39. இணை கற்பித்தல் – இறந்தவர்கள் செவியேற்பார்களா?
உரை: பி. ஜைனுல் ஆபிதீன்
எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.
ஒரு மனிதர் உயிரோடு வாழ்கின்ற நேரத்தில் கூட
அவருடைய விருப்பத்தின் படி அவரால் எந்த ஒரு அற்புதத்தையும் செய்ய முடியாது
என்பதையும், நபிமார்கள் உட்பட யாராக இருந்தாலும் மரணத்திற்குப்
பிறகு இந்த உலகத்தில் எந்தவிதமான செயல்பாடும் அவர்களுக்கு கிடையாது என்பதையும்
நாம் இதுவரை பார்த்து வந்தோம்.
ஒருவர் மரணித்து விட்டார் என்று சொன்னால்
அவருக்கும் இந்த உலகத்திற்கும் மத்தியில் அல்லாஹ் கண்ணுக்குத் தெரியாத பர்ஸக்
எனும் ஒரு திரையைப் போட்டு விடுகிறான். அவர்களால் இந்தப் பூமிக்கு வர முடியாது.
இங்குள்ள விஷயங்கள் அங்கு செல்லாது என்பதையும் நாம் பார்த்தோம்.
அதற்குச் சான்றாக நபிகளாரின் செய்தி ஆதாரமாக
இருப்பதை நாம் காணலாம்.
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிரேதம் (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில்
தூக்கிச் செல்லும் போது, அந்தப் பிரேதம் நல்லறங்கள் புரிந்ததாக இருப்பின்,
“என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்” என்று கூறும்.
அது நல்லறங்கள் புரியாததாக இருப்பின்,
“கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?” என்று கூறும்.
இவ்வாறு கூறப்படும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால்
மயங்கி விழுந்துவிடுவான்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்
: புகாரி 1316
நாம்
நம்முடைய தோளில் வைத்து சுமந்து செல்லக்கூடிய இறந்து போன ஜனாஸா மேற்கண்டாவறு
சொல்வதை நம்மால் செவியுற முடிகிறதா? அந்த ஜனாஸா பேசுவதாக அல்லாஹ்வின் தூதர் வஹீ மூலமாக அறிந்து நமக்குச் சொல்லித் தருகிறார்கள். அந்த
ஜனாஸா நம்முடைய தோளில் இருந்தாலும் அது பேசுவதை நம்மால் ஏன் அறிய முடியவில்லை
என்றால் அந்த ஜனாஸாவிற்கும் இந்த உலகத்திற்கும் மத்தியில் அல்லாஹ் ஒரு தடுப்பை
ஏற்படுத்தி விட்டான். அது பேசுவதை நம்மால் அறிய முடியாது. அவர்களின் பேச்சு
உயிரோடு இருக்கின்ற நமக்கு வந்து சேராது. இது நமக்குத் தேவையுள்ள விஷயமாக இருப்பதின்
காரணத்தினால் அல்லாஹ்வின் தூதர் நமக்கு இதனைச் சொல்லிக் காட்டுகிறார்கள்.
மேலும் நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒரு மனிதன் இறந்த பிறகு மூன்று விஷயங்களைத் தவிர மற்ற அனைத்தும்
துண்டிக்கப்படும். 1) பயனளிக்கும் கல்வி 2) நிரந்தர தர்மம் 3) அவனுக்காகப் பிரார்த்தனை
செய்யும் நல்ல குழந்தை.
அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி)
நூல்
: முஸ்லிம் 3083
இந்தச்
செய்தி, மனிதன் இறந்து விட்டான் என்றால் அவனுக்கும்
அவனுடைய செயலுக்கும் உள்ள தொடர்பு முறிந்து விடுகிறது என்பதையும், அவனுடைய செயலை அவனால் தொடர்ந்து செய்யவும் முடியாது என்பதையும்
தெரிவிக்கிறது. மேற்கண்ட 3 காரியங்களைத் தவிர மனிதனுக்கு இந்த உலகத்தோடு
இருக்கின்ற உறவு முறிந்து விடுகிறது.
ஆனால் இதற்கு மாற்றமாக நம் சமுதாய மக்கள், உயிரோடு இருந்ததை விட இறந்த பிறகுதான் அவரிடமிருந்து பல
செயல்கள் வெளிப்படுவதாக நம்புகிறார்கள். உயிரோடு உள்ளவர்களை வைத்து பல தெய்வ
வணக்கம் எங்காவது நடக்கிறதா? கிடையாது.
இறந்து போனவர்களைத்தான் சிலையாக வைத்து வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். இறந்து
போனவர்களைத்தான் கப்ருகளாக வைத்து வணங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
உயிரோடு உள்ளவர்களைக் கடவுள்களாக வைத்து
வணங்கினால் யாரும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவரும் நம்மைப் போன்று மலம்
ஜலம் கழிக்கிறார், சாப்பிடுகிறார் என்பதை அவன் நேரில் பார்க்கும்
போது அவனைக் கடவுளாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறான். ஆனால் அதே மனிதன் இறந்த பிறகு, உயிரோடு இருக்கும் போது ஒரு மனிதனுக்கு என்ன ஆற்றல் இருக்குமோ
அதை விட சக்தி வாய்ந்த ஆற்றல் இருப்பதாக நம்புகிறான்.
அதற்குத் தான் மேற்கண்ட ஹதீஸ், ஒருவன் இறந்துவிட்டால் அவனால் எந்தச் செயலும் செய்ய
முடியாது என்பதற்குத் தெளிவான ஆதாரமாக இருக்கிறது.
மேற்கண்ட இந்த ஹதீஸைச் சுட்டிக்காட்டி நாம்
இவ்வாறு தெளிவுபடுத்தும் போது, ஒரு சிலர்
இதற்கு எதிர்வாதத்தை வைப்பார்கள்.
அல்லாஹ்வுடைய பாதையில் கொல்லப்பட்ட தியாகிளை
அல்லாஹ் அதிகமாகவே புகழ்ந்து சொல்கிறான். வேறு யாருக்கும் கொடுக்காத சிறப்பை
அல்லாஹ் இந்த ஷஹீத்களுக்குக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறான்.
இதே
கருத்தில் அமைந்த இன்னொரு வசனத்தையும் ஆதாரமாகக் காட்டுவார்கள்.
அல்லாஹ்வின்
பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும்
நீங்கள் உணர மாட்டீர்கள்.
அல்குர்ஆன்
2:154
மேற்கண்ட
இரண்டு வசனங்களையும் சுட்டிக்காட்டி, அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் என்று சொல்லக்கூடாது.
மாறாக அவர்கள் உயிருடன் தான் இருக்கின்றார்கள். உயிருடன் இருக்கும் போது மனிதன்
செவியேற்பதைப் போன்று அடக்கம் செய்யப்பட்டவர்களும் செவியேற்பார்கள். உயிருடன்
உள்ளவர்கள் பார்ப்பதைப் போன்று இறந்தவர்களும் பார்ப்பார்கள். எனவே அவ்லியாக்கள்
என்பவர்கள் அல்லாஹ்வின் இறைநேசர்களாவர். அதனால் அவர்களிடத்தில் பிரார்த்தனை
செய்யலாம். உதவி தேடலாம் என்பதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
மரணித்த பின்பும் நல்லடியார்கள் வாழ்கிறார்கள்
என்று இரண்டு வசனங்களும் கூறுவதால் அவர்களை வழிபடலாம் என்பது இவர்களின் வாதம்.
பல நியாயமான காரணங்களால் இவர்களின் வாதம்
முற்றிலும் தவறாகும்.
இதில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய விஷயம்
என்னவென்றால், மேற்கண்ட இரு வசனங்களும் அல்லாஹ்வின் பாதையில்
கொல்லப்பட்டவர்ளுக்குத்தான் குறிப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. இதை வைத்துக் கொண்டு
முகவரி இல்லாதவர்களையெல்லாம், யாரென்று
தெரியாதவர்களையெல்லாம் இறைநேசர்கள் என்று சொல்லி அவர்களை வணங்குவது அறிவற்ற வாதம்.
அப்படியே நாம் அவ்வாறு சொல்வதாக இருந்தால்
நபிகளார் காலத்தில் பத்ரு மற்றும் உஹதுப் போன்ற போர்க்களங்களில் எதிரிகளுடன் போர்
செய்து அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களைத்தான் நாம் சொல்ல வேண்டுமே தவிர
இப்போது யாராவது இறந்தார்கள் என்றால் அவர்களை நாம் அப்படி சொல்லக்கூடாது.
உதாரணத்திற்குச் சொல்வதாக இருந்தால் இன்று
தமிழகம் முழுவதும் அவ்லியாக்கள் என்ற பெயரில் அடக்கம் செய்யப்பட்டவர் அனைவரும்
ஏதாவது போர்க்களத்தில் கலந்து கொண்டு அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களா? ஷஹீதானவர்களா? அவர்களில் யாராவது ஒருவரை அவ்வாறு சொல்ல முடியுமா? அவர் சாதாரணமான முறையில் இறந்தவராகத்தான் இருப்பார்.
மேலும், அவ்லியாக்கள் என்ற பெயரில் அடக்கம் செய்யப்பட்டவர்களின்
வரலாறுகளைப் படித்துப் பார்த்தால் நாம் முகம் சுளிக்கக்கூடிய அளவிற்குத்தான்
அவர்களுடைய வரலாறுகள் இருக்கின்றன. பீடி குடித்து இறந்து போனவர்கள் அல்லாஹ்வின்
இறைநேசராம்! கஞ்சா குடித்து இறந்து போனவர்கள் இறைநேசராம்! இவ்வாறு யாரென்று
தெரியாதவர்களைத்தான் இவர்கள் இறைநேசர்கள் என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றனர்.
மேலும், முதலாவது
வசனத்தில் உயிருடன் உள்ளனர், எனினும் (அதை) நீங்கள் உணர மாட்டீர்கள் என்று கூறப்படுகிறது.
அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றால்
நீங்கள் தெரிந்து வைத்துள்ள அர்த்தத்தில் அல்ல. மாறாக இதை நீங்கள் உணர முடியாது
என்று இங்கே அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான். நாம் உணர்ந்து கொள்ள இயலாத வேறொரு
விதமான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இரண்டாவது வசனத்தில் தங்கள் இறைவனிடம் அவர்கள் உயிருடன் உள்ளனர் என்கிறான். நம்மைப் பொறுத்த வரை அவர்கள் மரணித்து
விட்டாலும் இறைவனிடம் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நாம் பேசுவதைக் கேட்கவோ, பதிலளிக்கவோ இயலாத நமக்குத் தெரியாத இன்னொரு வாழ்க்கையை
அவர்கள் வாழ்வதாகத் தான் இந்த வசனங்கள் கூறுகின்றனவே அன்றி இவர்கள் நினைக்கின்ற
அர்த்தத்தில் வாழ்கிறார்கள் எனக் கூறவில்லை.
அடுத்து இந்த வசனம் பற்றி நபிகள் நாயகம் (ஸல்)
சொன்ன விளக்கத்தையும் இவர்கள் கவனிக்கத் தவறி விட்டனர்.
மஸ்ரூக்
பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், "(நபியே!) அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என நீர்
எண்ண வேண்டாம். மாறாக, (அவர்கள்) உயிருடன் உள்ளனர்; தம் இறைவனிடம் (நெருக்கமாக) உள்ளனர்; உணவளிக்கப் பெறுகின்றனர்'' (3:169) எனும் இந்த வசனத்தைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்:
தெரிந்து கொள்க. இந்த வசனம் குறித்து முன்பே நாங்கள் (நபியவர்களிடம்) கேட்டுவிட்டோம்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர்களின் உயிர்கள்
பச்சை நிறப் பறவைகளின் வயிறுகளில் (செலுத்தப்பட்டு) இருக்கும். அவற்றுக்கென அர்ஷின்
கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுகள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு
உண்டு களித்துவிட்டுப் பின்பு அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும்.
அப்போது அவர்களின் இறைவன் அவர்களிடம் ஒரு முறை தோன்றி, "நீங்கள்
எதையேனும் ஆசைப்படுகிறீர்களா?'' என்று கேட்பான். அதற்கு அவர்கள், "நாங்கள்
ஆசைப்படுவதற்கு என்ன உள்ளது? நாங்கள்தாம் சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துக் கொண்டிருக்கிறோமே!'' என்று கூறுவர்.
இவ்வாறே மூன்று முறை (கேள்வியும் பதிலும்) நடைபெறுகிறது. எதையேனும்
கேட்காமல் நாம் விடப்பட மாட்டோம் என்பதை அவர்கள் காணும்போது, "இறைவா!
எங்கள் உயிர்களை எங்கள் உடல்களுக்குள் திரும்பவும் செலுத்துவாயாக! நாங்கள் உனது பாதையில்
மீண்டும் ஒரு முறை கொல்லப்பட வேண்டும்'' என்று கூறுவர். அவர்களுக்கு (இதைத்
தவிர) வேறெந்தத் தேவையும் இல்லையென்பதை இறைவன் காணும்போது, அவர்கள் (அதே
நிலையில்) விடப்படுவார்கள்.
நூல்
: முஸ்லிம் 3834
உயிருடன்
உள்ளனர் என்பதன் பொருள் சொர்க்கத்து வாழ்வு தான் என்று நபிகள் நாயகம் (ஸல்)
விளக்கிய பின் அதற்கு மாற்றமாக இவர்கள் தரும் விளக்கம் தள்ளப்பட வேண்டியதாகும்.
இந்த நிலை கூட எல்லா நல்லடியார்களுக்கும்
பொதுவானதன்று. அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களுக்கே உரியதாகும்.
மற்ற நல்லடியார்களுக்கு இந்த நிலைமை இல்லை.
மற்ற நல்லடியார்களின் நிலை என்ன என்பதைப் பின்வரும்
நபிமொழி விளக்குகின்றது.
ஒரு நல்லடியார் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவுடன்
கேள்விகள் கேட்கப்படும். அவர் சரியாக பதில் கூறுவர். அதன் பின்னர் 'புது மணமகனைப் போல் நீ உறங்கு! அல்லாஹ் உன் உறக்கத்திலிருந்து
உன்னை எழுப்பும் வரை உறங்கு!' எனக் கூறப்படும்
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஹதீஸின் சுருக்கம்)
அஹ்மத், திர்மிதீ ஆகிய நூல்களில் இது இடம் பெற்றுள்ளது.
உயிருடன் இருந்தாலும் கூட கியாம நாள் வரை
எழாமல் உறங்கிக் கொண்டே இருப்பவர்களை அழைப்பது என்ன நியாயம்? உயிருடன் இருப்பதற்காக ஒருவரை அழைத்துப் பிரார்த்திக்க
முடியுமா என்பதை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் பார்ப்போம்.
EGATHUVAM JUN 2016