பிரித்துக் காட்டிய பெருநாள் பிறை
தங்களைத் தாங்களே சுன்னத் வல்ஜமாஅத்தினர் என்று சொல்லிக்
கொள்ளும் அசத்திய ஜமாஅத்தினரை விட்டும் தவ்ஹீதுவாதிகள் மார்க்கத்தின் எல்லா
வணக்கங்களிலும் தனியாகப் பிரிந்து அடையாளம் காட்டிக் கொண்டிருந்தனர். உளூ, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்
போன்ற வணக்கங்களிலும், திருமணம், சமூக வாழ்க்கை, மரணம் போன்ற நிகழ்வுகளிலும் தங்களை தவ்ஹீதுவாதிகள் என்று
அடையாளப்படுத்திக் கொண்டனர்.
"அடையாளப்படுத்திக் கொண்டனர்' என்று சொல்லும் போது, ஏதோ ஒரு தனிப் பாதையை, தனி மார்க்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர் என்று அர்த்தமல்ல.
இவற்றில் நபி (ஸல்) அவர்கள் காட்டிய பாதையில் செயல்பட ஆரம்பித்தனர் என்பது தான்
அதன் உண்மையான பொருள்.
சுன்னத் ஜமாஅத் எனப்படுவோரின் வணக்க வழிபாடுகள் நபி (ஸல்)
அவர்கள் காட்டித் தந்த வணக்க வழிபாட்டு முறைகளுக்கு நேர் மாற்றமாக அமைந்திருந்தன.
சரியான முறைப்படி தவ்ஹீதுவாதிகள் செயல்பட ஆரம்பித்ததும் அது அவர்களுக்குப்
புதிதாகவும், அதிசயமாகவும்
தெரிந்தது. அதனால் தான் வரிந்து கட்டிக் கொண்டு தவ்ஹீதுவாதிகள் மீது எரிந்து
விழுந்தனர். பள்ளிவாசலை விட்டு தவ்ஹீதுவாதிகளைத் துரத்தியடித்தனர்.
வணக்க வழிபாடுகளிலும் வாழ்க்கை நெறிகளிலும் நபி (ஸல்)
அவர்களைப் பின்பற்றிச் செயல்படுவதற்காக ஏகத்துவவாதிகள் பெரும் விலையைக்
கொடுத்தனர். இரத்தம் சிந்தினர். காவல்துறையின் மூலம் நெருக்கடிக்கு உள்ளாயினர்.
சிறைவாசம் அனுபவித்தனர். நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் நெடுங்காலம் ஏறி
இறங்கினர்; இதுவரை ஏறி இறங்கிக்
கொண்டு இருக்கின்றனர்.
பிறை விகயமும் பெருநாள் விகேசமும்
இத்தனை சோதனைகளையும் தாங்கிக் கொண்ட ஏகத்துவவாதிகள்
பெருநாள் விவகாரத்தில் ஏற்படும் பிரிவினையைத் தாங்குவார்களா? என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. பிறை தொடர்பாக சரியான
தகவல் கிடைக்காத சமயத்தில், நாம்
தனியாகப் பெருநாள் கொண்டாடுவோம் என்று சொல்லும் போது தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ள ஒரு
சில சகோதரர்களின் விழிகள் கூடப் பிதுங்கியிருக்கின்றன.
மயிரிழையில் உயிர் தப்புவது போல் ஒவ்வொரு தடவையும் கடைசி
நேரத்தில் எங்காவது பிறை பார்த்த தகவல் கிடைத்து, பெருநாளில் பிரிவினை ஏற்படாமல் இருந்தது.
"நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும்.
நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும்.
ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ
இந்த ஹதீஸ் அடிப்படையில் பிறை விகயத்தில் ஒரு போதும் மோதல்
வராது என்ற நம்பிக்கை இருந்தது. அதற்குத்தக்க ஜாக் இயக்கத்தின் கணிப்புப் பிறை, தகவல் பிறை, சவூதிப் பிறை போன்றவற்றின் மூலம் சமுதாயத்தில் பெருநாளைத்
திணித்த போது நாம், "அண்ணனுக்கு
ஒரு பெருநாள்; தம்பிக்கு ஒரு
பெருநாள்'
என்று விமர்சனம் செய்தோம்.
இவையும் தவ்ஹீது சகோதரர்களின் உள்ளங்களில் உரமாகப் பதிந்து
விட்டது. இப்படி ஒரு பதினைந்து ஆண்டு கால அளவு உருண்டோடி விட்டது. இப்போது தான்
நம்முடைய எதிரிகள் நம்மைப் பார்த்து, "இவர்கள் கூட்டம் கூட்டுவதற்காகவும், வசூலுக்காகவும் ஊருக்கு ஒத்துப் போகின்றனர்' என்ற பொய்யான குற்றச்சாட்டை நம் மீது வீசியெறிந்தனர்.
உண்மையில் பிறை விகயத்தில் சு.ஜ.வினருக்கும் நமக்கும்
மத்தியிலுள்ள தேனிலவு என்றாவது ஒரு நாள் முறியத் தான் செய்யும் என்ற எண்ணம் உள்ளூர
இல்லாமல் இல்லை. ஏனெனில் சு.ஜ.வினரைப் பொறுத்த வரை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் செயல்படுபவர்கள் கிடையாது. அதனால்
அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்று ஓரளவு நாம் எதிர்பார்த்தே
இருந்தோம். அது இந்த ஹஜ் பெருநாளில் நிகழ்ந்து விட்டது.
ஹஜ் பெருநாள் தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமை
அறிவிக்க முனைகின்ற போது, பிறை
பார்க்கும் குழுவினரிடமிருந்து பெற்ற பதில் நவம்பர் 7 அன்று எங்குமே பிறை தென்படவில்லை என்பது தான்.
ஒருவேளை சுன்னத் ஜமாஅத்தினர் பார்த்திருக்கலாமோ என்றெண்ணி, டவுண் காஜியிடம் விசாரித்த போது, தமிழகத்தில் எங்கும் பார்க்கப்படவில்லை என்றே கூறினார்.
அதன் பின்னர் தொடர்பு கொண்ட போது, மாலேகானில்
பிறை பார்த்திருப்பதாகக் கூறினார். மாலேகான் பிறையை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? என்று கேட்ட போது, மாலேகான் பக்கத்தில் தானே உள்ளது என்று உளறினார். இந்த
உளறலையே பெருநாளாக தமிழகத்திற்கும் அறிவித்தார். உல(க)மாக்கள் சபையும் அதை ஏற்றது.
தவ்ஹீத் ஜமாஅத்தின் அறிஞர் குழு உடனே கூடி ஆய்வு செய்தது. 6ஆம் தேதி சவூதியில் முதல் பிறை என்று அறிவித்த நாள்
அமாவாசை! அன்று பிறை பார்ப்பதற்கு அறவே சாத்தியமில்லை. நவம்பர் 6 அன்று சவூதியின் மக்கா நேரப்படி மாலை 5.42 மணிக்கு சூரியன் அஸ்தமனமாகின்றது. அதே மாலை 5.47 மணிக்கு சந்திரன் அஸ்தமனமாகின்றது. எனவே இந்த ஐந்து நிமிட
இடைவெளியில் பிறை பார்ப்பது சாத்தியமே இல்லை.
சவூதி மட்டுமின்றி உலகின் எல்லா பகுதிகளிலும் இதே நிலை
தான். 7ஆம் தேதி பிறை பார்ப்பதற்கு சாத்தியம் இருந்தது. ஆனால் ஜல்
புயல் காரணமாக தமிழகம் முழுவதும் மேக மூட்டமாக இருந்ததால் பிறை பார்க்க
வாய்ப்பில்லை. பிறை தென்படவில்லை. ஆக தமிழகமெங்கும் தலைப்பிறை தென்படவேயில்லை.
அதனால் நமக்கு முன்னால் இருப்பது ஒரே ஒரு வழி தான். அது நபி
(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த, காட்டித்
தந்த வழி!
"அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை
(மறு பிறையைக்) காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால்
கஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1909
அந்தந்த பகுதிகளில் பிறை காண்பதன் அடிப்படையிலேயே நோன்பு
மற்றும் பெருநாட்களைத் தீர்மானிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத்தைப் பொறுத்தவரை தமிழகத்தில் எங்கு பிறை கண்டாலும் ஏற்பது என்ற முடிவை
எடுத்துள்ளது. பிற மாநிலப் பிறையை ஏற்பது கிடையாது.
(இது குறித்த விளக்கத்தைத் தனித் தலைப்பில் காண்க.)
நபி (ஸல்) அவர்களின் ஹதீசுக்கும், அதற்கேற்றவாறு எடுக்கப்பட்ட முடிவுக்கும் மாற்றமாகச்
செயல்படுவது சந்தர்ப்பவாதமாகும்.
எனவே எந்த நிலைப்பாடும் இல்லாமல், மார்க்க ஆதாரமும் இல்லாமல் தான்தோன்றித்தனமாக டவுண் காஜி
அறிவித்த பிறையை ஏற்பதில்லை என்றும், தனியாகப் பெருநாள் கொண்டாடுவது என்றும் முடிவெடுத்தது.
இந்த அறிவிப்பு கொள்கைச் சகோதரர்களுக்கு ஓர்
அதிர்ச்சியாகவும் ஒப்புக் கொள்வதற்குக் கசப்பாகவும் ஆனது.
EGATHUVAM DEC 2010