Mar 29, 2017

குர்ஆனைப் பின்பற்றாத குருமார்கள்

குர்ஆனைப் பின்பற்றாத குருமார்கள்

புனித மிக்க ரமளான் வந்தது. புனிதக் குர்ஆன் நாளொன்றுக்கு ஒரு பாகம் வீதம், முப்பது நாட்களில் முப்பது பாகங்கள் ஓதி முடிக்கப்பட்டன. ஓதிய ஹாஃபிழ்கள் கை நிறைய காசுகளை அள்ளிச் சென்றனர். ஆனால் குர்ஆனின் தாக்கம் மக்களிடத்தில் நிற்கவில்லை; நின்று தொடரவில்லை. காரணம் என்ன?

அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்கின்றனர். அவனது பாதையை விட்டும் தடுக்கின்றனர். அவர்கள் செய்து கொண்டிருப்பவை கெட்டவையாகும்.

(அல்குர்ஆன் 9:9)

வேதம் கொடுக்கப்பட்டோரிடம் "அதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்; மறைக்கக் கூடாது'' என்று அல்லாஹ் உறுதி மொழி எடுத்த போது, அவர்கள் அதைத் தமது முதுகுகளுக்குப் பின் எறிந்தனர். அற்பமான விலைக்கு விற்றனர். அவர்கள் விலைக்கு வாங்கியது மிகவும் கெட்டது.

(அல்குர்ஆன் 3:187)

ஒரு வேதம் வாழ்கின்றது; அது மக்களை ஆள்கின்றது என்றால் அதன் கட்டளைகள் பின்பற்றப்பட வேண்டும். மக்களால் பின்பற்றப்பட்டு அவர்களின் அன்றாட நடைமுறை வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும். அவ்வாறு பிரதிபலிக்கின்றதா? நிச்சயமாக இல்லை. அதற்கான தடயங்களில் தர்ஹாக்களை முதலில் எடுத்துக் கொள்ளலாம்.

நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது! அழைப்பைப் புறக்கணித்து ஓடும் செவிடர்களைக் கேட்கச் செய்ய உம்மால் முடியாது. (அல்குர்ஆன் 27:80)

நீர் இறந்தோரைச் செவியுறச் செய்ய முடியாது! செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது.

(அல்குர்ஆன் 30:52)

உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.

(அல்குர்ஆன் 35:22)

இந்த வசனங்கள் அனைத்தும் இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்று கூறுகின்றன. குர்ஆனுக்குச் சமமான ஹதீஸ் எனும் வஹீயைப் பெற்ற நபி (ஸல்) அவர்கள், கப்ருகளைத் தரைமட்டமாக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள்.

"தரை மட்டத்திற்கு மேலுள்ள எந்த ஒரு கப்ரையும் தரை மட்டமாக்காமல் விட்டு விடாதே!'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: முஸ்லிம் 1609

1980க்குப் பிறகு ஏகத்துவக் கொள்கை வாதிகளால் இந்த ஹதீஸ்கள் சொல்லப்படும் வரை, ஆலிம்கள் இந்த ஹதீஸ்களை மக்கள் மன்றத்தில் பகிரங்கமாக வைக்கவில்லை. இன்று வரையிலும் வைக்கவில்லை. இறந்தவர்களிடம் போய் பிரார்த்தனை செய்வது நிரந்தர நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் கொடிய பாவம் என்பதைச் சொல்லவில்லை.

தர்ஹாக்களில் போய் பிரார்த்தனை செய்யும் கொடுமை! வானளாவ நிற்கும் மனாராக்களில் கொடி ஏற்றும் அவல நிலைமை!

குர்ஆன் மக்களை ஆள்கின்றது என்றால் இந்தக் கப்ருகள் இந்நேரம் உடைக்கப்பட்டிருக்க வேண்டும். தர்ஹாக்கள் தரைமட்டமாக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்னும் அது நிறைவேறவில்லை.

அதற்குக் காரணம் குர்ஆன் இந்தச் சமுதாயத்தில் வாழவுமில்லை! ஆளவுமில்லை! இந்த வகையில் ஆலிம்கள் யூத, கிறித்தவ மத குருமார்கள் கடைப்பிடித்த அதே நடைமுறையைக் கையாண்டு, கடைப் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். வேதத்தை மக்களிடமிருந்து மறைக்கின்றனர்.

அல்லாஹ் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர், தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர (வேறு எதையும்) சாப்பிடுவதில்லை. கியாமத் நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.

(அல்குர்ஆன் 2:174)

திரித்துப் பேசும் திருச்சபையினர்

பள்ளிவாசலில் தரும் ஊதியம், கத்தம் பாத்திஹா மவ்லிதில் கிடைக்கும் கை மடக்குகளைக் கணக்கில் கொண்டு இவர்கள் சத்தியத்தை மறைப்பது உண்மையில் யூத, கிறித்தவப் பாதிரிமார்களின் செயல்பாட்டை நூற்றுக்கு நூறு அப்படியே ஒத்திருக்கின்றது.

மக்களுக்காக நாம் வேதத்தில் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்று களையும், நேர் வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர். (அல்குர்ஆன் 2:159)

இந்த வசனத்தின் படி, சத்தியத்தை மறைத்தல் அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத் தருகின்றது என்பதைச் சர்வ சாதாரணமாக மறந்து விட்டனர்.

ஏகத்துவவாதிகள் இந்தச் சத்தியத்தை, ஏகத்துவத்தை எடுத்து வைத்ததற்குப் பின்னால் மக்கள் இவர்களிடம் போய் கேள்விகள் கேட்க ஆரம்பித்து, இறந்தவர்கள் செவியுற மாட்டார்கள் என்ற வசனங்களை எடுத்துக் காட்டும் போது, "இவையெல்லாம் காஃபிர்களுக்கு இறங்கிய வசனங்கள்'' என்று மாற்று விளக்கங்கள் கொடுத்தனர்.

இங்கும் இவர்கள் அல்லாஹ் கூறுவதைப் போன்று யூதர்களுக்கு ஒப்பாகவே செயல்படுகின்றனர்.

வார்த்தைகளை அதற்குரிய இடங்களை விட்டும் அவர்கள் மாற்றுகின்றனர். அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டவற்றில் ஒரு பகுதியை விட்டு விட்டனர்.

(அல்குர்ஆன் 5:13)

இவ்வாறு இவர்கள் மாற்று அர்த்தம் கொடுக்க ஏன் முன் வந்தனர் என்றால், தாங்கள் ஏற்கனவே ஒரு கருத்தில் இருந்து விட்டனர். அதற்கு மாற்றமாக இந்த வசனங்கள் அமைந்திருப்பதால் அவற்றை ஏற்க மறுக்கின்றனர்.

நீங்கள் விரும்பாததைத் தூதர்கள் கொண்டு வந்த போதெல்லாம் அகந்தை கொண்டீர்கள். சிலரைப் பொய்யரென்றீர்கள். சிலரைக் கொன்றீர்கள். (அல்குர்ஆன் 2:87)

யூத, கிறித்தவ திருச்சபையினர் போல் இந்த ஆலிம்கள் வேதத்தின் கருத்துக்களைத் திரித்து, திரிபு வாதம் செய்து கொண்டிருக்கின்றனர்.

அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தல்

அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்பதை, யூத, கிறித்தவ குருமார்களின் கோரப் பண்பு என அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

நம்பிக்கை கொண்டோரே! மத குருமார்களிலும், பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணுகின்றனர். அல்லாஹ்வின் வழியை விட்டும் (மக்களைத்) தடுக்கின்றனர். "அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தை யும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு'' என்று எச்சரிப்பீராக!

(அல்குர்ஆன் 9:34)

இந்த ஆயுதத்தை இவர்கள் அப்படியே தங்கள் கைகளில் எடுத்திருக்கின்றனர்.

இதன் எதிரொலியாக ஏகத்துவ வாதிகள் பள்ளிவாசலில் தொழும் போது "வெட்டுங்கள், குத்துங்கள்'' என்று சொல்லி, பள்ளிக்கு வர விடாமல் தடுத்தனர். இன்று வரை இந்தக் காட்டுமிராண்டித் தனத்தைத் தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றனர்.

அண்மையில் திருவண்ணா மலையிலும், பாளையங்கோட்டை ரஹ்மத் நகரிலும் ஏகத்துவவாதிகள் தொழுகைக்கு வராமல் தடுக்கப் பட்டனர். மீறித் தொழச் சென்றவர்களைத் தீவிரவாதிகள் என்று கூறி காவல் துறையில் புகார் தெரிவித்துள்ளனர். இதே போல் திருநெல்வேலி பேட்டையிலும் ஏகத்துவ வாதிகள் தொழுவதற்குத் தடை விதித்துள்ளனர். இந்தக் கொடுஞ் செயலுக்கு எதிராக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் களமிறங்கிப் பணியாற்றி வருகின்றது.

புனித மிகு ரமளான் மாதத்தில், அல்லாஹ்வின் வேதமான குர்ஆன் இறங்கிய இந்த அருள் மிகு மாதத்தில் அல்லாஹ்வின் ஆலயத்தில் வந்து தொழுவதை விட்டும் தடுக்கின்றனர். இதற்குப் பின்னணியில் இருப்பவர்கள் இந்த ஆலிம்கள் தான்.

அல்லாஹ்வின் பள்ளிவாசல் களில் அவனது பெயர் கூறப் படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.

(அல்குர்ஆன் 2:114)

குர்ஆன் இறங்கிய மாதத்திலேயே இந்த அக்கிரமத்தை அரங் கேற்றுகிறனர் என்றால் அதன் பொருள் என்ன? திருக்குர்ஆனின் கட்டளைகளைப் பகிரங்கமாக மீறுகின்றார்கள் என்பது தானே இதன் பொருள். அதனால் தான் கூறுகின்றோம், இந்தக் குர்ஆன் இந்த ஆலிம்களிடம் வாழவுமில்லை; ஆளவுமில்லை என்கிறோம்.

இதில் வேடிக்கை என்னவென்றால் "நிரந்தர நரகவாதி' என்றும், "அல்லாஹ்வுடன் போர் தொடுக்கின்றனர்' என்றும் திருக்குர்ஆன் பொரிந்து தள்ளும் வட்டி ஆசாமிகள் தான் பள்ளியின் நிர்வாகிகளாக, முத்தவல்லிகளாக உள்ளனர். இந்தப் பலான ஆட்களைப் பார்த்ததும் ஆலிம்கள் பிரகாசமாகப் பல்லிளித்து விடுகின்றனர்.

அவர்களுக்கு எதிராக அறிவிப்புப் பலகை தொங்க விட்டு, போர் தொடுப்பதற்குப் பதிலாக, ஏகத்துவ வாதிகளை எதிர்த்துப் போர் தொடுக்கின்றனர் என்றால் அதன் அர்த்தம் என்ன? குர்ஆன் இவர்களிடம் வாழவுமில்லை; ஆளவும் இல்லை என்பது தானே இதன் பொருள்.

இறை வேதத்திற்கு எதிரான தீர்ப்பு

அண்மையில் இந்தியாவையே உலுக்கிய இம்ரானா விஷயத்தில், மாமனார் கற்பழித்ததால் கணவருடன் சேர்ந்து வாழக் கூடாது என்று தேவ்பந்த் ஆலிம்கள் தீர்ப்பளித்தனர். அதற்குத் தென்புலத்தில் உள்ள ஆலிம்கள் வட்டாரம், குறிப்பாக பாக்கியாத் மதரஸாவும் பக்காவாக வக்காலத்து வாங்கியது. இது இறை வேதத்திற்கு எதிரான தீர்ப்பாகும்.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர் களாக்கிப் பின்பற்றாதீர்கள்!  (அல்குர்ஆன்7:3) என்ற அல்லாஹ்வின் கட்டளையைப் பொருட்படுத்தாமல் யாரோ எழுதி வைத்த மத்ஹபுச் சட்டங்களைக் கொண்டு, தங்கள் இஷ்டத்திற்குத் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

தவ்ராத்தை நாம் அருளினோம். அதில் நேர் வழியும், ஒளியும் இருக்கிறது. (இறைவனுக்கு) கட்டுப்பட்ட நபிமார்களும், யூத வணக்கசாலிகளும், மேதைகளும் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க அவர்கள் கட்டளை யிடப்பட்டதாலும், அதற்கு அவர்கள் சாட்சிகளாக இருந்ததாலும் யூதர்களுக்கு அதன் மூலமே தீர்ப்பளித்து வந்தனர். மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! எனது வசனங்களை அற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்! அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் (ஏக இறைவனை) மறுப்பவர்கள்.

உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகிய வற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப்பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.

(அல்குர்ஆன்  5:44,45)

இறை வேதத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்காதவர்கள் ஏக இறைவனை மறுப்பவர்கள்; அநீதி இழைத்தவர்கள்; குற்றவாளிகள் என்று அல்லாஹ் சரமாரியாகச் சாடுகின்ற பாவிகளின் பட்டியலில் இந்த ஆலிம்கள் தங்களைச் சேர்த்துக் கொண்டனர்.

இதன் காரணமாக இவர்களின் முகத் திரையைக் கிழிக்கின்ற வகையில் இம்ரானா விவகாரத்தில் வழங்கிய தீர்ப்பின் மோசடியை இங்கே படம் பிடித்துக் காட்டியிருக்கின்றோம்.

இந்த இம்ரானா விவகாரத்திற்கு ஆணி வேராக இருப்பது மத்ஹபு பக்தி தான். பக்தி என்று கூட சொல்ல முடியாது. பைத்தியம் என்று வேண்டுமானால் சொல்லலாம். அந்தப் பைத்தியம் தான் அல்லாஹ்வுடைய வேதத்திற்கு எதிரான தீர்ப்பை வழங்குமாறு செய்துள்ளது.

அதனால் மத்ஹபுகள் என்பவை வானிலிருந்து வந்தவையல்ல; வாயிலிருந்து வந்த வாந்தி தான் என்பதை நிரூபிக்கும் வகையில் மத்ஹபுக்காரர்களின் கற்பனை, கலப்படச் சரக்குகளை, பலான சமாச்சாரங்களை, சங்கதிகளைக் கொண்டு வந்து கொட்டியிருக்கிறோம்.

இவ்வாறு இவ்விதழில் பதிவாகி இருப்பவை சில எடுத்துக் காட்டுகள் தான். தோண்டியதை எல்லாம் இவ்விதழில் தொகுத்திட இயலாது என்பதால் இத்துடன் நிறுத்தி உள்ளோம். சிந்திப்பவர்களுக்கு இந்தச் சிறு அளவு போதும் என்பதால் இந்த அளவுடன் விட்டுள்ளோம்.

எனவே இவர்கள் குர்ஆன், ஹதீஸ் என்று கூறுவதெல்லாம் வெறும் ஒப்புக்குத் தானே தவிர உண்மைக்கு அல்ல என்பதை இவர்களின் நடைமுறைகள் சந்தேகத் திற்கு இடமின்றி நிரூபித்து நிற்கின்றன.

அப்படியானால் ரமளானின் இரவுகளில், குயில் போல் ராகம் போட்டு, குர்ஆன் ஓதுகின்றார்களே? இவர்களை இப்படி எல்லாம் கூறலாமா? என்று கேட்கலாம். இதற்கு நபி (ஸல்) அவர்களின் பதிலைக் கேளுங்கள்.

"உங்களிடையே ஒரு கூட்டத்தினர் கிளம்புவார்கள். அவர்களது தொழுகையுடன் உங்களது தொழுகையையும், அவர்களது நோன்புடன் உங்களது நோன்பையும், அவர்களின் நற்செயல்களுடன் உங்களின் நற்செயல்களையும் ஒப்பிட்டுப் பார்த்து, உங்களுடைய தொழுகை, நோன்பு மற்றும் நற்செயல்களை அற்பமானவையாகக் கருதுவீர்கள். மேலும் குர்ஆனை அவர்கள் ஓதுவார்கள். ஆனால் அது அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியை விட்டு, அம்பு வெளியாகிச் சென்று விடுவதைப் போல் மார்க்கத்தி லிருந்து அவர்கள் வெளியேறி விடுவார்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல் குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 5058

இந்த ஹதீஸில் குறிப்பிடப்படும் அம்சங்கள் அப்படியே இவர் களுக்கும் பொருந்திப் போகின்றது.

நமது தொழுகையையும், இதர வணக்கங்களையும் ஒப்பிட்டு இவர்கள் கிண்டல் செய்கின்றார்கள். குர்ஆன் அவர்களின் தொண்டைக் குழியைக் கடக்கவில்லை.

இதே கூட்டத்தைப் பற்றி புகாரி 6930 ஹதீஸில், அவர்கள் இள வயதினராக இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் புகாரி 7562 ஹதீஸில் அவர்களின் அடையாளம் மொட்டை அடிப்பது என்றும் கூறப்பட்டுள்ளது.

மதரஸாக்களிலிருந்து ரமளானில் குர்ஆன் ஓத அனுப்பி வைக்கப்படும் இவர்கள் இள வயதினராகவும் மொட்டை அடித்துக் கொண்டும் தான் இருக்கின்றார்கள்.

இவர்கள் ஓதும் குர்ஆன் இவர்களது தொண்டைக் குழியைத் தாண்டவில்லை. அதாவது இதயத்திற்குள் சென்று எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அதனால் சமுதாயத்திலும் எவ்வித மாற்றமுமில்லை.

ஆண்டு தோறும் ரமளான் வருகின்றது; செல்கின்றது. மாதம் முழுவதும் குர்ஆன் ஓதப்படுகின்றது. ஆனால் சமாதி வழிபாடு, வரதட்சணை, வட்டி, சினிமா என சமுதாயத்தில் புரையோடி விட்ட தீமைகளில் எந்த மாற்றமும் இல்லை. அவை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

அதனால் தான் கூறுகின்றோம்; குர்ஆன் இந்த மக்களிடம், குறிப்பாக இந்த ஆலிம்களிடம் வாழவுமில்லை; இவர்களை ஆளவுமில்லை.

EGATHUVAM JUL 2005