பிற மாநிலப் பிறை - ஒரு பார்வை
மக்கள் தீர்மானிக்கும் நாளில் தான் நோன்பு, பெருநாள் என்று வரும் ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு தானே நாம்
ஜாக்கை விமர்சனம் செய்தோம்; இப்போது
நாமே தனியாகப் பெருநாள் கொண்டாடலாமா? என்றெல்லாம் நமது சகோதரர்கள் கேள்வி கேட்டார்கள். இந்த
ஹதீஸை சரியான அடிப்படையில் புரிந்து கொள்ளாததால் இவ்வாறு கேட்கின்றார்கள்.
"மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக்
காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை
முப்பதாக முழுமைப்படுத்துங்கள்' என்று
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1907
மாதம் என்பது 29 அல்லது 30
நாட்கள் தான். இதற்கு மாற்றமாக ஒருவர் கஅபான் பிறை 28ல் நோன்பு என்றோ அல்லது ரமளான் பிறை 31ல் பெருநாள் என்றோ அறிவித்தால் ஏற்றுக் கொள்வோமா? என்றால் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
நோன்பு வைப்பதாக இருந்தாலும் பெருநாள் கொண்டாடுவதாக
இருந்தாலும் 29ஆம் நாளில் பிறை
பார்க்க வேண்டும். பிறை தென்படாவிட்டால் 30ஆகப் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த அடிப்படையில் மக்கள்
தீர்மானித்தால் தான் அதை ஏற்றுக் கொள்ள முடியும். இதல்லாமல் இக்டத்திற்குத்
தீர்மானிப்பதற்கு, "மக்கள்
தீர்மானித்தல்' என்று கூற முடியாது.
அது மனோ இச்சையைப் பின்பற்றுவதாகும்.
இந்த அடிப்படையில் தான் டவுன் காஜியின் பிறை அறிவிப்பை நாம்
எதிர்க்கின்றோம்; விமர்சனம்
செய்கின்றோம்.
கடந்த நோன்புப் பெருநாளில் டெல்லி, மும்பை, பெங்களூர்
போன்ற அனைத்துப் பகுதிகளிலும் நமக்கு ஒரு நாளைக்குப் பின்னால் தான் பெருநாள்
கொண்டாடினர்.
அங்குள்ள பிறையை இந்த டவுண் காஜி ஏற்றுக் கொள்ளவில்லை.
இங்கு பார்த்த பிறையை அவர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏன்? இந்தியா முழுவதும் ஒரே பிறை என்பது ஏற்றுக் கொள்ளப்படவில்லை
என்பதால் தான்.
தமிழகத்தில் பார்க்கப்பட்ட பிறையை இந்தியாவின் அனைத்துப்
பகுதிகளிலும் ஏற்றுக் கொண்டால், மக்கள்
தீர்மானிக்கும் நாள் என்பதை இந்தியா முழுவதுக்கும் பொருத்திப் பார்க்கலாம். ஆனால்
அவ்வாறு தமிழகத்தில் பார்க்கப்பட்டதை இந்தியாவின் பிற பகுதிகளில் ஏற்றுக் கொள்ளாத
பட்சத்தில், மக்கள் தீர்மானிப்பது
என்பது தமிழக அளவில் தான் என்றாகி விடுகின்றது. அது தான் பொருத்தமாகவும்
செயல்படுவதற்கு எளிதாகவும் உள்ளது.
தமிழக அளவில் பிறையைத் தீர்மானித்ததால் கடந்த சில ஆண்டுகள்
தமிழகம் முழுவதும் எவ்வித பிரச்சனையும் இன்றி நோன்பு வைக்க முடிந்தது. பெருநாளும்
கொண்டாட முடிந்தது. எனவே நமது பகுதி எது என்பதை மக்கள் தீர்மானிப்பதில் பிற
மாநிலப் பிறை ஏற்றுக் கொள்வது அடங்காது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
பிறை தொடர்பான இந்த விளக்கத்தையும் டவுன் காஜியின் இந்தக்
குழப்பத்தையும் கொள்கைச் சகோதரர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் தலைமை தெளிவாக விளக்கியது.
இதை அவர்கள் ஏற்றுக்
கொண்டனர்.
கூட்டத்திற்குத் தக்க கொள்கையை மாற்றும் கூட்டத்தினர்,
"சுன்னத் ஜமாஅத்தை வைத்துத் தான் படம்
காட்டினீர்கள்; இப்போது அது
வெளிச்சமாகி விடும்' என்றெல்லாம்
கேலியும் கிண்டலும் பேசினர்.
இவ்வளவு நாளும் வசூல் மழையை எழுதினீர்கள். 18ஆம் தேதி வசூலை எழுதுங்கள், பார்ப்போம் என்று சவால் விட்டனர்.
18ஆம் தேதியன்று திடல்கள் வெறிச்சோடிக் கிடக்கும்; தவ்ஹீத் ஜமாஅத் ஒரு வெற்றுக் கூடாரமாகி விடும் என்று கனவு
கண்டவர்களின் கண்களில் அல்லாஹ் மண்ணை அள்ளிப் போட்டு விட்டான். அவர்களை
நிலைகுலையச் செய்து விட்டான். அல்ஹம்துலில்லாஹ்!
ஒவ்வொரு பெருநாளின் போதும் அலை அலையாக வந்த அதே கூட்டம் அணை
உடைத்த வெள்ளம் போல் 18ஆம் தேதி
பெருநாள் திடலிலும் வந்து சூழ்ந்தது. திடல்கள் பொங்குமாங் கடலாய் பொங்கி வழிந்தன.
படையெடுத்து வந்த பத்திரிகையாளர்களின் படங்களும் இதை நிரூபிக்கின்றன. ஒளி
நாடாக்கள் இந்த வரலாற்று நிகழ்வை ஒன்று விடாது பதிவு செய்திருக்கின்றன.
முஃப்தியா? முஃப்த்தினா?
முஃப்தி எனற பெயரில் முஃப்த்தினாக (குழப்பவாதியாக)
செயல்படுகின்ற டவுண் காஜியின் ஏகபோக பிறை சாம்ராஜ்யம் இதன் மூலம்
உடைத்தெறியப்பட்டுள்ளது. பிறை விகயத்தில் இதுவரை தான்தோன்றித்தனமாக அறிவித்து வந்த
ஒரு தனிநபர் ஆதிக்கத்தை தவ்ஹீத் ஜமாஅத் உடைத்து, தனி சமுதாயமாகப் பரிணமித்தது.
இப்ராஹீம் ஒரு சமுதாயமாகவும், அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவராகவும், உண்மை வழியில் நின்றவராகவும் இருந்தார். இணை கற்பிப்பவராக
அவர் இருந்ததில்லை.
அல்குர்ஆன் 16:120
இப்ராஹீம் (அலை) அவர்கள் பாதையில், அவர்களின் தியாகத்தை மையமாகக் கொண்ட தியாகத் திருநாளில்
தவ்ஹீத் ஜமாஅத் தன்னுடைய முத்திரையைப் பதித்தது.
இப்ராஹீம் நபி, ஊரை - உலகத்தை அல்லாஹ்வுக்காகப் பகைத்தார்கள்.
"உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள்
விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும்
வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே
பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது'' என்று கூறிய விகயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன்
இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.
அல்குர்ஆன் 60:4
அந்த ஏகத்துவ இமாமின் நினைவாக அமைந்த இந்த இறை தியான
நாட்களில் தவ்ஹீத் ஜமாஅத் அல்லாஹ்வுக்காக மக்களைப் பகைத்துக் கொண்டது.
வணக்க வழிபாடுகளில், திருமண, மரண
நிகழ்வுகளில் உங்களைப் பகைத்தோம். உங்களுக்கும் எங்களுக்கும் எஞ்சிய உறவு ஒரே
நாளில் பெருநாள் கொண்டாடுவது தான். இப்போது அதையும் அல்லாஹ்வுக்காகப் பகைத்து
விட்டோம் என்று 18ஆம் தேதி
தவ்ஹீத் ஜமாஅத் நிரூபித்து விட்டது.
கூட்டத்திற்காகவோ, வசூலுக்காகவோ குராபிகளுடன் சேர்ந்து கொண்டாடவில்லை.
அவர்களது நோன்பும் பெருநாளும் ஹதீசுக்கு ஒத்திருந்தது. அதனால் அவர்களுடன் ஒத்துப்
போனோம். அவர்கள் உண்மைக்கு ஒத்துப் போகவில்லை. அதனால் அவர்களைப் பிரிந்து
விட்டோம். இது தான் உண்மை.
"இவ்வளவு நாள் எங்களுடன் சேர்ந்து பெருநாள் கொண்டாடினீர்கள்; இப்போது பிரிந்து விட்டீர்களே' என்று கேட்கும் சுன்னத் ஜமாஅத்தினருக்கும் நாம் கூறுவது இது
தான். நாங்கள் எதையுமே ஆதார அடிப்படையில் தான் பின்பற்றுவோம்; அனுமான அடிப்படையில் அல்ல. இதைத் தான் இந்தப் பெருநாள்
நிரூபித்துக் காட்டியுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறே நீங்கள் (மற்ற) மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத்
திகழவும்,
இத்தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத்
திகழவும் உங்களை நடு நிலையான சமுதாயமாக்கினோம். வந்த வழியே திரும்பிச்
செல்வோரிலிருந்து இத்தூதரைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டுவதற்காகவே, ஏற்கனவே நீர் நோக்கிய கிப்லாவை நிர்ணயித்திருந்தோம்.
அல்லாஹ் யாருக்கு நேர் வழி காட்டினானோ அவரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே
இருக்கிறது. அல்லாஹ் உங்கள் நம்பிக்கையைப் பாழாக்குபவனாக இல்லை. அல்லாஹ்
இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 2:143
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஏற்பட்ட இந்தக் கிப்லா மாற்றம்
நயவஞ்சகர்களை அடையாளம் காட்டியது போல் தவ்ஹீத் ஜமாஅத்தில் வேகம் போட்டுக்
கொண்டிருந்த பச்சோந்திகளையும் இந்தப் பெருநாள் பிரித்துக் காட்டியது.
வணக்கத்திலும் அரசியல்
தமுமுகவினர் நம்முடன் இருந்த வரை நமது பிறை நிலைப்பாட்டை
ஏற்று,
பிறை பார்த்து நோன்பு வைத்து, பிறை பார்த்துப் பெருநாள் கொண்டாடினர். அதன் பின்னர் கடந்த
ஆண்டுகளில் கணிப்பை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டனர்.
கூறு கெட்டத்தனமாக ஊரை விட்டுப் பிரிந்து தனியாகப் பெருநாள்
கொண்டாடியது மக்களிடம் பெரும் அதிருப்தியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. இது
தங்களின் வாக்குச் சீட்டுக்கு வேட்டு வைத்து விடும்; ஓட்டுப் பொறுக்கும் அரசியலுக்கு உலை வைத்து விடும் என்று
சிந்திக்க ஆரம்பித்தனர். அத்துடன் தவ்ஹீத் ஜமாஅத்தின் பெருநாள் தொழுகைத் திடலுக்கு
வரும் கூட்டம் அவர்களுக்கு ஓர் உறுத்தலையும் பொறாமையையும் ஏற்படுத்தியது.
அதற்காக ஒரு தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
அதற்கேற்றாற்போல் தவ்ஹீத் ஜமாஅத் 18ஆம் தேதி பெருநாள் அறிவித்தது. அது தான் தாமதம்! அண்ணன்
எப்போது சாவான்; திண்ணை எப்போது
காலியாகும் என்று காத்திருந்தது போல் உடனே கணிப்பைத் தூக்கி எறிந்து விட்டு, குராஃபிகளுடன் சேர்ந்து பெருநாள் கொண்டாடும் முடிவுக்கு
வந்தனர். தவ்ஹீத் ஜமாஅத்திற்கு வரும் மக்கள் வெள்ளத்தைத் திசை திருப்பி விடலாம்
என்ற மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
இதில் சுன்னத் ஜமாஅத்தினரில் உள்ள நல்லவர்கள், நாம் தனியாகப் பிரிந்து பெருநாள் கொண்டாட நேர்ந்ததை எண்ணி
உண்மையில் வருத்தம் அடைந்தனர். ஆனால் இவர்களோ குதூகலம் அடைந்தனர். சில ஊர்களில்
பாப்புலர் கோக்டியுடன் சேர்ந்து தொழுகை நடத்தினர். ஆனால் இவர்கள் எதிர்பார்த்தபடி
பெரிதாக ஒன்று கூட்டம் கூடிவிடவில்லை.
தொழுகையில் அரசியல்
இதில் கொடுமை என்னவென்றால், கணிப்பின் அடிப்படையில் 16ஆம் தேதி பெருநாள் தொழுகை தொழுதவர்களும் 17ஆம் தேதி தொழுகையில் வந்து கலந்து கொண்டனர். எதற்காக? முதல் நாள் தொழுதது கொள்கைக்காகவாம். மறுநாள் தொழுதது
மக்களுக்குக் கூட்டத்தைக் காட்டுவதற்காகவாம்.
அதாவது, நாங்களும்
உங்களோடு தான் பெருநாள் கொண்டாடுகிறோம்; அதனால் எங்களுக்கே ஓட்டுப் போடுங்கள். இதைத் தவிர இதற்கு
வேறு அர்த்தம் இருக்க முடியுமா?
இவர்கள் வணக்கத்திலும் அரசியல் ஆதாயம் பார்க்கின்றார்கள்.
இதிலிருந்து இவர்களது லட்சணத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
குர்பானியில் அரசியல்
இவர்களுடைய அரசியல் இத்துடன் நிற்கவில்லை. குர்பானியிலும்
அரசியல் வேலையைக் காட்டினார்கள். குர்பானிக்கு ஓர் ஒட்டகத்தை வாங்கிக் கொண்டு, அதில் தங்கள் இயக்கத்தின் பேனரைக் கட்டி, தெருத் தெருவாக ஊர்வலமாகச் சுற்ற வைத்தனர்.
கொடி ஏற்றிய யானையை ஊர்வலமாக அழைத்துச் செல்வது போன்று
தமுமுக பேனரை முதுகில் ஏற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
ஒட்டகத்திற்குப் பின்னால் வந்த சிறுவர்கள் கூட்டம்
இவர்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்தது. கூடவே, "உங்கள் ஓட்டு ரயில் இஞ்சின் சின்னத்திற்கே' என்ற பேனரையும் கட்டியிருந்தால் வரக்கூடிய சட்டமன்றத்
தேர்தலுக்கு உதவியாக இருந்திருக்கும். இது அவர்களுக்கு நினைவில் இல்லை போல்
தெரிகிறது. எனவே தமுமுக பேனரை மட்டும் கட்டிக் கொண்டு ஒட்டக ஊர்வலம் நடந்தது.
ஏற்கனவே குமரி மாவட்டத்தில் வீடு வீடாக வசூல் செய்து
ஒட்டகக் குர்பானி கொடுத்தவர்கள் தான் இவர்கள்.
இப்படி ஒரு மலிவு விளம்பரத்தையும், மட்டரகமான அரசியலையும் மார்க்க வணக்கத்தில் கொண்டு
நுழைக்கும் கழிவு கெட்ட அரசியல்வாதிகளை நாம் இதுவரை கண்டதில்லை.
பொய்யன்டிஜே
தமுமுகவினர் இப்படி வணக்கத்தை அரசியல் வியாபாரமாக ஆக்கி
ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கையில் பொய்யன்டிஜேயின் ஆட்டம் மிக வித்தியாசமாக
அமைந்தது. பிறையைப் பற்றிய மார்க்க ஆய்வுக் களமாக (?) இந்தப் பெருநாளை அமைத்துக் கொண்டது.
தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் மக்களுக்குக் குழப்பம்
ஏற்படுத்துவதற்காக தனது அமைப்பின் பெயரை இந்திய அளவில் விரித்தது போன்று
பிறையையும் இந்திய அளவில் விரித்து விட்டதாக அறிவித்தனர்.
இந்தியாவில் எங்கு பிறை பார்த்தாலும் ஏற்போம் என்றனர்.
(அமைப்பு விகயத்தில் நம்மை ஏமாற்ற நினைத்து, தற்போது ஏமாந்து போய் வழக்கம் போல் மிம்பரில் நின்று அழுது
புலம்புவது தனி விகயம்)
மாலேகான் பிறையை அறிவித்த டவுண் காஜி, தவ்ஹீத் ஜமாஅத்தின் கிடுக்கிப் பிடியில் புழுவாக நெளிந்து
கொண்டிருக்கின்றார். இந்த விளக்கெண்ணெய்கள் ஒரு விளக்கமும் இல்லாமல் இந்தியப் பிறை
என்று அறிவித்துள்ளனர்.
இவர்களுடைய இந்திய அமைப்பு சந்தி சிரித்தது போல் பிறை
அறிவிப்பும் சந்தி சிரிக்கப் போகின்றது. அடுத்த ஆண்டு டவுண் காஜியோ அல்லது சுன்னத்
ஜமாஅத்தினரோ இந்தியப் பிறையை ஏற்றுக் கொள்ளாவிட்டால் இவர்களது நிலை
எப்படியிருக்கும் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை.
இவர்களது இயக்கத்திலும் தலைமை முஃப்தி அல்லாமா அப்துல்
ஹமீது என்பவர், ஊர் பிறை, மாநிலப் பிறை, இந்தியப் பிறை எல்லாவற்றையும் தாண்டி உலகப் பிறைக்கு ஃபத்வா
கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த கரீஅத் சட்ட மாமேதையின் (?) ஃபத்வாவையும் தவ்ஹீத் ஜமாஅத் இணைய தளத்தில்
அம்பலப்படுத்தியிருக்கின்றது.
இதற்கு பொய்யன்டிஜேவினர், பாரதீய ஜனதாவைப் போல் "அது அவரது சொந்தக் கருத்து' என்று கூறி தப்பிக்க நினைக்கின்றனர்.
பாரதீய ஜனதாவுக்காவது ஒரு கொள்கை, கோட்பாடு இருக்கின்றது. இவர்களுடைய கொள்கை, கோட்பாடு, ஒழுக்கம், கட்டுப்பாடு இவற்றையெல்லாம் சிந்தித்தால் அழுவதா சிரிப்பதா
என்றே தெரியவில்லை. இவர்களும் நாலு பேரைச் சேர்த்துக் கொண்டு ஒரு அமைப்பு
நடத்துவது தான் வேதனை!
பிறை பார்க்காமலே பெருநாள்
தனது தவறான பிறை அறிவிப்பின் மூலம் டவுண் காஜி தமிழக
மக்களைத் தடம் புரளச் செய்த மாத்திரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனது கிளைகள்
மூலம் 18ஆம் தேதி தான் பெருநாள் என்ற செய்தியை பரவச் செய்தது.
துண்டுப் பிரசுரங்கள், டிஜிட்டல் பேனர்கள், சுவரொட்டிகள் மூலம் தமிழக முஸ்லிம்களிடம் பிறை நிலைப்பாடு
பற்றிய சிந்தனைக் கதிர்களை பளிச்சிடச் செய்தது. இமயம் டி.வி. வாயிலாகவும்
செய்திகளை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தது. அதன் எதிரொலியாக மக்கள் எழுப்பிய
கேள்வி இது தான்.
நோன்புக்கும் நோன்புப் பெருநாளுக்கும் பிறை பார்க்கின்றோம்.
ஆனால் இதுவரை ஹஜ் பெருநாளுக்கு பிறை பார்ப்பதைக் கேள்விப்பட்டதே இல்லையே! இது என்ன
அதிசயமாக இருக்கின்றது?
இவ்வாறு அவர்கள் கேள்வி எழுப்பிய பிறகு தான், ஹஜ் பெருநாளையும் பிறை பார்த்து தான் தீர்மானிக்க வேண்டும்
என்ற விளக்கம் பாமர மக்களுக்கு மட்டுமல்ல, உலமாக்களுக்கும் தெரியவில்லை எனும் உண்மை நமக்குப் புரிய
வந்தது.
மக்கள் இப்படி இருந்தால் டவுண் காஜி ஏன் காதில் பூச்சுற்ற
மாட்டார்?
இருப்பினும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சளைக்காமல் பல்வேறு
பரிமாணங்களில் மக்களிடம் பிறை விகயத்தைக் கொண்டு சென்றது.
இதன் விளைவாக ஜமாஅத்துல் உலமா சபை 17ஆம் தேதி தான் பெருநாள் என்று பத்திரிகை அறிக்கை விட்டது.
தவ்ஹீத் ஜமாஅத்தும் மறுப்பு அறிக்கை வெளியிட்டு, 18ஆம் தேதி தான் பெருநாள் என்று அறிவித்தது பத்திரிகைகளில்
அதிக இடத்தைப் பிடித்தது.
இறுதியில் இறைவன் அருளால் 18ஆம் தேதியன்று மக்கள் திடல்களில் நிரம்பி வழிந்தனர். மழை
பெய்த இடங்களில் பள்ளிவாசல்களில் மக்கள் அலை மோதினர். அல்ஹம்துலில்லாஹ்!
ஹஜ் பெருநாளையும் பிறை பார்த்து தான் தீர்மானிக்க வேண்டும்
என்ற மார்க்க விளக்கத்தை இந்தப் பெருநாளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்களிடம்
பதிவு செய்தது.
தடம் புரண்ட டவுண் காஜி
தமிழகத்தில் கடந்த 07.11.10 அன்று சந்தேகத்திற்குரிய நாளில் பிறை எங்குமே தென்படாததைத்
தொடர்ந்து துல்கஅதா மாதத்தை 30ஆகப்
பூர்த்தி செய்து, 18.11.10 வியாழன் அன்று ஹஜ்ஜுப் பெருநாள் என்று தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத் அறிவிப்புப் செய்தது.
ஆனால், எந்த
ஒரு மார்க்க நெறிமுறையையும் பேணாத தமிழக டவுண் காஜியோ மஹாராக்டிர மாநிலம்
மாலேகானில் பிறை பார்த்ததன் அடிப்படையில் தமிழகத்தில் 17.11.10 அன்று பெருநாள் என்று அறிவிப்புச் அறிவித்தார். தமிழக
டவுண் காஜியின் அறிவிப்பு எந்த ஒரு நெறிமுறையும், மார்க்க வரைமுறையும் அற்ற அறிவிப்பு என்பதை, பிறை
குறித்த டவுண் காஜியின் கடந்த கால அறிவிப்புகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால்
விளங்கிக்கொள்ளாலாம்.
கடந்த ரமளான் மாதம், தலைப் பிறை தமிழகத்தில் தெரிவதற்கு முன்பே கேரள மாநிலத்தில்
தென்பட்டது. இப்போது தமிழகத்திற்கு அருகிலுள்ள கர்நாடகாவையும் தாண்டி
மஹாராக்டிராவிற்குத் தாவிய டவுண் காஜி, சென்ற ரமளானில் கேரள மாநிலத்தில் பார்க்கப்பட்ட பிறையை
நிராகரித்தார். தமிழகத்தில் பிறை பார்க்கப்பட்டால் தான் ஏற்றுக் கொள்வேன் என்று
கூறிவிட்டு இப்போது மஹாராக்டிராவை ஆதாரமாகக் கொண்ட மர்மம் நமக்கு விளங்கவில்லை.
உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த டவுண் காஜியின் பேட்டி
''சமுதாய ஒற்றுமை'' என்ற மாத இதழுக்கு சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தமிழகத்திலிருந்து பிறை பர்க்கப்பட்டதாக தகவல் கிடைத்தால்
ஏற்றுக் கொள்வேன் என்றும், ''இந்தியாவில்
ஒரே நாளில் பெருநாள் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திரா காந்தி அவர்கள்
தனது ஆட்சியின் போது ஹிலால் கமிட்டி ஒன்றை ஏற்படுத்தினார்கள். சில மார்க்க காரணங்களினால்
அதன்படி செய்ய முடியாமல் போனது'' என்று
அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுவதற்கு சில
மார்க்க காரணங்கள் தடையாக இருக்கின்றன என்று தெரிவித்துவிட்டு, தற்போது அவர் சொன்ன நிலைபாட்டிற்கு அவரே முரண்பட்டு மஹாராக்டிரா
பிறையை அறிவித்து மக்களை குழப்பியுள்ளார். அவர் கொண்டிருந்த
நிலைப்பாட்டிலிருந்து அவரே குழம்பி விட்டு, மக்களையும் குழப்பிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமையகத்திலிருந்து
மாநிலச் செயலாளர்கள் கானத்தூர் பகீர் மற்றும் அப்துல் ஜப்பார் ஆகியோர் கடந்த 15.11.10 திங்கள் அன்று மாலை 5 மணிக்கு டவுண் காஜியை நேரில் சந்தித்து விளக்கம் கேட்கச்
சென்றனர்.
டவுண் காஜியின் அற்புத (?) விளக்கம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகளை அவரது
அலுவலகத்தில் சந்தித்த டவுண் காஜியிடம், எந்த அடிப்படையில் 17.11.10 அன்று பெருநாள் என்று அறிவித்தீர்கள்? என்று கேட்டதற்கு, "தமிழகத்தில் எங்கும் பிறை தென்படவில்லை, மஹாராக்டிர மாநிலம் மாலேகானில் பிறை தென்பட்டதன்
அடிப்படையில் தான் அறிவித்தேன். ஆந்திரா, கர்நாடகா என்று இந்தியாவில் எங்கு பிறை தென்பட்டாலும் அதை
அறிவிப்பேன்'' என்று அவர் கடந்த
காலத்தில் கொண்டிருந்த நிலைப்பாட்டிற்கு மாற்றமாகவும், அவர் அளித்த பேட்டிக்கு மற்றமாகவும் உளறியுள்ளார்.
"அப்படியானால் கடந்த காலங்களில் டெல்லியில் பார்க்கப்பட்ட
பிறையை ஏற்று பெருநாள் அறிவிக்காதது ஏன்?'' என்று நமது நிர்வாகிகள் கேள்வி எழுப்பியதற்கு, டெல்லியில் இருந்து வரும் அறிவிப்பை ஏற்க மாட்டேன் என்று
ஒரு அற்புத (?) விளக்கத்தை
கூறியுள்ளார். "டெல்லி என்பது இந்தியாவில் தானே உள்ளது, உங்கள் நிலைப்பாட்டின் படி அது என்ன வேறு நாடா?'' என்று நமது நிர்வாகிகள் கேட்டதற்கு,
"டெல்லியைப் பொறுத்தமட்டிலும் அவர்கள்
தாங்களாக அறிவிப்பது கிடையாது அவர்கள் கலகத்தாவை வைத்து அறிவிப்பார்கள்'' என்ற அறிவிப்பூர்வமான விளக்கத்தை கூறியுள்ளார்.
கல்கத்தாவும் இந்தியாவில் தானே உள்ளது என்ற நமது நிர்வாகிகளின் கேள்விக்குத்
தகுந்த பதில் இல்லை.
"இந்த முறை பெருநாளை நாங்களும் அறிவித்து விட்டோம், நீங்களும் அறிவித்து விட்டீர்கள். எனவே அடுத்த வருடம் 6 மாதங்களுக்கு முன்பாகவே வாருங்கள் நாம் அமர்ந்து பேசி
முடிவெடுக்கலாம்'' என்று
சமாளிப்புப் பதில் தான் அவரிடத்திலிருந்து வந்ததே தவிர, ஒரு மார்க்கக் கடமையை நிறைவேற்றுவதற்கு அல்லாஹ்வை அஞ்சி முடிவெடுக்க
வேண்டுமே என்ற பொறுப்புணர்வுடன் அவர் நடந்து கொள்ளவில்லை.
இதைப் போன்று கடந்த சில வருடக்களுக்கு முன்பாக தமிழகத்தைத்
தாண்டி ஒரு பிறை அறிவிப்பைச் செய்த டவுண் காஜியிடம் அப்போது தலைமைப்
பொறுப்பிலிருந்த சகோதரர் பீ.ஜே அவர்களும், பாபாஜான் என்ற சகோதரரும் நேரில் சென்று விளக்கம் கேட்டு,
"உங்களது மத்ஹபு சட்டத்தில் கூட நீங்கள்
கூறுவது போல இல்லை. தத்தமது பகுதியில் பிறை பார்த்து தான் பிறையை அறிவிக்க
வேண்டும்''
என்ற ஆதாரத்தை காட்டினார்கள்.
அப்போது "இனிவரக் கூடிய காலங்களில் தமிழகத்தில்
காணப்படும் பிறையை மட்டும் தான் ஏற்றுக் கொள்வேன். தமிழகத்திற்கு வெளியிலிருந்து
வரும் அறிவிப்புகளை ஏற்க மாட்டேன்'' என்று ஒப்புக்கொண்டவர் தான் இந்த டவுண் காஜி என்பதையும்
நாம் சுட்டிக் காட்டிக் கொள்கிறோம்.
EGATHUVAM DEC 2010