Mar 1, 2017

உத்தம நபி உயிருடன் உள்ளார்களா - SEP 2015

உத்தம நபி உயிருடன் உள்ளார்களா - SEP 2015
மனாருல் ஹுதாவிற்கு மறுப்பு
ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.
சமீபத்தில் மனாருல் ஹுதா எனும் மாத இதழ், "வரலாற்று ஆய்வில் புனித ரவ்ளா' எனும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தது.
அதில் இஸ்லாத்திற்கு முரணான, பரேலவிசக் கருத்துக்களை பக்கம் பக்கமாக நிரப்பியிருந்தனர்.
"கஅபாவை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப் பட்ட ரவ்ளா சிறந்தது' என்ற அடிப்படையற்ற வாதத்தையும் அதற்கு ஆதாரமாக சில தவறான செய்திகளையும் அதில் அவர்கள் முன் வைத்திருந்தனர்.
அவர்களது அபத்தமான இக்கருத்திற்கு, தக்க மறுப்பை முந்தைய ஏகத்துவம் இதழில்  அளித்திருந்தோம்.
நபிகள் நாயகம் மரணிக்கவில்லை, இன்னும் உயிருடன் மண்ணறையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்ற வழிகெட்ட கருத்தையும் மனாருல் ஹுதா அக்கட்டுரையில் தெரிவித்திருந்தது.
இதற்கு ஆதாரம் என்ற பெயரில் சில வாதங்களையும் வைத்துள்ளார்கள்.
நபிகள் நாயகம் மரணித்து விட்டார்கள் என்பதற்குரிய மார்க்கச் சான்றுகளை முந்தைய ஏகத்துவம் இதழில் விளக்கி விட்டோம்.
இனி அவர்கள் ஆதாரம் என்ற பெயரில் எடுத்து வைக்கும் செய்திகளுக்கு உரிய விளக்கத்தை விரிவாகக் காண்போம்.
கஃபுல் அஹ்பார் செய்தி ஆதாரமாகுமா?
நபிகள் நாயகம் உயிருடன் மண்ணறையில் வாழ்கிறார்கள் எனும் தங்கள் கருத்துக்கு ஆதாரமாக கஃபுல் அஹ்பாரின் பின்வரும் செய்தியைக் குறிப்பிடுகிறார்கள்.
ஒருமுறை கஃபுல் அஹ்பார், ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றார்கள். மக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நினைவு கூர்ந்தார்கள். அப்போது கஃபுல் அஹ்பார் அவர்கள், "சூரியன் உதிக்கின்ற எந்தவொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் வானிலிருந்து இறங்காமல் இருப் பதில்லை. அவ்வானவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரை தங்கள் இறக்கைகளை அடித்தவாறு சூழ்ந்து கொண்டு நபிகள் நாயகத்திற்காக ஸலவாத் ஓதி அருள் வேண்டுகிறார்கள். மாலையானதும் அவர்கள் மேலேறி விடுகிறார்கள். அவர்களைப் போன்றே மற்றொரு வானவர் கூட்டம் (மாலையில்) இறங்குகின்றனர். அவர்களும் அவர்களை போன்றே பிரார்த்தனை செய்கின்றனர்.
இறுதியில் பூமி அவர்களை விட்டும் பிளந்து விடும். எழுபதாயிரம் வானவர்கள் நபி (ஸல்) அவர்களை சூழ்ந்து இருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்கள் வெளிப்படுவார்கள்.
இந்த செய்தி தாரமியில் (ஹதீஸ் எண்: 95) பதிவு செய்யப்பட்டுள்ளது.
நபியவர்கள் இறக்கவில்லை என்ற தங்களின் கொள்கை நிலைப்பாட்டிற்கு இத்தகைய செய்தியை ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள் எனில் மனாருல் ஹுதா வகையறாக்களின் தரம் என்ன என்பதை எளிதாக விளங்க முடிகிறது.
ஏனெனில் இந்தச் செய்தி முற்றிலும் பலவீனமான செய்தியாகும். பல காரணங்களால் இந்தச் செய்தி பலவீனமடைகிறது.
முதலாவது, இந்தச் செய்தி கஃபுல் அஹ்பாரின் சொந்தக் கருத்தாகவே சொல்லப்பட்டுள்ளது. இதை நபிகள் நாயகம் கூறினார்கள் என்பதற்கான எந்த வாசகமும் இந்தச் செய்தியில் இல்லை.
மேலும் கஃபுல் அஹ்பார் என்பார் நபித்தோழரல்ல.
ஒரு நபித்தோழர் நபிகள் நாயகத்திடமிருந்து அறிவிக்காமல் தனது சொந்தச் கருத்தை அறிவித்தால் அதையே ஆதாரமாகக் கொள்ள இயலாது. அப்படியிருக்கும் போது நபித்தோழரல்லாத, தாபியியான கஃபுல் அஹ்பார் கூறுவதை வைத்துக் கொண்டு இதை நபிகள் நாயகம் கூறினார்கள் என்பதை எப்படி உறுதிப்படுத்த இயலும். ஒரு போதும் உறுதிப்படுத்த இயலாது. இதை எப்படி மார்க்க ஆதாரமாக ஏற்றுக் கொள்ள முடியும்?
மேலும், தான் யாரிடமிருந்து கேட்டார் என்பதையும் அவர் தெளிவு படுத்தவில்லை.
எனவே நபிகள் நாயகத்தின் கருத்தாக இல்லாமல் கஃபுல் அஹ்பார் எனும் தாபியின் சொந்தக் கருத்தாக இருப்பது இச்செய்தியின் முதல் குறையாகும்.
இரண்டாவது, இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரது செய்தியை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
இவரைப் பல அறிஞர்கள் விமர்சித்துள்ளார்கள்.
இவரைப் பற்றி இமாம் ஹிப்பான் கூறுகிறார்:
இவருடைய ஹதீஸ்கள் முற்றிலும் நிராகரிக்கத்தக்கதாகும். நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக அவர் களுடைய ஹதீஸில் இல்லாதவற்றை அறிவிப்பார். இவர் தன்னளவில் நல்லவராக இருந்தாலும் இவருடைய அண்டை வீட்டுக்காரர் மூலமாக இவருடைய செய்திகளில் மறுக்கத் தக்கவை புகுந்துவிட்டது. ஷைஹ் அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் என்பார் மீது அவர் அண்டை வீட்டுக்காரர் ஹதீஸை இட்டுக்கட்டி அவருடைய எழுத்தைப் போன்றே எழுதி அவருடைய வீட்டிலே அவருடைய புத்தகங்களுக்கு மத்தியில் நுழைத்து விடுவார். அப்துல்லாஹ் அதை தன்னுடைய எழுத்து என்று எண்ணி அறிவித்து விடுவார்.
இப்னு அதீ கூறுகிறார்: இவர் என்னிடத்தில் ஹதீஸ்களில் உறுதி யானவர் என்றாலும் இவருடைய ஹதீஸில் அறிவிப்பாளர் தொடர் களிலும், கருத்திலும் குழப்பங்கள் நிகழ்ந்து விட்டது. இவர் திட்டமிட்டு பொய்யுரைக்க மாட்டார்.
ஸாலிஹ் இப்னு முஹம்மத் கூறுகிறார்: இப்னு மயீன் இவரை நம்பகமானவர் என்று உறுதிப் படுத்தியுள்ளார். ஆனால் நான் இவரை ஹதீஸ்களில் பொய்யுரைப் பவர் என்றே கருதுகிறேன்.
இப்னுல் மதீனி கூறுகிறார்: இவருடைய ஹதீஸை நான் எழுதினேன். ஆனால் அவரிட மிருந்து எதையும் நான் அறிவிக்க மாட்டேன்.
அஹ்மத் இப்னு ஸாலிஹ் கூறுகிறார்: இவர் தவறிழைக்கக் கூடியவர். ஒரு பொருட்டாகக் கொள்ளத்தக்கவரில்லை.  
இவர் உறுதியானவர் இல்லை என்று இமாம் நஸாயீ விமர்சித்துள்ளார்கள்.
இவர் ஹதீஸ்களில் பலவீன மானவர் என்று இமாம் ஹாகிம் கூறுகிறார்.
பார்க்க: அல்லுஅஃபாஉ வல் மத்ரூகீன் 2:127,
தஹ்தீபுத் தஹ்தீப்  5:256
எனவே இது இச்செய்தியின் பலவீனத்தை அதிகரிக்கும் இரண்டாவது காரணமாகும்.
இந்தச் செய்தியினை கஃபுல் அஹ்பார் என்பாரிடமிருந்து நுபைஹ் பின் வஹ்ப் என்பார் அறிவிப்பதாக உள்ளது. ஆனால் நுபைஹ் என்பவர் கஃபுல் அஹ்பாரை அடையவில்லை என்ற குற்றச்சாட்டையும் சில அறிஞர்கள் முன் வைத்துள்ளனர். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மூன்றாவது குறையாகும்.
எப்படிப் பார்த்தாலும் இது ஆதாரமாகக் கொள்ள ஏற்புடைய செய்தி அல்ல என்பது தெளிவு.
மேலும் இந்தச் செய்தியின் கருத்தை நன்கு கவனித்துப் பாருங்கள்.
நபிகள் நாயகம் உயிருடன் மண்ணறையில் வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளதா? அவ்வாறு சொல்லப்படவில்லை.
மறுமை நிகழ்வு ஏற்படும் போது நபிகள் நாயகம் எழுப்பப்பட்டு வெளிவருவார்கள் என்றுதான் உள்ளது. அப்படியென்றால் நபிகள் நாயகம் தற்போது உயிருடன் இல்லை என்ற கருத்து தான் வருமே தவிர மண்ணறையில் வாழ்ந்து வருகிறார்கள் என்ற கருத்து இதில் வராது.
மறுமையில் பூமி பிளந்து நபிகள் நாயகம் வெளிவருவார்கள் எனும் வாசகத்திலிருந்து அவர்கள் உயிருடன் உள்ளார்கள் என்று புரிந்து கொண்டால் உலகில் இறந்துவிட்ட ஏனைய மனிதர்களும் அவ்வாறே உயிருடன் உள்ளார்கள் என்று புரிய முடியும்.
ஏனெனில் பொதுவாக மனிதர்களைப் பற்றி இறைவன் கூறும் போதும் இதே வாசகத்தைப் பயன்படுத்தியுள்ளான்.
அவர்களை விட்டு பூமி பிளந்து அவர்கள் விரைவார்கள். அதுதான் ஒன்று திரட்டப்படும் நாள். இது நமக்கு எளிதானது.
அல்குர்ஆன் 50:44
ஸூர் ஊதப்படும். உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து தமது இறைவனை நோக்கி விரைவார்கள். எங்கள் உறக்கத்தலத்திலிருந்து எங்களை உயிர்ப்பித்தவன் யார்?'' என்று கேட்பார்கள். அளவற்ற அருளாளன் வாக்களித்ததும், தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுவே (எனக் கூறப்படும்.)
அல்குர்ஆன் 36:51, 52
இந்த வசனங்களில் பூமி பிளந்து சமாதிகளிலிருந்து மனிதர்கள் வெளிப்படுவார்கள் என்று சொல்லப் பட்டுள்ளது. இதன் காரணத்தினால் இவர்கள் உயிருடன் உள்ளார்கள் என்றாகி விடுமா?
எனவே மறுமையில் கப்ரிலிருந்து வெளிவருவார்கள் என்பதை வைத்துக் கொண்டு நபிகள் நாயகம் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று வாதம் வைப்பது மடமைத்தனமான வாதமாகும்.
ஒரு வாதத்திற்கு இவர்கள் கூறும் கருத்து இந்தச் செய்தியில் நேரடியாகக் கூறப்பட்டிருந்தால் கூட பலவீனமான செய்தியாக இருப்பதால் இது ஆதாரமாகாது. அவ்வாறிருக்க இந்தச் செய்தி எப்படி ஆதாரமாகும்?
அறிவுக்கும் தங்களுக்கும் துளியும் சம்பந்தமில்லை என்பதை இந்த நவீன பரேலவிகள் இதன் மூலம் தெளிவுபடுத்தி விட்டனர்.
நபிமார்களின் உடல்களை மண் தின்பதில்லையே!
இந்த அறிவிலிகள் எதை ஆதாரமாகக் குறிப்பிடுவது என்ற அடிப்படை அறிவற்றவர்களாகவே இருக்கிறார்கள்.
காரணம், நபிமார்களின் உடல்களை மண் தின்றுவிடாது  என்பதைத் தங்கள் கருத்துக்கு அதாவது நபிகள் நாயகம் மண்ணறையில் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற தங்கள் அபத்தக் கருத்திற்கு ஆதாரமாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.
நபிமார்களின் உடல்களை பூமி தின்று விடாது என்பது உண்மையே. நபியவர்கள் இதை விளக்கியுள்ளார்கள்.
உங்கள் நாட்களில் சிறந்தது வெள்ளிக்கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் (அலை) படைக்கப் பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் இறந்தார்கள். அந்நாளில் தான் ஸூர் ஊதப்படும். அந்நாளில் தான் மயக்கமுறுதலும் நடைபெறும். எனவே அந்நாளில் அதிகம் என் மீது ஸலவாத் சொல்லுங்கள். உங்களுடைய ஸலவாத் எனக்கு எடுத்துக் காட்டப்படுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (மண்ணோடு மண்ணாக) மக்கிப் போன பிறகு உங்களிடம் எப்படி எங்கள் ஸலவாத் எடுத்துக் காட்டப்படும்? என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், நபிமார்களின் உடலை பூமி திண்பதை விட்டும் அல்லாஹ் தடை செய்து விட்டான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ், நூல்: நஸாயீ 1357
நபிமார்களின் உடல்களை பூமி தின்றுவிடாது என்பதால் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று பொருளாகாது.
நபிமார்களின் உடல்களை பூமி தின்றுவிடாத வகையில் அல்லாஹ் பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளான் என்பதைத் தான் இதிலிருந்து விளங்க முடிகிறதே தவிர நபிமார்கள் உயிருடன் உள்ளார்கள் என ஒரு போதும் விளங்க முடியாது. அறிவுடையோர் அவ்வாறு விளங்க மாட்டார்கள்.
பிர்அவ்னின் உடலை அல்லாஹ் பாதுகாத்துள்ளான் என்று முஸ்லிம் சமூகம் நம்புகிறது. இது குறித்த சரியான விளக்கத்தை இந்த இணைப்பில் காணலாம்.
ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ர்ய்ப்ண்ய்ங்ல்த்.ஸ்ரீர்ம்/வ்ன்ழ்ஹய்-ல்த்-ற்ட்ஹம்ண்க்ஷ்ஹந்ந்ஹம்-ற்ட்ஹஜ்ட்ங்ங்க்/ஸ்ண்ப்ஹந்ந்ஹய்ஞ்ஹப்-ய்ங்ஜ்/217ஜல்ஹற்ட்ன்ந்ஹந்ஹல்ஹற்ற்ஹஜச்ண்ழ்ஹஸ்ய்ண்ய்ஜன்க்ஹப்/-.யக்ண்க்ப7ஃவ்வ்ந்ர்
<ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ர்ய்ப்ண்ய்ங்ல்த்.ஸ்ரீர்ம்/வ்ன்ழ்ஹய்-ல்த்-ற்ட்ஹம்ண்க்ஷ்ஹந்ந்ஹம்-ற்ட்ஹஜ்ட்ங்ங்க்/ஸ்ண்ப்ஹந்ந்ஹய்ஞ்ஹப்-ய்ங்ஜ்/217ஜல்ஹற்ட்ன்ந்ஹந்ஹல்ஹற்ற்ஹஜ ச்ண்ழ்ஹஸ்ய்ண்ய்ஜன்க்ஹப்/>
மக்களின் நம்பிக்கை பிரகாரம் பிர்அவ்ன் உடல் பாதுகாக்கப் பட்டுள்ளது என்பதால் பிர்அவ்ன் உயிருடன் வாழ்ந்து வருகிறான் என்று பொருளாகுமா?
இரசாயனக் கலவைகள் மூலம் இன்றைக்குப் பல உடல்கள் அழியாத படி பாதுகாக்கப்படுகின்றன. அதனால் அவர்கள் அனைவரும் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்றா அர்த்தம்?
அரசின் சார்பில் எத்தனையோ உடல்கள் பாதுகாக்கப்படுகின்றன. அதனால் அவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கிறார்கள் என்றாகி விடுமா?
அப்படி ஒரு வாதம் வைத்தால் அது மூளையுள்ளவர்களின் கருத்தாக இருக்க முடியுமா?
ஓர் உடல் அழியாத வகையில் பாதுகாக்கப்படுகிறது என்றால் உடல் (ஜடம்) பாதுகாக்கப்படுகிறது என்று தான் ஆகுமே தவிர உயிருடன் அவர் வாழ்கிறார் என்று ஒரு போதும் ஆகாது.
எனவே இவர்களின் இந்த வாதமும் சரியானதாக இல்லை.
ஒருவர் உயிருடன் இருந்தால் அவரை மண் சாப்பிடுவதில்லை. அவர் உயிருடன் இருப்பதே அவரை மண் சாப்பிடுவதில் இருந்து தடுத்து விடும். உலகில் 700 கோடி மக்கள் வாழ்கிறோம். இவர்களில் யாரையாவது மண் தின்றுள்ளதா? உயிருடன் இருப்பவனை மண் சாப்பிடாது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.
நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் இந்தக் கேள்வியே எழாது. ஏனென்றால் உயிருடன் இருப்பவரை மண் சாப்பிடாதல்லவா?
அவர்கள் உயிருடன் இல்லை என்பதால் தான் அவர்களின் உடலை மண் சாப்பிடுமா என்ற கேள்வியே பிறக்கிறது. இதற்கு, "நபிமார்கள் இறந்து விட்டாலும் அவர்களது உடலை மண் சாப்பிடாது'' என்ற கருத்தில் நபிகள் நாயகம் பதிலளிக்கிறார்கள். எனவே இது நபிமார்கள் உயிருடன் இல்லை என்பதற்குத்தான் ஆதாரமாக அமைந்துள்ளது.
சப்தம் போடாதே!
நபிகள் நாயகம் முன்னிலையில் குரலை உயர்த்திப் பேசக் கூடாது என்பதையும் அவர்கள் மண்ணறையில் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள்.
இப்போது நபி அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்திற்கு முன்பு நின்று கொண்டு குரலை உயர்த்திப் பேசக் கூடாது என்கிறார்கள். ஏனெனில் நபி உயிருடன் உள்ளார்களாம்.
இவர்களுக்கு எந்த அளவு மூளை வறண்டு போய் விட்டது என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு இது.
குரலை உயர்த்தக் கூடாது எனும் விதியை, நபிகள் நாயகத்தை மதிக்கும் வகையில் அவர்கள் வாழும் காலத்தில்  கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒழுங் காகவே இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான்.
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரிடம் சப்தமிடுவது போல் அவரிடம் சப்தமிட்டுக் கூறாதீர்கள்! நீங்கள் அறியாத நிலையில் உங்கள் செயல்கள் (இதனால்) அழிந்து விடும்.
அல்குர்ஆன் 49 2
இந்த வசனத்தை நன்கு கூர்ந்து படியுங்கள். இது நபிகள் நாயகம் நம்மிடையே வாழும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக் கத்தையே கற்றுத் தருகிறது.
"நபியின் குரலை விட உங்கள் குரலை உயர்த்தாதீர்கள்' என்று கூற வேண்டும் என்றால் நபி நம்மிடையே வாழ்ந்து, அவர்களது குரலை நாம் செவிமடுக்கும் வகையில் நம்மிடம் பேச வேண்டும். அப்போது தான் அவர்களது குரலை விட சப்தத்தை உயர்த்தாதீர்கள் என்று சொல்ல முடியும்.
இதற்கு அடுத்து வரக்கூடிய வசனங்கள் யாவும் இக்கருத்தை உறுதிப்படுத்துகின்றது.
அல்லாஹ்வின் தூதரிடம் தமது குரல்களைத் தாழ்த்திக் கொள் வோரின் உள்ளங்களை (இறை) அச்சத்துக்காக அல்லாஹ் பரிசுத்தப் படுத்தி விட்டான். அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் இருக்கிறது.
அல்குர்ஆன் 49:3
 (முஹம்மதே!) அறைகளுக்கு வெளியே இருந்து உம்மை அழைப்பவர்களில் அதிகமானோர் விளங்காதவர்கள்.
அல்குர்ஆன் 49:4
இதன் தொடர்ச்சியில் 7ம் வசனத்தில் "உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்' என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அப்படி என்றால் அல்லாஹ்வின் தூதர் நம்மிடையே இருந்து, அவர்களது குரலை நாம் செவிமடுக்கும் வகையில் இருக்கும் போது நாம் எப்படி நடக்க வேண்டும் என்பதைத் தான் இது பேசுகிறது.
நபியின் குரலுக்கு மேல் உங்கள் சப்தத்தை உயர்த்தாதீர்கள் எனும் இறைவார்த்தை இக்கருத்தை தெளிவாகப் பறைசாற்றுகின்றது.
இன்றைக்கு நபிகள் நாயகம் நம்முடன் இல்லை. அவர்களது குரலை நம்மால் செவிமடுக்க இயலாது. எனவே இச்சட்டம் இப்போது பொருந்தாது.
நபியின் குரலுக்கு மேல் உங்கள் சப்தத்தை உயர்த்தாதீர்கள் என்றால் இது எப்படி நபிகள் நாயகம் உயிருடன் உள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாகும்?
இவர்களுக்கு சிந்திக்கும் திறன் கொஞ்சமேனும் இருந்திருந்தால் இப்படி ஒரு வாதத்தை வைத்திருப்பார்களா?
அது சரி! சமாதி வழிபாட்டை ஆதரிப்பவர்களிடம் எப்படி சிந்தனைத் திறனை எதிர்பார்க்க முடியும்?
நபியின் மனைவியரை மணக்க அனுமதியில்லை
நபிகள் நாயகம் உயிருடன் மண்ணறையில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு அவர்கள் எடுத்துக் காட்டும் அடுத்த ஆதாரம், நபிகள் நாயகத்தின் மனைவிமார்களை நாம் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதைக் குறிப்பிடுகிறார்கள்.
உயிருடன் உள்ளபோது அவர்களின் மனைவிமார்களைத் திருமணம் செய்யக் கூடாது என்றால் அது சரி. நபிகள் நாயகம் இறந்ததற்குப் பிறகும் அவர்களது மனைவியர்களைத் திருமணம் செய்யக் கூடாது என்றால் என்ன பொருள்? நபிகள் நாயகம் இன்னும் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்று தானே அர்த்தம்.
இவ்வாறு இந்த நவீன பரேலவிகள் பிதற்றுகிறார்கள்.
நபிகள் நாயகத்திற்கு அல்லாஹ் பல்வேறு தனிச்சிறப்புகளை வழங்கி யிருக்கிறான். அவர்களது உடலை மண் தின்றுவிடாது என்பதைப் போன்று அவர்களது இறப்பிற்குப் பிறகு அவர்களது மனைவியரை மணக்கக் கூடாது என்பதையும் அல்லாஹ் ஒரு சிறப்புச் சட்டமாக ஆக்கி வைத்துள்ளான்.
நபியின் மரணத்திற்குப் பிறகு அவர்களின் மனைவியர்களை மணக்கக் கூடாது என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான்.
இதிலிருந்து நபிகள் நாயகம் உயிருடன் இல்லை என்பது தான் தெளிவே தவிர அவர்கள் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்று புரிந்து கொள்ள முடியாது.
நம்பிக்கை கொண்டோரே! நபியின் வீடுகளில் அனுமதிக்கப் பட்டால் தவிர உண்பதற்கு நுழையாதீர்கள்! அவரது பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக் காதீர்கள்! மாறாக அழைக்கப்பட்டால் செல்லுங்கள்! உணவு உட்கொண் டதும் சென்று விடுங்கள்! பேச்சில் லயித்து விடாதீர்கள்! இது நபிக்குத் தொந்தரவாக இருக்கும். உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படுவார். உண்மை(யைக் கூறும்) விஷயத்தில் அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். (நபியின் மனைவியரான) அவர்களிடம் எதையேனும் நீங்கள் கேட்டால் திரைக்கப்பால் இருந்தே கேளுங்கள்! இதுவே உங்கள் உள்ளங்களுக்கும், அவர்களின் உள்ளங்களுக்கும் தூய்மையானது. அல்லாஹ்வின் தூதரை நீங்கள் தொந்தரவு செய்யக் கூடாது. அவருக்குப் பின் ஒருபோதும் அவரது மனைவியரை நீங்கள் மணக்கவும் கூடாது. இது அல்லாஹ்விடம் மகத்தானதாக இருக்கிறது.
அல்குர்ஆன் 33:53
அவருக்குப் பின் அவரது மனைவியரை மணக்கக் கூடாது என்றால் அதன் பொருள் என்ன?
நபிகள் நாயகம் இறந்து விடுவார்கள். அவரது இறப்பிற்குப் பிறகு யாரும் அவர்களது மனைவியர்களை மணக்க கூடாது என்பது தானே இதன் பொருள்.
நபிகள் நாயகம் இறந்து விட்டார்கள். உயிருடன் இல்லை என்பதை எந்த வசனம் தெளிவாகப் பறை சாற்றுகின்றதோ அதையே நபிகள் நாயகம் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு இவர்கள் ஆதாரம் காட்டுகிறார்கள் எனில் இவர்கள் எந்த அளவுக்கு மூடர்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது.
மேலும் இறைமறை வசனம் நபிகள் நாயகம் மரணிப்பவரே என்பதை தெளிவாக எடுத்துரைத்து விட்டது.
(முஹம்மதே!) நீர் மரணிப்பவரே. அவர்களும் மரணிப்போரே.
அல்குர்ஆன் 39:30
(முஹம்மதே!) உமக்கு முன் எந்த மனிதருக்கும் நாம் நிரந்தரத்தை ஏற்படுத்தவில்லை. நீர் மரணித்து விட்டால் அவர்கள் நிலையாக இருப்பவர்களா? ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. நன்மை, தீமையின் மூலம் பரீட்சித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம். நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!
அல்குர்ஆன் 21:34, 35
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபித்தோழர்கள் காலத்திலேயே மரணத்தைத் தழுவி "பர்ஸக்' எனும் திரை மறைவு வாழ்க்கைக்குச் சென்று விட்டார்கள்.
(நபியவர்கள் மரணித்த போது) அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றி விட்டு, "எவர் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை எவர் வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் "அல்லாஹ் (என்றும்) உயிராய் இருப்பவன்; அவன் இறக்கமட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்'' என்று சொன்னார்கள். மேலும், "(முஹம்மதே!) நீர் மரணிப்பவரே. அவர்களும் மரணிப்போரே' என்னும் (39:30) இறை வசனத்தையும், "முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்' என்னும் (3:144) இறை வசனத்தையும் ஓதினார்கள். உடனே மக்கள் (துக்கத்தால் தொண்டையடைக்க) விம்மியழுதார்கள்.
நூல்: புகாரி 3668
நபிகள் நாயகம் மரணித்து விட்டார்கள் - உயிருடன் இல்லை என்பதை சஹாபாக்கள் உறுதியாக அறிந்து கொண்ட காரணத்தினால் தான் அபூபக்கர் (ரலி) அவர்களை ஆட்சியாளராக ஒருமித்து ஏற்றுக் கொண்டார்கள்.
பர்ஸக் வாழ்க்கைக்கு சென்று விட்ட நபிகள் நாயகத்தை உலகத்தில் உள்ளதைப் போன்று இன்னும் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்று சொன்னால் அது குர்ஆனுக்கு எதிரான கருத்தாகும். பகிரங்க வழிகேடாகும்.

EGATHUVAM SEP 2015