Apr 20, 2017

அலகாபாத் தீர்ப்பு அநீதியிழைக்கப்பட்ட முஸ்லிம்கள்

அலகாபாத் தீர்ப்பு  அநீதியிழைக்கப்பட்ட முஸ்லிம்கள்

பாபரி மஸ்ஜித் உரிமைக்காகக் குரல் கொடுப்பதில் தவ்ஹீத் ஜமாஅத்தினர் தான் அன்றிலிருந்து இன்று வரை முன்னணியில், முதலிடத்தில் இருக்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களுடைய உள்ளத்திலும் உதிரத்திலும் இரண்டறக் கலந்து நிற்கும் தவ்ஹீது உணர்வு தான். பாபரி மஸ்ஜித் நிலம் முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்படும் வரை இந்த உரிமைப் போராட்டம் தொடரும், இன்கா அல்லாஹ்!

இந்த உரிமைப் போராட்டத்தில் களமிறங்கும் ஒவ்வொருவரும் பாபர் மஸ்ஜித் நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட துரோக வரலாற்றை அறிந்து கொள்வது அவசியம். அதன் ஒரு பகுதியாக அண்மையில் செப்டம்பர் 30, 2010 அன்று வெளியான அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு குறித்த ஒவ்வொரு அலசலையும் ஆய்வையும் ஏகத்துவம் ஆவணமாக்க விழைகின்றது. இந்த இதழில் தீர்ப்பு குறித்த ஒரு திறனாய்வை வெளியிட்டுள்ளோம்.

இந்தத் திறனாய்வை மேற்கொண்டவர் ஏ.ஜி. நூரானி ஆவார். இவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்! தலைசிறந்த அரசியல் சாசன நிபுணர்! பன்னூல் ஆசிரியர்!

இவரது கட்டுரைகள் ஹிந்துஸ்தான் டைம்ஸ், ஃப்ரண்ட் லைன் போன்ற பத்திரிகைகளில் அடிக்கடி இடம் பெறுகின்றன. இப்போது இங்கு இடம்பெற்றிருப்பது ஃப்ரண்ட் லைன் பத்திரிகையில் வெளியான, Muslims Wronged - முஸ்லிம்கள் அநீதியிழைக்கப்பட்டனர் என்ற தலைப்பில் வெளியான ஆங்கில திறனாய்வுக் கட்டுரையின் தமிழாக்கமாகும்.

Muslims Wronged அநீதியிழைக்கப்பட்ட முஸ்லிம்கள்

பாபரி மஸ்ஜித் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் செப்டம்பர் 30 அன்று அளித்த தீர்ப்பு சட்டத்திற்கும் சாட்சியத்திற்கும் எதிரானது மட்டுமல்ல. இதே பாபரி மஸ்ஜித் தொடர்பாக உச்சநீதிமன்றம் (இஸ்மாயீல் ஃபரூக் மற்றும் பலர் ய/ள் மத்திய அரசு 1994 பகுதி 360) அளித்த தீர்ப்புக்கும் எதிரானதாகும். எனினும் இந்தத் தீர்ப்பு குறித்து நாடு முதிர்ச்சி மிக்க நிதானத்தைக் கடைப்பிடித்தது.

அலைவரிசைகளின் அரைகுறை அலசல்கள்

பாரதீய ஜனதா மற்றும் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த பிரமுகர்களையும் பிரதிநிதிகளையும் அழைத்து டி.வி. சேனல்கள் தீர்ப்பு குறித்த கலந்துரையாடல்களை நடத்தின. இந்தக் கலந்துரையாடல்களின் போது இந்த சட்ட விரோதமான தவறான தீர்ப்புக்குச் சரணடையுமாறு பாரதீய ஜனதா கட்சி, இஸ்லாமிய சமுதாய மக்களிடம் வேண்டுகோள் விடுத்தது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது.

ஆனால் இந்தக் கலந்துரையாடல்களில் பங்கெடுக்க வந்த விருந்தாளிகளோ பாபரி மஸ்ஜித் குறித்த பின்னணி, சட்ட விளக்கங்கள், குறிப்புகள் எதுவும் இல்லாமலேயே வந்திருந்தனர்.

இப்படி தொலைக்காட்சிகள் தங்கள் இக்டத்திற்குக் கருத்துக்களை ஒளி அலைகளில் பதிவு செய்தனர். அந்த அலைவரிசைகள், நாட்டின் அமைதி என்ற கோணத்தில் மட்டும் தங்கள் பார்வையைச் செலுத்தின.

அமைதியும் ஸ்திரத்தன்மையும் நாட்டிற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ அந்த அளவுக்கு அனைவருக்கும் சம நீதியும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அவை அறியத் தவறி விட்டன.

அநீதி இழைத்த அக்கிரமத் தீர்ப்புகள்

1950 முதல் 2010 வரை அறுபது ஆண்களாக ஒவ்வொரு நீதிமன்றத் தீர்ப்பும் முஸ்லிம்களுக்கு அநீதியும் அக்கிரமும் இழைத்திருக்கின்றது. இது வேதனைக்குரிய விகயமாகும்.

1992ம் ஆண்டு டிசம்பர் 6 அன்று பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பின்னர், அக்டோபர் 24, 1994ல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பும் முஸ்லிம்களுக்கு அநீதி தான் இழைத்துள்ளது. (இது குறித்துப் பின்னர் விவரம் இடம் பெறும்)

உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களின் சங்கத் தலைவர்களில் ஒருவர், பாபரி மஸ்ஜித் வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்றத்தின் பெஞ்ச், மத அடிப்படையில் தெளிவாகப் பிரிந்து கிடக்கின்றது என்ற கருத்தைப் பல கட்டங்களில் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒத்த கருத்தில் மூன்று நீதிபதிகள்

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளை நீதிபதிகள் டி.வி. கர்மா, சுதிர் அகர்வால், எஸ்.யூ. கான் ஆகிய மூவருமே டிசம்பர் 22, 23, 1949 அன்று இரவு ராமர் சிலை உள்ளே கொண்டு வைக்கப்பட்டது என்பதில் ஒத்தக் கருத்தில் இருக்கின்றனர்.

சிலைகள் தானாகவே தோன்றின என்ற கருத்தை சங் பரிவார் மட்டுமே கூறி வருகின்றது.

மார்ச் 29, 1987 அன்று வெளியான "ஆர்கனைசர்' என்ற தனது மாத இதழில், "சிலைகள் பள்ளிவாசலில் அற்புதமாகத் தோன்றின'' என்று ஆர்.எஸ்.எஸ். குறிப்பிட்டுள்ளது.

பி.ஜே.பி. வெளியிட்ட வெள்ளை அறிக்கையிலும் "அவை அங்கு தோன்றின'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எல்.கே. அத்வானியும் இதே கருத்தைத் தான் குறிப்பிட்டுள்ளார்.

சிலைகள் தானாகத் தோன்றவில்லை, திட்டமிட்டே பாபரி மஸ்ஜிதின் உள்ளே கொண்டு போய் வைக்கப்பட்டது என்று எல்லோருமே ஒத்துக் கொண்ட உண்மையை அலகாபாத் உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சங் பரிவாரோ இந்த உண்மையை அவமதிக்கும் விதமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றது.

ஆனால் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளும் தாங்களே ஒத்துக் கொண்ட இந்த உண்மையை உணர்ந்ததாகத் தெரியவில்லை.

அசைக்க முடியாத ஆவணப் பதிவுகள்

பாபரி மஸ்ஜிதில் தொழுகை நடந்து கொண்டிருந்தது; அங்கு திருட்டுத்தனமாக ராமர் சிலை கொண்டு போய் வைக்கப்பட்டது என்பதற்கான மறுக்க முடியாத, முரண்பாடில்லாத வாக்குமூலங்கள்! அசைக்க முடியாத ஆவணப் பதிவுகள் இதோ:

1. வக்ஃப் ஆய்வாளரின் இரு அறிக்கைகள்

வக்ஃப் ஆய்வாளர் முஹம்மது இப்ராஹீம் டிசம்பர் 10 மற்றும் டிசம்பர் 23, 1948 அன்று பாபரி மஸ்ஜிதுக்கு வருகையளித்து விட்டு இரு அறிக்கைகளைப் பதிவு செய்கின்றார்.

தொழச் செல்கின்ற முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுகின்றனர். அவர்கள் மீது கல் வீசப்படுகின்றது. எனினும் முஸ்லிம்கள் அங்கு ஃபஜ்ர் தொழுகையையும், ஜும்ஆ தொழுகையையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு அந்த அறிக்கைகளில் அவர் குறிப்பிடுகின்றார்.

(அத்தியாயம் 4, ஆவணம் 5)

2. பள்ளிவாசலுக்கு அருகில் கோயில் கட்டக் கோரிக்கை

பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள சபுத்ராவில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று 1949ல் இந்துக்கள் மனுச் செய்தனர். இதற்கு அதிகார வர்க்கம் முழு ஆதரவளித்தது. பள்ளிவாசலும் கோயிலும் அருகருகே அமைந்திருக்கின்றன. முஸ்லிம்களும் இந்துக்களும் சேர்ந்தே தங்கள் உரிமைகளையும், மத வழிபாடுகளையும் நிறைவேற்றி வருகின்றனர். பகவான் ராமர் பிறந்த இடத்தில் ஓர் அழகிய கோயில் கட்டுவதில் இந்துக்கள் ஆர்வமாக உள்ளனர். கோயில் கட்டப்பட இருக்கும் நிலம் நசூல் நிலமாகும்.

இவ்வாறு நகர நடுவர் மன்ற நீதிபதியின் அறிக்கையில் பதியப்பட்டுள்ளது.

(நசூல் நிலம் என்பது அரசாங்க நிலமாகும். நகராட்சி அதை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குக் குத்தகைக்கு விட்டு வருவாய் ஈட்டிக் கொள்ளும்)

(அத்தியாயம் 5, ஆவணம் 6)

3. முதல் தகவல் அறிக்கை

டிசம்பர் 23, 1949 அன்று அயோத்தியா காவல் நிலைய உதவி ஆய்வாளரால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் விபரம் வருமாறு:

"நான் ஜன்மபூமிக்குக் காலை 6 மணியளவில் வந்த போது சுமார் 50, 60 நபர்கள் பாபரி மஸ்ஜிதின் சுற்றுச் சுவர் வாயிற் கதவின் பூட்டை உடைத்துக் கொண்டோ அல்லது ஏணி வைத்து மதில் மீது ஏறிக் குதித்தோ உள்ளே நுழைந்து ராமர் சிலையை பள்ளிக்குள் வைத்து, பள்ளியின் உட்புற, வெளிப்புற சுவர்களில் சீதை, ராமரின் படங்களை வரைந்தனர். ராம்தாஸ், ராம் சக்தி தாஸ் இன்னும் அடையாளம் தெரியாத 50, 60 பேர் மறைமுகமாகப் பள்ளிக்குள் நுழைந்து அதன் புனிதத் தன்மையைப் பாழாக்கினர் என்று எனக்குத் தெரிய வந்தது'' என்று கான்ஸ்டபிள் எண்: 7 மாதா பிரசாத் கூறினார். எனவே இந்தப் புகார் எழுதப்பட்டு பதியப்படுகின்றது.

4. ரேடியோ தகவல்

"மக்கள் தொழுது விட்டுச் சென்ற பிறகு இரவோடு இரவாக ஒரு சில இந்துக்கள் பாபரி மஸ்ஜிதுக்குள் புகுந்து சிலைகளை வைத்து விட்டனர். பாதுகாப்புப் பணியில் நின்றிருந்த 15 காவலர்கள் தெளிவாகவே எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அப்படியே இருந்து விட்டனர்'' என்று மாவட்ட நீதிபதி கே.கே. நாயர் ஒரு ரேடியோ மெஸேஜை உ.பி. முதலமைச்சருக்கும், உள்துறை செயலாளருக்கும் டிசம்பர் 23, 1949 அன்று அனுப்பினார்.

(அத்தியாயம் 5, ஆவணம் 3)

5. உறுதிப்படுத்தும் மறு தகவல்

டிசம்பர் 22, 23 தேதிகளின் நள்ளிரவில் சிலை வைக்கும் படலம் முடிந்து விட்டது என மறு தகவல் அனுப்பப்பட்டது.

(அத்தியாயம் 5, ஆவணம் 5)

6. ஒப்புதல் வாக்குமூலம்

பாபரி மஸ்ஜிதில் டிசம்பர் 22, 1949 அன்று நள்ளிரவில் நான் சிலைகளை வைத்தேன் என்று ராமச்சந்திர தாஸ் பரமஹன்ஸா என்பவர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் டிசம்பர் 22, 1991 அன்று பகிரங்கமாகக் குற்றத்தை ஒப்புக் கொள்கிறார்.

(அத்தியாயம் 5, ஆவணம் 16)

7. நேருவின் கடிதம்

முதலமைச்சர் கோவிந்த வல்லப பந்துக்கு அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அனுப்பிய தந்தி மற்றும் கடிதங்கள்.

(அத்தியாயம் 5, ஆவணம் 18)

8. பட்டேலின் கடிதம்

ஜனவரி 9, 1950 அன்று துணைப் பிரதமர் வல்லபாய் பட்டேல், உ.பி. முதல்வர் கோவிந்த வல்லப பந்துக்கு எழுதிய கடிதம்.

(அத்தியாயம் 5, ஆவணம் 21)

9. அக்கய பிரமச்சாரியின் கடிதம்

(சுவாமி அக்கய பிரமச்சாரி விடுதலை இயக்கப் போராளியும், காந்தியவாதியும் ஆவார். பாபரி மஸ்ஜித் மீட்புக்காக இறுதி மூச்சு வரை போராடியவர் ஆவார்)

அப்போதைய உ.பி. உள்துறை அமைச்சரான லால்பகதூர் சாஸ்திரிக்கு சுவாமி அக்கய பிரமச்சாரி எழுதிய கடிதம் மற்றும் சமர்ப்பித்த நினைவுக் குறிப்பு.

(அத்தியாயம் 5, ஆவணம் 21)

10. பாபரி மஸ்ஜித் இமாமின் நேர்காணல்

பாபரி மஸ்ஜிதின் இமாம் அப்துல் கஃப்பார் 1987ல் அளித்த நேர்காணல்.

(அத்தியாயம் 5, ஆவணம் 11)

11. துணை கமிகனரின் எழுத்து வாக்குமூலம்

உ.பி. அரசு சார்பாக பைசாபாத்தின் துணை கமிகனர் ஜே.என். உக்ரா ஏப்ரல் 25, 1950 அன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வமான வாக்குமூலம்.

(அத்தியாயம் 5, ஆவணம் 13)

12. வாக்குமூலம் கூறும் பாத்தியதை

மேற்கண்ட வாக்குமூலத்தின் 12ஆம் பத்தி குறிப்பிடுகின்ற விபரம் வருமாறு:

இந்த வழக்கில் உள்ள சொத்து பாபரி மஸ்ஜித் என்று அறியப்பட்டதாகும். இது நீண்ட காலமாக முஸ்லிம்களால் தொழுவதற்காக வேண்டி பள்ளிவாசலாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஒரு போதும் ராமர் கோயிலாகப் பயன்படுத்தப்படவில்லை.

13. வைக்கப்பட்டது தான்! தானாகத் தோன்றியது அல்ல!

மேற்கண்ட வாக்குமூலத்தின் 13ஆம் பத்தி குறிப்பிடுகின்ற விபரம் வருமாறு:

டிசம்பர் 22, 1949 அன்று சிலைகள் ரகசியமாகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும் உள்ளே கொண்டு வைக்கப்பட்டன.

கையூட்டு வாங்கிய காவலர்கள்

பாபரி மஸ்ஜித் பள்ளியின் வாயிற் காவலர்கள் அதிக அளவு லஞ்சம், கையூட்டு வழங்கப்பட்டனர். (அதனால் தான் கயவர்கள் உள்ளே வரும் போது தடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்) என்று ஓர் அரசு அதிகாரியை மேற்கோள் காட்டி பி.ஜே.பி.யின் முக்கியப் பிரமுகர் சந்தன் மித்ரா கூறியதாக அக்டோபர் 26, 1986 அன்று வெளியான "தி ஸ்டேட்ஸ்மேன்' பத்திரிகை தெரிவிக்கின்றது.

1949 ஜூலையிலிருந்து செப்டம்பர் வரை பள்ளிக்கு வெளியே, ஆனால் பள்ளி அமைந்திருந்த வளாகத்திற்கு உள்ளே சபுத்ராவில் தான் ராமர் கோயில் கட்டுவதற்குரிய முயற்சிகள் எடுக்கப்பட்டன. பைசாபாத் நகர நடுவர் மன்ற நீதிபதி அக்டோபர் 10, 1949 அன்று பள்ளி அமைந்திருக்கும் இடத்திற்கு வந்து இந்துக்களுக்குச் சாதகமான அறிக்கையை தாக்கல் செய்கின்றார்.

இறுதி வரை (டிசம்பர் 22, 23) நாங்கள் பள்ளியில் தொழுது கொண்டிருந்தோம். இந்துக்கள் சபுத்ராவில் மட்டும் வந்து வணங்கிக் கொண்டிருந்தனர் என்று பாபரி மஸ்ஜிதின் இமாம் அப்துல் கஃப்பார் வாக்குமூலம் அளித்தார் என்று ஜூலை 2, 1989 அன்று வெளியான "ஸன்டே மெயில்' என்ற பத்திரிகை தெரிவிக்கின்றது.

கோயில் கட்டுவதற்கு அனுமதி கோரும் வழக்கு 19ஆம் நூற்றாண்டில் (1883-1886) சபுத்ரா என்ற அளவில் மட்டும் தான் இருந்தது. பள்ளிவாசல் அமைந்திருக்கும் இடத்தை அவ்வழக்கு உள்ளடக்கவில்லை.

காந்தியவாதியின் கவலையும் கரிசனமும்

1949ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே பள்ளியைக் கைப்பற்றுவதற்குரிய விகமப் பிரச்சாரம் துவங்கி விட்டது.

இதைப் பயந்த காந்தியவாதி அக்கய பிரமச்சாரி, உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரிக்கு பாபரி மஸ்ஜித் விவகாரமாக ஒரு விரிவான நினைவுக் குறிப்பைச் சமர்ப்பிக்கின்றார்.

பைசாபாத்தில் வாழும் முஸ்லிம்களின் உள்ளங்களில் பெரும் பயம் குடி கொண்டுள்ளது என்று அதில் குறிப்பிடுகின்றார்.

வீரியமிக்க சட்டம்

இதுபோன்ற சூழ்நிலைகளைக் கவனிப்பதற்கு சட்டத்தின் வீரியம் அபாரமாகத் தான் உள்ளது. இந்தியக் குற்றவியல் சட்டப் பிரிவுகள் 295, 297 ஆகியவை வழிபாட்டுத் தலங்களைத் தகர்த்தல், வழிபாட்டுத்தலங்களில் வரம்பு மீறிப் பிரவேசித்தல் போன்றவை குற்றங்கள் என்று அறிவிக்கின்றன.

1898ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 145, மாஜிஸ்ட்ரேட்டுக்கு வழங்கியிருக்கும் அதிகாரத்தைப் பார்ப்போம்.

சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் அவர்களது கோரிக்கைகளைத் தன்னிடம் சமர்ப்பிக்கச் செய்ய வேண்டும். அதை விசாரணை செய்து அவர் தீர்ப்பளிக்கலாம். அந்த விசாரணையின் போது சொத்தின் அனுபவத்தில் யார் இருக்கின்றார் என்ற உண்மையைத் தான் பார்க்க வேண்டுமே தவிர சொத்து யாருக்குரியது என்ற ஆய்வுக்குள் அவர் செல்லக் கூடாது. இந்த அடிப்படையில் யார் உண்மையான அனுபவத்தில் இருக்கிறார் என்று பார்த்து அவர் அனுபவப் பாத்தியதையைத் தீர்மானிக்கலாம்.

அதுவரை அனுபவத்தில் இருந்த ஒரு தரப்பினர் அநியாயமாகவும் அக்கிரமமாகவும் அந்தச் சொத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டிருந்தால், வெளியே தள்ளப்பட்டவர் தான் அனுபவப் பாத்தியதை உடையவர் என்று முடிவு செய்து அவர்களிடமே அந்தச் சொத்தை மீட்டிக் கொடுக்க வேண்டும். வெளியே தள்ளியவர் தான் சொத்துக்கு உண்மையான சொந்தக்காரராக இருந்தாலும் அவர் தனது உரிமையை நீதிமன்றத்தில் வந்து நிரூபிக்க வேண்டும். இது பிரிவு 145, ஆர்.டி.ஓ. அல்லது மாஜிஸ்ட்ரேட்டுக்கு வழங்கியிருக்கும் அதிகாரமாகும்.

அயோத்தியா வழக்கும் 145 பிரிவும்

உண்மையில் அயோத்தியா வழக்கில் இந்த 145வது பிரிவு முஸ்லிம்களை உள்ளே வைத்து காப்பாற்றுவதற்குப் பதில் அவர்களை வெளியேற்றுவதற்காகவே முழுவதும் பயன்படுத்தப்பட்டது. முஸ்லிம்களை வெளியேற்றுவதற்குரிய ஒரு ஆயுதமாகவே அதிகாரிகள் மற்றும் நீதிபதிகளின் கைகளில் இது சுழன்றது.

முதல் தர நடுவர் மார்க்கண்டே சிங் என்பவர் பாபரி மஸ்ஜிதை பற்றுகை (ஆற்ற்ஹஸ்ரீட்ம்ங்ய்ற்) செய்வதற்கு உத்தரவு போட்டு, நகராட்சித் தலைவர் பிரியா தத் ராம் என்பவரை அதற்கு பொறுப்பாளராக, ரிசீவராக நியமிக்கின்றார். டிசம்பர் 29, 1949ல் இது நடந்தது. அவர் ஜனவரி 5, 1950ல் பொறுப்பேற்று ஒரு திட்டத்தைச் சமர்ப்பிக்கின்றார்.

நடுவர் மன்ற நீதிபதி பீர் சிங் என்பவர் ஜனவரி 19, 1950 அன்று பிறப்பித்த உத்தரவில், உள்ளே வைக்கப்பட்ட சிலைகளை அப்புறப்படுத்தக் கூடாது என்றும், டிசம்பர் 23 முதல் நடைபெற்று வரும் பூஜையைத் தடுக்கக் கூடாது என்றும் உறுத்துக் கட்டளை வழங்குகின்றார். ஏப்ரல் 26, 1950 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்த உறுத்துக் கட்டளையை உறுதி செய்து விடுகின்றது.

கோயிலாக மாறிய பள்ளிவாசல்

இதன் மூலம் அல்லாஹ்வை மட்டும் வணங்குகின்ற ஓர் ஏகத்துவப் பள்ளிவாசல், இணை வைக்கும் கோயிலாக மாறியது. முஸ்லிம்கள் தோல்வியடைந்தனர். டிசம்பர் 22, 23, 1949 அன்று அரங்கேற்றப்பட்ட இந்த அநியாயத்தைச் சரி செய்வதற்காக அடுத்தடுத்து களமிறங்கி ஓடிய முஸ்லிம்கள் ஒவ்வொரு சட்டப்  போராட்டச் சுற்றிலும் தோல்வியே அடைந்தனர்.

தீர்ப்புகள் - ஓர் ஒப்பீடு

அயோத்தியா நடுவர் மன்ற நீதிபதியின் இந்தத் தீர்ப்பை டெல்லியில் உள்ள சார்பு நடுவர் மன்ற நீதிபதியின் தீர்ப்புடன் சற்று ஒப்பிட்டுப் பார்ப்போம்.

இந்த நீதிமன்றம் புதுடெல்லியில் நாடாளுமன்றத் தெருவில் அமைந்திருக்கின்றது. புதுடெல்லி ஜன்தர் மந்தர் சாலையில் அமைந்திருக்கும் காங்கிரஸ் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த காங்கிரஸ் (ஓ) கட்சியை, நவம்பர் 13, 1971ல் காங்கிரஸ் (ஆர்) கட்சி தனது வலிமையைப் பயன்படுத்தி வெளியேற்றி விட்டது. இந்த வழக்கு பிப்ரவரி 7, 1972 அன்று சார்பு நடுவர் மன்ற நீதிபதி ஏ.ஜி. கட்டிங் என்பவரிடம் வந்த போது, அவர் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 145ன் படி அந்த அலுவலகத்தை காங்கிரஸ் (ஓ) கட்சிக்கு மீட்டிக் கொடுத்தார். காங்கிரஸ் (ஓ) தான் அசல் அமைப்பு என்பதற்காக அல்ல! அந்த அமைப்பு காங்கிரஸ் (ஆர்) மூலம் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதற்காக!

காங்கிரஸ் (ஓ) கட்சி அலுவலகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு காரணத்தினாலேயே அந்த அனுபவத்தைத் திரும்பப் பெறுவதற்குரிய முழுத் தகுதி பெற்று விடுகின்றது. சொத்து யாருக்குரியது என்பதை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை அந்த அலுவலகம் காங்கிரஸ் (ஓ) கட்சியின் அனுபவத்தில் தான் இருக்க வேண்டும் என்று நடுவர் மன்ற நீதிபதி ஏ.ஜி. கட்டிங் குறிப்பிடுவது இங்கு மிகவும் கவனிக்கத்தக்கது.

இதே நடைமுறை தான் பாபரி மஸ்ஜித் வழக்கில் செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் செயல்படுத்தப்படவில்லை. இவ்வழக்கில் பிரிவு 145 எவ்வளவு அழகாகச் செயல்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதைப் புரிய வைப்பதற்காகத் தான் இந்த ஒப்பீடு இங்கே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

அரசு ரிசீவரின் சதித் திட்டம்

நான் பெறுப்பேற்ற போது நடைபெற்று வந்த பூஜை மற்றும் படையல் ஆகியவற்றைத் தொடர்ந்து செய்வது தான் இந்த நிர்வாகத்தின் தலையாய பணியாகும் என்று ரிசீவராகப் பொறுப்பேற்ற நகராட்சித் தலைவர் கூறினார். குறைந்தபட்சம் 3 பூசாரிகள் பூஜை செய்வதற்கு ஏதுவாக எவ்வித இடையூறும் இல்லாமல் சிலைகளிடம் சென்று வருவதற்கு வசதி செய்து தரப்பட்டது.

இந்த சதித் திட்டத்தின்படி முஸ்லிம்கள் ஒரேயடியாகப் பள்ளிவாசலில் தொழுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டனர். ஆனால் அதே சமயம் இந்துக்கள் பூஜை செய்வதற்கும் பக்கத்தில் உள்ள வாசலில் நின்று கொண்டு சிலைகளை தரிசிப்பதற்கும் ரிசீவரால் நியமிக்கப்பட்ட பூசாரிகள் மூலம் சிலைகளுக்குப் படைப்பதற்கும் அனுமதியளிக்கப்பட்டது.

1986ல் அடுத்தக்கட்ட அநியாயம்

இந்த அநியாயம் 1949ல் அரங்கேறியது என்றால் 1986ல் அரங்கேறிய அடுத்தக்கட்ட அநியாயத்தை இப்போது பார்ப்போம்.

ஜனவரி 25, 1986 அன்று உமேக் சந்த் பாண்டே என்ற வழக்கறிஞர், பூஜைக்குரிய தடைகளை நீக்க வேண்டும் என்று பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கின்றார். வழக்கின் வாதத்தை பிப்ரவரி 2, 1986 அன்று ஒரு 45 நிமிடம் கேட்டு விட்டு நடுவர் மன்ற நீதிபதி கே.எம். பாண்டே பூட்டுக்களைத் திறக்க உத்தரவிடுகின்றார். பிப்ரவரி 3, 1986 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றம் ஸ்டேட்டஸ் கோ - தற்போதைய நிலை தொடரட்டும் என்று தீர்ப்பளிக்கின்றது. இது 1986ல் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட நீதிமன்ற அநீதியாகும்.

அரங்கேறிய பள்ளி இடிப்பு

டிசம்பர் 6, 1992 அன்று பாபரி மஸ்ஜித் அநியாயமாக இடிக்கப்பட்டது. ஜனவரி 7, 1993 அன்று அயோத்தியில் பாபரி மஸ்ஜித் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நிலத்தைக் கையகப்படுத்துமாறு குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பிக்கின்றார். பின்னால் அது நாடாளுமன்றத்தில் சட்ட வடிவம் பெற்று விடுகின்றது.

குற்றத்தின் பலன் குட்டிக் கோயில்

பாபரி மஸ்ஜிதை இடித்த கரசேவை கும்பல் பள்ளியை இடித்த இடத்திலேயே ஒரு தற்காலிகக் கோயிலைக் கட்டி அதில் சிலைகளை நிறுவினர்.

டிசம்பர் 9, 1992 அன்று மேற்கு வங்க முதலமைச்சர் ஜோதிபாசு குற்றத்தின் பரிசாகக் கிடைத்த அந்தக் குட்டிக் கோயிலை உடனே தகர்த்து விடும்படி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார்.

மத்திய அரசின் உள்துறைச் செயலாளர் மாதவ் காட்போலே அந்தச் சிலையைக் கும்பிட மறுத்து விட்டார். கலவர களேபரம், கடைந்தெடுத்த ஏமாற்று வேலை கலந்து கட்டப்பட்ட இந்தக் கோயிலில் ஒருபோதும் கடவுள் குடியிருக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

குடியரசுத் தலைவரின் கருத்துக் கேட்பு

((Presidential Reference)

பாபரி மஸ்ஜித் அமைந்த இடத்தில், அது கட்டப்படுவதற்கு முன் இந்துக் கோயிலோ அல்லது இந்து மதக் கட்டடமோ இருந்ததா? என்று உச்ச நீதிமன்றத்தில் குடியரசுத் தலைவர் கருத்துக் கேட்டிருந்தார்.

உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் கருத்துக் கேட்ட நிகழ்வைக் கண்டு துடிதுடித்துப் போன நாட்டின் தலைசிறந்த வழக்கறிஞரும் சட்ட விற்பன்னருமான என்.ஏ. பல்கிவாலா வேதனை மிகு ஒரு விமர்சனத்தை "தி டைம்ஸ் ஆஃப் இன்டியா' பத்திரிகையில் எழுதினார்.

தற்போது வெளியாகியிருக்கும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னர் அவரது விமர்சனம் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளதை நாம் உணர முடிகின்றது.

பல்கிவாலாவின் பலித்த கருத்து

பல்கிவாலா குறிப்பிடுகின்றார்:

"வரலாற்று அல்லது தொல்பொருள் ஆய்வு தொடர்பான கேள்விகளை நாட்டின் உச்ச நீதிமன்றத்திடம் கேட்க வேண்டும் என்ற கருத்து தெரிவிக்கப்படுகின்றது. என்னுடைய அறிவுக்கு இது பைத்தியக்காரத்தனம் என்றே தோன்றுகின்றது.

ஆனால் மத்திய அரசாங்கமோ இப்போது அரசியல் சட்டம் 143வது பிரிவின்படி, "பாபரி மஸ்ஜித் அமைந்த இடத்தில், அது கட்டப்படுவதற்கு முன் இந்துக் கோயிலோ அல்லது இந்து மதக் கட்டடமோ இருந்ததா?'' என்று உச்ச நீதிமன்றத்திடம் கருத்துக் கேட்டு விட்டது.

பாபரால் கட்டப்பட்ட பள்ளிவாசல் இருந்த இடத்தில் கோயில் இருந்ததா என்ற விகயத்தில் வரலாற்று ஆசிரியர்கள் பல்வேறு விதமான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, அங்கு ராமர் பிறந்தாரா என்ற கருத்தில் அவர்கள் அறவே உடன்பாடு கொள்ளவில்லை.

ராமர் உண்மையிலேயே உலகில் வாழ்ந்த ஒரு மனிதப் பிறவி தானா? அல்லது நல்ல மனிதருக்கு முன்னுதாரணமாகக் காட்டுவதற்காகப் புனையப்பட்ட ஒரு புராண கற்பனைக் கதாபாத்திரமா என்பதிலேயே பயங்கர கருத்து வேறுபாடு உள்ளது.

புராணம் அல்லது வரலாறு அல்லது இரண்டும் கலந்த கேள்விகளை உச்ச நீதிமன்றத்திலோ அல்லது அலகாபாத் உயர் நீதிமன்றத்திலோ தீர்மானிக்குமாறு கேட்பது நம்முடைய அரசியல் நிறுவனங்கள் திவாலாகி விட்டன என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

நாம் அனைத்து சீரிய சிந்தனையையும் இழந்து, ஜனநாயகத்தை மிகவும் தரம் தாழ்ந்த நிலைக்கு இறக்கி விட்டிருக்கிறோம். மத நம்பிக்கை, வரலாறு, புராணம் அல்லது அரசியல் சந்தர்ப்பவாதம் தொடர்பான விகயங்களை முடிவு செய்ய நீதிமன்றங்களை நாடுவதற்கு சாதாரணமாக அல்ல, மிக அதிகமாகவே ஆர்வம் காட்டுகின்றனர்.

முன்னுதாரணம் இல்லை

அயோத்தியா விவகாரமாக நீதிமன்றக் கருத்தைக் கோருவது தான் சரி என்று முடிவு செய்து, இதுபோன்ற பைத்தியக்காரத்தனமான கேள்விகளைக் கேட்பதற்காக நீதிமன்றத்தை அரசாங்கம் நாடிய சம்பவம் உலகில் எந்த நாட்டிலும் நடக்கவில்லை.

கருத்துக் கேட்பதற்காக முன்வைக்கப்பட்ட இது மாதிரியான கேள்விகளுக்கு விடை காண உச்ச நீதிமன்றத்தையோ அல்லது உயர் நீதிமன்றத்தையோ தேடிச் செல்வது பின்வரும் கால கட்டத்தில் பெரும் விபரீதமான விளைவை ஏற்படுத்தி விடும்.

அனுபவம் அல்லது பயிற்சி அளிக்கப்படாத ஒரு துறைக்கு இது நீதிமன்றத்தை வலுக்கட்டாயமாகத் தள்ளிவிடும். நீதிமன்றங்களால் உண்மை அல்லது சட்டம் தொடர்பான கேள்விகளை மட்டுமே முடிவு செய்ய இயலும்.

நீதிமன்றத்தின் வரையறையில் வராத, வரலாறு அல்லது தொல்பொருள் தொடர்பான கேள்விகளை முடிவு செய்வதற்கு நீதிமன்றங்களுக்கு அறவே தகுதியில்லை.

தானாக நேரில் பார்த்தோ, அல்லது கேட்டேன் என்று கூறி ஒரு சாட்சி தருகின்ற ஆதாரம் அல்லது ஆவணத்தின் படியோ தான் ஒரு நீதிபதி தீர்ப்பளிக்க முடியும்.

இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தவொரு நீதிமன்றத்திலும் செவி வழிச் செய்தி, கற்பனைச் செய்திக்கு அறவே அனுமதி கிடையாது.

ஒரு நீதிமன்றம் அரசியல் வளையத்திற்குள் தள்ளப்படுமானால் அது நீதிமன்றத்தின் மரியாதைக்கு ஊறு விளைவித்து விடும். நீதிமன்றத்தின் தகுதியை அது தகர்த்தெறிந்து விடும்.

தொல்பொருள் ஆராய்ச்சி என்பது கலை, பழைய காலத்து நம்பிக்கைகள், வழக்கங்கள் தொடாபான ஆய்வாகும்.

அதன் ஆராய்ச்சி மூலம் ஒரு நம்பிக்கைக்கு அல்லது ஒரு கருத்துக்குரிய பின்னணியை வேண்டுமானால் தெரிந்து கொள்ளலாமே தவிர அதை ஒரு முழு அளவிலான உறுதி மிக்க ஆதாரமாக எடுக்க முடியாது.

ஒரே தொல்பொருள் ஆராய்ச்சி ஆதாரத்திலிருந்து வெளியான பல்வேறு முடிவுகள் மீது இரண்டு பேர் ஒத்தக் கருத்திற்கு வர முடியாதல்லவா? கண்டிப்பாக வெவ்வேறு கருத்துக்குத் தான் வருவார்கள்.

ஒரு நீதிபதி கொண்டிருக்கும் கருத்திற்கு அல்லது மத நம்பிக்கைக்கு நேர்மாறான கருத்தை, மத நம்பிக்கையை மக்கள் கொண்டிருக்கும் போது அந்த நீதிபதியின் முடிவு, அந்த மக்களை எப்படிக் கட்டுப்படுத்தும்?

இது பல்கிவாலாவின் விமர்சனமாகும்.

குடியரசுத் தலைவரிடமிருந்து கருத்துக் கேட்டு வந்த கோரிக்கையை, "இது நீதிமன்றத்தின் வேலை அல்ல'' என்று கூறி உச்ச நீதிமன்றம் திரும்ப அனுப்பியது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தச் செயல், சட்ட நிபுணர் பல்கிவாலாவின் கருத்தை மிகச் சரியாக நியாயப்படுத்துவதாக அமைந்து விட்டது.

பல்கிவாலா எச்சரித்தது போலவே அலகாபாத் உயர் நீதிமன்றம், செப்டம்பர் 30ஆம் தேதி அளித்த தீர்ப்பு சட்டத்திற்குப் புறம்பாக அமைந்து விட்டது. நீதிமன்றத்தின் மீது மக்கள் கொண்டிருந்த மரியாதைக்கும் குந்தகம் ஏற்பட்டு விட்டது.

குடியரசுத் தலைவர் கருத்துக் கேட்பு

ஒரு விளக்கம்

(பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பின்னர் ஜனவரி 7, 1993 அன்று பாபரி மஸ்ஜித் அமைந்திருந்த வளாகம் அதைச் சுற்றிலும் உள்ள 67.703 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்காக குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பிக்கின்றார். அதே தினத்தில் தான் "பாபரி மஸ்ஜித் அமைந்த இடத்தில், அது கட்டப்படுவதற்கு முன் இந்துக் கோயிலோ அல்லது இந்து மதக் கட்டடமோ இருந்ததா?' என்று உச்ச நீதிமன்றத்தில் குடியரசுத் தலைவர் கருத்துக் கேட்டு அனுப்பினார்.

குடியரசுத் தலைவரின் ஆணை ஏப்ரல் 3, 1993ல் சட்ட வடிவமானது. எண்: 33/1993 அயோத்தியா சட்டம் என்றழைக்கப்படுகின்றது. இது சட்ட வடிவமானதால் குடியரசுத் தலைவரின் ஆணை திரும்பப் பெறப்படுகின்றது.

குடியரசுத் தலைவரின் கருத்துக் கேட்புக் கோரிக்கையுடன் இந்தச் சட்டமும் நீதிமன்றத்தின் பார்வைக்கு வருகின்றது.)

இந்த சிறு விளக்கத்திற்குப் பிறகு ஏ.ஜி. நூரானியின் அலசலுக்குள் செல்வோம்.

1. நீதிபதி எம்.என். வெங்கட செல்லையா, 2. நீதிபதி ஜே.எஸ். வர்மா, 3. நீதிபதி ஜீ.என். ராய், 4. ஏ.எம். அஹ்மதி, 5. நீதிபதி எஸ்.பி. பரூச்சா ஆகிய ஐவர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்சுக்கு இந்தக் கருத்துக் கேட்பு வந்தது. 33/1993 சட்டத்தை விசாரித்து இந்த பெஞ்ச் அளித்த தீர்ப்பு பெரும்பான்மை, சிறுபான்மை என இரு விதமாக அமைந்தது. முதல் மூன்று பேரின் தீர்ப்பு பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பாகவும், மற்ற இருவரின் தீர்ப்பு சிறுபான்மையினரின் தீர்ப்பாகவும் அமைந்தது.

சட்டத்தின் ஒரே ஒரு பிரிவைத் தவிர மற்றபடி இந்தச் சட்டம் சரியானது என்று பெரும்பான்மையினர் தீர்ப்பளித்தனர். இந்த மொத்த சட்டமே செல்லத்தக்கதல்ல என்று சிறுபான்மை நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

ஆனால் 33/1993 சட்டம் மற்றும் குடியரசுத் தலைவரின் கருத்துக் கேட்பு ஆகியவற்றை உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பியதை அனைத்து நீதிபதிகளும் சரி கண்டனர்.

பெரும்பான்மை தீர்ப்புக் குழுவினருக்காகப் பேசிய ஜே.என். வர்மா, சட்டப்படி குற்றமான பள்ளிவாசல் இடிப்பைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் சிறுபான்மை தீர்ப்புக் குழுவுக்காகப் பேசிய எஸ்.பி. பரூச்சா பள்ளிவாசல் இடிப்பை மிகக் கடுமையாகக் கண்டித்தார்.

அயோத்தியா சட்டம் பிரிவு 7 (2)

அயோத்தியா சட்டம் 33/1993, பிரிவு 7, உட்பிரிவு 2 "இந்தச் சட்டம் துவங்குவதற்கு முன் இருந்த அதே நிலை தொடர்வதற்கு அரசாங்கம் உறுதி செய்து, அதை அப்படியே பராமரிக்க வேண்டும்'' என்று குறிப்பிடுகின்றது.

(அதாவது டிசம்பர் 6, 1992ல் பள்ளி இடிக்கப்பட்ட பிறகு வன்முறைக் கும்பல் ஒரு குட்டிக் கோயிலைக் கட்டி அதற்கு வழிபாடு செய்து வருகின்றது. அதைக் கண்டு கொள்ளாமல் அப்படியே விட்டுவிட வேண்டும் என்று இந்தச் சட்டம் சொல்கின்றது.)

இது தொடர்பாக ஜே.என். வர்மா குறிப்பிடுகையில்,

"(இந்து, முஸ்லிம்) ஆகிய இரு சமுதாயங்களும் இதில் சம அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்துக்கள் 1949க்கு முந்தைய கால கட்டத்திலிருந்து ராம் சபுத்ராவில் வணங்கி வந்தனர். டிசம்பர் 6, 1992 பள்ளிவாசல் இடிப்புக்குப் பின்னர் இது தடைப்பட்டது. அவர்களுடைய வணக்கம் ஒரே ஒரு பூசாரியை மட்டும் வைத்து வணங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இந்துக்களுக்குப் போடப்பட்டு அவர்களுடைய வணக்கத்தின் எல்லையும் சுருங்கி விட்டது. ஆனால் அதே சமயம் முஸ்லிம்களோ சர்ச்சைக்குரிய பகுதியில் எந்தவொரு இடத்திலும் 1949லிருந்து தொழவில்லை''

என்று கூறுகின்றார்.

நீதிபதி வர்மாவின் இந்தக் கருத்து அதிர்ச்சியளிக்கக் கூடியதாகும்.

முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று சொன்னால் அது சரி எனலாம். இந்துக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்?

பள்ளிவாசலில் வந்து தொழுகின்ற உரிமை முஸ்லிம்களிடமிருந்து வஞ்சகமாகவும் அதிகாரத்தின் மூலமாகவும் பறிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் அவர்கள் அங்கு வந்து தொழவில்லை. இது தான் உண்மை. இதைத் தான் நீதிபதி வர்மா, முஸ்லிம்கள் ஏதோ வேண்டுமென்றே விரும்பி அங்கு வந்து தொழவில்லை என்பது போல் குறிப்பிடுகின்றார். இவரது இந்த வாதத்தை நீதிபதி பரூச்சா நகைப்பிற்குரியதாகக் கருதுகின்றார்.

அயோத்தியா சட்டம் பிரிவு 4 (3)

33/1993 சட்டத்தின் 4 (3) பிரிவை நீதிபதிகள் அனைவரும் ஏகமனதாக ரத்துச் செய்து விடுகின்றனர். இந்தப் பிரிவை ஏன் ரத்துச் செய்தனர் என்பதைக் காண்பதற்கு முன், 4 (3) பிரிவு கூறுவது என்னவென்று பார்ப்போம்.

மத்திய அரசு கையகப்படுத்தியுள்ள சொத்து (பாபரி மஸ்ஜித் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடம்) தெடர்பான நலன் மற்றும் அதன் உரிமை குறித்து நிலுவையில் இருக்கும் அனைத்து வழக்குகளையும் சட்ட நடவடிக்கைகளையும் மத்திய அரசு தள்ளுபடி செய்திட வேண்டும்.

இதைத் தான் நீதிபதிகள் ஏகமனதாக ரத்துச் செய்து விடுகின்றனர். ஏன்? இந்த உட்பிரிவு ஒருதலைப்பட்சமானது.

பாபரி மஸ்ஜித் முஸ்லிம்களின் அனுபவத்தில் இருந்தது என்ற எதிரிடை அனுபவத்தை இது தகர்த்தெறிந்து விடுகின்றது. இத்தகைய பக்காவான சட்டத்தின் அனுகூலத்தை, சாதகத்தை இந்த 4 (3) பிரிவின் மூலம் முஸ்லிம்கள் இழந்து விடுகின்றனர். அதனால் தான் இதை நீதிபதிகள் ஏகமனதாக ரத்துச் செய்தனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவனித்த சட்டத்தின் இந்த அனுகூலத்தையும் சாதகத்தையும் அண்மையில் தீர்ப்பளித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கவனிக்கத் தவறி விட்டது.

இப்போது நீதிபதி ஜே.எஸ். சர்மா சொல்வதைப் பார்ப்போம்.

பாபரி மஸ்ஜித் தங்களுக்குத் தான் சொந்தம் என்பதற்காக முஸ்லிம்கள் எடுத்து வைத்திருக்கும் பல விதமான சட்டப் பாதுகாப்புகளை இந்த 4 (3) பிரிவு தகர்த்தெறிந்து விடும். "சர்ச்சைக்குரிய பகுதி 1528ல் மீர்பாகியினால் கட்டப்பட்டதிலிருந்து அவர்களிடம் 400 ஆண்டுகளாக எதிரிடை அனுபவத்தில் இருந்து வருகின்றது'' என்ற அனுபவப் பாத்தியதையும் இதில் அடங்கும்.

குடியரசுத் தலைவர் கருத்து கேட்கும் இந்த வழக்கில் எழுப்பப்பட்டிருக்கும் கேள்வி, இதற்குப் பரிகாரம் காண்பதற்காக அரசாங்கம் இரண்டு காரியங்களை ஒரே நாளில் செய்திருக்கின்றது.

1. பள்ளிவாசலுக்குக் கீழே இந்துக் கோயில் இருந்ததா? என்று உச்ச நீதிமன்றத்தில் குடியரசுத் தலைவர் மூலம் மத்திய அரசு விளக்கம் கேட்டது.

2. குடியரசுத் தலைவர் மூலம் பாபரி மஸ்ஜித் நிலத்தைக் கையகப்படுத்தி அதை நாடாளுமன்றத்தில் 33/1993 என்ற சட்டமாக ஆக்கியிருக்கின்றது.

இந்த இரண்டைத் தான் மத்திய அரசாங்கம் இந்த வழக்கிற்குப் பரிகாரமாகச் செய்திருக்கின்றது.

குடியரசுத் தலைவர் கருத்துக் கேட்கும் இந்தக் கோரிக்கையில், சொத்து யாருக்குச் சொந்தம் என்று இந்த வழக்கில் எழுப்பப்பட்டிருக்கும் அடிப்படைக் கேள்வியை இது உள்ளடக்கவில்லை.

எதிரிடை அனுபவம் (Adverse Possession) என்ற சட்டத்தின் மூலம் தங்களுக்கு சட்டப் பாதுகாப்புகள் இருக்கின்றன என்று முஸ்லிம்கள் வைக்கும் வலிமையான வாதத்திற்குரிய பதிலையும் இந்தக் கோரிக்கை உள்ளடக்கவில்லை.

குடியரசுத் தலைவர் கேட்டிருக்கும் கேள்விக்கு இந்த நீதிமன்றம் அளிக்கும் எந்தப் பதிலும் நிலுவையில் இருக்கும் வழக்கை முடிவுக்குக் கொண்டு வராது. காரணம், சொத்து யாருக்குச் சொந்தம் என்ற அடிப்படைக் கேள்விக்குப் பதிலாக இது அமையப் போவதில்லை.

இது நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் சர்ச்சைக்குரிய பகுதியின் பிரச்சனையைத் தீர்க்கப் போவதுமில்லை.

பிரச்சனையில் பாதிக்கப்படக் கூடிய ஒருவருக்குப் பரிகாரம் நீதிமன்றம் தான்.

33/1993 சட்டத்தின் பிரிவு 4 (3) பாபரி மஸ்ஜித் சம்பந்தமான அனைத்து வழக்குகளையும் ரத்துச் செய்து விடுகின்றது. அதாவது முஸ்லிம்கள் நீதிமன்றத்திற்கு வரும் வாசலை இது அடைத்து விடுகின்றது. பரிகாரத்தைத் தகர்த்து விடுகின்றது.

பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு வரும் வாசலை அடைத்து விட்டு, 143 (1) பிரிவின்படி இதுபோன்று உச்ச நீதிமன்றத்தில் கருத்துக் கேட்பதையே மாற்றுப் பரிகாரமாக்குவது சரியான வழிமுறையல்ல!

இந்த ஓர் உண்மையின் அடிப்படையில் தான் 33/1993 சட்டத்தின் 4(3) பகுதி செல்லத்தக்கதல்ல என்று தீர்ப்பளிக்கின்றோம். (ஆனால் 4(3) தவிர சட்டத்தின் மற்ற பகுதிகள் செல்லத்தக்கவையாகும்.)

நீதிபதி பரூச்சாவின் தெளிவான தீர்ப்பு

நீதிபதி பரூச்சா இந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டதாவது:

தங்களுடைய எதிரிடை அனுபவத்தை வழக்காட்டி நிரூபிப்பதற்குரிய உரிமையையே சட்டப்பிரிபு 4 (3) வக்ஃப் வாரியம் மற்றும் இஸ்லாமிய சமுதாயத்திடமிருந்து பறித்து விடுகின்றது.

பாபரி மஸ்ஜிதின் கீழ் கோயில் இருந்ததா? என்று குடியரசுத் தலைவர் எழுப்பியிருக்கும் இந்தக் கேள்விக்கு உட்பட்டுத் தான் தங்களது பள்ளி அமைந்திருக்கும் நிலத்தின் உரிமையைக் கேட்க முடியும் என்று கூறி, வழக்கின் தன்மையில் முஸ்லிம்களை ஒரு மிகக் குறுகிய வட்டத்திற்குள் கொண்டு வந்து விடுகின்றது.

இந்த 4 (3) சட்டப் பிரிவின் விதிகள் (பள்ளியின் கீழ் கோயில் இருந்தது) என்ற இந்த நோக்கத்தை அடைவதற்காக வேண்டி மதச் சார்பின்மை என்ற அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கையை ஊனப்படுத்தி விடுகின்றன.

ஒரு மதத்திற்குச் சார்பாகவும், இன்னொரு மதத்திற்கு எதிராகவும் மத்திய அரசைச் சாய வைத்து விடுகின்றன.

இந்த மொத்த சட்டமும், குடியரசுத் தலைவரின் கருத்துக் கேட்பும் மேலே குறிப்பிட்டதைப் போன்று ஒரு மதத்திற்குச் சாதகமாகவும், இன்னொரு மதத்திற்குப் பாதகமாகவும் அமைந்துள்ளது. எனவே குடியரசுத் தலைவரின் இந்த நோக்கு மதச் சார்பின்மைக்கு எதிரானது. அரசியல் சட்டதிற்குப் புறம்பானது.

இவ்வாறு பரூச்சா கூறி விட்டு, மற்றொரு குறையையும் சுட்டிக் காட்டுகின்றார்.

தொல்பொருள் ஆய்வு, வரலாறு அடிப்படையில் வெளியாகும் பொருட்களைப் பரிசோதிக்கவும் மதிப்பீடு செய்வதற்கும் நீதிமன்றம் தகுதியற்றதாக உள்ளது. இந்நிலையில் இத்துறையில் உள்ள வல்லுனர்களை நியமிப்பதற்கும், அந்த வல்லுனர்களின் கருத்துக்களை எவ்வித விசாரணை, பரிசோதனை, ஆய்வு எதற்குமே உட்படுத்தாமல் அப்படியே கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளும் நிலைக்கும் நீதிமன்றம் தள்ளப்படுகின்றது.

இதுபோன்ற மதிப்பீட்டின் மீது நீதி அடிப்படையிலான கருத்துக் கேட்பதற்கு அனுமதியில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், அந்தக் கருத்து ஒரு தரப்பு அல்லது இரு தரப்புகளின் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகும்.

இவ்வாறு நீதிபதி பரூச்சா கூறுகின்றார்.

இவ்வாறு உச்ச நீதிமன்றம் அக்டோபர் 24, 1994 அன்று ஏகமனதாகத் தீர்ப்பளித்தது. அதாவது, பாபரி மஸ்ஜிதின் கீழ் கோயில் இருந்ததா? என்று குடியரசுத் தலைவர் கேட்பது, அந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்ய உத்தரவிடும் நிலைக்கு உச்ச நீதிமன்றத்தைத் தள்ளி விடும். எனவே இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பது எங்கள் வேலையல்ல என்று உச்ச நீதிமன்றம் ஏகமனதாகத் தீர்ப்பளித்தது.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் அகழ்வாராய்ச்சி உத்தரவு

உச்ச நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்திருக்கும் நிலையில் மார்ச் 5, 2003 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றம், அகழ்வாராய்ச்சிக்கு உத்தரவிட்டது.

"இந்த உத்தரவு உச்ச நீதிமன்றம் அளித்த இந்த ஏக மனதான தீர்ப்புக்கு எதிரானதல்ல! ஏனென்றால் இந்த வழக்கில் எழுப்பப்பட்டுள்ள மிக முக்கியமான கேள்வி, இடிக்கப்பட்ட பள்ளிவாசலுக்குக் கீழே கோயில் இருந்ததா? என்பதாகும்'' என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

ஆனால் இதே கேள்வி தான் குடியரசுத் தலைவரால் உச்ச நீதிமன்றத்தில் கேட்டு அனுப்பப்பட்டது. இது பொருத்தமற்ற கேள்வி என்று உச்ச நீதிமன்றம் கருத்துக் கூற, பதிலளிக்க மறுத்து விட்டது.

பாபரி மஸ்ஜித் வழக்கில் மிக முக்கியமான கேள்வி, முஸ்லிம்களிடம் இதுவரை இருந்து வருகின்ற எதிரிடை அனுபவம், அதற்கு எதிராக உள்ள அனைத்து வழக்குகளையும் செயலற்றதாக்கி விட்டதா? இல்லையா? என்பது தான். (அதாவது பாபரி மஸ்ஜிதில் முஸ்லிம்களுக்கு இருக்கும் 400 ஆண்டு கால அனுபவப் பாத்தியதை ஒன்றே அது அவர்களுக்குரிய இடம் தான் என்று தீர்ப்பளிப்பதற்குப் போதுமானதாகும். இதற்கு எதிராக எந்த வழக்கும் செல்லாது.)

எனவே அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இந்த அகழ்வாராய்ச்சி உத்தரவு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, பொருத்தமற்ற ஒரு விவகாரத்தை மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பியிருக்கின்றது.

விமர்சனத்திற்குள்ளான தீர்ப்பு

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அகழ்வாராய்ச்சித் துறையின் உயர்மட்ட அறிஞர் குழுவினரால் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அவர்களின் விமர்சன உரை மார்ச் 10, 2003 அன்று வெளியானது.

இந்தப் பொறுப்பு சர்ச்சைக்குரிய ஒரு ஏஜென்ஸியிடம் ஒப்படைக்கப்பட்டது. அது தான் இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகமாகும். அதன் அறிக்கை பெரும் கண்டனத்திற்குள்ளானது.

அலகாபாத் கோர்ட்டின் ஓர் அழகிய தீர்ப்பு

பாபரி மஸ்ஜித் நிலத்தை மத்திய அரசு கையகப்படுத்துவதற்கு முன்பு உத்திர பிரதேச மாநிலத்தின் அப்போதைய பி.ஜே.பி. அரசு அந்நிலத்தைக் கையகப்படுத்தியிருந்தது. இது தொடர்பாக டிசம்பர் 11, 1992 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பை அளித்த நீதிபதி எஸ்.ஹெச்.ஏ. ரஸா குறிப்பிட்டதாவது:

"ஒருவரது மத நம்பிக்கையானது சட்டத்தின் ஆட்சியை மிரட்டும் அளவுக்குச் செல்லக்கூடாது. "மத நம்பிக்கை நீதிமன்றத்தின் வரம்பிற்கு அப்பாற்பட்டது' என்ற வாதம் தெய்வ ஆட்சிக் கோட்பாட்டுத் தத்துவமாகும்''

ஒரு சமுதாயத்தின் மத நம்பிக்கை, அது பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையாக இருக்கும் காரணத்தால் அதுவே நீதிமன்றத் தீர்ப்பாகி, நாட்டின் சட்டமாகி விட முடியாது.

ஆனால் நீதிபதிகளே தாங்கள் அளிக்கும் உத்தரவுகளில் மத நம்பிக்கையைச் சார்ந்து அறிவித்தால் என்ன செய்வது?

செப்டம்பர் 30, 2010 அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பில், ராமரைப் புனித ஆவி என்று நீதிபதி டி.வி. கர்மா வர்ணித்திருப்பது இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

நீதிமன்றங்களின் வரம்பு

மத நம்பிக்கை சம்பந்தப்பட்ட விகயங்களில் நீதிபதிகள் சிவில் (உரிமையியல்) தன்மைகளைக் கொண்ட வழக்குகளில் மட்டும் தான் தீர்ப்பளிக்க முடியும்.

இந்திய சாட்சிய சட்டம், மிக மிகக் குறைந்த வரையறுக்கப்பட்ட விகயங்களில் - விவகாரங்களில் மட்டுமே நிபுணர்கள் சாட்சியளிக்க அனுமதிக்கின்றது. சாட்சிய சட்டத்தின் 45 முதல் 50 வரையிலான விதிகளில் இந்த வரையறை கூறப்பட்டுள்ளது. வரலாறு, அகழ்வாராய்ச்சி ஆகியவை அந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

எஸ்.யூ. கானின் தவறான விளக்கம்

இரு தரப்புமே தங்களின் சொத்தின் துவக்கத்தை நிரூபிக்கத் தவறி விட்டனர். அதனால் பிரிவு 110ன் படி இரு தரப்பினரும் இந்தச் சொத்தின் ஒன்று சேர்ந்த அனுபவதாரர்கள் என்ற அடிப்படையில் இரு தரப்புமே உரிமையாளர்களாகக் கருதப்படுகின்றார்கள்.

இவ்வாறு எஸ்.யூ. கான் தனது தீர்ப்பில் குறிப்பிடுகின்றார்.

பிரிவு 110ஐ இவர் தவறாகப் புரிந்து கொண்ட விளக்கத்தின்படி இவர் இந்தத் தீர்ப்பை அளித்திருக்கின்றார். பிரிவு 110ஐப் படித்துப் பார்த்தால் இது புரியும்.

(சலீம் என்ற) ஒருவர் ஒரு சொத்தின் அனுபவத்தில் இருக்கையில், அவர் தான் இந்தச் சொத்தின் உரிமையாளரா? என்ற கேள்வி எழும் போது, "அவர் அந்தச் சொத்தின் உரிமையாளர் இல்லை' என (கரீம் என்ற) மற்றொருவர் ஆட்சேபணை செய்தால், அவர் (சலீம்) சொத்தின் உரிமையாளர் இல்லை என்று நிரூபிக்கும் பொறுப்பு மற்றவர் (கரீம்) மீது தான் உள்ளது.

இது தான் பிரிவு 110 தெரிவிக்கும் சாராம்சமாகும்.

இந்த வழக்கில் முஸ்லிம்கள் தான் அனுபவத்தில் இருந்தனர். ஆனால் முஸ்லிம்கள் அந்த இடத்தின் உரிமையாளர் கிடையாது என்று சங் பரிவார் ஆட்சேபணை செய்கின்றது. அப்படியானால் அதை நிரூபிக்கும் பொறுப்பு சங் பரிவாருக்குத் தான் இருக்கின்றது. பிரிவு 110ன் படி எஸ்.யூ. கான் இப்படித் தான் தீர்ப்பளித்திருக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்களைப் பார்த்து, "உங்கள் சொத்தின் துவக்கத்தை நிரூபிக்கத் தவறி விட்டீர்கள்' என்று குருட்டுத்தனமாகத் தீர்ப்பளிக்கின்றார்.

"ஒருவர் ஒரு சொத்தை நீண்ட காலமாக, நிம்மதியாக அனுபவித்து வருகின்றார். ஆனால் அந்தச் சொத்திற்குரிய உண்மையான ஆதாரம் எதுவும் அவரிடம் இல்லை என்றாலும் அது சட்டப்பூர்வமான சொத்து தான். ஏனெனில் இந்த அனுபவப் பாத்தியதையையே அவருக்குரிய சொத்தின் துவக்கமாக அனுமதிக்கலாம். எந்த அளவுக்கு அனுபவப் பாத்தியதை நீடிக்கின்றதோ அந்த அளவுக்கு அவர் தான் அந்தச் சொத்துக்குச் சொந்தம் என்ற அனுமானம் வலிமை பெறுகின்றது''

இவ்வாறு உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் தெரிவிக்கின்றது.

(1991 Subb (2) sec 228, Pages 243-244)

19ஆம் நூற்றாண்டின் (1883-1886 ஆண்டுகளில் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற பாபரி மஸ்ஜித் தொடர்பான) வழக்கு ஆவணங்கள், "கூட்டு அனுபவப் பாத்தியதை' என்ற எஸ்.யூ. கானின் தீர்ப்பு தவறானது என்பதை நிரூபிக்கின்றன. (அந்த வழக்குகளில், பாபரி மஸ்ஜிதின் அனுபவம் முஸ்லிம்களிடம் மட்டும் தான் இருந்து வந்தது; இந்துக்களிடம் ஒருபோதும் இருக்கவில்லை என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது)

இப்படி தெளிவான தவறுகளின் மூலம் விளைந்தது தான் நிலத்தை மூன்று பங்கு வைக்கும் அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பாகும்.

இதைத் தான் ஊடகங்கள், "நீதிபதிகளின் சாணக்கியம்' என்று பாராட்டுகின்றன.

1950, 1955, 1986, 1994 ஆகிய ஆண்டுகளில் நீதித்துறை தொடர்ந்து முஸ்லிம்களுக்கு இழைத்து வந்த அநீதிகளிலேயே தலையாய அநீதி இந்த 2010 அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தான் என்பதை டிசம்பர் 23, 1949 அன்றிலிருந்து உள்ள ஆவணங்கள் காட்டுகின்றன.

கஹீத் கஞ்ச் பள்ளிவாசல்

கஹீத் கஞ்ச் மஸ்ஜித் எனும் பள்ளிவாசல் 1722ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு வஃக்ப் பள்ளிவாசலாகும். இந்தப் பள்ளி, 1762ஆம் ஆண்டு சீக்கியர்களின் அனுபவத்திற்கு வந்தது.

20ஆம் நூற்றாண்டில் இது தொடர்பான வழக்கில் மாவட்ட நீதிமன்றம், லாகூர் உயர் நீதிமன்றம், பிரைவி கவுன்சில் ஆகிய அனைத்துமே எதிரிடை அனுபவம் என்ற சட்டத்தின்படி முஸ்லிம்களுக்கு எதிராகத் தீர்ப்பளித்தன.

ராமர் கோயில் கட்டுவதற்கு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று சங் பரிவார்கள் கேட்டது போன்று, அங்குள்ள முஸ்லிம்கள் பஞ்சாப் பிரதம மந்திரி சிக்கந்தர் ஹயாத் கானிடம் இந்தத் தீர்ப்பை ரத்துச் செய்வதற்கு ஒரு சட்டமியற்றுமாறு கோரிக்கை வைத்தனர். அதற்கு பஞ்சாப் பிரதம மந்திரி சிக்கந்தர் ஹயாத் கான் மறுத்து விட்டார். அவருக்கு முஹம்மது அலி ஜின்னா முழு ஆதரவளித்தார். இன்று வரை அந்தப் பள்ளிவாசல் ஒரு சீக்கிய குருத்துவாராவாக லாகூரில் இருந்து கொண்டிருக்கின்றது.

தற்போதைய அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் பாராட்டத்தக்க வகையில் அமைதி காக்கப்பட்டு விட்டது. ஆனால் இதன் மூலம் மக்களின் உள்ளங்களில் ஏற்பட்ட காயம் தான் ஆறவில்லை.

மதச் சார்பின்மை மாளிகை எப்படிக் கட்டப்படக்கூடாது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.

நீண்ட கால வழக்கின் மனுதாரரும் நீண்ட வயது கொண்டவருமான முஹம்மது ஹாகிமின் அடுத்தக்கட்ட முடிவில் தான் இனி இது அடங்கியிருக்கின்றது. பள்ளிகள் எத்தனையோ கட்டி விடலாம். ஆனால் இதுபோன்ற ஒரு நாட்டைக் கட்ட முடியாது. பாதிக்கப்பட்ட அவருக்கு உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கி ஆறுதல் வழங்கலாம்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்!

செப்டம்பர் 30, 2010 அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பாராட்டுவதற்கு விரைந்தவர்கள் அறியாமையிலும் கேடுகெட்ட அறியாமையை அப்பட்டமாக வெளிப்படுத்தியவர்கள் ஆவார்கள்.


நியாயம் எது? அநியாயம் எது? என்று பார்ப்பதற்கு அவர்கள் ஆர்வம் கொள்ளவில்லை என்பதை அவர்களின் ஆர்வக் கோளாறு பிரதிபலிக்கின்றது.

EGATHUVAM DEC 2010