ஸிஹ்ர் ஓரு விளக்கம் தொடர் - 10
பி. ஜைனுல் ஆபிதீன்
இஸ்மாயில் ஸலபி எடுத்து வைக்கும் வாதங்கள் அனைத்திலும்
அவரது அறியாமையும் புரிந்து கொள்ளும் திறன் குறைவும் பளிச்சிடுகிறது.
அவரது கீழ்க்கண்ட வாதத்தை எடுத்துக் கொள்வோம். ஏனெனில் இந்த
வாதத்தில் இவருக்கு இருக்கும் அறியாமையே இவரது ஆய்வுக் குறைவுக்கு அடிப்படையாக
உள்ளது.
நபிகள் நாயகம்(ஸல்) காலத்தில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின்
ஒவ்வொரு நடவடிக்கையைப் பார்த்துத் தான் அவர்கள் கூறுவது இறை வாக்கா? அல்லவா? என்பதை
முடிவு செய்யும் நிலையில் மக்கள் இருந்தனர். (பக் 1298) என்று (பி.ஜே.) தனது வாதத்திற்கு வலு சேர்க்க வரலாற்றையே
மாற்றி எழுதுகின்றார்.
நபித் தோழர்களைப் பொறுத்த வரையில் நபி(ஸல்) அவர்கள் கூறும்
அனைத்தையும் ஏற்கும் நிலையில் இருந்தனர். காஃபிர்களைப் பொறுத்தவரையில் நபி(ஸல்)
அவர்கள் கூறும் அனைத்தையும் மறுக்கும் மனோ நிலையில் இருந்தனர். இதற்கு மாற்றமாக
நபி(ஸல்) அவர்களது நடைமுறையை வைத்து, சொல்லும் செய்தியை எடை போடும் நிலை ஸஹாபாக்களிடம்
இருக்கவில்லை. அப்படி இருந்தாலும் அது சூனியம் செய்யப்பட்ட ஹதீஸை மறுப்பதற்கான
ஆதாரமாக அமையாது. ஏனெனில் நபி(ஸல்) அவர்களுக்குச் செய்யப்பட்ட சூனியத்தால்
தாம்பத்தியத்தில் ஈடுபடாமலேயே ஈடுபட்டதாக அவர்கள் எண்ணினார்கள். அவ்வளவுதான்! இது
வெளி உலகத்திற்குத் தெரியக் கூடிய சமாச்சாரம் அல்ல என்பது தெளிவு. அப்படியிருக்க
அவரது குடும்பத்துடன் சம்பந்தப்பட்ட இந்த நிலை வஹீயில் சந்தேகத்தை
ஏற்படுத்தியிருக்கும் என்று வாதிட வரலாற்றையே புரட்ட வேண்டிய தேவை என்னவோ? செய்யாததைச் செய்ததாகக் கூறும் ஒருவர் எதைக் கூறினாலும்
அதைச் சந்தேகத்திற்குரியதாகத் தான் மக்கள் பார்ப்பார்களே தவிர, வஹீக்கு மட்டும் விதி விலக்கு என்று நம்பியிருக்க
மாட்டார்கள எனக் கூறித் தனது வாதத்தை முடிக்கின்றார். நபி(ஸல்) அவர்கள்
செய்யாததைச் செய்ததாகக் கூறவில்லை என்பதை நாம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம்.
எந்த விகயத்தில் வரலாற்றை மாற்றி எழுதுவதாக இவர் கூறுகிறாரோ
அந்த விகயத்தில் இவர் தான் வரலாற்றைப் புரட்டுகிறார்.
இந்த அடிப்படை விகயத்தில் இவருக்கு ஏற்பட்ட அறியாமை தான்
இங்கே அவர் குறிப்பிடும் மற்ற வாதங்களுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக அனுப்பப்படும்
போது முஸ்லிம்கள் என்று ஒரு சாரார் இருந்தது போலவும், காஃபிர்கள் என்று இன்னொரு சாரார் இருந்தது போலவும் இவர்
வாதிடுகிறார். அவர்களில் முஸ்லிம்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதை
அப்படியே நம்பியதாகவும் காபிர்கள் அப்படியே மறுத்ததாகவும் இவர் வாதிடுகிறார்.
இவ்வளவு கூறு கெட்ட வாதத்தை உலகத்தில் இவரைத் தவிர யாரும் செய்திருக்க முடியாது.
இப்படி உளறி விட்டு நாம் வரலாற்றைப் புரட்டுவதாக அறிவுக்
கூர்மையுடன் எழுதியுள்ளார்.
உண்மை என்ன? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்படும் போது
அவர்கள் மட்டுமே முஸ்லிமாக இருந்தார்கள். மற்ற அனைவரும் காஃபிர்களாகத் தான்
இருந்தனர். காஃபிர்களாக இருந்த அவர்கள் தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர் என்ற
அடிப்படை அறிவு கூட இவருக்கு இல்லை.
நம்மைப் போலவே எல்லா வகையிலும் மனிதராக இருப்பவர் எப்படி
இறைவனின் தூதராக இருக்க முடியும் என்பது தான் அனைவரிடமும் இருந்த சந்தேகம்.
குர்ஆனை இறை வேதம் என்று நம்புவதற்கு முன் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின்
தூதர் என்று முதலில் நம்ப வேண்டும். அல்லாஹ்வின் தூதர் என்று நம்பினால் தான்
அவர்கள் கொண்டு வந்த வேதம் அல்லாஹ்வுடையது என்றும் நம்ப முடியும். அதன் பின்னர்
தான் அவர்கள் கூறும் கட்டளைகளை ஏற்க முடியும்.
ஆனால் இவர் என்ன கூறுகிறார்? காஃபிர்களைப் பொறுத்தவரையில் நபி(ஸல்) அவர்கள் கூறும்
அனைத்தையும் மறுக்கும் மனோ நிலையில் இருந்தனர். இவரது வாதப்படி எந்தக் காபிரும்
முஸ்லிமாகி இருக்க முடியாது. நபித் தோழர்கள் காபிர்களாக இருந்து இஸ்லாத்தை
ஏற்கவில்லை. அவர்கள் வானத்தில் இருந்து நபித்தோழர்களாக இறக்கப்பட்டார்கள் என்பது
போல் வாதிடுகிறார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைத் தூதர் என்று சிலர் நம்பி
விட்டாலும் அவர்களோடு மட்டும் வழிகாட்டும் பணி முடிந்து விடாது. ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நேரமும் காபிர்களை இஸ்லாத்தின் பால் அழைக்கும் பணியும் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களுக்கு இருந்தது. ஒவ்வொரு நாளும் மக்கள் இஸ்லாத்தில் இணைந்து கொண்டும்
இருந்தனர். ஆனால் காபிர்கள் இஸ்லாத்துக்கு வர மாட்டார்கள் என்று இஸ்மாயில் ஸலபி
ஏறுக்கு மாறாக விளங்குகிறார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத் தூதராக அனுப்பப்பட்டது
முதல் அவர்கள் மரணிக்கும் வரை காபிர்கள் குர்ஆனை இறைவனின் வேதம் என்று நம்பி
இஸ்லாத்துக்கு வர வேண்டும் என்றால் நபிகள் நாயகத்தை இறைவனின் தூதர் என்று அவர்கள்
நம்புவது அவசியம்.
நபிகள் நாயகத்தை இறைவனின் தூதர் என்று அவர்கள் நம்பா
விட்டால் குர்ஆனை இறை வேதம் என்று அவர்கள் நம்ப மாட்டார்கள். இதை நாம் ஊகத்தின்
அடிப்படையில் கூறவில்லை. அல்லாஹ்வே அப்படித்தான் கூறுகிறான். நபிகள் நாயகத்தின்
கேரக்டரை எடுத்துக் கூறி, அதையே
பிரதான ஆதாரமாக எடுத்துக் காட்டி நபிகள் நாயகத்தை இறைத் தூதர் என்று நம்புமாறு
அல்லாஹ் வழிகாட்டுகிறான்.
"அல்லாஹ் நாடியிருந்தால் இதை உங்களுக்குக் கூறியிருக்க
மாட்டேன். அவனும் இதை உங்களுக்கு அறிவித்திருக்க மாட்டான். உங்களிடம் இதற்கு முன்
பல வருடங்கள் வாழ்ந்துள்ளேன். விளங்க மாட்டீர்களா?'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!
திருக்குர்ஆன் 10:16
பல வருடங்கள் அந்த மக்களுடன் வாழ்ந்ததை எடுத்துக் காட்டி
இறைத் தூதர் என்பதை அல்லாஹ் நிரூபிக்கிறான்.
காபிர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் வாதம் செய்வது பாவம்
என்பது போல் இவர் கூறுகிறார். ஆனால் காபிர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக
அவர்கள் திருப்தியடையும் ஆதாரத்தை இங்கே எடுத்துக் காட்டுகிறான்.
அதாவது காபிர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கு
அல்லாஹ்வே முக்கியத்துவம் அளிப்பதால் தான் காபிர்கள் அறிந்து வைத்திருந்த நபிகள்
நாயகத்தின் கடந்த கால வாழ்க்கையை ஆதாரமாக எடுத்துக் காட்டுகிறான்.
நபிகள் நாயகத்தின் கேரக்டர் சரியாக இருப்பது அவசியம்
என்றால் அவர்கள் பரிசுத்தமான வாழ்க்கையும் வாழ வேண்டும். மன நோயாளியாக இல்லாமல்
தெளிவாகவும் இருக்க வேண்டும். இப்போது (இஸ்மாயில் ஸலபி வாதப்படி) நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களுக்கு மன நோய் ஏற்பட்டு, தாம் செய்யாததைச் செய்ததாக கூறினார்கள் என்று காபிர்கள்
கருதினால் எப்படி நபிகள் நாயகத்தை இறைத் தூதர் என்று நம்புவார்கள்? நீர் தான் மன நோயாளி என்று தெரிகிறதே அப்புறம் இறைத் தூதர்
என்று என்று எப்படி நாங்கள் நம்புவோம் என்று கேட்பார்களே? இறைத் தூதர் என்று நம்பாவிட்டால் எப்படி இறை வேதம் என்று
குர்ஆனை ஏற்றுக் கொள்வார்கள்? அப்படிக்
கேட்க முடியாத பாதுகாப்பு அவர்களுக்கு இருந்தது என்பதை இவ்வசனம் சொல்கிறது.
இந்த அடிப்படையில் நாம் எடுத்து வைத்த ஆதாரத்தைப் புரிந்து
கொள்ளக் கூட இவருக்கு இயலவில்லை. இதைக் கிண்டல் செய்கிறார். மக்கத்து காபிர்களைத்
திருப்திப்படுத்துவதில் நாம் குறியாக இருப்பதாக இவர் கூறுகிறார்.
குர்ஆன் முதலில் காபிர்களைத் தான் அடைந்தது. அது தான்
அவர்களை முஸ்லிம்களாக மாற்றியது என்ற அடிப்படையை இவர் புரிந்து கொள்ளட்டும்.
காபிர்கள் தான் இஸ்லாத்தை ஏற்க வேண்டியிருப்பதால் அவர்கள் நம்பும் வகையில் தான்
அல்லாஹ்வே தர்க்க வாதங்களை முன் வைக்கிறான். அதனால் தான் காபிர்களும் இஸ்லாத்தை
ஏற்றுக் கொண்டனர்.
எந்த விகயத்தில் காபிர்களும் நம்புவதற்கேற்ப அல்லாஹ்
வாதங்களை வைக்கிறானோ அந்த விகயங்களில் நாமும் அதற்கேற்ப வாதம் செய்ய வேண்டும்
என்று நாம் கூறுவது இவருக்கு கேலிக் கூத்தாகத் தெரிகிறது.
அப்படியானால் குர்ஆனைப் பாதுகாப்பதாக அல்லாஹ் கூறுகிறானே
எனவே சூனியம் செய்யப்பட்டிருந்தாலும் அவர்கள் குர்ஆனை மறக்காமல் இருக்கலாம் அல்லவா? என்று இவர் வாதிடுகிறார். இது இவருக்கு எதிரான வாதம் என்பது
கூட இவருக்கு தெரியவில்லை. குர்ஆனைப் பாதுகாப்பதாக அல்லாஹ் கூறுவதால் தான் அந்தப்
பாதுகாப்புக்கு பங்கத்தை ஏற்படுத்தும் மனநோய் ஏற்பட்டது என்பதை மறுக்கிறோம்.
ஒருவரை மன நோயாளி என்று கூறினால் அவர் எந்தச் செய்தியையும்
பாதுகாக்க மாட்டார் என்பது தான் அதன் பொருள்.
மன நோயாளி தான்; ஆனால் அனைத்தையும் சரியாக நினைவில் வைத்திருப்பார் என்றால்
அது முரண்பாடாகும்.
மறக்க மாட்டார்; ஆனால் மறப்பார் என்று கூறுவது போல் இந்த வாதம் அமையும்.
குர்ஆனைப் பாதுகாப்பதாக அல்லாஹ் கூறுவதால் தான் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் மன நோயாளியாக ஆகவில்லை என்று நாம் கூறுகிறோம். மன நோயாளியாக
ஆனார்கள் என்ற கருத்தைத் தரும் ஹதீஸ்களை மறுக்கிறோம்.
இந்த அடிப்படையைத் தலை கீழாக விளங்கிக் கொண்டு தனக்கு
எதிரான வாதங்களைத் தானே எடுத்து வைக்கிறார்.
குர்ஆனைப் பாதுகாப்பது என்றால் அதற்கேற்ற வகையில் நபிகள்
நாயகத்தின் சிந்தனையைப் பாதுகாக்க வேண்டும். மன நோயாளியாக ஆக்கி விட்டு குர்ஆனைப்
பாதுகாப்பதாகக் கூறினால் அதுவே குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தாதா?
குர்ஆனைப் பாதுகாத்தல் என்பதில் அவர்களின் நினைவாற்றல்
பாதுகாக்கப்படுவதும் அவர்களின் சிந்தனை தெளிவாக இருப்பதும் அடங்காதா?
மறதி என்பது மனிதனின் இயல்பில் உள்ளது. மறதி இல்லாத ஒரு
மனிதன் கூட உலகில் கிடையாது. யாராலும் தவிர்க்க முடியாத மறதி எனும் இந்தப் பலவீனம்
நபிகள் நாயகத்துக்கும் இருந்தது. அனைவருக்கும் இருந்தே தீர வேண்டிய இந்தப் பலவீனம்
குர்ஆன் விகயத்தில் மட்டுமாவது நபிகள் நாயகத்துக்கு இருக்கக் கூடாது என்று அல்லாஹ்
சிறப்பு ஏற்பாடு செய்கிறான். குர்ஆனை மறக்கவே முடியாத தனித் தகுதியை அவர்களுக்கு
வழங்குகிறான்.
மனதில் பதித்துக் கொள்வதில் மறதியை விட அதிக பாதிப்பை
ஏற்படுத்து மனநோயை எப்படி கொடுப்பான்? செய்யாததைச் செய்ததாகக் கூறினால் அவர்களது உள்ளத்தின்
பாதுகாப்புத் திறன் குறைந்து விட்டது என்பது தான் பொருள். இப்படி இருக்கும்
இருக்கும் போது மன நோயாளியாக எப்படி அவர்களை ஆக்குவான் என்று விளங்காமல் தலை கீழாக
விளங்குகிறார்.
உனக்கு மறதி ஏற்படாது; ஆனால் மன நோய் ஏற்படும் என்று புரிந்து கொள்வது சரியா?
மறதியே ஏற்படாது என்றால் மன நோய் கண்டிப்பாக ஏற்படாது என்று
புரிந்து கொள்வது சரியா?
பெற்றோரை சீ என்று சொல்லக் கூடாது என்று அல்லாஹ்
கூறுகிறான். எனவே சீ என்று சொல்லாமல் அவர்களை அடிக்கலாம் என்று புரிந்து கொள்ள
வேண்டுமா?
சீ என்று சொல்லக் கூடாது என்றால் அடிப்பது அதை விடப் பெரிய
விகயம் என்று புரிந்து கொள்ள வேண்டுமா?
வளரும் இன்ஷா அல்லாஹ்
EGATHUVAM DEC 2010