துபை மாநகரில்... அற்புதத்தின் மாநாடு
அல்லாஹ்வின்
பெருங்கிருபையினால் தமிழறிந்த சமுதாயத்திற்காக 24.10.03வெள்ளிக்கிழமையன்று துபை மாநகரில் ஜமாஅத்துத்
தவ்ஹீத் அமைப்பினரால் சீர்மிகு திருக்குர்ஆன் மாநாடு நடத்தப் பட்டது. வேத வரிகளும்
தூதர் மொழிகளும் கோலோச்சிய இம்மாநாடு கேட்டோரின் உள்ளங்களை ஈர்த்த மாபெரும்
வரலாறாய் அமைந்தது என்றால் அது மிகையல்ல! தீபாவளி தினத்தன்று இம்மாநாடு நடந்த
போதும், மாநாட்டு அரங்கம் நிரம்பி வழிந்தது தீபாவளி தின
சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிய டி.வி.க்களை குர்ஆன் வென்றெடுத்ததும் அற்புத
நிகழ்வே!
துபை
கிஸஸில் உள்ள கிரஸண்ட பள்ளி அரங்கத்தில் அஸர் முதல் மக்ரிப் வரை நடைபெற்ற
இம்மாநாட்டின் முதல் அமர்வில் கீழை ஜமீல் முஹம்மது தலைமையில் பொதக்குடி ஜலாலுதீன், ஷாஜிதுர்ரஹ்மான்
(ஷார்ஜா), ஹாமின் இப்ராஹீம் (அபுதாபி) ஆகியோர்
சிந்தனையைத் தூண்டும் குர்ஆன் குறித்த பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினார்கள்.
மக்ரிப் தொழுகைக்குப் பின் கூடிய இரண்டாவது அமர்வில் "குர்ஆன் கூறும்
இறையச்சம்' என்ற தலைப்பில் ஷைஹ். அப்துஸ்ஸமது மதனி அவர்கள்
ஆற்றிய உரை உள்ளங்களைக் கசிந்துருகச் செய்தது. அதைத் தொடர்ந்து, தாயகத்திலிருந்து
வருகை தந்துள்ள ஏகத்துவம் இதழின் ஆசிரியர் மவ்லவி எம். ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள், "குர்ஆன் சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள்' என்ற
தலைப்பில் பல்வேறு வரலாற்று மேற்கோள்களுடன் நிகழ்த்திய சொற்பொழிவு மக்களின்
உள்ளங்களை குர்ஆனின் பால் ஈர்க்கச் செய்யும் ஓர் உன்னத உரையாக அமைந்தது.
பல்வேறு
அனாச்சாரங்களில் மூழ்கி மக்கள் தங்களுடைய பொருளாதாரங்களை வீண் விரயம் செய்து
கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் இம்மாநாட்டில் கலந்து கொண்ட சகோதரர்கள்
தங்களுடைய நேரத்தை செலவிட்டதோடு மட்டுமின்றி மாநாட்டு செலவுகளைப் பகிர்ந்து
கொள்ளும் விதமாக காசு கொடுத்து சொற்பொழிவுகளை கேட்டுச் சென்றது நெகிழ்ச்சியான
நிகழ்ச்சியாகும்.
மதுக்கூர்
தவ்ஹீத் ஜமாஅத் தர்ம அறக்கட்டளையினர், அரங்கத்தைச் சுற்றி ஆங்காங்கே குர்ஆனுடைய
வசனங்களை எழுதி வைத்திருந்ததும் பெண்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டதும்
மாநாட்டின் சிறப்பம்சமாக இருந்தது. இம்மாநாடு சிறப்புற நடைபெற பல்வேறு தொழில்
நிறுவனங்கள் மற்றும் தனியார்களும் உதவினர். மேலும் சில தனியார் நிறுவனங்கள் மாநாட்டுக்கு
வந்த மக்களுக்கு சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் மற்றும் தேனீர் வழங்கினர். மாநாட்டு
அரங்கில் இருந்த ஸ்டால்களில் பல்வேறு அறிஞர்கள் பேசிய சி.டி.க்களையும்
புத்தகங்களையும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றது அவர்களின் அறிவுத் தேடலைப்
பறை சாற்றியது.
மாநாட்டின்
வழியாக குர்ஆனின் கருத்துக்களை மக்களிடம் சென்றடைந்திடச் செய்வதற்காக உழைத்த, ஒத்துழைத்த
அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!
துபையிலிருந்து
அதிரை அமீன்
EGATHUVAM NOV 2003