ஹதீஸ் மறுப்பு ஓர் இறை நிராகரிப்பு
இம்மாத ஏகத்துவம் ஏனைய வழக்கமான இதழை விட
முற்றிலும் வேறுபட்டு மலர்ந்து மணம் பரப்புகின்றது.
இவ்விதழ் முழுவதும் இஸ்லாமியக் கல்லூரியில்
படித்து முடித்து இவ்வாண்டு பட்டம் பெறவிருக்கின்ற இறுதியாண்டு மாணவர்களால்
தயாரிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியக் கல்லூரியின் இந்த மாணவர்கள் மே
மாதம், 31ஆம் தேதி பட்டம் பெறுகின்ற
இந்நிகழ்ச்சியை மேலப்பாளையம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்துக் கிளைகள்
ஒத்துழைப்புடன் "ஹதீஸ் மாநாடாக'' நடத்த
கல்லூரி நிர்வாகம் முடிவு செய்தது.
இந்த ஹதீஸ் மாநாட்டை நடத்துவதற்கு அடிப்படைக்
காரணமே, தவ்ஹீத் ஜமாஅத்தின் எதிரிகள்
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் "ஹதீஸ் மறுப்பாளர்கள்' என்ற மாயையை நமக்கு எதிராகப் பரவ
விட்டிருக்கின்றனர்.
தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக எத்தனையோ பொய்யான
குற்றச்சாட்டுக்களை எதிரிகள் சாட்டியிருக்கின்றனர். அந்த வரிசையில் இதுவும்
ஒன்றுதான் என்றாலும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு ஹதீஸ் பற்றிய உறுதியான நிலைபாடு உண்டு!
பிடிமானம் உண்டு! அதைச் சமுதாய மக்களுக்கு எடுத்துச் சொல்கின்ற கடமை இருக்கின்றது.
அதற்காகவே இந்த ஹதீஸ் மாநாடு! அதையொட்டி இந்த மாநாட்டு மலர் வெளியீடு!
தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்த வரை நபி (ஸல்)
அவர்களின் ஹதீஸை அல்லாஹ்வின் வஹீயாகவே நம்புகின்றது!
ஏனென்றால் எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகின்றான்.
அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர்
பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியே தவிர வேறில்லை.
அல்குர்ஆன் 53:3,4
குர்ஆனும் வஹ்யிதான்! ஹதீசும் வஹ்யிதான்!
ஒரு சில ஹதீஸ்களை, ஹதீஸ் குதுஸீ என்று ஹதீஸ் கலையில்
வகைப்படுத்துகின்றனர். இவ்வாறு வகைப்படுத்தப்படுவதற்குக் காரணம், இந்த வகை ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்
சொன்னதாகச் சொல்வார்கள். இதை வைத்து ஹதீஸ் குதுஸீ - புனித ஹதீஸ் என்று குறிப்பிடுவார்கள்.
இதில் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு, எல்லா ஹதீஸ்களும் வஹீயின் அடிப்படையில்
புனிதமானவைதான்! அல்லாஹ் சொன்னதாக ஒரு சில ஹதீஸ்களில் வருவதை வைத்துக் கொண்டு ஏனைய
ஹதீஸ்களை பின்னுக்குத் தள்ளி விடக்கூடாது! அதற்குரிய மதிப்பை அளிக்கத் தவறிவிடக்
கூடாது என்பதாகும்.
இப்படிப்பட்ட கொள்கையுடைய ஒரு ஜமாஅத் எப்படி
ஹதீஸை மறுக்கும்?
குர்ஆன் மட்டும் போதும் என்ற கூட்டம் தமிழகத்தில்
உருவெடுத்தது. அந்தக் கூட்டத்தை விவாதக்களங்கள் மூலம் தவ்ஹீத் ஜமாஅத் ஓட ஓட
விரட்டியது.
குர்ஆன் ஹதீஸ் என்ற பெயரில் இயக்கம்
நடத்துகின்ற எவரும் அந்தக் கூட்டத்தை எதிர்கொள்ள வரவில்லை. இன்று தங்களை ஹதீஸ்
பற்றாளர்கள் போல் காட்டிக் கொள்ளும் எவரும் அன்று அவர்களுக்குப் பதில் கூற
முன்வரவில்லை.
ஹதீஸை மறுப்பது தெளிவான இறைநிராகரிப்பு என்று
பிரகடம் செய்து, அதற்கான ஆதாரங்களை
திருக்குர்ஆனிலிருந்தே எடுத்துக் காட்டி, தமிழகத்தில்
அவர்களைத் தலை தூக்கவிடாமல் செய்தது தவ்ஹீத் ஜமாஅத் தான்.
இதிலிருந்து ஹதீஸை வஹீ என்று நம்புவதில் இந்த
ஜமாஅத்துக்கு இருக்கும் உறுதியை அறிந்து கொள்ளலாம்.
குர்ஆனோடு ஹதீஸ் மோதும் போது, அதுபோன்ற கட்டத்தில் குர்ஆனுக்குத் தான்
முன்னுரிமை கொடுக்க வேண்டும். குர்ஆனை மறுத்த நிலைக்கு ஆளாகிவிடக் கூடாது என்ற
நிலைபாட்டை இந்த ஜமாஅத் தயவு தாட்சண்யமின்றி விமர்சனத்திற்கும் விளைவிற்கும் அஞ்சாது
சொல்கின்றது.
அதற்காகவே இந்த ஜமாஅத்தினர் மீது ஹதீஸ்
மறுப்பாளர்கள் என்ற முத்திரையைக் குத்துகின்றனர்.
ஆனால் உண்மையில், இத்தகையவர்கள்
ஹதீஸ்களின்படி நடக்காமல் தெரிந்தே அவற்றைப் புறக்கணிக்கின்றனர். பின்பற்ற வேண்டும்
என்று நாம் சொல்லும் ஹதீஸ்களைக் கேலியும் கிண்டலும் செய்கின்றனர்.
ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டி நாம் ஒரு அமலைச்
செய்யும் போது, இவர்கள் மத்ஹபு இமாம்களைக்
காட்டி, "எங்கள் இமாம் இப்படித் தான்
சொல்லியிருக்கிறார்' என்று கூறி ஹதீஸை
மறுக்கின்றார்கள்.
சமாதி வழிபாட்டை நபி (ஸல்) அவர்கள் கண்டித்த
செய்திகளை நாம் ஹதீஸ்களிலிருந்து எடுத்துக் காட்டும் போது, இவர்கள் அவ்லியாக்களின் பெயரால் அதை
நியாயப்படுத்தி, ஹதீஸை மறுக்கின்றார்கள்.
கப்ருகள் தரை மட்டமாக்கப்பட வேண்டும் என்று
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போது, இவர்கள் தரை மட்டத்திற்கு மேல் மட்டுமல்லாது
வானளாவிற்கு அதில் கட்டடம் எழுப்பி, ஹதீஸைக்
கேலிப் பொருளாகச் சித்தரிக்கின்றனர்.
இப்படி ஒவ்வொன்றிலும் ஹதீஸைச் செயல்பூர்வமாக
மறுக்கும் இவர்கள் நம்மைப் பார்த்து ஹதீஸ் மறுப்பாளர்கள் என்று கூறுவது
வேடிக்கையும், வினோதமும் ஆகும்.
இந்த ஜமாஅத், ஹதீஸை
அல்லாஹ்வின் வஹ்யி என்று நம்புகிறது. அந்த வஹ்யி எப்படி பாதுகாப்பான வழியில்
நமக்கு வந்து சேர்ந்திருக்கின்றது என்பதை எண்ணிப் பார்க்கும் போது நமது மேனி
சிலிர்க்கின்றது.
மேனியைச் சிலிர்க்க வைக்கின்ற ஹதீஸ் வரலாறுகளை
இந்த ஏகத்துவம் மாத இதழ் மூலம் விரிவாக இந்த ஜமாஅத் எடுத்துரைக்கின்றது.
இந்த இதழ், நாங்கள்
ஹதீஸின் மீது வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையை உங்களுக்குப்
பறைசாற்றுகின்றது.
"என்னிடத்திலிருந்து ஒரே
ஒரு செய்தி கிடைத்தாலும் அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள்''
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: புகாரி 3461
என்று இறைத்தூதர் அவர்கள் சொன்னதற்காக
நபித்தோழர்கள் முதல் புகாரி, முஸ்லிம் போன்ற
நூலாசிரியார்கள் வரையிலான ஹதீஸ் துறையினர் பெரும் உழைப்பைச் செய்திருக்கின்றனர்.
அதே சமயம்,
"என் மீது யார்
இட்டுக்கட்டிப் பொய் சொல்வானோ, அவன் நரகில் தன்
இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்''
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 110
என்ற நபி (ஸல்) அவர்களின் உத்தரவிற்கேற்ப
பொய்யான ஹதீஸ் உள்ளே வந்துவிடக் கூடாது என்பதற்காக வேலிகளை
அமைத்திருக்கின்றார்கள். இதையெல்லாம் இந்த ஹதீஸ் மாநாட்டு சிறப்பு மலர்
தெளிவுபடுத்துகின்றது.
இஸ்லாமியக் கல்லூரி ஆசிரியர்களின் ஆழமான
மேற்பார்வையில் கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்கள் உருவாக்கிய இம்மலர், சமுதாய மக்கள் குறிப்பாக தஃவா களத்தில் உள்ள
அழைப்பாளர்களுக்கு அதிகம் பயனளிக்கும் என்று நம்புகிறோம்.
EGATHUVAM JUN 2015