Mar 4, 2017

தமிழகம் கண்ட ஹதீஸ் தமிழாக்கப் புரட்சி

தமிழகம் கண்ட ஹதீஸ் தமிழாக்கப் புரட்சி
தவ்ஹீது ஜமாஅத் முளைவிடத் துவங்கியதும் அது மக்களிடம் குர்ஆன் ஹதீஸ்களைப் படியுங்கள் என்ற சிந்தனைப் புரட்சியைத் தூண்டியது. 1986-ஆம் ஆண்டில் மவ்லவி  பி.எஸ். அலாவுதீன் மன்பஈ, கமாலுத்தீன் மதனி ஆகியோர் புகாரியை மொழிபெயர்த்து 100 ஹதீஸ்கள் கொண்ட சிறு நூல்களாக வெளியாயின.
பின்னர் சகோதரர். பி.ஜே. அவர்கள் புகாரி முதல் பாகத்தை மொழி பெயர்ப்பு செய்தார். பின்னர் ரஹ்மத் டிரஸ்டால் புகாரியின் அனைத்துப் பாகங்களும் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது.
முதல் பாகத்தில் பி.ஜே.வின் பெயர் வெளியாகவில்லை. காரணம், அதற்கு ஏதேனும் முத்திரைக் குத்தப்படும் என்பதால் தான். பி.ஜே.வும் தன் பெயர் வெளிவருவதில் ஆர்வம் காட்டவில்லை. எப்படியாயினும் மொழிபெயர்ப்பு வெளியே வர வேண்டும் என்பது தான் அவருடைய இலட்சியம். அதுபோல் முதல் பாகம் வெளியானது. மற்ற பாகங்கள் மற்ற மொழி பெயர்ப்பாளர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டு புகாரியின் அனைத்துப் பாகங்களும் வெளியிடப்பட்டு விட்டன. 
அதுபோல் பி.ஜே. அவர்கள் அல்ஜன்னத் மாத இதழில் ஆசிரியராக இருந்தபோது தொடர்ந்து அபூதாவூத், சுனன் திர்மிதி, சுனன் நஸாயி, சுனன் இப்னுமாஜா  ஆகிய நூல்களில் உள்ள ஹதீஸ்கள் மொழிபெயர்க்கப்பட்டு மாதா மாதம் வெளியாயின.
இவை அத்தனை மொழிபெயர்ப்புகளும்  நமது தோளில் விழுந்த சமுதாயப் பணியின் பளுவின் காரணமாக மொழியாக்கம் செய்ய முடியாமல் ஆனது. இருப்பினும் சகோதரர் பி.ஜே. அவர்கள் மொழிபெயர்த்த திர்மிதியின் முதல் பாகம் ஒருவாறாக வெளியிடப்பட்டது.
அந்த நூல் மறுபதிப்பு வெளியாகவில்லை என்றாலும் திர்மிதியின் முன்னுரையில் பி.ஜே. எழுதிய ஹதீஸ் கலை அறிமுகக் குறிப்பு அனைவரும் புரியும்படி எளிய நடையில் விளக்கமாக அமைந்திருந்தது. ஹதீஸ் கலையை அறிய விரும்புவோருக்கு அது ஓர் அரிய ஆவணமாக அமைந்து விட்டது.
அபூதாவூத் முதல் பாகம் மவ்லவி எம்.ஷம்சுல்லுஹா ரஹ்மானியால் மொழிபெயர்க்கப் பட்டது. ஆனால் அது பல்வேறு காரணங்களால் வெளியிடப்படாமல் முடங்கிப் போனது.
முஸ்லிம் ஹதீஸ் நூலும் அல்முபீன் மாத இதழில் மாதா மாதம் வெளியானது. அதே வேலைப்பளுவால் முஸ்லிம் மொழியாக்கம் நிறைவு பெறாமல் ஆனது. அதே சமயம் இந்த ஹதீஸ் நூல்களின் மொழியாக்கங்கள் மற்றவர்கள் மூலம் பின்னால் வெளியாகிவிட்டன. அல்ஹம்துலில்லாஹ்.
இதை இங்கு குறிப்பிடக் காரணம் தமிழகத்தில் இம்மாபெரிய ஹதீஸ் புரட்சியையும், எழுச்சியையும், தாகத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்திவிட்ட இந்த தவ்ஹீத் ஜமாஅத்தைத்தான் ஹதீஸ் மறுப்பாளர் என்று ஏகத்துவத்தின் எதிரிகள் முத்திரை குத்துகின்றனர். மத்ஹபு மாளிகைகள் சுக்குநூறாக நொறுங்குவதற்கு இந்த ஹதீஸ் புரட்சிதான் காரணம்.
ஹதீஸ் என்ற பெயரில் யாரும் எதையும் சொல்லி விட்டுப் போய்க் கொண்டிருந்த காலம் மலையேறிப் போய், இந்தச் செய்தி எந்த நூலில் வருகின்றது? எந்த பாகத்தில் வருகின்றது? ஹதீஸ் எண் என்ன? அறிவிப்பாளர் யார்? என்றெல்லாம் மக்கள் கேள்வி கேக்கும் நிலை உருவானது.

இந்த ஹதீஸ் புரட்சிக்கு வித்திட்டது தவ்ஹீது ஜமாஅத் தான் என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது என்பதை தமிழக மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
EGATHUVAM JUN 2015