40. இணை கற்பித்தல் –
இறந்தவர்கள் செவியேற்பார்களா?
உரை: பி. ஜைனுல் ஆபிதீன்
எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.
அல்லாஹ்வின்
பாதையில் கொல்லப்பட்டவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதற்கான விளக்கத்தைக்
கடந்த இதழில் பார்த்தோம். அவர்கள் சொர்க்கத்தில் பச்சை நிறப் பறவை வடிவத்தில்
இருக்கிறார்கள் என்பது தான் இதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அளித்த
விளக்கம் என்பதையும் கண்டோம்.
ஒரு
வாதத்திற்கு கப்ரு வணங்கிகள் நினைக்கின்ற விதமாக உயிருடன் இருப்பதாகவே வைத்துக்
கொள்வோம்.
ஒருவர்
உயிரோடு இருக்கிறார் என்பதற்காக அவரிடம் போய்ப் பிள்ளையைக் கேட்க முடியுமா? மழையைக்
கேட்க முடியுமா? உயிரோடு
இருப்பதால் பிரார்த்திக்கின்றோம் என்றால் பிரார்த்திப்பவர்களும் உயிருடன் தானே
உள்ளனர்?
ஈஸா நபி
உண்மையாகவே இன்று வரை உயிருடன்தான் உள்ளார். இதைத் திருக்குர்ஆனின் பல்வேறு
வசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
ஈஸா
நபியவர்கள் இவ்வுலகில் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தினார்கள். அவர்களை அழைத்துப்
பிரார்த்திக்கும் கிறித்தவர்களின் நடவடிக்கை தவறானது என்று நம்புகின்ற முஸ்லிம்கள், ஈஸா
நபிக்குச் சமமாக இல்லாதவர்களிடம் பிரார்த்திப்பது எந்த வகையில் சரியாகும்? ஈஸா
நபியைப் பிரார்த்திப்பவர்களைக் காஃபிர்கள் எனக் கூறுவோர் தங்கள் செயலை எப்படி
நியாயப்படுத்த முடியும்?
அனைத்தையும்
படைத்துப் பரிபாலிக்கும் அனைத்து ஆற்றலும் உள்ளவனிடம் தான் பிரார்த்திக்க
வேண்டும். ஒருவர் உயிருடன் இருப்பதால் மட்டும் அவரிடம் பிரார்த்திக்க முடியாது.
அல்லாஹ்வின்
பாதையில் ஒருவர் கொல்லப்பட்டாரா? அல்லது பெருமைக்காக போருக்குச் சென்று
கொல்லப்பட்டாரா? என்பது
அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் தான்
கொல்லப்பட்டார் என்று நாம் முடிவு செய்ய முடியாது. இதையும் கவனத்தில் கொள்ள
வேண்டும்.
ஆக
மொத்தத்தில் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் தாமதிக்காமல் உடனடியாக
சொர்க்கத்திற்குதான் முதலில் செல்வார்கள். அவர்களின் உடல் மட்டும்தான்
மண்ணறைக்குள் இருக்கும். உயிர் (ஆத்மா) சுவனத்தில் இருக்கும் என்று மேற்கண்ட
ஹதீஸிலிருந்து விளங்கலாம்.
மேலும் இதனை
உறுதிப்படுத்தும் விதமாக அதாவது அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் உடனே
சொர்க்கம் செல்வார்கள் என்பதற்கு யாசீன் என்ற அத்தியாயத்தில் வரக்கூடிய வசனங்களும்
சான்றாக அமைந்திருக்கின்றன. (பார்க்க: யாசீன் அத்தியாயத்தில் 13-வது வசனம்
முதல் 26 வரை)
ஓர் ஊராரிடம் தூதர்கள் வந்த போது நடந்ததை அவர்களுக்கு முன்னுதாரணமாகக்
கூறுவீராக!
அவர்களிடம் இருவரைத் தூதர்களாக நாம் அனுப்பிய போது அவ்விருவரையும்
பொய்யரெனக் கருதினர். எனவே மூன்றாமவரைக் கொண்டு வலுப்படுத்தினோம். நாங்கள்
உங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் என்று அவர்கள் கூறினர். ……நாங்கள் உங்களை கெட்ட
சகுனமாகவே கருதுகிறோம். நீங்கள் விலகிக் கொள்ளவில்லையென்றால் உங்களைக் கல்லால்
எறிந்து கொலை செய்வோம். எங்களிடமிருந்து துன்புறுத்தும் வேதனை உங்களுக்கு ஏற்படும்
என்று (அவ்வூரார்) கூறினர்.
……..சொர்க்கத்திற்கு செல் என்று
(அவரிடம்) கூறப்பட்டது.
(அல்குர்ஆன் 36:13-26)
இவ்வசனத்தில்
ஒரு நல்ல மனிதர் இறைத்தூதர்களுக்காகப் பரிந்து பேசியதைச் சொல்லி வந்த இறைவன்
திடீரென சொர்க்கத்திற்குச் செல் எனக் கூறப்பட்டது என்று கூறுகிறான்.
அந்தச்
சமுதாயத்தினர் அந்த மனிதரைக் கொன்று விட்டார்கள் என்ற செய்தி இதனுள்
அடங்கியுள்ளது. அப்படிக் கொல்லப்பட்டவுடனேயே அவர் சொர்க்கத்திற்குச் சென்று
விட்டார் என்ற கருத்தையும் இவ்வசனம் தருகிறது.
கப்ரு என்ற
ஒரு வாழ்க்கை உண்டு. அங்கே விசாரணை உண்டு என்று நாம் நம்புகிறோம்.
இதில்
இவரைப் போன்ற அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களுக்கு மட்டும்
விதிவிலக்கு
உண்டு. இவர்கள் நேரடியாகவே சொர்க்கம் சென்று விடுவார்கள். ஆனால் பச்சை நிறத்து
பறவை வடிவத்தில்தான் அவர்கள் சொர்க்கத்தில் பறந்து கொண்டிருப்பார்கள் என்று நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கி உள்ளனர்.
அல்லாஹ்வின்
பாதையில் கொல்லப்பட்டவர்கள் உயிருடன் உள்ளனர் என்பதற்கு அல்லாஹ்வின் தூதர் கொடுத்த
அர்த்தம் தவிர வேறு அர்த்தம் இல்லை. அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள்
சாகாமல் நம்மைப்போல் உயிருடன் உள்ளனர் என்று யாரேனும் இதற்குப் பொருள் செய்தால்
அவர்கள் கீழ்க்காணும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?
அல்லாஹ்வின்
பாதையில் கொல்லப்பட்டவரின் சொத்துக்களை அவரது வாரிசுகள் எடுத்துக் கொள்ளலாமா? அவரது
மனைவி மறுமணம் செய்து கொள்ளலாமா? என்று இவர்களிடம் கேட்டால் செய்யலாம் என்று
தான் பதிலளிக்கிறார்கள்.
அவர்கள்
இறந்து விட்டார்கள் என்று இவர்களும் ஒப்புக் கொள்வதை இதிலிருந்து அறிந்து
கொள்ளலாம்.
நம்மைப்
போலவே உயிருடன் உள்ளனர் என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். ஒருவர்
உயிருடன் இருப்பதால் அவரிடம் பிரார்த்திக்கலாமா? அவருக்குக் கடவுள் தன்மை வந்து விடுமா? நாம் கூட
உயிருடன் தான் இருக்கிறோம். நம்மில் ஒருவர் மற்றவரிடம் பிரார்த்தனை செய்யலாமா?
மேற்கண்ட
வசனங்களை வைத்து இறந்தவர்கள் உயிருடன் தான் உள்ளனர் என்று சொல்வது தவறான வாதமாகும்.
அடுத்ததாக, நபியவர்கள்
இன்றும் உயிருடன் தான் இருக்கிறார்கள் என்பதற்கு மற்றொரு ஆதாரத்தையும்
காட்டுவார்கள்..
அதாவது
நாம் நபியவர்கள் மீது சலவாத் சொல்ல வேண்டும் என்பதை அனைவரும் அறிந்து
வைத்திருக்கிறோம். அதே போன்று அவர்கள் மீது சலாமும் சொல்ல வேண்டும் என்றும் இறைவன்
கட்டளையிடுகிறான். அந்த வசனத்தை ஆதாரமாகக் கொண்டு, ‘நாம் நபியவர்கள் மீது சொல்லக்கூடிய சலாமை
அவர்கள் செவியேற்று நமக்கு பதில் சலாம் சொல்வார்கள். எனவே அவர்கள் உயிருடன் தான்
உள்ளார்கள். அவர்களுக்கும், இந்த உலகத்திற்கும் தொடர்பு உள்ளது. பர்ஸக்
எனும் தடையிலிருந்து அவர்கள் விதிவிலக்கு பெற்றவர்கள்’ என்ற ஒரு
வாதத்தை வைக்கின்றனர்.
(குறிப்பு. சலவாத் என்பது நபியவர்களுக்காக நாம்
அல்லாஹ்விடத்தில் செய்யக்கூடிய பிரார்த்தனை (துஆ) ஆகும். தொழுகையில்
அத்தஹிய்யாத்தின் போது ”அல்லாஹூம்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி
முஹம்மதின்” என நாம்
ஓதக்கூடிய துஆ. சலாம் என்பது அவர்களுக்கு நேரிடையாக துஆ செய்வது ஆகும். அதுவும்
அத்தஹிய்யாத்தின் போது ஆரம்பத்தில் வருகிறது.)
இவ்வாறு
அவர்கள் வைக்கும் வாதம் எந்தெந்த வகையில் தவறானது என்பதை நாம் பார்ப்போம்.
அவர்கள்
ஆதாரமாகக் காட்டும் வசனம் இதுதான்.
அல்லாஹ் இந்த நபிக்கு அருள்
புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கைக்
கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள். சலாமும் கூறுங்கள்.
(அல்குர்ஆன் 33:56)
இந்த
வசனத்தை வைத்துக் கொண்டுதான் கபுர் வணங்கிகள், நபியவர்கள் உயிருடன் உள்ளார்கள். அவர்கள்
உயிருடன் இருப்பதால்தான் அல்லாஹ்வும் அவர் மீது சலாம் சொல்லச் சொல்கிறான்.
இறந்துபோன, செவியேற்காதவர்களுக்கு
அல்லாஹ் சலாம் சொல்லச் சொல்வானா? அவ்வாறு சொல்ல மாட்டான்.
மாறாக
உயிருடன் இருக்கின்ற, நாம் சொல்வதைச் செவியேற்கின்ற, புரிகின்ற
தன்மையுள்ள, நாம்
சொல்வதற்கு பதிலளிக்கின்றவர்களுக்குத்தான் சலாம் சொல்லச் சொல்வான். அந்த
அடிப்படையில் நபியவர்கள் உயிருடன் உள்ளார்கள். எனவே நாம் அவர்களுக்கு சலாம் சொல்ல
வேண்டும். பதிலுக்கு நபியவர்களும் நம் மீது பதில் சலாம் சொல்வார்கள் என்று
கூறுகின்றனர்.
மேலும், அத்தஹிய்யாத்
இருப்பில் நாம் நேரிடையாக நபியைக் கூப்பிட்டு ”அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு
வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ” என்று ஓதுகின்றோமே! இதற்கு என்ன அர்த்தம்?
நபியே!
உங்கள் மீது சலாமும், அருளும், அபிவிருத்தியும் உண்டாகட்டுமாக என்று
சொல்கின்றோம் என்றால் உயிருடன் இல்லாத ஒருவரை இவ்வாறு கூப்பிடுவோமா! நாம் சலாம்
சொல்வதாக இருந்தால் உயிருடன் உள்ள ஒருவரைத்தான் நாம் கூப்பிட்டு சலாம் சொல்வோம்
என்றும் கூறுகின்றனர்.
இந்த வாதம்
அடிப்படை அறிவற்ற வாதம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால், நபியவர்கள்
மீது நாம் சலாம் சொல்லும் போது அவர்கள் பதில் சலாம் சொல்வார்கள் என்றால், உயிருடன்
இருக்கும் போது தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் “அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வரஹ்மத்துல்லாஹி
வபரகாதுஹூ’’ என்று
நபியவர்கள் கற்றுத் தந்த துஆவை எத்தனை ஸஹாபாக்கள் நபிகளாருடன் தொழுகையில்
ஓதியிருக்கிறார்கள். அப்படியானால் அத்தனை ஸஹாபாக்களுக்கும் நபியவர்கள் பதில் சலாம்
சொல்லிக் கொண்டிருந்தார்களா?
அது
மட்டுமல்லாமல் ஹி்ஜ்ரி 10களிலெல்லாம் இஸ்லாம் மக்கா மதினா மட்டுமல்லாமல்
பல்வேறு நாடுகளிலும் பரவியிருந்தது. பல இலட்சக்கணக்கான மக்கள் இஸ்லாத்தைத்
தழுவியிருந்தனர். அப்படியானால் அத்தனை இலட்சம் மக்களும் தங்களுடைய தொழுகையில்
மேற்கண்ட அத்தஹிய்யாத் துஆவை ஓதும் போது நபிகளார் அனைவருக்கும் பதில் சலாம்
சொல்லிக் கொண்டிருந்தார்களா? அதுமட்டுமல்லாமல் தொழுகை நேரம் ஊருக்கு ஊர்
மாறுபடும். உலகம் முழுவதும் 24 மணி
நேரமும் கடமையான, சுன்னத்தான தொழுகைகள் நடந்து கொண்டுதான்
இருக்கும். அவர்கள் அனைவரும் தொழுகையில் சலாம் கூற நபியவர்கள் பதில் சலாம்
சொன்னார்களா? நபியவர்கள்
பதில் சலாம் சொல்லியிருப்பார்கள் என்றிருந்தால் அவர்களுக்கு அதுதான் 24 மணி நேர
வேலையாக இருந்திருக்கும். வேறு எந்த வேலையும் பார்த்திருக்க மாட்டார்கள். உயிருடன்
இருக்கும் போது அவர்கள் முன்னால் வந்து சலாம் சொன்னவருக்குத் தவிர யாருக்கும்
சலாம் சொல்லவில்லை என்று இருக்கும் போது இப்போது எப்படி நாம் சலாம் சொன்னால் பதில்
சொல்வார்கள்?
இந்த
வசனத்திற்கான விளக்கத்தை நபியவர்கள் சொல்லிச்சென்று விட்டார்கள். எனவே நாம் குழம்ப
வேண்டியதில்லை.
மேலும்
இந்த கபுர் வணங்கிகள் இப்படி நபிகளார் மட்டும்தான் நாம் சலாம் சொன்னால் பதில்
சலாம் கூறுவார்கள் என்று ஆரம்பித்து கடைசியில், “நபிகளார் மட்டுமல்ல! அனைத்து நல்லடியார்களும், கபுரில்
அடக்கம் செய்யப்பட்டவர்களும் நாம் சலாம் சொல்வதைச் செவியுறுவார்கள். பதில் சலாம்
சொல்வார்கள்” என்ற
அளவிற்கு சென்று விட்டனர்.
வளரும்
இன்ஷா அல்லாஹ்…
EGATHUVAM JUL 2016