Mar 2, 2017

காற்று இறைவனின் சான்றே - AUG 2015

காற்று இறைவனின் சான்றே - AUG 2015 
எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்
காற்று இறைவனின் சான்று என்பதையும், காற்றின் முக்கியத்துவம், காற்றின் அற்புதங்கள், அதன் செயல்பாடுகள் பற்றியும் கடந்த இதழ்களில் கண்டோம். அதன் தொடர்ச்சியை இப்போது பார்ப்போம்.
காற்று கடுமையாக வீசும்போது...
எந்தவொரு நிகழ்வுகளிலும் நேரங்களிலும் படைத்தவனை மறக்காதவர்களாகவும் அவனிடமே முறையிடுபவர்களாகவும் நாம் இருக்க வேண்டும்.
அதன் ஒரு பகுதியாக, காற்று கடுமையாக, பலமாக வீசும் போதும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அவனிடமே ஆதரவை, பாதுகாப்பைத் தேட வேண்டும். இந்தப் பாடத்தை நபிகளாரின் வாழ்க்கையில் இருந்து பெற்றுக் கொள்ள முடிகிறது.
காற்றின் வேகம் வீரியமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் நாம் சொல்ல வேண்டிய துஆவை நபிகளார் கற்றுத் தந்துள்ளார்கள்.
கடுமையான காற்று வீசும்போது அது (பற்றிய கலக்கத்தின் ரேகை) நபி (ஸல்) அவர்களின் முகத்தில் காணப்படும்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புஹாரி (1034)
மேகத்தையோ அல்லது (சூறாவளிக்) காற்றையோ கண்டால், நபி (ஸல்) அவர்களின் முகத்தில் (ஒருவிதமான கலக்கத்தின்) ரேகை தென்படும். (ஒருநாள்) நான், "அல்லாஹ்வின் தூதரே! மக்கள் மேகத்தைக் காணும்போது அது மழை மேகமாக இருக்கலாம் என்று எண்ணி மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால், தாங்கள் மேகத்தைக் காணும்போது ஒருவிதமான கலக்கம் தங்கள் முகத்தில் தென்படக் காண்கிறேனே (ஏன்)?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆயிஷா! அதில் (அல்லாஹ்வின்) வேதனை இருக்கலாம் என்பதால் என்னால் கலக்கமடையாமல் இருக்க இயலவில்லை. ("ஆத்'' எனும்) ஒரு சமூகத்தார் (சூறாவளிக்) காற்றினால் வேதனை செய்யப்பட்டனர். (அந்தச்) சமூகத்தார் (மேகமாக வந்த) அந்த வேதனையைப் பார்த்து விட்டு, "இது நமக்கு மழையைப் பொழிவிக்கும் மேகம்' என்றே கூறினர்'' என பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புஹாரி (4829)
நபி (ஸல்) அவர்கள் சூறாவளிக் காற்று வீசும்போது, "இறைவா, இந்தக் காற்றின் நன்மையையும் அதனுள்ளே மறைந்திருக்கும் நன்மையையும் அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் நன்மை யையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்தக் காற்றின் தீங்கிலிருந்தும், அதனுள்ளே மறைந்திருக்கும் தீங்கிலிருந்தும், அது எதனுடன் அனுப்பப்பெற்றுள்ளதோ அதன் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்'' என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் (1640)
மறுமை வாழ்வில்
காற்றின் பங்கு
இந்தப் பூமியில் நமது வாழ்க்கை மாற்றத்திற்கும் இயற்கைக்கும் பெரும் தொடர்பு இருக்கிறது. இதில், காற்றுக்கும் பங்கு இருப்பதை மறுத்து விட முடியாது. இந்த அம்சம் மறுமை வாழ்விலும் தொடரும்.
நரகத்திலே வீசும் காற்று அனல் நிறைந்ததாக இருக்கும். தேகத்தைச் சுட்டெரிக்கும். சுவாசிப்பதற்குத் தடுமாறும் வகையில் நச்சுத் தன்மை கொண்டிருக்கும். இதற்கு மாற்றமாக, சொர்க்கமோ சொக்க வைக்கும் நிலையில் இருக்கும்.  நறுமணம் கொண்டிருக்கும். அங்கு முழுவதும் தென்றல் காற்று தவழும். சொர்க்க வாசிகளைத் தழுவும் காற்று அவர்களுக்கு அழகையும் புதுப் பொலிவையும் அள்ளித் தரும்.
எனவே, இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும் காற்றால் நேரும் அசம்பாவிதங்களில் மாட்டிக் கொள்ளக் கூடாது. இதற்கு ஒரே வழி, அசத்தியக் கொள்கைகளை, சிந்தனைகளைத் தூக்கி எறிந்துவிட்டு இஸ்லாத்தின்படி வாழ்வது மட்டுமே!
இடது புறத்தில் இருப்பவர்கள்! இடது புறத்தில் இருப்போர் என்பது என்ன?  அவர்கள் அனல் காற்றிலும், கொதி நீரிலும், அடர்ந்த புகை நிழலிலும் இருப்பார்கள். அதில் குளிர்ச்சியும் இல்லை. இனிமையும் இல்லை. இதற்கு முன் அவர்கள் சொகுசாக வாழ்ந்து கொண்டிருந் தனர். பெரும் பாவத்தில் பிடிவாதமாக இருந்தனர்.
(திருக்குர்ஆன் 56:41-46)
(நரகத்திற்குரியவர்களில் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டி ருந்தவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றுமாறு மறுமையில் இறைவன் கட்டளையிடுவான். அவ்வாறே வானவர்கள் அவர்களை வெüயேற்றுவார்கள்) இறுதியாக ஒரே ஒரு மனிதன் சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே எஞ்சி நிற்பான். அவன்தான் நரகவாசிகளில் கடைசியாக சொர்க்கத்திற்கு செல்பவன். அவன் நரகத்தை முன்னோக்கியபடி "இறைவா! நரகத்தை விட்டும் என் முகத்தை திருப்புவாயாக! அதன் நச்சுக் காற்று என்னை அழித்துவிட்டது. அதன் ஜுவாலை என்னைக் கரித்து விட்டது.'' என்று கூறுவான். அப்போது அல்லாஹ், "(உனது கோரிக்கைப்படி) இவ்வாறு உனக்கு செய்து கொடுக்கப்பட்டால் வேறு எதனையும் நீ கேட்காதிருப்பாயா?'' என்று கேட்பான். அதற்கு அம்மனிதன், "இல்லை, உன் கண்ணியத்தின் மீதாணையாக! (வேறுறெதையும் கேட்கமாட்டேன்)'' என்பான். அந்தமனிதன் அல்லாஹ் விடம் தான் நாடிய உறுதி மொழியையும் வாக்குறுதிகளையும் வழங்குவான். அல்லாஹ் நரகத்தை விட்டும் அம்மனிதனுடைய முகத்தை திருப்பிவிடுவான். சொர்க்கத்தை நோக்கி அவனுடைய முகத்தை திருப்பியதும் அம்மனிதன் சொர்க்கத்தின் செழிப்பைப் பார்த்துக் கொண்டு அல்லாஹ் நாடிய அளவு நேரம் அமைதியாக இருப்பான். பிறகு "இறைவா! என்னைச் சொர்க்கத்தின் வாசலருகே செல்ல வைப்பாயாக!'' என்று கேட்பான். அதற்கு இறைவன், "முன்பு கேட்டதைத் தவிர வேறெதையும் நீ என்னிடம் கேட்கமாட்டேன் என்று கூறி உறுதிமொழியும் வாக்குறுதியும் அளித்தாயே?'' என்று கேட்பான். அதற்கு அம்மனிதன், "இறைவா! நான் உன் படைப்புக்களிலேயே நற்கதியற்றவனாய் ஆகிவிடக் கூடாது!'' என்று கூறுவான். அதற்கு இறைவன், "(நீ கேட்டது) உனக்கு வழங்கப்பட்டால் வேறு எதையும் நீ கேட்காமலிருப்பாயா?'' என்பான். அம்மனிதன், "இல்லை, உன் கண்ணியத்தின் மீதாணையாக! இதல்லாத வேறெதையும் நான் கேட்க மாட்டேன்'' என்பான். இதுகுறித்து இறைவனிடம் உறுதிமொழியும் வாக்குறுதியும் அந்த மனிதன் அளிப்பான். உடனே இறைவன் அந்த மனிதனை சொர்க்கத்தின் வாசல் வரை செல்ல வைப்பான். அதன் வாசலை அவன் அடைந்ததும் அதன் ரம்மியத்தைக் காண்பான்; அதிலுள்ள செழுமையை யும் (மனதிற்கு) மகிழ்ச்சி (தரத் தக்கவை)யையும் காண்பான். பிறகு அல்லாஹ் நாடிய அளவுக்கு அவன் அமைதியாக இருப்பான். அதன்பின் அந்த மனிதன், "இறைவா! என்னை சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதிப் பாயாக!'' என்று கூறுவான். அதற்கு உன்னதனாகிய அல்லாஹ், "ஆதமின் மகனே! உனக்கு என்ன கேடு! ஏன் வாக்கைக் காப்பாற்றத் தவறி விட்டாய்? முன்பு வழங்கப்பட்டதைத் தவிர வேறெதையும் நான் கேட்க மாட்டேன் என உறுதிமொழியும் வாக்குறுதியும் அளித்தாயே!'' என்று கேட்பான். அதற்கு அம்மனிதன், "இறைவா! உன் படைப்புகளிலேயே என்னை நற்கதியற்றவனாய் ஆக்கி விடாதே!'' என்பான். இம்மனிதனின் நிலை கண்டு சிரிப்பான். பிறகு அவனுக்கு சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதியளித்துவிடுவான். அதன் பின் இறைவன் அம்மனிதனிடம், "நீ ஆசைப்படுவதைக் கேள்!'' என்று கூறுவான். அம்மனிதனும் தான் ஆசைப்படுவதை கூறுவான். இறுதியில் அவன் தன் ஆசைகள் யாவும் முற்றுப் பெறும்போது (அவனிடம்) இறைவன், "இதைவிட அதிகத்தை நீ ஆசைப்படு!'' என்று சொல்-க் கொடுப்பான். இறுதியில் ஆசைகள் முற்றுப் பெற்றுவிடும் போது உன்னதனாகிய அல்லாஹ் "உனக்கு இதுவும் உண்டு. இதைப் போன்று இன்னொரு மடங்கும் உண்டு'' என்பான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்: புஹாரி (806)
சொர்க்கத்தில் (மக்கள் ஒன்று கூடும்) சந்தை ஒன்று உண்டு. அங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சொர்க்கவாசிகள் வருவார்கள். அப்போது வட பருவக் காற்று வீசி அவர்களுடைய முகங்களிலும் ஆடையிலும் (கஸ்தூரி மண்ணை) வாரிப் போடும். உடனே அவர்கள் மேன்மேலும் அழகும் பொலிவும் பெறுவார்கள். பிறகு அழகும் பொலிவும் அதிகமாகப் பெற்ற நிலையில் அவர்கள் தங்கள் துணைவியரிடம் திரும்பிச் செல்வார் கள். அப்போது அவர்களிடம் அவர்களுடைய துணைவியர், "எங்களிடமிருந்து சென்ற பின்னர் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றுவிட்டீர்களே!'' என்று கூறுவர். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் சென்ற பிறகு நீங்களும்தான் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றிருக்கிறீர்கள்'' என்று கூறுவர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: முஸ்லிம் (5448)
காற்று கற்றுத் தரும் பாடம்
திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் காற்றுடன் தொடர்புபடுத்திப் பல்வேறு செய்திகள் சொல்லப்பட்டுள்ளன. எளிதாகப் புரிந்து கொள்வதற்குக் காற்று உதாரணமாகப் சொல்லப்பட்டு உள்ளது.
வெப்பம் நிறைந்த காற்றினால் பயிர்கள் எரிந்து கருகி பாழாகிப் போவது போன்று இறை மறுப்பாளர்களின் நன்மைகள் அழிந்துவிடும். அல்லாஹ்விற்கு இணை வைப்பவர்கள் இடம் தெரியாமல் தடம் தெரியாமல் போய் விடுவார்கள். காற்றைப் போன்று துன்பங்கள் குழப்பங்கள் வரும் என்று என்றென்றும் கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல்கள் காற்றின் வாயிலாக கற்றுத் தரப்பட்டுள்ளன.
இவ்வுலக வாழ்க்கையில் அவர் கள் செலவிடுவதற்கு உதாரணம் வெப்பக் காற்றாகும். தமக்குத் தாமே தீங்கு இழைத்த கூட்டத்தின் பயிர்களில் அக்காற்று பட்டு அவற்றை அழித்து விடுகிறது. அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கு இழைக்கவில்லை. மாறாக அவர்கள் தமக்குத் தாமே தீங்கு இழைத்தனர்.
(திருக்குர்ஆன் 3:117)
அல்லாஹ்வுக்கு அர்ப்பணித்து, அவனுக்கு இணை கற்பிக்காதோராக (ஆகுங்கள்!) அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் தூக்கிச் சென்றவனைப் போல், அல்லது காற்று தூரமான இடத்தில் கொண்டு போய்ப் போட்டவனைப் போல் ஆவான்.
(திருக்குர்ஆன் 22:31)
ஓர் இறைநம்பிக்கையாளரின் நிலையானது இளம் பயிர் போன்றதாகும். காற்றடிக்கும் திசையில் அதன் இலை சாயும். காற்று (அடிப்பது) நின்றுவிட்டால் நேராக நிற்கும். இவ்வாறுதான் இறை நம்பிக்கையாளரும் சோதனைகளின் போது அலைக்கழிக்கப்படுகின்றார். (எனினும், அவர் பொறுமை காப்பார்.) இறைமறுப்பாளனின் நிலையானது உறுதியாக நிமிர்ந்து நிற்கும் தேவதாரு மரத்தைப் போன்றதாகும். தான் நாடும் போது அதை அல்லாஹ் (ஒரேயடியாக) உடைத்து (சாய்த்து) விடுகின்றான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புஹாரி (5643), (7466)
அபூஇத்ரீஸ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! நான், எனக்கும் யுக முடிவு நாளுக்குமிடையே நிகழப் போகும் குழப்பங்கள் குறித்து மக்களிலேயே நன்கு அறிந்தவன் ஆவேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைக் குறித்து எனக்குச் சிலவற்றை இரகசியமாகச் சொல்லியிருந்ததே அதற்குக் காரணமாகும். மற்றவர்கள் அவற்றை அறிவிக்கவில்லை. எனினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் அவையில் குழப்பங்கள் குறித்துப் பேசினார்கள். அங்கு நானும் இருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (நிகழப்போகும்) குழப்பங் களை எண்ணிக் கணக்கிட்டபடி, "அவற்றில் மூன்று குழப்பங்கள் உள்ளன. அவை எதையுமே விட்டுவைக்காது. அவற்றில் இன்னும் சில குழப்பங்கள் உள்ளன. அவை கோடைகால (வெப்பக்) காற்றைப் போன்றவையாகும். அவற்றில் சிறிய குழப்பங்களும் உள்ளன; பெரிய குழப்பங்களும் உள்ளன'' என்று கூறினார்கள். (இந்தச் செய்தியைச் செவியுற்ற) அக்குழுவினரில் என்னைத் தவிர மற்ற அனைவரும் (இறந்து) போய்விட்டனர்.
நூல்: முஸ்லிம் (5541)
காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்று சொல்வார்கள். உடம்பில் உயிர்க்காற்று உள்ள போதே முடிந்தளவு நற்காரியங்களைச் செய்து கொள்ள  வேண்டும் என்பதற்காக இவ்வாறு சொல்லப்பட்டது.
அல்லாஹ்வை அறிந்து கொள்ளவும் அவனது ஆற்றலை விளங்கிக் கொள்ளவும் காற்று நம்மைத் தூண்டக் கூடியாத இருக்கிறது. அதன் அடிப்படையில் பல்வேறு செய்திகளை அறிந்து கொண்டோம். இந்தச் செய்திகளை மனதில் நிறுத்திக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு ஈருலகிலும் வெற்றி பெறுவோமாக!
EGATHUVAM AUG 2015