Mar 30, 2017

தலையங்கம்: புகழனைத்தும் புனிதன் அல்லாஹ்வுக்கே!

தலையங்கம்: புகழனைத்தும் புனிதன் அல்லாஹ்வுக்கே!

"காவிரி பெருக்கெடுத்தால் கொள்ளுமிடம் கொள்ளிடம்'' என்ற சரித்திரம் மாற்றப்பட்டு, காவிரி பெருக்கெடுத்தால் கொள்ளுமிடம் கும்பகோணம் என்ற புது மொழியை, அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் படைத்திருக்கின்றது

தமிழக முஸ்லிம்கள் வரலாற்றில் இப்படியொரு கூட்டம் எதற்காகவும் கூடியதில்லை என்ற புதிய வரலாறும் படைக்கப்பட்டுள்ளது.

காணுமிடமெல்லாம் மக்கள் வெள்ளம்! பேரணி துவங்குமிடம், முடியும் இடம் என்ற ஒரு முனையிலிருந்து மறு முனை வரையிலும் பெண்கள் கூட்டம் நிறைந்து, அதன் பிறகு ஆண்கள் பேரணி என ஆறு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் பேரணி நிறைவடையாத நிலையில் பாதிப் பேர் நேரடியாக மாநாட்டுத் திடலுக்கே வரும் நிலை! இன்னும் பல பேருந்துகளிலிருந்து மக்களை இறங்க விடாமல் காவல் துறையினர் திருப்பியனுப்பிய சம்பவமும் நடந்தேறியது.

"நான் ஒன்றரை மணிக்கு பேரணி புறப்படும் இடமான அசூர் பைபாஸ் சாலைக்கு வந்தேன். இரவு 12 மணிக்குத் தான் மாநாட்டு மேடையைப் பார்த்தேன்'' என்று ஆதங்கப்படுகிறார் ஒரு சகோதரர்.

"பத்து லட்சம் பேர் பங்கேற்கிறார்களாம்'' என்று வக்கனையடித்தவர்களை வாயடைத்து, வார்த்தையிழக்கச் செய்தது குடந்தையில் குழுமிய மக்கள் வெள்ளம்.

இடத்தைத் தேர்வு செய்த தலைமை நிர்வாகிகளின் எதிர்பார்ப்பைத் தவிடு பொடியாக்கி, "இத்தனை கூட்டத்திற்கு இந்த இடம் தாங்குமா? தகுமா?'' என மக்கள் ஆனந்த அதிருப்தியை வெளிப்படுத்தியது பேரணியின் வெற்றிக்கு சாட்சியாக உள்ளது.

மும்மூன்று பேராக வரிசையாகச் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் தகர்ந்து, பேரணி வழித்தடம் எங்கும் கூட்டம் கூட்டமாக மக்கள் நெரிசலில் சிக்கி மாநாட்டுத் திடலுக்கு வந்தடைந்தனர். மேடையை பெரும் பகுதி மக்கள் பார்க்கவே முடியாத அளவுக்கு பெருங் கூட்டம்! நெரிசலில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விடக் கூடாதே என்றெண்ணி, அங்கு ஏக நாயனைப் பிரார்த்திக்காத மக்கள் இருக்க முடியாது.

இத்தனை கூட்டத்தையும் ஒன்று திரட்டி, எந்த அசம்பாவிதமும் இல்லாமல் வெற்றிகரமாக பேரணி, மாநாடு நிறைவடைய வகை செய்த புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே என்று தவ்ஹீத் ஜமாஅத் அவனைப் போற்றி நிற்கின்றது.

தழையத் தழைய நன்றிகள் அனைத்தையும் முதன் முதலில் அவனுக்குச் சாற்றி நிற்கின்றது. மடை உடைத்த வெள்ளம் போல், தடை உடைத்த மக்கள் கூட்டம் கும்பகோணத்தில் கரை புரண்டதற்கு மனித உழைப்பு காரணமல்ல! எல்லாம் வல்ல அல்லாஹ்வே காரணம் என்று முகமும், அகமும் பணிய அடக்கத்துடன் பறை சாற்றுகின்றது.

அப்பப்பா! எவ்வளவு விஷமப் பிரச்சாரங்கள்! எத்தனை அவதூறுப் பிரசுரங்கள்! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெயரிலேயே, அதன் தோற்றத்திலேயே போலிப் பிரசுரங்கள்! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முகவரியிட்டு, தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களுக்கு கள்ளக் கடிதங்கள் என்று இவர்கள் பின்னிய சதி வலைகளைப் பிய்த்தெறிந்து விட்டுப் பாய்ந்து வந்த மனித அலைகள் உண்மையில் கும்பகோணத்தைக் குலுக்கி விட்டது.

இறுதிக்கட்ட முயற்சியாக மாநில நிர்வாகிகளின் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் கடிதங்களை அனுப்பி, பீதியைக் கிளப்பி, மீடியாக்களைத் திசை திருப்பினார்கள்.

இந்தச் சதி வலையைப் பின்னியவர்கள் எல்லாம் யார் என்கிறீர்கள்? தஞ்சைப் பேரணி வரை சகவாசம் கொண்டு ஒட்டி உறவாடிய பழைய சகாக்கள் தான். "இப்படியொரு தரங்கெட்ட கூட்டத்துடனா கரம் கோர்த்திருந்தோம்?'' என்று நம்மால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

மாநிலமெங்கும் இவர்கள் வளைத்து, வளைத்துக் கட்டிய வஞ்சக அணைக் கட்டுகள், வழி நெடுகிலும் எழுப்பிய மதகுகள், இவை அத்தனையின் கதவுகளையும் சாடி, சரித்து விட்டு இந்த மக்கள் வெள்ளம் ஓடி வந்து கும்பகோணத்தில் புகுந்தது.

மயிலாடுதுறை, ராமநாதபுரம் என மாவட்ட மாநாடுகள் போட்டு மக்கள் வெள்ளத்தைத் திருப்பி விட வேண்டும் என்று இவர்கள் கங்கணம் கட்டி, வெட்டிய வாய்க்கால்களில் அந்த வெள்ளம் பாய்ந்து விடாமல் கும்பகோணத்தில் வந்து பாய்ந்தது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் அருளாகும். அவனுக்கே புகழ் அனைத்தும் என்று அவன் ஒருவனையே பாராட்டுகின்றது.

கூடிய மக்களுக்குக் கோடி நன்றிகள்

தவ்ஹீத் ஜமாஅத்தின் அழைப்பை ஏற்று, இந்த இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை மாநாட்டிற்குத் தனித் தனியாகவும், அணியணியாகவும், இரவு நேரங்களில் சொட்டு சொட்டாகக் கொட்டுகின்ற பணியையும் பொருட்படுத்தாது, உணவு, உறைவிடம், உறக்கத்தைப் பற்றித் துளியும் கவலைப்படாது கைக்குழந்தைகளுடன் குடும்பத்துடன் கலந்து கொண்டு தங்கள் மலர் பாதங்கள் வலியெடுக்க, வருங்கால நம்பிக்கைக்கு வலிவு கொடுக்க, பேரணியில் அடியெடுத்து வைத்து ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பை நல்கிய அன்னையர் குலத்திற்கு இனிய நன்றிகள்.

தங்கள் வருங்கால சந்ததியின் வாழ்வு சிறக்க எங்களது முதுமை ஒரு முட்டுக்கட்டை கிடையாது என்று முறுக்கேறிய முழு நம்பிக்கையுடன் வந்த முதியவர்களுக்கும் இதயங் கனிந்த நன்றிகள்.

"இனி எதிர்காலம் இன்ஷா அல்லாஹ் ஏகத்துவத்திற்குத் தான்'' என்ற இலட்சியங்களைத் தங்களின் இதயங்களில் தாங்கி, கை, கால்கள் கடுக்க பேரணி விளம்பர பேனர்களைக் கட்டி, ஊன் உறக்கம் துறந்து, எதிரிகள் கொழுத்தி வைத்த வதந்தீகளைப் பற்ற விடாமல் எரிந்திடாதவாறு அணைத்து விட்டு, ஆர்த்தெழுந்து வந்த அடலேறு களுக்கு, இப்ராஹீம் நபியின் எழுச்சி மிகு வாரிசுகளுக்கு, இளைய தலைமுறையினருக்கு எல்லையற்ற இதயமார்ந்த நன்றிகள்.

இந்தப் பேரணியும் மாநாடும் இந்த அளவுக்கு மாபெரும் வெற்றியைத் தழுவுவதற்குத் தகுந்த காரணிகளாகத் திகழ்ந்தவர்கள் வளைகுடா மற்றும் இதர வெளிநாடுகளில் பணி புரியும் கொள்கைச் சகோதரத் தங்கங்கள்! தவ்ஹீது ஜமாஅத்தின் அங்கங்கள்!

சதிகாரர்கள் பிரிந்தவுடன் கொள்கை வெறி கொண்டு, இலட்சிய நெறி கொண்டு, இரண்டாண்டு காலத்தில் இந்த இயக்கத்தை இமயத்தைத் தொட வைத்த சிகரங்கள்! இதை எழுதுகின்ற வேளைகளில் உங்கள் உதவிகளை எண்ணி, எழுதுகோல்களில் மைத்துளிகள் வழிவது போல் விழிகளில் கண்ணீர்த் துளிகள் வழிந்தோடுகின்றன. கொள்கைக் குன்றுகளே! குணக் கொழுந்துகளே! உங்கள் கைகள் கொடுத்த கொடைகளில் தான் இந்த ஏகத்துவப் படைகள் குடந்தை நோக்கிப் புறப்பட முடிந்தது.

குடந்தையில் ஓடுகின்ற காவிரியின் சேர்மானங்கள், சங்கமங்கள் தண்ணீர் துளிகள் என்றால், குடந்தையில் கூடிய இந்தக் கூட்டத்தின் சேர்மானங்கள், சங்கமங்கள் உங்களின் கண்ணீர் துளிகள்! ஐவேளைத் தொழுகையின் போது நீங்கள் அழுதழுது கேட்ட பிரார்த்தனையின் அங்கீகாரங்கள்! உழைக்கின்ற உங்கள் தேக்கு மேனிகளில் சுரந்த வியர்வைத் துளிகள் என்று கூறினால் அது மிகையல்ல! தகையானது தான், தகுதியானது தான்! எனவே உங்களுக்கும் எங்களது நெஞ்சம் நிறைந்த நன்றிகள்

தவ்ஹீத் ஜமாஅத்தின் அழைப்பை ஏற்று, குடந்தையில் வந்து குவிந்த, குழுமிய அனைத்து ஜமாஅத்தின ருக்கும், இம்மாநாடு வெற்றி பெறுவதற்காகக் கொடுத்து உதவிய உள்நாட்டுக் கொடையாளிகளுக்கும், ஆட்சியாளர்கள், அதிகாரிகள், மாநாட்டில் சேவை புரிந்த மருத்துவர்கள் என அனைவருக்கும் இதயம் செழுமிய இனிய நன்றிகள்.

இது வரை இப்படியொரு கூட்டத்தைக் கும்பகோணம் கண்டதில்லை என்று கூறி, வழி நெடுக  நின்று தண்ணீர் வழங்கி, உதவிகள் செய்த குடந்தை மக்கள் குறிப்பாக முஸ்லிமல்லாத மக்கள் காட்டிய அன்பை மறக்க முடியாது. அந்த மக்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இறுதியில் ஓர் எச்சரிக்கை

நம்முடைய பழைய சகாக்கள் தடம் புரண்டதற்கும், தடுமாறியதற்கும், தவ்ஹீது என்ற வார்த்தையைக் கேட்டதும் தணல் புழுவானதற்கும் ஒரே ஒரு காரணம் மக்கள் கூட்டத்தைக் கண்டது தான்.

இத்தனைக்கும் இன்று குடந்தையில் கூடிய கூட்டத்தில் பத்தில் ஒரு பங்கு தான் அன்று தஞ்சையில் கூடியது. அது தான் அவர்களின் மனங்களில் அரசியல் வாழ்வின் மத்தாப்புச் சிந்தனைகளாக மின்னி மறைந்தது.

கும்பகோணம் பேரணிக்கு எந்தக் கூட்டம் உழைத்ததோ அதே கூட்டம் தான் தஞ்சைப் பேரணிக்கும் உழைத்தது. இவ்வாறு உழைத்த அன்பு உள்ளங்களை உதறித் தள்ளினார்கள்! சாறை, சத்தை உறிஞ்சி விட்டு, சக்கையாக வெளியே தள்ளினார்கள். எட்டாத இடத்திற்குச் சென்று விட்டோம் என்றெண்ணி, ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தனர். முகத்திற்கு முன்னால் முறுவலித்துப் பேசி விட்டு, முதுகில் குத்தினார்கள்.

இதற்கெல்லாம் என்ன காரணம்? ஒன்றே ஒன்று தான். மக்கள் கூட்டம் தான். அன்று வந்த கூட்டத்தை விட இன்று வந்த கூட்டத்தின் எண்ணிக்கை பன் மடங்கு அதிகம். இது நம்முடைய உள்ளத்தில் மயக்கத்தைத் தந்து விடக் கூடாது.

மதுவை மிஞ்சிய மக்கள் போதை

மக்கள் கூட்டத்தைப் பார்த்ததும் ஏற்படும் போதை மதுவை விட மிஞ்சி, மயக்கத்தைத் தர வல்லது. அல்லாஹ் காப்பானாக!

இந்த எண்ணம் நாம் நெருங்க முடியாத இடத்தில் இருந்த நபித் தோழர்களிடம் கூடத் தலை காட்டியுள்ளது. இதை அல்லாஹ் தனது திருமறையில் கண்டிக்கின்றான்

பல களங்களில் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கிறான். ஹுனைன் (போர்) நாளில் உங்களின் அதிக எண்ணிக்கை உங்களுக்கு மமதையளித்த போது, அது உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்கவில்லை. பூமி விசாலமாக இருந்தும் உங்களுக்கு அது சுருங்கி விட்டது. பின்னர் புறங்காட்டி ஓடினீர்கள். (அல்குர்ஆன் 9:25)

அவனது அருள் இன்றி, அதிக எண்ணிக்கை மட்டுமே வெற்றியைத் தந்து விடாது, வேறு எதையும் சாதித்து விடாது என்று அல்லாஹ் எச்சரிக்கின்றான்.

இந்த வசனம் தரும் பாடம், அல்லாஹ் வெற்றியைத் தருவதற்கு எண்ணிக்கை ஒரு கருவியல்ல! கொள்கை தான்! உறுதி மிக்க ஏகத்துவக் கொள்கை தான்! இதற்காகத் தான் அல்லாஹ் வெற்றியை அளிக்கின்றான் என்பதைக் கணக்கில் கொண்டு நமது இலட்சியப் பயணத்தைத் தொடர்வோம்.

அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் வரும் போது, (முஹம்மதே!) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 110வது அத்தியாயம்)

கூட்டம் நிறைந்து வழியும்     போது, அடக்கத்துடன் புனிதன் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனிடம் பாவ மன்னிப்புக் கோருவோமாக!

பேரணியின் பிரம்மாண்டங்கள்

"மூப்பும், முதுமையும் எங்கள் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கைக்கு ஆப்பு வைத்து விட முடியாது'' என்பதை நிரூபிக்கும் விதமாக முழக்கங்களை எழுப்பிக் கொண்டு, முக்காடு போட்ட மூதாட்டிகள் தள்ளாடித் தள்ளாடி, தளர் நடை போட்டு வந்த காட்சி நம்மை உலுக்கி விட்டது.

நான்கு மாதக் கைக்குழந்தையையும் தங்கள் கைகளில் ஏந்தியவாறு, கோரிக்கைக் கோஷங்களை வாயிலிருந்து சிந்தியவாறு அவ்வளவு தூரத்தையும் அலுப்புத் தட்டாமல் பெண்கள் அடியெடுத்து வைத்தது அடி மனதை ஆட்டியது. கண்களை அருவியாக்கியது. இனி மேலும் இந்த ஆட்சியாளர்கள் இதில் மெத்தனம் காட்டினால் அது அவர்களது அரசியல் வாழ்வின் அஸ்தமனம் தான் என்ற அச்சுறுத்தலை அளித்தது.

மக்களை நிரம்ப அடைத்துக் கொண்டு வயிறு புடைத்து வந்த பேருந்துகள் பாதை ஸ்தம்பித்து விட்டதால் ஆங்காங்கு நின்று விட்டன. பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற பேரவாவில் தங்கள் உடைமைகளை, உணவுகளைப் பேருந்துகளில் அப்படியே போட்டு விட்டு வந்து விட்டதன் விளைவு பசி, பட்டினி, கலைப்பு, தலைச்சுற்று, மயக்கம்! இத்தனையையும் தாண்டி மூன்றரை கி.மீ. தூரத்தை இம்மக்கள் தாண்டியது இதயத்தைக் கசக்கிப் பிழிந்தது.

இது வரை பல பண்டங்களை, பதார்த்தங்களை, பலப்பல குளிர், சூடான பானங்களை கையகம் கொண்டு பாத யாத்திரை செய்த வரலாற்றைப் பத்திரிகைகளில் படித்திருக்கிறோம். இப்படிப் பசியும், பட்டினியுமாய் தங்கள் பாதங்கள் நோக, பாத யாத்திரை நடத்தியது இது தான் முதல் தடவை! நபி (ஸல்) அவர்கள் பசியும், பட்டினியுமாய் தமது தோழர்களுடன் நடத்திய அகழ்ப் போரின் ஆழ, அகலத்தை உணர வைத்தது.

பால் மணம் மாறாத பாலகர்கள், சின்னஞ்சிறுமிகள் தங்கள் அன்னையரின் வேக நடைக்கு ஈடாக, இணையாக எட்டுகள் போட்டு, தாவித் தாவி வந்தது, "தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்'' என்ற பழமொழியை நிரூபித்தது. அவர்களது பிஞ்சுப் பாதங்கள் புழுதிப் படலத்தைக் கிளப்பியவாறு கொஞ்சும் மொழி பேசும் அந்தக் குயில்கள் எழுப்பிய கோஷங்கள் குடந்தை நகரம் முழுவதும் எதிரொலித்து, அங்குள்ள மாற்று மதச் சகோதரர்களின் நெஞ்சைத் தொட்டு விட்டது.

உருவத்தில் இரண்டு வயது சிறுவனைப் போல் காட்சியளித்த 17 வயது இளைஞர் மீரான் என்பவர் பேரணிக்கு ஈடு கொடுத்து நடந்து வர முடியாததால் வேறொரு சகோதரர் கால் கடுக்க, கழுத்து வலியெடுக்க அவரைத் தூக்கி வந்த நிகழ்வு, பேரணி வரலாற்றில் ஒரு புத்தம் புது அத்தியாயம்.

தலையில், தாடியில், நரை விழுந்தாலும் எங்கள் உணர்ச்சியில், உரிமைப் போராட்டத்தில் நரை விழவில்லை, திரை விழவில்லை என்று கூடிய முதியோர் கூட்டம் முன்னெப்போதும் கண்டிராத முன்னுதாரணமாகும். "அல்லாஹ் மலக்குகளைக் கொண்டு வந்து நிரப்பி விட்டான்'' என்று கண்களில் நீர் வழிய அவர்களில் ஒருவர் சொன்னது முற்றிலும் உண்மை என்பதற்குக் கூடிய கூட்டம் சான்று!

ஊனமுற்றவர்கள், மூன்று சக்கர வண்டிகளைப் பேருந்துகளில் கட்டி வந்து, "இந்த உரிமைப் போராட்டத்தில் எங்களுக்கு ஊனம் ஒரு தடையில்லை'' என்று உணர்த்தியது இந்தப் பேரணியின் தன்னந்தனிச் சிறப்பாகும்.

மது மயமில்லாமல் ஒரு மகாமகம்

"பகல் 2 மணி வரை ஒரு குருவி கூட இந்தத் திடலில் இல்லை. ஒரு குஞ்சு கூட இல்லை. எப்படி அதற்குள் வந்து குவிந்தது இந்த மக்கள் கடல்? எங்கிருந்தது வந்து கூடியது இந்தக் கூட்டம்? நான் மகாமகத்தைப் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் மதுக் கடைகள் காலியாகி விடும். ஆனால் இப்போதோ மதுக்கடைகள் எந்தவொரு சலனமும் இல்லாமல் காலியாகக் கிடப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. இந்தப் பேரணியில் வந்த எந்த ஒரு குடிமகனும் "குடி'மகனாக மாறாமல், மதுக் கடையின் பக்கம் அடியெடுத்து வைக்காமல் சென்ற காட்சி எனக்கு அதிசயமாக உள்ளது''

இப்படிக் கூறுவது, காவலுக்கு நின்ற மாற்று மதத்தைச் சார்ந்த ஒரு காவல் துறை அதிகாரி!

குடந்தை மக்களைக் குடைந்த அதிசயங்கள்

நி    திரைப்படத் துறையின் தொப்புள் பம்பரப் பிரபலங்கள் இல்லை!

நி    வெட்கத் தலங்களை வெளிச்சத்திற்கு விற்று விட்ட நட்சத்திர நடிகைகள் இல்லை!

நி    அறிமுகமான அரசியல் தலைவர்கள் இல்லை!

நி    ஆட்சியாளர்கள் இல்லை.

இப்படி யாருமே இல்லாமல் இப்படி ஒரு கூட்டமா? இது எப்படி வந்தது?

உணவு விடுதியில் சண்டைகள் இல்லை; வாய்த் தகராறுகள் இல்லை; சோடா பாட்டில்கள் உடைப்பு இல்லை; "வாடா ஒரு கை பார்த்திடுவோம்'' என்ற ஏச்சுப் பேச்சுக்கள் இல்லை.

குறிஞ்சி மலர் போல் பன்னிரெண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் மகாமகத்தில் மரண ஓலங்களைக் கேட்டிருக்கிறோம். மகாமகத்தை மிஞ்சிய இந்த மகா மாநாட்டில் காயம் பட்ட ரண சப்தத்தைக் கேட்கவில்லை; கூச்சல் இல்லை; குழப்பம் இல்லை. இது எப்படி நடந்தது?

இது குடந்தை மக்களைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்விக் கணையாகும்.

நகரம் கண்ட நாகரீக வரலாறு

ஒரு நூறு பேர் ஓரிடத்தில் ஒன்று கூடினால் போதும்! அவ்வளவு தான்! பார்க்கும் இடமெல்லாம் மலம் ஜலம்! நகரெங்கும் நாற்ற மயம்! காணும் இடம் எல்லாம் மனிதக் கழிவுகள் என முடை நாற்றங்கள் மூச்சைத் துளைத்தெடுக்கும்.

குடந்தை நகரத்தில் கூடிய மக்கள் எண்ணிக்கை பல இலட்சங்கள். ஆனால் கால்நடையிலும் கீழாய் கழிந்து தள்ளும் கலாச்சாரமின்றி, நரகலின்றி, நாற்றமின்றி, நகரத்தை நரகமாக்காமல் பல லட்சம் பேர் நகர்ந்து சென்ற காட்சி குடந்தை நகர மக்களின் மனங்களில் நகர மறுக்கின்றது.

மாலைக் கண் நோய்

முஸ்லிம்களின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக அமைந்த குடந்தையின் வெள்ளப் பெருக்கு சன் டிவியின் தமிழ் மாலைக்கு மறைந்து விட்டது. மாறனின் அலை வரிசைகளுக்கு ஏற்பட்ட மாலைக் கண் நோய் தான் காரணம். எங்கோ ராமநாதபுரத்தில் சில நூறு பேர் கூடிய குள்ள நரிக் கூட்டத்தைத் தன் செய்தியில் கூறும் இந்த மஞ்சள் அலைவரிசைகளின் குருட்டுக் கண்களுக்கு கும்பகோணம் குலுங்கியது தெரியவில்லையாம்.

முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கைக்குக் கிடைத்த இந்த ஏகோபித்த ஆதரவை ஊடகங்களில் மறைத்ததன் மூலம் தனது முஸ்லிம் விரோதப் போக்கை அது உறுதி செய்து கொண்டது.

தமிழகம் மற்றும் வளைகுடா வாழ் இஸ்லாமிய சமுதாய மக்கள் இந்த மஞ்சள் அலைவரிசைகளைத் தடுக்கும் முயற்சியில் இறங்கி விட்டனர்; இனிமேல் மாறனின் அலைவரிசைகள் மாலை நேர அஸ்தமனக் கதிர்களாக ஆகி விடும் என்பதை உணர்ந்து கொண்ட சூரியத் தொலைக்காட்சி பின்னர் நான்கு நாட்கள் கழித்து கடமைக்காக மாநாட்டுச் செய்தியை ஒளிபரப்பியது.

தவ்ஹீதுக்குக் கிடைத்த தனி மரியாதை

காவிரிக்குத் தடையாக கர்நாடகா இருப்பது போல் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மாநாட்டுக்குத் தடையாக நின்றது பழைய சகாக்களின் முகாம்கள். ஒரு பக்கம் இட ஒதுக்கீடு கேட்டு தனது கூட்டத்தில் தீர்மானம் போட்டு விட்டு, மறு பக்கம் இட ஒதுக்கீடு கேட்பது அல்லாஹ்விடம் தான் என்று சந்தர்ப்பவாதம் பேசும் ஜாக் பரிவாரங்கள் இவர்களுக்குத் துணை நின்றனர்.

இவர்கள் நடத்திய இந்தக் கபட நாடகக் கதவுகளை உடைத்துக் கொண்டு, தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரிலேயே மக்கள் காவிரி வெள்ளமாய் பெருக்கெடுத்தனர். இதில்..

தப்லீக் ஜமாஅத்தினர்

தர்ஹா வழிபாட்டினர்

தரீகா பக்தர்கள்

மத்ஹபுவாதிகள்

என்று இவர்கள் தரம் பிரித்து, இனம் காட்டி, தடை செய்த முயற்சிகள் அனைத்தையும் முறியடித்துக் கொண்டு தான் இந்த மக்கள் கூடினர். தவ்ஹீத் ஜமாஅத் என்ற தனிப் பெயரில் தான் கூடினர்.

கடந்த காலத்தில் தஞ்சைப் பேரணி இவர்களிடம் நஞ்சைப் பாய்ச்சியதற்குக் காரணம் அங்கு கூடிய மக்கள் கூட்டம் தான். அந்த மக்களைத் தக்க வைக்க அவர்கள் கண்டு பிடித்தத் தகுந்த வழியும், உபாயமும் "தவ்ஹீது' என்ற வாடை அந்தக் கூடாரத்தில் நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான்.

தவ்ஹீதின் நிழலையே தங்கள் மீது படிய விடக் கூடாது என்று முடிவெடுத்தனர்.

அதன் விளைவாக தவ்ஹீது வாதிகளை, இவர்கள் ஏறிச் சென்ற தடந்தோள்களை வெளியே தள்ளினர்; விரட்டியடித்தனர்.

நன்றாக நினைவில் இருக்கின்றது. அந்த அரக்க நிகழ்வுகள் அரங்கேறிய காலம், ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை) அவர்களின் நினைவைத் தரும் துல்ஹஜ் மாதம் தான். "ஏகத்துவத்தைப் பின்பற்றுவதில் இப்ராஹீம் (அலை) அவர்கள் போன்று இருக்க வேண்டும்'' என்று பி.ஜே. ஆற்றிய பெருநாள் உரையைத் தான் விவாதப் பொருளாக ஆக்கினர்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அதே மாதத்தில் - ஏகத்துவத்தை அகத்திலும், முகத்திலும், பெயரில் கூட மறைக்காத உங்களுக்காக, அதை விடப் பன்மடங்கு மக்களைக் கூட்டிக் காட்டுகின்றேன் என்று தவ்ஹீது வாதிகளுக்கு ஒரு வெற்றியை நிகழ்த்திக் காட்டியிருக்கின்றான்.

இவர்கள் அனைத்துப் படைகளும் சேர்ந்து தீட்டிய சதிகளை முறியடித்து, மாபெரும் மக்கள் சக்தியை, அல்லாஹ் தனக்குப் பிடித்தமான தவ்ஹீதின் பெயரிலேயே ஒன்று திரட்டி, இப்ராஹீம் (அலை) அவர்களின் கொள்கைக்குத் தனியொரு மரியாதையைக் கொடுத்திருக்கிறான்.

தஞ்சையில் அன்று கூடிய கூட்டம் முகவரியில்லாத இவர்களுக்காகவும், இவர்கள் போடும் இரட்டை வேடங்களுக்காகவும் அல்ல என்ற உண்மை இப்போது நிரூபணம் ஆகி விட்டது.

நாங்கள் தவ்ஹீதுக்காரர்கள் தான் என்பதைப் பெயரிலும், செயல் பாட்டிலும் மறைக்காமல், ஒளிவு மறைவின்றி மக்களிடம் வைத்த உண்மையை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.

இப்படி ஏற்றுக் கொண்டு கும்பகோணத்தில் கூடிய அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள் என நிறைவான மனதுடன் கூறிக் கொள்கிறோம்.

கழுத்து மாலைகளும் கண்ணீர் மாலைகளும்

மற்ற மாநாடுகளில் மேடையில் இருப்போருக்கு, கீழே இருப்போர் கழுத்துக்கு மலர் மாலைகளை, கைத்தறித் துண்டுகளைப் பரிசாக அளிப்பார்கள்.


இந்த உரிமை மீட்புப் பேரணி மாநாட்டில் மேடையில் உள்ள தலைவர்களும், முன்னால் உள்ள தொண்டர்களும் அல்லாஹ்வின் அருளை எண்ணி, கண்ணீர் மாலைகளை மாறி, மாறிப் பரிமாறிக் கொண்டனர். இக்கூட்டம் அல்லாஹ்வுக்கு மட்டுமே நன்றிகளைச் சமர்ப்பிக்கும் கூட்டம் என்பதை இந்தக் கண்ணீர் மழை எடுத்துக் காட்டியது.

EGATHUVAM FEB 2006