இத்தாவும் இல்லாத விதிமுறைகளும்
ட.ங. முஹம்மது அலீ ரஹ்மானீ
கணவனை இழந்த பெண்களும், கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்களும் குறிப்பிட்ட காலம்
வரை மறுமணம் செய்வதைத் தள்ளிப் போட வேண்டும். இந்தக் கால கட்டமே இத்தா எனப்படும். இத்தா
என்பதற்கு காத்திருப்புக் காலம், கணித்தல், எண்ணுதல், காத்திருத்தல்
என்று பல்வேறு பொருள்கள் உள்ளன.
இதனை நாம் திருமறைக் குர்ஆன் ஹதீஸ்களின் அடிப்படையில் பின்வரும் வகைகளாகப் பிரிக்கலாம்
கணவனை இழந்த பெண்களின் இத்தாக் காலம்
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால்
நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும்
அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு
செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.
(அல்குர்ஆன் 2:233)
விவாகரத்து செய்யப்பட்ட பெண்களின் இத்தாக் காலம்
விவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க்
காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும்
அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்
களுக்கு அனுமதி இல்லை
(அல்குர்ஆன் 2:228 )
எதற்காக இத்தாக் காலத்தை இறைவன் ஏற்படுத்தியுள்ளான்?
கணவனை இழந்த பெண்கள் கர்ப்பமாக இருந்தால் பிரசவிக்கும் வரையிலும், கர்ப்பமாக இல்லாவிட்டால் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் கழியும் வரையிலும் மறுமணம் செய்யக் கூடாது.
இந்தக் கால கட்டம் இத்தா’எனப்படுகின்றது.
கணவனுடன் வாழ்ந்தவள் அவனது கருவைச் சுமந்திருக்கலாம்; அந்த நிலையிலேயே அவள் இன்னொருவனை மணந்து கொண்டால் அந்தக் குழந்தையின்
எதிர்காலம் பாதிப்படையும். இரண்டாம் கணவன் அக்குழந்தை தனது குழந்தை இல்லை எனக் கூறுவான்.
முதல் கணவனின் குடும்பத்தாரும் அது தமது குடும்பத்துக் குழந்தை
இல்லை எனக் கூறி விடுவர். இதனால் தந்தை யார் என்பதே தெரியாததால் மன ரீதியான பாதிப்பு
அக்குழந்தைக்கு ஏற்படும். தகப்பனிடமிருந்து கிடைக்க வேண்டிய சொத்துரிமை கிடைக்காமல்
போய் விடும்.
இன்னொருவரின் குழந்தையைச் சுமந்து கொண்டு என்னை ஏமாற்றி விட்டாள்
என்று இரண்டாம் கணவன் நினைத்தால் அப்பெண்ணின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடும்.
கருவில் குழந்தை இருப்பதை அறிய ஒரு மாதம் போதுமே! அந்த மாதத்தில்
மாதவிலக்கு ஏற்பட்டால் குழந்தை இல்லை என்பது தெரிந்து விடுமே! நான்கு மாதம் பத்து நாட்கள்
அதிகமல்லவா? என்று சிலர் நினைக்கலாம்.
இது நியாயமான கேள்வி தான். ஆனால் நடைமுறையில் சில சிக்கல்களைத்
தவிர்க்கவே இஸ்லாம் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் காத்திருக்கச் சொல்கிறது.
ஒரு பெண் தான் முதல் மாதமே கருவுற்றிருப்பதை அறிந்து கொண்டாலும்
அதை அவள் மறைக்க முயற்சிக்கலாம். (அதனால்தான் இறைவனும் கூட இவ்வாறு குர்ஆனில் கூறுகிறான் 2:228) தான் கருவுறவில்லை
என்று கூறி இன்னொருவனைத் திருமணம் செய்யலாம். நான்கு மாதம் பத்து நாட்களுக்கு இவ்வாறு
கூற முடியாது. வயிறு காட்டிக் கொடுத்து விடும்.
குறைப் பிரசவமாக ஒரு குழந்தையை அவள் பெற்றெடுத்தால் அது முந்தைய
கணவனுடையதாக இருக்குமோ என்று இரண்டாம் கணவன் சந்தேகப்படுவான். நான்கு மாதம் பத்து நாட்கள்
கடந்த பின்பு அவன் இப்படிக் கூற முடியாது. குழந்தை இருந்தால் தான் நான்கு மாதத்தில்
வெளிப்படையாகத் தெரியுமே என்று அவன் உண்மையை விளங்கிக் கொள்வான்.
இத்தகைய காரணங்களால் தான் பெண்களுக்கு நன்மை செய்வதற்காக, அவர்களது எதிர்காலம் மகிழ்ச்சியாக அமைவதற்காக, அவளது குழந்தையின் எதிர்காலப் பாதுகாப்புக்காக இறைவன் இந்த ஏற்பாட்டைச்
செய்துள்ளான்.
மாதவிடாய் அற்றுப் போன பெண்களின் இத்தாக் காலம்
உங்கள் பெண்களில் மாதவிடாய் அற்றுப் போனவர்கள்
விஷயத்தில் நீங்கள் சந்தேகப்பட்டால் அவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதோருக்கும் உரிய காலக் கெடு மூன்று
மாதங்கள்.
(அல் குர்ஆன் 65:4)
கர்ப்பிணிப் பெண்களின் இத்தாக் காலம்
கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் மறுமணம் செய்யாமல்
காத்திருக்க வேண்டும் என்று 2:234 வசனத்தில் கூறப்பட்டுள்ளது. அந்தக் காலக் கெடுவிலிருந்து கர்ப்பிணிப்
பெண்கள் விதிவிலக்குப் பெறுகிறார்கள்.
கர்ப்பிணிகளின் காலக் கெடு அவர்கள் பிரசவிப்பதாகும்.
அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவரது காரியத்தை அவன் எளிதாக்குவான்
(அல் குர்ஆன் 65:4)
தம் கணவர் இறந்த சில நாட்களுக்குப் பின் சுபைஆ
அல் அஸ்லமிய்யா (ரலி) அவர்கள் பிரசவித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் சென்று
மறுமணம் புரிந்து கொள்ள அனுமதி கோரினார்கள். அப்பொது நபி (ஸல்) அவருக்கு அனுமதி அளித்ததை
அடுத்து (அவர் ஒருவரை) மணந்து கொண்டார்.
அறிவிப்வர்: மிஸ்வர் பின் மக்ரமா (ரலி)
நூல் : புகாரி (5320)
கணவன் மரணிக்கும் போது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்து, கணவன் இறந்த அன்றே பிரசவித்து விட்டால் அவளுக்கு இத்தா ஏதும்
கிடையாது.
கணவன் மரணிக்கும் போது முதல் மாதக் கருவை மனைவி சுமந்திருந்தால்
அவள் பிரசவிக்கும் வரை மறுமணம் செய்யக் கூடாது. இதற்கு எட்டு அல்லது ஒன்பது மாதங்கள்
ஆகலாம்.
இவ்வசனத்திலிருந்து இந்தச் சட்டத்தை அறியலாம்.
கொடுமைகளும் மூடநம்பிக்கைளும்
இத்தாக் காலம் என்பது மேற்கூறப்பட்ட நிலையிலுள்ள பெண்கள் மறுமணம்
செய்வதற்காக உள்ள கால கட்டமாகும். அதாவது மேற்கூறப்பட்ட கால கட்டங்கள் நிறைவு பெற்றவுடன்
தான் அவர்கள் மறுமணம் செய்து கொள்ள வேண்டும்.
இக்கால கட்டங்களில் அவர்கள் தங்களுடைய அலங்காரங்களைக் குறைத்துக்
கொள்ள வேண்டும்.
கணவன் இறந்த பின் அவனது மனைவி நான்கு மாதம் பத்து
நாட்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்த நாட்களில் சுர்மா இடவோ மணப் பொருட்களை
பூசவோ சாயமிடப்பட்ட ஆடைகளை அணியவோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டு
தயாரிக்கப் பட்ட ஆடைகளை அணியலாம்.
அறிவிப்பவர் : உம்மு அதிய்யா (ரலி )
நூல் : புகாரி (313)
ஆனால் இன்றைய கால கட்டத்தில் நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில்
இத்தா என்ற பெயரில் பெண்களுக்கு எண்ணற்ற கொடுமைகள் இழைக்கப் படுகிறது.
பெண்களை சூரிய ஒளி கூட படாத வகையில் இருட்டறையில் அடைத்து வைத்து விடுகின்றனர். சில
ஊர்களில் பாய்களால் அறை அமைக்கின்றனர். அதில் சிறிய ஓட்டைகள் இருக்கும். அவர்கள் வானம்
பார்க்கக்கூடாது; வெளிச்சம்
பட்டுவிடக்கூடாது; யாரையும் பார்க்கக்
கூடாது என்பதற்காக அந்த ஓட்டைகளைக் கூட சாணியைப் பூசியும் சிமிண்ட் போன்ற பொருட்களை
பூசியும் அடைத்து விடுகின்றனர். இதற்கு வயதான பெண்களும் விதிவிலக்கல்ல.
அவர்கள் எந்த ஆண்களையும் பார்க்கக் கூடாதாம், அதற்காகத்தான் இவ்வாறெல்லாம் செய்கின்றனர்.
சில ஊர்களில் ஆண் குழந்தைகள் கூட அந்த அறைக்குள் செல்வது கூடாதாம்.
இதை விட மிகக் கொடுமை என்னவென்றால் கர்ப்பிணிப் பெண்கள் கூட அந்த அறைக்குள் செல்லக்
கூடாதாம். ஏனென்றால் அப்பெண்களின் வயிற்றில் ஆண் குழந்தை இருக்கலாமாம். அது அப்பெண்ணை
பார்த்து விடக் கூடாதாம். சில ஊர்களில் பெற்றெடுத்த மகன் கூட இந்த அறைக்குள் தன்னுடைய
தாயைப் பார்ப்பதற்கு தடை உள்ளது.
சமீபத்தில் மேலப்பாளையத்தில் ஒரு பெண்ணின் கணவர் இறந்து விட்டார்.
மனைவி இத்தா இருப்பதாகக் கூறி, எந்த
ஆணின் கண்ணிலும் பட்டு விடாமல் இருந்து வருகின்றாள். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு
திடீரென உடல் நலக் குறைவு ஏற்படுகின்றது. மருத்துவரிடம் சென்று காண்பித்தால் சரி செய்து
விடலாம். ஆனால் இத்தா இருக்கும் போது டாக்டரிடம் செல்வது ஹராம் என்ற தவறான நம்பிக்கையால், அப்பெண்ணை அவரது உறவினர்கள் டாக்டரிடம் காட்டாமலேயே விட்டு விடுகின்றார்கள்.
இறுதியில் நோய் அதிகமாகி டாக்டரிடம் செல்லும் போது அப்பெண் மரணித்து விட்டார். மார்க்கம்
விதிக்காத கட்டுப்பாடுகளைத் தங்களுக்குத் தாங்களே விதித்துக் கொண்டதால் ஓர் உயிர் அநியாயமாகப்
பறி போய் விட்டது.
சில ஊர்களில் கணவன் இறந்ததை அந்த வருடம் முழுவதும் துக்கமாகக்
கொண்டாடுவார்கள். இரு பெருநாட்களுக்கும் புதுத் துணிமணிகள் எடுத்து அணிய மாட்டார்கள்.
நான்கு மாதம் பத்து நாட்கள் என்று கணக்கிட்டு அவர்களை ஓர் அறையில்
அடைத்து விடுவார்கள்.
மாற்று மத சமுதாயங்களில் கணவனை இழந்த பெண்கள் மதிக்கப் படும்
முறையை விட மோசமாக இன்றைக்கு இத்தா என்ற பெயரில் இஸ்லாமிய பெண்கள் இழிவு படுத்தப்படுகின்றனர்.
இத்தா காலகட்டத்தில் உள்ள பெண்களை இருட்டறையில் அடைத்து வைக்க
வேண்டும் என்பதும், அவர்கள் எந்த
ஒரு ஆணையும் பார்க்கக் கூடாது என்பதும் திருமறைக் குர்ஆனின் வழிகாட்டுதலுக்கும் நபி
வழிக்கும் மாற்றமானதாகும்.
பின்வரும் வசனத்தை கவனித்துப் படியுங்கள். இத்தா இருக்கக் கூடிய
பெண்களிடம் ஆண்கள் பேசலாம் அதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
(காத்திருக்கும்
காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம்
இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத்
தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை
திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான்
என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை
மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் 2:235)
நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி
அளித்து விடாதீர்கள்! என்ற வாசகத்திலிருந்து நல்ல சொற்களைக் கூற வேண்டுமென்றால் அவர்களை
நேரில் தான் கூற முடியும்.
இத்தா என்பது தலாக் விடப்பட்ட பெண்ணோ, கணவனை இழந்த பெண்ணோ மறுமணம் செய்து கொள்வதற்குரிய இடைவெளி தானே
தவிர அவர்கள் வீட்டிலிருந்து வெளியில் செல்லக்கூடாது யாரையும் பார்க்கக் கூடாது பேசக்
கூடாது என்றெல்லாம் கூறுவது இஸ்லாத்திற்கு மாற்றமான நடைமுறையாகும்.
என் தாயின் சகோதரி மணவிலக்கு செய்யப்பட்டார்.
அவர் (இத்தா காலகட்டத்தில் இருந்த போது) தமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறிக்க விரும்பினார்.
(இத்தருணத்தில்) நீ வெளியே செல்லக் கூடாதென அவரை ஒருவர் கண்டித்தார். ஆகவே என் தாயின்
சகோதரி நபி (ஸல்) அவர்களிடம் வந்(து தெரிவித்)த போது நபி (ஸல் ) அவர்கள், ஆம் நீ (சென்று)
உமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறித்துக் கொள். ஏனெனில் (அதில் கிடைக்கும் வருமானத்தில்)
நீ தர்மம் செய்யக்கூடும் அல்லது ஏதேனும் நல்லறம் செய்யக் கூடும்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : முஸ்லிம் (2972)
இத்தா இருந்த பெண்ணை ஒருவர் வெளியே செல்லக் கூடாதென கண்டிக்கின்றார்.
அவரும் ஒரு ஆண்தான். மேலும் அப்பெண் நபி (ஸல்) அவர்களிடம் சென்று கேட்கின்றார்கள்.
நபியவர்களும் ஆண் தான்.
எனவே இத்தா இருக்கக் கூடிய பெண்கள் இருட்டறையில் தான் கிடக்க
வேண்டும் என்பது முழுக்க முழுக்க மார்க்கத்திற்கு
மாற்றமானதாகும். ஏனென்றால் நபியவர்களின் காலத்தில் ஒரு பெண் தன்னுடைய வீட்û.ட விட்டு வெளியே சென்று நபியவர்களிடம் வெளியே செல்வதற்கும் அனுமதி
கேட்கிறார்கள். நபியவர்களும் அனுமதி வழங்கி விடுகின்றார்கள்.
இவற்றையெல்லாம் இன்றைய நம்முடைய இஸ்லாமிய சமுதாயத் தவர்கள் சிந்தித்துப்
பார்க்க வேண்டும். இன்றைக்கு தவ்ஹீத் வாதிகள் கூட தங்களுடைய வீட்டுப் பெண்களுக்கு இஸ்லாமிய
முறைப்படி இத்தா காலத்தை நடைமுறைப்படுத்துவதை அனுமதிப்பதில்லை.
மேலும் இத்தா என்ற பெயரில் அமைக்கப்படும் அந்த இருட்டுச் சிறையிலிருந்து
வெளிவரும் போதும் அறியாமைக் காலத்தைப் போன்று எண்ணற்ற மூட நம்பிக்கைகள் நிறைந்து காணப்படுகின்றன்.
சில ஊர்களில் இத்தாவிலிருந்து வெளியே வரக்கூடிய நாளில் காலை
நேரத்தில் யாரும் பார்க்காத அதிகாலை நேரத்திலேயே ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள நீர்
நிலைகள் வயல் வெளிகள் தோப்புகள் போன்ற இடங்களுக்கு சென்று விடுவார்கள். அங்கு நன்றாக
சமைத்து சாப்பிட்ட பின்பு இரவு நேரத்தில் யாரும் பார்க்காதவாறு வீட்டிற்கு வந்து இருட்டறை
ஜெயில் வாழ்க்கையை முடித்துக் கொள்வார்கள்.
இன்னும் சில ஊர்களில் அந்த இருட்டறையிலிருந்து வெளியே வரும்போது
வேறு யாரையும் பார்ப்பதற்கு முன்னால் முதலில் குர்ஆனைப் பார்த்து விட்டு வெளியே வருவார்கள்.
இன்னும் ஊருக்கு ஊர் வித்தியாசமாக பல்வேறு முறைகள் நிலவி வருகின்றன்.
சில ஊர்களில் அவர்களை துணி துவைத்தல், பாத்திரம் பூசுதல் போன்ற ஒரு வேலையைக் கூட செய்ய விடமாட்டார்கள்.
இத்தாவிலிருந்து வெளியே வரும்போது புதுச் சேலையைக் கட்டிக் கொண்டு ஊரிலுள்ள பெரிய தர்காவிற்குச்
சென்று ஃபாத்திஹா ஓதி நேர்ச்சை செய்து அதை முடிப்பதும் உண்டு.
இவையெல்லாம் முழுக்க முழுக்க மார்க்கத்திற்கு மாற்றமான மூட நம்பிக்கைகளாகும்.
இவையெல்லாம கண்டிப்பாக தடுக்கப்பட வேண்டிய, தவிர்க்கப்பட வேண்டியவையாகும்.
நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று
அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்தார்கள். பிறகு "சில மனிதர்களுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் சட்டத்தில்
இல்லாத நிபந்தனைகளை விதிக்கின்றார்களே அல்லாஹ்வின்
சட்டத்தில் இல்லாத எந்த ஒரு நிபந்தனையும் செல்லாததாகும். நூறு முறை நிபந்தனை விதித்தாலும்
சரியே. அல்லாஹ்வின் தீர்ப்பே (ஏற்று) பின்பற்றத்தக்கதாகும். அல்லாஹ்வின் நிபந்தனையே
உறுதியும் கட்டுப்படுத்தும் சக்தியும் வாய்ந்ததாகும்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (2563)
எனவே இது போன்ற மார்க்கத்திற்கு மாற்றமான நடைமுறைகளையும் மூடநம்பிக்கைகளையும்
தவிர்த்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டித் தந்த முறைப்படி நம்முடைய வாழ்வை அமைத்துக்
கொள்வோமாக.
பெண்களின் விவாகரத்து உரிமை
கணவனைப் பிடிக்காத நிலையில் ஒரு மனைவி அவனிடமிருந்து பிரிந்து
மறு வாழ்வு அமைத்துக் கொள்ள இஸ்லாம் பல உரிமைகளை வழங்கியுள்ளது. அவற்றில் ஒன்று தான்
குல்உ எனப்படுவதாகும்.
இந்தச் சட்டம் மத்ஹபுகளில் இருந்தாலும் கூட மத்ஹபுகளைப் பின்பற்றுவதாகக்
கூறிக் கொள்வோர் இதை நடைமுறைப் படுத்துவதில்லை.
ஒரு பெண் தன் கணவரோடு வாழப் பிடிக்காமல் தன்னைப் பிரித்து வைக்குமாறு
அந்தப் பகுதியின் ஜமாஅத்தாரிடம் முறையிட்ட போது, அவர்கள் ஹனபி மத்ஹபின் படி கணவன் தலாக் விட்டால் தான் பிரிய
முடியும் என்று கூறி மறுத்து விட்டனர். அந்தப்
பெண் தவ்ஹீத் ஜமாஅத்தை அணுகி மார்க்கத் தீர்ப்பு பெற்று கணவனைப் பிரிந்தார். ஆயினும்
கணவன்,
நான் தலாக் விடவில்லை என்பதால் என் மனைவி என்னோடு தான் சேர்ந்து
வாழ வேண்டும் என்று நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தற்போது கணவன், மனைவி இருவரும் கோர்ட்டுக்கு அலைந்து கொண்டிருக்கின்றனர்.
இஸ்லாத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விவாக ரத்து உரிமை
சமுதாயத்தில் பெரும்பாலான மக்களுக்குத் தெரியாமல் இருப்பதால் அவர்கள் தங்கள் வாழ்க்கையை
வீணடித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதற்காகவே இதை இங்கு குறிப்பிட்டுள்ளோம். எனவே
இந்த குல்உ எனப்படும் பெண்களின் விவாக ரத்து உரிமையைப் பற்றி இங்கு விளக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
குல்உ என்றால் என்ன?
1. ஒரு பெண்ணுக்குத்
தனது கணவனைப் பிடிக்கவில்லை என்றால் அவள் அந்தப் பகுதியின் தலைவரிடமோ அல்லது இஸ்லாமிய
ஆட்சியின் கீழ் இருந்தால் ஆட்சித் தலைவரிடமோ முறையிட வேண்டும்.
2. அவள் திருமணத்தின்
போது கணவனிடமிருந்து மஹராகப் பெற்ற பொருட்கள் அனைத்தையும் கணவனிடம் திருப்பி ஒப்படைக்குமாறு
தலைவர் அவளுக்குக் கட்டளையிட வேண்டும்.
3. அந்த மஹரைப்
பெற்றுக் கொண்டு உடனே அவளைப் பிரிந்து விடுமாறு அந்தக் கணவருக்கு தலைவர் கட்டளையிட
வேண்டும். அந்தக் கட்டளைக்கு அவன் கட்டுப்படா விட்டாலும் தலைவர் அந்தத் திருமணத்தை
ரத்து செய்வார்.
4. மஹராகக்
கொடுத்ததை விட எதையும் அதிகப்படியாக கணவன் கேட்க முடியாது.
5. கணவனைப்
பிடிக்காத மனைவி அதற்குரிய காரணத்தைச் சொல்ல வேண்டியதில்லை.
6. கணவனே தலாக்
கூறும் போது மூன்று மாதவிடாய் காலத்துக்குள் அவளைத் திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமை
இருப்பதைப் போல் குல்உ செய்து பிரியும் போது திரும்ப அழைக்க முடியாது.
7. தலாக் விடப்படும்
போது மூன்று மாதவிடாய் வரை அவள் மறு மணம் செய்யக் கூடாது. ஆனால் குல்உ அடிப்படையில்
பிரியும் போது ஒரே ஒரு மாதவிடாய் வரும் வரை அவள் மறுமணம் செய்யக் கூடாது. அதன் பிறகு
அவள் மறுமணம் செய்யலாம்.
8. இவ்வாறு
பிரிந்த பின் இருவரும் சேர்ந்து வாழ விரும்பினால் அவர்கள் மீண்டும் திருமணம் செய்து
கொள்ள வேண்டும்.
இவை தான் குல்உ என்பதன் விதிமுறைகளாகும். முஸ்லிம் பெண்களில்
பெரும்பாலோருக்கும், சமுதாயத் தலைவர்களுக்கும்
இந்தச் சட்டங்கள் தெரியாததாலும், கல்லானலும்
கணவன்,
புல்லானாலும் புருஷன் என்ற போலித்தனத்தில் அவர்கள் ஊறிப் போய்
விட்டதாலும் பெண்கள் இன்று கொடுமைப் படுத்தப் படுகின்றனர்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித்
பின் கைஸ்(ரலி)யின் மனைவி நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின்
தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில்
இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்'' என்றார்.
(அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்கிறார்)
உடனே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் "அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது
தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?'' என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி "சரி'' என்றார்.
உடனே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் "தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு
அவளை ஒரேயடியாக விடுவித்து விடு'' என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி),
நூல்கள்: புகாரி 5273, நஸயீ 3409
ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் ஜமீலா எனும் தம்
மனைவியை அடித்தார். அவரது கை ஒடிந்து விட்டது. இதைக் கண்ட அப்பெண்மணியின் சகோதரர் அன்றைய
சமுதாயத் தலைவரான நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்டார். நபிகள் நாயகம்(ஸல்)
அவர்கள் ஸாபித் பின் கைஸை அழைத்து வரச் செய்து, "அவள் உமக்குத் தர வேண்டியதை(மஹரை)ப் பெற்றுக்
கொண்டு அவளை அவள் வழியில் விட்டு விடுவீராக!'' என்றார்கள். அவர் "சரி'' என்றார்.
அப்பெண்மணியிடம் "ஒரு மாதவிடாய்க் காலம் வரை (திருமணம் செய்யாமல்) பொறுத்திருக்குமாறும்
தாய் வீட்டில் சேர்ந்து கொள்ளுமாறும் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: ருபய்யிஃ(ரலி)
நூல்: நஸயீ 3440
இந்த ஹதீஸ்களில் அந்தப் பெண்மணி தன் கணவரைப் பற்றி எந்தக் குறையையும்
கூறவில்லை. மாறாக அவரது நடத்தையையும், நற்பண்புகளையும் புகழ்ந்தே கூறுகின்றார். தான் கணவரை விட்டுப்
பிரிய விரும்புவதற்கு எந்தக் காரணத்தையும் கூறவில்லை. இஸ்லாத்தில் இருந்து கொண்டே இறைவனுக்கு
மாறு செய்து விடுவேனோ என்று அச்சமாக உள்ளதையே காரணம் காட்டுகின்றார்.
கணவனைப் பிடிக்காது பிரிந்து செல்ல விரும்பும் மனைவி தெளிவான
காரணம் எதையும் கூற வேண்டியதில்லை என்பதையும், தனக்குப் பிடிக்கவில்லை என்று கூறினாலே போதுமானது என்பதையும்
இந்த ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.
கணவன் தலாக் கூறினால் தான் குல்உ நிறைவேறும் என்று சிலர் கூறுகின்றர்.
ஆனால் இது ஏற்கத்தக்கதல்ல.
கணவனால் கொடுமை படுத்தப்படும் பெண் அவனிடமிருந்து பிரிய விரும்புகின்றாள்.
இந்த நிலையில் அவன் மறுக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் தலாக் விட்டால் தான்
அவள் பிரிய வேண்டும் என்றால் காலமெல்லாம் அவள் கொடுமைப் படுத்தப்பட்டுக் கொண்டே இருக்க
வேண்டிய நிலை ஏற்படும்.
கொடுமைகள் நிகழும் போது அதைத் தடுக்கக் கடமைப்பட்டுள்ள தலைவரும்
அதைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். தொடர்ந்து பெண்களுக்கு அக்கிரமம் செய்யப்படுவதை
இஸ்லாம் அனுமதிக்குமா? அநியாயத்தையும்
அக்கிரமத்தையும் எதிர்த்துப் போராடுமாறும் முடியுமானால் கையால் தடுக்க வேண்டும் எனவும்
கூறும் இஸ்லாம் இந்த அக்கிரமத்தை அனுமதிக்குமா? இந்தக் கோணத்தில் பார்த்தாலும் குல்உ என்பதற்கு அந்தக் கணவனின்
சம்மதமோ,
அவனது தலாக்கோ தேவையில்லை என்பது தெளிவாகின்றது.
இஸ்லாம் திருமணத்தை ஒரு ஒப்பந்தம் என்று கூறுகின்றது.
"உங்களிடம்
கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும்
நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்?''
(அல்குர்ஆன் 4:21)
"பெண்களுக்குக்
கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன''
(அல்குர்ஆன் 2:228)
திருமணத்தை முறித்துக் கொள்ள கணவனுக்கு இருப்பது போன்று மனைவிக்கும்
உரிமை இருப்பதை இந்த வசனங்கள் மறைமுகமாகக் குறிப்பிடுகின்றன. கணவன் தலாக் விட்டால்
தான் அவள் பிரிய முடியும் என்றால் பெண்ணுக்கு இந்த உரிமை வழங்கப் பட்டதில் என்ன அர்த்தமிருக்க
முடியும்?
இது போன்ற காரணங்களால் கணவன் தலாக் கூறினால் தான் அவளால் பிரிய
முடியும் என்பதை ஏற்க முடியவில்லை. எவ்வளவு பெரிய இமாம்கள் அந்தக் கருத்தைக் கூறியிருந்தாலும்
அதைத் தூக்கி எறிய வேண்டியது தான்.
பெரும் மார்க்க அறிஞர்கள் எனப்படும் பலரும் இந்த விஷயத்தில்
சறுக்கியுள்ளனர். பெண்களின் நிலையிலிருந்து சிந்தித்தால் இதை அவர்கள் உணர்ந்திருப்பார்கள்.
குல்உ தொடர்பான மற்ற ஆதாரங்களைக் காண்போம்.
இப்னு மாஜாவில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் 2332வது ஹதீஸில், "அவரது தோட்டத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். அதை விட அதிகமாகப்
பெற்றுக் கொள்ளக் கூடாது'' என்று நபி
(ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
கொடுத்த மஹரை விட வேறெதனையும் அந்தக் கணவன் கேட்க முடியாது.
தலைவரும் வற்புறுத்த முடியாது என்பதற்கு இது சான்றாக அமைந்துள்ளது.
"ஒரேயடியாக அவளைப் பிரிந்து விடு'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து திரும்ப அழைக்கும்
உரிமை கணவனுக்கு கிடையாது என்பதும் தெளிவாகின்றது.
ஆக பெண்கள் தங்கள் கணவனிடமிருந்து பிரிவதாக இருந்தால் ஜமாஅத்தில்
முறையிட வேண்டும். ஜமாஅத் தலைவர் அந்தத் திருமணத்தை
ரத்து செய்ய வேண்டும். ஆண் சார்பு நிலையிலிருந்து ஜமாஅத்தினர் விடுபட்டு அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலைச் செயல்படுத்த வேண்டும்.
கணவனைப் பிடிக்காமல், பிரியவும் வழி தெரியாமல் வாழ வெட்டிகளாகப் பிறந்த வீட்டில் கண்ணீர்
வடிக்கும் அபலைப் பெண்களின் உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டும். இஸ்லாம் வழங்கியுள்ள
இந்த உரிமையை மறுப்பதன் மூலம் அவர்கள் விபச்சாரம் போன்ற தகாத உறவுகளில் ஈடுபட்டால்
அவர்களுக்கு நியாயத்தை மறுத்த மொத்த சமுதாயமும் அந்தக் குற்றத்தில் பங்கேற்க வேண்டிய
நிலை ஏற்படும்.
கணவன் தலாக் விடாத வரை அந்த உறவை ரத்துச் செய்ய முடியாது என்று
அஞ்சும் ஜமாஅத் தலைவர்களுக்காக ஒரு முக்கியமான ஹதீஸைச் சமர்ப்பிக்கிறோம்.
அப்துல்லாஹ்வுடைய மகள், ஸாபித் என்பாருக்கு
மனைவியாக இருந்தார். அவர் அப்பெண்ணுக்கு ஒரு தோட்டத்தை மஹராக வழங்கியிருந்தார். (அந்த
வழக்கு வந்த போது) "உனக்கு அவர் தந்துள்ள தோட்டத்தைத் திருப்பிக் கொடுக்கிறாயா?'' என்று நபி
(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, "ஆம். அதை விட அதிகமாகவும் கொடுக்கிறேன்'' என்றார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "அதிகமாக வேண்டாம். அவரது தோட்டத்தை மட்டும் கொடு'' என்றார்கள்.
அப்பெண் சரி என்றதும், ஸாபிதின் சார்பாக நபி (ஸல்) அவர்களே தோட்டத்தைப்
பெற்றுக் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்களின் தீர்ப்பு ஸாபிதுக்குத் தெரிய வந்த போது, "அல்லாஹ்வின்
தூதருடைய தீர்ப்பை நான் ஏற்கிறேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுஸ்ஸுபைர்
நூல்: தாரகுத்னீ 39
கணவனின் தலாக்கைப் பெறாமல் நபியவர்களே மஹரைப் பெற்றுக் கொண்டு
ரத்து செய்கின்றார்கள். இந்தச் செய்தி சம்பந்தப்பட்டவருக்கே பிறகு தான் தெரிகின்றது
என்றால் ஜமாஅத் தலைவருக்கு உள்ள உரிமையையும் கடமையையும் தெளிவாக அறிய முடிகின்றது.
பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையினால் மாற்றார்கள் இஸ்லாத்தை
விமர்சிப்பது ஒரு புறமிருக்க, நமது
சமுதாயத்துப் பெண்களில் விபரமறிந்தவர்களும் இஸ்லாத்தை விமர்சிக்க இடமளித்து விடக் கூடாது.
பெண்களுக்கு உள்ள இந்த உரிமையைப் பெண்கள் அறிவதற்கு ஏற்பாடு
செய்வதும் ஜமாஅத் தலைவர்களுக்கு இந்தச் சட்டம் பற்றி விளக்குவதும் தவ்ஹீத் சகோதரர்களின்
கடமைகளில் ஒன்றாகும்.
பெண்களுக்கு விவாகரத்துச் செய்யும் உரிமை வழங்கப்படா விட்டால்
அதனாலும் பல தீய விளைவுகள் ஏற்படும்; ஏற்படுகின்றன.
கணவனைப் பிடிக்காத பெண்கள் விவாகரத்துச் சட்டம் கடுமையாக இருப்பதால்
கணவரையே கொலை செய்யும் நிகழ்ச்சிகள் அதிகமாகி வருகின்றன.
பெண்கள் ஸ்டவ் வெடித்துச்
செத்தால், விஷம் கொடுக்கப்பட்டு
கணவர்கள் கொல்லப்படுகிறார்கள். நன்றாகத் தான் படுத்தார். காலையில் பிணமாகி விட்டார்
என்று கூறப்படுவதில் கனிசமானவை மனைவியரால் செய்யப்படும் கொலைகளாகும். சமையல் அவர்கள்
கையில் இருப்பதால் எளிதாகக் கதையை முடிக்கிறார்கள்.
அல்லது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை வெட்டிக் கொலை செய்கின்றனர்.
கணவனிடமிருந்து எளிதாக விவாகரத்துப் பெற்று, தனக்கு விருப்பமானவனைச் சட்டப்படி மணந்து கொள்ள வழியிருந்தால்
இது போன்ற கொடூரம் நடைபெறாது.
எனவே தான் ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் விவாகரத்துச்
சட்டத்தை இஸ்லாம் மிக மிக எளிமையாக்கியுள்ளது.
ஆண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைக்குச் சற்றும் குறைவில்லாத வகையில்
இஸ்லாம் பெண்களுக்கும் உரிமை வழங்கியுள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.
EGATHUVAM JUL 2005