு, "இவர்களை நீங்கள் பிரிந்ததிலிருந்து, இவர்கள் தங்கள் குதிகால் (சுவடு)களின் வழியே தம் மார்க்கத்திலிருந்து வெளியேறிக் கொண்டு தான் இருந்தார்கள்'' என்று கூறப்படும்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 4625
மேலும் இந்தச் செய்தி 4740, 6526, 6572, 6582, 6585, 6586, 704, 7049 முஸ்லிம் 365, 4247, 4250, 4259, 5104 ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஹதீஸில், நபியவர்கள் பூமியில் உயிருடன் இருக்கும் வரைக்கும் தான் மக்கள் என்னென்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதைக் கவனிப்பவர்களாக இருந்தார்கள் என்பதும் அவர்கள் மரணித்த பிறகு மக்கள் செய்வதைக் கண்கானிக்க முடியாதவர்களாக இருந்தார்கள் என்பதும் நமக்கு தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.
இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள். பதில் தர மாட்டார்கள். அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பதற்கு நாம் இத்தனை ஆதாரங்களை மேற்கோள் காட்டிச் சொல்லும் போது, இந்தக் கப்ரு வணங்கிகள், தர்ஹா வழிபாட்டு ஆதரவாளர்கள் "இறந்தவர்கள் செவியேற்பார்கள். அவர்கள் அற்புதங் கள் செய்வார்கள். அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டு என்பதற்கு எங்களிடத்தில் ஆதாரம் இருக்கிறது என்கின்றனர். நாம் காட்டிய ஆதாரங்கள் அனைத்தையும் மறுத்து விட்டு, இறந்தவர்கள் செவியேற்பார்கள் என்பதற்கு எங்களிடத்தில் வேறு ஆதாரங்கள் இருக்கின்றது என்று சொல்கிறார்கள்.
அப்படி அவர்கள் வைக்கக்கூடிய ஆதாரங்களையும் அதற்கு நம்முடைய விளக்கத்தையும் இனி பார்ப்போம்.
இறந்தவர்கள் செவியேற்பார்கள் என்பதற்கு கீழ்க்கண்ட செய்தியை ஆதாரமாகக் காட்டுகின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஓர் அடியாரின் உடலைக் சவக்குழியில் அடக்கம் செய்துவிட்டு, அவருடைய தோழர்கள் திரும்பும் போது அவர்களது செருப்பின் ஓசையை பிரேதம் (மய்யித்) செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து "முஹம்மத் எனும் இந்த மனிதரைப் -பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?'' எனக் கேட்பர். அதற்கு "இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரு மாவார் என நான் சாட்சியம் கூறுகின்றேன்'' என்பார். பிறகு "(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவரிடம் கூறப்பட்டதும் அவர் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பார். நிராகரிப் பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், "எனக்குத் தெரியாது; மக்கள் சொல் வதையே நானும் சொல்லிக் கொண் டிருந்தேன்'' என்பான். அப்போது அவனிடம் "நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனது இரு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் அலறுவான்.''
நூல்: புகாரி 1338
மேலும் இந்த செய்தி புகாரி 1285, முஸ்லிம் 5116, திர்மிதீ 991, அபுதாவூத் 4127 ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
"மக்கள் மய்யித்தை அடக்கம் செய்து விட்டு திரும்பிச் செல்லும் போது செருப்போசையைக் கேட்கிறது'' என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள் என்றால் எப்போதும் கேட்கிறது என்று நாம் விளங்கிக் கொள்ளக்கூடாது.
அப்படி நாம் விளங்கக் கூடாது என்பதற்காகத் தான் நபியவர்கள் "திரும்பிச் செல்லும் போது செருப்போசையைக் கேட்கிறது'' என்று கூறுகிறார்கள். திரும்பிச் செல்லும் போது என்ற வார்த்தை, எப்போதும் கேட்காது, திரும்பிச் செல்லும் போது மட்டும் தான் கேட்கும் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.
ஒருவரை மண்ணறைக்குள் அடக்கம் செய்யப்பட்டு, நம்மை விட்டு எல்லோரும் திரும்பிச் செல்லும் போது, அந்த மய்யித்துக்கு நாம் தனிமைப்படுத்தப்பட்டு விட்டோம் என்பதை உணர்த்துவதற்காகத் தான் இறைவன் இந்த ஒரு ஏற்பாட்டை செய்கிறான்.
எனவே இறந்தவர்கள் எப்போதும் கேட்கிறார்கள் என்று கூறுபவர்கள் பல்வேறு திருமறை வசனங்களையும், ஹதீஸ்களையும் மறுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவார்கள். இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டுபவர்கள் வசதியாக ஒன்றை மறைத்து விடுவார்கள்.
மக்கள் திரும்பிச் சென்றவுடன் மலக்குமார்கள் இறந்தவரிடம் வந்து விசாரணை செய்கிறார்கள். அவர் மலக்குகளின் கேள்விகளுக்கு பதில் கூறி விட்டால் மலக்குகள் அவரை நோக்கி "அல்லாஹ் அவரை அவருடைய படுக்கையிலிருந்து எழுப்புகின்ற வரை நெருக்கமான வர்களைத் தவிர வேறு யாரும் எழுப்ப முடியாதே அப்படிப்பட்ட புது மாப்பிள்ளை போன்று தூங்கு'' என்று கூறி விடுவார்கள். தீயவராக இருந்தால் அவருக்கு கியாமத் நாள் வரை வேதனை செய்யப்படும் என்பதையும் நாம் ஹதீஸ்களில் காண்கிறோம். (பார்க்க: திர்மிதி 991)
இறந்தவர்களை இறைவன் கியாமத் நாளில் தான் எழுப்புவான். எனவே இறந்துவிட்ட நல்லடியார்கள் கியாமத் நாள் வரை நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எதையும் அறிய மாட்டார்கள். அதேபோன்று கெட்டவர்கள் கடுமை யான முறையில் அவர்களுடைய விலா எலும்புகள் நொருங்கி போகின்ற அளவுக்கு வேதனை செய்யப்பட்டு கொண்டு இருப்பார்கள். அவர்களும் நாம் செய்வதை அறிய மாட்டார்கள் என்பதைத் தான் இந்த ஹதீஸிலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.
ஆக மேற்கண்ட ஹதீஸை வைத்து இறந்தவர்கள் செவியேற் பார்கள் என்ற கருத்து தவறான வாதமாகும்.
அதே நேரத்தில், இந்த ஹதீஸை நாம் நிராகரிக்கவுமில்லை. என்ன அளவுகோல் சொல்லப்பட்டிருக் கின்றதோ அதை அப்படியே ஏற்றுக் கொள்வோம். அடக்கம் செய்யப்பட்ட சிறிது நேரத்தில் மட்டும் தான் செருப்போசையை கேட்பார்கள். பிறகு அதுவும் முடியாமல் போய்விடும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக அவர்கள் வைக்கக் கூடிய இரண்டாவது வாதம், பத்ருப் போர் முடிந்த பிறகு நடந்த சம்பவமாகும்.
அந்தப் போரில் கொல்லப்பட்ட எதிரிகள் அங்கு இருந்த பாழடைந்த கிணற்றில் போடப்பட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை வைத்து இறந்தவர்கள் செவியேற்பார்கள் என்று வாதிடுகின்றனர். அந்தச் சம்பவம் பின்வருமாறு,..
பத்ருப் போர் (நடந்து முடிந்த) நாளன்று நபி (ஸல்) அவர்கள், குறைஷித் தலைவர்களில் இருபத்தி நான்கு பேர்(களின் சடலங்)களை பத்ருடைய கிணறுகளில் அசுத்த மானதும், அசுத்தப்படுத்தக் கூடியதுமான (கற்களால் உட்சுவர் எடுக்கப்பட்ட) கிணறு ஒன்றில் தூக்கிப் போடுமாறு உத்தர விட்டார்கள். (எதிரிக்) கூட்டத்தினர் எவரிடமாவது நபி (ஸல்) அவர்கள் போரிட்டு வெற்றி கண்டால் (போரிட்ட இடத்திலுள்ள) திறந்த வெளியில் மூன்று நாட்கள் தங்கிச் செல்வது அவர்களது வழக்கமாக இருந்தது. பத்ர் முடிந்த மூன்றாம் நாள் தம்முடைய வாகன(மான ஒட்டக)த்தின் மீது அதன் சிவிகையை (ஏற்றிக்) கட்டுமாறு நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். ஆகவே, அதன் மீது அதன் சிவிகை கட்டப்பட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் (புறப்பட்டுச்) சென்றார்கள். அவர்களுடைய தோழர்களும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். நபி (ஸல்) அவர்கள் ஏதோ தமது தேவை ஒன்றிற்காகவே செல்கிறார்கள் என்றே நாங்கள் நினைத்தோம். இறுதியில், அந்தக் (குறைஷித் தலைவர்கள் போடப்பட்டிருந்த) கிணற்றருகில் நபியவர்கள் நின் றார்கள். (கிணற்றோரம் நின்றிருந்த) நபி (ஸல்) அவர்கள், (அதில் எறியப்பட்டிருந்த) அவர்களுடைய பெயர்களையும், அவர்களுடைய தந்தையரின் பெயர்களையும் குறிப்பிட்டு, "இன்னாரின் மகன் இன்னாரே! இன்னாரின் மகன் இன்னாரே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் (இப்போது அது) உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தானே! ஏனெனில், எங்களுடைய இரட்சகன் எங் களுக்கு வாக்களித்த (நன்மை)தனை உண்மையானதே என்று நாங்கள் கண்டு கொண்டோம். உங்களுக்கு உங்களுடைய இரட்சகன் வாக்களித்த (தண்டனை)தனை உண்மையானது தான் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா?'' என்று கூறினார்கள். உடனே (அருகிலிருந்த) உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "என்னுடைய உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணை யாக! நான் கூறுவதை (கிணற்றில் உள்ள) இவர்களை விட நன்கு செவியேற்பவர்களாக நீங்கள் இல்லை'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதல்ஹா (ரலி)
நூல்: புகாரி (3976)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிணற்றில் போடப்பட்ட காஃபிர்களை நோக்கி பேசும் போது உமர் (ரழி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! உயிரில்லாத உடல்களிடம் என்ன பேசுகிறீர்கள்?'' என்று கேட்கிறார்கள். அதற்கு நபியவர்கள் பதிலளிக்கும் போது, "இப்போது அவர்கள் நான் அவர்களிடம் கூறுவதை கேட்கிறார்கள்'' என்று கூறுகிறார்கள்.''
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: நஸயீ 2076
இறந்தவர்கள் எப்போதும் கேட்பார்கள் என்றிருக்குமானால் நபியவர்கள், "இறந்தவர்கள் கேட்கிறார்கள்' என்று பொதுவாகக் கூறியிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு கூறவில்லை. "இப்போது கேட்கிறார்கள்'' என்று தான் கூறுகிறார்கள்.
எனவே, அந்த நேரம் தவிர எப்போதும், வேறு யாரும் அவ்வாறு கேட்க மாட்டார்கள் என்பதைத் தான் நாம் விளங்கிக் கொள்ள முடியும். எனவே இது பத்ருப் போரில் கொல்லப்பட்ட காஃபிர்களுக்கு மட்டும் தான் உரியதே தவிர அனைத்து இறந்தவர்களுக்கும் உரியது கிடையாது.
மேலும் இந்த ஹதீஸில் ஒரு பகுதியை இவர்கள் வசதியாக மறைத்து விடுகிறார்கள். இந்த ஹதீஸின் மூலம் இறந்தவர்கள் எப்போதும் கேட்கிறார்கள் என்ற இல்லாத கருத்தை விளங்கிக் கொள்ளக் கூடிய இவர்கள் நபியவர்கள் இதனைத் தொடர்ந்து "அவர்கள் கேட்டாலும் பதிலளிக்க சக்தி பெற மாட்டார்கள்'' (முஸ்லிம் 5121) என்று கூறுகின்ற வாசகத்தை மறைத்து விடுகின்றார்கள்.
ஒரு வாதத்திற்கு இந்த ஹதீஸிலிருந்து இறந்தவர்கள் எப்போதும் கேட்பார்கள் என்று வைத்துக் கொண்டாலும் "அவர்கள் பதிலளிக்க சக்தி பெற மாட்டார்கள்'' என்றும் வருகிறது. ஆனால் நபியவர்களின் இந்தக் கூற்றுக்கு மாற்றமாக இவர்கள் இறந்தவர்கள் பதிலளிப்பார்கள் என்றும் நம்பிக்கை வைத்துள்ளனர். இது மாபெரும் இணைவைப்புக் காரியமாகும்.
இவை தவிர "அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் பிரார்த்தனை செய்யக் கூடாது'' என்று கூறும் நூற்றுக் கணக்கான வசனங்கள் திருக் குர்ஆனில் உள்ளன.
மேலும் இந்த ஹதீஸை நாம் எவ்வாறு விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்கு நபிகளாரின் மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் அருமையான விளக்கத் தையும் பாருங்கள்.
உர்வா பின் ஸுபைர் அவர்கள் கூறியதாவது: "குடும்பத்தினர் (ஒப்பாரி வைத்து) அழுவதால் மண்ணறையில் (இருக்கும் அவர்களின் உறவினரான) இறந்தவர் வேதனை செய்யப் படுகின்றார்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், "(நபி -ஸல்- அவர்கள் அப்படிச் சொல்ல வில்லை.) "இறந்தவர் (தன் வாழ்நாளில் புரிந்த) சிறிய, பெரிய பாவங்களின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவருடைய குடும்பத்தினரோ, இப்போது அவருக்காக அழுது கொண்டிருக் கின்றனர்'' என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என்று சொன்னார்கள்.
(மேலும்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இது எப்படியிருக்கிற தென்றால், "(குறைஷித் தலைவர் களான) இணைவைப்பவர்கள் பத்ரில் கொல்லப்பட்டு எறியப்பட்டிருந்த கிணற்றுக்கு அருகில் நின்று கொண்டு, அவர்களைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் ஏதோ பேசினார்கள். (அப்போது நபி ஸல்-அவர்களிடம், "உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?'' என்று உமர் -ரலி- அவர்கள் கேட்ட போது) "நான் கூறுவதை அவர்கள் செவியேற்கிறார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்ததாக இப்னு உமர் கூறியதைப் போன்றது தான் இதுவும். ஆனால், "நான் அவர்களுக்குச் சொல்லி வந்ததெல்லாம் உண்மையென்று இப்போது அவர்கள் அறிகிறார்கள்'' என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்போது நான் கூறுவதை அவர்கள் செவியேற் கிறார்கள்'' என்று நபியவர்கள் சொல்லவில்லை.)
பிறகு, (இறந்தவர்கள் நாம் பேசுவதைச் செவியேற்பதில்லை என்ற தமது கருத்திற்குச் சான்றாக) ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வரும் வசனங்களை) ஓதினார்கள்:
உங்களால் கேட்கச் செய்ய முடியாது. (27:80), (நபியே!) மண்ணறைகளில் இருப்பவர்களை உங்களால் செவியேற்கச் செய்ய முடியாது. (35:22) "நரகத்தில் அவர்கள் தங்களின் இருப்பிடங்களில் ஒதுங்கும் போது (இந்நிலை ஏற்படும்)'' என ஆயிஷா (ரலி) அவர்கள் (விளக்கம்) கூறினார்கள்.
நூல்: புகாரி (3978, 3979)
மேலும், இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்கின்ற இஸ்லாத்தின் அடிப்படையை மிகச் சரியாக புரிந்து கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "உயிரில்லாத உடல் களிடம் என்ன பேசுகின்றீர்கள்?' என்று கேட்டதற்கு நபிகளார் பொதுவாக இறந்தவர்கள் செவியேற்கிறார்கள் என்று கூறாமல், "இப்போது அவர்கள் கேட்கிறார்கள்'' என்று வரையறுத்து கூறுவதையும், "அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள்'' என்ற நபிமொழியின் இறுதிப் பகுதியையும் கருத்தூன்றிப் படிப்பவர்கள், இறந்தவர்கள் செவியேற்பார்கள் என்பதற்கு எதிராக அமைந்துள்ள இச்செய்தியை ஆதாரமாகக் காட்டமாட்டார்கள்.

EGATHUVAM APR 2016