Mar 30, 2017

விவாதங்கள் ஓய்வதில்லை: நீடூரிலிருந்து வேலூர் வரை

விவாதங்கள் ஓய்வதில்லை: நீடூரிலிருந்து வேலூர் வரை

எல்லா ஆலிம்களைப் போலவே நாமும் வீடு வீடாக மவ்லிது ஓதிக் கொண்டிருந்தவர்கள் தான். இவ்வாறு ஓதுகின்ற அந்த மவ்லிதின் வரிகள் குர்ஆனுடன் மோதும் போக்கு நம்முடைய உள்ளங்களில் ஒரு நெருப்புப் பொறியைக் கிளப்பியது.

தாயத்து, தகடுகள், கப்ரு வணக்கங்கள், தர்ஹாக்கள், அவற்றில் நடக்கும் அனாச்சாரங்கள் இவை அனைத்தும் நம்மை வெகுவாகப் பாதித்தன. இவை அந்த நெருப்புப் பொறியைப் பற்றி, கனன்று எரிய வைத்தன. அதன் விளைவாக எல்லாம் வல்ல அல்லாஹ் அருளிய அருட்கொடை தான் ஏகத்துவ சிந்தனை.

இது எந்தத் தனி மனிதனாலும் நமக்குக் கிடைத்ததல்ல! இறைவனாக நமக்குத் தந்த சிந்தனை!

அடுத்த கட்ட நடவடிக்கையாக இதை மக்களிடம் முன் வைத்தோம். அவ்வாறு முன் வைத்த மாத்திரத்திலேயே எதிர்ப்புகள் நம்மை நோக்கி ஏவுகணைகளாகப் பாய்ந்தன. இந்த ஏவுகணைகள் மக்களிடமிருந்து வரவில்லை; உலமாக்களிடமிருந்து தான் வந்தன.

இந்த ஏவுகணைகளை எதிர் கொள்வதற்கு நாம் கையில் எடுத்தது, எல்லாம் வல்ல அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களுக்குக் கொடுத்த வாதம் என்ற ஆயுதம்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் ஆயுதம் ஏந்தி ஒரே ஒரு முறை தான் சிலைகளை உடைத்தார்கள். ஆனால் வாதம் என்ற ஆயுதம் ஏந்தி அறிவுப் பூர்வமாக எதிரிகளின் தலைகளை உடைத்து விட்டார்கள். இதை அல்குர்ஆனில் அவர்களைப் பற்றிக் கூறும் வசனங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

ஷம்சுல்ஹுதாவுடன் ஒரு சந்திப்பு

உண்மை என்று தெரிந்து அதில் உறுதியாக ஆனதும், இதற்கு ஆலிம்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. அதை எதிர் கொள்ளும் முகமாக, நீடூர் மிஸ்பாஹுல் ஹுதாவின் முதல்வர், நீடூர் ஜாமிஆ பள்ளிவாசல் இமாம், மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் எஸ்.ஆர். ஷம்சுல்ஹுதா அவர்களிடம் சந்திப்பதற்கான நாள், நேரம் கேட்டோம். அவர்களும் அதற்கு ஒப்புதல் தந்தார்கள்.

ஒரு நாள் இஷாவுக்குப் பிறகு,     பி. ஜைனுல் ஆபிதீன், எம். ஷம்சுல்லுஹா, முஹம்மது யூசுப் மிஸ்பாஹி ஆகிய மூவரும் சந்திக்கச் சென்றனர். ஷம்சுல்ஹுதா அவர்கள் முன்னிலையில் அவரது மாணவர்கள் சம்மணமிட்டு உட்காரக் கூடாது; மண்டியிட்டுத் தான் உட்கார வேண்டும் என்ற விதியை ஏற்படுத்தியிருந்தார். பி.ஜே.யைத் தவிர மற்ற இருவரும் ஷம்சுல்ஹுதா அவர்களின் மாணவராக இருந்தாலும், மண்டியிட்டு அமர்வதற்கு ஹதீஸில் ஆதாரம் இல்லை என்பதால் சம்மணமிட்டுத் தான் அமர வேண்டும் என்று கண்டிப்புடன் பி.ஜே. தெரிவித்திருந்தார்.

ஒரு நாள் இஷாவுக்குப் பிறகு ஜாமிஆ பள்ளிவாசலில் உள்ள அவரது அறையில் சந்திப்பு துவங்கியது. சந்திப்பு துவங்கும் முன், கையில் எடுத்துச் சென்ற டேப் ரிகார்டரில் பதிவு செய்து கொள்ளலாமா? என்று அவரிடம் பி.ஜே. அனுமதி கேட்டார். அதற்கு அவர் கூடாது என்று ஒரேயடியாக மறுத்து விட்டார்.

(அப்போது நடைபெற்ற உரையாடல் விபரம் இன்ஷா அல்லாஹ் ஏகத்துவத்தில் பின்னர் வெளியிடப்படும்)

இதனையடுத்து, கிளியனூர் மத்ரஸா ரஹ்மானிய்யாவின் முதல்வர் எஸ்.ஏ. அப்துஸ்ஸலாம் அவர்களை பி.ஜே. மற்றும் ஷம்சுல்லுஹா ஆகியோர் சந்தித்து விவாதித்தனர். இந்த விவாதத்தின் போது மதரஸா மாணவர்கள் அனைவரும் அருகில் இருந்தனர். பி.ஜே. தொடுத்த கேள்விகளுக்கு அப்துஸ்ஸலாம் அவர்கள் பதில் அளிக்க முடியவில்லை. பல கேள்விகளுக்கு, பார்த்துச் சொல்கிறேன் என்ற பதிலைத் தான் தர முடிந்தது.

(இந்த விவாதத்தில் நடந்த உரையாடல்களும் பின்னர் வெளியிடப்படும்)

திருப்பந்துருத்தி முஹம்மது அலீ அவர்கள் அத்திக்கடையில் பணி புரிந்து கொண்டிருந்தார்கள். இவர் தான் பி.ஜே.யின் ஆசிரியர். அவரையும் அத்திக்கடையில் போய் சந்தித்து, இருவருக்கும் மத்தியில் விவாதம் நடந்தது.

அதிராம்பட்டிணம் ரஹ்மானிய்யா மதரஸாவின் முதல்வராக உள்ள முஹம்மத் குட்டி அவர்களையும் பி.ஜே. சந்தித்து, விவாதித்தார்.

வலிமார்கள் மாநாடு என்ற பெயரில் தஞ்சையில் நஞ்சைக் கக்கும் ஒரு மாநாடு! இறந்து விட்ட பெரியார்களிடம் பிரார்த்திக்க வேண்டும் என்று அம்மாநாட்டில் உலமாக்கள் உரத்து முழங்கினர். இதைக் கண்டித்து அன்று சங்கரன்பந்தலில் பணியாற்றிய பி.ஜே. தனது ஒரு மாதச் சம்பளத்தைச் செலவு செய்து, ஒரு நாடகம் அரங்கேறியது என்ற தலைப்பில் ஒரு பிரசுரத்தை வெளியிட்டார்.

இது ஆலிம்கள் வட்டாரத்தில் பெரும் புயலையும், பூகம்பத்தையும் கிளப்பியது. இதை விசாரணை செய்வதற்காக திருப்பந்துருத்தியில் ஜமாஅத்துல் உலமா கூடப் போவதாகவும், அந்த விசாரணையில் பி.ஜே. கலந்து கொள்ள வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பினார்கள். அந்த நேரத்தில் பி.ஜே. பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தின் ஜமாஅத்துல் உலமா மாவட்டச் செயலாளர். ஷம்சுல்லுஹா செயற்குழு உறுப்பினர்.

இந்தக் கூட்டத்திற்கு பி.ஜே., ஷம்சுல்லுஹா, மறைந்த பி.எஸ். அலாவுதீன் ஆகியோர் சென்றிருந்தனர். மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் எஸ்.ஆர் ஷம்சுல் ஹுதா தலைமையில் நடந்த அந்தக் கூட்டத்தில் விசாரணை தொடங்கியது. வாதங்கள் நடந்தன. முடிவில் மூவரையும் நீக்கப் போவதாக ஜமாஅத்துல் உலமா அறிவித்தது. தேவையில்லை உங்கள் ஜமாஅத்துல் உலமாவின் பொறுப்பு! நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று தூக்கி எறிந்து விட்டு வந்தனர்.

இதுவெல்லாம் தனி நபராக இருப்பினும், ஒரு கூட்டமாகக் கூடியிருக்கும் சபையாக இருப்பினும் வாதக் களங்களைச் சந்திப்பதற்கு நாம் தயங்கியதில்லை என்பதற்கான எடுத்துக் காட்டுகள்.

முபாஹலாவும் முஜாதலாவும்

ஏகத்துவக் கொள்கை வேர் பிடித்துக் கொண்டிருக்கும் வேளையில் காயல்பட்டிணத்தில், அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேட வேண்டும் என்ற தலைப்பில் ஓர் உரை! அந்தத் தலைப்பில் பி.ஜே. உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, முஹய்யித்தீனிடம் உதவி தேடலாம், இது தொடர்பாக என்னிடம் முபாஹலா செய்யத் தயாரா? என்று ஒரு துண்டுச் சீட்டு மேடைக்கு வருகின்றது. அதைப் பார்த்து விட்டு, "முபாஹலாவுக்குத் தயார்! ஆனால் அதற்கு முன்னால் முஜாதலா (விவாதம்) இருக்கின்றது; விவாதத்திற்குப் பிறகு தான் முபாஹலா'' என்று பி.ஜே. அறிவித்தார்.

இதன் பின்னர் விவாதத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அழைத்தவர் முபாஹலா தான் செய்ய வேண்டும் என்று சாதிக்கவே அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

முபாஹலாவுக்குரிய தேதி குறித்ததும், இர்ர்ந் தங்ஹக்ஹ் என்று சங்கேத வார்த்தையில் தந்தி கொடுப்போம்; ஏனெனில் வேறு யாராவது, வாருங்கள் என்று அழைத்து அசம்பாவிதத்தை ஏற்படுத்தி, அதைக் கொண்டு தவ்ஹீது அணியினருக்குத் தோல்வி என்று கூறி விடக் கூடாது என்பதற்காக இந்த சங்கேத வார்த்தை!

குழுவினர் கூறியது போல் சங்கேத வார்த்தையில் தந்தி வந்தது. பி.ஜே., தனது நான்கு நாள் கைக்குழந்தையுடன் மனைவி, மக்களை அழைத்துக் கொண்டு காயல்பட்டிணத்தில் முபாஹலாவில் கலந்து கொண்டார். அன்று ஏகத்துவம் பேசிய எந்த மதனியும் ஜலீல் முஹைதீனின் இந்த முபாஹலா அறைகூவலைக் கண்டு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

அதன் பின்னர்,

 கோட்டாரில் ஏ.எல். பத்ருத்தீனுடன் விவாதம்

கோவையில் காதியானிகளுடன் விவாதம்

மதுரையில் கிறித்தவர்களுடன் விவாதம்

ஏர்வாடியில் பிறை தொடர்பான விவாதம்

சென்னையில் அஹ்லெ குர்ஆன் என்று சொல்லிக் கொள்ளும் 19 குரூப்புடன் விவாதம்

இலங்கையில் ஷர்புத்தீன் பாக்கவி மற்றும் உமர் அலீ ஆகியோருடன் விவாதம்

இப்படி விவாதக் களங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

அவர்கள் நல்லவர்கள்; இவர்கள் நயவஞ்சகர்கள்

இவையெல்லாம் விவாதக் ளமானாலும், முபாஹலா களமானாலும் இது வரை நாம் சந்திக்கத் தயங்கியதில்லை என்பதற்கான சத்திய சாட்சியங்கள்.

நம்முடன் மோதினார்களே அவர்கள் உண்மையில் நல்லவர்கள்; நன்றிக்குரியவர்கள். காரணம், அவர்கள் நடிக்கவில்லை; கபட நாடகம் ஆடவில்லை. சொன்னது சொன்னபடி வந்தார்கள்.

ஆனால் ஒரு சிலர் மட்டும் விவாதத்திற்குத் தயார் என்று வீராவேசமாக அறிவித்து விட்டு களத்திற்கு வராமல் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் குறிப்பிடத் தக்கவர் ஸைபுத்தீன் ரஷாதி. அண்மையில் இப்படி ஒரு நாடகக் கூட்டமே கிளம்பி விட்டது. தமிழகம் முழுவதும் நடத்தப்படும் நாடக மேடைகளில் நயவஞ்சகமாகப் பேசி நடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பட்டியலில் ஸைபுத்தீன் ருஷ்டிகளும், ஷேக் அப்துல்லாஹ் கோமாளிகளும் தான் இருக்கிறார்கள் என்று நினைத்தோம். பாக்கியாத் உலமாக்களும் இந்தப் பட்டியலில் சேர்ந்து கொண்டு நாடகத்தின் உச்சக் கட்டத்திற்கே சென்று விட்டனர். அதனால் இந்த நாடகக் குழுவின் கபட வேடத்தைக் களைவது ஏகத்துவத்தின் கடமையாகி விட்டது. அதற்காகவே இந்த விளக்கக் கட்டுரை!

ஓடிப் போன திருப்பூர் உலமா சபை

தவ்ஹீத் ஜமாஅத்தின் விவாத அழைப்பை ஏற்று திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை 17.7.2003 சனிக்கிழமை அன்று விவாத ஒப்பந்தத்திற்கு வர சம்மதித்தது.

விவாத ஒப்பந்தத்திற்கு திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா நிர்ணயித்த மேற்குறிப்பிட்ட தேதியில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக எம்.ஐ. சுலைமான், கே.எஸ். அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி, எஸ். கலீல் ரசூல் ஆகியோர் சென்று விவாத ஒப்பந்தத்தில் கலந்து கொண்டனர். ஜமாஅத்துல் உலமா சார்பாக ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி விவாத ஒப்பந்தத்தில் கலந்து கொண்டார். 27.09.2003 மற்றும் 28.09.2003 ஆகிய தேதிகளில் விவாதம் செய்ய வேண்டும் என்ற விவாத ஒப்பந்தமும் கையெழுத்தானது.

ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு அதை ஓய்ப்பதற்கான வழியை திருப்பூர் ஜமாஅத்துல் உலமா தேடி அலைந்து கொண்டிருந்தது. மண்டை காய்ந்து போய், மண்டபம் கிடைக்கவில்லை; மண்டபம் கிடைக்கவில்லை என்ற மழுப்பல் மொழியைப் பேசிக் கொண்டிருந்தது. இது சரி வராது என்று தவ்ஹீத் ஜமாஅத்தினர் ரகசியமாக மண்டபத்தை வாடகைக்குப் பிடித்துக் கொண்டனர். இவர்கள் மழுப்பி, நழுவி விடக் கூடாது என்று கருதி, இவர்களைச் சிக்க வைக்கும் விதமாக திருப்பூர் தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஒரு வேலையைச் செய்தார்கள். திருப்பூரில் 27.09.2003 அன்று தவ்ஹீத் ஜமாஅத்துக்கும், திருப்பூர் ஜமாஅத்துல் உலமாவுக்கும் இடையே விவாதம் நடைறெ உள்ளது. அனைவரும் வருக என்று மண்டபத்தின் பெயரைக் குறிப்பிட்டு மக்களை வரச் சொல்லி சுவரொட்டிகள் ஒட்டினர்.

இதைச் சாக்காக வைத்துக் கொண்டு, மண்டபத்திற்கு பார்வையாளர்களாக இரு தரப்பிலும் 200 வீதம் 400 பேர் தான் வர வேண்டும் என்ற ஒப்பந்தம் இருக்கையில், நீங்கள் எப்படி மக்கள் அனைவரையும் அழைக்கலாம் என்று கேட்டு, இதைத் தங்கள் சறுக்கலுக்கு சரியான காரணமாக்கிக் கொண்டு ஓட்டம் எடுத்தார்கள் இந்த உலமா சபையினர்.

"யார் வராவிட்டாலும்  நான் வருவேன்'' என்று எழுதிக் கையெழுத்துப் போட்ட  ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியும் ஓட்டம் எடுத்தார்

அன்று ஓட்டம் எடுத்தவர்கள் தான் இந்தத் திருப்பூர் ஜமாஅத்துல் உலமா சபையினர். இன்னும் திரும்பிப் பார்க்கவில்லை.

ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட நாளில் தவ்ஹீது ஜமாஅத்தினர் மண்டபத்தில் போய் காத்திருந்தனர். யார் வராவிட்டாலும் நான் மண்டபத்திற்கு வருவேன் என்று சவடாலாகப் பேசி திருப்பூர் ஜமாஅத்துல் உலமாவிற்கு தெம்பு கொடுத்த ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி உள்ளிட்ட எவரும் மண்டபம் இருந்த திசைக்கே வராமல் ஓடி விட்டனர்.

பொதக்குடியில் புறமுதுகு காட்டிய கோமாளிகள்

பொதக்குடியிலும் மேடையில் பேசும் போது, தவ்ஹீது ஜமாஅத்தினருடன் விவாதம் செய்யத் தயார் என்று ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி என்ற கோமாளி சவடால் அடித்துள்ளார். உடனே நமது ஜமாஅத்தினர் அவரை அங்கேயே பிடித்து, விவாதத்திற்குத் தயாரா? என்று கேட்டவுடன் நான் விவாதத்திற்குத் தயார், ஆனால் இங்கு பேச மாட்டேன், சென்னையில் தான் பேசுவேன் என்று நழுவி ஓடினார்.

அம்மணத்தை மறைக்க அங்கவஸ்திரம்

தவ்ஹீத் ஜமாஅத்தினர் விவாதத்திற்கு அழைத்து விட்டார்களா? நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று மக்கள் கேட்கும் போது, நாங்கள் தயார் என்று சொல்வது! அதன் பின் ஏதாவது சாக்குப் போக்கைச் சொல்லி தவ்ஹீத் ஜமாஅத்தினர் மீது பழியைப் போட்டு விட்டுத் தப்பி விடுவது!

தங்கள் அம்மணத்தை மறைப்பதற்கு, திருப்பூர் ஜமாஅத்துல் உலமா இப்படி ஒரு அங்கவஸ்திரத்தை எடுத்துக் கொண்டு தன்னைத் தப்பிக்கச் செய்து கொண்டது. திருப்பூர் ஜமாஅத்துல் உலமா கையில் எடுத்த ஆயுதம் வேறொன்றுமில்லை. சாட்சாத் கலீல் அஹ்மத் கீரனூரி, சாகஸ மன்னன் ஸைபுத்தீன் ரஷாதி ஆகியோரின் கை வசமிருக்கும் ஆயுதம் தான்.

கீரனூரியின் கீர்த்தனை

அன்றிலிருந்து இன்று வரை தவ்ஹீத் ஜமாஅத்தினர், இப்ராஹீம் (அலை) அவர்களின் விவாதம் எனும் அணுகு முறையைக் கையாண்டு வருகின்றனர். இதைக் கண்டு அசத்தியவாதிகள் பயந்து ஓடுகின்றனர். அல்லது பேச முன் வந்து தோற்கின்றனர். இவ்விரண்டுக்கும் இடைப் பட்டவர்கள், இரண்டும் கெட்டான் நிலையில் உள்ளவர்கள் பாசாங்கு செய்கின்றனர். தவ்ஹீத் ஜமாஅத்தின் விவாதப் பொறியிலும் சிக்கிக் கொள்ளக் கூடாது; அதே சமயம் மக்களிடமும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக கொள்கை விஷயத்தைப் பேச முன் வராமல், எதற்கும் பயன்படாத ஒரு தலைப்பைச் சொல்லி விவாதிக்கத் தயாரா? என்று கேட்கின்றனர்.

பி.ஜே. அப்படிச் செய்தார்; இது பற்றி விவாதிக்கத் தயாரா? என்பது போன்ற சவால்களை விடுவது! அல்லது நாம் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக நினைத்துக் கொண்டு இது பற்றி விவாதிப்போமா? என்று கேட்பது!

தராவீஹ் என்ற வார்த்தை ஹதீஸில் வருவதாக நாம் கூறவேயில்லை. ஆனால் கலீல் அஹ்மத் கீரனூரி, தராவீஹ் 8 ரக்அத்துக்கள் என்று ஹதீஸிலிருந்து எடுத்துக் காட்ட முடியுமா? இதைப் பற்றி விவாதம் செய்வோமா? என்று கேட்பார்.

உண்மையில் நாம், தராவீஹ் என்ற வார்த்தையே ஹதீஸில் இல்லை என்று தான் கூறி வருகின்றோம். இரவுத் தொழுகை என்று தான் குறிப்பிடு கிறோம். ஆனால் நாம் சொல்லாததைச் சொன்னதாகக் கூறி நாம் விவாதிப்போமா? என்று கேட்பார்கள்.

இதில் உள்ள நடிப்பை, நாடகத்தை மக்கள் புரிந்து கொள்ளாமல் உண்மை என நம்பி விடுகின்றனர். மக்களின் இந்த அப்பாவித்தனத்தை முதலீடாகக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

சறுகல் மன்னன் ஸைபுத்தீன் ருஷ்டி

தவ்ஹீத் ஜமாஅத்தை விவாதத்திற்கு அழைத்த மாதிரியும் இருக்க வேண்டும்; விவாதமும் நடக்கக் கூடாது என்ற நயவஞ்சக நாடக நடிப்புக் கலையில் இவரை மிஞ்சிய ஆளில்லை என்று சொல்லும் அளவுக்குக் கை தேர்ந்தவர் ஸைபுத்தீன் ரஷாதி!

இவர் சிதம்பரத்தில் 3.7.2005 அன்று நடந்த கூட்டத்தில் இந்தப் பாணியைக் கையாண்டு, சவால் விடுகின்றார். கூட்டத்திற்கு வந்திருந்த தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த சில சகோதரர்கள் அவரிடம் எதிர்க் கேள்வி கேட்ட போது, கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த சிதம்பரம் ஜமாஅத்துல் உலமா சபையினர், பிறகு பேசிக் கொள்ளலாம் என்று சமாதானம் செய்து அவர்களை அனுப்பி வைத்தனர்.

கூட்டம் முடிந்ததும் நமது சகோதரர்கள் அவரைச் சந்தித்து விவாதத்திற்கு அழைப்பு விடுத்தனர். அப்போது அவர், பி.ஜே. ஒரு பொய்யர் என்ற தலைப்பில் நான் விவாதிக்கத் தயார் என்று கூறுகின்றார்.

இதைத் தான் நாம் குள்ள நரித்தனம் என்கிறோம். கள்ள சிந்தனை கொண்ட கபட நாடகம் என்கிறோம். காரணம் பி.ஜே. என்ற நபர் தன் பக்கம் மக்களை அழைத்தால் அவர் ஒரு பொய்யர் என்று சொல்லி அவரை விட்டும் மக்களைத் தடுக்கலாம். ஆனால் அவர் குர்ஆன், ஹதீஸின் பக்கம் அல்லவா மக்களை அழைக்கின்றார். அவ்வாறிருக்கையில், அவரது அந்தக் கொள்கை தவறு என்று வாதிக்காமல், அவரைப் பொய்யர் என்று வாதிப்பதில் என்ன பயன்?

எனவே தேவையற்ற நிபந்தனை கூறி தட்டிக் கழிக்க முயல்கின்றார் என்றே அங்கு தெளிவானது. இருப்பினும் விவாதத்தை விட்டுத் தப்பி விடக் கூடாது என்பதற்காக அதற்கும் பி.ஜே. ஒப்புக் கொள்கிறார்.


சிதம்பரம் வட்டார ஜமாஅத்துல் உலமாவிற்கு பி.ஜே. அளித்த பதில் என்ன? இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில்...

EGATHUVAM NOV 2005