Mar 4, 2017

அல்ஹதீஸும் அல்லாஹ்வின் வஹீயே!

அல்ஹதீஸும் அல்லாஹ்வின் வஹீயே!
இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரங்களாகத் திருக்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் அமைந்துள்ளன.  இவ்விரண்டைத் தவிர வேறு எதனையும் முஸ்லிம்கள் மூல ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை நாம் தெளிவாகவே அறிந்து வைத்திருக்கிறோம். 
"திருக்குர்ஆன் என்ற ஒரே ஒரு மூல ஆதாரமே போதும்;  நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் தேவையில்லை' என்று கூறுவோர் வழிகேடர்கள் என்பதே நமது வாதம்.
குர்ஆன் மட்டுமே இறைவனுடைய புறத்திலிருந்து வழங்கப்பட்ட வஹி - இறைச் செய்தி.  ஹதீஸ்கள் என்பது வஹி அல்ல என்று யாராவது சொன்னால் அவர்கள் இஸ்லாமிய வட்டத்தை விட்டு முற்றிலுமாக விலகி விட்டார்கள்.
இறைவனிடமிருந்து வஹியாக அருளப்பட்டது குர்ஆன் மட்டும் தான்.  குர்ஆனைத் தவிர வேறு எதுவும் இறைவனிடமிருந்து வஹியாக அருளப்படவில்லை என்று திருக்குர்ஆனின் எந்த இடத்திலும் கூறப்படவே இல்லை.
இன்னும் தெளிவாகச் சொல்வதானால் குர்ஆன் எப்படி இறைவன் புறத்திலிருந்து அருளப் பட்டுள்ளதோ - குர்ஆன் எப்படி வஹியாக அருளப்பட்டுள்ளதோ அது போல் குர்ஆன் அல்லாத இன்னொரு வஹியும் உள்ளது என்று திருக்குர்ஆன் ஒரு இடத்தில் அல்ல - ஏராளமான இடங்களில் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது.
உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழிகெடவுமில்லை. அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.
அல்குர்ஆன் 53:2, 3, 4
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது மனோ இச்சைப்படி பேசுவதில்லை;  அவர்கள் பேசுவதெல்லாம் வஹி என்னும் இறைச் செய்தி தவிர வேறில்லை என்று இவ்வசனம் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது.
"இவர் மனோ இச்சைப்படி பேச மாட்டார்'' என்பது பொதுவாக அவர் பேசும் எல்லாப் பேச்சையும் தான் எடுத்துக் கொள்ளும்.  மனோ இச்சைப்படி பேசமாட்டார் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அவர் பேசுவதெல்லாம் வஹி தவிர வேறில்லை என்றும் அல்லாஹ் கூறுகின்றான். 
உள்ளத்தில் எந்த அபிப்ராயத்தையும் வைத்துக் கொள்ளாமல் - முன் கூட்டியே தீர்மானித்துக் கொள்ளாமல் - விளக்கம் என்ற பெயரில் நாமாக எதையும் சேர்க்காமல் இந்த வசனத்தைப் படித்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசிய அனைத்தும் அவர்களது மனோ இச்சையின் உந்துதலால் பேசப்பட்டவையல்ல.  மாறாக அது இறைவனால் அறிவிக்கப்பட்ட வஹி எனும் இறைச் செய்திதான் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
குர்ஆன் எப்படி வஹியாக அமைந்துள்ளதோ அது போலவே நபிகள் நாயகத்தின் பேச்சுக்களும் வஹியாக உள்ளன என்று திருக்குர்ஆனே கூறிய பிறகு யாரேனும் நபிகள் நாயகத்தின் பேச்சுக்கள் தேவையில்லை என வாதிட்டால் - அந்தப் பேச்சுக்கள் வஹி இல்லை என வாதிட்டால் அவர் மேலே நாம் எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனத்தை நிராகரித்தவர் ஆகி விடுகிறார்.
தனது அடியார்களுக்குக் கூற விரும்பும் செய்திகளை ஜிப்ரீல் எனும் வானவரை அனுப்பி அவர் வழியாக மட்டுமே அல்லாஹ் கூறுவான் என்று சிலர் நினைக்கின்றனர். இது தவறான எண்ணமாகும்.
ஜிப்ரீல் மூலம் செய்திகளைக் கூறி அனுப்புவது போலவே வேறு இரண்டு வழிகளிலும் அல்லாஹ் தனது வழிகாட்டலை மக்களுக்குத் தெரிவிப்பான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.
(அல்குர்ஆன் 42:51)
மனிதரிடம் இறைவன் பேசுவதற்கு மூன்று வழிகளைக் கடைப்பிடிக்கிறான் என்பது இவ்வசனத்திலிருந்து தெரிகின்றது. ஒரு தூதரை அனுப்பி மனிதரிடம் பேசுவான் என்பதை அனைவரும் எளிதாக அறிந்து கொள்ள முடியும். ஜிப்ரீல் போன்ற வானவர்கள் வழியாக வேதங்களை வழங்குவதையும், வானவர்கள் மூலம் வேறு பல செய்திகளைச் சொல்லி அனுப்புவதையும் தான் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.
திரைக்கு அப்பால் இருந்து மனிதனிடம் இறைவன் பேசுவான் என்பதையும் ஓரளவுக்கு அறிந்து கொள்ள இயலும். மூஸா நபி அவர்கள் தமது குடும்பத்தாருடன் புறப்பட்டபோது தீப்பிழம்பைக் கண்டு அந்த இடத்திற்குச் சென்றார்கள். இதைப் பற்றி திருக்குர்ஆனில் 20வது அத்தியாயம் 11வது வசனம் முதல் 48வது வசனம் வரை மூஸா நபி அவர்களுடன் அல்லாஹ் நடத்திய உரையாடல் இடம் பெற்றுள்ளது.
இவ்விரு வகைகளும் வஹீ எனும் இறைச் செய்தியாக இருந்தாலும் இன்னொரு வழியிலும் அல்லாஹ் பேசுவதைக் குறிப்பிட தனிப்பெயர் எதையும் கூறாமல் வஹீயாக - வஹீ மூலம் - என்று அல்லாஹ் கூறுகிறான். மற்ற இரண்டும் வஹீயாக இருந்தாலும் மூன்றாவது வழியை மட்டுமே இவ்வசனத்தில் அல்லாஹ் வஹீ என்கிறான்.
இவ்விரு வகைகள் தவிர வேறு வழியில் இறைவன் மனிதர்களிடம் பேசுவான் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது? மனித உள்ளங்களில் மனிதர்கள் என்ற முறையில் தோன்றாத செய்திகளை இறைவன் தோன்றச் செய்வான். அவ்வாறு தோன்றச் செய்வதும் வஹீதான். இறைச் செய்திதான் என்பதைத் தவிர வேறு அர்த்தம் இதற்கு இருக்க முடியாது.
திருக்குர்ஆனில் கூறப்பட்ட பல கட்டளைகளை  இப்படித்தான் செயல்படுத்த வேண்டுமென்று நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள். அவ்வாறு காட்டி செயல் வடிவம் கொடுத்தது, அவர்களது இதயத்தில் அல்லாஹ் உதிக்கச் செய்ததன் அடிப்படையில் தான் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
வேதமும் ஞானமும்
அல்லாஹ்வின் தூதர்களாக அனுப்பப்படும் நபிமார்களுக்கு அல்லாஹ் வேதத்தை மட்டும் கொடுத்து அனுப்புவதில்லை.  இன்னொன்றையும் சேர்த்துக் கொடுத்து அனுப்பி இருக்கிறான்.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் இவ்வாறே அல்லாஹ் கொடுத்து அனுப்பியுள்ளான்.
உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட் கொடையையும், வேதத்தையும் ஞானத்தையும் வழங்கியதையும் எண்ணிப் பாருங்கள்! இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! "அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்" என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
அல்குர்ஆன் 2:231
உமக்கு வேதத்தையும், ஞானத்தையும் அல்லாஹ் அருளினான். நீர் அறியாமல் இருந்ததை உமக்குக் கற்றுத் தந்தான். உம் மீது அல்லாஹ்வின் அருள் மகத்தானதாக உள்ளது.
அல்குர்ஆன் 4:113
எல்லா இறைத் தூதர்களுக்கும் இறைவனிட மிருந்து வேதத்தைப் பெற்று மக்களுக்குச் சேர்ப்பிக்கும் பணியுடன் அவ்வேதத்துக்கு விளக்கவுரை அளிக்கும் பணியும் சேர்த்தே ஒப்படைக்கப்பட்டன.
இறைத் தூதர்களின் விளக்கவுரை தேவைப்படாத எந்த வேதமும் இறைவனால் அருளப்படவில்லை என்பதைத் திருக்குர்ஆனே தெளிவாக அறிவிக்கின்றது.
இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது வழித் தோன்றல்களில் ஒரு இறைத்தூதரை அனுப்ப வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள்.  அந்தப் பிரார்த்தனை திருக்குர்ஆ னிலும் இறைவனால் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
"எங்கள் இறைவா! (எங்கள் வழித்தோன்றல் களான) அவர்களிலிருந்து அவர்களுக்காக ஒரு தூதரை அனுப்புவாயாக! அவர், உனது வசனங்களை அவர்களுக்குக் கூறுவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். அவர்களைத் தூய்மைப் படுத்துவார். நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன்''
அல்குர்ஆன் 2:129
இப்ராஹீம் நபியவர்களின் இப்பிரார்த்தனை வேதம் அல்லாத இன்னொரு வஹீ இருப்பதை மேலும் உறுதி செய்கின்றது.
"உனது வசனங்களை அந்தத் தூதர் அவர்களுக்கு ஓதிக் காட்டுவார்''
"அவர்களுக்கு வேதத்தைக் கற்றுத் தருவார்''
என்று இப்ராஹீம் நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.  வசனங்களை ஓதிக் காட்டியவுடன் மக்களுக்கு விளங்கி விடும் என்றிருந்தால் - வசனங்களை ஓதிக் காட்டுவது மட்டுமே இறைத்தூதர்களின் பணியாக இருந்திருந்தால் - இப்றாஹீம் (அலை) அவர்கள் இவ்வாறு பிரார்த்தித்திருக்க மாட்டார்கள்.
உனது வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காட்டுவார் என்று மட்டும் கூறியிருப்பார்கள். அல்லது வேதத்தை அவர்களுக்குக் கற்றுத் தருவார் என்று மட்டும் கூறியிருப்பார்கள்.  இரண்டில் ஏதேனும் ஒன்றை மட்டும் கூறாமல் இரண்டையும் சேர்த்துக் கூறியதிலிருந்து வசனங்களை ஓதிக் காட்டுவது வேறு.  ஓதிக் காட்டிய பின் வேதத்தைக் கற்றுக் கொடுப்பது வேறு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு உங்களிலிருந்து தூதரை அனுப்பியது போல் (கிப்லாவை மாற்றுவதன் மூலமும் அருள் புரிந்தான்). அவர் உங்களுக்கு நமது வசனங்களைக் கூறுவார். உங்களைத் தூய்மைப்படுத்துவார். உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுத் தருவார். நீங்கள் அறியாமல் இருந்தவற்றையும் உங்களுக்கு அவர் கற்றுத் தருவார்.
அல்குர்ஆன் 2:151
இது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டது குறித்து கூறுகின்ற வசனமாகும்.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பையும், அதிகாரத்தையும் தெளிவாகப் பறைசாற்றும் வகையில் இவ்வசனம் அமைந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபு மொழி பேசுகின்ற சமுதாய மக்களுக்கே தூதராக முதலில் அனுப்பப்பட்டார்கள்.  அவர்களுக்கு அருளப்பட்ட வேதமும் தெளிவான அரபு மொழியிலேயே அருளப்பட்டது.
அரபு மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களுக்கு அரபு மொழி வேதத்தை ஓதிக் காட்டியவுடன் அதன் பொருள் நிச்சயம் விளங்கி விடும். 
ஆனால் மேலே கண்ட வசனம் என்ன சொல்கிறது என்று பாருங்கள்.
1. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வசனங்களை ஓதிக் காட்டுவார்களாம்.
2. பின்னர் வேதத்தை மக்களுக்குக் கற்றுக் கொடுப்பார்களாம்!
3. ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார்களாம்.
4. பின்னர் அம்மக்கள் அறியாமல் இருந்த பல விஷயங்களை கற்றுக் கொடுப்பார்களாம்.
5. அவர்களைப் பரிசுத்தம் செய்யும் பணியையும் செய்வார்களாம்.
இப்படி ஐந்து பொறுப்புக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாக இவ்வசனம் கூறுகிறது.
அல்லாஹ்வுடைய வார்த்தையில் வீணான ஒரு சொல்லும் இருக்காது, இருக்கக் கூடாது என்பதைக் கவனத்தில் கொண்டு ஆராய்ந்தால் குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீ இருப்பதைச் சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.
வசனங்களை ஓதிக் காட்டியவுடன் பெரும் பாலான வசனங்களின் பொருள் புரிந்து விடும் என்றாலும் நபிகள் நாயகம் விளக்கம் சொன்ன பிறகு விளங்கக் கூடிய வசனங்களும் குர்ஆனில் உள்ளன.  அவ்வாறு இருப்பதால் தான் வசனங் களை ஓதிக் காட்டுவார்.  மேலும் வேதத்தைக் கற்றுத் தருவார் என்று இறைவன் கூறுகிறான்.
ஹஜ் செய்யுங்கள் என்பதன் பொருளை விளங்கலாம்.  ஹஜ் என்றால் எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் விளக்கினால் தான் புரியும்.  உம்ராச் செய்யுங்கள் என்று குர்ஆன் கூறுவதன் பொருளை விளங்கலாம். அதை எவ்வாறு செய்வது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் விளக்க வேண்டும்.
இப்படி ஏராளமான வசனங்களுக்கு எவ்வாறு செயல் வடிவம் கொடுப்பது என்பதை விளக்கும் அதிகாரத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிறான் என்பதைத் தான் மேற்கண்ட வசனம் தெளிவாக்குகின்றது.
அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் மறுத்து, "சிலவற்றை ஏற்று சிலவற்றை மறுப் போம்'' எனக் கூறி, அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்குமிடையே வேற்றுமை பாராட்டி இதற்கு இடைப்பட்ட வழியை உருவாக்க யார் எண்ணுகிறார்களோ அவர்களே உண்மையாக (நம்மை) மறுப்பவர்கள். மறுப்போருக்கு இழிவு தரும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.  அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்பி அவர்களில் எவருக்கிடையேயும் வேற்றுமை காட்டாதோருக்கு அவர்களது கூலிகளை அவன் பின்னர் வழங்குவான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் 4:150, 151, 152
திருக்குர்ஆன் மட்டுமே எங்களுக்குப் போதும், திருத்தூதர்களின் வழிகாட்டுதல் ஏதும் தேவையில்லை என்று வாதிடுவோருக்கும் இஸ்லாத்திற்கும் எள்ளளவும் தொடர்பு இல்லை என்று இந்த வசனங்கள் தெளிவாகப் பிரகடனம் செய்கின்றன.
"அல்லாஹ்வுக்கும் அவனது தூதர்களுக்கும் இடையே வித்தியாசப்படுத்தி சிலதை ஏற்போம்.  வேறு சிலதை நிராகரிப்போம்'' என்று கூறுபவர்கள் உண்மையான காஃபிர்கள் என்று இவ்வசனம் கூறுகிறது.
திருக்குர்ஆன் மட்டுமின்றி அதற்கு விளக்கமாக அமைந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தையும் பின்பற்றுவது முஸ்லிம்களின் மீது கடமை என்பதைப் பல சான்றுகள் வலியுறுத்துகிறன.
திருக்குர்ஆனில் தொழுகையை வலியுறுத்தும் வசனங்கள் மிக அதிக அளவில் இடம் பெற்றுள்ளன.  மேலும் சில விஷயங்களும் அடிக்கடி வலியுறுத்தப்பட்டுள்ளன.  இவ்வாறு அதிகமாக வலியுறுத்தப்பட்ட விஷயங்களில் "அல்லாஹ்வுக்கும் கட்டுப்படுங்கள்! அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்'' என்பதும் ஒன்றாகும்.
ஒரிரு இடங்களில் அல்ல.  ஏராளமான இடங்களில் இந்தக் கட்டளை திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளது.
"அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப் படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 3:32)
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள்.  (அல்குர்ஆன் 3:132)
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 4:13)
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த் தியாகிகளு டனும் நல்லோருடனும் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள். (அல்குர்ஆன் 4:69)
இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாள ராக நாம் அனுப்பவில்லை. (அல்குர்ஆன் 4:80)
அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத் தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! எச்சரிக்கையோடு இருந்து கொள்ளுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துச் சொல்வதே நமது தூதரின் கடமை என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
(அல்குர்ஆன் 5:92)
நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்!
(அல்குர்ஆன் 8:1)
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செவிமடுத்துக் கொண்டே அவரைப் புறக்கணிக்காதீர்கள்!
(அல்குர்ஆன் 8:20)
அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதை அல்லாஹ் எவ்வாறு நம் மீது கடமையாக்கியுள்ளானோ அதுபோலவே அவனது தூதருக்குக் கட்டுப்படுவதையும் கடமையாக ஆக்கியுள்ளான் என்பதை ஏற்றுக் கொள்பவர்கள் தாம் திருக்குர்ஆனின் இவ்வசனங்களை ஏற்பவர்களாக ஆவார்கள்.

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவோம், அவனது தூதருக்குக் கட்டுப்பட மாட்டோம் என்போர் அல்லாஹ்வின் கட்டளையை மீறியதால் அல்லாஹ்வுக்கே கட்டுப்படாதவர்களாக உள்ளனர் என்பதில் ஐயமில்லை.
EGATHUVAM JUN 2015