புவி ஈர்ப்பு சக்தியும் புனிதக் குர்ஆனும்
எம். ஷம்சுல்லுஹா
மரத்திலிருந்து
பழம் தரையில் விழுகின்றது! இது நியூட்டனின் சிந்தனைப் புயலைக் கிளப்புகின்றது! இது
எப்படி இவ்வளவு வேகமாக பூமியை நோக்கி விரைகின்றது?என்ற
சிந்தனை ஓட்டம் அதன் பின்னே விரைகின்றது. அதனால் விளைந்த அறிவியல் பலன் தான் புவி
ஈர்ப்பு சக்தி என்ற கண்டு பிடிப்பு! சுற்றிக் கொண்டிருக்கும் புவியைச் சுற்றி ஒரு
போர்வையாக புவி ஈர்ப்பு சக்தி ஒன்று சுற்றிக் கொண்டிருக்கின்றது என்ற பேருண்மை
உலகத்திற்குத் தெரிய வருகின்றது. இந்த புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்த ஐசக்
நியூட்டனின் காலம் கி.பி. 1642-1727.
ஆனால்
சிந்தனைப் புரட்சியின் இந்த சிகரத்தை மனித அறிவு எட்டி விடாத அந்தக் காலத்திலேயே
இந்தப் பேருண்மையை அல்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்கள் வாய் வழியாகப் போட்டு
உடைக்கின்றது. அதன் மூலம் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தாம்
என்பதையும், அவர் கொண்டு வந்தது அல்லாஹ்வின் வேதம் தான்
என்பதையும் நிரூபித்து நிற்கின்றது. உலகத்தையே ஈர்க்கும் வண்ணம் புவி ஈர்ப்பு
சக்தியைப் பற்றி பறை சாற்றிக் கொண்டு நிற்கும் அந்த வசனங்கள் எவை?
நீங்கள்
பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான். பின்னர் அர்ஷின் மீது
அமர்ந்தான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில்
வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன. காரியத்தை அவனே
நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக
சான்றுகளை அவன் தெளிவுபடுத்துகிறான்.
(அல்குர்ஆன் 13:2)
நீங்கள் பார்க்கக் கூடிய தூண் இன்றி வானங்களைப் படைத்தான்.
உங்களைச் சாய்த்து விடாதிருக்க பூமியில் முளைகளைப் போட்டான். அதில் ஒவ்வொரு
உயிரினத்தையும் பரவச் செய்தான். வானிலிருந்து தண்ணீரை இறக்கினோம். அதில் மதிப்பு
மிக்க ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்தோம்.
(அல்குர்ஆன் 31:10)
இந்த
வசனங்கள் மூலம் புவி ஈர்ப்பு சக்தியை எடுத்துக் கூறி "நான் எல்லாம் வல்ல
அல்லாஹ்விடமிருந்து வந்திருக்கின்றேன்; என்னுடைய கருத்தை யாரேனும் மறுக்க இயலுமா?'' என்று குர்ஆன் கம்பீரத்துடன் கர்ஜித்து
நிற்கின்றது.
பூமிக்கும், வானத்திற்கும்
இடையே பார்க்க முடியாத தூண்கள் இருக்கின்றனவா?என்றால்
நிச்சயமாக இருக்கின்றன! இந்தப் பிரபஞ்சத்திலுள்ள பூமி உள்ளிட்ட எல்லாக் கோள்களும்
அவற்றிற்குரிய இடங்களில் நீந்துவதற்கு அவற்றை குறிப்பிட்ட வேகத்துடன் இழுத்துப்
பிடித்திருக்கின்ற ஓர் ஈர்ப்பு விசை எல்லாப் பகுதிகளிலும் பரவியிருப்பது தான்
காரணம்.
இந்த
ஈர்ப்பு விசையின் காரணமாகத் தான் ஒவ்வொரு கோளும் அந்தரத்தில் எந்தவிதப்
பிடிமானமும் இன்றி தொங்குகின்ற காட்சியைப் பார்க்கின்றோம்.
எனவே
மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் மனிதன் கண்டறிந்த ஈர்ப்பு விசை எனும் கண்டுபிடிப்பை
பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறுகிறது.
வானத்திற்கும், பூமிக்கும்
எந்தத் தூண்களும் இல்லை என்று தெளிவாகத் தெரியும் போது, முஹம்மது
நபியவர்கள் "பார்க்கின்ற தூண்களின்றி'' என்ற வார்த்தையை தேவையில்லாமல் பயன்படுத்தி
இருக்க முடியாது.
இந்த
வானங்களையும், பூமியையும் படைத்தவன் பேசுகின்ற வார்த்தையாக
இருப்பதால் தான் "பார்க்கின்ற தூண்களின்றி'' என்ற
சொல்லைப் பயன்படுத்தி,பார்க்காத தூண்கள் இருக்கின்றன என்ற உண்மையை
மறைமுகமாகக் குறிப்பிடுகிறான்.
திருக்குர்ஆன், முஹம்மது
நபியின் கற்பனையல்ல; ஏக இறைவனின் கூற்றுத் தான் என்பதற்குச் சான்றாக
இது அமைந்துள்ளது.
புலனுக்குத்
தெரியாத புவி ஈர்ப்பு விசை
நம்முடைய
கண்களுக்குத் தெரியாத வகையில் புவி ஈர்ப்பு விசையொன்று நம்மைச் சுற்றி நம்மை வாழ
வைத்துக் கொண்டிருக்கின்றது. புவி ஈர்ப்பு விசை நம்மை வாழ வைக்கின்றதா? என்ன கதை
விடுகின்றீர்களா? என்று கேட்கலாம். நிச்சயமாக இது கதையல்ல!
சத்தியமான அல்குர்ஆனின் அறிவிப்பும் அறிவியலின் நிரூபணமும் ஆகும்.
அல்லாஹ்
சொல்வது போல் புவி ஈர்ப்பு சக்தி நம்முடைய பார்வைப் புலன்களுக்குத் தெரியாததால்
நமக்கும் அதற்கும் உண்டான தொடர்பு நமக்குத் தெரிவதில்லை. நமக்கும் இந்த புவி
ஈர்ப்பு விசைக்கும் உள்ள தொடர்பு சாதாரண தொடர்பல்ல! நம்முடைய நாசித் துவாரத்தில்
ஓடி வெளியாகிக் கொண்டிருக்கும் உயிர் மூச்சுத் தொடர்பாகும். புவி ஈர்ப்பு சக்தி
என்ற ஒன்றில்லையாயின் நாம் சுவாசிக்கும் காற்று நம்மை விட்டுப் பறந்து போய்
விடும். அவ்வாறு பறந்து போய் விடாதவாறு காத்து நிற்கும் கவசம் தான் புவி ஈர்ப்பு
விசை!
சுவாசக்
காற்றை காக்கும் கவசம்
மனிதன்
மட்டுமல்ல! புவியில் வாழும் நிலம் மற்றும் நீர் வாழ் அனைத்து உயிரினங்களின்
சுவாசக் காற்றை புவி ஈர்ப்பு சக்தி எவ்வாறு காத்து நிற்கின்றது என்பதை இப்போது
பார்ப்போம்.
நாம்
வாழும் இந்தப் புவியைச் சுற்றி வளி மண்டலம் என்ற ஒன்று அமைந்துள்ளது. வளி என்றால்
காற்று என்று பொருள். உயிரினங்கள் வாழ இந்த வளி மண்டலம் இன்றியமையாத ஒன்றாகும்.
இந்த வளி மண்டலம் புவியின் மேற்பரப்பிலிருந்து10,000 கி.மீ. உயரம் வரை காணப்படுகின்றது. இந்த வளி
மண்டலத்தில் உள்ள காற்றின் மொத்த அளவில் 97 சதவிகிதம் புவியின் மேற்பரப்பிலிருந்து 29 கி.மீ. உயரத்திற்குள் காணப்படுகின்றது.
புவியின் மேற்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல காற்றின் அடர்த்தி குறைந்து
கொண்டே செல்கின்றது. புவியின் மேற்பரப்பிலிருந்து 5 கி.மீ. உயரத்திற்கு மேல் காற்றின் அடர்த்தி
குறைவதால் நாம் சுவாசிப்பதற்குப் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காது. அதனால் தான் மலை
ஏறுபவர்கள் தங்களுடன் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்கின்றனர்.
வளி மண்டலத்தில் கலந்திருக்கும் வாயுக்கள்
வளி
மண்டலம் என்பது ஒரு தனிப்பட்ட வாயுவினால் அமைந்ததல்ல! அது பல வாயுக்களின்
தொகுப்பு! வளி மண்டலத்தில் நைட்ரஜன் 78 சதவிகிதமும், ஆக்ஸிஜன்21 சதவிகிதமும், கார்பன் டை
ஆக்ஸைடு 0.033 சதவிகிதமும், ஆர்கான் 0.934சதவிகிதமும், நியான் 0.0018 சதவிகிதமும், ஹீலியம் 0.00052 சதவிகிதமும், மீதேன்,ஹைட்ரஜன்
ஆகிய வாயுக்கள் மிகக் குறைந்த அளவிலும் கலந்துள்ளன.
அல்லாஹு
தஆலா இந்த வாயுக்ககளை வளி மண்டலத்தில் மேற்கண்ட விகிதாச்சாரக் கணக்கில் அமைத்து
இப்புவியில் உயிர்ப் பிராணிகளையும் தாவர இனத்தையும் வாழ வைத்திருக்கின்றான். வளி
மண்டலத்தில் இரண்டறக் கலந்து நிற்கும் இந்த வாயுக்களில் 78 சதவிகிதம் உள்ள நைட்ரஜனுக்கு நிறம், மணம்
எதுவும் கிடையாது. நச்சுத் தன்மை கொண்டதுமல்ல! இது தீயை அணைக்கும் தன்மை
கொண்டதாகும். இந்த நைட்ரஜன் உயிரின வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது என்பதை
மின்னல் என்ற தலைப்பில் நாம் காணவிருக்கின்றோம்.
நைட்ரஜனுக்கு
அடுத்தபடியாக அதிகம் கலந்திருப்பது ஆக்ஸிஜன்! நைட்ரஜன் நெருப்பை அணைப்பதற்குத்
துணை புரிகின்றது என்றால் இது அதை எரிப்பதற்குத் துணை புரிகின்றது. இதற்கும் மணம், சுவை, நிறம்
கிடையாது. இது மற்ற மூலங்களுடன் கலந்து ஆக்ஸைடுகளாக மாறும் தன்மை கொண்டது.
ஆக்ஸிஜன் இல்லையெனில் மனிதன் முதல் அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ முடியாது.
சுவாசிப்பதற்கு ஆக்ஸிஜன் அவசியம்!
கார்பன் டை
ஆக்ஸைடு என்பது கனமான வாயுவாகும். அதனால் இது வளி மண்டலத்தின் கீழ்ப் பகுதியிலேயே
அதிக அளவு காணப்படுகின்றது. வளி மண்டலத்தின் உயரே செல்லச் செல்ல இதன் அளவு
குறைகின்றது. இது மற்ற வாயுக்களைக் காட்டிலும் வெப்பத்தை அதிகம் கிரகிக்கும் தன்மை
கொண்டது.. எனவே இது வளி மண்டலத்தில் சூரிய வெப்பத்தைத் தக்க வைக்க உதவுகின்றது.
இத்தகைய
பயன்பாடுகளைக் கொண்ட வாயுக்களைக் கலவையாகக் கொண்டது தான் வளி மண்டலம்! இந்த வளி
மண்டலம் ஐந்து அடுக்குகளைக் கொண்டது. இந்த ஐந்து அடுக்குகளைப் பற்றி பின்னர்
பார்ப்போம். இப்போது நாம் இங்கு கவனிக்க வேண்டிய அம்சம் இந்த வளி மண்டலக் காற்று
விண்வெளியில் கலைந்து, கரைந்து போகாமல் காக்கும் கவசம் எது? இந்தப்
புவி ஈர்ப்பு விசை தான்.
பூமி
வேகமாகச் சுழன்று கொண்டிருக்கின்றது என்பதை நாம் அறிவோம். இந்தப் புவியானது, தான்
மட்டும் சுழலவில்லை; தனது ஈர்ப்பு சக்தியின் காரணமாக தன்னுடன் 10,000 கி.மீ. உயரம் வரை பரவியுள்ள காற்று
மண்டலத்தையும் சேர்த்தே சுற்றுகின்றது. இல்லை! சுழற்றுகின்றது. இந்தப் புவி
ஈர்ப்பு விசை இல்லாவிட்டால்,காற்று மண்டலம் கலைந்து போய் நாம் சுவாசக் காற்று
இல்லாத சுருண்டு போன கருவாடுகளாகி விடுவோம்.
இப்படி
நமது சுவாசக் காற்றை கவசமாகக் காத்து நிற்பது புவி ஈர்ப்பு விசையே! அது
மட்டுமின்றி உருண்டையான ஒரு பெரிய பந்துக்கு மேல் நாம் நிற்பதாக வைத்துக்
கொள்வோம். அந்தப் பந்து உருள ஆரம்பித்தால் என்னவாகும்? நாம் கீழே
விழுந்து விடுவோம். ஆனால் அதே சமயம் மணிக்கு ஒரு லட்சத்து எட்டாயிரம் கி.மீ.
வேகத்தில் சுழன்று கொண்டிருக்கும் பூமி என்ற பந்தின் மீதுள்ள நாம் கழற்றி
எறியப்படாமல் சுழன்று கொண்டிருப்பதற்குக் காரணமும் இந்தப் புவி ஈர்ப்பு விசை தான்.
அருவியிலிருந்து நீர் விழுந்தாலும் ஆகாயத்திலிருந்து நீர் விழுந்தாலும்
பைப்பிலிருந்து பானையில் நீர் விழுந்தாலும் அத்தனைக்கும் காரணம் புவி ஈர்ப்பு விசை
தான்!
EGATHUVAM NOV 2003