ஸஜ்தா திலாவத்
பீ.ஜைனுல் ஆபிதீன்
தொழுகையிலும் தொழுகைக்கு வெளியிலும் குர்ஆனின் ஒரு சில குறிப்பிட்டவசனங்களை
ஓதும் போது ஸஜ்தா செய்கின்றோம். இதை ஸஜ்தா
திலாவத்என்றழைக்கின்றோம்.
இந்த ஸஜ்தா திலாவத்திற்கான வசனங்கள் எவை? அதாவது எந்தெந்த வசனங்களைஓதும் போது நாம் ஸஜ்தா செய்ய வேண்டும்? என்று நாம் பார்த்தால் தற்போது 14வசனங்கள் ஸஜ்தா வசனங்களாக நடைமுறையில் உள்ளதைக் கண்டு வருகின்றோம்.
இந்த 14 வசனங்களுக்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா என்பதைப் பார்ப்பதற்கு
முன்னர்அவை எந்தெந்த வசனங்கள் என்பதை முதலில் பார்ப்போம்.
1 உமது இறைவனிடம்
இருப்போர் (வானவர்கள்) அவனுக்கு அடிமைத்தனம் செய்வதைப்புறக்கணிக்க மாட்டார்கள். அவனைத்
துதிக்கின்றனர். அவனுக்கே ஸஜ்தாச்செய்கின்றனர்.
(7:206 - அல் அஃராஃப்)
2) வானங்களிலும், பூமியிலும் உள்ளவை
விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கேபணிகின்றன. அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் பணிகின்றன.
(13:15 - அர்ரஃது)
3) தமக்கு மேலே
இருக்கும் தமது இறைவனை அவர்கள் அஞ்சுகின்றனர்.கட்டளையிடப்பட்டதைச் செய்கின்றனர்.
(16:50 - அந்நஹ்ல்)
4) அவர்கள்
அழுது முகம் குப்புற விழுகின்றனர். அது அவர்களுக்கு அடக்கத்தைஅதிகமாக்குகிறது.
(17:109 - பனீ இஸ்ராயீல்)
5) அவர்கள்
ஆதமுடைய வழித் தோன்றல்களிலும், நூஹுடன் நாம் கப்பலில்ஏற்றியவர்களிலும், இப்ராஹீம், இஸ்ராயீல் ஆகியோரின்
வழித் தோன்றல்களிலும் நாம்நேர் வழி காட்டித் தேர்ந்தெடுத்த நபிமார்களாவர். அவர்கள்
மீது அல்லாஹ் அருள்புரிந்தான். அவர்களிடம் அளவற்ற அருளாளனின் வசனங்கள் கூறப்பட்டால்
அழுது,ஸஜ்தாவில் விழுவார்கள்.
(19:58 - மர்யம்)
6) வானங்களில்
உள்ளோரும், பூமியில் உள்ளோரும், சூரியனும், சந்திரனும்,நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், உயிரினங்களும், மற்றும் மனிதர்களில்அதிகமானோரும்
அல்லாஹ்வுக்குப் பணிகின்றனர் என்பதை நீர் அறியவில்லையா?இன்னும் அதிகமானோர்
மீது வேதனை உறுதியாகி விட்டது. அல்லாஹ் இழிவுபடுத்திவிட்டவனுக்கு மதிப்பை ஏற்படுத்துபவன்
இல்லை. அல்லாஹ் நாடியதைச்செய்வான்.
(22:18 - ஹஜ்)
7) "அளவற்ற அருளாளனுக்கு ஸஜ்தாச் செய்யுங்கள்!'' என்று அவர்களிடம்
கூறப்படும்போது, "அது என்ன அளவற்ற அருளாளன்? நீர் கட்டளையிடுபவருக்கு
நாங்கள் ஸஜ்தாசெய்வோமா?'' என்று கேட்கின்றனர். இது அவர்களுக்கு வெறுப்பையே
அதிகமாக்கியது.
(25:60 - ஃபுர்கான்)
8) வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை
வெளிப்படுத்தும் அல்லாஹ்வுக்குஸஜ்தா செய்ய மாட்டார்களா? நீங்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும்
அவன்அறிவான். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன்மகத்தான அர்ஷுக்கு
அதிபதி.
(27:26 - நம்ல்)
9) நமது வசனங்கள்
மூலம் அறிவுரை கூறப்படும் போது ஸஜ்தாவில் விழுவோரும், தமதுஇறைவனைப்
புகழ்ந்து போற்றுவோரும், பெருமையடிக்காமல் இருப்போருமே அவற்றைநம்புபவர்கள்.
(32:15 - ஸஜ்தா)
10) "உமது ஆட்டை தனது ஆட்டுடன் சேர்க்க அவர் கேட்டதன் மூலம் உமக்கு அநீதிஇழைத்து விட்டார்.
உங்களில் கூட்டுச் சேர்வோரில் அதிகமானோர் ஒருவர் மற்றவர் மீதுஅநீதி இழைக்கின்றனர்.
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரைத் தவிர. அவர்கள்மிகவும் குறைவு தான்'' என்று தாவூத் கூறினார். அவரைச் சோதித்தோம் என்பதை
தாவூத்விளங்கிக் கொண்டார். தமது இறைவனிடம்
மன்னிப்புக் கேட்டார். பணிந்து விழுந்தார்.திருந்தினார்.
(38:24-ஸாத்)
11) அவர்கள்
பெருமையடித்தால் உமது இறைவனிடம் இருப்போர் இரவிலும், பகலிலும்அவனைத் துதிக்கின்றனர். அவர்கள் சோர்வடைய
மாட்டார்கள்.
(41:38 - ஃபுஸ்ஸிலத்)
12) அல்லாஹ்வுக்கே
ஸஜ்தா செய்து வணங்குங்கள்!
(53:62-நஜ்மு)
13) அவர்களுக்குக்
குர்ஆன் ஓதிக்காட்டப்படும் போது ஸஜ்தா செய்வதில்லை.
(84:21 - இன்ஷிகாக்)
14) எனவே, அவனுக்குக் கட்டுப்படாதீர்!
ஸஜ்தாச் செய்வீராக! நெருங்குவீராக!
(96:19 - அலக்)
15) நம்பிக்கை
கொண்டோரே! ருகூவு செய்யுங்கள்! ஸஜ்தாச் செய்யுங்கள்! உங்கள்இறைவனை வணங்குங்கள்! நன்மையைச்
செய்யுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
(22:77 - ஹஜ்)
ஸஜ்தா திலாவத் என்று நடைமுறையில் உள்ள 14 வசனங்கள் இவை தாம்.
மேலேகூறப்பட்டதில் 14க்குப் பதிலாக
15 உள்ளதே என்று கேட்டால் எல்லா சட்டங்களிலும்மத்ஹபுகள் நுழைவது
போல் இங்கும் மத்ஹபுடைய கருத்துக்கள் நுழைந்துள்ளன.
(14 அல்லது 15 ஆகிய
இரண்டுமே ஹதீஸ் அடிப்படையில் சரியானவை தானா என்பதைபின்னர் காணவிருக்கின்றோம்)
மேலே நாம் கண்ட 15 வசனங்களில் ஹஜ் எனும் அத்தியாயத்தில் இரண்டு வசனங்கள்குறிப்பிடப்
பட்டுள்ளன. இமாம் அபூஹனீபா அவர்கள் ஹஜ் அத்தியாயத்தில்
ஒரேயொருஸஜ்தா வசனம் மட்டுமே உள்ளது என்று கூறுகின்றார். ஆனால் அதே சமயம் ஸாத்எனும் அத்தியாயத்தில் வரும்
வசனத்தை ஸஜ்தா வசனமாக எடுத்துக் கொள்கின்றார்.
இமாம் ஷாஃபி அவர்கள் ஹஜ் அத்தியாயத்திலுள்ள இரண்டு வசனங்களையும்
ஸஜ்தாவசனங்களாகக் கணக்கிடுகின்றார். ஆனால்
ஸாத் அத்தியாயத்திலுள்ள வசனத்தைவிட்டு விடுகின்றார். ஆக இரண்டு பேருமே 14 வசனங்களை ஸஜ்தா வசனங்கள் என்றுகூறுகின்றார்கள். ஆனால் எந்தெந்த வசனங்கள் என்பதில் தான் இருவரிடமும்
கருத்துவேறுபாடு உள்ளது. இவ்வாறு இவ்விரு அறிஞர்களுக்கு
மத்தியில் கருத்து வேறுபாடுகள்கொண்ட சட்டங்கள் எத்தனையோ உள்ளன. இதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.
ஆனால் ஆச்சரியமும் வேதனையும் என்னவெனில் இந்த இமாம்களின் பெயர்களைப்பயன்படுத்திக்
கொண்ட பக்தியாளர்கள், குர்ஆனில்
38:24 வசனத்திற்கு அருகில் இதுஹனஃபிய்யாக்களின் ஸஜ்தாவாகும் என்றும், இதுபோல் 22:77 வசனத்திற்கு அருகில் இதுஷாஃபிய்யாக்களின் ஸஜ்தா வசனமாகும் என்றும்
எடுத்துரைத்தது தான்!
இதன் மூலம் குர்ஆனே இந்த வேறுபாட்டை உருவாக்குகின்றது என்ற தோற்றத்தைஏற்படுத்துகின்றார்கள். ஆனால் குர்ஆனோ வேறுபாட்டிலுள்ள மக்களை ஒன்று படுத்தும்வேதமாகும்
என்பதே உண்மை! குர்ஆன் பிரதிகளில் இது போன்று
அச்சடிப்பதை எதிர்த்து,அச்சகத்தாரிடம்
கண்டனம் தெரிவித்து இதைத் தடுத்து நிறுத்துவது நமது கடமையாகும்.
மேலும் இந்தக் கருத்து வேறுபாட்டுக்குக் காரணமாகவுள்ள இந்த ஸஜ்தா
வசனங்களைப்பற்றி ஹதீஸ்களில் என்ன கூறப்பட்டுள்ளது என்று விரிவாக நாம் பார்ப்பது இங்குஅவசியமாகின்றது. குர்ஆனில் 15 ஸஜ்தா வசனங்கள் இடம் பெற்றுள்ளன என்பதைக்குறிக்கும் ஹதீஸைப்
பார்ப்போம்.
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குர்ஆனில் 15 ஸஜ்தாக்களை என்னிடம் ஓதிக்காண்பித்தார்கள் என்றும், அவற்றில் (காஃப் அத்தியாயத்திலிருந்து குர்ஆனின் கடைசிஅத்தியாயம்
வரையிலான) முஃபஸ்ஸலான அத்தியாயங்களில் இடம் பெறும் மூன்றுஸஜ்தாக்களும், சூரத்துல் ஹஜ்ஜில் இடம் பெறும் இரண்டு ஸஜ்தாக்களும் அடங்கும்''என்று அம்ர் பின் அல்ஆஸ்
(ரலி) அறிவிக்கும் செய்தி அபூதாவூதில் 1193வதுஹதீஸாகவும் இப்னுமாஜாவில் 1047வது ஹதீஸாகவும் இடம் பெற்றுள்ளது.
இந்த ஹதீஸின் அடிப்படையில் தான் மேற்கண்ட 15 இடங்களிலும் ஸஜ்தா செய்யப்படுகின்றது. ஆனால் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல! இதன்அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் ஹாரிஸ்
பின் ஸயீத் என்பார் யாரெனஅறியப்படாதவர் ஆவார்.
அதனால் குர்ஆனில் 15 ஸஜ்தா வசனங்கள்
என்ற கருத்துஆதாரமற்றதாக ஆகி விடுகின்றது.
"நான் நபி (ஸல்) அவர்களுடன் 11 ஸஜ்தாக்கள் செய்திருக்கின்றேன். ஆனால்முஃபஸ்ஸலான அத்தியாயங்களிலிருந்து எதுவும்
அவற்றில் இடம் பெறவில்லை. அல்அஃராஃப், ரஃது, நஹ்ல், பனீ இஸ்ராயீல், மர்யம், ஹஜ், ஃபுர்கான், நம்ல், ஸஜ்தா,ஸாத், ஹாமீம் ஆகியவையே ஸஜ்தாவுக்குரிய அந்த அத்தியாயங்களாகும்'' என்றுஅபூதர்தா (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் இப்னுமாஜாவில் 1046வது ஹதீஸாக இடம்பெற்றுள்ளது.
இந்த ஹதீஸின் அடிப்படையில் குர்ஆனில் 11 ஸஜ்தா வசனங்கள் என்று கூறுவோரும்உள்ளனர். ஆனால் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் மஹ்தீ
பின்அப்துர்ரஹ்மான் பின் உபைதா பின் காதிர் என்பவர் யாரென அறியப்படாதவர். எனவே 11ஸஜ்தாக்கள் என்ற கருத்தும் ஆதாரமற்றதாகி விடுகின்றது.
"நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் 11 ஸஜ்தாக்கள் செய்திருக்கின்றேன். நஜ்ம் அத்தியாயத்தில் இடம்பெற்றிருக்கும்
அந்த ஸஜ்தாவும் அடங்கும்'' என்று அபூதர்தா(ரலி)
அறிவிக்கும் இன்னோர் அறிவிப்பு திர்மிதியில் 519வது ஹதீஸாகவும்இப்னுமாஜாவின் 1045வது ஹதீஸாகவும் பதிவு செய்யப் பட்டுள்து.
இவ்விரண்டிலும் உமர் திமிஷ்கி என்பவர் இடம் பெறுகின்றார். இவரும் யாரெனஅறியப்படாதவர். எனவே இந்த ஹதீசும் 11 ஸஜ்தாக்கள் என்ற கருத்தைவலுப்படுத்துவதாக அமையவில்லை.
ஹஜ் அத்தியாயத்தில் இரண்டு ஸஜ்தாக்கள் உள்ளதால்
அது சிறப்பிக்கப் பட்டுள்ளதா?என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ஆம்! யார் அவ்விருவசனங்களின் போதும் ஸஜ்தா செய்ய
மாட்டாரோ அவர் அவ்விரு வசனங்களையும் ஓதவேண்டாம் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி),
நூல் : திர்மிதீ 527
இந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்களே வலுவற்றது
என்றுகூறுகின்றார்கள். மேலும் இந்த ஹதீஸின்
தொடரில் இடம் பெற்றிருக்கும் அப்துல்லாஹ்பின் லஹீஆ பலவீனமானவர். இதில் இடம் பெறும் இன்னோர் அறிவிப்பாளரானமிஷ்ரஹ்
பின் ஹாஆன் என்பவர் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடமிருந்து முன்கரானசெய்திகளை அறிவிப்பவர்
என்று இப்னு ஹிப்பான் கூறுகின்றார். எனவே இந்த
ஹதீசும்பலவீனமானதாக உள்ளது.
மொத்தத்தில் 15 ஸஜ்தாக்கள் என்ற கருத்தும் 11 ஸஜ்தாக்கள் என்ற கருத்தும் ஆதாரமற்றகருத்துக்களாகி விடுகின்றன. அப்படியானால் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின்அடிப்படையில்
அமைந்த ஸஜ்தாக்கள் எத்தனை? என்று பார்க்கும்
போது,
நான்குவசனங்களை ஓதும் போது நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்ததாக
அறிய முடிகின்றது.
நபி (ஸல்) அவர்கள் மக்காவில் நஜ்மு அத்தியாயத்தை
ஓதும் போது ஸஜ்தாசெய்தார்கள். ஒரு முதியவரைத்
தவிர அவர்களுடன் இருந்த அனைவரும் ஸஜ்தாசெய்தனர்.
அம்முதியவர் ஒரு கையில் சிறிய கற்களையோ மண்ணையோ எடுத்து தமதுநெற்றிக்குக் கொண்டு
சென்று, "இவ்வாறு
செய்வது எனக்குப் போதும்' என்று கூறினார். பின்னர் அவர் காஃபிராகக் கொல்லப்
பட்டதை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி),
நூல் : புகாரி 1067, 1070
இதே கருத்து புகாரியில் 1071, 4862, 4863 ஆகிய ஹதீஸ்களிலும் இடம் பெற்றுள்ளன.
ஸாத் அத்தியாயம் ஓதப்படும் போது ஸஜ்தா கட்டாயமில்லை. (ஆனால்) நபி (ஸல்)அவர்கள் அந்த அத்தியாயத்தை ஓதும்
போது ஸஜ்தா செய்ததை நான்பார்த்திருக்கின்றேன்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : புகாரி 1069, 3422
அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் நான் இஷா தொழுத போது, "இதஸ்ஸமாவுன்
ஷக்கத்'என்ற அத்தியாயத்தை
ஓதி (அதில் ஸஜ்தாவுடைய வசனம் வந்ததும்) ஸஜ்தாசெய்தார்கள். இது பற்றி நான் அவர்களிடம்
கேட்ட போது, "நபி (ஸல்) அவர்களுக்குப்பின்னால் (இதற்காக) நான்
ஸஜ்தா செய்திருக்கின்றேன். (மறுமையில்) அவர்களைச்சந்திக்கின்ற
வரை (மரணிக்கின்ற வரை) நான் அதை ஓதி ஸஜ்தா செய்து கொண்டு தான்இருப்பேன்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ராஃபிவு,
நூல் : புகாரி 766, 768, 1078
இதஸ்ஸமாவுன் ஷக்கத், இக்ரஃ பிஸ்மி
ரப்பிக்க ஆகிய அத்தியாயங்களில் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஸஜ்தா செய்தோம்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : முஸ்லிம் 905, 906
மேற்கண்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் நஜ்மு, ஸாத், இன்ஷிகாக்,அலக் ஆகிய நான்கு அத்தியாயங்களை ஓதும் போது அதிலுள்ள ஸஜ்தாவசனங்களுக்காக
நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்துள்ளார்கள் என்பதை அறியமுடிகின்றது.
நஹ்ல் என்ற அத்தியாயத்தை ஓதும் போது உமர் (ரலி) அவர்கள் ஸஜ்தா
செய்ததாகபுகாரியில் ஒரு ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.
உமர் (ரலி) அவர்கள் ஒரு வெள்ளிக்கிழமை மிம்பரில்
நின்று நஹ்ல் அத்தியாயத்தைஓதினார்கள். (அதிலுள்ள)
ஸஜ்தா வசனத்தை அடைந்ததும் இறங்கி ஸஜ்தாசெய்தார்கள். அடுத்த ஜும்ஆ வந்த போது அதே அத்தியாயத்தை ஓதினார்கள். அப்போதுஸஜ்தா வசனத்தை அடைந்ததும், "மக்களே!
நாம் ஸஜ்தா வசனத்தைஓதியிருக்கின்றோம். யார்
ஸஜ்தா செய்தாரோ அவர் நல்லதைச் செய்தவராவார்.
யார்ஸஜ்தா செய்யவில்லையோ அவர் மீது எந்தக் குற்றமுமில்லை' என்று கூறினார்கள்.
மேலும் அவர்கள் ஸஜ்தா செய்யவில்லை.
அறிவிப்பவர் : ரபீஆ பின் அப்தில்லாஹ்,
நூல் : புகாரி 1077
இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது எனினும் நபி (ஸல்) அவர்கள் செய்ததாக
இங்குகூறப்படவில்லை. உமர் (ரலி) அவர்கள் செய்ததாக
மட்டுமே கூறப்படுகின்றது. எனவேஇது மவ்கூஃப்
என்ற தரத்தில் அமைந்த ஹதீஸாகும். இதை நாம்
எடுத்துக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.
எனவே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் பார்த்தால் 1. நஜ்மு, 2. ஸாத், 3.இன்ஷிகாக், 4. அலக் ஆகிய நான்கு அத்தியாயங்களிலுள்ள ஸஜ்தா வசனங்களின் போதுமட்டுமே
ஸஜ்தா செய்ய வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் தமது ருகூவிலும் ஸஜ்தாவிலும், "சுப்ஹானகல்லாஹும்ம
ரப்பனாவபிஹம்திக அல்லாஹும் மக்ஃபிர்லீ' (இறைவா! நீ தூயவன். எங்கள் இறைவா!உன்னைப் போற்றுகின்றோம்.
இறைவா! எங்களை மன்னித்து விடு!) என்று அதிகமதிகம்கூறுவார்கள். (இதாஜாஅ... என்ற அத்தியாயத்தில் கூறப்படும் குர்ஆனின்
கட்டளையைஇதன் மூலம் செயல் படுத்துவார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி 817
இது போன்ற ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டி, குர்ஆனுடைய கட்டளையைநிறைவேற்றும் நோக்கில் குர்ஆனில் எங்கெல்லாம்,
"சுஜூது செய்வார்கள்,பெருமையடிக்க மாட்டார்கள்' என்ற வாசகம் இடம் பெறுகின்றதோ அந்த வசனங்கள்அனைத்திலும் ஸஜ்தா
செய்ய வேண்டுமல்லவா? அந்த அடிப்படையில் நாம் மேற்கண்ட14 வசனங்களில் ஸஜ்தா செய்ய வேண்டியது தானே! என்ற வாதத்தை எடுத்துவைக்கின்றனர்.
இவர்கள் சொல்வது போன்ற கருத்துக்களைக் கொண்ட வசனங்களை நாம் தேடிப்பார்த்தால்
அது 14 என்ற வட்டத்திற்குள் நிற்காது. இது போன்ற வசனங்கள் சுமார் 60க்குமேல் குர்ஆனில் உள்ளன.
ஆனால் அத்தனை இடங்களிலும் ஸஜ்தா செய்ய வேண்டும்என்று இவர்கள் வாதிடுவது கிடையாது. அவ்வாறு ஸஜ்தா செய்வதும் கிடையாது. இதிலிருந்தே
இவர்களது வாதம் தவறானது என்பது தெளிவாகின்றது.
மேலும், இந்தவாதத்தின் அடிப்படையில்
குர்ஆனில் "ருகூவு செய்யுங்கள்' என்று கூறப்படும் போதுருகூவு செய்ய வேண்டுமா? என்பது போன்ற கேள்விகளும் எழுகின்றன.
"ஸஜ்தா செய்யுங்கள்' என்ற கருத்தில் அமைந்த எந்த வசனத்தை ஓதினாலும் நபி (ஸல்)அவர்கள்
ஸஜ்தா செய்வார்கள் என்று பொதுவாக ஹதீஸ்களில் சொல்லப் பட்டிருந்தால்ஒருவேளை இந்த வாதம்
சரி என்று கூறலாம். ஆனால் அவ்வாறு ஹதீஸ்களில்பொதுவாகக்
கூறப்படவில்லை. எனவே எவற்றை நபி (ஸல்) அவர்கள்
கற்றுத்தந்தார்களோ அவற்றை மட்டுமே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஹதீஸின் அடிப்படையில் செயல்படுவதாக இருந்தால் மேற்கண்ட நான்குஅத்தியாயங்களின்
போது மட்டும் ஸஜ்தா செய்வது தான் பேணுதலான செயலும்நபிவழியைப் பின்பற்றுவதும் ஆகும்.
இந்த ஸஜ்தா வசனங்களை ஓதும் போதும் ஸஜ்தா செய்வது கட்டாயமில்லைஎன்பதற்குக்
கீழ்கண்ட ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.
நான் நபி (ஸல்) அவர்களிடம் நஜ்மு அத்தியாயத்தை
ஓதிக் காட்டினேன். அப்போதுஅவர்கள் ஸஜ்தா செய்யவில்லை.
அறிவிப்பவர் : ஸைத் பின் ஸாபித் (ரலி),
நூல் : புகாரி 1072. 1073
எனவே நபிவழியைப் பின்பற்றி நற்கூலியைப் பெறுவோமாக!
EGATHUVAM DEC 2003