Mar 28, 2017

சந்தர்ப்பவாதம் சத்தியத்தைச் சமர்ப்பிக்குமா?

சந்தர்ப்பவாதம் சத்தியத்தைச் சமர்ப்பிக்குமா?

சந்தர்ப்பவாதக் கூட்டணியை விமர்சித்து ஏகத்துவத்தில் நாம் தலையங்கம் எழுதியிருந்தோம். சத்தியத்தைச் சமர்ப்பித்தல் சந்தர்ப்ப வாதமாகுமா? என்று கேள்வி எழுப்பி ஓர் இதழ் தனது பதிலைச் சமர்ப்பித்துள்ளது.

இந்த மேடையில் பேசுவேன், அந்த மேடையில் பேச மாட்டேன் என்ற வீராப்பு வசனங்கள், இத்தடுமாற்றங் கள் தகர்த்தெறியப்பட வேண்டும். இறை நம்பிக்கையாளர்களைப் பொறுத்த வரை ஷிர்க், குஃப்ர், பித்அத் ஆகிய கொடிய விஷயங்களை ஒழிப்பதில் வீராப்பாக இருக்க வேண்டும். இப்புனிதப் பணிக்காக ஒரு சாரார் அழைக்கும் போது நாங்கள் அவர்களிடம் வர மாட்டோம் என்று அடம் பிடித்தால் அது பெருமைக்குரிய பேச்சோ, அறிவார்ந்த செயலோ அல்ல.

இது தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு பற்றிய இவர்களது விமர்சனமாகும். இந்த நிலைபாடு இன்று நேற்று எடுக்கப்பட்ட ஒன்றல்ல! ஏகத்துவப் பிரச்சாரத்தில் மற்றவர்களுடன் மேடையைப் பகிரும் போது ஏற்படும் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து கடைப்பிடித்து வரும் நடைமுறையும் நிலைபாடுமாகும். இதைத் தான் இவர்கள் மேற்கண்டவாறு விமர்சித்துள்ளார்கள்.

நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமை யாகத் தண்டிப்பவன்.
(அல்குர்ஆன் 5:2)

திருக்குர்ஆனின் இந்த வசனத்தை, தங்களது கருத்துக்குச் சான்றாகவும் சமர்ப்பித்துள்ளார்கள். நஜ்ஜாஷி மன்னரிடம் நபித்தோழர்கள் சென்று சத்தியத்தை எடுத்துச் சொன்ன சம்பவத்தையும், ஹஜ்ஜுக்கு வருவோரிடம் நபி (ஸல்) அவர்கள் சத்தியத்தை எடுத்துச் சொன்னதையும் இதற்குச் சான்றாக்கி உள்ளனர்.

நமக்கு இதில் மாற்றுக் கருத்து ஒருபோதும் கிடையாது. நாம் ஏதோ மாற்றுக் கருத்துடையவர்களுக்கு மத்தியில் போய் பேசுவதற்குத் தடைகளையும், தேவையற்ற நிபந்தனைகளையும் போட்டு சத்தியத்தைச் சொல்வதற்குத் தடையாக இருக்கிறோம் என்பது போன்ற பொய்யான தோற்றத்தைக் காட்ட முயற்சி செய்துள்ளனர்.

அல்லாஹ்வின் அருளால் மாற்றுக் கருத்துடையவர்களுக்கு மத்தியில் போய் சத்தியக் கருத்துக்களைச் சொல்வதற்கு நாம் கொஞ்சம் கூட சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!

சத்தியத்தை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதா? வேண்டாமா? என்பது நமக்கிடையே பிரச்சனை இல்லை. நம்மை விமர்சிக்கும் இவர்கள் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதை விட அல்லாஹ்வின் அருளால் வீரியமாக, பரவலாக நாம் மார்க்கத்தை எடுத்துச் சொல்லி வருகிறோம். எங்கே போய்ச் சொன்னால் எதிர்ப்பும் பிரச்சனைகளும் அதிகம் வருமோ அங்கே போய்ச் சொல்லி வருகிறோம். எனவே மாற்றுக் கருத்து உடையவர்களுக்கு சத்தியத்தை எடுத்துச் சொல்லலாமா? கூடாதா? என்பது ஒரு காலத்திலும் நமக்கிடையே பிரச்சனையாக இருந்ததில்லை.

மாற்றுக் கருத்துடையவர்களை, தவறான கொள்கை உடையவர்களை பிரச்சாரகர்களாகவும், உண்மையைப் பேசுபவர்களாகவும் அறிமுகம் செய்யலாமா? என்பது தான் பிரச்சனை.

நஜ்ஜாஷி மன்னருக்குத் தான் நபித்தோழர்கள் இஸ்லாத்தை எடுத்துச் சொன்னார்களே தவிர நஜ்ஜாஷியின் பயானை நபித்தோழர்கள் கேட்கவில்லை. அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.

நஜ்ஜாஷி மன்னருக்குப் பத்து நிமிடம், நபித்தோழருக்குப் பத்து நிமிடம் உரை நிகழ்த்த வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து, நஜ்ஜாஷியை மார்க்கப் பிரச்சாரகராக எந்த நபித்தோழரும் அங்கீகரிக்கவில்லை.

எனவே பிரச்சனை என்னவென்று தெளிவாகத் தெரிந்தும் திசை திருப்புகின்றார்கள். கொள்கை கெட்டவர்களுக்கு மார்க்கத்தைச் சொல்வது வேறு. கொள்கை கெட்டவர்களை மார்க்கப் பிரச்சாரம் செய்வோராக அங்கீகரிப்பது வேறு.

ஏகத்துவத்திற்குப் பதில் சொல்ல வந்தவர்கள் ஒரு வித்தியாசத்தைக் காணத் தவறி விட்டார்கள். இங்குள்ள விவகாரம் நாம் யாரிடம் போய் கருத்துக்களைச் சொல்கிறோம் என்பதல்ல! யாருடன் சேர்ந்து சொல்கிறோம் என்பது தான்.

நம்முடன் மேடையில் பகிர்பவர்கள், அதுவும் மார்க்கப் பிரச்சார மேடையில் பகிர்பவர்கள் ஏதாவது ஒரு ஷிர்க்கான அல்லது பித்அத்தான கருத்தைச் சொல்லி விடுவார்கள். இவ்வாறு சொல்பவர்கள் நாம் பேசுவதற்கு முன்னதாகப் பேசியிருந்தால், அவரை அடுத்து நாம் பேசும் போது அதற்குப் பதில் அளித்து விடலாம். அப்படிப் பதிலளிக்கும் போது கூட மேடையில் இருப்பவர்களும், எதிரில் இருப்பவர் களும் புழுவாக நெளிவார்கள். புருவங்களைச் சுருக்குவார்கள். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நாம் நமது உரையில் பதில் சொல்லி விடலாம்.

அதே சமயம், நமக்குப் பின்னால் அவர்கள் பேசும் வாய்ப்பு ஏற்பட்டால் நமது பேச்சை மறுப்பதுடன், அவர்களது ஷிர்க்கான வாதத்தை நிலை நாட்டி விட்டுச் சென்று விடுவார்கள். இறுதியில் மக்களின் மனங்களில் நிற்பது இறுதிப் பேச்சாளரின் உரை தான். இது நமக்குத் தேவையா? இவர்கள் எடுத்துக் காட்டும் அதே அல்குர்ஆன் 5:2 வசனத்தின் படி இது பாவத்திற்குத் துணை போவதாக ஆகாதா? இதை நடுநிலையோடு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மார்க்கத்திற்கு முரணான கருத்துக்கள் சொல்லப்படும் சபையில் அமர்வது கூடாது என்பதைப் பின்வரும் வசனம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப் படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர் களே என்று இவ் வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர் களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் அல்லாஹ் நரகில் ஒன்று சேர்ப்பான்.(அல்குர்ஆன் 4:140)

ஒழுக்க வாழ்வே அழைப்புப் பணியின் அடிப்படை

நாம் யாருடன் பேசுகின்றோம் என்பது இந்த ஒரு கோணத்திலும் கவனிக்கப்பட வேண்டிய அம்சமாகும். நம்முடன் இணைந்து பிரச்சாரம் செய்பவர்கள் ஒழுக்கத்திலும், நன்னடத்தையிலும் சிறந்து விளங்க வேண்டும். இல்லையேல், அதைக் காரணம் காட்டியே நமது கருத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

அதனால் தான் எல்லாம் வல்ல அல்லாஹ், நபி (ஸல்) அவர்களிடம், உங்களிடம் இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேன். விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 10:16) என்று கேட்குமாறு கூறுகின்றான். அதாவது இறைத் தூதை எடுத்துச் சொல்பவர்களுக்கு உரிய முதலீடே ஒழுக்க வாழ்வு தான். அந்த ஒழுக்க வாழ்வில் ஓட்டை விழுந்து விட்டால் அழைப்புப் பணியும் ஓய்ந்து விடும்.

பொருளாதார மோசடி நிரூபிக்கப் பட்டவர்கள், அடுத்தவன் மனைவி யுடன் அந்தரங்கத்தில் தொடர்பு கொண்டவர்கள், பகிரங்கமாக அடுத்தவன் மனைவியை அபகரித்துச் சென்றவர்கள் போன்றோருடன் மேடையில் பேசும் போது அவர்கள் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பு நம் மீதும் சேர்த்தே பாயும். அதனால் அன்றோடு மக்கள் நமது கருத்தை நிராகரித்து விடுவார்கள். அதன் பிறகு நாம் தனியாக மேடை போட்டுப் பேசினாலும் எடுபடாமல் போய் விடும்.

"நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும், கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப் பவரிடமிருந்து உமக்கு எதுவும் கிடைக்காமல் போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம். கொல்லனின் உலை உமது வீட்டையோ, உமது ஆடையையோ எரித்து விடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையைப் பெற்றுக் கொள்வீர்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி), நூல்: புகாரி 2101, 5534

இந்த ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அற்புதமாகக் குறிப்பிட்டுள்ள கதி தான் ஒழுக்க வாழ்வில் சரியில்லாதவர்களுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்யும் போது நமக்கும் நேரிடும். அல்லாஹ் காப்பானாக!

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தான் அவர்களுடைய மேடைகளில் நாம் அமருவதில்லை. இதே காரணத்துக்காகத் தான் மேடைக் கட்டுப்பாடு நம்மிடம் இருந்தால் கூட ஷிர்க் வாதிகளை ஏற்றுவதற்கு நாம் மிகப் பெரிய தயக்கம் காட்டுகின்றோம்.

அவர்களது உரையின் துவக்கமும், அதன் மையக் கருத்தும், முடிவும் சதா ஷிர்க்கான வார்த்தைகளை அடிப்படை யாகக் கொண்டே அமையும். அதனால் தான் இதைத் தவிர்க்கின்றோமே தவிர வேறு காரணம் இல்லை.

யார் அழைத்தாலும் சென்று சத்தியத்தைச் சொல்வோம் என்று பெயருக்குச் சொல்லிக் கொள்கி றார்களே தவிர யாரிடம் எந்தத் தீமையைச் சுட்டிக் காட்ட வேண்டுமோ அதைச் சுட்டிக் காட்டுவதில்லை.

உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியா விட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியா விட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூஸயீதுல்குத்ரீ (ரலி), நூல்: முஸ்லிம் 70

இந்த ஹதீஸின் அடிப்படையில் தீமையைக் கண்டால் அதைத் தடுக்க வேண்டும். முடியாவிட்டால் அதை விட்டு விலகி ஒதுங்கி இருப்பது தான் ஈமானின் இறுதி நிலை. ஆனால் இந்த சந்தர்ப்பவாதிகள் அதைச் செய்வதில்லை.

கொடி, கோஷம் கூடாது, அரசியல் வழிகேடு, காஃபிர்களிடம் போய் இட ஒதுக்கீடு கேட்பதா? என்றெல்லாம் கூறும் இவர்கள், அவற்றைக் கொள்கையாகக் கொண்ட இயக்கத்தினர் பேச அழைக்கும் போது, அவர்களிடம் போய் அந்தத் தீமைகளை முதலில் எடுத்துச் சொல்ல வேண்டும். அதை விட்டு விட்டு அவர்களது மனம் புண்படாமல் கூட்டணி உடையாமல் பேசி விட்டு வருவது தான் சத்தியத்தைச் சமர்ப்பிக்கும் லட்சணமா?

இயக்கங்கள் அனைத்தும் வழிகேடு என்று ஒருவர் வரிந்து கட்டிக் கொண்டு கூறுகின்றார். அவரை அழைத்து ஒரு இயக்கத்தினர் பேசச் சொல்கின்றார்கள். இவர் என்ன பேச வேண்டும்? ஒருவனிடம் எந்தத் தீமை இருக்கின் றதோ அதைச் சுட்டிக் காட்டுவது தான் தீமையைத் தடுப்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த வழி. ஆனால் அதைச் செய்யாமல் தனக்குத் தரப்பட்ட தலைப்பை மட்டும் பேசி விட்டு வந்து விடுவாராம்.

எது சந்தர்ப்பவாதம் என்று பட்டி மன்றம் நடத்தினால் வெட்கத்தால் பொய்ப் பிரச்சாரகர்களின் இருக்கை ஆட்டம் கண்டு விடும். ஏகத்துவக் கொள்கைச் சகோதரர்களால் நடத்தப்பட்ட இஸ்லாமிய நிகழ்ச்சி களில் தர்கா வணங்கிகளையும் தாயத்து அணிபவர்களையும் முஷ்ரிக்கீன், இணை வைப்பாளர்கள் என்று சாடி விட்டு அரசியல் கூட்டங்களில் அவர்களையும் மேடையில் தமக்கு அருகில் அமர்த்திக் கொண்டு உரையாடி புன்னகைத்து இந்த முஸ்லிம்களின் உரிமைக்காகப் போராடுகின்றோம் என்று முழங்கியது தான் சந்தர்ப்பவாதம்.

இவர்களது சந்தர்ப்பவாதக் கூட்டணியை நாம் விமர்சித்ததற்கு இவ்வாறு பதில் எழுதியுள்ளார்கள்.

எது சந்தர்ப்பவாதம் என்று நாம் சாதாரணமாகச் சொல்லவில்லை. இவர்களது நடவடிக்கைகளைக் கவனித்த பிறகு தான் கூறினோம். பட்டி மன்றம் நடத்தினால் ஆட்டம் கண்டு விடும் என்று கூறுகின்றார்கள். நாம் இவர்களிடத்தில் கனிவாகக் கேட்டுக் கொள்வதெல்லாம் தயவு செய்து அத்தகைய பட்டி மன்றத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்பது தான். நீங்கள் கூட செய்ய வேண்டாம். ஒப்புதல் தந்தால் நாமே ஏற்பாடு செய்கின்றோம். எது சந்தர்ப்பவாதம் என்பதை மேடை போட்டு விவாதிப்போம். அது தான் பொய் பிரச்சாரகர்களை அடையாளம் காட்டி ஆட்டம் காணச் செய்யும்.

இப்போது அவர்களது விமர்சனத்திற்கு வருவோம்.

காலத்தின் கட்டாயம்

பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குப் பிறகு ஏற்பட்ட சூறாவளியில் முஸ்லிம்களுக்கு என்று அரசியல் ரீதியிலான ஓர் அமைப்பு தேவைப்பட்டது. அரசியல் அமைப்பை, ஏற்கனவே நாம் இருந்த அந்த அமைப்பின் கீழ் இருந்து கொண்டு செயல் படுவோம் என்றெல்லாம் அந்த "அமீரிடம்'     நாம் கெஞ்சினோம். ஆனால் அதையெல்லாம் அவர் ஏற்றுக் கொள்ளவேயில்லை. சவூதிய சம்பளத்திற்கு சமுதாயப் போராட்டம் ஆப்பு வைத்து விடும் என்று அஞ்சியோ என்னவோ ஒரேயடியாக மறுத்து விட்டார்.

அதனால் தான் அப்படி ஒரு தனி அமைப்பைக் காண வேண்டியது காலத்தின் கட்டாயமானது. இருப்பினும் இணை வைப்பவர்களுடன் மேடையில் அமரும் போதெல்லாம் ஏகத்துவத்திற்கு எந்த ஒரு ஆபத்தும் வந்து விடக் கூடாது என்பதில் குறியாக இருந்திருக்கின்றோம்.

அரசியல் தலைவர்களை மேடையில் வைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தோம் என்றால் அதை நாம் இன்றைக்கும் செய்வோம். தேவைப்பட்டால் எதிர்காலத்திலும் செய்வோம். ஏனென்றால் அவர்களுடன் மேடையேறிப் பேசும் போது, அவர்களை மார்க்கப் பிரச்சாரகர்களாக அங்கீகரிப்பதோ, அறிமுகம் செய்வதோ இல்லை.

அந்த நிலையிலும் வரம்பு மீறாமல் மார்க்கத்தின் எல்லையைக் கடக்காமல், மார்க்கத்தின் பெயரால் எந்தக் கருத்தையும் பேச விடாமல் விழிப்போடு இருந்திருக்கின்றோம்.

கொள்கை கெட்டவர்களை மார்க்கத்தின் பிரச்சாரகர்களாக அறிமுகம் செய்வதற்கும் இதற்கும் உள்ள வித்தியாசத்தை உணராமல் இவ்வாறு எழுதியுள்ளனர்.

இணை வைப்பவர்களுக்கும் நமக்கும் பொதுவான அரசியல் மற்றும் சமுதாய ரீதியிலான பிரச்சனைகளில் மட்டும் ஓர் ஒப்பந்த அடிப்படையில் ஒன்றாய் இருந்திருக்கின்றோம்.

மற்ற விஷயங்களில் இப்ராஹீம் (அலை) அவர்களின் முன் மாதிரியை கொஞ்சம் கூட விடாது கடைப் பிடித்திருக்கின்றோம்.

இணை வைக்கும் இமாமுக்குப் பின்னால் நின்று இதுவரை தொழுததில்லை.

விரலசைத்தல் போன்ற சுன்னத்துக்களை நடைமுறைப் படுத்தும் விஷயத்தில் எள்ளளவும் விட்டுக் கொடுத்து விடவில்லை.

அவர்களுக்கும் நமக்கும் மத்தியிலுள்ள உலக ரீதியிலான விஷயங்களில் ஒன்று பட்டு பேசிய அதே இடத்தில் ஷிர்க், பித்அத் மற்றும் மத்ஹப் போன்ற விஷயங்களைப் போட்டு உடைக்கத் தயங்கியதில்லை.

இன்னும் சொல்லப் போனால்  ஏகத்துவக் கொள்கைவாதிகள், ஏகத்துவக் கொள்கையில் உள்ள பெண்களைத் தான் திருமணம் முடிக்க வேண்டும் என்று கூட கூறி வருகின்றோம்.

இவையெல்லாம் நடந்தது அந்தச் சமுதாய அமைப்பில் இருக்கும் போது தான். அதை விட்டு வெளியே வந்த பிறகு அல்ல.

கொள்கையை விட்டு நழுவி வழிகேட்டில் விழ வாய்ப்புகள் எத்தனையோ வரவேற்றுக் கொண்டி ருக்கும் கட்டத்தில் கொள்கையில் வழுவாது நின்றோம். அந்தக் கொள்கையை விட்டுப் பிரிந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் கடிவாளங்களை, கட்டுப்பாடுகளைப் போட்டோம். ஒரே ஒரு தஞ்சைப் பேரணி தான் அவர்களது உள்ளத்தில் நஞ்சைக் கலக்கியது.

இந்த மக்கள் கூட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் தவ்ஹீதின் தடம் தெரியாமல் ஆக்க வேண்டும் என்று தவ்ஹீதுவாதிகளை வெளியே தள்ளினர். அவர்கள் வெளியே தள்ளப்பட்டதும் கொடி, கோஷம் பிடிக்காத இந்தக் கொள்கை இயக்கம் (?) போய் அந்த இயக்கத்துடன் கை கோர்த்துக் கொண்டது? இதற்குப் பெயர் தான் சத்திய சமர்ப்பணமா? இது கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம் இல்லையா?

மார்க்க மேடைகளில் இணை வைப்பவர்களை விமர்சித்து விட்டு, இரண்டு தரப்பினருக்கும் ஒத்த கருத்துள்ள ஒரு மேடையில் ஒன்றிணைவது சந்தர்ப்பவாதமா? அல்லது நீங்கள் எதைக் கூடாது  என்று கூறுகின்றீர்களோ, எதைச் சந்தர்ப்பவாதம் என இன்று வரை கூறுகின்றீர்களோ அத்தகைய சந்தர்ப்பவாதிகள் அமைக்கும் மேடையில் போய் பேசுவது சந்தர்ப்பவாதமா?

இணை வைப்பு ஆலிமை மேடையில் ஏற்றியது, ஏகத்துவக் கொள்கையைக் கொண்ட பெண்களைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய போது அதை ஒரு கூட்டம் எதிர்த்தது, அடுத்தவன் மனைவியுடன் சேர்ந்து வாழ்க்கை நடத்தியது, பள்ளியின் நிர்வாகியாக இருந்து கொண்டு பள்ளிவாசல் பக்கமே எட்டிப் பார்க்காமல் இருந்தது ஆகியவை தான் மேலப்பாளையத்தில் பிரச்சனை ஏற்படக் காரணமாக அமைந்தது.  இன்று வரை இணை வைப்பு ஆலிம்களுக்கு வக்காலத்து வாங்கும் இவர்களிடத்தில் என்ன சத்தியம் இருக்கின்றது? கொள்கை, கோட்பாடு இருக்கின்றது?

எந்தப் பிரச்சனைகள் எங்களையும் அவர்களையும் பிரித்ததோ, அது இவர்களை மட்டும் அவர்களுடன் சேர்த்து வைக்கின்றது.

இவர்கள் எதனைச் சந்தர்ப்பவாதம் என்று கூறுகின்றனர்? நாங்கள் அதை விட்டு வெளியே வரும் போது அதைச் சந்தர்ப்பவாதம் என்கின்றனர். தாங்கள் அதைச் செய்யும் போது, கொள்கை என்று கூறுகின்றனர். எனவே இது சத்தியமாக இது சத்திய சமர்ப்பணம் இல்லை. கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம் தான். சந்தர்ப்பவாதத்திற்கு, சத்திய சமர்ப்பணம் என்று பெயரிட்டு உங்கள் மீதே துப்பிக் கொள்ள வேண்டாம் என்பதே நமது கனிவான வேண்டுகோள்.

EGATHUVAM MAY 2005