Mar 28, 2017

மரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே!

மரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே!

ல்.ம். முஹம்மது அலீ ரஹ்மானீ

மனிதனுக்கு வணங்காத சுயமரியாதை மார்க்கம்

இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம். காரணம் அது அனைத்துலகையும் படைத்து பரிபாலிக்கும் ரப்புல் ஆலமீனாகிய  இறைவன் அல்லாஹ் அருளிய அற்புதமான சுய மரியாதையைப் போதிக்கின்ற மார்க்கம். அது மனிதனுக்குத் தேவையான எல்லாத் துறைகளிலும் வழி காட்டுவதுடன் எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக் கூடாது என்பதையும் சொல்லித் தருகிறது.

மேலும், படைத்த இறைவன் இறைவன் தான். அவனால் படைக்கப் பட்ட மனிதன் மனிதன் தான். மனிதன் கடவுளாகி விட முடியாது. கடவுள்  மனிதனாக முடியாது. தன்னால் படைக்கப்பட்ட எந்த மனிதனும் தன்னைத் தவிர வேறு எந்த படைப்பினத்திற்கும் தலை வணங்கக் கூடாது. அந்தச் சாயல் கூட ஏற்பட்டு விடக்கூடாது  என்பதில் மிகக் கண்ணும் கருத்துமாக இருக்கிறது. அதுபோல் எந்த மனிதனும் எந்த மனிதனுக்கும் தலை வணங்கக் கூடாது அந்த சாயல்  கூட ஏற்பட்டு விடக் கூடாது என்பதிலும் கவனமாகவே இருக்கிறது. அந்த வகையில் மரியாதைக்காக ஒரு மனிதன் வேறொரு மனிதனுக்கு எழுந்து நிற்பதையும் தடை செய்கிறது.

இன்றைய உலகில் நாம் பார்க்கிறோம். ஆசிரியருக்கு மாணவனும், வயதில் பெரிவருக்கு வயதில் சிறியவரும் இவ்வாறே மன்னன் அரசர்கள் மந்திரிகள் முதல்வர்கள் முதலாளிகள் நிர்வாகிகள் போன்றோருக் காக மற்றவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்வதை காண்கிறோம். மேல் தட்டில் இருப்பவர்களும்  இந்த மரியாதையை இதயப் பூர்வமாக விரும்புவதையும் நாம் காண்கிறோம்.

இது போன்று மார்க்கத்தைக் கற்றுக்கொடுக்கும் இஸ்லாமிய மதரஸாக்களில் மாணவர்கள் தங்களது ஹஜ்ரத்மார்களுக்கு எழுந்து நிற்கின்றார்கள். அரசியல் தலைவருக்கு தொண்டர்கள் எழுந்து நிற்கின்றார்கள். சிலர் பட்டம் பதவிக்கு ஆசை வைத்துக் கொண்டு சுயமரியாதையை இழந்து தன்னை விட தரம் தாழ்ந்த  அரசியல் கூத்தாடிகளுக்கு எழுந்து நிற்கின்றார்கள். பள்ளிவாசலை நிர்வகிக்கும் முத்தவல்லிகளுக்கு (அதில் சிலர் தொழாதவர்களாகவும் இருப்பார்கள்) இமாம்களும் மோதினார்களும் எழுந்து நிற்கின்றார்கள். மார்க்க அறிஞர்களை கண்ணியப்படுத்துவதற்காக பொது மக்களும் அவர்களுக்காக எழுந்து நிற்கின்றார்கள். இதை ஒரு வணக்கம் என்று உணராமல் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

வணக்கங்கள் யாவுமே அல்லாஹ் ஒருவனுக்கே

தொழுகையை குறிப்பதற்குக் கூட திருமறைக் குர்ஆனிலும் ஹதீஸிலும் "கியாம்'' நிற்றல் என்ற பொருள் தரக் கூடிய அரபிச் சொல் தான் பயன் படுத்தப்பட்டுள்ளது.

அல்லாஹ்வுக்கே கட்டுப்பட்டு நில்லுங்கள். (அல்குர்ஆன் 2:238)

மேலும், இரவில் நின்று தொழும் தொழுகையைக் குறிப்பதற்கு கியாமுல் லைல் (இரவில் நிற்றல்) என்ற வார்த்தை தான் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதையும் பினவரும் வசனத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

இரவில் குறைவான நேரம் தவிர நிற்பீராக!

(அல்குர்ஆன் 73:2)

யார் ரமலானில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்தும் நிற்கிறாரோ அவருடைய முன் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.

நூல்: புகாரி முஸ்லிம்

இரவில் நிற்றல், ரமலானில் நிற்றல் என்பது தொழுகையைத் தான் குறிக்கிறது. நிற்றல் என்பது தொழுகையின் மிக முக்கியமான அங்கமாக இருப்பதினால் தான் குர்ஆனிலும் நபிமொழிகளிலும்  அதனைக் குறிப்பதற்கு நிற்றல் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் நபியவர்கள் மரியாதைக்காக பிறருக்கு எழுந்து நிற்பதைத் தடை செய்திருப்பதிலிருந்தும் எழுந்து நிற்பதும் ஒரு வணக்கமே என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். எப்படி ஸஜ்தாவை  அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் செய்யக் கூடாதோ, எப்படி ருகூவை அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் செய்யக் கூடாதோ அதே போன்று மரியாதையின் நிமித்தம் எழுந்து நிற்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் செய்யக் கூடாது.

மரியாதைக்காக நிற்பது என்பது அது இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும் என்பதால் தான் நபி (ஸல்) அவர்கள் எழுந்து நிற்பதை விரும்பக் கூடியவர்களையும் எழுந்து நின்ற மக்களையும் அவ்வாறு செய்யக் கூடாது என்று தடுத்திருக்கின்றார்கள்.

தமக்காக மக்கள் எழக் கூடாது என்பதை  எந்த அளவுக்கு நபிகள் (ஸல்) வெறுத்தார்கள் என்பதற்கு பின்வரும் நிகழ்ச்சி சான்றாகவுள்ளது

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன் பாரசீக, ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே. இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர் களைப் பின்பற்றித் தொழுங்கள். அவர்கள் நின்று தொழுகை நடத்தி னால் நீங்களும் நின்று தொழுங்கள் அவர்கள் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள் என்று கூறினார்கள்

 நுôல்: முஸ்லிம் 701

நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுத போது மக்களும் உட்கார்ந்து தொழுததாக புகாரி 689, 732, 733, 805, 1114, 688 ஆகிய ஹதீஸ்களிலும் காணலாம்.

யாருக்கேனும் நிற்க இயலாத அளவுக்கு உடல் சங்கடம் ஏற்பட்டால் அவர் உட்கார்ந்து தொழ அனுமதி உண்டு. அந்த அடிப்படையில் தான் நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவித்தார்கள். ஆனால், பின்னால் தொழுதவர்களுக்கு எந்தச் சங்கடமும் இல்லாததால் அவர்கள் நின்று தொழு தார்கள். அவர்கள் நபிகள் நாயகத்திற்கு மரியாதை செய்வதற்காக நிற்கவில்லை.

ஆனாலும் முன்னால் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்க பின்னால் மற்றவர்கள் நிற்பதைப் பார்க்கும் போது நபி (ஸல்) அவர்களின் முன்னே யாரும் அமரக் கூடாது என்பதற்காக நிற்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. ஏனைய நாட்டு மன்னர்களுக்கு முன் மக்கள் எழுந்து நிற்பது போல் இது தோற்றம் அளிக்கிறது. அந்த வாடை கூட தம் மீது வீசக் கூடாது என்பதற்காக அனைவரையும் அமர்ந்து தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் ஆணை இடுகிறார்கள்.

உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை எனறாலும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),

நூல்கள்: அஹ்மது 12068, 11895  திர்மிதி 2678

அது மட்டுமல்ல. எந்த மனிதரும் எந்த மனிதருக்காகவும் மரியாதை செய்யும் வகையில் எழுந்து நிற்கக் கடாது என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளை பிறப்பித்துள்ளார்கள்.

மன்னராக இருந்தாலும் மரியாதைக்காக எழவேண்டாம்

நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபதியாகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி). அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் சுபைர் அவர்களும் இப்னு சஃப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா (ரலி) அவர்கள் அமருங்கள் என்றார். தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் எனறு யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதை நான் செவியேற்றுள் ளேன் என்று முஆவியா (ரலி) சொன்னார்கள்.

நூல்: அபூதாவூத் 4552

ஒரு சக்கரவர்த்திக்கே கூட மக்கள் எழக் கூடாது. அவ்வாறு எழவேண்டும் என்று எந்த முஸ்லிமும் எதிர்பார்க்கக் கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்துச் சென்றுள்ளதை இந்த சரித்திரத்தில் இருந்து நாம் தெரிகிறோம்.

நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர்.
(அல்குர்ஆன் 33:6)

உங்களில் ஒருவருக்கு அவரது தந்தை, அவரது குழந்தைகள், ஏனைய மக்கள் அளைவரையும் விட நான் மிகவும் பிரியத்திற்குரியவராக ஆகும் வரை அவர் உண்மையான ஈமான் கொண்டவராக மாட்டார்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 15

நபி (ஸல்) அவர்கள் மீது (முஹப்பத்) நேசம் வைக்க வேண்டும் என்றும் அனைத்திலும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் மேற்கண்ட வசனம் மற்றும் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது. ஆனால் உயிரை விட நாம் நேசிக்க வேண்டிய நபி (ஸல்) அவர்களே தனக்காக பிறர் எழுந்து நிற்க வேண்டும் என்று விரும்பவில்லை. மாறாக, தனக்காக எழுந்து நிற்பதைத் தடை செய்துள்ளார்கள். அப்படியானால் மற்றவர்கள் எங்கனம் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வரவேற்பதற்காக எழுந்து செல்லுதல்

வரவேற்பதற்காகவும் உதவி செய்வதற்காகவும் எழுந்து செல்வது கூடும். இது அவர்களாக எழுந்து நிற்பது கிடையாது. மாறாக அவர்களை வரவேற்பதற்காக அவர்களை நோக்கி எழுந்து செல்வதாகும். ஒருவருக்காக எழுந்து நிற்பதற்கும் ஒருவரை வரவேற்பதற்காக அவரை நோக்கி எழுந்து செல்வதற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஒருவருக்காக அவர் வரும்போது எழுந்து நிற்றல் என்பது அவனைப் பெருமைப்படுத்துவதும் அவனை விட தான் தாழ்ந்தவன் என்று மறைமுகமாக உணர்த்துவதும் ஆகும். ஏனென்றால் இவர்கள் யாருக்காக எழுந்து நிற்கிறார்களோ அவர் இவர்களுக்காக எழ மாட்டார்.

ஆனால் ஒருவரை நோக்கி எழுந்து செல்லுதல் என்பது அவர் மீது நாம் கொண்டுள்ள பாசத்தை வெளிப் படுத்துவதாகும். மேலும் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செல்வதாகும்.

தனக்காக யாரும் எழுந்து நிற்கக் கூடாது என்று தடைசெய்த நபியவர்கள் தன்னுடைய பாசமிக்க மகளார் தன்னைச் சந்திக்க வரும்போது அவரை நோக்கி பாசத்தோடு எழுந்து சென்று வரவேற்றிருக்கின்றார்கள் என்பதை பின்வரும் செய்தியிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்

அப்துர் ரஹ்மான் பின் யஸீது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.  நபி (ஸல்) அவர்களின் அமைப்பிலும் போக்கிலும் நடத்தையிலும் ஒத்தவராக ஃபாத்திமா (ரலி) அவர்களை விட வேறு யாரையும் நான் பார்த்ததில்லை. ஃபாத்திமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடத்திலே வரும்போது நபியவர்கள் ஃபாத்திமாவை நோக்கி எழுந்து சென்று அவர்களுடைய கையிலே முத்தமிட்டு அவர்களைத் தன்னுடைய இடத்திலேயே அமர வைப்பார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்கள் தன்னிடத்திலே வரும்போது அவர்களை நோக்கி எழுந்து சென்று அவர்களுடைய கையிலே முத்த மிட்டு அவர்களைத் தன்னுடைய இடத்தில் உட்கார வைப்பார்கள்.

நூல்: திர்மிதி 3807

நபி (ஸல்) அவர்கள் ஃபாத்திமா தன்னுடைய வீட்டிற்கு வரும் போது எவ்வாறு நடந்து கொள்வார்களோ அதே போன்றுதான் ஃபாத்திமா (ரலீ) அவர்களும் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய வீட்டிற்கு வரும் போதும் நடந்து காட்டியுள்ளார்கள்.

என் வீட்டிற்கு நீங்கள் வரும் போது நான் எழலாம். அது போல் உங்கள் வீட்டிற்கு நான் வரும் போது நீங்கள் எழ வேண்டும். இதற்குப் பெயர்தான் வரவேற்பு.

என் வீட்டிற்கு நீங்கள் வந்தால் நான் எழும் நிலையில், உங்கள் வீட்டிற்கு நான் வரும் போது நீங்கள் எழாமல் இருந்தால் நான் மரியாதைக்காகவே எழுந்ததாக ஆகும்.

மேடையில் அமர்ந்திருக்கும் நான், கருணாநிதி வருகிறார் என்பதற்காக எழக் கூடாது ஏனெனில் கருணாநிதி அமர்ந்து உள்ள மேடைக்கு நான் சென்றால் அவர் எனக்காக எழமாட்டார்.

எனது வீட்டிற்குக் கருணாநிதி வந்தால் நான் எழுந்து அவரை வரவேற்கலாம். ஏனெனில் அவரது வீட்டிற்கு நான் செல்லும் போது அவர் எழுந்து வரவேற்பார். இந்த வேறுபாட்டை கவனமாக முஸ்லிம் கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள். (நான் தபூக் போரில் பங்கேற்காமல் இருந்த விவகாரத்தில் எனக்கு மன்னிப்பளித்து இறைவசனம் அருளப்பட்ட பின்) நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். அங்கே அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்பொழுது தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் விரைந்தோடி வந்து என் கரத்தைப் பற்றி எனக்கு வாழ்த்துச் சொன்னார்கள்.

நூல்: புகாரி 4418

 தல்ஹா (ரலி) அவர்கள் கஅப் (ரலி) அவர்களை நோக்கி விரைந்தோடி வந்து வரவேற்கக் காரணம், அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற காரணத்தில் அல்ல. அவர்களின் மீது கொண்டிருந்த பாசமே காரணமாகும். அவர்கள் இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். நபியவர் கள் கஅப் (ரலி) அவர்களையும் மற்ற இரு தோழர்களையும் ஊர் விலக்கம் செய்திருந்த காரணத்தினால் இருவரும் சில காலம் பேசாமல் பிரிந்திருந்தனர். எனவே தான் அவர்களுக்கு மன்னிப்பளித்து இறைவன் திரு வசனத்தை இறக்கிய பொழுது மறைத்து வைத்திருந்த அன்பின் காரணத்தினால் தல்ஹா(ரலி) அவர்கள் அவரை நோக்கி எழுந்து விரைந்து வருகிறார்கள். ஆனால் மற்ற நபித்தோழர்களோ  நபியவர்களோ அவர்களுக்காக எழுந்திருக்கவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.,

உதவி செய்வதற்காக எழுந்து செல்லுதல்

 ஒருவருக்கு உதவி செய்யும் நோக்கில் அவரை நோக்கி எழுந்து செல்வது கூடும். இதனைப் பின்வரும் செய்தியிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

ஸஃது பின் முஆது (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க வந்தபோது நபி (ஸல்) அன்சாரிகளிடம், உங்கள் தலைவரை நோக்கி எழுந்து செல்லுங்கள் என்று கூறினார்கள்

நூல்: புகாரி 6262, 4121

இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொண்டு சிலர் மற்றவர்களுக்காக எழுந்து நிற்கலாம் என வாதிடுகின்றனர். ஆனால் இது தவறனாதாகும். நபி (ஸல்) இவ்வாறு கூறியதன் காரணம் ஸஃது (ரலி) அவர்கள் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தான் நபியவர்களைச் சந்திக்க வருகிறார்கள். எனவே தான் அவர்களுக்கு உதவி செய்வதற்காக அவரை நோக்கிச் செல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .

அஹ்மதுடைய அறிவிப்பில் உங்களுடைய தலைவரை நோக்கி எழுந்து சென்று அவரை (வாகனத் திலிருந்து) இறக்கி விடுங்கள் என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது. (23945)

அவர்கள் பலஹீனமான நிலையில் இருந்ததால் தான் அவரை இறக்கி விடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே இதனை ஆதாரமாகக் கொண்டு ஒருவருக்கு எழுந்து நிற்கலாம் எனக் கூறுவது தவறானதாகும்.

ஜனாஸாவிற்காக எழுந்து நிற்றல்

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு ஜனாஸா எங்களை கடந்து சென்றது. உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் எழுந்து நின்றோம். பின்பு நாங்கள் அல்லாஹ்வின் தூதரே இது ஒரு யூதனின் ஜனாஸா என்றோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள் எனக் கூறினார்கள்.

நூல்: புகாரி 1311

சிலர் நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாவுக்கு    எழுந்து நின்று உள்ளார்களே, மனித பிரேதத்திற்கே நிற்கும் போது உயிருள்ள மனிதனுக்கு நின்றால் என்ன என்று கேட்கின்றார்கள் மேலும் தங்களுக்குச் சான்றாக பின்வரும் செய்தியையும் எடுத்து வைக்கின்றனர்.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஒரு ஜனாஸா நபி (ஸல்) அவர்களைக் கடந்து சென்றது. அப்போது அவர்கள் எழுந்து நின்றார்கள். இது யூதனுடைய ஜனாஸாவாயிற்றே என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் நாம் நின்றதெல்லாம் மலக்குமார்களுக்காகத் தான் என்று கூறினார்கள்.

நூல்: நஸயீ 1903

நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாவிற்காக நின்றதை வைத்துக் கொண்டு நாம் உயிருள்ள மனிதர்களுக்காகவும் எழுந்து நிற்கலாம் எனக் கூறுவது தவறானதாகும். ஜனாஸாவிற்காக நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்றது மனித நேயத்தின் அடிப்படையில் ஆகும். ஜளாஸாவிற்காக நிற்கும் போது அதற்குப் பெருமையோ அகம்பாவமோ ஏற்படுவதில்லை. ஆனால் மனிதர்களுக்காக நிற்கும் போது அது அவர்களை பெருமை அகம்பாவம் கொண்டவர்களாக மாற்றுகிறது. எனவே தான் மனிதர்களுக்காக நிற்பது தடை செய்யப் பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் மலக்குமார் களுக்காக எழுந்து நின்றார்கள் என்ற செய்தியை ஆதாரமாகக் கொண்டும் மனிதர்களுக்காக நிற்கலாம் என நாம் வாதிக்க முடியாது. நபி (ஸல்) அவர்கள் மலக்குமார்களுக்காக நின்றார்கள் என்பதை அவர்களுக்கு உரியதாக மட்டும் தான் நாம் கருத முடியுமே தவிர மனிதர்களுக்கு நிற்கலாம் என்பதற்கு நாம் ஆதாரமாகக் கொள்ள முடியாது


ஆக உண்மையான இஸ்லாத்தைப் புரிந்து வாழக் கூடிய மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக.

EGATHUVAM MAY 2005