Mar 30, 2017

ஸஹாபாக்களைப் பின்பற்றலாமா?

ஸஹாபாக்களைப் பின்பற்றலாமா?

ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் ஏதும் இல்லை என்பதைத் தக்க சான்றுகளுடன் கண்டோம்.

இதற்கு மறுப்பு கூற முடியாதவர்கள், "நபிவழியில் ஆதாரம் இல்லாவிட்டாலும் சில நபித் தோழர்களின் கூற்றும் செயல் விளக்கமும் ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தைத் தருகின்றன'' என்று வாதிடுகின்றனர்.

முஸ்லிம்கள் வஹீயை (இறைச் செய்தியை) மட்டுமே ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என்பதையும், வஹீ இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொந்த அபிப்ராயமாகக் கூறியதை, செய்ததைக் கூட மார்க்கமாகச் செய்ய வேண்யதில்லை என்பதையும் விளங்காத காரணத்தால் நபித் தோழர்களின் கூற்றை ஏற்க வேண்டும் என்று கூறி இஸ்லாத்தின் மூல ஆதாரத்தை மாற்றி அமைக்கின்றனர்.

வஹீ இல்லாமல் தேனை நபி (ஸல்) அவர்கள் ஹராமாக்கியதையும், வஹீ இல்லாமல் மகரந்தச் சேர்க்கையை மறுத்ததையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொல், செயலைக் கூட வஹீ என்றும் வஹீ இல்லாதது என்றும் பிரித்துக் காட்டிய பின்னரும், வஹீயைப் பெறாத நபித் தோழர்களின் கூற்றைப் பின்பற்ற வேண்டும் என்று சிலர் வாதிடுவது நமக்கு வியப்பாக இருக்கின்றது.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!

(அல்குர்ஆன் 7:3)

என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 2:38)

(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக!

(அல்குர்ஆன் 6:106)

அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது "செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்'' என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

(அல்குர்ஆன்  24:51)

"அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்!'' என கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப் பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர் வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை.

(அல்குர்ஆன் 24:54)

"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங் களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 3:31)

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) கோழைகளாவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும். சகித்துக் கொள்ளுங்கள்! சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்.

(அல்குர்ஆன் 8:46)

இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரு) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.

(அல்குர்ஆன் 6:153)

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண் பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத் தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.

(அல்குர்ஆன் 4:59)

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.

(அல்குர்ஆன் 33:36)

எனக்கே அஞ்சுங்கள்! இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.

(அல்குர்ஆன் 5:3)

இந்த வசனங்கள் யாவும் இறைச் செய்தியை, குர்ஆனையும் நபிவழியையும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

இவ்வாறு நாம் கூறும் போது ஸஹாபாக்களை மதிக்காத, திட்டுகின்ற கூட்டம் என்று நமக்கு எதிராக மக்களைத் தூண்டி விடுகின்றார்கள்.

நபித்தோழர்கள் சிறப்பு மிக்கவர்கள், நம்மை விட ஈமானில் சிறந்தவர்கள் என்றெல்லாம் வரக்கூடிய விஷயங்களில் நமக்கு மாற்றுக்கருத்தில்லை. இதற்கு ஏராளமான குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் உள்ளன.

என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில் உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தைச் செலவு செய்தாலும் அவர்கள் செலவு செய்த இரு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட அந்தத் தர்மம் எட்டாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 3673

மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். பிறகு (சிறந்தவர்கள்) அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுசைன் (ரலி)

நூல்: புகாரி 2651

அல்லாஹ்வும் தன் திருமறையில் நபித்தோழர்களைப் புகழ்ந்து கூறுகின்றான்.

ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.

(அல்குர்ஆன் 9:100)

இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தோரையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான கால கட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களை மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுடையோன்.

(அல்குர்ஆன் 9:117)

உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாக மாட்டார்கள். அவர்கள் பின்னர் செலவிட்டு போரிட்டவர்களை விட மகத்தான பதவியுடையவர்கள்.

(அல்குர்ஆன் 57:10)

இத்தகைய சிறப்புகள் நபித்தோழர்களுக்கு இருப்பதை நாம் எப்போதுமே மறுத்ததில்லை. நபித்தோழர்களின் சிறப்புகளைச் சீண்டிப் பார்க்கும் ஷியாக்களையும் அவர்களுக்கு தமிழகத்தில் ஆதரவளிக்கும் இயக்கங்களையும் அடையாளம் காட்டி அவர்களது முகத்திரையைக் கிழிக்காமல் நாம் விட்டதில்லை.

ஆனால் அதே சமயம் இத்தனை சிறப்புகள் உள்ளதால் நபித்தோழர்களின் கருத்துக்களை மார்க்கமாகக் கருதும் எந்தவொரு செயல்பாட்டையும் ஏற்றுக் கொள்ள முடியாது. குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டும் தான் மார்க்கத்தின் ஆதாரங்கள். நபித்தோழர்கள் சிறந்தவர்கள் தான் என்றாலும் அவர்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது. அவர்களிடமும் தவறுகள் ஏற்படத் தான் செய்யும்.

இதை நாம் கற்பனையாகக் கூறவில்லை.

சில நபித் தோழர்களின் கருத்துக்களும் செயல்களும் குர்ஆன், ஹதீசுக்கு மாற்றமாக இருந்துள்ளன.

பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் அவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளன.

குர்ஆன், ஹதீஸில் இல்லாத சில விஷயங்களை அவர்களாக உருவாக்கினார்கள்.

என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. எனவே தான் குர்ஆனையும் நபிவழியையும் தவிர வேறு எதையும் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது என்று கூறுகிறோம்.

குர்ஆன், ஹதீசுக்கு மாற்றமாக ஒன்றல்ல, இரண்டல்ல. பல்வேறு விஷயங்களில் ஸஹாபாக்கள் கருத்து கூறியுள்ளார்கள் என்பது தான் உண்மை நிலையாகும்.

தமத்துஃ ஹஜ்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமத்துஃ ஹஜ் செய்ய அனுமதித்துள்ளார்கள். ஆனால் உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோர் இதைத் தடுத்துள்ளார்கள்.

நான் உஸ்மான் (ரலி) உடனும், அலீ (ரலி) உடனும் ஹஜ் செய்துள்ளேன்.  உஸ்மான் (ரலி) அவர்கள் ஹஜ், உம்ரா இரண்டையும் சேர்த்து (கிரான்) செய்வதையும், உம்ரா முடித்து ஹஜ் (தமத்துஉ) செய்வதையும் தடுத்தார்கள்.  இதைக் கண்ட அலீ (ரலி) ஹஜ், உம்ரா இரண்டிற்கும் இஹ்ராம் அணிந்து, "லப்பைக்க பி உம்ரதின் வஹஜ்ஜதின்'' என்று கூறிவிட்டு, "நபி (ஸல்) அவர்களுடைய வழிமுறையை யாருடைய சொல்லிற்காகவும் நான் விட்டு விட மாட்டேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : மர்வான் பின் ஹகம்

நூல் : புகாரி 1563

ஹஜ் மாதத்தில் உம்ராவை முடித்து இஹ்ராமைக் களைந்து ஹஜ்ஜுக்காக தனியாக இஹ்ராம் கட்டுவது பற்றி அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) இடம் ஷாம் நாட்டைச் சேர்ந்த மனிதர் கேட்டார்.  அதற்கு அவர், "அது அனுமதிக்கப்பட்டதே!'' என்று கூறினார். அதற்கு ஷாம் நாட்டைச் சேர்ந்த அம்மனிதர், "உங்கள் தந்தை (உமர்) அதைத் தடை செய்திருக்கின்றாரே!'' என்று கூறினார். அதற்கு இப்னு உமர் (ரலி), "என் தந்தை ஒரு காரியத்தைத் தடுத்து அதை நபி (ஸல்) அவர்கள் செய்திருந்தால் அப்போது என் தந்தையின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா? அல்லது நபி (ஸல்) அவர்களின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா?'' என்று கேட்டார்.  அதற்கு அம்மனிதர், "நபி (ஸல்) அவர்களின் கட்டளையைத் தான் பின்பற்ற வேண்டும்'' என்றார்.  அப்போது இப்னு உமர் (ரலி), "நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துள்ளார்கள்'' என்று விடையளித்தார்.

அறிவிப்பவர் : ஸாலிம்

நூல் : திர்மிதீ (753)

தமத்துஃ ஹஜ் என்ற ஒரு ஹஜ் முறை இருப்பதை இன்றைக்குக் கூட, நபித் தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள் உட்பட அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகிய மிகப் பெரிய நபித் தோழர்களுக்கு இது தெரியாமல் இருந்துள்ளது. இது ஏன்?

குளிப்பு எப்போது கடமை?

நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தமது மனைவியிடம் உடலுறவு கொண்ட பின்னரும் இந்திரியம் வெளியாகாமல் இருந்தால் அவர் மீது குளிப்பு கடமையாகுமா?'' என்று கேட்டேன்.  அதற்கு "மனைவியிடமிருந்து பட்ட இடத்தைக் கழுவ வேண்டும்.  பின்னர் உளூச் செய்து தொழுது கொள்ளலாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உபை பின் கஅப் (ரலி)

நூல் : புகாரி 293

உடலுறவு கொண்ட பின்னர் இந்திரியம் வெளியாகாவிட்டால் குளிப்பு கடமை இல்லை என்பது நபி (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் இட்ட கட்டளையாகும்.  பின்னர் இச்சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் மாற்றி விட்டார்கள்.

"பெண்ணுறுப்பை ஆணுறுப்பு கடந்து விட்டால் குளிப்பு கடமையாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல்கள் : முஸ்லிம் 526, திர்மிதீ 102

இவ்வாறு மாற்றிய விஷயம் நபித் தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுபவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் உஸ்மான் (ரலி) அவர்கள், இந்திரியம் வெளியாகாவிட்டால் குளிப்பு கடமையில்லை என்று கூறியுள்ளார்கள்.

ஒருவர் உடலுறவு கொண்டு விட்டு இந்திரியம் வெளியாகவில்லையானால் அவருடைய சட்டம் என்ன? என்று நான் உஸ்மான் (ரலி)யிடம் கேட்டேன். அதற்கு, அவர் தமது ஆண்குறியைக் கழுவி விட்டு, தொழுகைக்கு உளூச் செய்வது போன்று செய்ய வேண்டும். இதை நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன் என உஸ்மான் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் (ரலி)

நூல்: புகாரி 179, 292

 மாற்றப்பட்ட இந்தச் சட்டம் உஸ்மான் (ரலி) அவர்களுக்குத் தெரியாமல் போனது ஏன்?

குளிப்புக்காக தயம்மம்

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அபூமூஸல் அஷ்அரி (ரலி) ஆகியோருடன் நானும் இருந்தேன். அப்போது அபூமூஸா (ரலி), அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)யிடம், "அபூ அப்திர்ரஹ்மானே! குளிப்பு கடமையான ஒருவர் தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார். "தண்ணீர் கிடைக்கும் வரை அவர் தொழ வேண்டியதில்லை'' என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறினார். அதற்கு அபூமூஸா (ரலி), "நபி (ஸல்) அவர்கள், "தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்தால் போதுமானது' என்று அம்மார் பின் யாஸிரிடத்தில் சொன்ன செய்தியை நீர் என்ன செய்வீர்?'' என்று கேட்டார். அதற்கு, "(இச்செய்தியை அம்மார் (ரலி) உமர் (ரலி)யிடம் கூறியபோது) அதை உமர் (ரலி) ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உமக்குத் தெரியாதா?'' என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) பதில் கூறினார்.

"அம்மார் அறிவிப்பதை விட்டு விடுங்கள். "தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து கொள்ளுங்கள்' என்ற இறைவசனத்தை என்ன செய்வீர்கள்?'' என்று அபூமூஸா (ரலி) கேட்டார். அதற்கு, "இந்த விஷயத்தில் நாம் அவர்களுக்கு அனுமதி வழங்கி விட்டால் யாருக்காவது கொஞ்சம் குளிராகத் தெரிந்தால் அதில் உளூச் செய்வதை விட்டு விட்டு தயம்மும் செய்து விடுவார்கள்'' என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) தாம் சொல்லக் கூடிய இந்த வார்த்தையின் விபரீதத்தைப் புரியாமலேயே சொல்லி விட்டார்கள்.

அறிவிப்பவர்: ஷகீக் பின் ஸலமா

நூல்: 346, 347

குளிப்பு கடமையானவர் தண்ணீர் இல்லையானால் தயம்மும் செய்து விட்டுத் தொழலாம் என்பது தெரிந்திருந்தும் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் தயம்மும் செய்து தொழக் கூடாது என்று கூறுகின்றார்கள்.

தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்யுங்கள் என்ற தெளிவான அனுமதி குர்ஆனில் இருந்தும், அது இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுக்குச் சுட்டிக் காட்டப்பட்டும், சொந்த ஊகத்தின் அடிப்படையில் அனுமதி மறுக்கின்றார்கள். இது எதைக் காட்டுகின்றது?

கொள்ளை நோய்

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். சர்க் எனும் இடத்தை அடைந்த போது, படைத் தளபதிகளான அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் உமர் (ரலி)யைச் சந்தித்து, ஷாம் நாட்டில் கொள்ளை நோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள், ஷாம் நாட்டிற்குப் போகலாமா? என்று ஆரம்ப கால முஹாஜிர்களை அழைத்துக் கருத்து கேட்ட போது முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சிலர் போகலாம் என்றும் சிலர் வேண்டாம் என்றும் பதிலளித்தார்கள். பிறகு அன்சாரிகளை அழைத்துக் கருத்து கேட்டார்கள். அவர்களிடமும் இது விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பிறகு மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப் பெரியவர்களை அழைத்து கருத்து கேட்டார்கள். அவர்கள் அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கருத்து வேறுபாடின்றி தெரிவித்தனர். ஆகவே உமர் (ரலி) அவர்கள் திரும்பிச் செல்வதென முடிவெடுத்தார்கள்.

அப்போது தமது தேவையொன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அங்கு வந்தார்கள். அவர்கள், இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு கொள்ளை நோய் ஏற்பட்டால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்' என்று சொல்ல நான் கேட்டேன்'' என்று கூறினார்கள். (சுருக்கம்)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி  5279

கொள்ளை நோய் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி நபித் தோழர்களை ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என்பவர்கள் உட்பட அனைவருக்கும் தெரியும். ஆனால்  உமர் (ரலி)க்கும், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோரில் பெரும்பாலானவர்களுக்கும் நீண்ட காலமாக தெரியாமல் இருந்துள்ளதை இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது.

அனுமதி கோருதல்

உமர் (ரலி) அவர்களிடம் அபூமூஸா (ரலி) வந்து உள்ளே வர அனுமதி கேட்டார். உமர் (ரலி) அலுவலில் ஈடுபட்டிருந்ததால் அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உடனேஅபூமூஸா (ரலி) திரும்பி விட்டார். அலுவலை முடித்த உமர் (ரலி), "அபூமூஸாவின் குரலை நான் கேட்டேனே! அவருக்கு அனுமதியளியுங்கள்'' என்றார்கள். "அவர் திரும்பிச் சென்று விட்டார்'' என்று கூறப்பட்டது. உடனே உமர் (ரலி), அபூமூஸா (ரலி)யை அழைத்து வரச் செய்தார்கள். (ஏன் திரும்பிச் சென்றீர் என்று கேட்ட போது), "இவ்வாறே நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம்'' என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், "இதற்குரிய சான்றை என்னிடம் நீர் கொண்டு வாரும்'' என்று கூறினார்கள்.

உடனே அபூமூஸா (ரலி) அன்சாரிகளின் சபைக்குச் சென்று அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், "நம்மில் இளையவரான அபூஸயீத் அல்குத்ரீயைத் தவிர வேறு யாரும் இந்த விஷயத்தில் சாட்சி சொல்ல மாட்டார்கள்'' என்று கூறினார்கள். அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)யை உமர் (ரலி)யிடம் அபூமூஸா (ரலி) அழைத்துச் சென்றார். (அபூஸயீத் அல்குத்ரீ சாட்சி கூறியதும்) உமர் (ரலி), "நபி (ஸல்) அவர்களின் இந்தக் கட்டளை எனக்குத் தெரியாமல் போய் விட்டதா? நபி (ஸல்) அவர்களின் காலத்தில் கடைவீதிகளில் சென்று வியாபாரம் செய்து கொண்டிருந்தது என் கவனத்தைத் திசை திருப்பி விட்டது போலும்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபைத் பின் உஸாமா, நூல்: புகாரி 2062, 6245

வியாபாரத்தில் கவனம் செலுத்தியதால் நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி தமக்குத் தெரியாமல் ஆகி விட்டது என்று உமர் (ரலி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்கள் அனைத்தையும் முக்கியமான நபித் தோழர்கள் கூட அறியாமல் இருந்தனர் என்பதும், அதற்கான காரணமும் இங்கே விளக்கப்படுகிறது.

நபிகள் நாயகத்தின் மரணம்

(நபி-ஸல் அவர்கள் இறந்த போது அவர்களின் உடலைப் பார்த்து விட்டு) அபூபக்ர் (ரலி) வெளியே வந்தார். அப்போது உமர் (ரலி) மக்களிடம் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும், அவரை உட்காருமாறு கூறினார். உமர் (ரலி) உட்கார மறுத்ததும், மீண்டும் உட்காருமாறு கூறினார். உமர் (ரலி) மீண்டும் மறுக்கவே, அபூபக்ர் (ரலி) இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார். உடனே மக்கள் உமர் (ரலி)யிடமிருந்து அபூபக்ர் (ரலி)யிடம் திரும்பினர்.

அப்போது அபூபக்ர் (ரலி), "உங்களில் யார் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும். நிச்சயமாக முஹம்மது இறந்து விட்டார். யார் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும். நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன். மரணிக்கவே மாட்டான். மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான். (அல்குர்ஆன் 3:144)'' என்று கூறினார்.

அல்லாஹ்வின் மீதாணையாக, அபூபக்ர் (ரலி) இவ்வசனத்தை ஓதிக் காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போலவும் அபூபக்ர் (ரலி) மூலமாகத் தான் இதையவர்கள் அறிந்து கொண்டார்கள் என்பதைப் போலவும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதை ஓதிக் கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1242,3670

நபி (ஸல்) அவர்கள் மரணித்ததைக் கூட ஏற்றுக் கொள்ளாமல் உமர் (ரலி) உள்ளிட்ட பல்வேறு நபித்தோழர்கள் மறுத்துள்ளனர். குர்ஆனில் உள்ள ஒரு விஷயம், நபித் தோழர்களுக்குத் தெரியாமல் இருந்ததை இந்தச் சம்பவம் உணர்த்துகின்றது. அபூபக்ர் (ரலி) அவர்கள் சுட்டிக் காட்டியதால் நபித் தோழர்கள் உண்மையை விளங்கிக் கொண்டனர். இது போன்று சுட்டிக் காட்டப்படாத எத்தனையோ விஷயங்கள் நடந்துள்ளன.

முத்தலாக்

நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்திலும் உமர் (ரலி) அவர்களின் முதல் இரண்டு ஆண்டு காலத்திலும் முத்தலாக் என்பது ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்தது.  உமர் (ரலி) அவர்கள், "நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு விஷயத்தில் மக்கள் அவசரப்படுகின்றனர்.  அவர்கள் மீது நாம் சட்டமாக்கி விட்டால் (என்ன செய்வார்கள்?)'' என்று கூறி சட்டமாக்கி விட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : முஸ்லிம் 2689

முத்தலாக் என்று கூறினால் அதை நபி (ஸல்) அவர்கள் ஒரு தலாக்காகவே எடுத்திருக்கின்றார்கள் என்று தெளிவாகக் கூறப்பட்ட பின்னரும் தெரிந்தே உமர் (ரலி) அவர்கள் அதற்கு மாற்றமாக சட்டம் இயற்றியுள்ளனர்.

இன்னும் சில...

மு தொழுகையில் ருகூவின் போது கைகளைத் தொடைகளுக்கு இடையில் வைக்க வேண்டும் என்ற சட்டம் முன்னர் நடைமுறையில் இருந்தது. பின்னர் இரு கைகளால் முட்டுக் கால்களைப் பிடிக்க வேண்டும் என்று மாற்றப்பட்டது. அனைத்து ஸஹாபாக்களுக்கும் தெரிந்த, அன்றாடக் கடமைகளில் ஒன்றான இந்தச் சட்டம் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுக்குத் தெரியவில்லை. தாமும் ருகூவில் கைகளை முட்டுக் கால்களுக்கு இடையில் வைத்ததோடு, அடுத்தவரையும் அவ்வாறு செய்யத் தூண்டுகின்றார்கள்.

(பார்க்க முஸ்லிம் 831)

மு ஒரு மாதம் 2 மாதம் என்று குறுகிய காலம் ஒப்பந்தம் செய்து திருமணம் முடிக்கும் வாடகை மனைவி முறை கைபர் போரின் போது தடுக்கப்பட்டதை அனைவரும் அறிவோம். ஆனால் இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் இறக்கும் வரை இது தடுக்கப்படவில்லை என்று கூறிக் கொண்டிருந்தனர்.

(பார்க்க புகாரி 4518)

மு மைமூனா (ரலி) தம்மை நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமின் போது திருமணம் செய்தனர் என்ற செய்தியை மறுத்துள்ள போதும், நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமின் போது தான் மணம் முடித்தார்கள் என்று மைமூனாவின் சகோதரி மகன் இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகின்றார்கள்.

(பார்க்க புகாரி 1837)

மு நபி (ஸல்) அவர்கள் லுஹா தொழுததாக ஏராளமான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இருந்தும், ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் லுஹா தொழுததேயில்லை என்று மறுத்துள்ளார்கள்.

(பார்க்க புகாரி 1128, 1177)

மு இப்னு உமர் (ரலி) அவர்களும் லுஹா தொழுகை தொழுததில்லை என்று கூறும் செய்தி புகாரி 1175ல் உள்ளது.

மு குர்ஆனில் 114 சூராக்கள் உள்ளன என்பதில் உலகில் எந்த முஸ்லிமுக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் 113, 114 ஆகிய சூராக்கள் குர்ஆனில் இல்லை என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் மறுத்த செய்தி அஹ்மத் 20244, 20246 ஆகிய இடங்களில் பதிவாகியுள்ளது.

மு நீங்கள் ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டு காஃபிர்களாகி விடாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருந்தும், உஸ்மான் (ரலி) கொலை, ஒட்டகப் போர், சிஃப்பீன் போர் என நபித் தோழர்கள் ஒருவருக்கு எதிராக மற்றவர் ஆயுதம் தூக்கியுள்ளார்கள்.

இப்படி எண்ணற்ற சான்றுகள் ஹதீஸ் நூற்களில் நிறைந்து காணப்படுகின்றன. இந்தச் செய்திகள் எதைக் காட்டுகின்றன?

நபித்தோழர்களும் மனிதர்கள் தான், அவர்களிடமும் தவறுகள் ஏற்படும் என்பதை இந்தச் செய்திகள் தெளிவாகத் தெரிவிக்கின்றன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூட, தமது தோழர்களில் சிலர் மார்க்கத்தை மாற்றி விடுவார்கள் என்பதைக் கூறி விட்டுச் சென்றுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது, "நீங்கள் அல்லாஹ்விடம் வெறுங்காலுடையவர்களாக, உடையணியாதவர்களாக, விருத்த சேதனம் செய்யபடாதவர்களாக மறுமையில் எழுப்பப்படுவீர்கள்'' என்று கூறிவிட்டு, "முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்'' என்ற (21:104) இறைவசனத்தை ஓதினார்கள். பிறகு மறுமை நாளில் உடையணிவிக்கப்படும் முதல் மனிதர் இப்ராஹீம் (நபி) அவர்கள் தாம். அறிந்து கொள்ளுங்கள். என்னுடைய சமுதாயத்தாரில் சில பேர் கொண்டு வரப்பட்டு அவர்கள் இடப்பக்கம் (நரகத்திற்கு) கொண்டு செல்லப்படுவர்.

அப்போது நான், "என் இறைவா, என் தோழர்கள்'' என்று சொல்வேன். அதற்கு, "இவர்கள் உங்களுக்குப் பிறகு என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது'' என்று சொல்லப்படும். அப்போது நான் நல்லடியார் ஈஸா (அலை) அவர்கள் கூறியது போல், "நான் அவர்களிடையே இருந்தவரை நான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னை அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களைக் கண்காணிப்பவன் ஆகி விட்டாய்'' என்று பதிலளிப்பேன். அதற்கு, "இவர்களை நீங்கள் பிரிந்து வந்ததிலிருந்து இவர்கள் தங்கள் குதிகால்களின் வழியே தம் மார்க்கத்திலிருந்து விலகிச் சென்று கொண்டேயிருந்தார்கள்'' என்று கூறப்படும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),

நூல்: புகாரி 4740, 6524

குர்ஆன், ஹதீஸை மட்டுமே பின்பற்ற வேண்டும், நபித் தோழர்களைப் பின்பற்றக் கூடாது என்பதைப் புரிந்து கொள்ள இவையே போதுமான ஆதாரங்களாகும்.

திருக்குர்ஆனும், நபிவழியும் அல்லாத வேறு எதையும் பின்பற்றக் கூடாது என்பதை நாம் இன்றைக்குச் சொல்லவில்லை. 20 வருடங்களுக்கு மேலாக இதைத் தான் நாம் கூறி வருகிறோம். ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் கொடுக்கத் தேவையில்லை என்பதை நிலை நாட்டுவதற்காக இந்த நிலைபாட்டை நாம் எடுக்கவில்லை.

ஆனால் குர்ஆன், ஹதீஸைத் தவிர வேறு எதையும் பின்பற்றக் கூடாது என்று கூறி வந்தவர்கள் கூட ஜகாத் விஷயத்தில் குர்ஆன், ஹதீஸில் தங்களுக்கு ஆதாரமில்லாததால் நபித் தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற புதிய ஏற்பாட்டைக் கையில் எடுத்துள்ளனர்.

இறுதியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் எச்சரிக்கை ஒன்றை மட்டும் கூறி முடித்துக் கொள்கிறோம்.

மக்களே! நான் உங்களிடம் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கின்றேன்.  அதைப் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் ஒரு போதும் வழி தவற மாட்டீர்கள்.  1. அல்லாஹ்வின் வேதம்                  2.  அவனது தூதரின் வழிமுறை என்று நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜில் ஆற்றிய பேருரையில் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: ஹாகிம் 318

EGATHUVAM SEP 2005