Mar 21, 2017

ஏகத்துவ எழுச்சியும் நல்லொழுக்கப் பயிற்சியும்

ஏகத்துவ எழுச்சியும் நல்லொழுக்கப் பயிற்சியும்

1980க்குப் பிந்தைய ஆண்டுகளில் தவ்ஹீது எனும் ஏகத்துவ மரத்திற்கு வித்திடப் பட்டது. முளையிலேயே அதைக் கிள்ளி விட வேண்டும் என்று முயற்சி செய்தவர்களின் முனைப்பான வேலைகளையெல்லாம் தாண்டி பசுமரமாக இன்று தளைத்து விட்டது. இப்போதும் பட்ட மரமாகி விட வேண்டும் என்ற கெட்ட கனவுகளைக் கானல் நீராக்கி விட்டு தவ்ஹீது மரம் தளைத்து நிற்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்து சந்ததியற்றவர் என்று மக்கத்து காஃபிர்கள் குற்றம் சாட்டிய போது அல்லாஹ் தனது தூதருக்குப் பக்கபலமாக நின்று,

"(நபியே) நிச்சயமாக உம்முடைய பகைவன் தான் சந்ததியற்றவன்''
(அல்குர்ஆன் 108 : 3) 

என்று கூறினான். வல்ல அல்லாஹ் கூறியது போல் இறைத்தூதரின் எதிரி இனம் தெரியாமல் ஆனான். ஆனால் அல்லாஹ்வின் தூதருக்கு உலகம் அழியும் வரை சத்தியத்தின் சந்ததிகள் தொடர்கின்றனர்.

இதுபோல் இந்த ஏகத்துவத்தை எதிர்த்தவர்கள் இன்று சந்ததியற்றுப் போனார்கள். கூட்டம் போடக்கூடாது என்று எதிர்த்தவர்கள் எல்லாம் இன்று நம்மை எதிர்த்துப் பதில் கூட்டம் போடக் கூட முடியவில்லை. ஆனால் தவ்ஹீது ஜமாஅத்தின் பிரச்சாரப் பணியோ பன்மடங்கு பல்கிப் பெருகி உள்ளதைப் பார்க்கிறோம்.

தவ்ஹீது ஜமாஅத்தின் நிகழ்ச்சித் தொகுப்பை வெளியிடுவதற்காக ஒதுக்கப் பட்ட பக்கங்களில் இன்று இடப் பற்றாக்குறை! அந்த அளவுக்கு ஏகத்துவப் பிரச்சாரம் வளர்ந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் இன்னொரு வேதனையான விஷயத்தையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

வயற்காட்டில் இறங்கி உழுது, உழைத்து பாடுபட்டு, அறுவடை செய்யும் நெல் மணிகளைத் திருடர்கள் திருடிச் செல்வது போல், வெயிலிலும் மழையிலும் வீதி வீதியாகச் சென்று பிரச்சாரம் செய்து, ஏகத்துவத்தின் பால் கொண்டு வரும் மக்களை, கள்வர்கள் கவர்ந்து செல்கின்றனர்.

ஷியாக் கொள்கைச் சிந்தனைவாதிகள் ஏகத்துவ இளைஞர்களிடம் போலி ஜிஹாத் உணர்வை ஊட்டி, நமது இளைய சமுதாயத்தை வழி கெடுக்கின்றார்கள். நேற்று வரை ஏகத்துவத்தில் உறுதியாக நின்ற இளைஞன், இன்று பைஅத் எனும் மாயையில் சிக்கி, சமாதி வழிபாடு, நபிவழித் தொழுகை எல்லாம் சின்ன விஷயம் என்று கூறத் துவங்கி விடுகின்றான். இன்று பெரும்பகுதி இவர்களது வேஷத்தைக் கலைத்து விட்டோம் என்றாலும் இனி ஒரு இளைஞன் கூட இந்த மாயையில் சிக்கி மறுமை வாழ்வை இழந்து விடக் கூடாது என்பதில் நாம் கவனம் எடுத்தாக வேண்டும். இதற்காக உள்ளத்தைத் தூய்மையாக்கி ஒழுக்கத்தை வளர்க்கும் தர்பியா வகுப்புகளை நாம் நடத்த வேண்டும்.

1. ஏகத்துவக் கொள்கையைப் பற்றி தெள்ளத் தெளிவாக விளக்குதல்.
2. ஏகத்துவத்திற்கு எதிராக எடுத்து வைக்கப் படும் வாதங்களுக்குப் பதில் சொல்வதற்கான பேச்சுப் பயிற்சிகள்.
3. திருக்குர்ஆனைத் தெளிவாக எழுத்து சுத்தமாக ஓதச் செய்தல்
4. தொழுகைப் பயிற்சி - கடமையான தொழுகையின் முன்பின் சுன்னத் மற்றும் தஹஜ்ஜத் தொழுகைகளைப் பேணுதல்.
5. நற்பண்புகளைப் போதித்தல்
6. இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பிரச்சாரம் செய்யும் பயிற்சிகள்.

இதுபோன்ற மார்க்கப் பயிற்சிகளை அனைத்து ஊர்களிலும் நடத்துவதற்கு ஏகத்துவவாதிகள் முன்வர வேண்டும். இதன் மூலம் நாம் நம்மையும் நமது மார்க்கத்தையும் காத்து, மறுமையில் வெற்றி பெற வேண்டும்.


EGATHUVAM SEP 2003