Mar 28, 2017

லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்

லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் மீது போர் தொடுத்த போது அல்லது அவர்கள் கைபரை நோக்கிச் சென்று திரும்பிய போது, மக்கள் ஒரு பள்ளத்தாக்கில் ஏறுகையில்,

''அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன்.

அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன்.

லாயிலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை'' என்று குரல்களை உயர்த்திக் கூறினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் காது கேட்காதவனையோ அல்லது இங்கு இல்லாதவனையோ அழைக்கவில்லை.  நன்கு செவியேற்பவனும் அருகில் இருப்பவனையுமே நீங்கள் அழைக்கின்றீர்கள். அவன் உங்களுடனே இருக்கின்றான்'' என்று கூறினார்கள்.  அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாகனப் பிராணிக்குப் பின்னால் இருந்து கொண்டு.

''லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் - அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவத்தி­ருந்து விலகவோ நன்மை செய்ய ஆற்றல் பெறவோ முடியாது'' என்று கூறுவதைக் கேட்டார்கள். 

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள். ''அப்துல்லாஹ் பின் கைஸ்!'' என்று அழைத்தார்கள்.  ''கூறுங்கள்! அல்லாஹ்வின் தூதரே!'' என்று நான் பதிலளித்தேன்.

''உனக்கு ஒரு வார்த்தையை நான் அறிவித்துத் தரட்டுமா? அது சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும்'' என்று சொன்னார்கள்.  ''சரி! அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்'' என்று நான் கூறினேன்.  ''லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்'' என்று சொன்னார்கள்.


அறிவிப்பவர் : அபூமூஸா அல் அஷ்அரீ (ர­லி). நூல் : புகாரி 4202