மதம் மாறுது ஒரு கூட்டம் மவுனம் காக்குது ஜாக்
1980களுக்கு முந்திய கால கட்டத்தில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களைத்
தவிர ஒட்டு மொத்த தமிழகமும் இணை வைப்பிலும், தக்லீது எனும் தனி மனித வழிபாட்டிலும் மூழ்கி இருண்டு கிடந்தது.
தர்ஹாக்களின் மினாராக்களில் ஷிர்க், கொடி கட்டிப் பறந்ததைப் போன்று, சமாதி கட்டுதல், அதை முத்தமிடுதல், சந்தனம் பூசுதல், பட்டுப் போர்வை போர்த்துதல், விளக்கேற்றுதல், மனிதர்களின் காலில் விழுந்து வணங்குதல் போன்ற இணை வைப்புக் கலாச்சாரமும்
கொடி கட்டிப் பறந்தன.
இந்நிலையில் மதீனாவில் போய் படிக்காத நம்முடைய ஆலிம்கள் பிரச்சாரத்தின்
மூலம் ஏகத்துவ வெளிச்சத்தைப் பாய்ச்சினர். இதை எதிர்த்து, அசத்தியத்தின் ஆலிம்கள் பிரச்சாரம் செய்யத் தலைப்பட்ட போது, நாம் அவர்களிடம் இவற்றுக்குரிய ஆதாரங்கள் எங்கே? என்ற கேள்விகளை எழுப்பினோம். அதற்கு அந்த அசத்திய ஆலிம்கள் மத்ஹபு
நூல்களைத் தான் ஆதாரமாகக் காட்டினர்.
"கப்ரு
வணக்கம் கூடாது என ஓர் இமாம் கூறியிருக்கின்றார்'' என்று நாம் கூறினால், "இன்னோர் இமாம் கூடும் என்று கூறுகின்றார்'' என்பதே அவர்களின் பதிலாக இருந்தது.
அப்போது தான் நமக்கு ஓர் உண்மை புலப்பட்டது. இவர்கள் குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டு எல்லைக் கோடுகளை மட்டும் வரையறைகளாகக் கொண்டு
நிற்காமல், நான்கு கலீபாக்கள், ஸஹாபாக்கள், நான்கு இமாம்கள், நல்லோர்கள், நாதாக்கள் என பல எல்லைக் கோடுகளைத் தங்கள் மூல ஆதாரங்களாகக்
கொண்டுள்ளனர். இது தான் அவர்களை அசத்தியப் பாதைக்குக் கொண்டு சென்றது என்ற உண்மை நமக்குத்
தெளிவானது.
இரண்டு தான் என்றும் அடிப்படை
அப்போது மத்ஹபு நூல்களைத் தோண்டினோம்; துளாவினோம். அந்நூல்களில் அப்பிக் கிடந்த அசிங்கங்களை - ஆபாசங்களை
மக்களுக்கு அடையாளம் காட்டி, இவை
அடிப்படைகளாக மட்டுமல்ல; அர்த்தமுள்ளவைகளாக்
கூட கிடையாது என்று கூறி மக்களின் சிந்தனைகளைக் கிளறி விட்டு, மத்ஹபு நூல்கள் மீதுள்ள மாயையை அப்புறப்படுத்தி அகற்றினோம்.
அதன் பின்னர் அல்குர்ஆன், ஹதீஸ் இரண்டை அடிப்படையாகக் கொண்டு ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன்
வல் ஹதீஸ் என்ற அமைப்பையும் கண்டோம். இந்த அமைப்பைக் காண்பதற்கு முன்னரும், கண்ட பின்னரும் பல விவாத அரங்குகளைச் சந்தித்தோம்.
கோட்டாற்று விவாதத்தில் அசத்தியத்திற்குக் கல்லறை கட்டினோம்.
கோவையில் காதியானிகளின் முகமூடியைக் கிழித்தெறிந்தோம். அன்று ஓடிய காதியானிகள் இன்று
வரை நம்மிடம் வாலாட்டவில்லை.
ஏன் இந்த விவாதங்கள்?
விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக!
அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! (அல்குர்ஆன் 16:125)
என்ற அல்லாஹ்வின் உத்தரவுப்படி விவாதப் போர் தொடுத்தோம்; வெற்றி கண்டோம்.
"கஃபா நிலைக்குமா?'' என்று கேட்ட கிறித்தவ அறிஞர் ஜெபமணியை,
"கப்ஸா நிலைக்குமா?'' என்று கேட்டு, வாதப் படிக்கட்டுகளில் சத்தியச் சாட்டைகள் கொண்டு உருட்டி எடுத்தோம்.
உருண்டு விழுந்து, சுருண்டு எழுந்து
ஓடியவர் தான். அவர் மட்டுமல்ல; அவர்
வெளியிட்ட பத்திரிகையும் ஒதுங்கி, ஒடுங்கிப்
போனது.
அல்லாஹ் கூறும் வாத அஸ்திரத்தைக் கையில் எடுத்த போது, அசத்தியக் கூட்டங்கள் ஆட்டம் கண்டன; ஓட்டம் பிடித்தன. இப்படி ஒரு வலுவான இயக்கம் தன் வேர்ப் பிடிப்புகளை
வளப்படுத்தவும் வலுப்படுத்தவும் வேண்டுமாயின் சமுதாயப் பிரச்சனைகளைக் கையில் எடுக்க
வேண்டும் என்று அந்த இயக்கத்தினரிடம் கூறிய போது, அவற்றைப் பணிவாகக் கோரிய போதும் அதை ஏற்க மறுத்தனர். குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அடுக்கடுக்கான சான்றுகளை முன் வைத்த போதும்
அவற்றை நிராகரித்தனர். பிடிவாதமாக ஒரு பிரிவுக்கு வழி வகுத்தனர்.
அல்லாஹ்வை விட்டு விட்டு, காஃபிர்களிடம் போய் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கேட்பதா? என்று நம்மைக் கேலி செய்தவர்கள் இன்று முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு
வேண்டும் என்று தாங்கள் நடத்தும் மாநாடு(?)களில் தீர்மானம் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்தச் சந்தர்ப்பவாதச்
சாக்கடையைப் பற்றி இங்கே நாம் சொல்ல வரவில்லை.
புது மத உதயம்
பல்வேறு பிரிவினரிடம் விவாதத்தில் களம் கண்டு, தூய இஸ்லாத்தை நிலை நாட்டிக் கொண்டிருக்கும் வேளையில், குர்ஆன் மட்டும் போதும் என்ற கோர சிந்தனையைக் கொண்ட ஒரு புது
மதம் தமிழகத்தில் தலை காட்டத் துவங்கியது.
அதன் தாக்கம் ஜாக்கினரிடம் அலை அலையான ஐயப்பாடுகளை ஏற்படுத்தியது.
இந்தப் புதிய சிந்தனைக்குப் போதிய விளக்கத்தை வழங்க ஜாக் தலைமை தவறியது. விளைவு, சொல்லி வைத்தாற் போல் ஜாக்கில் மேல் மட்டப் பொறுப்பு வகித்தவர்கள்
அதற்குப் பலியானார்கள்; அந்தப் புது
மதத்தில் புகுந்தனர்.
இப்படி ஒரு புதிய நச்சுக் கருநாகம் தலை தூக்கியவுடனேயே ஒரு விவாதத்திற்கு
அழைத்திருந்தால் அது தன் தலையைப் படுக்கப் போட்டிருக்கும்; அதன் விஷப் பற்கள் வீழ்த்தப்பட்டிருக்கும்.
விவாதம் செய்யக் கூடாது என்ற முடிவிலிருந்த ஜாக் தலைமை இந்தக்
கோரத் தீமையைக் கண்டு கொதிக்கவில்லை; கொந்தளிக்கவில்லை. தங்களது வாய்களுக்கு இறுக்கமான பூட்டுக்களைப்
போட்டுக் கொண்டது.
அழகிய விவாதம்
ஆனால் இதைக் கண்டு தவ்ஹீத் ஜமாஅத் வாளாவிருக்கவில்லை. போர் முனையில்
மின்னும் கூர் வாளாகக் களம் புகுந்தது. பல கட்டங்களில் பல்வேறு அமர்வுகளில் வாதப் பரிமாற்றங்கள்!
முடிவில் "குர்ஆன் மட்டும் போதும்'' என்ற விஷச் சிந்தனை முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது.
மீண்டும் அது துளிர் விடாமல் இருக்க அல்முபீனில், குர்ஆன் மட்டும் போதுமா? என்ற சிறப்பிதழும், அதன் பிறகு தொடர் கட்டுரைகளும் எழுதப்பட்டு அந்தச் சிந்தனைக்கு
முடிவு கட்டப்பட்டது. சென்னையில் இந்தச் சிந்தாந்தம் புறப்பட்ட வேகத்திலேயே செத்து
மடிந்தது.
ஆனால் அதை எதிர்த்து ஜாக் இது வரை எந்த வேலையையும் செய்யவில்லை.
ஜாக்கின் இந்த மவுன ராகம் இந்தப் புது மதத்தினருக்குப் புதுத் தெம்பைக் கொடுத்தது.
அதனால் தான் சென்னையில் களையெடுக்கப் பட்ட அந்தச் சிந்தாந்தம் கோட்டாற்றில் தலை தூக்கியது.
குர்ஆன் மட்டும் போதும் என்ற கோர சிந்தனையாளர்கள் கோட்டாரில் மூன்று நாட்கள் பயான்
என்ற பெயரில் கொள்ளியைக் கொளுத்தினர்.
அவர்கள் கொளுத்திய தீயின் வேக்காட்டில் ஒரு சில ஜாக்கினர் சிந்தனை
ரீதியாக வெந்து போயினர். "ஆஹா, என்ன அழகான கருத்துக்களை அள்ளித் தருகின்றனர்'' என்று "இச்' கொட்டி, அந்தப்
புது மதம் தழுவத் துடித்துள்ளனர்.
இந்நிலையில் இவர்களால் கத்துக் குட்டி என்று வர்ணிக்கப்பட்ட
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் "பொடியன்மார்கள்' அந்த நச்சு மேடைக்குச் சென்று கேள்வி கேட்டுள்ளனர். கேள்விக்
கணைகளுக்கு இங்கு அனுமதி இல்லை என்று அந்தப் புது மதத்தினர் மறுத்துள்ளனர். அப்படியானால்
விவாதத்திற்கு நாள் குறியுங்கள் என்றதும் ஆடிப் போய் ஓடி ஒளிந்துள்ளனர்.
இந்தக் கத்துக் குட்டிகள் வெளிப்படுத்திய அசாதாரண சத்தியத் துணிச்சலில்
அசத்தியவாதிகளின் சித்து வேலைகள் செத்து நீர்த்துப் போயின. இன்னும் அந்தப் பக்கம் சாயவிருந்த
ஜாக்கினரின் தொடர் வீழ்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டது. மூன்று நாள் கதா காலாட்சேபத்திற்கு
முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
மேதைகளின் மெத்தனப் போக்கு
பெண் வீட்டு விருந்துகளில் கலந்து கொண்டு வெளுத்துக் கட்டும்
பேச்சாளப் பெருந்தகைகள், மெத்தப் படித்த
மேதாவிகள் இது போன்ற தீமைகளைக் கண்டு கொள்ளாத மெத்தனப் போக்கில் உள்ளனர். குர்ஆன் மட்டும்
போதும் என்ற குருட்டுச் சிந்தனைக் கூட்டம் ஆள் பிடிக்கும் போது ஜாக் தலைவர்கள் அமைதியாகக்
குறட்டை விடுகின்றனர்.
"பாருங்கள்! பொடியன்மார்கள் அவர்களிடம் போய் ஒரு பிடி பிடித்து
விட்டு வந்திருக்கின்றனர்; ஆனால் இவர்கள்
வாய் மூடிக் கிடக்கின்றனர்'' என்று மக்கள்
பேசத் துவங்கியதும், "அஹ்லெ
குர்ஆன் என்று ஐந்து பேர் இருக்கின்றனர்; அவர்களிடம் போய் விவாதம் செய்ய வேண்டுமா?'' என்று ஜாக்கினர் வேதாந்தம் பேசுகின்றனர்.
"ஹதீஸ்களை எல்லாம் குப்பையில் கொண்டு போய் போடு!'' என்று கபூர் என்பவரின் கொடூர வார்த்தைகள் ஜாக்கினரின் குருதியைச்
சூடேற்றவில்லை. ஆனால் கொதித்துப் போய் இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்பவர்களின் சூட்டைத்
தணிக்கும் விதமாக சால்ஜாப்பு சொல்லி சமாதானப்படுத்தும் சூட்சுமத்தைத் தான் இது வரை
ஜாக்கினர் கையாள்கின்றனர்.
நாம் என்னவோ எல்லோரையும் ஜட்டி போட்டுக் கொண்டு தான் தொழ வர
வேண்டும் என்று சொன்னதாகக் கற்பனை செய்து கொண்டு நம் விஷயத்தில் இவர்கள் இரத்தம் கொதித்து, வானத்திற்கும் பூமிக்கும் குதித்து, பேச்சிலும் எழுத்திலும் நம்மைத் திட்டித் தீர்ப்பது போல் கபூர்
என்பரின் குருட்டுச் சிந்தனையைக் கண்டித்து வார்த்தைகளைக் கொட்டக் காணோம்; திட்டக் காணோம். கபூர் என்பவர் காசுள்ள ஆசாமி என்பதாலோ என்னவோ
இந்த மவுன விரதம்.
இதற்கெல்லாம் காரணம், எவரையும் விவாதக் களத்தில் சந்திக்கத் திராணியற்று இருப்பது
தான். அசத்தியத்திற்கு எதிராக அல்லாஹ் அளித்திருக்கும் இந்த ஆயுதத்தைத் தாங்கவில்லை
என்றால் நாமும் குறட்டை விட்டுத் தூங்க வேண்டியது தான்; கொள்கையில் கோட்டை விட வேண்டியது தான்.
எனவே குமரி முனையில் எழுந்த இந்தத் தீமை எங்கு எழுந்தாலும் அதற்கு
எதிராகப் பொங்கி எழுவோமாக! குர்ஆன் மட்டும் போதும் என்று கூறி, இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றை நீக்கி விடாமலும், ஸஹாபாக்கள், இமாம்கள், நாதாக்கள்
என்று கூறி இஸ்லாத்தின் மூல ஆதாரத்தை நீட்டி விடாமலும் நமது சத்தியப் பயணத்தைத் தொடர்வோமாக!
EGATHUVAM OCT 2005