Mar 30, 2017

ஜகாத் ஓர் ஆய்வு

ஜகாத் ஓர் ஆய்வு

"ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஆண்டு தோறும் ஜகாத் கொடுக்க வேண்டுமா?'' என்பது கடந்த சில ஆண்டுகளாக தமிழக முஸ்லிம்களிடமும் உலக அளவில் வாழும் தமிழ் கூறும் முஸ்லிம்களிடமும் முக்கிய விவாதப் பொருளாக அமைந்துள்ளது.

தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த சில அறிஞர்கள் "ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் வழங்கத் தேவையில்லை'' என்ற கருத்தை மக்கள் முன் வைத்ததே இவ்விவாதத்திற்குக் காரணமாக அமைந்தது.

இக்கருத்தை தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேராதவர்கள் மட்டுமின்றி தவ்ஹீத் ஜமாஅத்தின் அறிஞர்களில் பலரும் ஏற்கவில்லை. இது பற்றிப் பல்வேறு அமர்வுகள் நடத்தப்பட்ட போதும் புதுப் புதுக் கேள்விகள் எழுந்து கொண்டே வந்தன.

இறுதியாகக் கடந்த 17.08.05 மற்றும் 18.08.05 ஆகிய தேதிகளில் சென்னையில் இது குறித்து ஆய்வு செய்வதற்காக பி. ஜைனுல் ஆபிதீன், எஸ்.எஸ்.யூ. ஸைபுல்லாஹ் ஹாஜா, எம். ஷம்சுல்லுஹா, எம்.ஐ. சுலைமான், எம்.எஸ். சுலைமான், எஸ். கலீல் ரசூல், பி. அன்வர் பாஷா ஆகியோர் பங்கு கொண்ட ஆய்வரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பல்வேறு கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின்னர், அனைவரும் ஒத்த கருத்துக்கு வந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

இக்கருத்தரங்கில் பங்கு கொள்ளாத மற்ற அறிஞர்களுடனும் கலந்துரையாடல் நடத்தி சந்தேகத்திற்கு இடமில்லாத ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று இந்த ஆய்வரங்கில் முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் 29.08.05 அன்று கடையநல்லூர் இஸ்லாமியக் கல்லூரியில் இந்த ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பி. ஜைனுல் ஆபிதீன், எஸ்.எஸ்.யூ. ஸைபுல்லாஹ் ஹாஜா, எம். ஷம்சுல்லுஹா, பி.எம். முஹம்மத் அலீ ரஹ்மானி, எஸ்.ஏ. பஷீர் அஹ்மத் உமரி, எம்.ஐ. சுலைமான், எம்.எஸ். சுலைமான், யூசுப் பைஜி, எஸ். அப்பாஸ் அலீ, கே. அப்துந்நாஸிர், ஆர். ரஹ்மத்துல்லாஹ், பக்கீர் முஹம்மத் அல்தாஃபி, ஏ. ஸய்யத் இப்ராஹீம் ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் எடுக்கப்பட்ட முடிவையும், முடிவுக்கான காரணங்களையும் ஏகத்துவம் இதழில் முழுமையாக விளக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

அந்த முடிவின் அடிப்படையில் இந்த ஆய்வுகளை பொது மக்கள் மத்தியில் வைக்கிறோம்.

நாங்கள் ஆய்வு செய்த வகையில் எது சரியெனப் பட்டதோ அதை மக்கள் மன்றத்தில் வைத்துள்ளோம். இந்த ஆய்வு தவறானது என்பதை நிரூபிக்கும் வகையில் தக்க சான்றுகளை யார் எடுத்துக் காட்டினாலும் அதைப் பரிசீலித்து எங்கள் முடிவை மாற்றிக் கொள்வதற்குத் தயங்க மாட்டோம். அவ்வாறு சுட்டிக் காட்டுபவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்வோம்.

எனவே விருப்பு வெறுப்பின்றி நடுநிலையான பார்வையுடன் இந்த ஆய்வை வாசிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டுமா?

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டுமா? என்றால் உலகில் பெரும்பாலான அறிஞர்கள், "ஒரு பொருளுக்கு நாம் ஜகாத் கொடுத்து விட்டாலும் ஒவ்வொரு வருடமும் மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்'' என்று தீர்ப்பளிக்கின்றனர்.

அதாவது ஒரு முஸ்லிமிடம் ஒரு லட்சம் ரூபாய் இன்றைக்கு இருந்தால் அதில் இரண்டரை சதவிகிதம் ஜகாத் கொடுக்க வேண்டும். அடுத்த வருடம் எஞ்சியுள்ள 97500 ரூபாயில் இரண்டரை சதவிகிதம் கொடுக்க வேண்டும். இப்படியே வருடா வருடம் கொடுத்துக் கொண்டே வர வேண்டும் என்பது பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் கருத்தாகும்.

நாம் இந்தக் கருத்திலிருந்து முரண்படுகிறோம்.

ஒருவரிடம் ஒரு லட்சம் ரூபாய் இருந்தால் அவர் அதற்கான ஜகாத் இரண்டாயிரத்து ஐநூறு வழங்க வேண்டும். இதன் பின்னர் இதே தொகைக்காக மீண்டும் ஜகாத் கொடுக்கத் தேவையில்லை. இதன் பின்னர் அவருக்குக் கிடைத்தவற்றுக்குத் தான் ஜகாத் கொடுக்க வேண்டும்.

அதாவது ஒரு லட்ச ரூபாய்க்கு ஜகாத் கொடுத்த பின்னர் மேலும் ஒரு லட்ச ரூபாய் ஒருவருக்குக் கிடைத்தால் அவர் இரண்டாவதாகக் கிடைத்த ஒரு லட்ச ரூபாய்க்கு ஜகாத் கொடுத்தால் போதும். அது தான் அவர் மீதுள்ள கடமை. ஏற்கனவே ஜகாத் கொடுக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய்க்கு மீண்டும் ஜகாத் கொடுக்கத் தேவையில்லை என்பது நமது முடிவாகும்.

நூறு பவுன் நகை ஒருவரிடம் இருந்தால் அதற்குரிய ஜகாத் இரண்டரை பவுன் கொடுக்க வேண்டும். இதன் பின்னர் மேலும் 50 பவுன் நகை அவருக்குக் கிடைத்தால் இந்த 50 பவுனுக்கு ஜகாத் கொடுப்பது தான் அவருக்குக் கடமையாகும். ஏற்கனவே ஜகாத் வழங்கி விட்ட 100 பவுனுக்கு ஜகாத் கொடுக்கும் கடமை அவருக்கு இல்லை.

ஜகாத் கடமையாவதற்காக ஒரு வருடம் முழுமையடையும் வரை காத்திருக்கத் தேவையில்லை. ஒருவருக்கு மாதம் ஒரு லட்ச ரூபாய் கிடைத்தால் அதில் அம்மாதச் செலவு போக மீதமுள்ளதில் இரண்டரை சதவிகிதம் ஜகாத் கொடுக்க வேண்டும்.

ஜகாத் கடமையாவதற்குரிய குறைந்தபட்ச அளவான 11 பவுன் தங்கம் அல்லது அதற்கான தொகை ஒருவரிடம் இருந்தால் அவர் மீது ஜகாத் கடமையாகும்.

(624 கிராம் வெள்ளியையோ அல்லது அதன் விலையையோ ஜகாத் கடமையாவதற்குக் குறைந்தபட்ட அளவாகக் கொள்ள வேண்டும் என்று சில அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர். இது பற்றி நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றோம்)

இந்த நிலையில் இருப்பவர்கள் தினசரி வருமானம் உள்ளவராக இருந்தால் அன்றைய செலவு போக மீதி உள்ளதற்கு ஜகாத் கொடுத்து விட வேண்டும். மாத வருமானம் உள்ளவராக இருந்தால் அந்த மாதத்தின் செலவு போக மீதமுள்ளதற்கு ஜகாத் கொடுத்து விட வேண்டும். வருட வருமானம் உள்ளவராக இருந்தால் வருடத்தின் செலவு போக மீதமுள்ளதற்கு ஜகாத் கொடுக்க வேண்டும் என்பது நமது முடிவாகும்.

நாம் இந்த முடிவுக்கு வருவதற்குக் காரணம் என்ன?

கொடுத்த பொருளுக்கே மீண்டும் ஜாகத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன.

வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் கூறும் சில ஹதீஸ்கள் உள்ளன.

இந்த ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவையாக இருந்தால் இவற்றின் அடிப்படையில் முடிவு செய்வதில் நியாயம் இருக்கின்றது. ஆனால் இந்தக் கருத்தில் இடம் பெறும் ஹதீஸ்களில் எதுவுமே ஆதாரப்பூர்வமானதாக இல்லை. அவற்றில் சில ஹதீஸ்கள் இட்டுக்கட்டப் பட்டவையாகவும், வேறு சில ஹதீஸ்கள் பலவீனமானவையாகவும் உள்ளன.

(அந்த ஹதீஸ்கள் எவை என்பதும் அவை எவ்வாறு பலவீனமானவையாக அமைந்துள்ளன என்பதும் தனியாக பக்கம் 17ல் விளக்கப்பட்டுள்ளது)

மு       ஜகாத் கொடுப்பது எப்போது கடமை என்பதற்கு ஆதாரம் உள்ளது.

மு       எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதற்கு ஆதாரம் உள்ளது.

மு       யார் யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்கு ஆதாரம் உள்ளது.

ஆனால் ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் கொடுக்க வேண்டும் என்பதற்கு ஏற்கத்தக்க ஆதாரம் ஏதும் இல்லை. இதற்கு ஏற்கத்தக்க ஆதாரம் இல்லாத நிலையில் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கட்டளையை எவ்வாறு புரிந்து கொள்வது?

பொதுவாக எவ்விதக் காலக் கெடுவும் நிர்ணயிக்காமல் ஒரு காரியத்தைச் செய்யுமாறு கட்டளையிடப்பட்டால் அதை ஒரு தடவைச் செய்ய வேண்டும் என்பது தான் அதன் பொருளாகும்.

வணக்க வழிபாடுகள் முதல் உலகில் நாம் செய்கின்ற கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட அனைத்தையும் இப்படித் தான் புரிந்து கொள்கிறோம்; புரிந்து கொள்ள வேண்டும்.

தொழுகையைப் பொறுத்த வரை தினமும் ஐந்து வேளை தொழ வேண்டும் என்பதற்கு நேரடியான கட்டளை இருக்கின்றது. அதனால் தினமும் ஐந்து வேளை தொழுகை கடமை என்று நாம் புரிந்து கொள்கிறோம்.

குர்ஆனிலோ, நபிவழியிலோ "தொழ வேண்டும்' என்ற கட்டளை மட்டும் இருந்து எவ்வளவு தொழ வேண்டும் என்பது பற்றி ஒரு குறிப்பும் அறவே இல்லாவிட்டால் தினசரி ஐந்து வேளை என்று நாம் புரிந்து கொள்ள மாட்டோம். மாதம் ஒரு தடவை என்றும் புரிந்து கொள்ள மாட்டோம். வருடம் ஒரு தடவை என்றும் புரிந்து கொள்ள மாட்டோம். அப்படிப் புரிந்து கொண்டால் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இவ்வாறு புரிந்து கொண்டீர்கள் என்ற கேள்வி எழும்.

நோன்பைப் பொறுத்த வரை ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்றாக வேண்டும் என்று தெளிவான கட்டளை உள்ளது. ரமளான் என்பது குறிப்பிட்ட ஒரு மாதத்தின் பெயராகும். இம்மாதம் வருடந்தோறும் திரும்பத் திரும்ப வருவதால் ஒவ்வொரு வருடமும் நோன்பு நோற்க வேண்டும் என்று புரிந்து கொள்கிறோம்.

இப்படிக் கூறப்படாமல், நோன்பு நோற்க வேண்டும் என்று மட்டும் குர்ஆனிலோ, நபிவழியிலோ கூறப்பட்டு, நாளோ, கிழமையோ, மாதமோ அத்துடன் குறிப்பிடப்படாமல் இருந்தால் அதனை நாம் எப்படிப் புரிந்து கொள்வோம்?

வாழ்நாளில் ஒரு தடவை என்று தான் அதைப் புரிந்து கொள்ள முடியும். அவ்வாறு புரிந்து கொண்டால் அதில் ஏற்கத்தக்க எந்த எதிர்க் கேள்வியும் எழாது.

அவ்வாறு இல்லாமல் வாரா வாரம் என்றோ, மாதா மாதம் என்றோ, வருடத்தில் ஒரு மாதம் என்றோ, வருடத்தில் ஒரு வாரம் என்றோ நாம் அதைப் புரிந்து கொண்டால் அந்தக் காலக் கெடுவை எங்கிருந்து எடுத்தீர்கள் என்ற கேள்வி எழும். அதற்கு விடை கூற இயலாது.

ஹஜ் என்ற கடமையை அதற்குரிய சரியான உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரையாற்றும் போது "அல்லாஹ் ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். எனவே ஹஜ் செய்யுங்கள்'' என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! ஒவ்வொரு வருடமுமா?'' என்று கேட்டார். அவர் மூன்று முறை இவ்வாறு கேட்கும் வரை நபி (ஸல்) அவர்கள் மவுனமாக இருந்தார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள், "நான் ஆம் என்று கூறினால் அவ்வாறே (வருடா வருடம்) கடமையாகி விடும். அது உங்களுக்கு இயலாது'' என்று கூறி விட்டு, "நான் உங்களுக்கு (விவரிக்காமல்) விட்டதை நீங்களும் என்னை (கேள்வி கேட்காமல்) விட்டு விடுங்கள். உங்களுக்கு முன் சென்றவர்கள் அழிந்தது, தங்களுடைய நபிமார்களிடம் அதிகமாகக் கேள்வி கேட்டதாலும், முரண்பட்டதாலும் தான்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: முஸ்லிம் 2380

ஹஜ் கடமை என்று பொதுவாகக் கூறப்பட்டவுடன் ஒரு நபித் தோழர் ஒவ்வொரு வருடமுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். இந்தக் கேள்விக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்துகின்றார்கள். வாழ்நாளில் ஒரு தடவை தான் என்று விளக்கம் அளிக்கின்றார்கள்.

ஹஜ் செய்வதற்குரிய மாதம் வருடா வருடம் வருவதாலும், ஆண்டு தோறும் மக்கள் ஹஜ் செய்வதற்காக குழுமி வருவதாலும் அந்த நபித் தோழர், வருடா வருடமா? என்று கேட்டார். ஆனாலும் அவ்வாறு புரிந்து கொள்ளக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவு படுத்தி விடுகின்றார்கள்.

கால நிர்ணயம் எதையும் கூறாமல் ஒன்றைச் செய்யுமாறு கட்டளையிட்டால் மொத்தத்தில் ஒரு தடவை செய்ய வேண்டும் என்றே அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம்.

"மூஸாவுக்கு ஆயிரம் ரூபாய் கொடு'' என்று நாம் ஒருவருக்குக் கட்டளையிடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். ஒரே ஒரு தடவை மூஸாவுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று தான் அந்த நபரும், மூஸாவும் புரிந்து கொள்வார்கள்.

மேற்கண்ட நமது கட்டளையின் அடிப்படையில் மூஸா அந்த நபரிடம் சென்று வருடா வருடம் ஆயிரம் ரூபாய் கேட்டால் அந்த நபர் கொடுப்பாரா? நிச்சயம் கொடுக்க மாட்டார்.

அந்த அடிப்படையில் ஸகாத் குறித்த கட்டளையும் அமைந்துள்ளது.

ஒரு பொருளுக்கு ஒரு தடவை தான் ஸகாத் கொடுப்பது கடமை எனக் கூறும் நீங்கள் அதற்கான ஆதாரத்தைக் காட்ட இயலுமா? என்ற கேள்வியை மாற்றுக் கருத்துடையவர்கள் அடிக்கடி கேட்டு வருகின்றனர்.

ஒரு சொல்லுக்கு இது தான் பொருள் என்பது திட்டவட்டமாகத் தெரியும் போது அதற்கு ஆதாரம் கேட்பது அறிவுடைமையாகுமா? இதை இவர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றார்கள்.

"உனக்கு ஆயிரம் ரூபாய் தருகிறேன்'' என்று ஒருவரிடம் நாம் கூறுகிறோம். அது போல் அவரிடம் ஆயிரம் ரூபாயைக் கொடுத்து விடுகிறோம். அவர் அடுத்த வருடம் வந்து மீண்டும் ஆயிரம் ரூபாய் தாருங்கள் என்று நம்மிடம் கேட்கிறார். "ஆயிரம் ரூபாய் தந்து விட்டேனே'' என்று நாம் கூறுகிறோம். "வருடா வருடம் இல்லை என்று சொன்னீர்களா? அதற்கு என்ன ஆதாரம்?'' என்று அவர் கேட்டால் அவரைப் பற்றி நாம் என்ன நினைப்போம்?

"வருடா வருடம் தருவேன்'' என்று கூறாமல் பொதுவாகச் சொன்னதே இதற்குரிய ஆதாரம் என்பது விளங்கவில்லையா? என்று அவரிடம் திருப்பிக் கேட்போம்.

செல்வங்களுக்கு ஜகாத் கொடுங்கள் என்பது பொதுவான சொல்.

மு       ஒவ்வொரு வினாடியும் கொடுக்க வேண்டுமா?

மு       ஒவ்வொரு நிமிடமும் கொடுக்க வேண்டுமா?

மு       ஒவ்வொரு மணிக்கும் கொடுக்க வேண்டுமா?

மு       ஒவ்வொரு நாளும் கொடுக்க வேண்டுமா?

மு       ஒவ்வொரு வாரமும் கொடுக்க வேண்டுமா?

மு       ஒவ்வொரு மாதமும் கொடுக்க வேண்டுமா?

மு       இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை கொடுக்க வேண்டுமா?

மு       மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை கொடுக்க வேண்டுமா?

மு       ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை கொடுக்க வேண்டுமா?

மு       வருடம் ஒரு தடவை கொடுக்க வேண்டுமா?

மு       ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை கொடுக்க வேண்டுமா?

என்று ஆயிரக்கணக்கான அர்த்தங்களுக்கு இச்சொல் இடம் தருகின்றது. ஆயிரக்கணக்கான அர்த்தங்களில் வருடா வருடம் என்ற ஒரு அர்த்தத்தை மட்டும் திட்டவட்டமாக யார் முடிவு செய்கிறார்களோ அவர்கள் தான் அதற்கான ஆதாரங்களை முன் வைக்க வேண்டும்.

எந்தக் கால கட்டமும் குறிப்பிடாமல் சொல்லப்பட்டதே நமக்குப் போதுமான ஆதாரமாகும்.

காலக் கெடு எதையும் குறிப்பிடாமல் சொல்லப்பட்டால் பொதுவாக ஒரு தடவை என்ற பொருளைத் தான் தரும் என்பதற்கு மற்றொரு உதாரணத்தையும் கூறலாம்.

ஒரு மனிதருக்குப் புதையல் கிடைக்கின்றது. இதில் 20 சதவிகிதம் வழங்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்.

(புகாரி 1499, 2355, 6912, 6913)

புதையலை எடுத்தவர் வருடா வருடம் 20 சதவிகிதம் கொடுக்க வேண்டும் என்று இதைப் புரிந்து கொள்வார்களா? மொத்தத்தில் ஒரு தடவை என்று புரிந்து கொள்வார்களா?

போர்க் காலங்களில் எதிரிகளிடம் கைப்பற்றப்படும் பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கைச் செலுத்தி விட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்.

(புகாரி 6179, 53, 87, 523, 1398, 3095, 3510, 4368, 4369, 7266, 7556)

போரில் கைப்பற்றப்பட்ட பொருட்களில் வருடா வருடம் 20 சதவிகிதம் வழங்க வேண்டும் என்பது தான் இதன் பொருளா? அல்லது மீண்டும் போர்க் களத்தைச் சந்தித்து பொருட்களைக் கைப்பற்றினால் அதற்கு மட்டும் 20 சதவிகிதம் என்பது பொருளா?

எனவே வருடா வருடம் கொடுத்த பொருளுக்கே மீண்டும் ஸகாத் கொடுக்க வேண்டும் என்று கூறுவோர் தங்கள் கூற்றை நிரூபிக்காவிட்டால் ஒரு பொருளுக்கு ஒரு தடவை என்பது தானாகவே நிரூபணமாகி விடும்.

இது தான் நாம் எடுத்து வைக்கும் முக்கியமான சான்றாகும்.

இதை வலுப்படுத்தும் வகையில் துணை ஆதாரங்கள் சிலவற்றையும் நாம் எடுத்துக் காட்டுகிறோம்

மாற்றுக் கருத்துடையவர்கள் முதன்மையான நம்முடைய வாதத்துக்கு உரிய மறுப்பு தராமல் துணை ஆதாரமாகச் சமர்ப்பிக்கும் சில கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்து, பிரச்சனையை திசை திருப்புகின்றார்கள்.

நாம் கூறும் துணை ஆதாரங்கள் தவறு என்று அவர்கள் நிரூபித்து விட்டதாக ஒரு வாதத்திற்குக் கூறினாலும், நம்முடைய அடிப்படையான வாதத்திற்குப் பதில் தராத வரை அவர்கள் தங்கள் கருத்தை நிலை நாட்ட முடியாது.

எனவே துணை ஆதாரங்களுக்குப் பதிலளிக்க வேண்டும். அதை விட முக்கியமாக ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கே மீண்டும் மீண்டும் வருடந்தோறும் கொடுக்க வேண்டும் என்பதைச் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் நிரூபிப்பது அவர்களின் முதல் கடமையாகும்.

பொருட்களைத் தூய்மைப்படுத்தவே ஜகாத்

ஜகாத் கடமையாக்கப்பட்ட நோக்கம் என்ன என்பது இஸ்லாத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அந்த நோக்கம் நமது முடிவை மேலும் வலுப்படுத்துகின்றது.

தங்கத்தையும் வெள்ளியையும் அல்லாஹ்வின் பாதையில் யார் செலவிடாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்குக் கடுமையான வேதனை பற்றி எச்சரிப்பீராக (9:34) என்ற வசனம் அருளப்பட்டவுடன் அது முஸ்லிம்களுக்கு பெரிய பாரமாகத் தெரிந்தது. உடனே உமர் (ரலி) அவர்கள், "உங்கள் சிரமத்தை நான் நீக்குகின்றேன்'' என்று கூறி விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். "அல்லாஹ்வின் தூதரே! இந்த வசனம் உங்கள் தோழர்களுக்குப் பெரிய பாரமாகத் தெரிகின்றது'' என்று கேட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "உங்கள் செல்வத்தில் எஞ்சியதைத் தூய்மைப் படுத்துவதற்காகவே தவிர வேறு எதற்கும் அல்லாஹ் ஜகாத்தைக் கடமையாக்கவில்லை'' என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),

நூல்: அபூதாவூத் 1417

எஞ்சிய பொருட்களைத் தூய்மைப் படுத்துவதற்காகவே தவிர அல்லாஹ் ஜகாத்தைக் கடமையாக்கவில்லை என்ற நபிகள் நாயகத்தின் இந்தக் கூற்று நமது முடிவை வலுப்படுத்தும் தெளிவான சான்றாக அமைந்துள்ளது.

பொருள்களைச் சுத்தமாக்கவே ஜகாத் என்ற கருத்தில் எந்த நபிமொழியும் அறவே கிடையாது என்று மாற்றுக் கருத்துடையவர்கள் மறுப்புப் புத்தகம் வெளியிட்டார்கள்.

ஆனால் இவர்கள் கூறியதற்கு மாற்றமாக மேற்கண்ட ஹதீஸ் அமைந்துள்ளது.

பொருட்களைச் சுத்தப்படுத்தும் ஒரே நோக்கத்திற்காகத் தான் ஜகாத் கடமை என்றால் ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் கொடுக்கத் தேவையில்லை என்பது மிகத் தெளிவு.

இந்த ஹதீஸ் மிகத் தெளிவாக நமது முடிவை உறுதிப்படுத்துவதைக் கண்ட பின்னர், இந்த ஹதீஸ் தொடர்பு அறுந்தது என்று கூறி மாற்றுக் கருத்துடையவர்கள் இதை நிராகரிக்க முயல்கின்றனர்.

இதன் அறிவிப்பாளர் தொடர் பின்வருமாறு அமைந்துள்ளது.

1. நூலாசிரியர் அபூதாவூத்

2. உஸ்மான் பின் அபீஷைபா

3. யஹ்யா

4. யஃலா

5. கைலான்

6. ஜஃபர் பின் இயாஸ்

7. முஜாஹித்

8. இப்னு அப்பாஸ் (ரலி)

9. உமர் (ரலி)

10. நபிகள் நாயகம் (ஸல்)

இந்த வரிசையில் ஒவ்வொரு அறிவிப்பாளரும் தமக்கு அடுத்த அறிவிப்பாளரிடமிருந்து இதை அறிவிக்கின்றார்கள்.

இந்தப் பட்டியலில் கைலான் (5) என்பவர் ஜஃபர் பின் இயாஸ் (6) என்பாரிடமிருந்து அறிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இவ்விருவருக்கும் இடையில் சந்திப்பு ஏதும் இல்லை. எனவே இது தொடர்பு அறுந்த (முன்கதி) ஹதீஸாகும் என்று மறுப்பு கூறுகின்றனர்.

இருவரிடையே சந்திப்பு இல்லை என்று கூறுவோர் அதற்கான காரணத்தைக் கூற வேண்டும். அவ்வாறு கூறாமல் அல்பானி கூறி விட்டார் என்பதைத் தான் ஆதாரமாகக் காட்டுகின்றார்கள்.

நாஸிருத்தீன் அல்பானியை விடப் பல மடங்கு ஹதீஸ்களை ஆய்வு செய்த இப்னு ஹஜர், தஹபீ, இப்னு மயீன், யஹ்யா பின் ஸயீத் உள்ளிட்ட பல அறிஞர்கள் காரணமின்றி செய்யும் விமர்சனங்களை நிராகரிக்கும் இவர்கள் நமது காலத்தில் வாழ்ந்து மறைந்த நாசிருத்தீன் அல்பானியின் ஆய்வில் மட்டும் தவறே ஏற்படாது என்ற தவறான நம்பிக்கையில் இந்த ஹதீஸைத் தொடர்பு அறுந்தது என்று கூறுகின்றார்கள்.

நாஸிருத்தீன் அல்பானி அவர்கள் சரி என்று சொல்லி விட்டால் அதைக் கண்ணை மூடிக் கொண்டு ஏற்க வேண்டும் என்ற நம்பிக்கை பலரிடம் காணப்படுகின்றது. ஆனால் அல்பானி அவர்கள் ஆதாரப்பூர்வமான ஹதீஸைப் பலவீனமானது என்றும், பலவீனமான ஹதீஸை ஆதாரப்பூர்வமானது என்றும், ஹதீஸில் இல்லாததை இருக்கின்றது என்றும் கூறியதற்கு ஆதாரம் உள்ளது. அல்பானி அவர்கள் சிறந்த அறிஞர் என்றாலும் மனிதர் என்ற அடிப்படையில் அவரிடமும் தவறுகள் ஏற்படவே செய்யும். இது போன்ற குறைபாடுகளுக்கு அப்பாற்பட்ட எந்த ஹதீஸ் கலை அறிஞரும் கிடையாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த அறிவிப்பு, தொடர்பு அறுந்தது என்பதற்கு அல்பானி எடுத்து வைக்கும் சான்று இது தான்.

ஜஃபர் பின் இயாஸ்

உஸ்மான் பின் கத்தான்

கைலான்

என்ற அறிவிப்பாளர் வரிசையில் இதே ஹதீஸ் ஹாகிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் கைலானுக்கும் ஜஃபருக்கும் இடையே உஸ்மான் இடம் பெற்றுள்ளார். இவர் அபூதாவூத் அறிவிப்பில் விடுபட்டுள்ளார். எனவே இது தொடர்பு அறுந்த ஹதீஸாகும் என்று அல்பானி கூறுகின்றார்.

ஆனால் ஹாகிமில் இடம் பெறும் இடையில் உள்ள அறிவிப்பாளர் உஸ்மான் பின் கத்தான் பலவீனமானவர் என்பதால் இது ஏற்கத்தக்க ஹதீஸ் அல்ல.

பலவீனமான இந்த அறிவிப்பில் இடையில் ஒருவர் நுழைக்கப்பட்டதால் அபூதாவூதின் ஆதாரப்பூர்வமான அறிவிப்பில் அவர் விடுபட்டுள்ளார் என்று முடிவு செய்வது அர்த்தமற்ற ஆய்வாகும்.

உண்மையில் கைலான் என்பார் ஜஃபர் பின் இயாஸைச் சந்திக்க இயலுமா என்றால் நிச்சயம் முடியும். ஏனெனில் கைலானின் மரணம் ஹிஜிரி 132ஆம் ஆண்டாகும். ஜஃபர் பின் இயாஸின் மரணம் 126வது ஆண்டாகும்.

(தக்ரீபுத் தஹ்தீப் 1/139)

(தக்ரீபுத் தஹ்தீப் 1/443)

இருவரின் மரணத்திற்கிடையே ஆறு வருட இடைவெளி தான் உள்ளது. ஒருவரையொருவர் சந்திப்பதற்கு ஏற்ற காலத்தை விட இது பன்மடங்கு அதிகமாகும்.

மேலும் ஜஃபர் பின் இயாஸ் பஸராவையும், கைலான் கூஃபாவையும் சேர்ந்தவர்கள். அருகருகே உள்ள இவ்வூர்களைச் சேர்ந்தவர்கள் சந்திப்பதில் எந்த வியப்பும் இல்லை.

ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெறும் ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை என்பதை அறிந்து வைத்திருக்கிறோம். இரண்டு அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்து, இருவரும் ஒரே காலத்தில் வாழ்ந்திருப்பதற்கும், இருவரும் சந்தித்திருப்பதற்கும் சாத்தியமிருக்குமானால் ஒருவரிடமிருந்து மற்றவர் கேட்டார் என்பதற்கு அதுவே போதுமானதாகும் என்று முஸ்லிம் இமாம் தமது முன்னுரையில் குறிப்பிடுகின்றார்கள். இந்த அளவு கோலின் படியே தமது ஹதீஸ்களை முஸ்லிமில் பதிவு செய்துள்ளார்கள். ஹதீஸ் கலை அறிஞர்களும் இதை ஏற்றுள்ளார்கள். எனவே கைலான், ஜஃபரிமிருந்து செவிமடுத்தார் என்பதை மறுக்க முடியாது.

இருவரும் சந்திக்கவில்லை என்று கூறுவதற்கு எந்த முகாந்திரமும் ஆதாரமும் இல்லை. யாருமே ஒப்புக் கொள்ளாத தவறான அளவு கோலின் படி அல்பானி செய்த தவறான முடிவு இது.

பலவீனமான ஹதீஸை வைத்து பலமான ஹதீஸை நிராகரிக்கும் விந்தையையும் இவர்கள் நியாயப்படுத்துகின்றார்கள்.

பொருட்களைத் தூய்மைப்படுத்தவே ஸகாத் என்பதை மேலும் சில ஹதீஸ்களும் வலுப்படுத்துகின்றன.

மர்மம் என்ன?

நாங்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் வெளியில் புறப்பட்டோம். அப்போது ஒரு கிராமவாசி, "யார் தங்கத்தையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் இருக்கிறார்களோ...என்ற வசனத்தைப் பற்றி எனக்கு அறிவியுங்கள்'' எனக் கூறினார். அதற்கு இப்னு உமர் (ரலி), "யார் அவற்றைப் பதுக்கி வைத்து அதற்கான ஜகாத்தைக் கொடுக்காமல் இருக்கின்றாரோ அவருக்குக் கேடு தான். இவ்வசனம் ஜகாத் கடமையாக்கப்படுவதற்கு முன்புள்ளதாகும். ஜகாத் பற்றிய வசனம் அருளப்பட்டதும் செல்வங்களைப் பரிசுத்தமாக்கக் கூடியதாக ஜகாத்தை அல்லாஹ் ஆக்கி விட்டான்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: காலித் பின் அஸ்லம்,

நூல்: புகாரி 1404

ஜகாத் என்பது பொருட்களைத் தூய்மையாக்குவதற்குத் தான் என்ற அபூதாவூதின் 1917 ஹதீஸை நபித்தோழர்களும் கூட இவ்வாறு விளங்கியிருந்தார்கள் என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ் சான்றாகும்.

இவ்வாறு நாம் கூறும் போது, நபித்தோழர்களின் கருத்தை எப்படி ஆதாரமாகக் காட்டலாம் என்று, புரிந்தும் புரியாதது போல் சிலர் பேசுகின்றார்கள். ஆதாரமாகக் காட்டுவது வேறு, ஆதாரத்தின் மூலம் நிரூபிக்கப்பட்ட ஒன்றை வலுப்படுத்துவதற்காக எடுத்துக் காட்டுவது வேறு என்பதைப் புரியாமல் திசை திருப்புகின்றனர்.

நபித் தோழரின் இந்தக் கூற்றை நாம் ஆதாரமாகக் காட்டவில்லை. அபூதாவூதில் இடம் பெறும் நபி (ஸல்) அவர்களின் கூற்றை ஆதாரமாகக் காட்டி, மேலதிக விளகத்திற்காகத் தான் மேற்கண்ட இப்னு உமரின் கூற்றை எடுத்துக் காட்டியுள்ளோம். ஆனால் ஸஹாபாக்களின் கூற்று, இஸ்லாத்தின் மூன்றாவது ஆதாரம் என்ற கருத்துடையவர்கள் இந்த மூன்றாவது ஆதாரத்தை (?) மறுப்பதன் மர்மம் என்ன என்பது நமக்குப் புரியவில்லை.

அழுக்கும் மறுப்பும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் ஜகாத் வாங்குவது ஹராம் என்பதை நாம் அறிவோம். இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கும் தமது குடும்பத்தாருக்கும் ஸகாத்தை ஏன் ஹராமாக்கிக் கொண்டார்கள் என்பதை நபிகள் நாயகம் விளக்கும் போது, "இவை மனிதர்களின் அழுக்குகள்'' என்று குறிப்பிட்டார்கள். (முஸ்லிம் 1784)

இந்த ஹதீஸிலிருந்து, ஜகாத் மனிதர்களைத் தான் தூய்மைப்படுத்தும், பொருட்களைத் தூய்மைப்படுத்தாது என்று சிலர் வாதத்தை எடுத்து வைக்கின்றனர். ஆனால் சிந்தித்துப் பார்த்தால் இது அவர்களுக்கே எதிரான வாதம் என்பது தெளிவாகும்.

மனிதர்களின் அழுக்கு என்றால் மனிதர்களின் உடலிலிருந்து நீக்கப்பட்ட அழுக்கு என்பது அதன் பொருள் அல்ல.

ஜகாத் கொடுத்த பின் மீதமுள்ள பொருட்கள் தூய்மையானது என்றால் ஜகாத்தாக வெளியேற்றப்பட்டது அசுத்தம் என்றாகின்றது. மனிதர்களுடைய அசுத்தமான பொருட்கள் என்ற கருத்தில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், மனிதர்களின் அழுக்கு என்ற வாசகத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள். ஜகாத்தின் நோக்கம் பொருட்களைத் தூய்மைப்படுத்துவது தான் என்பதை இது மேலும் உறுதி செய்கின்றது.

மனிதர்களைத் தூய்மைப்படுத்துமா?

இன்னும் சிலர் ஜகாத் கொடுப்பது மனிதர்களைத் தூய்மைப்படுத்தும் என்ற கருத்தில் வந்துள்ள ஆதாரங்களைக் காட்டி, பொருட்களைத் தூய்மைப்படுத்தும் என்ற கருத்தை இருட்டடிப்பு செய்ய முயல்கின்றனர்.

(முஹம்மதே!) அவர்களின் செல்வங்களில் தர்மத்தை எடுப்பீராக! அதன் மூலம் அவர்களைத் தூய்மைப் படுத்தி, பரிசுத்தமாக்குவீராக!

(அல்குர்ஆன் 9:103)

ஸகாத் கொடுப்பது மனிதர்களைச் சுத்தப்படுத்தும் என்பதால் பொருட்களைச் சுத்தப்படுத்தாது என்றாகி விடுமா?

புதிய துணியை ஊசி தைக்கும் என்று கூறினால் கிழிசலைத் தைக்காது என்று இதற்குப் பொருள் கொள்ள முடியுமா?

ஜகாத் மனிதர்களையும் தூய்மைப்படுத்தும், பொருட்களையும் தூய்மைப்படுத்தும் என்றே நாம் கூறுகின்றோம்.

வாரிசுச் சொத்துக்கு ஜகாத் ஏன்?

ஜகாத் கொடுப்பதால் பொருள் தூய்மையாகி விடும் என்றால் ஸகாத் கொடுக்கப்பட்ட பொருள் வாரிசு முறையில் மகனுக்குக் கிடைத்தால் அவன் ஏன் ஜகாத் கொடுக்க வேண்டும்? என்ற அற்புதமான (?) கேள்வியைக் கேட்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஜகாத் பொருள் ஹராம். அது அசுத்தம் என்பதை அனைவரும் அறிவோம்.

ஜகாத்தாக நபித் தோழருக்குக் கிடைத்த பொருளை - அழுக்கை - அந்த நபித் தோழர் வாங்கிக் கொண்டு நபிகள் நாயகத்துக்கு அன்பளிப்பாகக் கொடுக்கின்றார்கள். அதைப் பெற்றுக் கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "அது உனக்குத் தான் தர்மம். எனக்கு அன்பளிப்பு'' என கூறினார்கள்.

(புகாரி 1493, 2577, 2578, 5097, 5279)

மனிதர்களின் அழுக்காக இருந்த பொருள் ஒரு கையிலிருந்து மறு கைக்கு மாறியவுடன் எப்படி அழுக்கு என்ற நிலையிலிருந்து மாறி விட்டதோ அது போல் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பொருள் கிடைக்கும் போது அவர் தன் பங்குக்குத் தூய்மைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அழுக்காகவே வந்து சேரும்.

அழுக்காக ஆன பொருள் எப்படி தூய்மையாகி விட்டது? என்று இவர்கள் நபிகள் நாயகத்தையே கேட்பார்கள் போலும்.

இங்கு ஒரு விஷயத்தை மீண்டும் நினைவு படுத்திக் கொள்ளக் கடமைப் பட்டுள்ளோம். ஜகாத், பொருட்களைத் தூய்மைப்படுத்தும் என்பதை நாம் துணை ஆதாரமாகத் தான் இங்கு சமர்ப்பித்துள்ளோம். ஒரு வாதத்திற்கு ஜகாத், பொருட்களைத் தூய்மைப்படுத்தாது என்று வைத்துக் கொண்டாலும் ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்கத் தேவையில்லை என்ற அடிப்படையான நமது நிலைபாட்டிற்கு எந்தப் பாதிப்பும் வந்து விடாது.

மற்றும் சிலர், ஜிஸ்யா மட்டும் வருடா வருடம் வாங்க வேண்டும் என்று ஹதீஸ் உள்ளதா? அதை மட்டும் ஏன் ஏற்றுக் கொள்கிறீர்கள்? என்பது போல் சில கேள்விகளைக் கேட்கிறார்கள்.

நம்முடைய நிலைபாடு என்ன என்று புரியாமல் தான் இவ்வாறு கேட்கிறார்கள்.

ஒரு வாதத்துக்காக ஜிஸ்யா பற்றி வருடா வருடம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்படி இருந்தால் ஜகாத்துக்கு எடுத்த முடிவைத் தான் அதற்கும் எடுப்போம்.

ஏற்கனவே எடுத்த முடிவை ஆதாரமாகக் கொண்டு வேறு ஒரு முடிவை நாம் எடுக்க மாட்டோம்.

ஏற்கத்தகாத ஆதாரங்கள்

ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் வருடந் தோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று கூறுவோர் சில ஆதாரங்களை முன் வைக்கின்றனர். அந்த ஆதாரங்கள் அனைத்துமே பலவீனமானவையாக அமைந்துள்ளன.

அவற்றில் சில ஆதாரங்கள் பலவீனமாக அமைந்திருப்பதுடன் அவர்களின் வாதத்தை நிலை நாட்ட உதவுவதாக இல்லை.

மற்றும் சில ஆதாரங்கள் பலவீனமாக அமைந்திருப்பதுடன் இஸ்லாத்தின் வேறு பல அடிப்படைகளைத் தகர்க்கும் வகையில் அமைந்துள்ளன.

அந்த ஆதாரங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

அனாதைகளின் சொத்து பற்றிய ஹதீஸ்

"அனாதைகளின் சொத்துக்களுக்கு ஒருவர் பொறுப்பேற்றால் அதை வியாபாரத்தில் முதலீடு செய்யட்டும். அவ்வாறு செய்யாமல் விட்டு வைத்தால் ஸகாத் அதனைச் சாப்பிட்டு விடும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.

அறிவிப்பவர்: அம்ரு பின் ஷுஐப்,

நூல்: திர்மிதீ 581

அவர்களின் வாதம்

இந்த ஹதீஸை அவர்கள் தமது ஆதாரமாக முன் வைக்கின்றனர். இந்த ஹதீஸிலிருந்து அவர்கள் எவ்வாறு வாதத்தை எடுத்து வைக்கின்றனர் என்பதை அறிந்து விட்டு இந்த ஹதீஸின் தரத்தையும், இவர்களின் வாதம் சரியானது தானா என்பதையும் ஆராய்வோம்.

கொடுத்த பொருளுக்கு மீண்டும் ஸகாத் இல்லையென்றால், "ஸகாத் அதனைச் சாப்பிட்டு விடும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள். ஒரு தடவை இரண்டரை சதவிகிதம் ஸகாத் கொடுத்து விட்டால் மீதி தொன்னூற்று ஏழரை சதவிகிதம் மிச்சமாக இருந்து விடும். ஆனால் வருடா வருடம் ஸாகத் கொடுத்துக் கொண்டே இருந்தால் படிப்படியாக சொத்து கரைந்து கொண்டே வரும். எனவே தான் அனாதையின் சொத்துக்கள் கரைந்து விடாமல் இருப்பதற்கேற்ப வியாபாரத்தில் முதலீடு செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதிலிருந்து ஒரு பொருளுக்கு வருடா வருடம் ஸகாத் கொடுத்து வர வேண்டும் என்பது தெரிகின்றது என அவர்கள் வாதிடுகின்றனர்.

ஹதீஸின் தரம்

மேற்கண்ட ஹதீஸின் தரம் சரியானதல்ல என்பதால் எடுத்த எடுப்பிலேயே இவர்களின் வாதம் அடிபட்டுப் போகின்றது.

அந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ள இமாம் திர்மிதீ அவர்கள், "இதன் அறிவிப்பாளர் தொடரில் விமர்சனம் உள்ளது. ஏனெனில் முஸன்னா பின் ஸப்பாஹ் என்பவர் பலவீனமானவர்'' என்று ஹதீஸின் கடைசியில் குறிப்பிடுகின்றார்கள்.

இதே ஹதீஸ் தாரகுத்னீயிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாரகுத்னீ 2/109 எண் 1

மேற்கண்ட ஹதீசும் முஸன்னா பின் ஸப்பாஹ் என்பவர் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளதைக் காண்க.

முஸன்னா பின் ஸப்பாஹ் பற்றிய விமர்சனம்

ஹதீஸ் கலை வல்லுனர்கள் இவரைப் பற்றிக் குறை கூறியுள்ளனர்.

லுஅபாவுல் கபீர் 4/249

யஹ்யா, அப்துர்ரஹ்மான் ஆகிய இரு ஹதீஸ் கலை வல்லுநர்களும் முஸன்னா பின் ஸப்பாஹ் வழியாக எதையும் அறிவித்ததில்லை என்று அம்ரு பின் அலீ குறிப்பிடுகின்றார்கள். இவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் சரியானவை அல்ல, ஹதீஸ்களை இவர் மாற்றி மாற்றிக் கூறுபவர் என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறுகின்றார்கள். இவரிடம் ஏற்பட்ட மனக் குழப்பத்தின் காரணமாக இவர் வழியாக எதையும் நான் அறிவிப்பதில்லை என்று யஹ்யா கூறுகின்றார். இவர் தனிப்பட்ட முறையில் நல்ல மனிதர் என்றாலும் ஹதீஸ் துறையில் சரியானவர் அல்லர் என்று யஹ்யா பின் மயீன் கூறுகின்றார். இவரது ஹதீஸ்களைப் பதிவு செய்யலாம், இவர் பலவீனமானவர் என்றும்  கூறியுள்ளார்.

தஹ்தீபுத் தஹ்தீப் 10/32

இவர் பலவீனமானவர் என்று நஸயீ, அபூஸுர்ஆ, அலீ பின் அல்ஜுனைத், தாரகுத்னீ, இப்னு ஹிப்பான், இப்னு அம்மார், ஸாஜி, அபூஅஹ்மத், அபூஹாத்திம், ஜவ்ஸஜானி, திர்மிதீ, இப்னு ஸஅது, இப்னு அம்மார், ஹாகிம், உகைலீ, யஹ்யா அல் கத்தான், யஹ்யா பின் ஸயீத், யஹ்யா பின் மயீன் ஆகியோர்  கூறியதாக ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தமது தஹ்தீப் நூலில் (10/32) குறிப்பிடுகின்றார்கள்.

இந்தச் செய்தியை அறிவிக்கும் முஸன்னா பின் ஸப்பாஹ் பலவீனமானவர் என்பதால் இதை ஆதாரமாகக் கொண்டு எந்தச் சட்டமும் வகுக்கக் கூடாது.

மற்றொரு அறிவிப்பு

இதே ஹதீஸ் முஸன்னா பின் ஸப்பாஹ் வழியாக அல்லாமல் வேறு வழியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(தாரகுத்னீ 2/110-2)

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் உபைத் பின் இஸ்ஹாக் என்பவரும் மின்தல் என்பவரும் இடம் பெற்றுள்ளனர். இவ்விருவரும் பலவீனமானவர்கள்.

மின்தல் பற்றிய விமர்சனம்

(தஹ்தீபுத் தஹ்தீப் 10/264)

அஹ்மத் பின் ஹம்பல், யஹ்யா பின் மயீன், அலீ பின் மத்யனி, புகாரி, அபூஸுர்ஆ, நஸயீ, இப்னு அதீ, அபூஹஸ்ஸான், ஜவ்ஸஜானி, அபூஅஹ்மத், ஹாகிம், ஸாஜி, அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ, இப்னு கானிஃ, தாரகுத்னீ, தஹாவீ உள்ளிட்ட பல அறிஞர்கள் இவரைப் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளனர். இப்னு மயீன் அவர்கள் இவரைப் பலவீனமானவர் என்று கூறியதாகவும் நம்பகமானவர் என்று கூறியதாகவும் முரண்பட்ட இரண்டு அறிவிப்புக்கள் உள்ளன. முஆத் பின் முஆத், அஜலீ, ஆகியோர் மட்டும் தான் இவரது ஹதீஸ்களை ஏற்கலாம் என்று கூறியுள்ளனர் என்றாலும் இவரைக் குறை கூறியவர்கள் மோசமான நினைவாற்றல் உள்ளிட்ட பல குறைபாடுகள் உள்ளவர் என தக்க காரணத்துடன் குறை கூறியுள்ளதால் அதையே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

எனவே இவர் இடம் பெறும் மேற்கண்ட ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு எந்தச் சட்டமும் வகுக்கக் கூடாது.

உபைத் பின் இஸ்ஹாக் பற்றிய விமர்சனம்

மேற்கண்ட ஹதீஸில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பாளரான உபைத் பின் இஸ்ஹாக் என்பவரும் பலவீனமானவர்.

(அல்காமில் 5/347)

புகாரி, யஹ்யா ஆகியோர் இவரது ஹதீஸ்கள் முன்கர் (நிராகரிக்கத்தக்கது) என்ற தரத்தில் அமைந்தவை என்று குறிப்பிட்டுள்ளனர். இவர் அறிவித்துள்ள தவறான பல ஹதீஸ்கள் தக்க சான்றுகளுடன் மேற்கண்ட நூலில் விளக்கப் பட்டுள்ளது.

மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர்களில் இரண்டு பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம் பெற்றுள்ளதால் இதையும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.

மற்றொரு அறிவிப்பு

மேற்கண்ட ஹதீஸ் மற்றொரு வழியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் உபைத் பின் இஸ்ஹாக் இடம் பெறாவிட்டாலும் மின்தல் பின் அலீ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்பதை மேலே விளக்கியுள்ளோம்.

(தப்ரானியின் அவ்ஸத் 1/298 - 998)

மற்றொரு அறிவிப்பு

மேற்கண்ட ஹதீஸ் மேற்கூறப்பட்ட மூவர் வழியாக இல்லாமல் வேறு சில அறிவிப்பாளர்கள் மூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(தாரகுத்னீ 2/110 - 3)

இந்த ஹதீஸில் மேற்கண்ட மூவரில் எவரும் இடம் பெறாவிட்டாலும் முஹம்மத் பின் உபைதுல்லாஹ் (அல்அஸ்ரமி) என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரும் நம்பகமானவர் அல்லர்.

முஹம்மத் பின் உபைதுல்லாஹ் அல்அஸ்ரமி பற்றிய விமர்சனம்

(மஜ்ரூஹீன் 2/246)

இவர் உண்மையாளராக இருந்தாலும் இவரது நூற்கள் அழிந்து விட்டன. இவர் நினைவாற்றல் குறைந்தவராக இருந்தார். தனது நினைவில் உள்ளதை இவர் அறிவிக்கும் போது தவறாக அறிவித்து விடுவார். நிராகரிக்கப்படும் ஹதீஸ்கள் பலவற்றை இவர் அறிவித்துள்ளார். இப்னுல் முபாரக், யஹ்யா பின் அல்கத்தான், இப்னு மஹ்தீ, யஹ்யா பின் மயீன் ஆகியோர் இவரை விட்டு விட்டனர்.

எனவே இதையும் ஆதாரமாகக் கொண்டு எந்தச் சட்டத்தையும் வகுக்க முடியாது.

மற்றொரு அறிவிப்பு

மேற்கண்ட நால்வர் வழியாக அல்லாமல் வேறு அறிவிப்பாளர்கள் மூலமாகவும் இது பதிவு செய்யப் பட்டுள்ளது.

(தப்ரானியின் அவ்ஸத் 4/264 - 4152)

இந்த அறிவிப்பும் ஆதாரப் பூர்வமானது அல்ல. இதில் ஃபுராத் பின் முஹம்மத் என்பவரும் உமாரா பின் கஸிய்யா என்பவரும் இடம் பெறுகின்றார்கள். இவ்விருவரும் பலவீனமானவர்கள் ஆவர்.

ஃபுராத் பின் முஹம்மத் பற்றிய விமர்சனம்

(லிஸானுல் மீஸான் 4/432)

இவர் பலவீனமானவர் மட்டுமின்றி பொய்யர் என்று சந்தேகிக்கப் பட்டவராகவும் இருந்தார் என்று லிஸானுல் மீஸானில் கூறப்பட்டுள்ளது.

உமாரா பின் கஸிய்யா

மற்றொரு அறிவிப்பாளரான உமாரா பின் கஸிய்யா என்பவரும் பலவீனமானவராவார்.

(லுஅஃபாவுல் உகைலீ 3/315)

இவருடன் எத்தனையோ தடவை நான் அமர்ந்துள்ளேன். ஆயினும் இவரிடமிருந்து எந்த ஹதீஸையும் நான் மனனம் செய்ததில்லை என்று சுப்யான் கூறுகின்றார். இவரைப் பற்றி புகழ்ந்து கூறும் விமர்சனம் எதையும் நாம் காணவில்லை எனவும் கூறுகின்றார்.

ஆக அனாதைகளில் சொத்துக்களுக்குப் பொறுப்பேற்றவர் அதை வியாபாரத்தில் முடக்க வேண்டும். இல்லாவிட்டால் ஸகாத் கொடுத்தே அந்தச் சொத்து கரைந்து விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் எந்தவொரு அறிவிப்பும் ஆதாரப்பூர்வமானது அல்ல.

எனவே இதன் அடிப்படையில் எந்தச் சட்டத்தையும் வகுக்க முடியாது.

இது தவிர உமர் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாக மேற்கண்ட கருத்து தாரகுத்னீ 2/110, பைஹகீ 4/107 மற்றும் 6/2, முஸ்னத் ஷாஃபி 1/204, முஅத்தா 1/251, முஸன்னப் அப்துர்ரஸாக் 4/69 ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் குர்ஆனையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தையும் மட்டுமே பின்பற்ற வேண்டும். மற்ற எவருக்கும் வஹீ வராது என்பதால் அதை வைத்து எந்தச் சட்டத்தையும் வகுக்க முடியாது.

மற்றொரு அறிவிப்பில் பைஹகீ (4/107) நபிகள் நாயகத்தின் கூற்றாக சரியான அறிவிப்பாளர்கள் வழியாகப் பதிவு செய்யப் பட்டிருந்தாலும் அதில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளதாக பைஹகீ அவர்களே கூறுகின்றார்கள்.

(பைஹகீ 4/107)

ஆக இவர்கள் எடுத்து வைத்த முதல் ஆதாரம் ஏற்புடையதாக இல்லை.

வருடா வருடம் என்று ஹதீஸில் இல்லை

இது தவிர ஒரு வாதத்துக்காக மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதத்தை இந்த ஹதீஸிலிருந்து நிலை நாட்ட முடியாது.

ஜகாத் கொடுத்தால் அனாதையின் சொத்து கரைந்து விடும் என்று மட்டும் தான் மேற்கண்ட பலவீனமான ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. வருடா வருடம் என்று கூறப்படவில்லை. வருடா வருடம் என்பது இவர்களாக செருகிக் கொண்டதாகும்.

ஜகாத் கொடுத்துக் கொண்டிருந்தால் அனாதைகளின் சொத்து கரையும் என்றால் வருடா வருடம் கொடுப்பதை விட மாதந்தோறும் கொடுத்தால் இன்னும் சீக்கிரமாகக் கரைந்து விடும். எனவே மாதாமாதம் ஸகாத் கொடுக்க வேண்டும் என்று நாம் வாதிட்டால் அவர்களிடம் ஏற்கத்தக்க எந்தப் பதிலும் இருக்காது.

இன்னும் ஒருவர் வாரா வாரம் ஜகாத் கொடுப்பதைத் தான் இது குறிப்பிடுகின்றது. சொத்தைக் கரைத்து விடும் என்ற கருத்து வாரா வாரம் கொடுத்தால் தான் பொருந்தும் என்று வாதிடலாம். வேறொருவர் தினமும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதற்கு இதை ஆதாரமாகக் காட்டலாம்.

தினசரி தொழுகை போல் தினசரி ஐந்து வேளை ஜகாத் கொடுப்பதைத் தான் இது குறிப்பிடுகின்றது என்றும் கூறலாம். இவையெல்லாம் எப்படி ஹதீஸில் இல்லாமல் திணிக்கப்பட்டதாக உள்ளதோ அது போல் தான் வருடா வருடம் என்பதும் மேற்கண்ட ஹதீஸில் திணிக்கப்பட்டதாகும்.

இதை ஒரு வாதத்துக்காகவும், மேலதிக விளக்கத்திற்காகவும் தான் குறிப்பிடுகின்றோம். அந்த ஹதீஸ் பலவீனமானது என்பது தான் அடிப்படையான விஷயமாகும்.

இதை நாம் அடிக்கடி இந்தத் தொடரில் வலியுறுத்துவதற்குக் காரணம் சிலர் அடிப்படையான விஷயம் பற்றி இருட்டடிப்புச் செய்து விட்டு உதாரணத்திற்காகவும், வலுப்படுத்துவதற்காகவும் நாம் கூறும் விஷயங்களுக்கு நீண்ட மறுப்பு (?) கூறுவது தான்.

அவர்கள் மேற்கண்ட ஹதீஸ்கள் பலவீனமானவை அல்ல என்பதற்குத் தான் பதில் சொல்லக் கடமைப் பட்டுள்ளனர்.

அனாதைக்கு அநீதி

அந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் பலவீனம் என்பதுடன், வருடா வருடம் என்ற வார்த்தை அந்த ஹதீஸில் இடம் பெறவில்லை என்பதை மேலே கண்டோம். அது மட்டுமின்றி அது கூறும் கருத்தும் இஸ்லாமிய நெறிகளுக்கு உகந்ததாக இல்லை.

பருவ வயதை அடைவதற்கு முன்பு தான் ஒருவரை அனாதை என்று கூற முடியும். இவர்களும் ஒப்புக் கொண்ட இஸ்லாமிய சட்டப்படி பருவ வயது வராதவர்களின் எந்த ஒப்பந்தமும் செல்லாது.

அனாதையின் சொத்தை வியாபாரத்தில் முடக்க வேண்டுமானால் அவனது சம்மதம் அவசியம்.

அனாதையின் சொத்தை அவர் பருவமடைவது வரை அழகிய முறையிலேயே தவிர நெருங்காதீர்கள்! வாக்கை நிறைவேற்றுங்கள்! வாக்கு விசாரிக்கப்படும்.

(அல்குர்ஆன் 17:34)

அவன் சம்மதம் கொடுக்கும் வயதுடையவனாக இல்லாததால் அவனது சொத்தை வியாபாரத்தில் போடுவதற்கு பொறுப்பாளனுக்கு உரிமை இல்லை.

இந்தக் காரணத்தாலும் மேற்கண்ட ஹதீஸ் மேலும் பலவீனப்படுகின்றது. இதையும் மேலதிக விளக்கமாகத் தான் கூறுகிறோம். இதற்கு விளக்கம் என்று எதையோ கூறி மழுப்பி விட்டு அடிப்படையான விஷயத்தை இருட்டடிப்புச் செய்து விடக் கூடாது என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம்.

வியாபாரம் என்பது லாபமும் நட்டமும் ஏற்படும் என்ற இரண்டு தன்மைகளைக் கொண்டதாகும்.

அனாதைச் சொத்தை வியாபாரத்தில் போடாமல் இருந்தால் இவர்களின் வாதப்படி ஜகாத் கொடுத்தே கரைவதற்குப் பல வருடங்கள் ஆகும். ஆனால் வியாபாரத்தில் போட்டு, நட்டம் ஏற்பட்டால் ஒரு மாதத்திலேயே, ஏன் ஒரு நாளில் கூட அனாதையின் சொத்து அழிந்து விடும்.

மேலும் இவர்களது வாதப்படி ஜகாத் கரைந்து கொண்டே வந்து ஒரு குறிப்பிட்ட தொகை வந்ததும் ஜகாத் கடமையாகாத நிலை ஏற்படும். அப்போது அந்தத் தொகை மட்டுமாவது அனாதைக்காக மிஞ்சியிருக்கும். ஆனால் வியாபாரத்தில் நட்டமடைந்து விட்டால் எதுவுமே மிஞ்சாத நிலை கூட ஏற்படலாம்.

ஜகாத் கொடுத்தே சொத்து கரைந்து விடும் என்ற கருத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இந்தப் பலவீனமான ஹதீஸ் கூறுகின்றது.

ஆனால் இவர்கள் வாதப்படியே ஆண்டுக்கு ஒரு முறை ஜகாத் கொடுப்பதாக வைத்துக் கொண்டாலும் ஒரு காலத்திலும் முழுமையாகக் கரைவதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு வயதுடைய அல்லது அன்று பிறந்த குழந்தை அனாதையாகி விட்ட நிலையில் அதன் சொத்தை ஒருவன் பராமரிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அனாதை பருவ வயது அடையும் வரை தான் பராமரிக்க வேண்டும். அதாவது அதிகப்பட்சமாக 15 வருடங்கள் வரை ஒருவர் அனாதையின் சொத்தைப் பராமரிக்க வேண்டிய நிலை ஏற்படும். சொத்தில் இரண்டரை சதவிகிதம் ஜகாத் என்ற அடிப்படையில் இதைக் கணக்கிடுவோம்.

ஒரு லட்ச ரூபாய் அனாதைச் சொத்தை ஒருவர் பராமரிக்கின்றார். இவர்களின் வாதப்படி ஓர் ஆண்டுக்கு இரண்டரை சதவிகிதம் ஜகாத் கொடுக்க வேண்டும். அதாவது 2500 ரூபாய் கொடுக்க வேண்டும். அடுத்த வருடம் 2437 ரூபாய் ஐம்பது காசுகள் ஜகாத் கொடுக்க வேண்டும். 15 வருடங்கள் இப்படியே கொடுத்தால் கூட அதிகப்பட்சமாக 31,598 ரூபாய் தான் ஜகாத் கொடுக்க வேண்டி வரும். மீதி 68,402 ரூபாய் கண்டிப்பாக மீதம் இருக்கும். அப்படிப் பார்க்கும் போது மேற்கண்ட பலவீனமான ஹதீஸ்களின் கூறப்பட்டுள்ளது போல் ஜகாத் கொடுத்தே சொத்து கரைந்து விடுவதற்கோ அல்லது சொத்தை ஜகாத் விழுங்கி விடுவதற்கோ வாய்ப்பில்லை.

எனவே இது போன்ற பொருத்தமற்ற வாதங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள் என்பதால் இது மேலும் பலவீனப்படுகின்றது.

இதுவும் மேலதிகமான விளக்கத்திற்காகத் தான் கூறப்படுகின்றது. அடிப்படையான விஷயம் மேற்கண்ட ஹதீஸ் பலவீனமானது என்பது தான். அதற்குத் தான் இவர்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளனர்.

மேலும் அனாதைச் சொத்தை மோசடி செய்ய நினைப்பவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்து விடும்.

உன் சொத்தை வியாபாரத்தில் போட்டேன். எல்லாம் நட்டமாகி விட்டது என்று சொத்தைப் பராமரித்தவர் அனாதை வளர்ந்து பெரியவனாகும் போது கூறும் வாய்ப்பை நபிகள் நாயகம் (ஸல்) ஏற்படுத்த மட்டார்கள் என்பதும் மேற்கண்ட ஹதீஸை இன்னும் பலவீனப்படுத்துகின்றது.

இரண்டு வருட ஜகாத்தை முன் கூட்டியே வாங்கிய ஹதீஸ்

ஒரு பொருளுக்கு ஜகாத் கொடுத்து விட்டாலும் மீண்டும் மீண்டும் வருடா வருடம் ஜகாத் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற கருத்துடையவர்கள் மற்றொரு ஹதீஸையும் தங்களின் வாதத்துக்குச் சான்றாக எடுத்து வைக்கின்றனர்.

அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஜகாத் வசூலிக்க உமர் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். அப்பாஸ் (ரலி) அவர்களிடம் உமர் (ரலி) ஜகாத்தைக் கேட்டார்கள். அவர்களிடம் அப்பாஸ் (ரலி) கடுமையாக நடந்து கொண்டார். உடனே உமர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அப்பாஸ் இந்த வருட ஜகாத்தையும் வரும் ஆண்டின் ஜகாத்தையும் முன் கூட்டியே தந்து விட்டார்'' எனக் கூறினார்கள்.

மேற்கண்ட கருத்தில் சில ஹதீஸ்கள் சில நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதை ஆதாரமாகக் கொண்டு, கொடுத்த பொருளுக்கே ஆண்டு தோறும் ஜகாத் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர்.

வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டியது அவசியம் என்பதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டு வருட ஜகாத்தை முன் கூட்டியே வாங்கியுள்ளனர் என்பது இவர்களின் வாதம்.

இந்த ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவையா என்பதையும், ஆதாரப்பூர்வமானவை என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதத்துக்கு இதில் இடம் உள்ளதா என்பதையும் விரிவாக நாம் ஆராய்வோம்.

மேற்கண்ட கருத்தில் அமைந்த எந்த அறிவிப்பும் ஆதாரமாகக் கொள்ளத் தக்கதாக இல்லை.

முதல் அறிவிப்பு

(தாரகுத்னீ 2/124 - 6)

மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் ஹஸன் பின் உமாரா என்பவர் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவர் ஆவார்.

(தஹ்தீபுத் தஹ்தீப் 2/263)

ஹஸன் பின் உமாரா, ஹகம் என்பாரின் பெயரைப் பயன்படுத்தி 70 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். அவற்றில் ஒன்றுக்குக் கூட அடிப்படை இல்லை என்று ஷுஃபா கூறுகின்றார். (மேற்கண்ட ஹதீசையும் ஹகம் வழியாகவே அறிவித்துள்ளார்) ஹஸன் பின் உமாரா வழியாக எதையும் அறிவிக்காதே! அவர் பொய் சொல்பவர் என்று ஜரீர் பின் ஹாஸிம் என்பாரிடம் ஷுஃபா கூறினார். இவரது ஹதீஸ்களை விட்டு விட வேண்டும் என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறுகின்றார். மேலும் இவரது ஹதீஸ்கள் யாவும் இட்டுக் கட்டப்பட்டவை, அவற்றைப் பதிவு செய்யக் கூடாது என்றும் அஹ்மத் பின் ஹம்பல் கூறுகின்றார். இப்னு மயீன் அவர்களும் இதே கருத்தைக் கூறியுள்ளனர். அப்துல்லாஹ் பின் அல்மத்யனி, அபூஹாதம், முஸ்லிம், நஸயீ, தாரகுத்னீ ஆகியோரும் இவரது ஹதீஸ்களை விட்டு விட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

எனவே பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்ட இவர் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு ஒரு பொருளுக்கு வருடா வருடம் ஸகாத் கொடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வர முடியாது.

மற்றொரு அறிவிப்பு

 (பைஹகீ 4/111)

மேற்கண்ட கருத்தில் அமைந்துள்ள இந்த ஹதீஸிலும் ஹஸன் பின் உமாரா என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகின்றார். அத்துடன் முஹம்மத் பின் உபைதுல்லாஹ் அல்அஸ்ரமீ என்பவரும் இத்தொடரில் இத்தொடரில் இடம் பெற்றுள்ளனர்.

இவரும் பலவீனமானவர் என்பதற்கான ஆதாரத்தைப் பக்கம் 22ல் குறிப்பிட்டுள்ளோம்.

எனவே இது முந்தையதை விட இன்னும் பலவீனமானதாகும்.

மற்றோர் அறிவிப்பு

இவை தவிர இன்னோர் அறிவிப்பும் உள்ளது.

(தாரகுத்னீ 2/124)

இதன் அறிவிப்பாளர் தொடரில் முஹம்மத் பின் உபைதுல்லாஹ் அல்அஸ்ரமீ இடம் பெற்றுள்ளதைக் காண்க!

இவர் பலவீனமானவர் என்பதற்கான ஆதாரத்தை பக்கம் 22ல் குறிப்பிட்டுள்ளோம்.

எனவே இந்த அறிவிப்பையும் ஆதாரமாகக் கொண்டு எந்தச் சட்டமும் வகுக்கக் கூடாது.

மற்றோர் அறிவிப்பு

(தாரகுத்னீ 2/124-8)

இதே கருத்தில் அமைந்த, தாரகுத்னீயில் இடம் பெற்ற இந்த அறிவிப்பில் ஏற்கனவே நாம் சுட்டிக் காட்டியுள்ள உபைதுல்லாஹ் அல்அஸ்ரமீ என்பாரும், அனாதைகளின் சொத்து பற்றிய ஹதீஸில் நாம் சுட்டிக் காட்டிய மின்தல் பின் அலீ என்பாரும் இடம் பெற்றுள்ளார்.

பலவீனமான இருவர் வழியாக அறிவிக்கப்படுவதால் இதுவும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ் அல்ல.

இன்னோர் அறிவிப்பு

மேற்கண்ட அறிவிப்பாளர்கள் அல்லாத வேறு அறிவிப்பாளர்கள் வழியாகவும் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(தப்ரானியின் அவ்ஸத் 1/299)

(தப்ரானியின் கபீர் 10/72)

மேற்கண்ட இரண்டு அறிவிப்புக்களிலும் முஹம்மத் பின் தக்வான் என்பவர் இடம் பெறுகின்றார்.

(லுஅஃபாவுல் கபீர் 4/65)

இவரது ஹதீஸ்கள் நிராகரிக்கத் தக்கவை என்று புகாரி இமாம் கூறுகின்றார்கள்.

எனவே இதையும் ஆதாரமாகக் கொள்ள இயலாது.

மற்றோர் அறிவிப்பு

(பைஹகீ 4/111)

மேற்கண்ட ஹதீஸ் மற்றொரு வழியிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. அலீ (ரலி) வழியாக அபுல் பக்தரி என்பார் அறிவிப்பதாக மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்தாலும் அபுல் பக்தரி என்பார் அலீ (ரலி) அவர்களைச் சந்தித்து எதையும் அறிவித்ததில்லை. இதை அந்த ஹதீஸின் இறுதியில் பைஹகீ அவர்களே குறிப்பிடுகின்றார்கள். அலீ (ரலி), அபுல் பக்தரி ஆகிய இருவருக்குமிடையே தொடர்பு இல்லாததால் இதுவும் பலவீனமான ஹதீஸாகும்.

இந்தக் கருத்தில் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் சரியான அறிவிப்பு ஒன்று உள்ளது என்று இந்த ஹதீஸின் இறுதியில் பைஹகீ குறிப்பிடுகின்றார்கள். அந்தச் சரியான அறிவிப்பு புகாரியிலும், முஸ்லிமிலும் இடம் பெற்றுள்ளது. ஆயினும் அந்த ஹதீஸ் இந்தக் கருத்தைக் கூறவில்லை என்பதை பக்கம் 33ல் விளக்கியுள்ளோம்.

இன்னோர் அறிவிப்பு

மேற்கண்ட அறிவிப்பாளர்கள் இன்றி வேறு அறிவிப்பாளர்கள் வழியாகவும் தாரகுத்னீயில் ஓர் அறிவிப்பு உள்ளது.

(தாரகுத்னீ 2/125-9)

இதன் அறிவிப்பாளர் தொடரில் இஸ்மாயீல் மக்கீ என்பார் இடம் பெறுகின்றார். இவரும் பலவீனமானவர்.

இவை தவிர பஸ்ஸார், அபூயஃலாவிலும் இந்த ஹதீஸ் பதியப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளராக ஹஸன் பின் உமாரா இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவர் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம்.

(பஸ்ஸார் 4/303)

பஸ்ஸாரில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பில் முஹம்மத் பின் தக்வான் இடம் பெறுகின்றார். இவரும் பலவீனமானவர் என்பதை முன்பே விளக்கியுள்ளோம்.

அரபி (அபூயஃலா 2/12)

பஸ்ஸார் நூலின் மற்றொரு அறிவிப்பில் ஹஸன் பின் உமாரா என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்பதையும் விளக்கியுள்ளோம்.

அஹ்மத், ஹாகிம், திர்மிதீ, இப்னுமாஜா, அபூதாவூத் உள்ளிட்ட நூல்களில் இந்தக் கருத்தில் ஒரு ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹதீஸை ஹுஷைம் என்பார் அறிவிக்கும் போது அலீ (ரலி) கூறியதாகவும், சில வேளை ஹஸன் பின் முஸ்லிம் என்ற நபித்தோழர் அல்லாத ஒருவர் கூறியதாகவும் முரண் படுகின்றார். இதை ஆய்வு செய்த தாரகுத்னீ, அபூதாவூத் ஆகியோர் நபித்தோழர் அல்லாதவர் அறிவிப்பதாகக் கூறுவது தான் சரியான அறிவிப்பாகும் என்று கூறுகின்றனர்.

அதாவது நபித்தோழர் அறிவிப்பதாகக் கூறுவது தவறு என்று கூறுகின்றார்கள். இந்த விபரம் தல்கீஸ் நூலில் இடம் பெற்றுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக நபித் தோழர் அல்லாதவர் அறிவித்தால் அது ஏற்கத்தக்கதல்ல.

இந்தக் கருத்தில் அமைந்த ஒரு ஹதீஸ் கூட ஆதாரப்பூர்வமானதாக இல்லை. எனவே இதை அடிப்படையாகக் கொண்டு சட்டம் வகுக்க முடியாது.

ஆதாரப்பூர்வமான ஹதீசுக்கு முரண்

அறிவிப்பாளர் சரியில்லை என்பதாலும் தொடர்பு அறுந்துள்ளதாலும் இந்த ஹதீஸ்கள் பலவீனமாக இருப்பதுடன் ஆதாரப்பூர்வமான ஹதீசுடன் முரண்படுவதால் இது இட்டுக் கட்டப்பட்ட செய்தி என்ற நிலைக்கு மேலும் இறங்குகிறது.

அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஸகாத் வசூலிக்க உமர் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பிய போது அப்பாஸ் (ரலி) அவர்கள் மறுத்தார்கள். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது, "அது என்னைச் சார்ந்தது. அது போல் ஒரு மடங்கும் என்னைச் சார்ந்தது'' என்று குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: முஸ்லிம் 1634

புகாரியின் அறிவிப்பில் (1468) "அதுவும் அத்துடன் அது போன்றதும் அவர் மீது கடமையாகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்களில் எந்தக் குறைபாடும் இல்லை. இந்த ஹதீஸின் வாசகங்களைக் கவனித்தால் இரண்டு வருட ஜகாத்தை அப்பாஸ் (ரலி)யிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வசூலிக்கவில்லை, மாறாக அவர் மீதுள்ள ஜகாத்தையும் அது போல் இன்னொரு மடங்கையும் வசூலித்தார்கள் என்பது தெரிய வருகின்றது.

ஜாகத் கொடுக்க மறுத்ததற்காக இன்னொரு மடங்கை வாங்கினார்கள் என்பது இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது, சாதாரண அறிவு படைத்தவருக்கும் தெரியும். பத்து ரூபாய் தர வேண்டியவர் அதைத் தர மறுக்கும் போது 20 ரூபாய் கொடு என்று கூறினால், அது மறுத்ததற்கான தண்டனை என்பதை யாரும் விளங்கலாம்.

புகாரியின் விரிவுரை நூலான பத்ஹுல்பாரியில் இது பற்றிக் கூறப்பட்டதை இங்கே நினைவு படுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.

அவரது ஜகாத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரு மடங்காக வாங்கியதற்கான காரணம் தமது தகுதிக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், தம் மீது பழி சேரக் கூடாது என்பதற்காகவும் தான். இதன் கருத்து, அவர் அந்த ஜகாத்தைக் கொடுத்தாக வேண்டும். அது போன்ற இன்னொரு மடங்கை உபரியாக வழங்க வேண்டும் என்பது தான். (பத்ஹுல் பாரி 3/333)

ஜகாத் போன்ற இன்னொரு மடங்கை வழங்கியது இரண்டு வருடத்துக்காக அல்ல. உபரியாகத் தான் வழங்கினார்கள் என்று இப்னு ஹஜர் அவர்கள் தெளிவு படுத்துகின்றார்கள்.

அப்பாஸ் (ரலி) அவர்கள் ஜகாத் கொடுக்க மறுத்த சம்பவம் புகாரி, முஸ்லிம் நூற்களில் ஒரு விதமாக உள்ளது. இது ஆதாரப்பூர்வமாக உள்ளது.

மற்ற நூற்களில் வேறு விதமாக உள்ளது. அது பலவீனமானதாக உள்ளது.

மேலும் ஆதாரப்பூர்வமான அந்த ஹதீசுக்கு முரண்படுவதாலும், இரண்டு வருட ஜகாத்தை முன் கூட்டியே வசூலித்தார்கள் என்பது இட்டுக் கட்டப்பட்ட நிலைக்குத் தரம் குறைந்து விடுகின்றது.

ஜகாத்தை முன் கூட்டியே வாங்கலாமா?

அப்பாஸ் (ரலி) அவர்களிடம் இரண்டு ஆண்டுக்கான ஜகாத்தை முன் கூட்டியே வாங்கி விட்டனர் என்பது ஆதாரமற்றது என்பதால் இதை ஆதாரமாகக் கொண்ட இவர்களது வாதமும் அடிபட்டுப் போகின்றது.

மேலும் பல காரணங்களால் அந்த ஹதீஸ்களின் பலவீனம் மேலும் அதிகரிக்கின்றது.

ஜகாத் கொடுக்கப்பட்ட ஒரு பொருளுக்கே மீண்டும் மீண்டும் வருடந்தோறும் கொடுக்க வேண்டும் என்று இவர்கள் கூறுகின்ற படியே வைத்துக் கொண்டாலும் முன் கூட்டியே இரண்டு ஆண்டுக்கான ஜகாத்தை வாங்குவது நடைமுறை சாத்தியமற்றது.

ஜகாத் என்பது தலைக்கு இவ்வளவு என்று வசூலிக்கப்படுவதன்று. மாறாக, ஒருவரது சொத்துக்களைக் கணக்கிட்டு அதற்கேற்ப வசூலிக்கப்படுவதாகும்.

இவர்களின் வாதப்படி இந்த வருடத்துக்கான ஜகாத்தை ஒருவரிடம் வசூலித்து விட முடியும். ஏனெனில் அவரிடம் உள்ள அந்த வருடச் சொத்துக்களைக் கணக்கிடுவது சாத்தியமானது தான்.

ஆனால் அடுத்த வருடம் அவரது சொத்துக்கள் எவ்வளவு இருக்கும் என்பதை இந்த ஆண்டு கணக்கிட முடியுமா?

இவர்களின் வாதப்படி வருடம் முடிவடையும் போது தான் ஸகாத் கடமையாகும். அடுத்த வருடம் முடிவடையாத போது இப்போதே வசூலிப்பது அநீதியாகி விடும் அல்லவா?

இந்த வருடம் கணக்குப் பார்க்கும் போது 5 லட்சம் ஒருவரிடம் இருந்தால் அடுத்த வருடமும் அதே 5 லட்சத்திற்கு நாம் ஜகாத் வாங்க இயலுமா? அடுத்த வருடம் வருவதற்குள் அவரிடம் இருந்த 5 லட்சமும் முடிந்து போய் விட்டால் அவரிடம் வாங்கிய அந்த ஜகாத் அநீதியாக ஆகாதா?

அல்லது வருடம் முடிவதற்கு இடையில் அவர் மரணித்து விட்டால், இவர்களின் வாதப்படி அவர் அந்த வருடத்தின் ஜகாத்தைக் கொடுக்கத் தேவையில்லை. அப்படியானால் அட்வான்ஸாக வாங்கிய ஜகாத் எந்த வகையில் நியாயமாகும்?

பலவீனமான இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு வாதிக்கும் இவர்கள், ஒரு மனிதன் 10 வருட ஸகாத்தை இப்போதே வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி வழங்கினால் அதை வாங்கலாம் என்பார்களா? பத்து வருடத்தில் ஆயிரம் மடங்கு அவனது சொத்து பெருகி விட்டாலோ, அல்லது சொத்துக்கள் அழிந்து விட்டாலோ, அல்லது அவனே மரணித்து விட்டாலோ அந்த அநீதியை எப்படிச் சரி செய்வார்கள்?

இதைச் சிந்திக்கும் போது இரண்டு வருட ஜகாத்தை அட்வான்ஸாக வாங்கியது கட்டுக் கதை என்பது மேலும் உறுதியாகின்றது.

வலுப்படுத்துவதற்காக நாம் கூறிய இந்தக் காரணங்களைப் பற்றி தத்துவங்களை உதிர்க்காமல் மேற்கண்ட ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை என்பதை அவர்கள் நிரூபிக்க வேண்டும். புகாரி, முஸ்லிம் ஹதீஸின் நிலை என்ன? என்பதற்கும் பதில் சொல்ல வேண்டும்.

ஒரு வருடம் முழுமையடையும் வரை ஜகாத் இல்லை என்ற ஹதீஸ்

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று கூறுவோர் மற்றொரு ஆதாரத்தை எடுத்துக் காட்டுகின்றனர்.

"ஒருவன் ஒரு பொருளைப் பெற்றுக் கொண்டால் ஒரு வருடம் கடக்கும் வரை அப்பொருளுக்கு ஸகாத் இல்லை'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக திர்மிதியில் (572) இடம் பெற்ற ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் அப்துர்ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பவர் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவர் என்று திர்மிதீ இமாம் அவர்களே அடுத்த ஹதீஸின் இறுதியில் கூறுகின்றார்கள். அஹ்மத் பின் ஹம்பல், அலீ பின் மத்யனீ உள்ளிட்ட பலர் இவரைப் பலவீனமானவர் என்று முடிவு செய்திருப்பதாகவும் திர்மிதீ இமாம் தெரிவிக்கின்றார்கள்.

மேலும் இதே கருத்துடைய ஹதீஸ் இப்னுமாஜாவிலும் பைஹகீ 4/95லும் தாரகுத்னீ 2/90லும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிவிப்பாளர் தொடரில் ஹாரிஸா பின் முஹம்மத் என்பார் இடம் பெறுகின்றார். இவரது செய்தி நம்பத்தக்கதல்ல என்று பைஹகீ குறிப்பிடுகின்றார்கள்.

இந்த ஹதீசும் பலவீனமானது என்பதால் இதனடிப்படையில் இவர்கள் எழுப்பிய வாதமும் விழுந்து விடுகின்றது.

மேலும் இந்தக் கருத்துடைய ஹதீஸ் தாரகுத்னீ 2/91லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் ஹஸ்ஸான் பின் ஸியாஹ் என்பவர் இடம் பெறுகின்றார். இவரும் பலவீனமானவர் ஆவார்.

இவை தவிர அபூதாவூத், பைஹகீ 4/95, 4/137 ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் நம்பகமானவர்கள் இடம் பெறுவதால் இது ஆதாரப்பூர்வமானது என்று நாஸிருத்தீன் அல்பானி கூறுகின்றார். இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்பதைக் கவனித்த அல்பானி இதிலுள்ள மற்றொரு குறைபாட்டைக் கவனிக்கத் தவறி விட்டார்.

எனவே இது பற்றி விரிவாக நாம் விளக்கியாக வேண்டும். இதன் அறிவிப்பாளர் தொடர் பின்வருமாறு அமைந்துள்ளது.

1. அலீ

2. ஹாரிஸ் அல் அஃவர்  -  ஆஸிம் பின் ளமுரா

3. அபூ இஸ்ஹாக்

4. ஸுஹைர்

5. அப்துல்லாஹ் பின் முஹம்மத்

அதாவது அப்துல்லாஹ் பின் முஹம்மத் என்பார் தனக்கு ஸுஹைர் கூறியதாகத் தெரிவிக்கின்றார்.

ஸுஹைர் என்பார் தனக்கு அபூ இஸ்ஹாக் கூறியதாகத் குறிப்பிடுகிறார்.

அபூ இஸ்ஹாக் என்பார் தனக்கு ஆஸிம், ஹாரிஸ் ஆகிய இருவர் கூறியதாகக் கூறுகிறார்.

ஆஸிம், ஹாரிஸ் ஆகிய இருவரும் தமக்கு அலீ (ரலி) கூறியதாகக் குறிப்பிடுகின்றார்கள்.

இந்தத் தொடரில் அலீ (ரலி) அவர்களிடம் கேட்ட இருவரில் ஹாரிஸ் என்பார் பெரும் பொய்யர் என்றாலும் அவர்களிடம் செவியுற்ற மற்றொரு அறிவிப்பாளர் ஆஸிம் பின் ளமுரா என்பார் ஏற்கத் தக்கவராவார். எனவே இந்த அடிப்படையில் இது சரியான அறிவிப்பாளர் தொடரைக் கொண்டதாக அமைந்து விடுகின்றது. எனவே இது சரியான அறிவிப்பு தான் என்று அல்பானி கூறுகின்றார்.

ஆனாலும் அலீ (ரலி) அவர்கள் தமது சொந்தக் கூற்றாக இதைக் கூறினார்களா? அல்லது நபிகள் நாயகத்தின் கூற்றைத் தெரிவிக்கிறார்களா? இது பற்றி மேற்கண்ட ஹதீஸில் திட்டமாகக் கூறப்படவில்லை.

அலீ (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றை எடுத்துக் கூறுவதாகத் தான் நினைக்கிறேன் என்று ஸுஹைர் என்பார் கூறுகின்றார். இந்த வாசகம் இந்த ஹதீஸின் துவக்கத்தில் இடம் பெறுகின்றது.

அலீ (ரலி) அவர்கள் நபியவர்களின் கூற்றை எடுத்துக் காட்டியதாக நினைக்கிறேன் என்று அலீ (ரலி) அவர்களைச் சந்தித்திராத ஸுஹைர் என்பார் யூகத்தின் அடிப்படையில் கூறுகின்றார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக யூகத்தின் அடிப்படையில் முடிவு செய்ய முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றால் அதை அலீ (ரலி) அவர்கள் தெளிவாகக் கூறியிருக்க வேண்டும்.

ஆனால் ஸுஹைர் என்பார் யூகமாகக் கூறுவதால் இது நபிமொழியாக ஆகாது.

எனவே இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்றாலும் இக்கூற்று அலீ (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றே ஆகும். எனவே இதையும் ஆதாரமாகக் கொண்டு எந்த முடிவும் எடுக்க முடியாது.

ஒவ்வொரு வருடமும்...

ஒரு பொருளுக்கு ஜகாத் கொடுத்து விட்டாலும் ஆண்டு தோறும் அப்பொருளுக்கு ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற வாதத்தை நிலைநாட்ட மற்றொரு ஹதீஸையும் எடுத்து வைக்கின்றார்கள்.

மூன்று காரியங்களை யார் செய்கிறாரோ அவர் ஈமானின் ருசியை சுவைத்து விட்டார். 1. வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நம்பி அல்லாஹ்வை மட்டும் வணங்குதல். 2. ஒவ்வொரு வருடமும் தனது பொருளின் ஜகாத்தை மன விருப்பத்துடன் வழங்குதல். 3. கிழப் பருவம் அடைந்தது, சொறி பிடித்தது, நோயுற்றது, அற்பமானது ஆகியவற்றைக் கொடுக்காமல் நடுத்தரமானதை வழங்குதல் ஆகிய மூன்று காரியங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் பைஹகீ 4/95லும் தப்ரானியின் ஸகீர் என்ற நூலிலும் அபூதாவூதிலும் பதிவு செய்யப் பட்டுள்ளது.

இது மிகவும் ஆதாரப்பூர்வமானது என்று இக்கருத்துடையவர்கள் கூறுகின்றனர் ஆனால் மேற்கண்ட மூன்று அறிவிப்புகளுமே பலவீனமான அறிவிப்புகளாகும்.

பைஹகீயின் அறிவிப்பு

(பைஹகீ 4/95)

இந்த அறிவிப்பாளர் தொடரில் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் என்பார் இடம் பெற்றுள்ளார்.

(தஹ்தீபுத் தஹ்தீப் 1/189)

இவரைப் பற்றி இப்னு மயீன் புகழ்ந்து கூறியிருக்கின்றார். ஆயினும் நஸயீ அவர்கள் இவர் பலமான அறிவிப்பாளர் அல்ல எனக் கூறுகின்றார். இவர் பொய் சொல்பவர் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை என்று முஹம்மத் பின் அவ்ன் கூறுகின்றார்.

இஸ்ஹாக் பின் இப்ராஹீம் என்பவரை சிலர் நல்லவர்கள் என்று கூறியிருந்தாலும் அவர் பொய் சொல்லுபவர் என்று தெளிவான காரணம் சொல்லப்பட்டுள்ளதால் நிறையை விட குறையை முற்படுத்த வேண்டும் என்று ஹதீஸ் கலையில் வகுக்கப்பட்டுள்ள சரியான நிலைபாட்டின் அடிப்படையில் இவர் பலவீனமானவர் என்று முடிவு எடுக்க வேண்டும்.

மேற்கண்ட பைஹகீயின் அறிவிப்பில் அம்ரு பின் ஹாரிஸ் என்ற அறிவிப்பாளரும் இடம் பெறுகின்றார்.

(தஹ்தீபுத் தஹ்தீப் 8/13)

இவரைப் பற்றி விபரம் கிடைக்கவில்லை. தஹபீ அவர்கள் இவரது நேர்மை நிரூபணமாகவில்லை என்று கூறுகின்றார்.

இவர் நம்பகமானவரா? இல்யைô? என்பது தெரியாத நிலையில் மேற்கண்ட ஹதீஸ் மேலும் பலவீனமடைகின்றது.

தப்ரானியின் அறிவிப்பு

தப்ரானி அவர்களின் ஸகீர் என்ற நூலில் இடம் பெற்ற ஹதீசும் பலவீனமானதாகும்.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் அபூதகீ அப்துல் ஹமீத் பின் இப்ராஹீம் என்பவர் இடம் பெறுகின்றார்.

இவர் பார்வை இழந்த முதியவராக இருந்தார். இவருக்கு நினைவாற்றலும் இருக்கவில்லை. இவர் நம்பகமானவர் அல்லர். கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவரும் அல்லர் என்று அபூஹாதம் கூறுகின்றார்.

(அல்ஜரஹ் வத்தஃதீல் பாகம் 6, பக்கம் 8)

மேற்கண்ட மூன்று அறிவிப்புகளில் இது தான் பலமானது என்று சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் ஹதீஸ் கலை அறிஞர்கள் அபூதகீ அப்துல் ஹமீது என்பாரைப் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர்.

எனவே இந்த ஹதீஸை ஆதாரப்பூர்வமானது என்று வாதிடக் கூடியவர்கள் மேற்கண்ட அறிவிப்பாளரைப் பற்றி விமர்சனத்திற்குப் பதில் கூறி விட்டு வாதிட வேண்டும்.

இந்த ஹதீஸ் பலவீனமானது என்பதைத் தக்க காரணத்துடன் நாம் விளக்கியுள்ளோம். அந்தக் காரணம் இருக்கும் வரை இது பலவீனமானது என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லை.

அபூதாவூதின் அறிவிப்பு

அபூதாவூதில் இடம் பெற்ற ஹதீஸிலும் இரண்டு குறைபாடுகள் உள்ளன.

இதை அறிவிப்பாளர்கள் இடையே தொடர்பு விடுபட்ட ஹதீஸ் என்று இமாம் முன்திரி அவர்கள் கூறுகின்றார்கள்.

அபூதாவூத் அவர்கள் தமக்கு அறிவித்தவரைக் கூறவில்லை. அம்ரு பின் ஹாரிஸ் குடும்பத்தாரிடம் அப்துல்லாஹ் பின் ஸாலிமுடைய ஏடு இருந்தது. அதில் வாசித்தேன் எனக் கூறி மேற்கண்ட ஹதீஸைப் பதிவு செய்கிறார்கள்.

அப்துல்லாஹ் பின் ஸாலிம் அவர்களின் ஏட்டை அப்துல்லாஹ் பின் ஸாலிமிடமிருந்து அபூதாவூத் வாசிக்கவில்லை. அம்ரு பின் ஹாரிஸ் என்பாரின் குடும்பத்தாரிடம் வாசித்தேன் என்று கூறுகின்றார்.

அம்ரு பின் ஹாரிஸ் குடும்பத்தார் என்றால் யார்? அவர்களின் நம்பகத் தன்மை எத்தகையது? அப்துல்லாஹ் பின் ஸாலிம் என்பாரின் ஏடு என்று கூறி வேறு எதையாவது காட்டக் கூடியவர்களா? என்ற விபரம் ஏதுமில்லை.

ஒருவரின் குடும்பத்தார் என்பது அவரது தாய், தந்தை, அண்ணன், தம்பி, மனைவி, மக்கள் என பலரையும் குறிக்கக் கூடியது. அம்ரு பின் ஹாரிசுடைய குடும்பத்தார் யார் என்பதும், அவர்களின் நம்பகத் தன்மை எத்தகையது என்பதும் நிரூபணமாகவில்லை என்பதால் இது பலவீனமானதாகும்.

மேலும் அம்ரு பின் ஹாரிஸ் என்பவரின் குடும்பத்தினர் என்று கூறப்படுவதில், அம்ரு பின் ஹாரிசுடைய நம்பகத்தன்மையே நிரூபிக்கப் படவில்லை என்பதை முன்னரே கண்டுள்ளோம்.

நம்பகத்தன்மை நிரூபிக்கப்படாத ஒருவரின் குடும்பத்தார் வைத்திருந்த ஏட்டில் வாசித்தேன் என்று அபூதாவூத் கூறுவதிலிருந்தே இதன் பலவீனம் தெளிவாகத் தெரிகின்றது.

இந்த மூன்று ஹதீஸ்களின் நிலையும் இது தான். பலவீனமான ஒரு ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு மிக முக்கியமான கடமையான வணக்கத்தைத் தீர்மானிப்பது எந்த வகையிலும் நியாயமாகாது.

இது தவிர இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிப்பவராக இருந்த அப்துல்லாஹ் பின் முஆவியா அல் காளிரீ என்பாரின் பெயர் இடம் பெற்றுள்ளது.

இவர் நபித் தோழர் என்று சில நூற்களில் எழுதப் பட்டிருந்தாலும் நபித் தோழர் என்பதை முடிவு செய்வதற்குரிய அளவு கோல் இவருக்குப் பொருந்தவில்லை.

நபித் தோழர் என்று முடிவு செய்வதாக இருந்தால் அவர் நபித் தோழர் என்று பரவலாக அறியப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த ஒரு ஹதீஸில் இவர் பெயர் இடம் பெறுவதைத் தவிர வேறு விபரம் ஏதும் இல்லை.

"நான் நபியிடம் கேட்டேன்'' என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர் அறிவிக்க வேண்டும். இந்த ஹதீஸில், "நான் நபியிடன் கேட்டேன்'' என்பது போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப் படவில்லை. மாறாக நபி சொன்னார்கள் என்ற வார்த்தை தான் பயன்படுத்தப் பட்டுள்ளது. இந்த அளவுகோலின் படியும் இவர் ஸஹாபி என்பது நிரூபணமாகவில்லை.

அல்லது ஒரு நபித் தோழரோ அல்லது ஒரு தாபியீயோ இவரைப் பற்றி நபித்தோழர் என்று சான்றளித்திருக்க வேண்டும். அப்படி யாரும் சான்றளிக்கவில்லை.

தத்ரீப் 2/672ல் நபித் தோழரைத் தீர்மானிப்பதற்குரிய இந்த அளவு கோல் கூறப்பட்டுள்ளது.

நபித் தோழரைத் தீர்மானிப்பதற்குரிய இந்த அளவு கோலின் படி இவர் நபித்தோழர் என்பது நிரூபணமாகவில்லை. எனினும் சில நூற்களில் இவரை நபித் தோழர் என்று கூறியிருப்பது ஏன் என்பது புரியவில்லை.

இப்படிப் பல குறைபாடுகள் கொண்ட ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு தான் தங்கள் வாதத்தை நிறுவுகின்றனர்.

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கே மீண்டும் மீண்டும் வருடாவருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று கூறுவோர் அதை நிரூபிக்க எந்தச் சான்றையும் முன் வைக்கவில்லை.

எல்லாம் ஒவ்வொன்றாக விழுந்து விட்ட நிலையில் சம்பந்தமில்லாத ஹதீஸ்களைக் கூறி சொந்த ஊகத்தை அதில் புகுத்தி சமாளிக்க முயல்கின்றனர்.

அபூபக்ரின் ஆட்சியில்....

அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் சிலர் ஜகாத் கொடுக்க மறுத்த போது, "நபிகள் நாயகத்திடம் கொடுத்து வந்த ஒரு ஆட்டுக் குட்டியை என்னிடம் தர மறுப்பார்களானால் அவர்களுடன் நான் போரிடுவேன்'' என்று குறிப்பிட்டார்கள்.

(புகாரி 1400, 1457, 6924, 7285)

இதையும் தங்கள் கூற்றுக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்றாலும் இந்த ஹதீஸில் இவர்களின் வாதத்தை நிலை நாட்ட ஒரு சான்றும் இல்லை.

"நபிகள் நாயகம் காலத்தில் கொடுத்து வந்த'' என்ற சொற்றொடர் தொடர்ச்சியாகக் கொடுத்து வந்தது என்ற கருத்தைத் தான் தரும், ஒரு தடவை கொடுத்திருந்தால் "கொடுத்து வந்த' என்ற சொல்லை அபூபக்ர் (ரலி) பயன்படுத்தியிருப்பார்களா? என்பது இவர்களின் வாதம்.

இந்த வாதம் உச்சக்கட்ட அறியாமையின் வெளிப்பாடாக உள்ளது.

நபிகள் நாயகம் காலத்தில் தொடர்ச்சியாகக் கொடுத்து வந்தனர் என்பது உண்மை தான். ஒரு மனிதனுக்கு ஒரு தடவை ஜகாத் என்று கூறினால் தான் தொடர்ச்சி என்பது இல்லாமல் போகும்.

ஒரு பொருளுக்கு ஒரு தடவை என்று கூறினால் நமது வாதத்தின் படியும் தொடர்ச்சியாகக் கொடுத்து வர முடியும்.

இன்று ஜகாத்தாக ஓர் ஆட்டைக் கொடுத்தவுடன் மேலும் ஆடுகள் பெருகலாம். பெருகிய ஆட்டுக்காக மீண்டும் கொடுக்கலாம். மீண்டும் பெருகலாம். அதற்காகவும் மீண்டும் கொடுக்க வேண்டி வரும். ஒரு பொருளுக்கு ஒரு தடவை கொடுத்தாலும் பொருளாதாரம் பெருகுவதன் காரணமாக தொடர்ச்சியாக ஜகாத் கொடுக்கும் நிலை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

மேலும் இவர்கள் வாதத்தின் படி பார்த்தாலும் நமக்குத் தான் மறுப்பு சொல்கிறார்களே தவிர தங்கள் வாதத்தை இந்த விளக்கத்தின் மூலம் அவர்களால் நிலை நாட்ட முடியாது. ஏனெனில் தொடர்ச்சியாக என்பது வருடந்தோறும் என்பதை மட்டும் குறிக்காது. மாதந்தோறும் என்று கூட பொருள் கொள்ளலாம். வாரந்தோறும் என்றும் பொருள் கொள்ளலாம். ஏன்? தினந்தோறும் என்றும் பொருள் கொள்ளலாம்.

எனவே வருடந்தோறும் என்பதை எதனடிப்படையில் இந்த ஹதீஸில் இவர்களாக நுழைத்தார்கள் என்பதற்கு விளக்கம் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள்.

கால்நடைகளுக்கான ஜகாத்

தக்க ஆதாரம் இல்லாமல் ஒரு முடிவை எடுத்து விட்டு அதை நியாயப்படுத்துவதற்காக சம்பந்தமில்லாத ஹதீஸ்களையெல்லாம் தமக்குரிய ஆதாரமாகக் காட்டுகின்றார்கள்.

இந்த வகையில் அவர்களின் மற்றொரு ஆதாரம் கால்நடைகளுக்கான ஜகாத் பற்றிய ஹதீஸைத் தங்கள் இஷ்டத்திற்கு வளைப்பதாகும்.

ஒரு மனிதனிடம் நாற்பது முதல் 120 வரை ஆடுகள் இருந்தால் அதற்கான ஸகாத் ஒரு ஆடு ஆகும். 121 முதல் 200 வரை இரண்டு ஆடுகளாகும். 201 முதல் 300 வரை மூன்று ஆடுகளாகும். 300க்கு மேல் ஒவ்வொரு நூறு ஆடுகளுக்கும் ஒரு ஆடு வீதம் ஜகாத் ஆகும்.

இந்தக் கருத்தில் அமைந்த ஹதீஸ்களையும் தங்கள் கருத்தை நிரூபிக்கும் ஆதாரமாகப் பயன்படுத்துகின்றனர்.

அவர்கள் தமது வாதத்தை எவ்வாறு எடுத்து வைக்கிறார்கள் என்பதை முதலில் அறிந்து கொள்வோம்.

மேற்கண்ட சட்டத்திலிருந்து இரண்டு எதிர் கேள்விகளை நம்மிடம் கேட்கின்றனர்.

1. ஒருவனிடம் 40 ஆடுகள் இருந்து அதற்குரிய ஜகாத்தை அவன் கொடுத்து விட்டான். சில நாட்களில் இன்னோர் 40 ஆடுகள் அவனுக்குக் கிடைக்கின்றன. இந்த 40 ஆட்டுக்கு ஓர் ஆடு ஜகாத் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் கூறுவீர்கள் என்றால் 80க்கு 2 ஆட்டை கொடுத்தவர்களாவீர்கள். இது 120க்கு 1 என்ற ஹதீசுக்கு முரணாக இருக்கிறது.

2. இரண்டாவதாக வந்த 40க்கு கொடுக்கத் தேவையில்லை என்று நீங்கள் கூறினால் முதல் 40 மட்டும் தான் சுத்தமாகி இருக்கின்றது. இரண்டாவதாக வந்த 40 எப்படி சுத்தமாகும்? என்று நம்மை நோக்கி கேள்வி எழுப்புகின்றனர்.

நாம் என்ன சொல்கிறோம் என்பது புரியாததால் எழுந்த கேள்வி இது.

நாற்பது ஆடு இருக்கும் போது ஒருவன் ஓர் ஆட்டைக் கொடுத்தான் என்றால் அது நாற்பது ஆட்டுக்குரிய ஜகாத் அல்ல. 40 முதல் 120 வரையுள்ள ஒரு ஸ்டேஜுக்கான ஜகாத் ஆகும். எனவே 120 வரை அவன் ஏதும் கொடுக்கத் தேவையில்லை.

மொத்தத்தில் ஒரு ஆடு மட்டும் ஜகாத் கொடுக்கும் போது 120க்கு ஒன்று என்ற இலக்கையும் மீறவில்லை. அதே சமயம் 120 வரையிலான ஸ்டேஜுக்குக் கொடுத்து விட்டதால் இரண்டாவதாக வந்த 40 ஆடுகளும் தூய்மையாகி விட்டன. இது தான் நமது பதிலாகும்.

மேலும் ஒவ்வொரு நூறுக்கும் ஓர் ஆடு என்று அந்த ஹதீஸ் கூறுகின்றது. அதையும் தமது இஷ்டத்துக்கு வளைத்து வியாக்கியானம் கொடுத்து தங்கள் வாதத்தை நிலைநாட்ட முயல்கின்றனர்.

ஒருவனிடம் முன்னூறு ஆடுகள் இருந்தன. அதற்கு அவன் மூன்று ஆடுகளைக் கொடுத்து விட்டான். அதன் பின்னர் நூறு ஆடு கிடைக்கின்றது. இப்போது என்ன செய்ய வேண்டும்? எனவும் கேட்கின்றனர். ஏற்கனவே 300க்குக் கொடுத்து விட்டதால் அதிகப்படியான நூறுக்கு ஓர் ஆட்டைக் கொடுத்தால் மேற்கண்ட ஹதீஸ் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப் படுகின்றது.

இதில் அவர்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை. இதிலிருந்து இவர்கள் தமது வாதத்தை, வருடந்தோறும் திரும்பத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்பதை எப்படி நிலைநாட்டுவார்கள்? என்பது தான் முக்கியமான கேள்வியாகும்.

ஜகாத், பொருட்களைத் தூய்மைப்படுத்தும் என்பதை நாம் துணை ஆதாரமாகத் தான் காட்டியுள்ளோம். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவிப்பவர்கள் ஒவ்வொரு வருடமும் கொடுத்த பொருளுக்கே மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதற்கு மேற்கண்ட சட்டத்தில் எந்த ஆதாரமும் இல்லை என்பதை வசதியாக மறந்து விடுகின்றார்கள்.

வருடா வருடம் கொடுத்த பொருளுக்கு மீண்டும் கொடுக்க வேண்டும் எனக் கூறுவோர் அதற்கான ஆதாரத்தைக் காட்டுவதை விடுத்து நமக்கு மறுப்பு தான் சொல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸஹாபாக்களைப் பின்பற்றலாமா?

ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் ஏதும் இல்லை என்பதைத் தக்க சான்றுகளுடன் கண்டோம்.

இதற்கு மறுப்பு கூற முடியாதவர்கள், "நபிவழியில் ஆதாரம் இல்லாவிட்டாலும் சில நபித் தோழர்களின் கூற்றும் செயல் விளக்கமும் ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தைத் தருகின்றன'' என்று வாதிடுகின்றனர்.

முஸ்லிம்கள் வஹீயை (இறைச் செய்தியை) மட்டுமே ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என்பதையும், வஹீ இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொந்த அபிப்ராயமாகக் கூறியதை, செய்ததைக் கூட மார்க்கமாகச் செய்ய வேண்யதில்லை என்பதையும் விளங்காத காரணத்தால் நபித் தோழர்களின் கூற்றை ஏற்க வேண்டும் என்று கூறி இஸ்லாத்தின் மூல ஆதாரத்தை மாற்றி அமைக்கின்றனர்.

வஹீ இல்லாமல் தேனை நபி (ஸல்) அவர்கள் ஹராமாக்கியதையும், வஹீ இல்லாமல் மகரந்தச் சேர்க்கையை மறுத்ததையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொல், செயலைக் கூட வஹீ என்றும் வஹீ இல்லாதது என்றும் பிரித்துக் காட்டிய பின்னரும், வஹீயைப் பெறாத நபித் தோழர்களின் கூற்றைப் பின்பற்ற வேண்டும் என்று சிலர் வாதிடுவது நமக்கு வியப்பாக இருக்கின்றது.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!

(அல்குர்ஆன் 7:3)

என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 2:38)

(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக!

(அல்குர்ஆன் 6:106)



அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது "செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்'' என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

(அல்குர்ஆன்  24:51)

"அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்!'' என கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப் பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர் வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை.

 (அல்குர்ஆன் 24:54)

"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங் களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 3:31)

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) கோழைகளாவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும். சகித்துக் கொள்ளுங்கள்! சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்.

(அல்குர்ஆன் 8:46)

இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரு) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.

(அல்குர்ஆன் 6:153)

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண் பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத் தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.

 (அல்குர்ஆன் 4:59)

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.

(அல்குர்ஆன் 33:36)

எனக்கே அஞ்சுங்கள்! இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.

 (அல்குர்ஆன் 5:3)

இந்த வசனங்கள் யாவும் இறைச் செய்தியை, குர்ஆனையும் நபிவழியையும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

இவ்வாறு நாம் கூறும் போது ஸஹாபாக்களை மதிக்காத, திட்டுகின்ற கூட்டம் என்று நமக்கு எதிராக மக்களைத் தூண்டி விடுகின்றார்கள்.

நபித்தோழர்கள் சிறப்பு மிக்கவர்கள், நம்மை விட ஈமானில் சிறந்தவர்கள் என்றெல்லாம் வரக்கூடிய விஷயங்களில் நமக்கு மாற்றுக்கருத்தில்லை. இதற்கு ஏராளமான குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் உள்ளன.

என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில் உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தைச் செலவு செய்தாலும் அவர்கள் செலவு செய்த இரு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட அந்தத் தர்மம் எட்டாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 3673

மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். பிறகு (சிறந்தவர்கள்) அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுசைன் (ரலி)

நூல்: புகாரி 2651

அல்லாஹ்வும் தன் திருமறையில் நபித்தோழர்களைப் புகழ்ந்து கூறுகின்றான்.

ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.

(அல்குர்ஆன் 9:100)

இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தோரையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான கால கட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களை மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுடையோன்.

(அல்குர்ஆன் 9:117)

உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாக மாட்டார்கள். அவர்கள் பின்னர் செலவிட்டு போரிட்டவர்களை விட மகத்தான பதவியுடையவர்கள்.

(அல்குர்ஆன் 57:10)

இத்தகைய சிறப்புகள் நபித்தோழர்களுக்கு இருப்பதை நாம் எப்போதுமே மறுத்ததில்லை. நபித்தோழர்களின் சிறப்புகளைச் சீண்டிப் பார்க்கும் ஷியாக்களையும் அவர்களுக்கு தமிழகத்தில் ஆதரவளிக்கும் இயக்கங்களையும் அடையாளம் காட்டி அவர்களது முகத்திரையைக் கிழிக்காமல் நாம் விட்டதில்லை.

ஆனால் அதே சமயம் இத்தனை சிறப்புகள் உள்ளதால் நபித்தோழர்களின் கருத்துக்களை மார்க்கமாகக் கருதும் எந்தவொரு செயல்பாட்டையும் ஏற்றுக் கொள்ள முடியாது. குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டும் தான் மார்க்கத்தின் ஆதாரங்கள். நபித்தோழர்கள் சிறந்தவர்கள் தான் என்றாலும் அவர்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது. அவர்களிடமும் தவறுகள் ஏற்படத் தான் செய்யும்.

இதை நாம் கற்பனையாகக் கூறவில்லை.

மு சில நபித் தோழர்களின் கருத்துக்களும் செயல்களும் குர்ஆன், ஹதீசுக்கு மாற்றமாக இருந்துள்ளன.

மு பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் அவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளன.

மு குர்ஆன், ஹதீஸில் இல்லாத சில விஷயங்களை அவர்களாக உருவாக்கினார்கள்.

என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. எனவே தான் குர்ஆனையும் நபிவழியையும் தவிர வேறு எதையும் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது என்று கூறுகிறோம்.

குர்ஆன், ஹதீசுக்கு மாற்றமாக ஒன்றல்ல, இரண்டல்ல. பல்வேறு விஷயங்களில் ஸஹாபாக்கள் கருத்து கூறியுள்ளார்கள் என்பது தான் உண்மை நிலையாகும்.

தமத்துஃ ஹஜ்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமத்துஃ ஹஜ் செய்ய அனுமதித்துள்ளார்கள். ஆனால் உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோர் இதைத் தடுத்துள்ளார்கள்.

நான் உஸ்மான் (ரலி) உடனும், அலீ (ரலி) உடனும் ஹஜ் செய்துள்ளேன்.  உஸ்மான் (ரலி) அவர்கள் ஹஜ், உம்ரா இரண்டையும் சேர்த்து (கிரான்) செய்வதையும், உம்ரா முடித்து ஹஜ் (தமத்துஉ) செய்வதையும் தடுத்தார்கள்.  இதைக் கண்ட அலீ (ரலி) ஹஜ், உம்ரா இரண்டிற்கும் இஹ்ராம் அணிந்து, "லப்பைக்க பி உம்ரதின் வஹஜ்ஜதின்'' என்று கூறிவிட்டு, "நபி (ஸல்) அவர்களுடைய வழிமுறையை யாருடைய சொல்லிற்காகவும் நான் விட்டு விட மாட்டேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : மர்வான் பின் ஹகம்

நூல் : புகாரி 1563

ஹஜ் மாதத்தில் உம்ராவை முடித்து இஹ்ராமைக் களைந்து ஹஜ்ஜுக்காக தனியாக இஹ்ராம் கட்டுவது பற்றி அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) இடம் ஷாம் நாட்டைச் சேர்ந்த மனிதர் கேட்டார்.  அதற்கு அவர், "அது அனுமதிக்கப்பட்டதே!'' என்று கூறினார். அதற்கு ஷாம் நாட்டைச் சேர்ந்த அம்மனிதர், "உங்கள் தந்தை (உமர்) அதைத் தடை செய்திருக்கின்றாரே!'' என்று கூறினார். அதற்கு இப்னு உமர் (ரலி), "என் தந்தை ஒரு காரியத்தைத் தடுத்து அதை நபி (ஸல்) அவர்கள் செய்திருந்தால் அப்போது என் தந்தையின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா? அல்லது நபி (ஸல்) அவர்களின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா?'' என்று கேட்டார்.  அதற்கு அம்மனிதர், "நபி (ஸல்) அவர்களின் கட்டளையைத் தான் பின்பற்ற வேண்டும்'' என்றார்.  அப்போது இப்னு உமர் (ரலி), "நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துள்ளார்கள்'' என்று விடையளித்தார்.

அறிவிப்பவர் : ஸாலிம்

நூல் : திர்மிதீ (753)

தமத்துஃ ஹஜ் என்ற ஒரு ஹஜ் முறை இருப்பதை இன்றைக்குக் கூட, நபித் தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள் உட்பட அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகிய மிகப் பெரிய நபித் தோழர்களுக்கு இது தெரியாமல் இருந்துள்ளது. இது ஏன்?

குளிப்பு எப்போது கடமை?

நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தமது மனைவியிடம் உடலுறவு கொண்ட பின்னரும் இந்திரியம் வெளியாகாமல் இருந்தால் அவர் மீது குளிப்பு கடமையாகுமா?'' என்று கேட்டேன்.  அதற்கு "மனைவியிடமிருந்து பட்ட இடத்தைக் கழுவ வேண்டும்.  பின்னர் உளூச் செய்து தொழுது கொள்ளலாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உபை பின் கஅப் (ரலி)

நூல் : புகாரி 293

உடலுறவு கொண்ட பின்னர் இந்திரியம் வெளியாகாவிட்டால் குளிப்பு கடமை இல்லை என்பது நபி (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் இட்ட கட்டளையாகும்.  பின்னர் இச்சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் மாற்றி விட்டார்கள்.

"பெண்ணுறுப்பை ஆணுறுப்பு கடந்து விட்டால் குளிப்பு கடமையாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல்கள் : முஸ்லிம் 526, திர்மிதீ 102

இவ்வாறு மாற்றிய விஷயம் நபித் தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுபவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் உஸ்மான் (ரலி) அவர்கள், இந்திரியம் வெளியாகாவிட்டால் குளிப்பு கடமையில்லை என்று கூறியுள்ளார்கள்.

ஒருவர் உடலுறவு கொண்டு விட்டு இந்திரியம் வெளியாகவில்லையானால் அவருடைய சட்டம் என்ன? என்று நான் உஸ்மான் (ரலி)யிடம் கேட்டேன். அதற்கு, அவர் தமது ஆண்குறியைக் கழுவி விட்டு, தொழுகைக்கு உளூச் செய்வது போன்று செய்ய வேண்டும். இதை நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன் என உஸ்மான் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் (ரலி)

நூல்: புகாரி 179, 292

 மாற்றப்பட்ட இந்தச் சட்டம் உஸ்மான் (ரலி) அவர்களுக்குத் தெரியாமல் போனது ஏன்?

குளிப்புக்காக தயம்மம்

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அபூமூஸல் அஷ்அரி (ரலி) ஆகியோருடன் நானும் இருந்தேன். அப்போது அபூமூஸா (ரலி), அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)யிடம், "அபூ அப்திர்ரஹ்மானே! குளிப்பு கடமையான ஒருவர் தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார். "தண்ணீர் கிடைக்கும் வரை அவர் தொழ வேண்டியதில்லை'' என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறினார். அதற்கு அபூமூஸா (ரலி), "நபி (ஸல்) அவர்கள், "தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்தால் போதுமானது' என்று அம்மார் பின் யாஸிரிடத்தில் சொன்ன செய்தியை நீர் என்ன செய்வீர்?'' என்று கேட்டார். அதற்கு, "(இச்செய்தியை அம்மார் (ரலி) உமர் (ரலி)யிடம் கூறியபோது) அதை உமர் (ரலி) ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உமக்குத் தெரியாதா?'' என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) பதில் கூறினார்.

"அம்மார் அறிவிப்பதை விட்டு விடுங்கள். "தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து கொள்ளுங்கள்' என்ற இறைவசனத்தை என்ன செய்வீர்கள்?'' என்று அபூமூஸா (ரலி) கேட்டார். அதற்கு, "இந்த விஷயத்தில் நாம் அவர்களுக்கு அனுமதி வழங்கி விட்டால் யாருக்காவது கொஞ்சம் குளிராகத் தெரிந்தால் அதில் உளூச் செய்வதை விட்டு விட்டு தயம்மும் செய்து விடுவார்கள்'' என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) தாம் சொல்லக் கூடிய இந்த வார்த்தையின் விபரீதத்தைப் புரியாமலேயே சொல்லி விட்டார்கள்.

அறிவிப்பவர்: ஷகீக் பின் ஸலமா

நூல்: 346, 347

குளிப்பு கடமையானவர் தண்ணீர் இல்லையானால் தயம்மும் செய்து விட்டுத் தொழலாம் என்பது தெரிந்திருந்தும் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் தயம்மும் செய்து தொழக் கூடாது என்று கூறுகின்றார்கள்.

தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்யுங்கள் என்ற தெளிவான அனுமதி குர்ஆனில் இருந்தும், அது இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுக்குச் சுட்டிக் காட்டப்பட்டும், சொந்த ஊகத்தின் அடிப்படையில் அனுமதி மறுக்கின்றார்கள். இது எதைக் காட்டுகின்றது?

கொள்ளை நோய்

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். சர்க் எனும் இடத்தை அடைந்த போது, படைத் தளபதிகளான அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் உமர் (ரலி)யைச் சந்தித்து, ஷாம் நாட்டில் கொள்ளை நோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள், ஷாம் நாட்டிற்குப் போகலாமா? என்று ஆரம்ப கால முஹாஜிர்களை அழைத்துக் கருத்து கேட்ட போது முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சிலர் போகலாம் என்றும் சிலர் வேண்டாம் என்றும் பதிலளித்தார்கள். பிறகு அன்சாரிகளை அழைத்துக் கருத்து கேட்டார்கள். அவர்களிடமும் இது விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பிறகு மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப் பெரியவர்களை அழைத்து கருத்து கேட்டார்கள். அவர்கள் அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கருத்து வேறுபாடின்றி தெரிவித்தனர். ஆகவே உமர் (ரலி) அவர்கள் திரும்பிச் செல்வதென முடிவெடுத்தார்கள்.

அப்போது தமது தேவையொன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அங்கு வந்தார்கள். அவர்கள், இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு கொள்ளை நோய் ஏற்பட்டால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்' என்று சொல்ல நான் கேட்டேன்'' என்று கூறினார்கள். (சுருக்கம்)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி  5279

கொள்ளை நோய் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி நபித் தோழர்களை ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என்பவர்கள் உட்பட அனைவருக்கும் தெரியும். ஆனால்  உமர் (ரலி)க்கும், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோரில் பெரும்பாலானவர்களுக்கும் நீண்ட காலமாக தெரியாமல் இருந்துள்ளதை இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது.

அனுமதி கோருதல்

உமர் (ரலி) அவர்களிடம் அபூமூஸா (ரலி) வந்து உள்ளே வர அனுமதி கேட்டார். உமர் (ரலி) அலுவலில் ஈடுபட்டிருந்ததால் அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உடனேஅபூமூஸா (ரலி) திரும்பி விட்டார். அலுவலை முடித்த உமர் (ரலி), "அபூமூஸாவின் குரலை நான் கேட்டேனே! அவருக்கு அனுமதியளியுங்கள்'' என்றார்கள். "அவர் திரும்பிச் சென்று விட்டார்'' என்று கூறப்பட்டது. உடனே உமர் (ரலி), அபூமூஸா (ரலி)யை அழைத்து வரச் செய்தார்கள். (ஏன் திரும்பிச் சென்றீர் என்று கேட்ட போது), "இவ்வாறே நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம்'' என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், "இதற்குரிய சான்றை என்னிடம் நீர் கொண்டு வாரும்'' என்று கூறினார்கள்.

உடனே அபூமூஸா (ரலி) அன்சாரிகளின் சபைக்குச் சென்று அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், "நம்மில் இளையவரான அபூஸயீத் அல்குத்ரீயைத் தவிர வேறு யாரும் இந்த விஷயத்தில் சாட்சி சொல்ல மாட்டார்கள்'' என்று கூறினார்கள். அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)யை உமர் (ரலி)யிடம் அபூமூஸா (ரலி) அழைத்துச் சென்றார். (அபூஸயீத் அல்குத்ரீ சாட்சி கூறியதும்) உமர் (ரலி), "நபி (ஸல்) அவர்களின் இந்தக் கட்டளை எனக்குத் தெரியாமல் போய் விட்டதா? நபி (ஸல்) அவர்களின் காலத்தில் கடைவீதிகளில் சென்று வியாபாரம் செய்து கொண்டிருந்தது என் கவனத்தைத் திசை திருப்பி விட்டது போலும்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபைத் பின் உஸாமா, நூல்: புகாரி 2062, 6245

வியாபாரத்தில் கவனம் செலுத்தியதால் நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி தமக்குத் தெரியாமல் ஆகி விட்டது என்று உமர் (ரலி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்கள் அனைத்தையும் முக்கியமான நபித் தோழர்கள் கூட அறியாமல் இருந்தனர் என்பதும், அதற்கான காரணமும் இங்கே விளக்கப்படுகிறது.

நபிகள் நாயகத்தின் மரணம்

(நபி-ஸல் அவர்கள் இறந்த போது அவர்களின் உடலைப் பார்த்து விட்டு) அபூபக்ர் (ரலி) வெளியே வந்தார். அப்போது உமர் (ரலி) மக்களிடம் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும், அவரை உட்காருமாறு கூறினார். உமர் (ரலி) உட்கார மறுத்ததும், மீண்டும் உட்காருமாறு கூறினார். உமர் (ரலி) மீண்டும் மறுக்கவே, அபூபக்ர் (ரலி) இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார். உடனே மக்கள் உமர் (ரலி)யிடமிருந்து அபூபக்ர் (ரலி)யிடம் திரும்பினர்.

அப்போது அபூபக்ர் (ரலி), "உங்களில் யார் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும். நிச்சயமாக முஹம்மது இறந்து விட்டார். யார் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும். நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன். மரணிக்கவே மாட்டான். மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான். (அல்குர்ஆன் 3:144)'' என்று கூறினார்.

அல்லாஹ்வின் மீதாணையாக, அபூபக்ர் (ரலி) இவ்வசனத்தை ஓதிக் காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போலவும் அபூபக்ர் (ரலி) மூலமாகத் தான் இதையவர்கள் அறிந்து கொண்டார்கள் என்பதைப் போலவும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதை ஓதிக் கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1242,3670

நபி (ஸல்) அவர்கள் மரணித்ததைக் கூட ஏற்றுக் கொள்ளாமல் உமர் (ரலி) உள்ளிட்ட பல்வேறு நபித்தோழர்கள் மறுத்துள்ளனர். குர்ஆனில் உள்ள ஒரு விஷயம், நபித் தோழர்களுக்குத் தெரியாமல் இருந்ததை இந்தச் சம்பவம் உணர்த்துகின்றது. அபூபக்ர் (ரலி) அவர்கள் சுட்டிக் காட்டியதால் நபித் தோழர்கள் உண்மையை விளங்கிக் கொண்டனர். இது போன்று சுட்டிக் காட்டப்படாத எத்தனையோ விஷயங்கள் நடந்துள்ளன.

முத்தலாக்

நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்திலும் உமர் (ரலி) அவர்களின் முதல் இரண்டு ஆண்டு காலத்திலும் முத்தலாக் என்பது ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்தது.  உமர் (ரலி) அவர்கள், "நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு விஷயத்தில் மக்கள் அவசரப்படுகின்றனர்.  அவர்கள் மீது நாம் சட்டமாக்கி விட்டால் (என்ன செய்வார்கள்?)'' என்று கூறி சட்டமாக்கி விட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : முஸ்லிம் 2689

முத்தலாக் என்று கூறினால் அதை நபி (ஸல்) அவர்கள் ஒரு தலாக்காகவே எடுத்திருக்கின்றார்கள் என்று தெளிவாகக் கூறப்பட்ட பின்னரும் தெரிந்தே உமர் (ரலி) அவர்கள் அதற்கு மாற்றமாக சட்டம் இயற்றியுள்ளனர்.

இன்னும் சில...

மு தொழுகையில் ருகூவின் போது கைகளைத் தொடைகளுக்கு இடையில் வைக்க வேண்டும் என்ற சட்டம் முன்னர் நடைமுறையில் இருந்தது. பின்னர் இரு கைகளால் முட்டுக் கால்களைப் பிடிக்க வேண்டும் என்று மாற்றப்பட்டது. அனைத்து ஸஹாபாக்களுக்கும் தெரிந்த, அன்றாடக் கடமைகளில் ஒன்றான இந்தச் சட்டம் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுக்குத் தெரியவில்லை. தாமும் ருகூவில் கைகளை முட்டுக் கால்களுக்கு இடையில் வைத்ததோடு, அடுத்தவரையும் அவ்வாறு செய்யத் தூண்டுகின்றார்கள்.

(பார்க்க முஸ்லிம் 831)

மு ஒரு மாதம் 2 மாதம் என்று குறுகிய காலம் ஒப்பந்தம் செய்து திருமணம் முடிக்கும் வாடகை மனைவி முறை கைபர் போரின் போது தடுக்கப்பட்டதை அனைவரும் அறிவோம். ஆனால் இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் இறக்கும் வரை இது தடுக்கப்படவில்லை என்று கூறிக் கொண்டிருந்தனர்.

(பார்க்க புகாரி 4518)

மு மைமூனா (ரலி) தம்மை நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமின் போது திருமணம் செய்தனர் என்ற செய்தியை மறுத்துள்ள போதும், நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமின் போது தான் மணம் முடித்தார்கள் என்று மைமூனாவின் சகோதரி மகன் இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகின்றார்கள்.

(பார்க்க புகாரி 1837)

மு நபி (ஸல்) அவர்கள் லுஹா தொழுததாக ஏராளமான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இருந்தும், ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் லுஹா தொழுததேயில்லை என்று மறுத்துள்ளார்கள்.

(பார்க்க புகாரி 1128, 1177)

மு இப்னு உமர் (ரலி) அவர்களும் லுஹா தொழுகை தொழுததில்லை என்று கூறும் செய்தி புகாரி 1175ல் உள்ளது.

மு குர்ஆனில் 114 சூராக்கள் உள்ளன என்பதில் உலகில் எந்த முஸ்லிமுக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் 113, 114 ஆகிய சூராக்கள் குர்ஆனில் இல்லை என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் மறுத்த செய்தி அஹ்மத் 20244, 20246 ஆகிய இடங்களில் பதிவாகியுள்ளது.

மு நீங்கள் ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டு காஃபிர்களாகி விடாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருந்தும், உஸ்மான் (ரலி) கொலை, ஒட்டகப் போர், சிஃப்பீன் போர் என நபித் தோழர்கள் ஒருவருக்கு எதிராக மற்றவர் ஆயுதம் தூக்கியுள்ளார்கள்.

இப்படி எண்ணற்ற சான்றுகள் ஹதீஸ் நூற்களில் நிறைந்து காணப்படுகின்றன. இந்தச் செய்திகள் எதைக் காட்டுகின்றன?

நபித்தோழர்களும் மனிதர்கள் தான், அவர்களிடமும் தவறுகள் ஏற்படும் என்பதை இந்தச் செய்திகள் தெளிவாகத் தெரிவிக்கின்றன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூட, தமது தோழர்களில் சிலர் மார்க்கத்தை மாற்றி விடுவார்கள் என்பதைக் கூறி விட்டுச் சென்றுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது, "நீங்கள் அல்லாஹ்விடம் வெறுங்காலுடையவர்களாக, உடையணியாதவர்களாக, விருத்த சேதனம் செய்யபடாதவர்களாக மறுமையில் எழுப்பப்படுவீர்கள்'' என்று கூறிவிட்டு, "முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்'' என்ற (21:104) இறைவசனத்தை ஓதினார்கள். பிறகு மறுமை நாளில் உடையணிவிக்கப்படும் முதல் மனிதர் இப்ராஹீம் (நபி) அவர்கள் தாம். அறிந்து கொள்ளுங்கள். என்னுடைய சமுதாயத்தாரில் சில பேர் கொண்டு வரப்பட்டு அவர்கள் இடப்பக்கம் (நரகத்திற்கு) கொண்டு செல்லப்படுவர்.

அப்போது நான், "என் இறைவா, என் தோழர்கள்'' என்று சொல்வேன். அதற்கு, "இவர்கள் உங்களுக்குப் பிறகு என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது'' என்று சொல்லப்படும். அப்போது நான் நல்லடியார் ஈஸா (அலை) அவர்கள் கூறியது போல், "நான் அவர்களிடையே இருந்தவரை நான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னை அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களைக் கண்காணிப்பவன் ஆகி விட்டாய்'' என்று பதிலளிப்பேன். அதற்கு, "இவர்களை நீங்கள் பிரிந்து வந்ததிலிருந்து இவர்கள் தங்கள் குதிகால்களின் வழியே தம் மார்க்கத்திலிருந்து விலகிச் சென்று கொண்டேயிருந்தார்கள்'' என்று கூறப்படும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),

நூல்: புகாரி 4740, 6524

குர்ஆன், ஹதீஸை மட்டுமே பின்பற்ற வேண்டும், நபித் தோழர்களைப் பின்பற்றக் கூடாது என்பதைப் புரிந்து கொள்ள இவையே போதுமான ஆதாரங்களாகும்.

திருக்குர்ஆனும், நபிவழியும் அல்லாத வேறு எதையும் பின்பற்றக் கூடாது என்பதை நாம் இன்றைக்குச் சொல்லவில்லை. 20 வருடங்களுக்கு மேலாக இதைத் தான் நாம் கூறி வருகிறோம். ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் கொடுக்கத் தேவையில்லை என்பதை நிலை நாட்டுவதற்காக இந்த நிலைபாட்டை நாம் எடுக்கவில்லை.

ஆனால் குர்ஆன், ஹதீஸைத் தவிர வேறு எதையும் பின்பற்றக் கூடாது என்று கூறி வந்தவர்கள் கூட ஜகாத் விஷயத்தில் குர்ஆன், ஹதீஸில் தங்களுக்கு ஆதாரமில்லாததால் நபித் தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற புதிய ஏற்பாட்டைக் கையில் எடுத்துள்ளனர்.

இறுதியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் எச்சரிக்கை ஒன்றை மட்டும் கூறி முடித்துக் கொள்கிறோம்.

மக்களே! நான் உங்களிடம் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கின்றேன்.  அதைப் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் ஒரு போதும் வழி தவற மாட்டீர்கள்.  1. அல்லாஹ்வின் வேதம்                  2.  அவனது தூதரின் வழிமுறை என்று நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜில் ஆற்றிய பேருரையில் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


நூல்: ஹாகிம் 318


EGATHUVAM SEP 2005